தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 19,809 
 
 

கையில் தூக்குச் சட்டியும், பையும் கனத்தது. இருட்டப் போகிற நேரம். எப்போதும் போல் இல்லை ஜெயகர் சாமுவேல் வீடு. திரும்பிப் போய் விடலாமா என்று மருட்டியது வாசலில் நின்ற கார்களின் அணிவகுப்பு.
ஒரு நிமிஷம் தன் தோற்றத்தை தானே பார்த்துக் கொண்டார் மொய்தீன். கணுக்காலுக்கு மேல் ஏற்றிக் கட்டிய, கொஞ்சம் நிறம் மாறி பழசாய் போன கைலி; மேற்சட்டையும் பழசுதான்.
டவுனுக்கு, சரக்குப்பிடிக்க உள்ளூர் வேனில் வந்ததால், வேட்டி, சட்டை பற்றி கவலைப்படாமல் புறப்பட்டாயிற்று. அறிமுகமான கமிஷன் மண்டிகளுக்குத்தான் போக வேண்டும். அங்கே வியாபாரம் தான் முக்கியம்; ஆளின் தோற்றம் பிரதானமில்லை.
நட்பு“சே… ஜெயகர் வீட்டுக்கும் போறமேன்னு கொஞ்சம் யோசிச்சிருக்கணும்!’ தன் ஆடை மதிப்பில்லாதிருப்பதில் இப்போது தயக்கம் ஏற்பட்டது.
ஜெயகரும், அவர் வீட்டு ஆட்களும் என்றால் பிரச்னையில்லை. வீட்டின் உள்ளே, வெளியே நிற்கும் கார்களுக் குரியவர்களும் இருப்பரே…
அவர்கள் முன்னால் தன் தோற்றம் ஏற்றமுள்ளதாய் இல்லையே என்று மனசுக்குள் எண்ணினார்.
“”ஹைய்… வலசை மாமா!”
மொய்தீனைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கத்தினாள் ஜெயகரின் ஐந்து வயது மகள் ஜெனி.
குழந்தையைப் பார்த்ததும் மொய்தீன் முகத்திலும் சந்தோஷம். தூக்கையும், பையையும் கீழே வைத்து விட்டு, ஜெனியைத் தூக்கிக் கொண்டார்.
“”அப்பா இருக்காராடா குட்டி?”
“”அப்பாக்கு கான்ப்ரன்ஸ் மீட்டிங். நிறைய டாக்டர் அங்கிள்ஸ் வந்திருக்காங்க மாமா!”
“”அம்மா?”
“”அம்மா இருக்காங்களே!”
அதற்குள் டெய்ஸி, வீட்டுக்குள்ளிருந்தே இவரைப் பார்த்துவிட்டு, வாசலுக்கு வந்தாள்.
“”வாங்கண்ணே!”
முகம் மலர வரவேற்றாள்.
தூக்குச்சட்டியைத் எடுத்து டெய்ஸி கையில் கொடுத்தார் மொய்தீன்.
“”சீம்பாலும்மா… ஜெர்ஸி பசு முந்தா நாள் கண்ணு போட்டுச்சு. அது சீக்கிரம் தெளிஞ்சிரும். அதான் இன்னைக்கே கொண்டுட்டு வந்தேன்.”
“”சீம்பாலா… அப்பாடி! நாலஞ்சு லிட்டருக்கு மேல இருக்கும் போலிருக்கே!”
“”காய்ச்சுனா வத்திப் போயிரும்ல்ல… வீட்ல என்னம்மா விசேஷம்… நிறையக் காரா நிக்குது?”
“”விசேஷம்ன்னு ஒண்ணு மில்லண்ணே… இவரு லண்டன் போய் படிச்சாருல்ல, அப்ப ஜெர்மன்காரரு ஒருத்தர் இவர் கூடப் படிச்சார். அவரோட நல்ல சிநேகிதம். அவரு இப்ப அமெரிக்காவுல பெரிய டாக்டர்.
“சிநேகிதம்ங்கிற முறையில அவரு நம்ம வீட்ல நாலு நாள் தங்குறாரு. இங்க உள்ள நாலஞ்சு பெரிய டாக்டர்ங்க அவரை சந்திக்க விருப்பப் பட்டிருக்காங்க… அதான், சின்னதா ஒரு விருந்து வச்சு, எல்லாரும் சந்திச்சுப் பேசுற மாதிரி நம்ம வீட்லயே ஒரு மீட்டிங்…” என்றாள்.
“”சரிம்மா… ஒங்களுக்கு வேலை யிருக்கும்… போய்ப் பாருங்க. இதுல ருமானி மாம்பழம் இருக்கு. பாலை மட்டும் வேலையோட வேலையா காய்ச்சீரும்மா; இல்லைன்னா கெட்டுப் போயிரும். மத்தியானம் ரெண்டு ரெண்டரை போலக் கறந்தது. நான் கௌம்புறேன்… அடுத்த வாட்டி வர்றப்ப ஜெயகரைப் பார்த்துக்கிறேன்.”
தப்பித்தோம், பிழைத்தோம் என்று மொய்தீன் கிளம்பினார். நண்பனுக்கு பிடித்தது என்று கொண்டு வந்த சீம்பாலையும், ருமானி மாம்பழத்தையும் சேர்ப்பித்து விட்டதில் நிம்மதி.
விருந்துக்கான ஏற்பாடுகள் தயாராய் இருக்கிறதா என்பதை ஒரு முறை நேரில் பார்க்க, கீழே இறங்கி வந்தார் ஜெயகர்.
“”ஏய்… மொய்தீன் ராவுத்தர்!”
நண்பனை எதிர்பாராமல் பார்த்த சந்தோஷம் முகத்தில் தெரிந்தாலும், நின்று பேச நேரமில்லை.
“”இரு ராவுத்தரே… போயிடாதே!” என்று கூறிவிட்டு, தன் அவசர வேலையில் முனைந்து விட்டார் ஜெயகர்.
ஜெயகரின் தோற்றம் ரொம்ப மிடுக்கு, கோட், சூட், டை, ஷூ என்று மகா கம்பீரம்.
“இந்த டாக்டருக்கு, நான் நண்பன்னு சொல்லிக்க முடியுமா? சே… வேலைக்காரன் மாதிரியிருக்கிறேன்…’ சங்கடமாயிருந்தது மொய்தீனுக்கு.
முன் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார் மொய்தீன்.
விருந்துக்கான ஏற்பாடு களுக்கிடை யிலும், மொய்தீனுக்கு காபி கொண்டு வந்து தந்தாள் டெய்ஸி.
“”அம்மா… ஜெயகர் இப்போதைக்கு வராப்ல இல்ல. முக்கியமான மீட்டிங்குங்ல நேரம் ஏறத்தாழ ஆகும். நான் இன்னொரு நாள் வர்றேன்.”
“”ஆமாண் ணே… நீங்க எவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருக்க முடியும்?” என்று டெய்ஸி உள்ளே போன போதே, மறுபடியும் ஏதோ வேலையாய் இறங்கி வந்த ஜெயகர், “”ஏய் மொய்தீன்… கொஞ்சம் இரு… போயிடாதே!”
கட்டளைத் தொனியில் சொல்லிவிட்டு, மறுபடியும் மாடியேறிப் போய்விட்டார்.
“அடப்பாவி… நான் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருப்பது…’ போகவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் தத்தளித்தார் மொய்தீன்.
“என்னை காணம்ன்னு வேன்காரன் சாமான்களோட வலசை புறப்பட்டுப் போயிருவான். நான் அப்புறம் கடைசி பஸ்சில கூட்டத்தில இடிபட்டு, மிதிப்பட்டுக்கிட்டுப் போகணும். இவனுக்குப் பிடிக்கும்ன்னு சீம்பாலக் கொண்டுக்கிட்டு வந்தது தப்பாய் போச்சே… விவரமில்லாம இவன் பாட்டுக்கு, “இரு, இரு’ன்னு சொல்லிட்டு மாடியேறிப் போயிட்டானே!’
வெகுநேரமாய் மொய்தீன் திணறிக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், மாடியில் கலந்துரை யாடல் முடிந்து, விருந்து பரிமாறும் நேரம் வந்தது. வேகமாய் கீழே வந்த ஜெயகர், “”மொய்தீன்… வா, வா…” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடியேறினார்.
“”ஏய் ஜெயகர்… எங்கேப்பா கூட்டிட்டு போற… இன்னொரு நாளைக்கு வர்றேன் விருந்து சாப்பிட… இப்ப வேண்டாம் விடு.”
“”அட… பேசாம வாய்யா ராவுத்தரே…”
ஜெயகரின் பிடிக்குள் மொய்தீனின் கை வசமாக பிடிபட்டிருந்தது. ஜெயகரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கைலியை ஒரு கையில் பிடித்தபடி தானும் தாவி ஏறினார் மொய்தீன்.
அந்த விஸ்தார ஹாலில், எல்லாருமே உயர்தர ஆடைகளுடம், கம்பீரமாய் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் இருந்தனர். ஷெப்பர்ட் பிரதான விருந்தினரானதால், அவர்முன் மேசையும், பூங்கொத்தும் இருந்தது.
அவரது ஏழடி உயரமும், ரோஜா வண்ணமும், ஆஜானு பாகுவான உடல்வாகும் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனார் மொய்தீன்.
“”நான் சொல்வேனே… என் மூன்றாம் வகுப்பிலிருந்து, ஒன்றாய் படித்த சக மாணவன் இன்று வரையிலும் ஆப்த நண்பன் என்று; அவன் தான் இவன்.”
ஆங்கிலத்தில் சொல்லி அறிமுகம் செய்தார் ஜெயகர். இதைக் கேட்டதும் முகம் பூராவும் மலர அவ்வளவு பெரிய உருவமான ஷெப்பர்ட் எழுந்து, “”ஓ… மொய்தீன்?” என்று, கையைப் பிடித்து சந்தோஷமாய் குலுக்கினார்.
மொய் தீனுக்குக் கூசியது. ஆனால், ஷெப்பர்ட் முகத்தில் துளி கூட எந்த வேற்றுமையும் இல்லாமல், “ஓ… இவன் ஒரு நல்ல சிநேகிதன்…’ என்ற பார்வையும் அதில் தெரிந்தது.
மொய்தீன் என்ற தன் பெயர் கூட, இந்த ஜெர்மன்காரருக்குத் தெரிந்திருக்கிறதே என்ற வியப்பு ஒரு நொடி தோன்றினாலும், தன் தோற்றத்தை எண்ணியே கூசினார் மொய்தீன்.
“”இவன் பேர் மொய்தீன். என்னோட பல நண்பர்கள்ல முக்கியமான, என் மனம் நேசிக்கிற நண்பன்,” என்று எல்லாருக்குமாய் ஆங்கிலத்திலேயே இன்னொரு அறிமுகமும் செய்தார் ஜெயகர்.
எல்லாரும், உயர்வாய், “அப்படியா?’ என்று மொய்தீனைப் பார்த்தனர்.
ஷெப்பர்ட் ஒரு நாற்காலியை மொய்தீன் பக்கமாய் நகர்த்தி, உட்காரும்படி ஆங்கிலத்தில் சொன்னார். அவர் சொல்வது புரிந்தாலும், அவர்களுக்கு சமமாக உட்கார வெட்கப்பட்டு, “இருக்கட்டும்’ என்று மறுத்தார் மொய்தீன்.
“”நண்பர் ஷெப்பர்ட் கிட்ட இந்த என் நண்பனைப் பத்தி ஏற்கெனவே சொல்லி யிருக்கேன். இப்போ உங்ககிட்டேயும் என் நண்பனோட உயர்வு பற்றி சொல்ல ஆசைப் படுகிறேன்…
“”இந்த மொய்தீனோட ஊர் பக்கத்துக் கிராமம் வலசை. வலசையிலிருந்து இங்க வந்து படிச்சான். இப்போ அங்கே பலசரக்குக் கடை வச்சிருக்கான். நானும், இவனும் ஒண்ணாப் படிச்சது எட்டாம் கிளாஸ் வரைதான். அதுக்கப்புறம் மொய்தீன், தனக்குப் படிப்பு வரலன்னுட்டு படிப்பை நிறுத்திட்டான். ஆனா, எங்க சிநேகிதம் மட்டும் எந்தத் தடங்கலும் இல்லாம இன்று வரை தொடர்கிறது.
“”மாடு கன்றுகள் உள்ள விவசாயக் குடும்பம் அவனோடது. எனக்கு சீம்பால் சாப்பிடறது ரொம்பப் பிடிக்கும்ன்னு அவங்க வீட்ல எப்போ மாடு கன்று போட்டாலும், கட்டாயமா எனக்கு சீம்பால் கொண்டு வந்துடுவான். எதிர்பாராம இன்னைக்கு அவன் இங்க வந்ததும் சீம்பால் கொண்டு வரத்தான்.
“”ஆனா, இதுவல்ல விஷயம் இவனோட உயர்வைச் சொல்றதுக்கு. அப்போ நான் எஸ்.எஸ்.எல்.சி., படிச்சுக்கிட்டிருக்கேன். எங்க அப்பாவுக்கு வேலை போய்டுச்சு; வீட்ல வறுமை, கஷ்டம்.
“”எனக்கு பொதுத் தேர்வுக்கு பணம் கட்டணும். ஆனா, பத்துப் பைசா கூடக் கிடைக்காத நிலைமை. நம்மால் பரீட்சை எழுத முடியாது என்று ஊர் சாவடியில ஒரு தூண்ல சாய்ஞ்சு உட்கார்ந்து அழுதுக் கிட்டிருந்தேன். இவன், இந்த தெய்வம் என்ன செஞ்சான் தெரியுமா?
“”வீட்ல ஒருத்தருக்கும் தெரியாம அவனோட சைக்கிளைக் கொண்டு போய் வித்துட்டு, அந்தப் பணத்தில் எனக்கு பீஸ் கட்டி, அடுத்த நாள் காலையில நான் எழுத வேண்டிய பரீட்சைக்கான ஹால் டிக்கெட்டைக் கொண்டு வந்து நீட்டினான். “நீ நாளைக்குப் போய் ஜம்முன்னு பரீட்சை எழுது. எப்பவுமே முதல் மார்க் வாங்குறவன் நீ… உன் படிப்புக் கெடக் கூடாது…’ என்று மட்டும்தான் சொன்னான்.
“”அப்புறம் தான் தெரிஞ்சுது அவன் சைக்கிளை வித்துட்டு, வீட்ல தொலைஞ்சு போச்சுன்னு பொய் சொல்லியிருக்கான்னு.”ஏண்டா இப்பிடி பொய் சொன்னே…’ன்னு பதறினேன். “வீட்ல உன்னை அடிக்கலயா, திட்டலயா…’ன் னேன். அவன் சாவகாசமா, “திட்னாங்க தான், அடிச்சாங்க தான்… வாங்கிக்க வேண்டியது தான். என்ன செய்யிறது… உன் படிப்பு கெட்டுடக் கூடாதுல்ல. வீட்ல, “என் பிரண்டு பரீட்டைக்கு பணம் கட்ட முடியல… குடுங்கன்னா குடுக்கப் போறாங்களா…’ போடா… திருவள்ளுவரே சொல்லிருக்கார்ல… “பொய்மையும், வாய்மையிடத்து’ன்னு… நான் சமாளிச்சுக்குவேன் நீ பரீட்சை எழுதினது தான் முக்கியம்… அது என் சந்தோஷம்டா…’ன்னான்.
“”இவனோட உயர்வு யாருக்கு வரும்? அந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி.,யில நான் தான் மாநிலத்திலேயே முதல் மாணவன். என் நண்பனால… ” ஜெயகரின் கண்கள் கலங்கின.
“”ஏய்… ஜெயகர்.. எம்புட்டு வருஷத்துக்கு முந்தி நடந்தது… இப்பப் போயி அதையெல்லாம் சொல்லிக்கிட்டு…” இழுத்தார் மொய்தீன்.
இடப்புறம் ஜெர்மானிய நண்பர் ஷெப்பர்டும், வலப்புறம் வலசை கிராமத்து நண்பர் மொய்தீனும் இருக்க, எதிரே பரிமாறப்பட்டிருக்கிற விருந்தை ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் அனுபவித்து ரசித்து உண்டார் ஜெயகர்.
“சே… நட்பை மதிக்கிற இந்தப் பய ஜெயகரை மதிக்கத் தெரியாம… அந்த ஜெர்மன் காரர் மட்டும் என்னவாம்? என் கைலியையும், சட்டையையும், சீவாத என் தலையையுமா பார்த்தாரு! இவங்க மதிப்புத் தெரியாம, நான் தான் கைலியையும், சட்டையையும் போய் பெருசா மதிச்சுக்கிட்டு முட்டாள்தனமா தயங்கிக்கிட்டேன்…’ என்று தான் வெட்கப்பட்டதற்கு கூசிப் போனார் மொய்தீன்.

– இ.பகவதி (அக்டோபர் 2010)

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை!

இ.பகவதி
வயது : 70, சொந்த ஊர்: மதுரை. ரயில்வே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய முதல் சிறுகதை இது. தன் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தையே சிறுகதையாக வடித்துள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *