கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 10,448 
 
 

திடு திடுவென ஓடி வருவது, பூமி தன்னை விரட்டி வருகிறதோ! என்று எண்ணத்தோன்றும். பூமியின் மேற்பரப்பில் உள்ள புற்கள் மற்றும் அதிலே நடை பயிலும் பூச்சிகளின் வாழ்க்கை; இதைப் பற்றியெல்லாம் அவளுக்கு ஏது அக்கறை.

அவளும் ஆபத்தைக் கண்டால் கால்களுக்கு இன்னொரு காலாக மாறி ஓடி வருவாள்.

குட்டி நாய்க்குப் பயந்து இந்த ஓட்டம் ஓடி வந்து போடியாரின் கால்களைச் சுற்றுகிறாள் பேத்தி கரிமா.

“கடி நாயே கடி…. இவள் செல்லுக் கேக்கிறல்ல நல்லாக் கடி நாயே” என்ற உம்மாப்பாவின் கிண்டலினால் சத்தம் போட்டு “உம்மா…….ஆஆஅஅ உம்மா…”

அழ ஆரம்பித்த மகளின் அருகில் சென்று வரண்ட சிரிப்பை வெளியிட்டாள் நபிஷா.

“நபிஷா”

“யாரு இவ.. தெரியுமா?

…ம்…ம்…அதெப்படி தெரியப்போகுது.

நானே சொல்றன்…

தாய்……

அவள் ஒரு உன்னதமான தாய்… மூனு பிள்ளைகளுக்கு” என்று நபிஷாவின் கதையைத் தொடங்கி வைத்து, விடிந்ததிலிருந்து உட்கார்ந்த இடத்திலே சூடேற்றி வைத்திருந்த வயர் நாற்காலியை விட்டு எழுந்து குளிப்பதற்காக கிணற்றடியைத் தேடி நடக்கிறார் மாட்டுக்கார போடியார். அவருக்குள் இருக்கும் மிகப் பெரிய கதை இவ்வளவும்தான். அவரால் சுமக்க முடியாத கதை. வீட்டுக்கு வரும் தன் பால்ய காலத்து நண்பன் ஆதமிடம் மட்டும்தான் சொல்வார். ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று. ஆதமுக்கு இது பழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.

போடியாரின்

கதையை கேட்கும் ஆர்வம் இருப்பவர் போல் வயர் நாற்காலியின் காலில் சாய்ந்தபடி இருந்த ஆதம் ஏமாற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருக்கிறான்.

“ஏய் ஆதம் நில்லுடாப்பா… குளிச்சிட்டு வாரன்….” என்றார் போடியார்.

பதிலே இல்லை முன் வாசல் கேற்றைத் திறந்து, மீண்டும் இறுக மூடிவிட்டு மறைகிறான் ஆதம்பாவா.

போடியார் நல்லதொரு கதை சொல்லி அந்தக் காலத்திலிருந்து.

இது ஒன்றும் விஞ்ஞானக் கதையல்ல மாட்டுக்கார போடியாரின் மகளின் கதை. அவர் வாயால் சொல்ல முடியாத இடத்தில் அவர் பின்னால் சென்று நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

“மிஸ்வாக்” குச்சியை வலது கையின் விரல் இடுக்கில் வைத்து அசைத்துக் கொண்டு…வீட்டுக்கும், வாசலில் நிற்கும் மாதுளைக்கும் இடையே முப்பது அடி தூரமிருக்கும். அதை சந்தேகத்தில் அளப்பது போன்று நடக்கிறார் போடி.

அணில் கடித்த மாதுளை,அருகிலிருக்கும் பூக்கள்,துளிர்த்த இலைகள் என்று இவைகளைத் துள்ளித் துள்ளி கொத்தி தின்கின்ற சிவப்புச் சேவலும் போடியார் வீட்டின் அங்கத்துவம் பெற்ற ஆள்தான்.

“வாப்பாட சாரத்தில பின்னால என்னமோ பட்டிருக்கே…மஞ்சளாத் தெரியுதே…” என்று கூவுவது போல் சத்தமாய் குரல் எழுப்பிக்கொண்டு வீட்டுக் கொடியில் காய்ந்த அந்த நீல நிற கோடிட்ட சாரணை கையில் எடுத்தவாறு ஓடிச் செல்கிறாள் நபிஷா.

“வாப்பா”

“என்ன மோள”

“நீங்க உடுத்திக்கிற சாரண தாங்க கழுவிப் போடுறன்….இத உடுத்துக்கொங்க…இந்தாங்கப்பா”

வாப்பாவின் சாரத்தில் மலம் பட்டிருப்பதை அவரிடம் சொல்லாமல் சாரணை மாற்றி வாங்கிக் கொண்டாள் நபிஷா.

மகள் கொடுத்த சாரனை உடுத்திக் கொண்டு குளிக்கத் தொடங்குகிறார் போடியார்.

கிணற்றில் நீரள்ளும் போது திலாந்தும், திலாக்காலும் விட்டு விட்டு கத்திக் கொண்டே இருக்கும்.

போடியார் பத்திக் கையைப்பிடித்து கிணற்றிற்குள் வாளியை இறக்கி நீர் அள்ளும் வேகம் எந்தக் குமரனுக்கும் வராது.

இப்போதெல்லாம் அடிக்கடி போடியார் ஞாபகத்தை கைவிட்ட வண்ணம் சில காரியங்களைச் செய்து கொள்கிறார். மகள் நபிஷா வாப்பாவில் அதிக அதிகமாக தனது கவனத்தைச் செலுத்தி வருகிறாள். போடியாருக்கு என்ன கவலையென்றால்; மகள்தான்.

பாதியிலே நிற்கிறாளே.

கல்யாண வயதில் இரண்டு பெண் மக்கள் இருந்தாலும் பெண்களில் மூத்தவள் நபிஷா. நபிஷா பற்றிய கவலையே அவருக்கு எப்போதும் முதன்மையானது. “கல்யாணம் பண்ணிக் கொடுக்குற நல்லபடியா வாழ்றதுக்கு.. என்ட மகள்ற விதி மூனு பிள்ளையளோட வந்து நிக்கிறாளே…” என்று சொல்லிச் சொல்லியே அன்றாடம் மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ரகுமா. மகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிப்பார்க்க ஆசைப்படுகிற ஜென்மமாக இருக்கிறாள்.

அந்த ஊரிலே கார் வைத்திருக்கும் போடியார் இவர் ஒருத்தர்தான். “ஆமைக் கார்” மைலன் தியேட்டரில் புதிய படம் எம்.ஜி.ஆர். நடித்த படம் வந்து தொலைந்தால்; மக்களை எல்லாம் ஆமைக் காரில் ஏற்றிக் கொண்டு நல்ல கலாதி பண்ணக் கூடிய ஆள்தான் இவர். பெரிய திரையரங்கில் இரவு நேரக் காட்சி பார்த்தால்தான் படம் பார்த்தாப் போல் இருக்கும் இவர் குடும்பத்தவர்களுக்கு. மூன்று ஆண் மக்களும், மூன்று பெண் மக்களும். மூத்தவன் முதலிலே கல்யாணமாலை சூடிக்கொண்டான்.

“நவிசாக்கு ஒரு கல்லாணத்த பேசணுமெங்கிற நெனப்பு ஒங் களுக்கு இருக்கா இல்லையா…? உரலுக்குள் இட்ட இரு பிடி அரியை உலக்கையால் இடித்துக் கொண்டு ரகுமத்தும்மா கணவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்து கேட்கிறாள் இந்தக் கேள்வியை.

“உன்ற உலக்க கதய உரலுக்குள்ளயே போட்டு இடி எங்கிட்ட கொட்டாத…” என்று பால்க் கணக்கு பார்ப்பதில் குறியாக இருக்கிறார் போடி. எப்போதும் போனாவைத் திறந்தால் மூடியைத் தனது வலது காது இடுக்கில் சொருகி வைப்பார். ஏனென்றால்; இவர் காதில் யாரும் பூ வைக்க முடியாது.

“இஞ்சபாருங்கோ…பால்க் கணக்கோட சேத்து மகள்ற கணக்கையும் பாருங்கோ….”

ஹ….நான் இப்ப வாரன் முதல்ல உன்ட கணக்க பாக்க….” என்ற போடியாரின் கொம்பலைக் கேட்ட ரகுமா முழு வாழைப் பழத்தை விழுங்குவது போல் வந்த சிரிப்பை விழுங்கிவிட்டாள்.

“உம்மா கொஞ்சம் பொங்காம இடிக்கிறயளா அரிசிய” குசினிக்குள் இருந்து வருகிறது நபிஷாவின் குரல். அவள் காய்ச்சிக் கொண்டிருக்கும் பால் பொங்கி மணப்பதைப் போன்று அவள் குரலையும் நுகரலாம் காதுகளால்.

“இப்பொழுது நேரம் பகல் ஒரு மணி” (ரேடியோவில்)

“ரேடியோவுக்குள்ள இரிக்கிற ஆளுக்கு இந்த கூத்தெல்லாம் தெரிஞ்சிட்டாக்கும். பொறுக்கொண்ணாம சாப்பாட்டு நேரம் சொல்றார். சோறு வெய் மககேள்” சத்தத்தை குசினி வரைக்கும் உயர்த்திச் சொன்னார் போடியார். பள்ளிகூடத்திற்கு சென்ற தன் மக்களை நினைத்துக் கொள்கிறாள் நபிஷா.

கூனி வறுத்துப்போட்ட முருங்கை இலை கறியும், காரல் மீன் பொரியலும், சுடு சோறும் அளவாக எடுத்து வாப்பாவுக்கு பரிமாறிவிட்டு தன் வாயில் கொஞ்சமேனும் படுத்தாமல் மக்களின் வரவுக்காக நபிஷா காத்திருக்க; சாப்பிட்டு முடிந்ததும் தனது சாக்குக் கட்டிலில் தளர்ந்த உடலைச் சாய்த்து போடியார் உறங்கத் தொடங்கினார். மேலுதடும், கீழுதடும் இணைந்து அதன் இரு பக்கமும் சிறு இடைவெளி எடுத்து இலேசான சத்தத்துடன் காற்றை வெளியிட்ட வண்ணமிருந்தன.

நபிஷா விரும்பியவனையே காட்டிக் கொடுத்து, தட புடலா ஊரையே கூட்டி கல்யாணம் பண்ணி வச்சி புது வீட்டில் குடியிருத்தி தன் கடமையை நிறைவேற்றிய சந்தோசத்தில் கழிந்த போடியார் வாழ்வில்………………….

“தானே தேடின வாழ்க்க…… வாழ்ந்துதான் ஆகனும் என்டா அவள்ட புரிசன் என்ன கொடும செஞ்சாலும் பொறுத்துப் போறாள்….முதல் புள்ள வயித்தில இருக்ககொள்ளயே காதிக்கோட்டுக்கு போனாராமே..என்ற மகள் என்னத்துல கொற?….என்ன கொடுக்கல….வீடு கொடுக்கலியா?… மாடு…கொடுக்கலியா…? வளவு நெறய தென்னம்புள்ள.. ஆ…ஆ….நகைக்கு நக…என்ன கொறயக் கண்டாரோ..அவள்ட புரிசன்…எனக்கு வயிறு பத்துது கொடுத்த சொத்த வித்து வித்து அழிக்கிறாராமே….போதாக் கொறயா அவளையும் அடிச்சி கொடும படுத்துறாராம..”என்று போடியாரின் மனைவி தினம் இரண்டு தடவையாவது நபிஷாவை நினைத்து அழாமலிருக்க மாட்டாள்.

நபிஷாவின் திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது மகளுக்கும் ஒரு மாப்பிள்ளை தேடி வந்தது. இரண்டு வருடங்களின் பின் போடியாரின் மாட்டு வியாபார கூட்டாளி, வெளியூர்.அவரும் அவர் ஊரில் போடியார்தான். அவர் மகனை மகளுக்கு பேசி இரண்டாவது மகளையும் கரை சேர்த்து சற்று நிம்மதியில் இருக்கும் போடியார் மனதில் நபிஷாவின் வாழ்க்கை போல் ஆகிடுமோ என்ற பீதியும் எழத்தான் செய்கிறது.

வீட்டில் அடிக்கடி நபிஷாவைப் பற்றிய தகவல்தான் சோகத்தை வாரிக் கொட்டிய வண்ணம் நிம்மதியைக் குலைத்தது.

“அவளுக்கு போட்ட நக நட்டையெல்லாம் வித்து தோணி வல வச்சிக்காராமே…இது எந்த வலயில சிக்கப்போகுதோ றப்பே…” கூடவே போடியாரும் மனசு கேட்காமல் புலம்புகின்ற நாட்களும் உண்டு.

அந்த அல்லையக்காரர்களின் கண்களில் நபிஷா ஒரு இளம் சிட்டாக வலம் வந்த நாட்கள் மிக சுவாரசியமானது.

“டீச்சர் சாச்சி” கைதேர்ந்த டெயிலர். நபிஷாவுக்கென்றே பிரத்தியேகமாக சல்வார் துணியை டிசைன் டிசைனாக தைத்துக் கொடுத்து அவள் அழகை மேலும் ஒருபடி உயர்த்திவிட்டார். மெலிந்த உடல் அழகான கண்களும், கூர் மூக்கும் மா நிறமும், நீளமான கை விரல்களும். சாச்சியின் விரல்களுக்கு சுளுக்கு எடுத்து சுளுக்கு எடுத்து தன் சல்வார்த் துணியை முதலியேயே தைத்து வாங்கிடும் சாமர்த்தியம் நபிஷாவிடம் நிறையவே இருந்தது.

“ஒரு தூக்கு நெல்லுக்கு ஒரு புடைவை..ய்……ஒய்…ஒரு தூக்கு நெல்லுக்கு ஒரு புடைவை ..அய்…..ஒய்….”

“புடவக்காரனா….புடவக்காரன் போறான் வாப்போ…நில்லுங்கோ…ஓ..ஓ….புடவேய் …ய்..ஏ..ய்…”

“நல்ல கூத்துத்தான்டியிது. அவன் அங்குட்டு கூவுறான் என்ற மகள் இங்கிட்டு கூவுறா…ம்..ம்..” என்று நெல் மூட்டை அடுக்கிவைத்திருந்த அறையின் பக்கம் பார்வையை விட்டார் போடியார்.

வாசலுக்கு வந்த புடவைக்காரன் நபிஷாவை பார்த்த கணமே குஸியாகிட்டார்.

“நல்ல பொடவயா எடுத்து போடுங்க” நபிஷாவின் மெல்லிய குரலின் துல்லியமான கட்டளை.

அருகிலிருந்த வயர் கதிரையில் சாய்ந்துகொண்டு எடுத்து விட்டார் ஒரு பாடலை போடியார். “என்னக் கடஞ்செடுத்தா..ஆ..

பண்ணிப் பிசெஞ்செடுத்தா.. வன்னிக் காடசையும்…ம்…ம் வண்டு மேலசையும்…

என்னக் கரைய விட்டா குடம் நிறைய விட்டா தண்ணி மலை குடிக்கும் கண்டு மணல் வெடிக்கும்….

நீ ….ஆத்தோரத்தில் சமச்ச கறியா..யா ஆக்காமலே ஒறக்கிம் மொளஹா..ஆ..

ஆக்காமலே ஒறக்கிம் மொளஹா”

போடியாரின் பாட்டுக்கு தலையால் தாளம் போடுகிற சாக்கில் போடியாரின் பெண் பிள்ளைகள் மீது கண் எறிகிறான் புடவைக்காரன். “நீங்களும் எடுங்களன்டி மக்காள்” என்று பெருமையாக மற்றைய இரு பெண் மக்களையும் நோக்கி கையால் அனுமதி கொடுக்கிறார் போடி.

ரகுமா அசவில் இருந்து இன்னொரு பாயை எடுத்து சுவரோரமாக பாதி விரித்தும்,பாதி விரிக்காமலும் முதுகை சுவரில் சாய்த்து சுகமாக உட்கார்ந்து கொண்டாள்.

வலமும், இடமும் நீண்ட நபிஷாவின் விழிகள் புடவைக்காரன் கொண்டுவந்திருக்கும் பெட்டிகளில் திறக்காமல் வைத்திருக்கும் அந்த இரு பெட்டிக்குள்ளும் சென்று துலாவின.

“கத்தரிப் பூக்கலர் புடவ இரிக்கா..பாருங்க”

“ஆ..இரிக்கி..”

“டா..ட்.ரி..” என்று பெட்டி சத்தமிட;

“பொட்டி போடும் சத்தத்த கேட்டா இவரு எத்தன குட்டி போடுமட்டும் கூடத் திரிந்ததோ!” போடியார் வாய் சும்மா இருக்காமல் பொறிகிறது. அந்த கத்தரிப் பூக்கலர் புடவை கீழே விழாமல் கைகளால் தாங்கிப் பிடித்து தன் மார்பில் வைத்தும், தோளில் வைத்தும் பார்க்கிறாள் நபிஷா. புடவைக்காரரின் கண்களும் அல்லோ சேர்ந்து விழுகின்றன அவள் மார்பில்.

புடவை வியாபாரம் முடிவதற்கு சில மணி நேரம் ஆயிற்று.

அன்று திங்கள் கிழமை.

நபிஷா திருமணமாகி புது வீட்டிற்கு போன நாள் தொட்டு இன்று வரை வாசலில் அவள் கையால் நட்டு நீரூற்றிய “சூரியகாந்தி” என்று பெயர் வைத்த தென்னை சற்று சோர்வாகவே இருப்பது ரகுமாவின் கண்களுக்கு புலப்பட்டதோ..…..இரண்டு வாளி தண்ணீர் கொண்டு இறைத்துவிட்டு, “இவ்வளவு பெரிசா நீண்டு போய் உன்ற நபிஷா வீட்ல என்ன கொடுமயள அனுபவிக்கிறாள் என்டு பாக்கிறாயா?” தென்னையைப் பார்த்து கேட்பதுபோல இருந்தது.

“ஒரு நாளைக்கு வேலைக்கு போனா ஒம்பது நாளைக்கு வீட்டிலேயே படுக்கிரானாமே மனிசன். அவள்ற நகைகள வித்து வாங்கின தோணி வலயும் மூனுமாசம் கூட நிக்கலியாம..வித்துட்டானாமே.. மாட்டுப்போடி மகள….என்டு போட்டு அடியா அடிக்கிறானாமே..என்ட றப்பே…அவளுக்கொரு நல்ல காலம் பொறக்காதா… இன்னுமின்னும் மாடுகள உன்ற பேர்ல எழுதிக் கேளுடி என்டு அடிக்கிறதும் முகத்துல துப்புறதும் என்ன செய்த்தான்ட வேலய பாக்கிறானே…புள்ளயளும் இதுக்குள்ள மூனாச்சு..”

என்று ரகுமாவின் தொண்டையை அடைக்கிறது கவலை.

அடுத்தாற்போல் நிற்கிற எண்ணமுன்ன மரத்தில் பழங்களை தின்றுகொண்டிருந்த குரங்கு சிலதும் ரகுமாவைப்போல் முகத்தைச் சோகமாக வைத்து ரகுமாவையே பார்த்துக்கொண்டிருந்தது. சிவப்புச் சேவல் பக்கத்து வீட்டு பெட்டைக் கோழியுடன் சூரிய காந்திக்கு மறைவாக நின்று உறவு கொண்டு முடிந்ததும் மாதுயின் கீழ் ஓடிச் சென்று ஊர்ந்து திரிந்த புழு ஒன்றினை அந்தப் பெட்டைக் கோழிக்கு காண்பிக்கிறது தன் மொழியில் அழைத்து.

“கீகி..ச்…கீய்ய்…….”கேற் திறக்கப்படும் சத்தம்.

செல்லமாய் வளர்ந்த இரு பூனைகளும் விரைந்து செல்கின்றன. சோகம் கலைந்த குரங்கு தன் குட்டியை அணைத்தெடுத்து மறு கிளைக்கு பாய்கிறது. மாதுளையை கொறித்துக் கொண்டிருந்த அணில்”ச்ச்ச்…..ச்ச்…ச்ச்ச்ச்…ச்ச்..சத்தமிட்டது. பத்திக் கையைப் பிடித்து வாளிக்குள் நீர் தேடிய காகம் சட்டெனப் பறந்தது. சூரியகாந்தியிலிருந்து காய்ந்த குரும்பெட்டி மெல்லிய சத்தம் எழுப்பி கீழே விழுந்தது. பக்கத்து வீட்டு புடக்கடையில் கோழி கிளறும் மல வாசம் ரகுமாவின் மூக்கை ஆரத்தி எடுத்தது.

கேற் பக்கமாக முகத்தைத் திருப்புகிறாள் ரகுமா உம்மா. எதிரில், அவள் கண்களுக்குள் நபிஷா. ஒரு கையில் மகளையும் பிடித்துக்கொண்டு நிறைமாத வயிற்றுடன் நிற்கிறாள். ஒரு தூக்கு நெல்லுக்கு வாங்கிய கத்தரிப் பூக்கலர் புடவையின் முந்தானையை மகளும் இறுக பிடித்து நிற்கிறாள்.

“என்டி மகள உனக்கு…ஏ..நெஞ்சே வெடிச்சிடும்போலரிக்கே…” இரண்டு கைகளையும் உயர்த்தி உயர்த்தி தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு மகளை நெருங்கினாள் ரகுமா.

“புள்ளத்தாச்சென்டும் பாக்காம

வாருக கட்டால மொகத்துலரிந்து என்ட கால் வரக்கிம் தொடச்சித் தொடச்சி எடுத்துடாரும்மா..”நெஞ்சடக்க முடியா கவலையையும், கண்களை மீறிய கண்ணீரையும் கொட்டி நின்றாள் நபிஷா.

மகளைத் தன் மடியில் சாய்த்து, பேத்தியின் தலையைக் கோதியபடி “அந்த மனிசன் என்ன சாதி மனிசன்டி.. இப்புடியும் ஒலகத்தில ஒருத்தன் இருக்கானா? அப்புடி இருந்தா அந்தாளு ஒருத்தன்தான்டி..” விறாந்தைச் சுவரைத் தாங்கிக் கொண்டிருந்த தூணில் தன் வலது பக்கத் தோளைச் சாய்த்து

“சிட்டாய் பறந்தாயேடி….நீ… இன்று கெட்டாய் இடியட்டுமே… வான்.

பட்டாய் உயரத்திலே- நீ தொட்டுக்

கெட்டாய் துயரத்திலே -போ….”

போடியார் வரும் சத்தம் கேட்டு ஒப்பாரிப் பாடலை சட்டென நிறுத்தி

“மகள கண்ண தொடச்சிக்கோ வாப்பா வாராரு ஒன்னும் சொல்லிடாத” என்று அவசரமாக கவலையை ஒழித்து வைக்க முகத்தில் இடம் தேடிக்கொண்டிருந்த உம்மாவும்,மகளும் தடுமாறினார்கள். எல்லாவற்றையும் தன் அறிவினால் கண்டும் காணாதவர் போன்று வந்த போடியார்

“என்ட பேத்தி மோள.. என்னாடி உம்மாப்பாவ பாக்க இப்பதானாடி நெனப்பு வந்திச்சி…என்ற செல்லமே.. அப்பாக்கொரு முத்தம் கொடுடீ கள்ளி..” பேத்தியை அணைத்து முத்தமிட்டபடி “மோளுக்கு என்ன வேணுமெண்டு கேட்டு கொடு ரகுமா.. நானு அஸர் தொழுதிட்டு வாரன்..இரி மோள..”

“இல்லாப்பா நான் சும்மாதான் வரணும்போலரிந்திச்சி..அதான்..நான் போறன் நீங்க தொழுங்க..”

“நான் கொண்டோய் விட்டுட்டு வாரன்..மகேள்..வாப்பாக்கு தேயில வச்சிக்குடு..”

கடைசி மகளிடன் சொல்லியபடி எழுந்து நடந்தாள் ரகுமா.

வாப்பாவின் தோளில் சாய்ந்து அழவேண்டும் போலிருந்ததால் கேற் கம்பியை பிடித்துக்கொண்டு, மகளையும் இடுப்போடு இணைத்துக் கொண்டு…

” எத்துணையோ மாப்புள தேடி வந்தும் இந்த மனசி எடம் கொடுக்கலியே…வந்தவங்க கொண்டு வந்த சட்டத்துணியள தங்கச்சிதான் தச்சிப்போட்டு அழகு பாத்தாள்..என்னாச்சி என்ட மனசிக்கு..ம்…அந்தாளு என்ன சூனியம் கீனியம் செஞ்சிட்டாரோ எனக்கு…

இல்ல..காதல் எங்கிறது ஒருத்தன்லதான் வரும்..வந்தா வந்ததுதான்…இப்புடி ஏதும்…இருக்கா..?

இல்ல..சின்னம்மாக்கு கேட்ட மாப்புள்ளட கூட்டாளி எங்கிற நெருக்கமா…?

என்ற மனச கெடுத்தது…..எது?.. முணு..முணு..என்டு எப்ப பாத்தாலும் ஏசிக்கொண்டு..பொண்டாட்டிட ஆச என்ன அவள்ற தேவ என்ன எதையும் பத்தி சிந்திக்காம வேளா வேளைக்கு புள்ளப் பெத்தா போதும் என்னு நெனக்கிற அந்தாளோட இத்தன வரிசமா வாழ்ந்துதானே இருக்கன்..ம்..மூனு புள்ளயுமாப்போச்சே……..

அடிச்சி ஒதச்சாலும் தாங்கிக்குவன் ஆனா..பச்ச பச்சையா ஏசுறானே..என்ட வாப்பாக்கும் ஏசுறானே………

வக வகயா உடுத்து திரிஞ்சேனே…………

தண்ணி வாத்தா முடிய உணத்த ஒரு பொல்லு…..அதுக்கு எங்க வாப்பா மான் கொம்பு சீவி புடி போட்டுத் தந்தாரே…(நபிஷாவின் விழிக்குடம்பிக்குள் நீர் ஊறி நிற்கிறது) அந்த நீண்ட தல முடிதான் எங்க போச்சு..?

மழ இல்லா ஊருக்கு மேகமா போச்சா..? ஒரு தம்பிய வாப்பா மாட்ட வித்து வெளிநாட்டுக்கு அனுப்பியும்; அவன் ரெண்டு வரிசம் முடிஞ்சி வந்த கையோட கல்யாணமும் பண்ணிட்டான் அவன்ட இஸ்டத்துக்கு, தாய் தந்தக்கிட்ட சொல்லாமலே பண்ணிப் போயிட்டான். கடசித் தம்பியும் கொழும்புக்கு படிக்க போயிட்டான்..கேப்பார் பாப்பார்..என்டு நாம யாரையும் எதிர் பார்க்க முடியாது. நானே தேடிய விதி.. ம்…ம்…ம்..”

மனதுடன் உரையாடி அவள் விட்ட பெமூச்சிக் காற்று கேற்றின் ஒரு பாகத்தை தள்ளிவிட்டாற்போலிருந்தது.

கைத்தாங்கலாக மகளை அணைத்துக் கொண்டு வீதியைக் கடந்து செல்லும் வழியில் வைத்து

“வாப்பாக்கும் இப்ப முன்ன மாதிரி ஓடி ஆட ஏலாடி மகள… கொஞ்ச நேரம் கதிரயில இருந்தா சாரத்தில போகுது. எனக்கும் பயமா இருக்கு” ரகுமாவின் தளர்ந்த குரல். வீதியின் மௌனத்தை தடவி விட்டாற்போல் இருந்தது.

மீசை துளிர்விட்ட முகம். “வாப்பாவப்போல உரிச்சி வச்சிரிக்கு” என்று நபிஷாவின் மகனைக் காண்பவர்கள் சொல்வார்கள். வீட்டுக் கண்ணாடியும் அப்படித்தான் அவனைப் பார்த்துச் சொல்கிறது. அப்படிச் சொல்பவர்களை ஜெலிலுக்கு பிடிக்காது. சலூன் கண்ணாடி மட்டும் இவனைக் கொஞ்சம் வித்தியாசமாக, அழகாக காட்டும். கண்ணாடிகளில் சலூன் கண்ணாடியை மட்டுமே இவன் நேசிப்பான். தற்போது வீட்டில் யாருமில்லை என்ற துணிச்சலில் வாயில் ஒரு சிகரெட்டை பற்றவைத்து புகை இழுத்துவிட்டு அழகு பார்த்துக் கொண்டு விறாந்தைப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஜெலில் உம்மாவைக் கண்டதுதான் கண்டான் காலுக்கு கீழ் சிகரெட்டைப் போட்டு மிதித்தவேறு “ஆ…ஆ…என்ற உம்மோ…சுட்டுப்போட்டு..” வெறும் காலுடன் இருப்பதை மறந்து எரியும் சிகரெட்டை மிதித்து துடிக்கும் காட்சியைக் கண்ட ரகுமா “தன் வினை தன்னச் சுடும் ஓட்டப்பம் மோட்டைச் சுடும்” சொல்லிக்கொண்டு “உங்க வாப்பா இல்லயாடா…?”

“அவரு போயிட்டாரு வெளியால..”

“அத ஏன்டா ஒத்தக்கால்ல நின்னு சொல்ற” கிண்டலுக்கு குறைவில்லாத உம்மாவின் பேச்சைக் கேட்ட நபிஷா “அவன் கெடக்குறான் நீ இங்க வாம்மா….சிக்கிறட்டும் குடிக்க பழகியிருக்கான்…ம்…ம்… என்ற அடி வயிற்றில வலி வாராப்போல இருக்கு…எதுக்கும் மருத்துவிச்சிய கூட்டிட்டு வரச் சொல்லும்மா அவன…” மகள் கூப்பிட்ட குரலுக்கு விரைந்திட்ட ரகுமா மகளின் இடுப்பை நீவியபடி “ என்ற ரப்பே ரஹ்மானே….ரெண்டு கொழந்தயளயும் காப்பாத்திடு…”

உம்மா…….என்ற வாப்போ…..தாங்க முடியலய……என்ற அல்லோ….ஓ….”அரை மணிகூட ஆகவில்லை. ஒரு ஆண் குழந்தையை பெற்றடுத்துக் களைத்து கண்ணீர் விட்டு, மெல்லிய புன்னகை சிந்திக் கிடக்கிறாள் நபிஷா. இப்போதுதான் மருத்துவிச்சி வந்தேறுகிறாள் வீட்டினுள்ளே.

குழந்தையின் அழுகைச்சத்தம் யார் காதையாவது இது வரை புண்படுத்தியிருக்கா? இல்லையே! குழந்தையின் பிஞ்சு வாசம் யார் சுவாசத்தையாவது நிறுத்தியிருக்கா? இல்லையே! மாறாக சுவாசத்தை தூக்கி நிறுத்தியிருக்கு. ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் தன் குழந்தையை பார்க்க கூட வீட்டுக்கு வராமல் தன் மூத்த சகோதரியின் வீட்டில் கிடந்து காலம் தள்ளுகிறான் நபிஷாவின் கணவன். ஒரு முறை விவாகரத்து நோட்டிசும் வந்திருந்தது. அதை நாயென்றும் கணக்கிலெடுக்காமல் இனி இருக்கும் காலத்தை தன் பழைய வீட்டில், பெற்றோர்களோடு தள்ள முடிவெடுத்தாள் நபிஷா. குழந்தையைக் கவனித்துக் கொள்ள கடைசித் தங்கை இருக்கிறாள். வாப்பா, உம்மா இவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் என்று இறங்கி தன் வீட்டை பூட்டி, வீடு தனியாக விட்டு சாவிக் கொத்தை தன்னுடன் எடுத்துக் கொண்டு பழைய வீட்டு வாசற்படியை மிதித்து ஐந்து மாதமும்,ஏழு நாட்டளும் கழிந்தோடிவிட்டன.

“இன்னுமாடி அந்தப் பாவி பாக்க வரல..” என்றாள் உம்மா ரகுமா.

“இனியும் பாக்க வரவே முடியா வேல செய்யப்போற பாத்துக்க உம்மா” என்று விவாகரத்து செய்துவிட்டு தன் பிள்ளைகளின் வாழ்வே தன் வாழ்வு என எண்ணியே நெற்றிக்கு மேல் தலை முடியும் வெளுக்கத் தொடங்கிவிட்டது.

“இன்னுமா வாப்பா எழும்பல…? கன நேரமாச்சே படுத்து..” என்றாள் நபிஷா.

மாட்டுப்போடியாரின் கடைசிப் பேரன் கெத்திக் கெத்தி தவழ்ந்துபோய் சாக்குக் கட்டிலின் காலால் மெல்ல எழுந்து நடந்து போடியாரின் சுருங்கிய தேகத் தோளில் தனது பிஞ்சுக் கைகளால் அடித்துக் கொண்டிருக்கிறான். வெயிலில் உலரவிட்டபடி கயிற்றில் கிடந்த நபிஷாவின் ஒரு தூக்கு நெல்லுக்கு வாங்கிய அந்த கத்தரிப் பூக்கலர் தூக்குப் புடவை காற்றோடு சண்டையிட்டு அருகில் இருந்த முட்கம்பி வேலியில் சிக்கித் தவிப்பதை கண்ணுற்ற கணமே ஓடோடிச் சென்று காப்பாற்ற முயன்று தோற்றுப்போய் கிழிந்து தொங்கிய புடவையை அந்த கிழிஞ்சல்களோடு தோளிலிட்டபடி வருகிறாள் நபிஷா.

“என்ற உம்…மோ…என்ற.உம்…மோ..ஓ..ஓ..வாப்பா மௌத்திகிட்டாங்க….ராத்தோ…ஓ….என்ற…. வாப்…போ…ஓ………இங்க வந்து பாரு ராத்தோ…ஓ….வாப்பாவ…..பாரு…….என்ற வாப்போ……ஓ….ஓ…..”

“சீத்தையில நான் படுத்தா சீணம் வந்து போகுமுன்னு.. காத்திருந்து காத்திருந்து என்னக் கைதூக்கி விட்டவரே….” ரகுமாவின் ஒப்பாரியில் நிறைந்துபோயிற்று வீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *