கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,000 
 

என்னைப் பின் தொடர்வது தான்
லட்சியமெனில்
முயன்று பார்க்கலாம்.
நான் ஒரே இடத்தில்
நின்று கொண்டிருப்பதை
விமர்சிக்கப் போவதில்லை
என்றால் மட்டும்.

அறையின் மூலையிலிருந்த எழுத்து மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகங்களின் இடையிலிருந்த செல்பேசி அலறியது. படுக்கையிலிருந்து எழுந்து நகரும் பொழுது அவிழ்ந்திருந்த தனது கைலியை சரி செய்து கொண்டு மேசையை அடையும் பொழுது சரியாக அழைப்பொலி துண்டிக்கப்பட்டிருந்தது. திலீபன் செல்பேசியை எடுத்து தன்னை அவ்வளவு அதிகாலையில் அழைத்தது யாரெனப் பார்த்தான். மனோகரி.

அவளைத் திரும்ப அழைப்பதை ஒத்தி வைத்து விட்டு தனது அறையை சுற்றிலும் பார்த்தான் திலீபன். கண்ட இடங்களில் இறைந்து கிடந்த துணிகளும், நேற்றைக்கிரவு குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஒயின் பாட்டில் வகையறாக்களும், சிந்திக்கிடந்த மிக்சரும், பாத்ரூமின் வாசலில் இருந்த ஈரமும் அவனுக்கு தலைவலிக்கத் தொடங்கியிருந்ததை சொல்லும் வண்ணமிருந்தன. திலீபன் நேற்றைய இரவு எந்த அறை கேலியும் கூச்சலும் கும்மாளமுமாய் இருந்ததோ அதே அறை தற்போதைக்கு தனக்கு தலைவலி தருவதை குடிக்கிற பழக்கத்தோடு ஒன்றிணைத்துப் பார்த்து லேசாய்ப் புன்னகைத்துக் கொண்டான். அவன் முதன் முதலில் ஹரிஹரன் அறையில் தங்கி இருந்த போது வாரக்கடைசி நாட்களில் குடிப்பதற்கென்றே ஒன்று சேரும் கூட்டத்தில் தான் மட்டும் கலவாமல் தள்ளியே இருந்ததை நினைத்தான். இன்றைக்கு தொடக்கப்புள்ளியிலிருந்து எவ்வளவோ தூரம் வந்தாயிற்று. வாரக்கடைசி நாட்கள் திலீபனுக்கும் அவனது அறைக்கும் ஹேங்க்-ஓவர் தினங்கள் மட்டுமே.

பாத்ரூமிற்குள்ளிருந்து வெளியே வந்த திலீபன் ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தான். துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் மீண்டும் வந்திருந்தது. காற்றாடி சுற்றுவதன் ஆரம்பக் கணங்கள் தென்றல் மிகுந்தவை. எதையுமே தொலைத்துக் கண்டடையும் போது தான் அதன் அவசியம் உணரப்படுகிறது. திலீபன் மனோகரியை நினைத்துக் கொண்டான். இன்றைக்கு காலை ஆறரை மணிக்கே எப்படிக் கூப்பிட்டு இருப்பாள்..?எப்படியாகினும் மறுமுறை அவளே கூப்பிடட்டும். அதுவரை நிம்மதியாயிருக்கலாம். அவளுடன் பேசும்பொழுது அவன் நிம்மதி போவதற்கான சாத்தியங்கள் அதிகம் என அவனுக்கு நன்றாகத் தெரியும்.

வாசற்கதவை தட்டும் ஓசை கேட்டது. குப்பென்று ஒருகணம் வியர்த்தது. மனோகரி நேரில் வர மாட்டாள். இது வேறு யார்..? இன்றைக்கு ஞாயிறு… பேப்பர் போடும் சிறுவன். கதவைத் திறந்தான் திலீபன். மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்திருந்த ஆனந்த் மீண்டும் மேலேறி வந்தான்.

“என்ன சார்..அதுக்குள்ள எழுந்துட்டீங்க..? இன்னிக்கு ஷூட்டிங் உண்டா..?”

ஸ்னேகமாய்ப் புன்னகைத்த அவனிடம் அங்கலாய்ப்பான குரலில்

“இல்லைடா…இன்னிக்கு காலைலயே ஒரு கெட்ட கனவு. அதான் முழிச்சென். சரி…பால்டீ வாங்கிட்டு வா”

அவன் எதிர்பார்த்தவனாய் திலீபனின் கையிலிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு

“வேற..?” என்றான்.

“வேறேன்ன.. சிகரட் ஒரு பாக்கட் வாங்கிக்கோ…அப்டியே ஒரு பேஸ்ட் வாங்கியா…”

திலீபனின் குரல் முடியும் நேரம் அவன் கடகடவென இறங்கத்தொடங்கி இருந்தான். அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்த திலீபன் தனக்குள் சொல்லிக்கொண்டான் “முன்னாள் குழந்தை தொழிலாளி”

திலீபன் இப்பொழுது தனது அறையின் வாசற்கதவை நன்றாகத் திறந்து கலைந்து கிடந்த ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அழுக்குக் கூடையில் போடலானான். புத்தகங்களை எடுத்து அடுக்கினான். பெருக்கலாம் என விளக்குமாறை எடுக்கையில் ஆனந்த் வந்து அவன் கையில்னின்றும் விளக்குமாற்றை பிடுங்கிக்கொண்டு தன் கையிலிருந்த டீ தம்ளரை அவன் கையில் திணித்தான்.

திலீபன் பேப்பரைப் புரட்டிக்கொண்டபடி டீயைப் பருகலானான். ஆனந்த் அந்த சின்ன அறையை அழகாக கூட்டி படுக்கைகளை சுத்தமாக மடித்து வைத்து இன்னும் தான் ஒழுங்குபடுத்துவதற்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தான். திலீபன் பேப்பரை முடித்து விட்டு நிமிர்ந்த உடன் ஆனந்த் அவனிடம் மிச்ச சில்லறையை கொடுக்க முற்பட “வெச்சுக்கடா” என்றான்.

“சார்… வேற எதும் வேணுமா.. நா கெளம்பட்டா..?” எனக் கேட்ட ஆனந்தின் தலை முடியைக் கலைக்க முற்பட்ட திலீபனின் கரங்களுக்கு சிக்காமல் சட்டென்று ஓடி வெளியேறினான் ஆனந்த். திலீபனுக்கு இப்போதைக்கு தலைவலி குறைந்த மாதிரி இருந்தது. அதற்கு டீ காரணமாயிருக்க முடியும். ஒரு திரவம் தந்த தலைவலி இன்னொரு திரவம் மூலமாய் தீரவும் செய்கிறது.

சுவரில் இருந்த சார்ட் போர்டை நெருங்கினான். கையில் அவனது பிடித்தமான வயலட் பேனா.

“தொட்டி மீன்களைப்
பத்திரமாய்
திருப்பி அனுப்பிவிடலாம்தான்.
அதற்கான நதியைக்
கண்டடைந்த பிற்பாடு.”

என்று எழுதியவன் கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு எதோ யோசனையில் தனது செல்லை எடுத்தவன் அதைத் தொட்ட மறுகணம் மனோகரியின் அழைப்பு ஒலிக்கத் தொடங்கியது. கொஞ்ச நேரம் விட்டுப் பின் எடுத்தான்.

“சொல்லு.”

“என்ன சொல்ல, இன்னிக்கு சனிக்கிழமை. எட்டு மணிக்குள்ள வர முடியுமான்னு கேட்கத் தான் கூப்பிட்டேன்”

பெருமூச்சிற்குப் பிறகான ஒரு குரல் திலீபனிடமிருந்து வெளிப்பட்டது.

“அடுத்த வாரம் வர்ரேன். இன்னிக்கு வர்லை நான்.”

“ஏன்..ஊர்ல தானே இருக்கே..?”

மனோகரியின் நேரடிக்கேள்வி அவனை அலுப்புறச்செய்தது. ஆனாலும் பல்லைக்கடித்தபடி பதில் சொல்ல முயன்றான்.

“ஊர்ல தான் இருக்கேன். வேற வேலை இருக்கு. நீ ஃபோனை அவன் கிட்டே கொடு. நான் சமாதானம் செஞ்சுக்கிறேன்.” மறுமுனையில் எந்த பதிலுமில்லை. செல்லை வாங்கிக் கொண்ட யுவன் பேசினான்.

“அப்பா, சீக்கிரம் வாங்க. நான் ரெடியா இருக்கேன். என்ன பண்றீங்க இன்னும்..?”

அந்தக் குரலை கேட்ட உடன் திலீபன் வழக்கம் போலக் குழைந்தான். அவனுக்கு ஏற்கனவே தெரியும். யுவனின் குரல் இப்போது தான் உடையத் தொடங்கி இருந்தது. என்றாலும் கூட அந்தக் குரலில் இருக்கும் கட்டளைகளை திலீபன் ரசிப்பான்.

“வர்றேன் யுவன். இன்னும் சரியா டென் மினிட்ஸ்… சரிதானே..?”

வைத்துவிட்டான். திலீபன் எழுந்து ஆடைகளுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான். மிதமான பெர்ஃபியூம் தான் எப்போதும் யுவனுக்கு பிடிக்கிறது. இப்போது தான் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இப்போதே இதுகளைப் பிடிக்கும் இதுகளைப் பிடிக்காது எனப் ப்ரத்தியேகமாக தனக்கென்று தேர்வுகளை வைத்திருக்கிறான். அப்பா என்பவர் வாரக்கடைசி நாட்களில் ஒரு நண்பர் போல வருபவர் என்ற நீதிமன்ற உத்தரவு புரியாதிருந்த ஆரம்ப நாட்களில் யுவன் திலீபனை எதுவுமே கேட்காமல் எப்பொழுதும் மருண்ட பார்வைகளைப் பார்த்துக்கொண்டு என்ன சொன்னாலும் உடன்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் சமீப வருடங்களில் அப்பாவின் வாரக்கடைசி வருகைகளில் தன்னை முழுவதுமாகப் புகுத்திக்கொள்வதும் அந்தக் கணங்களை அனுபவிப்பதுமாக இருந்தான்.

தனது டவேராவை எடுத்து வாசலில் நிறுத்தி விட்டு இறங்கி வந்து வாசல் கேட்டைப் பூட்டினான். கிளம்பி மெல்ல கியர்களை மாற்றியபடியே விரையத் தொடங்கினான். வடபழனி சரவண பவன் வரவேற்றதை ஏற்றுக்கொண்டே உள்நுழைந்து வண்டியை விட்டு இறங்கி சிவப்பு நிற மாருதி ஜென் காரைத் தேடினான். காணாமல் இருக்கவே மெல்ல நடந்து திறந்தவெளி உணவகத்தில் நுழைந்து ஒரு டேபிளில் அமரப் போனான்.

“திலீபன் ராஜ்குமார்” எனக் குரல் கேட்க சின்ன குழப்பத்தில் திரும்பினான். அஸ்வதி. முக்கியச் சேனலில் நிருபர்.

“ஹல்லோ அஸ்வதி.. எப்டி இருக்கீங்க..?” எனப் போலியான மலர்ச்சியை கண்களில் காட்டினான். அஸ்வதி உடன் இருந்தவன் ஆரோக்கியமான புன்னகையுடன் வரவேற்க மரியாதை நிமித்தமாய் நெருங்கி அந்த டேபிளில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தான்.

“திலீபன், இது வர்ஷித். லண்டன்ல ஆர்கிடெக்ட். என் வுட் பீ” என்றவள் உடனே சம்பிரதாயமாய்த் திரும்பி “வர்ஷித், இவர் தான் திலீபன் ராஜ்குமார், உங்களுக்கு ரொம்ப பிடிச்ச “மழை வரும் முன்” படத்தோட டைரக்டர்.” என்று சிரிக்க

“சார்.. ஐம் ரியல்லி வொண்டர். அற்புதமான படம் சார். என் கூட வேலை பார்த்த இரானியன் ஒருத்தனுக்கு கூட அதுல வர்ற பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும்.” என்று நிஜமான அதிசயத்தைக் காட்டினான். அதற்குள் அவள் ஆர்டர் செய்த பழரசம் ததும்பிய குவளையை ஏந்திக்கொண்ட திலீபன்

“நன்றி வர்ஷித் காலங்காத்தால ஒரு டைரக்டருக்கு மிகப் பெரிய பரிசே அவன் படத்தைப் பாராட்டுறது தான்.” என்றான். வெயிட்டர் பவ்யமாக வந்து அருகில் நிற்க அவனை லட்சியம் செய்யாமல் இன்னும் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடி வர்ஷித் திணறினான்

“அடுத்த ப்ராஜெக்ட் எப்போ சார்….?”

“போயிட்டு இருக்கு வர்ஷித் சீக்கிரமே விளம்பரம் வரும். அஸ்வதி, நான் கிளம்பவா..? அடுத்தடுத்து எங்கேஜ்மெண்ட்ஸ் இருக்கு. இன்னொரு முறை மீட் பண்ணுவோம். சரியா..?”

“ஓ.கே திலீபன்.. ஹேவ் அ நைஸ் டே.” என்றாள். அவள் கைகொடுத்ததை வர்ஷித் விரும்பவே இல்லை என்பது அவன் கண்களில் தெரிந்தது. இருந்தாலும் சென்னை வந்திறங்குவதற்கு முன் லண்டனானால் என்ன அமெரிக்கா ஆனால் என்ன..? தத்தம் பெண்டிர் தாம் போற்றுமிவ்வுலகு என மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

திலீபன் இயல்பாக வெளியில் சென்று கார் பார்க்கிங்கில் நின்று ஒரு சிகரட்டை பற்ற வைத்தான். அவனைக் கடந்து சென்ற ஒரு தம்பதியர் அவனை அடையாளம் கண்டு கொண்டவர்களாய் மீண்டும் மீண்டும் பார்த்தபடி சென்றனர். அடுத்து வந்த இரண்டு இளைஞர்கள் அனேகமாக உதவி இயக்குநர்களாய் இருக்கக் கூடும், அவனைப் பார்த்து வணங்கி விட்டு சென்றனர். திலீபனுக்கு திடீரென்று தான் நின்று கொண்டிருக்கும் தோற்றம் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இருக்கும் பிள்ளையார் போலத் தோன்றியது. சட்டென்று அவன் தன் மூக்கை தடவிப்பார்த்தான். நல்லவேளை தும்பிக்கை இல்லை.

சிகரெட் முடியும் வரை அதன் புகையை கீழே தட்டாமல் அப்படியே அதுவாகவே உதிரும் வரை வைத்துக் கொண்டிருந்தான். அப்படி அவனது குருநாதர் செந்தில்வேலன் செய்வது வழக்கம். அவரிடம் உதவியாளனாக இருக்கும் பொழுது அவர் அறியாமல் ஒளிந்து மறைந்து தம் அடிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவனும் ஹரிஹரனும் மட்டும் இப்படி முயன்று பார்ப்பது வழக்கம். ஆரம்பம் முதல் இறுதி இழுப்பு வரை சாம்பலை சேமிப்பது வேடிக்கையாக இருக்கும். ஹரிஹரன் கிட்டத்தட்ட செய்து காட்டி விடுவான். திலீபன் செய்ய முயற்சிக்கையில் எல்லாம் ஒன்று யாராவது அழைப்பார்கள் அல்லது காற்று கலைத்து விடும். ஆனால் முதல் படம் வெளியாகி ரெண்டாவது வாரம் தாண்டிக்கொண்டிருக்கும் பொழுது இதே அஸ்வதி பேட்டிக்காக வந்திருந்தாள். அன்றைக்கு தான் திலீபன் அவனறியாமல் ஒரு முழு சிகரெட்டின் சாம்பலையும் கீழே தட்டிவிடாமல் ஃபில்டரிலேயே வைத்திருந்தான். அவள் அதற்கு வியந்து போனாள். அப்பொழுது தான் உலகத்தில் முதல் முறை பார்க்கிறவள் போல அவனிடம் கேட்டாள்.

“இதுக்கு பின்னாடி எதுவும் கதை இருக்கா சார்..?” என்றாள்.

காமிரா ஓடுவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “என் குருநாதர் கிட்டே இருந்து இந்த வினோதமான பழக்கத்தை கத்துக்கிட்டேன். இது பாக்குறதுக்கு சாதாரணமா இருக்கலாம். ஆனா, பொறுமையா, கை நடுங்காம, மனசை அலைபாயவிடாம இருந்தா தான் அட்லீஸ்ட் இதையாவது சாதிக்க முடியும்னு அவர் சொல்லுவார்.. நானும் அதையே தான் சொல்ல விரும்புறேன்.” இப்போது சிரித்துக் கொண்டான். செந்தில்வேலன் வயது முதிர்ந்து இறந்து விட்டதையும், அவனது நண்பன் ஹரிஹரன் விபத்தில் காலமானதையும் தனக்கு சாதகமாக்கி சாம்பல் தத்துவமொன்றை சொல்லிக்கொண்டதை நினைத்தான்.

இப்பொழுது ஒரு தங்க நிற இன்னோவா வந்து நிற்க, வயதான ட்ரைவர் இறங்கினார். அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஜாக்ரதையாக இறங்கினான் யுவன். போலியோ பாதிப்புக்கான சிறப்பு பூட்சுகள் அணிந்த தனது கால்களால் அவன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து திலீபனை நெருங்கினான். அவன் வந்ததும் தனது காரில் ஏறி யாரும் பார்க்கிறார்களா என கவனித்தபடியே கதவுகளுக்கான செண்டர் லாக்கை ஆன் செய்து ஏ.சியை சிதற விட்டு காரை கிளப்பி வேகமாய் வெளிப்பட்டு தன் அறை நோக்கி விரைந்தான் திலீபன்.

“ஏம்பா இவ்வளவு வேகம்..?”

“சும்மா தான் யுவன்….உனக்கு பிடிக்குமே டா..?”

“இல்ல…யாரும் உங்களோட என்னை சேர்த்து பார்த்துறக் கூடாதுன்னு வேகமா போறீங்களோன்னு நினைச்சேன்”

“இல்லைடா..மறுபடி அதே ஹோட்டலுக்கு போய் சாப்டுட்டு வருவமா..?”

“வேணாம் டாடி..சும்மா கேட்டேன்..”

இப்பொழுது அவன் ஆர்வமாக பென் ட்ரைவை இயக்கி அதிலிருக்கும் பாடல்களிலிருந்து சரியாக தேர்வு செய்து மழை வரும் முன் படத்தின் பாடலை ஒலிக்க செய்தான்.

“டாடி..இது உங்க படம் தானே..?”

“ஆமாம் யுவன்…என் படம் தான்..”

“இந்த படம் நல்ல சக்சசா…?”

“ஆமாம் கண்ணா.. இதே படத்தை தெலுங்குலயும் மலையாளத்திலயும் டாடியே எடுத்தேண்டா. அடுத்து தான் தமிழ்ல வேற படம் செய்ய போறேன் யுவன்.”

“என்ன கதை டாடி உங்க அடுத்த படத்துக்கு..?”

அதிர்ந்தான் திலீபன். பதினோரு வயது மகன் கதை என்ன என கேட்கிறான். மறைத்து வைத்த வாரிசு. எவர் கண்ணிலும் படாமல் நெடுங்காலம் ஹைதராபாத், கொச்சின் என திரிந்து திரும்பி வந்திருக்கிறான். இதில் கோர்ட் ஆர்டரை காரணம் காட்டி வார இறுதி நாட்களில் திலீபனுடன் யுவனை அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறாள் மனோகரி. இந்தக் கேள்வியை திலீபனின் படக் கதாநாயகன் கூட இவ்வளவு நேரடியாகக் கேட்டதில்லை.

“ஒரு லவ் ஸ்டோரி யுவன். பெட்டெர் நீ பெரியவனா ஆனதுக்கப்புறம் உனக்கு நல்லா புரியும். சரி, நீ கடைசியா என்ன படம் பார்த்தே..?”

பேச்சை மாற்றுவதற்கான கேள்வியாக அதைக் கேட்டான் திலீபன். அவனை நேரடியாகப் பார்த்து “கிம் கி டுக் படம் பேட் ட்ரீம் பார்த்தேன் டாடி.” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு ஜன்னலை வேடிக்கை பார்க்க தொடங்கினான் யுவன். பதினோரு வயது மகன் கிம் கி டுக் படம் பார்த்ததை எந்த விதத்திலும் ஜீரணிக்க இயலாமல் அவனை அச்சத்துடன் பார்க்கலானான் திலீபன்.

அறைக்கு வந்து சேர்ந்த யுவன் அவனது வழக்கமான உறைவிடமான பின் கதவை திறந்து பால்கனியில் நிற்கலானான். ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு குளிர்பானத்தை எடுத்து கடகடவென்று குடித்தவன் யுவனிடம் “தம்பி… டீவீ பார்க்கிறியா..?”என்றான்.

“நீங்க உங்களுக்கு வேலை இருந்தா பாருங்க டாடி. எனக்கு புக்ஸ் இருக்கு” என்றவன் தனது தோள்பையைனைத் திறந்து ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை எடுத்து படிக்கலானான். தன் மகனின் உருவத்தை வரைந்து வைத்த சித்திரங்களை என்ன செய்வது என முடிவு செய்ய இயலாது இந்த வாரத்துக்கான சித்திரங்களை வரையத் தொடங்கினான் தகப்பன். இதை பயமா என சொல்ல முடியவில்லை. ஆனாலும் எதுவோ ஒன்று திலீபனின் தொண்டைக் குழியை அடைத்தாற்போலிருந்தது.

“என்னப்பா..?” என நிமிர்ந்து கேட்ட யுவனிடம்

“பேட் ட்ரீம் புரிஞ்சுதா உனக்கு..?”என்றான்.

“ஏம்பா.. ஒரு கஷ்டமும் இல்லை. கடசீ சீன்ல பட்டாம்பூச்சி பறந்து போச்சுல்ல.. அது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.”

“தமிழ் படமெல்லாம் பாக்க மாட்டியா யுவன்..?”

“பார்ப்பேனே.. தமிழ் மலையாளம் ஹிந்தி எல்லாம் பார்ப்பேன். சும்மா பாக்க மாட்டேன். யாராச்சும் நல்லா ரிவ்யூ எழுதி இருந்தா அதை வரவழைச்சு பார்ப்பேன். 3 இடியட்ஸ், மஹதீரா, அபூர்வ ராகம் எல்லாம் பார்த்தேன் டாடி.”

“படிக்கிறது இதுனால பாதிக்காதா யுவன்..?”

“என்னப்பா ஒரு டைரக்டரோட சன் நான்… சுமாரா படிப்பேன். படம் எடுக்கணும் டாடி அது தான் எனக்கு லட்சியம்.”

“உனக்கு எதுக்குப்பா இந்த ஃபீல்ட்..? கஷ்டம்பா..” என்றான் திலீபன் உடைந்த குரலில்.

“என்னப்பா… எதுல தான் கஷ்டமில்ல.. என்னால முடியும்பா… ஐ வில் மேக் ஃபில்ம்ஸ்.”

அன்றைக்கு இரவு தூங்கும் வரைக்கும் உலகப் படங்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்த யுவனை தன் மகனென்று நினைக்காமல் சக தோழனாய், ஒரு உதவி இயக்குநருக்கு தேவையான அடிப்படை அறிவை எல்லாம் அவன் கொண்டிருப்பதை வியந்து கொண்டே பேசினான் திலீபன்.

“யுவன்.. ஒருவேளை உன் கால்கள் நல்லா இருந்திருக்கலாமோன்னு நீ எப்பயாச்சும் நினைச்சிருக்கியா..?”

சிரித்தான் யுவன். மீண்டும் பால்கனியை திறந்தான். சில்லென்று வெளிக்காற்று அடித்து நுழைந்தது. லேசாக உப்புப் படர்ந்த காற்று.

“டாடி… எனக்கு எந்த ஏக்கமும் இல்லை.. அதுக்கு காரணம் ஹரிஹரன் அங்கிள்” என்றான்.

“ஏன்.. அவன் எப்படி..?” வியர்த்தது திலீபனுக்கு. என்ன சொல்லப் போகிறான் என்று. ஹரிஹரனைப் பற்றி இவனுக்கு என்ன தெரியும்..?

“டாடி… அன்னிக்கு ஷூட்டிங் நடக்குற எடத்துல காங்க்ரீட் பாளம் விழுந்து ஹரிஹரன் அங்கிள் இறந்து போனாரில்லையா..?”

“ஆமாம்..” என்றான் உலர்ந்த குரலில்.

“அவருக்கு பதிலா அந்த பாளம் உங்க மேல விழுந்து இருந்தா..?”

“என்ன யுவன் இதுக்கு நான் என்ன சொல்ல…?”

“இல்லப்பா… வாரத்தோட கடைசி ரெண்டு நாள் மட்டும் டாடி கிடைக்கிறது தான் கொடுமை. என் கால்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சாதிக்கிறதுக்கு எதுவுமே தடை இல்லை டாடி. இதைப்பத்தி யோசிக்கறதை விட்டுட்டு ரெண்டு நாளை நாலு நாளா ஆக்க முடியுமான்னு யோசிங்க. அது போதும்.”

சொல்லி விட்டு தூங்கத் தொடங்கினான் யுவன். பால்கனிக் கதவை அடைக்க போன திலீபன் ஒரு கணம் உற்றுப் பார்த்தான். யுவனது முகம் ஒரு வரை படத்தின் கோடுகளாய் தெரிந்து கொண்டிருந்தது. கதவுகளுக்கு அப்பால் உயரத்தில் முக்கால் நிலா பிரகாசித்துக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *