தொடர்பு எல்லைக்கு அப்பால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 13,090 
 
 

அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை.

நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

“அப்பா என்னமோ பண்ணுதுன்னு சொல்றாருமா. டாக்டர் விக்டர பாக்க போறோம்”

‘அய்யோ. என்னாச்சு?’

‘ஒன்னுமில்லமா‌ மத்தியானத்திலிருந்து கை வலிக்குதுன்னாரு’.

‘அப்பவே போக வேண்டியது தானே டாக்டர் கிட்ட’.

“அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஒன்னும் வலி இல்லைன்னாரு. அப்புறம் நல்லா தூங்கிட்டாரு. எழுந்த உடனே ஒரு மாதிரியா இருக்குன்னாரு. அதான் டாக்டர் கிட்ட கிளம்பி கிட்டே இருக்கோம்”.

“சரிமா. பார்த்துட்டு எனக்கு சொல்லு”

அதற்குப் பிறகு அம்மாவிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

இரவிலிருந்து முயல்கிறாள்.

வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகக் கூறியது.

கவின் வேறு ஊரில் இல்லை பெங்களூருக்குப் போவதாக காலங்காத்தாலேயே போய்விட்டார்.

அவனுக்கு முயன்றாள்.

வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக ஒப்பித்தது.

பெங்களூருக்கு தானே போயிருக்காரு. தமிழ்ல வராதே.

கொஞ்சம் படபடப்பாக இருந்தது. தன் டிராயரை திறந்து சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்தாள். எப்பொழுதாவது புகைப்பது வழக்கம். லைட்டரை எடுத்து பற்ற வைத்து மெதுவாக உள்ளிழுத்தாள். படபடப்பு குறைந்தது போல இருந்தது பால்கனிக்கு வந்து புகையை ஊதினான். பக்கத்து வீட்டில் நின்றுகொண்டிருந்த மாமி இவளைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு “கர்மம் கர்மம்” என்று உள்ளே போனாள்.

மீண்டும் அம்மாவுக்கு அழைப்பு விடுத்தாள். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகக் கூறியது.

எரிச்சல் வந்தது. இன்னும் சற்று வேகமாகப் புகையை உள்ளிழுத்தாள். லொக் என்று இருமல் வந்தது.

படபடப்பு நின்னா மாதிரி தெரியல.

சரி மனசத் திருப்பனும்னா எதவது வேலையைப் பார்ப்போம் என்று வாஷிங்மெஷினில் துணிகளை எல்லாம் எடுத்துப் போட்டாள். இயந்திரத்தை ஓடவிட்டாள். தண்ணீர் நிரம்பும் சத்தம் கேட்டது. சுத்த ஆரம்பித்தது. தடக் தடக் என்று சத்தம் கேட்டது. மெஷினை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தாள். டிவி ரிமோட் உடைந்திருந்தது. சை. இது எப்படி வந்தது? உள்ளே போடும்போது எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? ஒ. மொத்தமா அள்ளிப் போட்டதுல கவனிக்காம விட்டுட்டோமா.

கவின் மீது கோபம் கோபமாக வந்தது. எல்லாத்துக்கும் அவர்தான் காரணம். உடைந்து போன பகுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு துணிகளையெல்லாம் ஒன்றொன்றாக உதறி மீண்டும் மெஷினுக்குள் போட்டு அதனை ஓட விட்டாள். தரையில் சிந்திய தண்ணியை மாப் ஸ்டிக்கால் துடைத்தெடுத்தாள்.

மனம் இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் ஏதேனும் சினிமா பார்க்கலாம் என்று மேல் தளத்திற்குச் சென்றாள். நவீனமாக வடிவமைக்கப்பட்ட 10 பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவில் சிறிய திரையரங்கு. சீரியலை ஓடவிட்டாள். ஐந்து நிமிடம் கூட பொறுமையாகப் பார்க்க முடியவில்லை. எதுவும் மனதில் பதியவில்லை.

மீண்டும் கவினுக்கு முயற்சித்தாள். அதே பல்லவி. இந்நேரம் பெங்களூரு போயிருக்கனுமே. வேறு எங்கப் போயிருப்பார்?

ஸ்வப்னா நினைவுக்கு வந்தாள். அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் அவருடைய தனி செயலாளர். அவளப் பத்தி ஓரிருமுறை பேசும் போது கவின் முகம் பிரகாசமானதைக் கவனித்திருந்தாள். நினைவு வந்தது. பகீரென்றது. அலுவலகத்துக்கு போன் அடித்தாள். கவினுடைய நேரடி எண். வெகு நேரம் அடித்து நின்றது. மீண்டும் ஒருமுறை முயன்றாள். பதில் இல்லை. பொது எண்ணுக்கு அடித்தாள்.

‘ஹலோ’ ஆண் குரல்.

‘மிஸ்டர் கவின் இருக்கிறாரா’ என்று கேட்டாள்.

‘சார் ஊருக்குப் போய் இருக்காங்க மேடம்’

‘ஸ்வப்னா இருக்காங்களா?’

‘அவங்க இன்னைக்கு லீவு மேடம். நீங்க?’

‘சாரோட வைஃப்…. தாரிணி’.

‘வணக்கம் மேடம். நான் கிருஷ்ணமூர்த்தி பேசறேன்‌ மேடம். நல்லா இருக்கீங்களா மேடம்?’

‘ம். நல்லா இருக்கேன். சார் காலைல பெங்களூரு போறதா சொன்னாங்க. ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நம்பர் போகவே மாட்டேங்குது’.

‘பெங்களூரு மீட்டிங் இன்னிக்கு கேன்சல் மேடம்’.

‘அப்படியா. எப்ப கேன்சல் ஆச்சு?’

‘நான் இப்பதான் ஈமெயில் பார்த்தேன. இன்னைக்கு மீட்டிங் இல்லைன்னு சொல்லி வருத்தம் தெரிவித்து மெயில் அனுப்பி இருக்காங்க. வர வெள்ளிக்கிழமை அன்னைக்கு ஒத்தி வச்சிருக்காங்க’.

‘ஓகே. தேங்க்ஸ்: போனை வைத்து விட்டாள்.

எதிரே திரை வெண்மையாக இருந்தது. தாரிணியின் கண்களில் கண்ணீர்.

அப்பா நினைவுக்கு வந்தார். எவ்வளவு பாசமா வளர்த்தாரு. அவருக்கு இணையா தன்மீது யாருமே அன்பு வைக்க முடியாது . அப்பா இப்ப எப்படி இருக்காருன்னு தெரியலையே. மீண்டும் அம்மாவை அழைத்தாள். அதே பல்லவிதான். அது என்ன தொடர்பு எல்லை? ஏதோ வேறு கிரகத்தில் இருக்கிற மாதிரி.

எல்லாத் தொடர்புகளும் அறுந்து போவதாக உணர்ந்தாள்.

அங்கிருந்து எழுந்து மீண்டும் கீழ்த் தளத்திற்கு வந்தாள். படுக்கையில் விழுந்தாள்.

கவின் மீது வெறுப்பு எழுந்தது. எனக்கு துரோகம் செய்கிறானோ?

முந்தைய நாள் இரவு அவர்களுக்கிடையேயான உரையாடல் நினைவுக்கு வந்தது.

‘அப்பா உடம்புக்கு ஏதோ பண்ணுதுன்னாராம். . டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்னு அம்மா சொன்னாங்க’.

‘ஓ’.

இந்த ஒ வுக்கு என்ன அர்த்தம் கொள்வது?

அதற்கு மேல் அதைப்பற்றி அவரோடு பேசி பிரயோஜனமில்லை என்றெண்ணி வாங்க என்று உணவருந்த அழைத்தாள்.

சாப்பிடும்போது அவள் அமைதியாக இருந்தாள்.

தான் காலை பெங்களூருக்குப் போக இருப்பது பற்றி நினைவு கூர்ந்தான். இரவு திரும்பி விடுவேன் என்று சொன்னான்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ அலுவலக விஷயங்களைப் பேசினான். அவளுக்கு எதுவுமே ஒட்டவில்லை.

‘சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போது நீ வேணும்னா நாளைக்கு காலையில திருச்சிக்குப் போய் பாத்துட்டு வந்துடேன். என்கூடவே ஏர்போர்ட்டுக்கு வா’.

‘ஒன்னும் வேண்டாம்’.

‘சொல்லுடா செல்லம். இப்பவே டிக்கெட் வாங்கிடறேன்’ குழைந்தான்.

சாப்பிட்டு முடித்தவுடன் அவன் குழைந்தால் அதற்கு அர்த்தமே வேறு.

‘ஒன்னும் தேவை இல்ல. எனக்குத் தெரியும். எங்க அப்பாவை எப்ப போய் பார்க்கனும்னு. இந்த போலி விசாரிப்பு எல்லாம் என்கிட்ட வேண்டாம்’.

அவளை பின்பக்கமாக வந்து அனைத்து காதருகில் கிசுகிசுத்தான். “இது போலி அல்ல அசல் தான்”

‘கொஞ்சம் தள்ளிப் போங்க. எனக்கு வேலை இருக்கு’.

‘என்னடா செல்லம் கோச்சுகிற?’

‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’.

என்ன ஜென்மம் இது. எப்ப பார்த்தாலும் இந்த நினைப்பு தானா.

இரவு படுக்க வந்த போது அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். பாவமாக இருந்தது. அதேநேரத்தில் கோபமாகவும் வந்தது.. இவருக்கு நினைக்கும்போதெல்லாம்
சந்தோஷம் கொடுக்கக்கூடிய பொருளாதான் என்ன பார்க்கிறாரா?

அப்பாக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்றேன். ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேட்கல. யாருக்கு வேணும் ஆபீஸ் கதையெல்லாம்? தான், தன்னை மட்டுமே யோசிக்கிறாறே. என்னோட உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க மாட்டாரா?

வாஷிங் மெஷின் பீப் பீப் என வேலை முடித்துவிட்டதைச் சொன்னது. படுக்கையிலிருந்து எழுந்து வந்தாள்.

துணிகளை எடுத்து இப்போது டிரையரில் போட்டாள்.

மீண்டும் புகைக்கத் தோன்றியது. சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு பால்கனி வந்தாள்.

மீண்டும் மாமி.

“உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டாள்?”

முறைத்து விட்டு உள்ளே போய் விட்டாள்.

பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டு யோசித்தாள்.

எல்லா ஆண்களும் இப்படிதானா இல்ல இவர் மட்டும் தான் இப்படியா?

அப்பா, அப்படி இல்லையே. எனக்காக என்ன வேணாலும் செய்வாறே. எல்லா நேரமும் அவருக்குச் சிந்தனையில் நான் தான். ஒரே பொண்ணு. எவ்வளவு பாசத்தைக் கொட்டி வளத்தாரு.
எதுக்கு இந்த கல்யாணமெல்லாம்? முன்னப் பின்ன தெரியாத எவன் கூடவோ ராத்திரி ராத்திரி படுத்து எழுந்திருக்கவா?

பச். தான் மட்டுமே உலகம்னு நினைச்சிட்டு இருந்த அப்பாவையும் அம்மாவையும் விட்டுட்டு எங்கேயோ வந்து எப்படி எல்லாம் இருக்கறேன். அப்பா வீட்ல ஓரளவுக்கு வசதி இருந்தால் கூட சொர்க்கமா இருந்தது. ஆனா இது பெரிய தங்கக் கூண்டு.

தன் மீது எரிச்சலும் கோபமும் வந்தது. தான் படித்த படிப்பு என்ன,. எப்படி எல்லாம் வாழ்க்கையில சாதிக்கனும்னு நினைச்சோம். எல்லாம் மண்ணா போச்சு.

இது நல்ல இடம்மா. எனக்கு ஏதாவது ஒன்னு ஆகறதுக்கு முன்னாடி உனக்கு நல்ல இடத்துல கட்டி கொடுத்துட்டா நிம்மதி.

அப்பாவைத் திருச்சியிலிருந்து வந்து விடுங்கள். இவ்வளவு பெரிய வீட்டில் நான் எப்படி தனியாக இருப்பது என்று கேட்டாள். கவினும் அவர்களை வற்புறுத்தினான்.

முடியாது என்பதில் அப்பா உறுதியாக இருந்துவிட்டார். நான் பிறந்தது, தவழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த காவிரிக்கரையில். நான் இந்த மண்ணிலேயேதான் போக விரும்புகிறேன் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்.

மீண்டும் கவினுக்கு அழைக்கலாம் என்று போஃனை எடுத்தாள். வேண்டாம் என்று தீர்மானித்து அம்மாவுக்குப் போட்டாள். கிடைக்கவில்லை.

எரிச்சல்.

அப்பா எண்ணுக்கு முயற்சித்தாள். ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது.

மாடிவிட்டில் வசிக்கும் ரம்யாவை அழைத்தாள்.

‘ஹாய் தாரிணி. திருச்சிக்கு வந்து இருக்கியா?’

‘இல்ல’.

‘நேத்து சாயந்திரம் எங்க அம்மா போன் பண்ணாங்க. அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. இப்ப எப்படி இருக்கிறார்ன்னு கேட்கலாம்னு ட்ரை பண்றேன். அம்மாவ ரீச் பண்ணவே முடியலை. அதனால் தான் உனக்கு பண்ணேன். என்ன ஏதுன்னு தெரிஞ்சுகட்டு சொல்ல முடியுமா?’

‘நேத்து டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாராம். இருந்தாலும் ஒரு நாள் தங்கிட்டு போகட்டும்னு சொன்னாங்களாம். காவேரியில அட்மிட் பண்ணி இருக்காங்க. அம்மா ராத்திரி அங்கேயே தங்கிட்டாங்க. காலையில நான் தான் பால் வாங்கி வச்சேன். இப்ப கொஞ்ச நேரத்துல ஆஸ்பத்திரிக்கு போலாம்னு இருக்கேன். அங்க போயிட்டு உனக்கு போன் பண்றேன்’.

‘ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. வெரி ஸ்வீட் ஆஃப் யூ டார்லிங்’.

ரம்யா ஹோலி கிராஸில் இவளுக்குத் தோழி. கல்யாணம் ஆனவுடன் இவர்கள் வீட்டு மாடியிலேயே குடி வந்து விட்டாள்.

ரம்யாவுடன் பேசிய பிறகு மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள். கவின் எங்கே போய் இருப்பார் ? அவனோட செயலாளர் ஸ்வப்னா ஏன் இன்னிக்கு லீவு? தலை வெடித்துவிடும் போல இருந்தது. இப்படியே இருந்தா பைத்தியமே பிடிச்சிடும்.

திடீரென ஒரு எண்ணம் உதித்தது. ஏன் திருச்சிக்குப் போகக் கூடாது?

அதுதான் சரி. சிகரெட்டை அணைத்துவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள். உடைகளைக் களைந்துவிட்டு ஷவரில் நின்றாள்.

மனச் சோர்வும் இறங்கியது போல இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் காரில் இருந்தாள்.

திருச்சியை நோக்கி விரட்டினாள்.

பென்ஸ் 120இல் வழுக்கிக் கொண்டு சென்றது. மணி பார்த்தாள்.10.30 என்று டிஜிடட்டியது.

பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு மணிக்குள் திருச்சி சென்று விடுவோம். இருந்தாலும் இப்போது வயிற்றுக்கு ஏதாவது வேண்டும் போல இருந்தது. சாலைக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த டீக்கடையில் நிறுத்தினாள்..அந்தக் கடைக்கு பென்ஸ் கொஞ்சம் ஓவராக தான் தெரிந்தது. அதுவும் காரிலிருந்து தேவதை போல ஒரு பெண் முழங்காலுக்குச் சற்று கீழே வரை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும் பிங்க் கலர் லெகி. மேலே இருக்கமாய் அணிந்திருந்த கருப்பு நிற டி ஷர்ட். கடைக்காரன் ஒருமுறை தன்னை கிள்ளிக் கொண்டான். ரேபான் கூலரை தலைக்கு மேலே தள்ளிவிட்டு கொண்டு
‘சூடாக ஒரு டீ’ என்றாள். ‘கிளாஸ் நல்லா கழுவுங்க’

கண்ணாடிக் குடுவையைத் திறந்து பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்துக்கொண்டாள். டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்றாள். கடைக்காரன் வாய் திறந்து ஏதோ சொல்கிறான். காற்று மட்டும்தான் வருகிறது.

பச்சைப் பசேல் என்று எல்லா பக்கமும் ரம்மியமாய் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. டிசம்பர் மாதத்துக் குளிர் காற்று வருடி விட்டுச் சென்றது. புகைக்க வேண்டும் போலிருந்தது.

100 ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்து கிங்ஸ் ஒன்று கொடுங்க என்றாள்.

பாவம் அந்த கடைக்காரன் பல நாட்களுக்குத் தூங்கப் போவதில்லை.

சிகரெட்டை நன்கு இழுத்து பின் தலையைச் சற்று மேலே தூக்கி ரசித்து புகையை மெதுவாக வெளியே விட்டாள்.

செல் போன் சிணுங்கியது. கவின் படத்துடன் கண்ணாளன் என்ற பெயரில் அழைப்பு.

அதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் படத்தை பார்த்தாள்.

‘டேய் எங்கடா இருக்க? தனி செயலாளருடன் தனியா செயல்படறியா? இப்ப யாரை ஏமாத்த எனக்கு போஃன் பன்ற. அவன் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் அடித்தது. எடுக்கவில்லை.

காருக்குள் வந்து உட்கார்ந்தாள் மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு.

தொந்தரவு செய்யவேண்டாம் என்ற மோடில் போனை போட்டு விட்டு கார் ஓட்டத் தொடங்கினாள். இனி அழைத்தாலும் அவளுக்குக் கேட்காது.

கார் மீண்டும் 110க்கு சென்றது.

ஒரு மணிக்கு முன்னதாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடந்து விட்டாள். ஜிபிஎஸில் காவேரி மருத்துவமனை என்று டைப் செய்தாள். வழிகாட்டியது.

மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு வரவேற்பு கவுண்டரில் மிஸ்டர் ஆராவமுதன். நேத்து ராத்திரி அட்மிட் ஆனாங்க.

அறை எண் 402 மேடம்.

அறைக்குள் நுழைந்த போது அப்பா மட்டும் படுத்திருந்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிய அவர்

‘அடஅட வாம்மா’.

‘அம்மா இல்ல?’

‘வீட்டுக்குப் போயிருக்கா. குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வர. நம்ம மாடிவீட்டில் இருக்காள உன் ஃப்ரெண்டு ரம்யா அவதான் கூட்டிட்டு போனா’.

சட்டென்று நினைவு வர போனை எடுத்து பார்த்தாள். ரம்யாவிடமிருந்து எடுக்கப்படாத அழைப்புகள். கூடவே கவினும் அழைத்திருந்தான்.

‘என்னப்பா சொன்னாரு டாக்டர்?’

‘ஒன்னும் இல்லமா. இந்த கை கொஞ்சம் வலிச்சுது’. இடது கையைத் தொட்டுக் காண்பித்தார்.

‘ஒன்னும் இல்ல வாயு பிரச்சனைன்னு சொல்லிட்டாரு. சரி எல்லாத்தையும் செக் பண்ணிடலாம். ஒரு நாள் இருங்க’ என்றார்.

‘சரின்னு சொல்லிவிட்டேன்’. அப்பா சிரித்தார். அந்த சிரிப்பில் அவள் கிறங்கி போனாள்.

‘உன் கூடவே இருந்திருப்பேன்பா. எனக்கு ஏம்பா கல்யாணம் பண்ணிங்க?’ சொல்லும் போது உடைந்து போய் ஓவென்று அழுதாள்.

ஆராவமுதன் பதறிவிட்டார்.

‘என்னடா கண்ணா? ஏன்டா உனக்கு என்ன?’

‘ஒன்னும் இல்லப்பா. சாரி’.

‘எனக்கு புரியுதுமா. ஆனா அப்பா எவ்வளவு நாளைக்கு உன் கூட இருப்பேன்’.

‘ஏம்பா ஒரு பொண்ணு யாரோடோ தயவுலதான் காலம் முழுக்க வாழணுமா? அய் கேன் ஸ்டான்ட் ஆன் மை ஓன் லெக்ஸ்பா’.

‘நான் அந்த அர்த்தத்தில சொல்லலமா. ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் சார்ந்து வாழும் போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்குதுமா. எனக்கு உங்க அம்மா எவ்வளவு நல்ல துணையா இருக்கா தெரியுமா?அதே மாதிரி அவளுடைய எதிர்பார்ப்புகளை நான் முழுசா நிறைவேற்றினேனான்னு தெரியாது. ஆனால் என்னளவில் அவளுக்கு ஒரு நல்ல துணையாக இருக்கிறேன். சில நேரங்கள்ல யோசிப்பேன் இனிமே எதுக்கு வாழ்க்கை அப்படின்னு? உங்க அம்மாவைப் பார்த்தவுடனே எதிர்மறையான சிந்தனை மறஞ்சு நேர்மறையான சிந்தனை வரும். அவ இந்த வயசுலயும் எந்த வேலைக்கும் ஒரு குறை வைக்கிறது இல்ல காலைல அஞ்சு மணிக்கு எழுந்திருப்பா. எல்லா வேலையும் அவளேதான் செய்வா. ஆள வெச்சுக்கலாம் அப்படின்னா கேட்க மாட்டா. சுறுசுறுப்பா இயங்கறதுனால வாழ்க்கை மகிழ்ச்சியா ஓடிக்கிட்டு இருக்கு. அதை நிறுத்திடாதீங்க என்பாள். அவள் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு இல்ல. எந்தக் காலத்தில இல்லாத அளவு இப்பதான் நான் அவள ரொம்ப நேசிக்கிறேன். ஒரு வகையில காதலிக்கிறேன்னு சொல்லலாம்’ என்று சொல்லிவிட்டுக் கண்ணடித்தார்.

அவள் அதை இரசித்து அவர் கன்னத்தைப் பிடித்து செல்லமாகக் கிள்ளினாள்.

‘ஒரு வகையில உன்னால தான் அவ கிட்ட முழு அன்பையும் கொடுக்க முடியாம போச்சோன்னு நினைக்கிறேன்’.

‘அப்பா வாட் டு யூ மீன்?’

‘உன்ன மாதிரி அழகான புத்திசாலியான தங்கக் குட்டி, மகளாக வந்தா எல்லா அப்பாங்களுக்கும் உலகம் சுருங்கி அந்த மகளோடயே முடிஞ்சிடும்’.

‘போங்கப்பா’ வெட்கப்பட்டாள்.

‘கவின்’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

அவன் பெயரைக் கேட்டவுடன் அவளுக்குக் கோபம் ஜிவ் என் தலைக்கேறியது.

‘தயவு செய்து அந்த பேரை சொல்லாதீங்க எங்கிட்டே’.

‘ஏம்மா?’ என்றார்.

‘ஏன்னா உங்க மகளுக்கு அந்தப் பேரைப் பிடிக்காது‌ கண்ணாளான்னுதான் கூப்பிடுவா’.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கவின் சிரித்துக் கொண்டே சொன்னான்.

உள்ளே வந்த சத்தத்தையும் தொடர்ந்து அவன் பேசியதையும் கேட்டுத் திரும்பிய தாரிணி ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டாள்.

கொண்டு வந்த பழங்களளயும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் டேபிள் மீது வைத்துவிட்டு அவளைப் பார்த்து

‘டிரைவிங் எப்படி இருந்தது ?’ என்றான்.

‘ம். நன்றாக இருந்தது. பெங்களூர் ட்ரிப்?!

‘மீட்டிங் வெள்ளிக்கிழமை மாத்திட்டாங்க. ஏர்போர்ட் வந்த பிறகுதான் தெரியும். சரி திரும்ப வீட்டுக்கு வர்றதுக்கு ப்பதிலா திருச்சிக்கு வந்துட்டேன்’.

‘எத்தனை தடவை உங்களுக்கு ட்ரை பண்ணேன். நாட்ரீச்சபில்ன்னு வந்தது.

‘தெரியல. இங்க சிக்னலே கிடைக்கல. அதனாலதான் ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்து உனக்கு போன் பண்ணேன். நீ எடுக்கல. வீட்டுக்கு போன் பண்ணேன். செக்யூரிட்டி நீ கார் எடுத்துக்கிட்டு போனதா சொன்னாரு. இங்க தான் வருவேன் நினைச்சேன். என் நினைப்பு சரியாகத்தான் இருந்திருக்கு’.

நாற்காலியிலிருந்து எழுந்தவள் திடீரென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தங்கள் கொடுத்தாள்.

ஆராவமுதன் இந்த காட்சியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *