கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 14,659 
 
 

நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே பார்த்துவிட்டு என்னிடம் எதையோ சொல்வதற்காக பெரியவன் சுதாகர் விரைந்து வந்தான். பானு சத்தம் போட்டாள்.

“டேய்! மொதல்ல அவரு சாப்பிடட்டும். ராத்திரி என்ன சாப்பிட்டாரோ?.”

“என்னம்மா விஷயம்?.”——ஒருத்தரும் வாயைத் திறக்கவில்லை. மருமகள்கள் இருவரும் சமையலறையின் வாயிலில் மவுனமாக நின்றிருந்தார்கள். சின்னவன் ஜனா புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்தான். எல்லோரிடமும் ஒரு இறுக்கம் தெரிகிறது. நான் சாப்பிட காத்திருக்கும் இறுக்கம். ஒருவேளை நலியில் படுத்த படுக்கையாய் இருக்கும் என் தாய் மாமனுக்கு எதுவும்?.

“யாராவது என்னன்னு சொல்லித் தொலையுங்களேன்.”

“ராமநாதன் சார் எங்கியோ தொலைஞ்சுட்டாராம்பா. தேட்றாங்க.”—— எனக்கு அது நகைச்சுவை விஷயமாக இருந்தது. சீரியஸ்ஸா எதுவும் உறைக்க வில்லை. குழந்தையா அவரு தொலைஞ்சி போறதுக்கு?.

“அட! சீரியஸ்ஸாத்தான் சொல்றோம். மூணு நாளாச்சி. புதன் கிழமை காலையில லைப்ர்ரி வரைக்கும்னு போனவர்தான், திரும்பல.”

நம்ப முடியவில்லை என்றாலும் உள்ளே திக்கென்று கலவரம் படர்ந்தது. இவர்கள் யாரும் எங்கிட்ட பொய் பேசப் போறதில்லை. பானு கூப்பிடக் கூப்பிட டி.வி.எஸ்-50 யைக் கிளப்பினேன். யோவ் ராமநாதா! என்னய்யா இதெல்லாம்?. அவர்கள் வீட்டை நெருங்கும்போதே உறைக்கும் அமைதியில் சோகம் தெரிந்தது. சுற்றம், அக்கம்பக்கம் என்று ஆட்கள் துக்கம் விசாரிக்க வருவதும் போவதுமாய் இருந்தார்கள். எங்கள் நட்பு இந்த தெரு முழுக்க பிரசித்தி. என்னைப் பார்த்தவுடன் அவருடைய பிள்ளைகள் கருணாவும், செந்திலும் ஓடி வந்தார்கள். இருவரும் டாக்டர்கள்.

“ஏம்பா! என்னாச்சி?.அவருடைய மனசு நோவற மாதிரி எதுவும் நடந்துச்சா?, என்ன பண்ணீங்க?.”—- இளையவன் அடிவாங்கிய பார்வை பார்த்தான். பெரியவன் என் கைகளைப் பிடித்துக் கொண்டான். மேலே பேச்சு வரவில்லை. ஓ! நான் அப்படி கேட்டிருக்கக் கூடாது. அவர்களின் கலைந்த தலையும், தாடையில் முட்களாய் ஷேவ் செய்யப் படாத நாலு நாள் தாடியும, அழுது உப்பிய கன்னங்களும், சுற்றிச் சுற்றி அலையும் கண்களும்…உண்மையில் இவர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

“சத்தியமாய் சொல்றோம் அங்கிள் நாங்க யாரும் எதுவும் சொல்லல, சொல்லவும் மாட்டோம். அவர் எங்கப்பா மட்டுமில்லை. அம்மா, குரு, எல்லாமும் அவர்தான்.”—-முகத்தைப் பொத்திக் கொண்டான்.

“சன் டி.வி.யில கூட விளம்பரம் கொடுத்திருக்கோம். ஐயோ! எங்கப்பாவுக்கு என்னாச்சின்னு தெரியலையே.”

பெரிய மருமகள் என்னைப் பார்த்துவிட்டு எழுந்து வந்தாள்.அவளும் டாக்டர்தான். கோஷாவில் கைனகாலஜிஸ்ட்.

“உங்க கிட்ட என்னமாவது சொல்லியிருப்பார்னு நினைச்சிருந்தோமே. நேத்து ரெண்டு தடவை உங்க வீட்டுக்கு மச்சினன் போய் வந்தாப்பல. நீங்க ஊரில இல்லைன்னு சொன்னாங்க.”

“ஆமாமா. ஊருக்குப் போறப்ப கூட சொல்லிட்டுத்தான போனேன். ஒண்ணும் சொல்லலியே. ஒரு வேளை ஆக்ஸிடெண்ட் ஏதாவது?.”

“இல்லையில்லை. ரெண்டு நாளாய் முழுசாய் தேடிட்டோம். அஸிஸ்டண்ட் கமிஷனர் என் கிளாஸ் மேட்தான். இந்த மூணு நாட்களில் ஆக்ஸிடண்ட் ஆன எல்லா ஆட்களையும், பாடிகளையும் கூட தரோவா பார்த்துட்டோம். இல்லை..இல்லை அங்கிள் எங்கப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்காது. எங்கியோ சவுக்கியமா இருக்கார். நாளைக்கு வந்து நிற்பார் பாருங்களேன்.”—— நான் குழப்பமாக திரும்பி விட்டேன். ராமநாதா…ராமநாதா…! என்னாச்சிய்யா உமக்கு?. அவரை கடைசியாய் செவ்வாய்க்கிழமை பார்த்தமா?.

“என்னய்யா போன மாசந்தானே கனியனூர் போனீரு?.இப்ப என்னா?. என்னா ஜோலி?. ஏதும் குஜிலி ஷோக்கா?.”

என்ன கிண்டல், நையாண்டி. அவர் எப்பவும் அப்படித்தான். நாங்கள் பழக ஆரம்பிச்சி ஒரு பத்து வருஷம் ஆயிருக்குமா?. நோ..நோ.. மேலயே ஆயிருக்கும்.2000 லிருந்துதான் எனக்கு இந்த வாக்கிங் பழக்கம். முதலில் ஒரு வருஷம் தனியாக போனேன். அது மஸ்ட். ப்ளட் ஷுகர் பி.பி.300.மி.கி. வீட்டிலிருந்து கிளம்பி மூச்சிரைக்க நடப்பேன். பாரதி சாலையைக் கடந்து பீச் ரோடைப் பிடித்தால், நேப்பியர் பாலத்தைத் தாண்டி, வார் மெமோரியல் கட்டடத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வியர்வையில் தெப்பலாய் நனைய திரும்புவேன். அப்படி ஒருநாள் திரும்பும் போது யூனிவர்சிட்டி கட்டடத்தைத் தாண்டினேன், திடீரென்று பார்வை தெளிவில்லாமல் மசமசப்பாக ஆகி, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. தலையைச் சுற்ற ஒரு முறை வாந்தி எடுத்தேன். சளசளவென்று வியர்வை ஊற்றுகிறது. என் நிலை எனக்கே தெரிஞ்சி போச்சு. கண்களை தீறக்க திராணி இல்லை. அப்படியே சாலையோரத்தில் சாய்ந்து விட்டிருக்கிறேன். அதற்கு மேல் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது.

“சார்!….சார்…! வாயைத் திறங்க. உம் சீக்கிரம்…சீக்கிரம் வாயைத் திறங்க.”—–எங்கியோ குரல் கேட்குது. யாரோ படபடவென்று என் கன்ன்ங்களைத் தட்டி என்னை உசுப்பிக் கொண்டிருந்தார்கள். அதிக இனிப்புடன் வெதுவெதுப்பான காபி என் வாயில் இறங்கியது விழுங்கினேன். கொஞ்ச நேரத்தில் ஆயாசம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தேன். எதிரே இந்த ராமநாதன் சார். இவர்தான் ஓடிப்போயி அடுத்த திருப்பத்திலிருக்கும் காபி பார்ல இருந்து காபி வாங்கி வந்திருக்கிறார். முன் பின் தெரியாத மனுஷன் உரிமையாய் என்ன கத்து கத்தினார்?.

“என்ன ஆளுய்யா நீர்?. ஒரு டையாபட்டீஸ் ஆளு வாக்கிங் வர்றப்போ கையில குளுகோஸ் வெச்சிருக்க வேண்டாம்? அட்லீஸ்ட் ரெண்டு சாக்லெட்டாவது பாக்கெட்ல இருக்க வேண்டாம்?. திடீர்னு ஷுகர் லெவல் குறைஞ்சா ஆளை கவிழ்த்துடுமே, தெரியாது உமக்கு?”—- நான் விழித்தேன். நிஜமாகவே இந்த விஷயம் எனக்குத் தெரியாதுதான். அன்று ஆரம்பித்த பழக்கம்தான் முதலில் கண்ணகி சிலையருகில் இருவரும் சந்தித்து நடக்க ஆரம்பித்தோம். அப்புறம் முச்சந்தியில் ஒருத்தருக்காக ஒருத்தர் காத்திருக்க ஆரம்பித்தோம். அதற்கப்புறம் நடப்பதென்பது ஒரு நியதியாகி ஒருநாள் அவர் என் வீடுவரை வந்து என்னை அழைத்துக் கொண்டு நடப்பதும், அடுத்தநாள் நான் அவர் வீட்டுக்குச் சென்று அவரை பிக் அப் செய்து கொள்வதுமாக வளர்ந்தது.

நேராய் வார் மெமோரியல் கட்டடம் வரை போய் திரும்பும்போது நாதன் காபி பாரில் சர்க்கரை போடாமல், ஏடு இல்லாமல், எனக்கொரு காபி. அவருக்கு எல்லாமே அதிகமிருக்க வேண்டும். டபுள் ஸ்ட்ராங்க், டபுள் சர்க்கரை. எனக்குத்தான் டையாபட்டீஸ், ப்ளஸ் பி.பி. 170/100. அவருக்கு வாக்கிங் என்பது உடற்பயிற்சி. அதான் மனுஷன் இந்த வயசிலும் சும்மா கிண் னு இருக்கான். எங்களுக்குள் ஒரு ஒழுங்கு முறை உண்டு. யாரும் பேசி வைத்துக் கொண்டு அப்படி நடப்பதில்லை. தானாய், இயல்பாய். ஒரு நாள் நான் காபிக்குக் காசு கொடுத்தால், அடுத்த நாள் அவருடைய முறை. அன்றைக்கு என் பாக்கெட்டில் பத்து பைசா கூட இருக்காது. நடைப் பயிற்சி முடிந்து பாரதி சாலையில் வைத்து நாங்கள் பிரிவோம். மாலை ஐந்து மணிக்கெல்லாம் மீண்டும் காடற்கரையில் ஆஜர். மணல் வெளியில் இருட்டிப் போய் குளிரடிக்கும் வரையில் பேச்சு…பேச்சுத்தான். வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட எங்களுக்கு அதைத் தவிர ஜீவன போராட்டங்கள் என்று என்ன இருக்கின்றன?.

மனுஷனுக்கு என்னா அறிவு?. என்ஸைக்ளோபீடியா மாதிரி எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வெச்சிருப்பார். அவர் தொடாத சப்ஜெக்ட் அநேகமாய் எதுவுமிராது. அணுமின் நிலையம்தான் நமக்கிருக்கிற ஒரே தீர்வு. அது ஏன் என்று மூச்சு விடாமல் அடுக்குவார். சுற்றுச் சூழலா, ஸ்டெம் செல் பற்றியா?,ஜினோமில் எஃப்-16 புரதம் பற்றி எவ்வளவு தகவல்கள்?. அஸ்ட்ரானமியில் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவார். ராமநாதன் சாருக்கு சமூகப் பிரக்ஞை அதிகம். எல்லா வளங்களும் சமச்சீராய் விரவிக் கிடக்கும் நாடு. நுண்ணறிவை வெளிநாடுகளில் விற்றுப் பிழைக்கும் அறிவாளிகள் நிறைந்த நாடு, கடுமையாய் உழைக்கும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு. ஆயினும் இன்னமும் கடன் கேட்டு வெளி நாடுகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம். ஏன்? ஊழல் மிகுந்த அரசியல் வாதிகள், செயல் படாத சட்டங்கள்,சுணங்கித் திரியும் அரசு இயந்திரங்கள், உளுத்துப் போன இஸங்கள். இவையெல்லாம் ஒழியணும்யா நேர்மையும், கண்டிப்பும் மிகுந்த சுயநலமில்லாத தலைவர்கள் வரணும். ரஷ்யாவின் ஸ்டாலின், சிங்கப்பூரின் லீக்வான் ஹ்யூ மாதிரி. ஆமாம்.சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் சொன்னது மாதிரி `மக்களால் நேசிக்கப் படும் மன்னனால் நல்லாட்சியைத் தர முடியாது. மக்கள் கண்டு பயப்படும் மன்னனால்தான் சிறந்த ஆட்சியைத் தர முடியும்.’ கண்கள் மின்ன பேசிக் கொண்டே இருப்பார். என்றைக்கும் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொன்டிருப்பதே என் நிலை. பத்தாவது வரை படித்து விட்டு எழுத்தராகச் சேர்ந்து, அதிலேயே தேய்ந்து, தலைமை எழுத்தராக ரிடையர் ஆகிவிட்ட என் மூளைக்கு `பார்வையில் கண்டுள்ள கடிதத்தின் பேரில் தங்களின் மேலான கவனம் ஈர்க்கப் படுகிறது’—என்பதைத் தவிர வேறு என்ன தெரியும்?.

எதனால் இப்படி செய்தாய் ராமநாதா?. என்னிடம் கூட சொல்லாமல் அப்படியென்ன ரகசியம் உன்னிடம்?. இனிமேல் என் நேரங்களை எப்படி கழிப்பேன்?. இன்றைக்கு காலை வாக்கிங்கில் பாதியிலேயே திரும்பிவிட்டேன், மனசு முழுக்க வெறுமை அடிக்கிறது. எதிலும் ஒன்ற முடியவில்லை. பூஜையறையில் அம்பாளை தியானிக்கும் போது, சாப்பிடும் போது, பேரன் கைலாஷுக்குக் கதை சொல்லும் போது…இப்படி எல்லா நேரங்களிலும் ராமநாதனே நெஞ்சு முழுக்க வியாபித்து… இப்படியே நேற்றுடன் ராமநாதன் போய் இருபது நாட்களாகி விட்டன. ஒரு தகவலும் இல்லை. பதினைந்து வருஷ பந்தம், சட்டென்று துடைத்துப் போட முடியவில்லை.

இன்று என் பென்ஷன் பாஸ் புத்தகத்தில் வரவு செலவுகளை பதிவதற்காக பேங்க் போயிருந்தேன். கேஷியர் வெங்கட்ராமன் ராமனாதன் விஷயத்தை லேசுபாசாய் விசாரித்து விட்டு ஒரு தகவலைச் சொன்னார். அதிர்ச்சியாய் இருந்தது. ஏன் இப்படி?. என் கிட்ட கூட மறைச்சிட்டியே ராமநாதா, அப்படியென்ன ரகசியம்?. எஸ்! பிள்ளைகளிடமோ, மருமகள்களிடமோ அவர் அவமானப் பட்டிருக்க வேண்டும். இவர்கள் மறைக்கிறார்கள். சட்டென்று கருணாவை செல்லில் பிடித்தேன்.

“கருணா! சென்னையிலும், அதைச் சுற்றி இருக்கிற மாவட்டங்களிலும் இருக்கும் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில்தான் உங்க அப்பா இருக்கிறார். தரோவாகத் தேடுங்கள்.”

“எப்படி சொல்றீங்க?.”

“அவர் காணாம போறதுக்கு முன் நாள் அதாவது ஜூலை எட்டாம் தேதி தன் கணக்கிலிருந்து மூன்று லட்சம் ரூபாயை டிரா பண்ணியிருக்கிறார். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே கேட்டு வாங்கியிருக்கிறார்.”—-

“என்ன?.”——-அவன் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

“அவருக்கில்லாத பணமா? ஆனா அப்பா ஏன் இப்படி செஞ்சாரு?.ஒண்ணும் புரியலையே.”

மீண்டும் முதலில் இருந்து தேட ஆரம்பித்தோம். மேலும் ஒரு வாரத்துக்கு மேல் போனதுதான் மிச்சம். ஒரு துப்பும் இல்லை. பிள்ளைகள் பற்றியோ, மருமகள்கள் பற்றியோ அவர் இதுவரையிலும் ஒரு குறை சொன்னதில்லை.

“என்ன, நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பேசி பகிர்ந்துக் கொள்ளக் கூட அவங்களுக்கு நேரம் கிடையாதுய்யா. சாப்பிட்ற போது ரெண்டொரு வார்த்தைகள் தலைப்புச் செய்திகள் மாதிரி பேசிக்குவோம். அவங்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவங்க உலகமே தனி. நோய்களும், சிகிச்சைகளும், இறப்புகளுமே அவர்களுடைய பேச்சில் சுவாரஸ்யமாய் பொதிந்துக் கிடக்கும். எனது சராசரி உலகம். அதில் நடக்க உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லைய்யா.”—என்பார்.

விடுமுறை நாட்களில் தவறாமல் என் வீட்டிற்கு வந்து விடுவார். அப்போதெல்லாம் என் குடும்பத்தினர் ஹாலில் வந்து சேர்ந்து விட, மணிக்கணக்காய் சிரிப்பும், கும்மாளமும், வாதிப்பும், கலந்துரையாடலும் என்று அமர்க்களப்படும். கூடவே இளைய மருமகள் கொறிப்பதற்கு எதையாவது தட்டில் கொண்டு வந்து வைத்துவிடுவாள். மருமகள்கள் இருவருமே ஆசிரியைகள்.

“இந்த வாழ்க்கைக்குத்தான்யா ஏங்கறேன்.. மனைவி மக்களோடு பேசிச் சிரித்து, சண்டை போட்டு…எதுக்கும் நான் கொடுத்து வைக்கல. நீங்களே கிடந்து படுங்கன்னு அவ போயிட்டா.”–சொல்லிக் கொண்டிருக்கும் போதே சடக்கென்று உடைந்து போய் கலங்குவார். மனைவியைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் இப்படித்தான் கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ள, கண்கள் குளமாகி விடும்.

“நீங்க அப்பவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கணும் அண்ணா.”—- இது என் மனைவி.

“இல்லம்மா!. சங்கரி இடத்தில் வேற ஒருத்தியை நெனைச்சிப் பார்க்கவே முடியல. அத்துடன் முதலில் பிள்ளைகளின் வாழ்க்கை. எல்லாத்துக்கும் ஒரு விலையுண்டுதானே. என் சுகத்தை மட்டும் பார்த்திருந்தால் பிள்ளைங்க உருப்பட்டிருக்க மாட்டாங்க.”

என் வீட்டில் எல்லோருக்கும் அவர் மீது ஒரு ஒட்டுதல் உண்டு. என் இளைய மருமகள் ஒருபடி மேலே போய் அவரை தன் அப்பாவாகவே வரித்திருந்தாள்.

“ராமநாதன் சார்! இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல நாம சந்திக்கலேன்னா என்னமோ மாதிரி ஆயிடுதுங்க..”—– என்று ஒரு நாள் நான் சொன்னதற்கு அவர் நக்கலடித்தார்.

‘என்னய்யா! சினிமா டயலாக் அடிக்கிற?. ரெண்டுபேரும் செல்லு பொன பாண்டுகள்யா, எதையும் எதிர்பார்க்காம உயிரையும் கொடுக்கக் கூடிய விடலைப் பருவ நட்பு இல்லய்யா நமது.. இந்த வயசுல தோழமைன்றது பொழுதை ஓட்ட, மனப் புழுக்கங்களை கொட்டி ஆத்திக் கொள்ள அவ்வளவுதான். பீ பிராக்டிகள். மூன்று நாட்களுக்கு சேர்ந்தாற்பொல காபிக்கு நான் காசு கொடுத்தாலோ, இல்லை நீ கொடுத்தாலோ சிதைந்து போவக் கூடிய நட்புதான் இது.”

“சே! வாழ்க்கையில இவ்வளவு வறட்சி கூடாதுங்க.”

“நான் யதார்த்தவாதி”

“ஹும்! யதார்த்தவாதி வெகுஜன விரோதி. மரை கழண்டுவிட்ட கேஸுன்னு அர்த்தம்.”

“அட இவ்வளவு தெரியுமா உனக்கு?.” —–விட்டில் எல்லொரும் சிரிக்க, இப்படியே பொழுது கேலியும் கிண்டலுமாக்க் கழியும்.

இரண்டு மாதம் போல் ஓடிவிட்டது. ராமநாதனின் நினைவு மட்டுமே மிச்சம் என்கிற நிலை. அடிக்கடி ராமநாதன் வீட்டிற்குப் போய் ஏதாவது புலன் தெரிஞ்சிதா என்று விசாரித்து விட்டு வருவேன். கண்ணகி சிலையைத் தாண்டும் போதெல்லாம் ஒரு சின்ன அலையாய் அவருடைய பிரிவின் சோகம் எழுந்தடங்கும். காலம் எல்லாவற்றையும் துப்புரவாய் அடித்துச் செல்லும் வல்லமை வாய்ந்ததுதானே?. என்னதான் ஆகியிருக்கும் என்று மாய்ஞ்சி மாய்ஞ்சி பேசி, ஏறக்குறைய மறந்து போன வேளையில் ஒருநாள் காலையில் ராமநாதன் தொலைந்து போனதின் மர்மம் திடீரென்று வெடித்தது. திரியை கொளுத்திப் போட்டது கோடி வீட்டு சுந்தரசாமி. எதிர்பார்க்க வில்லை. அவருடைய இன்னொரு பக்கத்தைப் பார்த்து விட்ட அதிர்ச்சியில் மனம் முழுக்க வேதனையும், அறுபது வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்தும் மனிதர்களை அளவிடத் தெரியாத என் இயலாமையும்….என்மீதே எனக்கு வெறுப்பாய் இருந்தது. என்னிடம் கூட நீ யாரென்பதை மறைத்து விட்டாயே ராமநாதா. என் வீட்டில் எல்லோரும் உன்னை அறிவு ஜீவியாகவும், மாமனிதராகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டிற்குள் நுழையும் போதே பானு ஓடி வந்தாள். வந்தவள் உரத்தக் குரலில்

“ கேட்டீங்களா?, என்ன அநியாயம்க”—என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் நடுக் கூடத்தில் வைத்து கொட்டிக் கவிழ்த்தாள். சுந்தரசாமி தான் பார்த்ததை என்னிடம் சொன்னான் என்றால், அவன் மனைவி பானுவுக்குச் சொல்லியிருக்கிறாள். இந்நேரம் ராமானாதன் பெயர் தெரு முழுக்க, ஏன் ஊர் முழுக்கவும் நாறிப் போயிருக்கும்.

ராமநாதனை சுந்தரசாமி மும்பை தாராவியில் பார்த்ததை, ஹலோ ராமநாதன் சார் என்று அவருடைய கைகளைப் பற்றியதை, அதற்கு அவர் உதறி விட்டுவிட்டு

“க்யா, ராம்நாத்?, நை…நை…மை கோபால் சர்மா, ராம்நாத் நஹீ. சம்ஜீ?.”— என்று விலகியதை, கூடவே அவருடைய கையைப் பிணைத்துக் கொண்டு ஒட்டி உரசியபடி தள தளவென்று சிவப்பாய் ஒரு முப்பது வயசு பொம்பளை ஒருத்தி, ஒன்றிரண்டு வயசு குறைவாகக்கூட இருக்கலாம், அவருடன் போனதை விலாவாரியாக இந்நேரம் தெரு முழுக்க கும்மியடித்து முடித்திருக்கும். என் வீட்டில் அமைதி. ராமாநாதன் சாரா இப்படி?. நம்பிக்கை வரவில்லை.

“ஏங்க அது நிஜமாகவே கொபால் சர்மாவே ஃதானோ என்னவோ?.”

“இல்லைடீ. சுந்தர சாமிதான் அடிச்சிச் சொல்றாரே. சாய்ஞ்சி சாய்ஞ்சி அந்த நடை கூட அச்சாக அப்படியேத்தானாம். இல்லேன்னா அதுக்கப்புறம் அவசர அவசரமாக அந்த பொம்பளையை இழுத்துக்கிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே ஏன் ஓடணும்?. அந்தப் பொண்னும் தமிழிலும், ஆங்கிலத்திலும்தான் பேசியிருக்கா. தமிழ்நாட்டு மூஞ்சி மாதிரிதான் இருந்திச்சாம்டீ.”

“அறுபத்தைந்து வயசு கிழவனைக் கட்டிக்க அந்தப் பொண்னு எப்படி சம்மதிச்சாளோ?. பணத்தால அடிச்சிருப்பாரு.”

“ச்சீச்சீ! இதெல்லாம் கட்டிக்கிட்டதா?. கீப்பா வந்திருக்கும்டீ. மும்பை ரெட்லைட் ஏரியா பொண்ணா இருக்கும்.”

“இல்லீங்க. கழுத்தில புதுத்தாலி,காலில் மெட்டி, பட்டுப் புடவை. கொடி வீட்டுக்காரர் ஒண்ணு விடாம நோட் பண்ணியிருக்கிறார். ஹும்! தன் பொண்டாட்டி இடத்தில் வேறொருத்தியை வைக்க மனசில்லேன்னு அன்னைக்கு ஆலாபனம் பண்ணாரே. தூ! பொய்யான மனுஷன். எனக்கும் வெறுப்பும், ஆத்திரமும் கொப்பளித்தது. என்ன ரெட்டை வேஷம்?. மனசு ஆறவில்லை. அவர் பிள்ளைகள் அவரை இன்னும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள் பாவம்.

“சின்ன புத்தி சிங்காரம். பிள்ளைங்க அந்த ஆளை தெய்வமா கொண்டாட்றாங்க. ரெண்டு டாக்டர் மருமகள்களும் கூட அன்னிக்கு எப்படி அழுதாங்க தெரியுமா?.அது பொலிப்புக்கு ஓடிய கிழட்டுக் காளைன்னு இப்பத்தானே தெரியுது?. விவஸ்தை கெட்ட ஜென்மம். பேரன் பேத்திகளைக் கொஞ்ச வேண்டிய வயசில கிழவனுக்கு வாலிபக் கிறுக்கு. இங்கியே அந்தாளு ரெட்டை வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காண்டீ. ச்சீ! யாருடைய முகத்திலும் முழிக்க முடியாமத்தான் கண்ணு மறைய ஓடிட்டான் போல.”——என் ஆத்திரம் தீர திட்டினேன். என் மனைவியும் பிள்ளைகளும் ஆளாளுக்கு கிண்டலடித்துச் சிரித்தார்கள்.

“சரி…சரி…அந்த ஆள் பத்தின நெனப்பை தலையைச் சுத்தி தூர வீசிட்டு உள்ளே கால் வையுங்க. கர்மம்…கர்மம்…”—-சொல்லிவிட்டு பானு உள்ளே பொனாள். எழுந்தேன். செக்ஸ் பற்றிய விஷயத்தில் மட்டும் யாரும் மற்றவர்களிடம் உண்மை பேசறதில்லை என்ற கருத்து வாஸ்தவம்தான். ஆண்கள் என்றால் பெருமை கருதி மிகையாய், பெண்களென்றால் சமூகப் போக்கு கருதி அது பற்றியே தெரியாதவளைப் போல. பெரிய மருமகள் சமையல் அறையின் பக்கமிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். சின்னவள் மாயா இது எதிலும் ஒட்டாமல் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள். ஓ! அப்பாவாய் நினைச்சிருந்தேனே அவரா இப்படி என்று அதிர்ச்சியாக இருக்கும். என் உள் மனதில் அலைகள் ஓய்ந்து ஒரு அமைதி வந்திருந்த்து.

“என்னம்மா மாயா! நீ எதுவும் சொல்லலியே ஷாக் ஆயிட்டியா?. விடு சில மனுஷங்க இப்படித்தான் உள்ள ஒண்ணு வெச்சிக்கிட்டு புறத்தால ஒண்ணு பேசுவாங்க.”—– அவள் முகம் இறுகியிருந்தது. ஊடுருவும் அழுத்தமானப் பார்வை. கீழ் உதடு சற்றே நெளிந்து வலப்புறம் ஒதுங்கியிருக்க, அது ஏளனம். எனக்குப் புரியும்.

“என்னா மாயா?”

“மாமா! நான் இப்படி பேசறதால இங்க யாரும் என்னைக் கோபிக்க வேண்டாம். என்னால பொறுக்க முடியல. இந்த சம்பவத்தால ராமநாதன் சாரைப் பத்தி தெளிவா நாம தெரிஞ்சிக்கிட்டமோ இல்லையோ, நாம நம் ஒவ்வொருத்தரைப் பத்தியும் தெளிவா தெரிஞ்சிக்கிற மாதிரி நடந்துக் கொண்டோம். நமக்குக் கிடைத்த தகவல் சரியானதுதானா?, வயசான, பார்வைக் குறையுள்ள சுந்தரசாமி எந்தளவுக்கு சரியாக அடையாளம் கண்டிருப்பார்?. எதுவும் தெரியாது. அதை உறுதிப் படுத்திக் கொள்ளணும்னு கூட நமக்குத் தோணல. எவ்வளவு அவசரம்?. அந்த மனுஷன் இருக்காரா, செத்தாரா? என்பது கூட நமக்கு முக்கியமில்லை. அவர் இல்லையென்றதும் எப்படி வேண்டுமானாலும் கேவலப் படுத்தி மகிழலாம். என்ன வக்கிரம்?. ஹும்! பத்தோடு பதினொன்றாய் சேற்றை வாரி வீசும் பதினைந்து வருஷ சிநேகிதம் உங்களுடையது, இல்லையா மாமா?. அதுவும் காலையும், மாலையும் அளவளாவி, உள்ளும் புறமும் மகிழ்ந்துத் திரிந்த பதினைந்து வருஷங்கள். ஒன்றை புரிஞ்சிக்கோங்க. `ஒரு நல்ல நட்பு நீண்டகாலம் நீடித்திருப்பதென்பது இருவர்களின் ஒத்த ரசனைகளின் சந்தோஷங்களினால் இல்லை. பரஸ்பரம் ஒருத்தர் மற்றவரின் குறைகளை சகித்துக் கொள்வதனால்தான். அவர் அப்படியே கல்யாணம் செஞ்சிக்கிட்டிருந்தாலும். அதற்கு அவரிடம் ஒரு உயர்வான நோக்கம் இருந்திருக்கணும்னு நீங்க நினைச்சிருந்தால், அதுதான் ஒரு நல்ல நட்புக்கு அடையாளம். மனுஷங்க குறைகளை மட்டும் பார்க்கத் தலைப்பட்டால் நம்மில் ஒருத்தர் கூட பாஸ்மார்க் வாங்கமாட்டோம். இல்லையா மாமா?. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் சுகங்களை புறக்கணித்து விட்ட அந்த பழுது இல்லாத மனுஷரைப் பத்தி மத்தவங்களுக்குத்தான் தெரியவில்லை என்றால் உங்களுக்குமா மாமா?.”—–என்னருகில் நெருங்கி குனிந்தாள். கண்ணுக்குக் கண் நேராய் பார்த்து.

“உங்களுடைய இந்த செயலுக்குக் காரணம் எனக்குத் தெரியும் மாமா. எந்த விதத்திலாவது நீங்க அவரை விட நீங்க உசத்தி என்று காட்டிக்கணும்.” —- அவள் உள்ளே போய் விட்டாள். எல்லோரும் மெளனமாய் கலைந்து போக, கூடத்தில் விரவி நின்ற நிசப்தத்தில் கரைந்தேன்.மனம் கூசுகிறது. என் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ராமநாதா…ராமநாதா…!

நன்றி— `கல்கி’ தீபாவளி மலர்–2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *