தேனாம்பேட்டை சிக்னல்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 10,719 
 
 

காலை நேரத்திலேயே என்ன வெய்யில்?. சித்திரை மாசத்து தீட்சண்யம். கொளுத்துகிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் சராசரி பகல் நேர வெப்பம் 108 டிகிரிF. தேனாம்பேட்டை சிக்னலில் எங்கள் கார் நிற்கிறது. மாருதி ஸ்விஃப்ட்,., நிறம்—சில்வர்க்ரே. டிரைவர் சீட்டில் என்னவர். உள்ளே அவரும் நானும் மட்டுந்தான். என்னை மருத்துவத் துறை இயக்குனர் அலுவலகத்தில் இறக்கி விட்டு, நான் அங்கே தலைமை குமாஸ்தா. அவர் சென்னை மருத்துவக் கல்லூரி போகணும,அவர் அங்கே பார்மகாலஜி துறையில் பேராசிரியர்.. உள்ளே கும்மென்று மல்லிகை பெர்ஃபூம் மணத்துடன் ஏ. ஸி.யின் குளிர்ச்சியில் நாங்கள் சுகமாக இருக்க, கண்ணாடிக்கு வெளியே சென்னை மாநகரம் பொரிந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு எதிரே குறுக்காக ஓடும் சாலையை அடைத்தபடி சென்னை மாநகரத்து வாகனங்களின் ஒரு துளி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றன, மாநகரக் காற்றை மாசுபடுத்தியபடி. கார்களை சுமந்து செல்லும் கண்டெய்னர் லாரி ஒன்று சிக்னலில் வலது பக்கம் திரும்புகிறப்போ என்ஜின் நின்றுவிட,.சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து…… ஸோ காத்திருக்கிறோம். சுற்றிலும் என்ஜின்களின் உறுமல், பெட்ரோல், டீசல் புகைகளின் நாற்றம். அலுவலக நேரத்தின் பரபரப்பு, ஏறு வெய்யிலின் வெப்பம், நாலா பக்கங்களிலுமிருந்தும் பீ..பீப்…பீப்….பீ.ஈ.ஈ கோரஸாக ஓயாத ஹாரன்களின் சத்தம்,.கிடைக்கும் எந்த சின்ன இடுக்கிலும் நுழைந்து ஓடிவிட எத்தனிக்கும் டூ வீலர்காரர்கள். டிராஃபிக் போலீஸ் லாரிக்காரனை திட்டி அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்..டிரைவரும் வண்டியுடன் போராடிக் கொண்டிருக்கின்றான் .மனுஷனால் தள்ளி ஸ்டார்ட் பண்ணகூடிய சைஸ் வண்டி இல்லை அது..

அப்போதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். எங்கள் காரின் டிரைவர் சீட் பக்கம் வந்து நிற்கிறான். பத்து வயசுதான் இருக்கும்.சற்று சிவப்பாக இருந்தாலும் கன்னங்கரேலென்று அழுக்கேறிய சட்டை, பரட்டைத் தலை, ஒடிசலான உடம்பு. கையில் துணிச் சுருணை மாதிரி எதையோ வைத்திருந்தான்.

“ச்சே! எங்க போனாலும்ஒரு நிமிஷம் கார் நின்னா போதும், இந்த பிச்சைக்காரனுங்க நச்சரிப்பு தாங்க முடியலடா சாமீ. மொலுமொலுன்னு வந்து வந்து பிய்க்குதுங்க. சனியன்க..”—-அவர் எரிச்சலுடன் திட்டிக் கொண்டேயிருந்தார்.. இப்போது அந்த சிறுவன் கண்ணாடிக்கு வெளியில் ஊமை ஜாடையில் என்னவோ சொல்லி அவரிடம் கெஞ்ச ஆரம்பித்தான்.. நல்ல வெய்யில் நேரம். வெக்கையின் கடுமை கொளுத்துகிறது. அந்த பையனைப் பார்க்க எனக்கு பாவமாய் இருக்கிறது. இப்படி பிச்சை எடுக்கும் சிறுவர், சிறுமிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உள்ளே சற்று வேதனை கிளம்பும். எங்கிருந்து, யாரால் கடத்தப்பட்டு, அந்த முகந்தெரியாத கொடியவர்களின் அடி, உதைக்கு பயந்து இப்படி பிச்சை எடுக்குதுங்களோ?. யார் வீட்டுப் பிள்ளையோ?. யார் கண்டது?. செல்லமாக வளர்ந்த பெரிய பணக்கார வீட்டு பிள்ளையாகக் கூட இருக்கலாம். அவனுக்கு முகமெங்கும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள். வியர்வையில் சட்டை தொப்பலாய் நனைந்து கிடக்கிறது.. சற்றைக்கொருதரம் புறங்கையால் முகத்தை வழித்துப் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு சாண் வயிற்றுக்காக காலையிலிருந்து மாலை வரை இப்படி வெய்யிலில் வதங்கும் இந்த குழுந்தைத் தொழிலாளியை இந்த அரசு எப்போது மீட்டெடுக்கப் போகிறது?. அந்தப் பக்கமிருந்தே என்னைப் பார்த்து ஏதோ சொல்லி கெஞ்சுகிறான். தாள முடியாமல் என் பர்ஸைத் திறந்து ஐந்து ரூபாய் காயினை எடுத்தேன். அவர் என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். பிடியின் அழுத்தத்தில் அவருடைய கோபம் தெறித்தது. ஒரு புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வருவதற்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கும் அவருக்கும் வரும் சண்டைக்கான காரணம் இதிலடங்காத ஆயிரத்தொன்பதாவது காரணம், பிச்சை. எஸ்! பிச்சை போட்டால் கண்டமேனிக்கு திட்டுவார். என்னைப் போன்றவர்கள்தான் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறோமாம்.அரைமணி நேரத்திற்கு காது வலிக்க உபநியாசம் நடக்கும். இரண்டு மூன்று ரூபாய் பிச்சைக்கு இவ்வளவு திட்டுகிறவர், சம்பளம் வாங்கற ஓட்டல் சர்வருக்கு டிப்ஸ் பத்து ரூபாய் போடுவார். என்ன லாஜிக்கோ? .பிச்சைக்காரர்களிடம் மட்டும் ஏன் இவருக்கு இவ்வளவு வெறுப்புன்னு புரியல. எங்காவது அசிங்கப் பட்டிருப்பாரோ?.

அந்த சிறுவன் இப்போது லேசாக கண்ணாடி கதவைத் தட்டுகிறான். இவருக்கு வந்த ஆவேசத்தை சொல்ல முடியாது. வேகவேகமாய் கண்ணாடியை இறக்கி “டேய்! நாயே! அறிவில்ல?. பிச்சைக்கார நாயிக்கு கண்ணாடிய தட்டி பிச்சை கேக்கச் சொல்லுதா?. போடா அப்பால.. சொல்லிட்டேன். ஒதை படுவே”

”சார்…சார்…! கண்ணாடிய சுத்தமா தொடச்சி வுட்றேன் சார். ஒரு நிமிசத்தில முடிச்சிட்றேன் சார். நீ குடுக்கிறத குடு சார். நேத்திலயிருந்து பட்னி சார். தோ ஆச்சி சார். ரெண்டே நிமிசம்.”— சொல்லிவிட்டு சம்மதத்திற்கு காத்திருக்காமல் அவன் பாட்டுக்கு துடைக்க ஆரம்பித்து விட்டான்.

“டேய்..!டேய்…! பொறுக்கி நாயே.! நான் தொடைக்கச் சொன்னனா? தூரப் போடா. காரைத் தொடாத. தொட்ட ராஸ்கல் ஒதை படுவே. செருப்பு பிஞ்சிடும்…”—– இவர் திட்டத் திட்ட அவன் நகராமல் முன் பக்கக் கண்ணாடி மேல் கையை வைத்துக் கொண்டேயிருக்க, இவருக்கு வெறியேறிப் போச்சுது., கண்ணாடியை இறக்கி எட்டி அவன் முதுகில் பட்டென்று அழுத்தத்துடன் ஒரு அடி போட்டார். அடி பலமாக தாங்கிவிட, வலியில் முகம் சுளித்து அவசரமாய் தேய்த்து விட்டுக் கொண்டு, சலனமே இல்லாமல் இவரையே பார்த்தபடி அங்கேயே நிற்கிறான். அடுத்த கட்டமாக அவனை அடிக்கவோ அல்லது துரத்தவோ வேண்டி காரிலிருந்து சரேலென்று இறங்க எத்தனிக்க, நான் அவரை இழுத்துப் பிடித்தேன். அதற்குள் அவன் காரின் மறு பக்கத்திற்கு, அதாவது என் பக்கத்திற்கு ஓடி வந்து விட்டான்.

“சும்மா இருங்க. கத்தாதீங்க. அவனை அடிக்க நீங்க யாரு?.வாணாம் இத்தோட கண்டுக்காம விட்ருங்க போயிருவான். பாவங்க, அந்த கொழந்தை. பிச்சை கேக்கலைங்க, நேர்மையா விண்ட் கிளாஸை தொடைச்சி விட்றேன் எதாவது குடுன்னுதான் கேக்கறான். பாவம். பசிக்கொடுமை. எதனா குடுத்துட்டுப் போங்களேன். என்னா போயிடும்?.இருக்கிறவன் இல்லாதவனுக்கு குடுக்கணுங்க.. அதான் தர்மம். பாவம் தெருவில விளையாட்ற வயசு..”

” இது ஒரு கவுரவ பிச்சை. ஹும்! உன்னால மட்டுந்தான் இப்படி பிச்சைக்காரனுக்கெல்லாம் வக்காலத்து வாங்க முடியும்.. உனக்கு ஒரு மண்ணுந்தெரியாது. நீ சும்மா இரு. சனியனுங்க .” — நான் சொல்றதை என்னைக்கு இவர் கேட்டிருக்காரு?. இப்போது அந்த பையனைப் பார்த்து ஒரு விரலைக் காட்டி எச்சரிக்கிறார். அவன் பாவம் எங்க சின்னவன் கோகுல் வயசுதான் இருக்கும்.கோகுல் இந்த வயசுக்குரிய அத்தனை சந்தோஷங்களையும்அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நாங்கள் இருக்கிறோம்..அவர் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று கதவின் கண்ணாடியை இறக்கி அவர் கத்தக் கத்த அவன் கையில் ஐந்து ரூபாய் காயினை வைத்து சீக்கிரம் ஓடிட்றா என்று கத்தினேன். ஆனால் அவன் அங்கிருந்து நகரவில்லை. என்னவர் முகத்தை பார்க்க திராணியில்லாமல் அவர் பார்வையை தவிர்த்தேன்.

எனக்கும் என் கணவருக்குமிடையே ஆறு அல்ல அறுபது வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆயினும் பரஸ்பரம் கொண்டுள்ள அன்பில் எங்கள் தாம்பத்தியம் நீண்ட இருபது வருடங்களை உள்ளடக்கியிருக்கிறது..அவருக்கு சிவப்பு நிறத்தின் மேல் ஒரு ஈர்ப்பு. ஆனால் என் வோட்டு நீல நிறத்துக்கு. அவர் அவருடைய வேலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படிப்பார். அதைவிட்டால் அரசியல் கட்டுரைகள் படிப்பார். என் சாய்ஸ் கவிதைகள்தான். மு.மேத்தாவின் `கண்ணீர்ப் பூக்களிலும், `வெளிச்சம் வெளியே இல்லை’ தொகுப்பிலும் பல கவிதைகள் எனக்கு மனப்பாடம். இன் அடிஷன் தி.ஜா.ரா., ஜெயகாந்தன்,. சுஜாதாவின் சிறுகதைகள்.. கடவுள் பற்றிக் கூட எங்களுக்குள் பேதங்கள் உண்டு மனசை வருடி அமைதிப் படுத்தும் இளையராஜாவின் மெலோடிகளுக்கு நான் அடிமை. இரவின் அமைதியில், விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். மனசு அப்படியே உருகிக் கசியும். அது ஒரு சொர்கம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் `மாலைப்பொழுதின் மயக்கத்திலே மெலடியில் கண்ணோரங்களில் ஈரமாகும். அவருக்கு இசை காதில் நுழைவதாகவே எனக்குப் பட்டதில்லை..அது அங்கே எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை. மொத்தத்தில் நான் எனக்கென்று எந்த நியதிகளையும் வைத்துக் கொண்டு வாழவில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொண்டு வாழ்பவள். ராத்திரியில் என் பக்கத்தில் அவர் விடுகிற குறட்டை கர்ஜனை ஒன்று போதும் என் சகிப்புக்கு. ஆனால் அவருக்கு நிறைய தீர்மானங்கள் உண்டு.. வெற்றி மட்டுமே இலக்கு வழிமுறைகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார். சகிப்புத்தன்மை அறவே நஹீ. “மற்றவர்களுக்கு கிள்ளித்தெறிக்காமல் தானே சேர்த்து, தன் குடும்பத்தார் மட்டுமே தின்று, ஒருத்தருக்கும் பயனில்லாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை “—என்பேன் நான். “ஆமாமா, உன்னை மாதிரி ஆளுங்களாலதான் பிச்சைக்காரனுங்க பெருத்து கிடக்கிறானுங்க. சென்செஸ் படி இந்தியாவில மொத்தம் 7.50. லட்சம் பேர் பிச்சையெடுக்கிறானுங்களாம். திடமாக இருக்கிறவன் கூட காலில் ஒரு பேண்டேஜை சுத்திக்கிட்டு வந்து பிச்சையெடுக்க உட்கார்ந்திட்டா போதும். பொழப்பு நடந்துடும். கல்கத்தாவில ஒரு கெழவன் தன்னுடைய காரில் டெய்லி நாற்பது கிலோமீட்டர் போயி நகரத்தில பிச்சையெடுத்துட்டு திரும்பறானாம். இதுக்கு என்ன அர்த்தம்?. பிச்சைத் தொழிலில் அவ்வளவு லாபம் கொழிக்குது. முதலீடு இல்லாத பிஸினஸ். சீப் காஸ்ட்யூம்ஸ். அதே சமயம் உண்மையிலேயே தகுதியான நபர்தானான்னு கூட பார்க்காம பிச்சை போட்ற உன்னை மாதிரி பேக்குகள் நாட்டில் நிறைய பேரு இருக்காங்கன்னு தெரியுது.. ”—சொல்லிவிட்டு கெக்கெக்கேன்னு சிரிக்கிறார்.

“ ஹும்! எங்கிட்ட சண்டை போட்றதுகுன்னே இந்தமாதிரி தகவல்களை திரட்டி வெச்சிக்குவீங்களா?. தகுதியான நபர்ன்னா மட்டும் நீங்க அப்படியே வாரி வழங்கிடுவீங்க பாரு. அன்னைக்கு எங்க ஆபீஸ் வாசல்ல அந்த கிழவி ரொம்ப வயசானது, நடக்கவே திராணி இல்ல. எப்படி கெஞ்சினாள்?. அதுக்கு ரெண்டு ரூபா போட்டுட்டேன்னு என்னா பேச்சு?. வீட்டுக்கு போனப்புறம் கூட நம்ம சண்டை ஓயல. மனுஷனுடைய எவ்வளவு உசந்த வாழ்க்கையும் சாஸ்வதமில்லீங்க. யார் கண்டது?. நேரங் கெட்டுப் போனால் நாம கூட நாளைக்கு பிச்சையெடுக்கும் நிலைமைக்கு வரலாம். அப்படி நெனைச்சி வாழணும்.” “தூ! சோம்பேரிதனத்தின் இன்னொரு வெர்ஷன் தான் பிச்சையெடுக்கிறதுன்னு உனக்குப் புரியல. நான் அடம்மா ஏமாந்துதான் தீருவேன்னா என்ன பண்றது?..”

”ஹும்! அவனுடைய தன்மானம் நாம போட்ற இந்த ரெண்டு ரூபாய் கூடவா தாளாது?. போதும். இத்தோடு .விட்ருவோம். உங்ககிட்ட பேசி எந்த பிரயோசனமுமில்லை..” “ஹும்..! இப்படி பேசிப் பேசித்தான் இலவசங்களுக்கு பழகிவிட்ட ஒரு தலைமுறையை உருவாக்கி வெச்சிருக்கோம்.” “ரூட் மாறுது. ப்ளீஸ்! அரசியல் வேண்டாம் விட்ருங்க.”

ச்சே! இவர் மாறவே போறதில்லை.மறுபடியும் கண்ணாடியை இறக்கிவிட்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவனை திட்டுகிறார். சே பாழாய்ப் போன அந்த கண்டெய்னர் லாரியையும் இன்னும் எடுத்தாக வில்லை. இப்போது சார்..!சார்! என்று கெஞ்சிக் கொண்டே அந்தப் பையன் மீண்டும் அவர் பக்கமாக போய் நின்றவன், திடீரென்று டிரைவர் சீட்டுக்கு முன்புறமிருந்த விண்ட் ஷீல்டு கிளாஸின் வெளிப்பக்கம் கையிலிருந்த துணியால் அவசர அவசரமாக நாலு தேய்ப்பு தேய்த்து விட்டு இவரைப் பார்த்து ஆத்திரத்துடன் “.த்தா! டாய்! பொறுக்கி! லவடிக பால் தெவி…….. பையா..! ”—–உரக்க கத்திவிட்டு ஓட ஆரம்பித்தான். அது சேறும், கிரீஸும் கலந்த ஒரு கலவையில் தோய்த்த துணி போலிருக்கிறது. விண்ட் ஷீல்டு கிளாஸ் முழுவதும் அடர்ந்த பனி கவ்வியதைப் போல மூடிக் கொண்டது. எதிரே ஒரு மண்ணும் தெரிய வில்லை. காரை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது.. இப்போது அந்த கண்டெய்னர் லாரி கிளியராகும் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏழெட்டு பேர் அதைத் தள்ளி ஓரமாக நிறுத்திவிட போராடிக் கொண்டிருந்தனர். சாலை கிளியர் ஆகும் நேரம். இவர் வெறி வந்தவரைப் போல டாய்..! என்று கத்திக் கொண்டே, அவனை பிடிக்க வெளியே பாய்ந்தார். இல்லை அதற்குள் பையன் பறந்து விட்டான். என்னைப் பார்த்து நறநறவென்று பற்களைக் கடித்தார். சுற்றிலுமிருந்த கார்காரர்கள் எங்களை பரிதாபமாகப் பார்த்தார்கள்.

“ ஏன் சார் அவனை வுட்டுட்டீங்க?.”—-இது கரிசனமா, கேலியா?. அவர்களைப் பார்த்து முறைத்து விட்டு, அவசரமாக வைப்பரை ஆன் பண்ணி, தண்ணீரை பீச்சியடிக்கவைத்து அடித்து அடித்து ஓரளவுக்கு எதிரே பார்வையை மறைக்காதபடிக்கு கழுவி விட்டு, வண்டியை எடுத்தார். டிராஃபிக் ஜாம் கிளியராகி, போகச் சொல்லி டிராஃபிக் போலீஸ் கையைக் காட்ட வண்டிகள் நகர ஆரம்பித்தன. நாலைந்து கார்காரர்கள் காரை நகர்த்தியபடியே இவரிடம்

“சார்…சார்…! இத இப்படியே வுட்ராதீங்க சார். டிராஃபிக் போலீஸ் கிட்ட நீங்களும் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு போங்க. அவங்களுக்குத் தெரியாம எதுவும் இங்க நடக்கல..” –- ஐயய்யோ! ஏற்கனவே இந்த மனுஷருக்கு குரங்கு புத்தி. இதுக்குமேலே சாராயத்தையும் ஊத்தி உசுப்பியும் விட்டா என்னாகும்? கடவுளே!. இவர் வேகமாக சிக்னலைக் கடந்து காரை ஓரங்கட்டி பார்க் பண்ணினார்.. எனக்கு எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தது. அந்த பிஞ்சி ஏதோ ஆத்திரத்தில செஞ்சிட்டு ஓடிட்டான். அதுக்கு இத்தனை ஆம்பளைங்க சரிக்கு சமமாய் கட்சி கட்டிக்கிட்டு ஆலோசனை சொல்றாங்களே.. அவன் பண்ணியது தப்புதான்.அவன் வயசுக்கு மீறின செய்கைதான். ஆனால் இவர் பண்ணியது…….?. அத யார் சொல்றதாம்?. ஆபீஸுக்கு லேட் ஆயிடுமோன்னு கவலை வருகிறது. இப்போது நான் வாயை திறந்தால் வள் னு என்னை பிடுங்கிடுவார் நான் எங்க கார் அருகே நின்றுக் கொள்ள, அவர் ட்ராஃபிக் போலீஸ் கிட்ட போயி காச்மூச்சென்று கத்தினார்… அவருக்கு என்ன சொல்றாருன்னு புரியல போலிருக்கு. கையமர்த்தி வைய்ட் பண்ணச் சொல்லிட்டு, ஷிப்ட் சேஞ்சுக்கு வந்திருந்த போலீஸிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டு, இவரை இழுத்துக் கொண்டு எங்க கார் பக்கமாக வந்து நின்றார்.

“உம்…இப்ப சொல்லுங்க சார். என்னா உங்க பிரச்சினை?.”——–என்னவர் விஷயத்தை விலாவாரியாக சொல்லி முடித்தார்..

“ இந்த சிக்னல்ல பூ விக்கிறவ, பொம்மை விக்கிறவ, கார் கண்ணாடிய தொடைக்கிற ப்ரஷ் விக்கிறவன், பிச்சைக்காரன், பிச்சைக்காரி, ஐஸ்க்ரீம் விக்கிறவன், பலூன் விக்கிறவன்,ரிப்பன் விக்கிற பொம்பளைங்க, வாய்ப்பாடு புஸ்தகம் விக்கிற பொம்பளைங்க, இப்படி எவ்வளவோ ஜனம் இங்க சுத்தி வியாபாரம் பண்ணி பொழைக்குதுங்க அதில நீங்க சொல்ற…?ஓ! அந்த செவத்தப் பையனா சார்?. சின்ன பையன். நல்ல பையனாச்சே. சரி வுடுங்க சார்.iபாவம் அநாதை பையன் சார். ஆத்தா அப்பன் கிடையாது. இங்கியேதான் எங்கனா கெடப்பான். என்ன பண்ணுவான்?. பசின்னு ஒண்ணு இருக்கில்ல?.” —என்னவர் திரும்பி என்னைப் பார்த்து எகத்தாளமான குரலில் “அட இவங்க ஆக்‌ஷன் எடுக்க மாட்டாங்க கமலான்னு நானு சொல்லல?. எப்படி சப்போர்ட் பண்றார் பாரு. அதான் அவனை மாதிரியான ஆளுங்கள்லாம் சேர்ந்து இவங்களுக்கு காசு கொடுப்பாங்கன்னு சொன்னாங்களே. சினிமாவிலதான் இவங்க பவுசை புட்டு புட்டு வெக்கிறானே..”—–போலீஸ்காரர் இவரை கோபமாய் பார்த்தார். “பின்ன என்ன சார்?.பப்ளிக் நியூசன்ஸ் கேஸ்னு, ரிப்போர்ட் பண்றோம், அநாதை, ஏழ்மை, பசின்னு மார்க்ஸியம் பேசிக்கிட்டிருக்கீங்க. கார் கண்ணாடியை பாருங்க எப்படி பண்ணி வெச்சிருக்கான். நான் ஒரு காலேஜ் புரபசர். என்னை என்னா கேவலமா திட்டினான் தெரியுமா சார்?. நீங்க அவன் மேல இரக்கப்பட்டு பேசற மாதிரி தெரியல. வேற ஏதோ ஒண்ணுத்துக்காகத்தான் அவனுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி தெரியுது.”.—- பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தர் இவரிடம் ரகசியக் குரலில் “ வசூல்ல எப்படியும் பாதிய புடுங்கிடுவாங்கப்பா. இல்லேன்னா அந்த பிச்சைக்காரனுங்க இங்க இருக்க முடியாது..”—- அது போலீஸ்காரருக்கு கேட்டுட்டது போல. சொன்னவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்தார். உள்ளே அடக்கும் ஆத்திரம் மீறி முகத்தில் தெறித்தது.

“ போலீஸ்காரன்னா உங்களுக்கு என்னா எளக்காரம்ய்யா?. கேள்விமுறையே கிடையாது. என்னா வேணாலும் பேசலாம். எப்படி வேணானாலும் கேலி பண்ணி சிரிச்சிக்கலாம் ஏன்?னு கேக்க எங்களுக்கு ஒரு நாதியும் கெடையாது பாரு. எங்களுக்குன்னு ஒரு சங்கமா எழவா?.. அப்ப எங்களுக்கு சூடு, சொரணை இருக்கலாமா? இருக்கக் .கூடாதுய்யா, இருக்கக் கூடாது. ஹும்! ஒரு நாள் முழுக்க இந்த பெட்ரோல், டீசல் புகையில, காயற வெய்யில்ல மொடமொடன்னு இந்த யூனிஃபார்ம் டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு,,கால்ல பூட்ஸையும் மாட்டிக்கிட்டு நின்னுப்பாரு. அப்ப தெரியும் எங்க பவுசைப் பத்தி. சரி சரி. இத்தெல்லாம். உங்கிட்ட சொல்லி இன்னா ஆவப்போவுது?. அந்தப் பையன் அப்படி பண்ணப்போ நிஜமாவே பக்கத்தில இருந்தவங்கள்லாம் பார்த்தாங்களா? வந்து சொல்வாங்களா? அத்த சொல்லு..” “பொய் சொல்லல சார். ஒண்ணுவிடாம நடந்ததெல்லாம் அவங்களுக்குத் தெரியும். பார்த்தாங்க சார்..”—–இப்போது போலீஸ் கோபத்துடன் சீறினார்..

“ வெரி குட்! நல்ல காரியம். அப்ப பக்கத்தில இருந்து ஒண்ணுவிடாம எல்லாத்தையும் பார்த்தவங்கள்ல ஒருத்தனும் ஒரு மயிரையும் புடுங்கல. அதான?. ஆளுக்கு ஒரு அதட்டல் போட்டிருந்தா கூட அந்தப் பையன் ஓடிப்புட்டிருப்பான்யா. இப்ப தெரியுதா?.. ஒன்ன மாதிரி சொக்காய்ல அழுக்குப்படாம வேலசெய்றவன் பவுசு என்னான்னு?… நடுரோட்ல ஒருத்தன கத்தியால வெட்டிப் போட்டா கூடசினிமா பாக்கற மாதிரி ஜம்னு வேடிக்கை பார்த்துக்கிட்டுத்தான்யா போவீங்க. ஒரு துரும்பையும் கிள்ளி போடமாட்டீங்க, சாட்சி சொல்ல இப்ப அவனுங்களைக் கூப்பிட்டு பாரு. ஒருத்தனும் வரமாட்டான் ஆனா மனுச தர்மத்தைப் பத்தி மட்டும் வாய் கிழிய பேசுவீங்க அத்தோட. எதுக்கெடுத்தாலும் போலீஸ்காரனை திட்டணும் உங்களுக்கு. .வந்துட்டான் காரை எடுத்துக்கிட்டு..”. “சார்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நாங்கள்லாம் யாரு தெரியுமா? மரியாதை இல்லாம பேசறீங்க?.நாங்க கமிஷனர் கிட்ட போவ வேண்டியிருக்கும்.” “ இரு..இரு. உன் கதைய இன்னும் நான் முடிக்கல. அப்புறம் நீ எங்கவேணா போ. ஆமா இந்த சிக்னல்ல ஒரு நாளைக்கு நூத்துக் கணக்கான ஏன் ஆயிரக் கணக்கான காருங்க வந்து போவுது. அவ்வளவு பேர்ல இதுவரைக்கும் உன்னோட சேர்த்து மூணு பேருதான் அந்த பையன் அப்படி செஞ்சிருக்கான்னு கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கீங்க.. ஏன்?. சொல்லு. .நீ அவனை இன்னா பண்ண? அத்த மொதல்ல சொல்லு. அந்த புள்ள வயித்துக் கொடுமையில ஒவ்வொரு கார்காரங்க கிட்டயும் போய் கேக்கிறான்.அது கூட அவன் பிச்சைன்னு கேக்கிறதில்ல.. எனக்குத் தெரியும்..தப்பா நெனைக்காத உன்னை மாதிரி ஆளுங்க மனசு இருந்தா குடுக்கணும் , இல்லன்னா ரெண்டுத்தையும் சேர்த்து பொத்திக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். அத வுட்டுப்புட்டு அவனை வாய்க்கு வந்தமாதிரில்லாம் திட்னா…? இதான்யா நடக்கும். அந்தப் பையனை நீதான் அப்படி செய்ய தூண்டியிருக்கிற.. போயேன் கமிஷனர் கிட்ட.. அங்க அவன் தப்பை மட்டுமில்ல உன் தப்பை தான் மொதல்ல கெளறுவோம். தெரியுதா? நீ அந்த பையன வேற அடிச்சிருக்கிற. இது ரொம்ப.தப்பு.. டேஞ்சர். சீக்கிரமா எடத்த காலி பண்ணிடு.. உனுக்கு சப்போர்ட்டா பேசறதுக்கு இங்க ஒருத்தன் கூட வரல பார்த்தியா.? ஆனா அவன் ,திக்கத்தவன் இல்லே. பார்த்துக்கிட்டேயிரு இன்னுங் கொஞ்ச நேரத்தில இருவது பேரு வந்து நிப்பான். உம் சீக்கிரமா எடத்த காலி பண்ணு. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். நீ வீட்டுக்குப் போயி நிதானமா உக்கார்ந்து யோசனை பண்ணிப்பாரு .ஞாயம் புரியும். உன் தப்பும் தெரியும்…”

அவர் தலையைத் தொங்கப் போட்டபடியே திரும்பி வருகிறார். எனக்கு குபீரென்று மகிழ்ச்சி பீறிடுகிறது. அத்தனையும் நான் கேட்க நினைத்து முடியாமல் போன நியாயமான கேள்விகள். உள்ளுக்குள் குரூர திருப்தி. இது அவருக்கான சிகிச்சை.

இயலாமையின் கோபத்தில் புஸ் புஸ்..என்று மூச்சு விட்டபடி கடுகடுவென்று காரில் வந்து உட்காருகிறார்.. ஆத்திரம் அடங்கவில்லை.என்னுடைய இந்த ராஜகுமாரனை நான்தான் ஒரு நிலைக்குக் கொண்டு வர வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமல்ல.இப்போது எதுவும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது. இப்போது எதைச் சொன்னாலும் குத்திக் காட்டுவதாய் ஆகிவிடும். மவுனமே அழகு. நான் கதவைத்திறந்து உட்காரப் போனவள் ஆ! ஷாக் ஆகி நின்றுவிட்டேன்..

“ஏங்க! இங்க பாருங்க. எப்படிங்க இது? எனக்குத் தெரியலையே. எப்படி இங்க வந்துச்சி?. நான் இங்கியேதான நின்னுக்கிட்டிருந்தேன்?.எனக்குத் தெரியாம எப்படி?. அட டேய் பையா! அவ்வளவு ரோஷக்காரனாடா நீ!”—- சொல்லும் போதே எனக்கு உள்ளே என்னவோ செய்தது. அவரும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார். சீட்டில் நான் உட்காருமிடத்தில் நான் கொடுத்த அந்த ஐந்து ரூபாய் காயின் கிடக்கிறது..

– கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி—2015 ல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

2 thoughts on “தேனாம்பேட்டை சிக்னல்

  1. இருவேறு நபர்களின் மனவுணர்வுகளை தத்ரூப மாக பிரதிபலிக்கும் கதை.ரசித்துப் படித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *