துளசி, நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 12,456 
 
 

துளசி என் பள்ளித் தோழன். தெலுங்கு தாய்மொழி ஆயினும் என்னுடன் தமிழ் மீடியத்தில் படித்து வந்தான். அவனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். படிப்பில் நாட்டமில்லை. புத்தகங்களைத் தொடவே மாட்டான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பான். இறுதித் தேர்வில் மட்டும் உருப்போட்டுத் திக்கு முக்காடி பாஸாகத் தேவைப் படும் மதிப்பெண்களைப் பெற்று அடுத்த வகுப்பிற்கு வந்து விடுவான். கணக்குப் பாடத்தில் மட்டும் சூரப்புலி!

துளசியின் நண்பர்கள் வட்டம் பெரிது. பள்ளிக்கூட நண்பர்கள் மட்டுமல்லாது, ஏரியாவில் வசிக்கும் சிறுவர்களும் அவனுடன் சுற்றுவார்கள். எல்லோருடனும் சிரித்துப் பேசிப் பழகுவான். எங்கள் பள்ளி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவான், ஏரியா சிறுவர்களுடன் கால்பந்து, ஏழு கல், கபடி விளையாடுவான். நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக உதவிக்கு வந்து நிற்பான். களத்தில் இறங்கி சண்டையிட்டு காயம்படவும் தயங்க மாட்டான்.

கோவில் உற்சவம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, வருடப் பிறப்பு சமயங்களில், நண்பர்களை சேர்த்துக்கொண்டு, உண்டியல் குலுக்கிப் பணம் சேர்ப்பது, பந்தல் அலங்காரங்கள் செய்து விழாக்கள் கொண்டாடுவது, அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது, வெய்யில் காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைப்பது என்று அனைத்து விஷயங்களிலும், ஏரியா பெரியவர்களுடன் சேர்ந்து உழைப்பான். அந்த ஏரியாவில் துளசி மிகவும் பிரபலம். எப்போதும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு விளையாட்டு மைதானத்திலும், ஏரியா முழுதும் சைக்கிளில் சுற்றியும் பொழுதைக் கழிப்பதால், சிறுவர்களுக்கு அவன் ஹீரோ. ஆனால், பெற்றோர்களுக்கு அவன் தலைவலி. மற்ற சிறுவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி துளசியின் பெற்றோரிடம் வந்து, தங்கள் பிள்ளைகளை துளசி கெடுப்பதாகக் குறைகூறி அவனைக் கண்டித்து வைக்கச் சொல்லிப் போவது வழக்கம்.

துளசியின் அம்மா மிகவும் அன்பானவர். அவனுடைய அப்பா மிகவும் கோபக்காரர். ஒரு துணிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். துளசி படிக்காமல்,வீட்டில் தாங்காமல், தெருச்சிறுவர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் திட்டுவதும், அடிப்பதுமாக இருப்பார். அவர்கள் வாடகைக்கு இருந்த வீட்டின், இன்னொரு பகுதியில் என் பெரியம்மாவும் பெரியப்பாவும் வசித்து வந்தார்கள். துளசியின் பெற்றோரும் என் பெரியம்மா குடும்பமும் சிநேக பாவத்துடன் பழகி வந்தனர். ஏனோ, என் பெரியம்மாவிற்கு துளசியைப் பிடிக்காது. வீட்டில் அவன் அம்மாவிற்கு உதவியாக இல்லாமல், வீதியில் திரிந்து, ஊர் வம்பை விலைக்கு வாங்கி வருகிறான், அதனால் வீட்டின் அமைதி கெடுகிறது என்ற எண்ணம் போலும்.

நான் 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை என் பெரியம்மா வீட்டிற்க்குச் செல்வேன். நான் நன்றாகப் படிப்பதால் என்னை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். துளசியின் அம்மாவிடம் என்னைப் பற்றி உயர்வாகப் பேசிப் பெருமை அடித்துக் கொள்வது என் பெரியம்மாவின் வழக்கம். சில சமயங்களில் துளசியின் அப்பா அவர்கள் வீட்டிலிருந்தால், என் பெரியம்மா வேண்டுமென்றே, சமீபத்தில் நடந்தேறிய தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்களைக் கேட்பார். ஒவ்வொரு பாடத்திலும் நான் வாங்கிய சிறந்த மதிப்பெண்களை சொல்லச்சொல்ல, துளசியின் அப்பா அவனுடைய மதிப்பெண்களைக் கேட்பார். தயங்கியபடியே அவன் வாங்கியக் குறைந்த மதிப்பெண்களைச் சொல்லும்போது, “அவனைப் பாருடா! அவனும் உன் வகுப்புலே தானே படிக்கிறான். அவன் 80, 90 வாங்கும்போது, நீ மட்டும் ஏண்டா 25, 30 வாங்கறே? வயத்துக்கு சோறுதானே திங்கறே” என்று துளசியைத் திட்டிவிட்டுத் தலையில் அடித்துக் கொள்வார். என் பெரியம்மா என்னைப் பெருமையாகப் பார்ப்பார்கள். துளசியின் அம்மா, ‘நீ அவனுக்கு தெரியாததை சொல்லிக்குடுடா” என்று என்னை வேண்டுவார். நான் சரி என்று தலையாட்டுவேன். எதையும் கண்டுகொள்ளாமல் துளசி என்னை ‘ வாடா ,விளையாடலாம்’ என்று வெளியில் அழைத்துச் செல்வான். இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். முதலில் எனக்கு இது உள்ளூரப் பெருமையாகத் தான் இருந்தது.

சில வருடங்கள் கழித்து ஒரு நாள், என் தேர்வுத் தாள்களை என் பெரியம்மாவிடம் காட்டிக் கொண்டிருந்தேன். வெளியில் இருந்து வந்த துளசியின் அப்பா என் தேர்வுத் தாள்களை வாங்கிப் .பார்த்தார். நான் 95 மதிப்பெண் வாங்கிய ஒரு பாடத்தில், துளசி 20 வாங்கி இருந்தான் என்பதை அறிந்ததும், அவர் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அதிர்ச்சியில் எனக்குத் தலை சுழன்றது. மீண்டும் அவனை அறைய ஓங்கிய அவர் கையைத் துளசியின் அம்மா பிடித்துக் கொண்டார். “சீ, வெட்கமா இல்லே? இவன் மூத்திரத்தைக் குடிடா, அப்பவாவது உனக்கு புத்தி வருதான்னு பார்ப்போம். .இப்படியே சுத்திகிட்டு இரு. நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு” என்று கோபமாகக் கத்தினார். கண்கள் சிவந்து, கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் துளசி. அவனுடைய அம்மா என்னை வருத்தமாகப் பார்த்தார். நல்ல மதிப்பெண் வாங்கினேன் என்ற இறுமாப்பு, என் நண்பன் வெறித்தனமாக அடிவாங்கக் காரணமாயிற்றே என்று வருந்தினேன். ‘ஸாரிடா துளசி’ என்று அவன் தோளில் கை வைத்தேன் . ‘போடா’ என்றபடி என் கையை விலக்கிவிட்டு அவன் வெளியில் சென்று விட்டான். அதன் பிறகு என்னுடன் அவன் பேசிப் பழகுவது குறைந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் பெரியம்மா வீட்டிற்குப் போவதைக் குறைத்துக் கொண்டேன். போனாலும், என் மதிப்பெண்களைப் பற்றிக் கேட்கும்போது, வேண்டுமென்றே குறைவாகச் சொன்னேன். ‘ஏண்டா, முன்பெல்லாம் 80, 90 மார்க் வாங்கறவன், இப்போ 50, 60 ன்னு வாங்கறே? என்று பெரியம்மா கேட்டதற்கு, ‘பெரிய வகுப்பாச்சே பெரியம்மா, பாடமெல்லாம் கஷ்டமா இருக்கு’ என்று கண்களைத் தாழ்த்திக் கொண்டு பொய் சொன்னேன். நன்றாக மதிப்பெண் பெற்ற தேர்வுத் தாள்களையும் அவர்களுக்குக் காண்பிப்பதை நிறுத்திக் கொண்டேன். துளசியின் அம்மா என்னை அமைதியாகப் பார்த்து சிரிப்பார்.

வருடங்கள் ஓடின. பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினேன். துளசி, கணக்குப் பாடம் தவிர மற்ற பாடங்களில் தேறவில்லை. நான் இரசாயனத்தில் இளங்கலைப் பட்டம் படிக்கக் கல்லூரியில் சேர்ந்தேன்.துளசி மீண்டும் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு எழுத ஒரு டுடோரியல் கல்லூரியீல் சேர்ந்ததாக அறிந்தேன்.

இளங்கலை முடித்து, முதுகலையில் பயோ கெமிஸ்ட்ரி படித்துத் தேறியபின்,உணவுத் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் படிப்பிற்கு உதவித்தொகையுடன் பாரிஸ் நகரப் பல்கலைக் கழகத்தில் எனக்கு இடம் கிடைத்தது. அங்கு சென்று ஆராய்ச்சிப் படிப்பின் முடிவில், பிரான்ஸ் நாட்டிலுள்ள, உலகின் மிகப் பெரிய, பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் லாக்டாலிஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். பன்னாட்டு நிறுவனத்தின் வேலையும்,பாரிஸ் நகர வேகமான வாழ்க்கை முறையும் அவசர கதியில் வருடங்களை விழுங்கின. பதினைந்து வருடங்களில் படிப்படியாக வளர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப நிர்வாகியாகப் பதவி வகிக்கிறேன். எனக்குத் திருமணமாகி, பன்னிரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னைக்கு வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவேன். நாற்பது வயதை எட்டுகிறேன். பெற்றோர்களுக்கு வயதாகி விட்டதால், என்னை இந்தியாவிற்குத் திரும்பி வந்துவிடும்படி வேண்டுகிறார்கள். டீனேஜ் துவங்கும் நிலையிலிருக்கும் மகளுக்கு பாரிஸ் வாழ்க்கை உகந்ததல்ல, அவளை இந்தியாவில் என் பெற்றோர்களுடன் தங்கிப் படிக்கவைக்க வேண்டும் என்று தோன்றியது. அல்லது நானே இந்தியாவில் வேறு வேலை தேடிக்கொள்ளலாமா என்று கூட எண்ணினேன். இது குறித்து ஒரு முறை, அலுவலக விருந்தின் போது, எங்கள் நிறுவனத் தலைவரிடம் இந்தியாவிற்குத் திரும்ப எண்ணும் விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்தேன்.

சரியாக அந்த சமயத்தில் எங்கள் நிறுவனம், வளர்ந்து வரும் இந்தியாவில் முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்கத் திட்டமிட்டது. விரைவில் இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவாக, ஏற்கனவே இத்துறையில் இருக்கும் தொழிலதிபர்களுடன் கூட்டு சேர்ந்து பங்குதாரர் ஆக முடிவெடுத்தனர். எங்கள் நிறுவனம் ஈடுபட்டிருக்கும் துறையில் சிறந்து விளங்கும் இந்தியத் தொழிலதிபர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுள் எங்கள் கட்டுப்பாட்டுக்கு இணைந்து வர விரும்பும் சிறிய நிறுவனமாகவும், அதே சமயத்தில் வேகமாக வளர, வசதி வாய்ப்புக்கள் கொண்டதுமான ஒரு நிறுவனத்தை அணுக முடிவு செய்தனர்.

அடுத்த இரண்டு மாதங்கள் நான் என் வேலைகளில் மூழ்கி இருந்ததால், எங்கள் நிறுவனத்தின் இந்தியப் பிரவேசத் திட்டம் பற்றிய விவரங்கள் என் கவனத்திற்கு வரவில்லை. நிறுவனத்தின் மார்க்கெடிங் துறையினர் அத்திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை. எங்கள் நிறுவனத்தின் தலைவர் என்னைக் கைப்பேசியில் அழைத்து, அன்று மாலை தன் வீட்டிற்கு வரச்சொன்னார். ஒயின் க்ளாஸை நிரப்பிக் கையில் கொடுத்துவிட்டு, ‘இந்தியாவில் ஆந்திரப்ரதேசத்தில் இருக்கும் பாலாஜி பால் பண்ணையில் நம் நிறுவனம் முதலீடு செய்கிறது. நம் சார்பில் அங்கு ஒரு ஆராய்ச்சி மையத்தைத் துவங்க வேண்டும். இங்கு சந்தைப்படுத்தியுள்ள பொருட்களை அங்கு தயாரிக்கத் தொழில்நுட்பக் கூடம் அமைக்க வேண்டும். நம் தலைமை தொழில்நுட்ப நிர்வாகியான நீங்கள் தான் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். அடுத்த வாரம் பிரயாணத்திற்குத் தயார் ஆகுங்கள்.’ என்றார். நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். முதலில் தனியாகச் செல்லலாம், குடும்பத்தை அழைத்துக் கொள்வதைப் பற்றிப் பிறகு யோசிப்போம் என்று முடிவெடுத்தேன்.

பாரிஸிலிருந்து சென்னைக்கு ஏர் ப்ரான்ஸில் எனக்கு டிக்கெட் எடுத்திருந்தனர். நாங்கள் முதலீடு செய்யும் இந்திய நிறுவனத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு சிடியும் ஒரு பைலையும் கொடுத்திருந்தார்கள். ப்ளைட்டில் படித்துக் கொள்ளலாம் என்று என் பெட்டியில் வைத்தேன். சென்னை விமான நிலையத்தில் என் பெயர் தாங்கிய பதாகையுடன், இந்திய நிறுவனத்தின் ஆட்கள் என்னை சந்தித்து, ஐ டி சி சோழா ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார்கள். ஓட்டலில் இந்திய நிறுவனத்தின் சொந்தக்காரரும், மேனேஜிங் டைரக்டருமான மிஸ்டர்.தாஸ் என்னை வந்து சந்திப்பார் என்று தெரிவித்திருந்தார்கள்.

ப்ளைட் கிளம்பியது. இந்தியாவில் தொடங்கவிருக்கும் ஆராய்ச்சி மையம் மற்றும் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் வசதிகள் இவற்றைப் பற்றி எண்ணியபடியே டிவியில் படம் பார்த்தேன். பிறகு ப்ளைட்டில் கொடுத்த பானத்தை அருந்தியபின், உணவு உண்டுவிட்டு உறங்கிப் போனேன்.

விமானம் சென்னைக்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தது. புழுக்கமான காரிடாரில், நீளமான வரிசையில், மெதுவாக நகர்ந்து, கஸ்டம்ஸ் விஷயங்களை முடித்துக் கொண்டு, என் பெட்டிகளைத் தள்ளு வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு நான் வெளிவாசலை அடையும்போது, ‘ஹே சௌந்தர்!’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். என் பள்ளித் தோழன் துளசி! மொழு மொழுவென்று பளிச்சென்று இருந்தான். முன்னால் தொந்தி, பின்னால் வழுக்கை. அவன் பக்கத்தில், என் பெயரையும் எங்கள் நிறுவனத்தின் பெயரையும் தாங்கிய பதாகையுடன் வெள்ளை நிற யூனிபார்மில் ஒருவர் நின்றிருந்தார். அவரை என் பெட்டிகளை எடுத்துக்கொள்ளப் பணித்து விட்டு, ‘வெல்கம் டு இந்தியா, அண்ட் வெல்கம் டு பாலாஜி – லாக்டாலிஸ் டெய்ரி ப்ராடக்ட்ஸ் கம்பெனி” என்றபடி என்னைக் கட்டிப்பிடித்தான். “ஹல்லோ! மிஸ்டர்.துளசிதாஸ்” என்று சந்தோஷத்துடன் அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினேன். பழைய நினைவுகளெல்லாம் ஒரு கணத்தில் என் மனதில் ஊர்வலம் வந்து போயின.

அவனுடைய பென்ஸ் காரில் என்னை அழைத்துச் சென்ற போது, அவன் வளர்ந்த விதத்தை சுருக்கமாகச் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.

டுடோரியல் கல்லூரியில் படித்தும், மேலும் இரண்டு முறை பள்ளி இறுதியாண்டு வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்ததால், அப்பாவின் அடிக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடிப்போய், நான்கு நாட்கள் எங்கெங்கோ அலைந்து, கடைசியில் நெல்லூரில் (அவன் சொந்த ஊர்), அவனது தாத்தாவின் வீட்டில் தஞ்சமடைந்தானாம். அங்கிருந்த படியே அவன் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டு, தாத்தாவின் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு, அங்கிருந்த பால் பண்ணை ஒன்றிலும் வேலை செய்தானாம். அவன் சுறுசுறுப்பையும், மற்றவர்களுடன் நல்ல விதமாகப் பழகும் தன்மையும், கணக்கு வழக்கில் நேர்மையாகவும் இருப்பதைப் பார்த்த அந்த பால் பண்ணையின் சொந்தக்காரர், அவனை சொந்த மகனைப் போலப் பார்த்துக் கொண்டாராம். இவனுடைய உழைப்பினால் பண்ணை வேகமாக வளர்ந்ததாம். அவருடைய மகளை இவனுக்கு மணமுடித்து வைத்துப் பண்ணையை இவன் பராமரிப்பிலேயே விட்டுக் கொடுத்தாராம். இவன் நெல்லூரைச் சுற்றியிருந்த கிராமங்களிலெல்லாம், விவசாயிகளின் குடும்பங்களை ஒன்றிணைத்துக் கூட்டுறவு பால் பண்ணை ஆரம்பித்து, அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, ‘பாலாஜி’ என்ற பிராண்டில் நகரங்களில் விநியோகம் செய்தானாம். வங்கிகள் முன்வந்து தந்த கடனுதவி மூலம், தொழிலை விரிவுபடுத்தினானாம். அவனுடைய மேற்பார்வையில் இப்போது பதினையாயிரம் கலப்பினப் பசுக்கள் இருக்கின்றன. அவனுடைய நிறுவனம் பால், தயிர், நெய் வெண்ணெய் முதலிய பொருட்களைத் தயாரித்து ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் நகரங்களில், மிகப் பெரிய அளவில் விற்பனை செய்கிறது. இந்த மிஸ்டர்.துளசி தாஸுடன் தான் உலகின் மிகப்பெரிய டெய்ரி நிறுவனம் வியாபாரப் பங்குதார் ஆகிறது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

‘இன்று இரவு ஓட்டலில் நீ தங்க வேண்டாம், என் வீட்டிலேயே தங்கி விட்டு, நாளை உன் பெற்றோரைப் பார்த்து விட்டு நெல்லூருக்குப் போகலாம்” என்றான். அவன் பங்களாவிற்குள் கார் நுழைந்தது. வயதான அவனுடைய பெற்றோர் என்னை வரவேற்றனர். வசதியின் வனப்பும், மகனுடைய வெற்றியின் பூரிப்பும் அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது. துளசியின் அம்மா, ‘நீ வரேன்னு துளசி சொன்னான். அம்மா அப்பால்லாம் எப்படீ இருக்காங்க, ஊர்லே உன் குடும்பம் எப்படி இருக்கு, பார்த்து பதினஞ்சி, இருவது வருஷம் ஆகி இருக்கும்” என்று என்னை விசாரித்தார். துளசியின் அப்பா என் கைகளைப் பிடித்தபடி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். துளசியை அவர் கன்னத்தில் அறைந்து, ‘நீ மாடு மேயக்கத்தாண்டா லாயக்கு” என்று திட்டியது நினைவிற்கு வந்தது. எத்தனை சரியாக, நல்ல விதமாக, அவர் வாக்கு பலித்து இருக்கிறது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *