முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன். அப்போது, புதிய இனோவா கார் ஒன்று , அந்த இல்லத்தின் போர்ட்டிகோவில் வந்து நின்றது. அதிலிருந்து, ஒரு இளைஞன் இறங்கினான்; தொடர்ந்து, தலை நரைத்த வயது முதிர்ந்தப் பெண்மணி இறங்கினாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும், தலையை நிமிர்த்தி பார்த்தனர். அவர்கள், மகன், தன் தாயை, முதியோர் இல்லத்தில் சேர்க்க வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டனர். அவர்களை, வெளியில் வந்து வரவேற்றார், முதியோர் இல்ல மேனேஜர்.
அங்கிருந்த பணியாளரை அழைத்து, வந்தோர் கொண்டு வந்த சூட்கேசை எடுத்து வரச் சொல்லி, அவர்களைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அனைவரும், அந்தப் பெண் மணியை ஒரு வினாடி நிமிர்ந்து பார்த்து, தங்கள் பணியில், மீண்டும் அமிழ்ந்து போயினர். பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர்கள், தொடர்ந்து படித்தனர்; பேசிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.
அந்தப் பெண்மணி, கிருஷ்ணனை தாண்டிச் சென்ற போது, அவளை எங்கேயோ பார்த்தது போலிருந்தது அவருக்கு. அந்த முகம், ரொம்பவும் பரிச்சயமான முகமாக இருந்தது; அவளுடைய நடையும் கூட.
கஷ்டப்பட்டு, தன் மூளையைக் கசக்கி யோசித்தார்.
“எங்கே பார்த்திருக்கிறோம்…?’
அதற்குள், மேனேஜரின் அறையில் செய்ய வேண்டிய அலுவல்களை முடித்து, அந்தப் பெண்மணியும், இளைஞனும், வரவேற்பறைக்கு வந்தனர்.
அந்த பெண், “”நீ கிளம்பு சுரேஷ்… நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்றாள்.
“இந்தக் குரல் ரொம்பப் பரிச்சயமானதாக இருக்கிறதே…’ மீண்டும் மூளையை கசக்கினார், கிருஷ்ணன்.
அப்போது, அங்கு வந்த முதியோர் இல்ல மேனேஜர், “”வாங்க சுபத்ராம்மா… உங்க, “ரூமை’ காட்டறேன்…” என்று சொல்ல, “சட்’டென்று, கிருஷ்ணனுக்கு பொறி தட்டியது.
“சுபத்ராவா? ஆம்… அதே சுபத்ராவே தான். எப்படி அவள் முகத்தை மறந்தேன்? அவளைக் கடைசியாக சந்தித்து, சரியாக முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன’ என்றது, அவர் மனம். இப்படி ஒரு சூழலில், சுபத்ராவை சந்திப்போம் என்று, சத்தியமாக எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணன்.
“என்னை, சுபத்ராவிற்கு நினைவு இருக்குமா… எப்படி மறந்திருப்பாள்…’ என்று, மனம் அவரை எதிர் கேள்வி கேட்டது.
மேனேஜரைத் தொடர்ந்து, தன் புது இருப்பிடம் நோக்கி சுபத்ரா நடக்க, அவளுடைய நடை, அது, தான் நினைக்கும் சுபத்ரா தான் என்பதை கிருஷ்ணனுக்கு உறுதி செய்தது.
கிருஷ்ணனுக்கு அப்போது இருபத்தைந்து வயது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், ஆபீசராக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.
ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன் கிருஷ்ணன். அவன் வீட்டில், சமையலில் வெங்காயம் சேர்ப்பதாக இருந்தால் கூட, நாள், நட்சத்திரம் பார்த்து தான் செய்வர். அந்த அளவிற்கு ஆச்சார, அனுஷ்டானங்களை கடைப்பிடித்த குடும்பம் அது.
அவன் பணியாற்றியது, சிறு தொழில் கடன் தரும் கிளையாக இருந்ததால், எப்போதும் வங்கியில் கூட்டமாக இருக்கும்; கண் கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், யாராவது ஏமாற்றி விடுவர்.
வர்த்தகக் கடன் கேட்டு வரும் விண்ணப்பங்களை சரி பார்க்கும் குமாஸ்தாவாக, சுபத்ரா இருந்தாள். அவளும், வேலைக்குப் புதிது என்பதால், கிருஷ்ணனிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டுச் செல்வாள்.
சில நேரங்களில், இருவரும் ஒன்றாக அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டே, அன்று பரிசீலித்த கடன் விண்ணப்பங்களைப் பற்றி விவாதிப்பர்.
சுபத்ரா பேரழகியாக இல்லாவிட்டாலும், பார்க்க லட்சணமாக இருப்பாள். அளவான உயரம்; அதற்கேற்ற உடல்வாகு; நீண்ட சுருள் தலைமுடி என, ஒரு முறை பார்ப்பவரை, மறுமுறை திரும்பப் பார்க்க செய்யும் வசீகரம், அவளிடம் இருந்தது. சுபத்ராவிற்கு, கிருஷ்ணனைப் பிடித்திருந்ததை, அவளுடைய சில செய்கைகள் சொல்லின. அலுவலகத்தில் எல்லாரும் போன பின், கிருஷ்ணனுக்கு உதவ, சுபத்ரா மட்டும் இருப்பாள்.
அனாவசியமாக நாட்களை கடத்தாமல், அவளிடம், சீக்கிரமே தன் காதலை சொன்னான் கிருஷ்ணன். “எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது; நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்று கேட்ட போது, புன்னகை மூலம், அதை ஆமோதித்தாள் சுபத்ரா.
அவர்கள் காதல் கண்ணியமான முறையில் வளர்ந்தது.
இருவரும், தங்கள் குடும்பத்தாரிடம் சொல்லி, முறைப்படி திருமணம் செய்து கொள்வதைத் தான் விரும்பினர்.
கிருஷ்ணனுக்கு திருமண வயதில், இரண்டு தங்கைகள் இருந்தனர். சுபத்ராவிற்கு, ஒரு அக்காவும், தங்கையும் இருந்தனர். இருவருக்கும் இடையில், ஜாதி வேறு பூதாகரமாக இருந்தது. ஜாதிப் பிரச்னை குறுக்கே வரும் என்பது தெரிந்தும், அதை எப்படியாவது சமாளித்து விடலாம் என, இருவரும் நினைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்தபடி, அந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடியவில்லை.
இருவர் வீட்டிலும், பெரிய ரகளையே நடந்தது.
கிருஷ்ணனின் பெற்றோர், அவன் ஜாதி விட்டு, ஜாதி திருமணம் செய்து கொண்டால், தங்கைகளுக்குத் திருமணம் ஆகாது என்று பயம் காட்டினர். சகோதரிகளின் திருமணத்திற்குப் பின், சுபத்ராவை மணந்து கொள்வதாக, கிருஷ்ணன் சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை.
சுபத்ரா வீட்டில்…
அவள், கிருஷ்ணனை பற்றி இனி நினைத்தாலே, குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு விடுவதாக பயமுறுத்தினர். இன்றைய காலம் மாதிரி இல்லை அப்போது. பெற்றவர்களை மீறி, எதையும் செய்யும் திராணி இல்லாமல், கிருஷ்ணனும், சுபத்ராவும் தங்கள் காதலைத் தியாகம் செய்தனர்.
வேறு கிளைக்கு மாற்றம் வாங்கிக் கொண்டான் கிருஷ்ணன். முதலில் சுபத்ராவை மறப்பது, கடினமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, கல்யாணம், குழந்தைகள், பொறுப்பு என்று வர, எப்போதாவது சுபத்ராவை நினைத்துக் கொள்வான்.
அவன் வங்கிச் சேவையில் இருந்த, 30 ஆண்டுகளும், எத்தனையோ கிளைகளில் பணியாற்றினாலும், சுபத்ராவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விசாரித்த போது, சுபத்ரா திருமணம் முடிந்து, திருநெல்வேலி பக்கம், பணிமாற்றம் வாங்கிக் கொண்டது தெரிந்தது.
இப்போது அந்த சுபத்ராவை முதியோர் இல்லத்தில் சந்தித்தார்.
“இந்த உலகம் இவ்வளவு சின்னதா?’ என்று, கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரே வங்கியில் பணியாற்றிய போது, சந்திக்கக் கிடைக்காத சந்தர்ப்பம், 60 வயதுக்கு மேல், முதியோர் இல்லத்தில், விதி இருவரையும் சந்திக்க வைப்பதை நினைத்து, கிருஷ்ணனுக்கு விந்தையாக இருந்தது.
“சுபத்ரா என்னை நினைவில் வைத்திருப்பாளா… ஒரு வேளை பார்த்து விட்டு தான், கவனியாதது போல் சென்றாளோ…?’ என்ற சந்தேகம், அவர் மனதில் ஏற்பட்டது.
முதியோர் இல்லத்தில், ஆண்கள் பகுதியும், பெண்கள் பகுதியும் தனித்தனி. தனி அறைகளாக இருந்தால் கூட, ஒருவரை ஒருவர் சந்திப்பது கஷ்டம் தான். உணவருந்தும் நேரம் தான், சந்தித்துக் கொள்ளலாம்.
அன்று மதிய உணவிற்கு வந்த சுபத்ராவிடம், அவள் வயதொத்த இரண்டு பெண்கள், தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
அவளுடைய மேசை அருகே சென்ற கிருஷ்ணன், “”சுபத்ரா… என்னைத் தெரிகிறதா?” என்று வினவினார்.
கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்த சுபத்ராவின் முகம், சில நொடிகளில் பிரகாசமானது.
“”நீங்கள்… கிருஷ்ணன் தானே… எப்படி இருக்கிறீர்கள்?” அவரை சந்தித்த மகிழ்ச்சி, அவள் குரலில் வெளிப்படையாகத் தெரிந்தது.
இருவரும், பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டனர்.
“”எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன், அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். என்னை இங்கு கொண்டு வந்து விட்டவன் இளையவன்; இவனும் காதல் கல்யாணம்; வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை, திருமணம் செய்து கொண்டிருக்கிறான்,” என்று சொல்லி, ஒரு அர்த்தமுள்ள புன்னகையை உதிர்த்தாள், சுபத்ரா.
“”எனக்கு இரண்டு பெண்கள். இருவருமே காதல் கல்யாணம் தான்,” என்றார், கிருஷ்ணன்.
“”இந்தக் காலத்து இளைஞர்களுக்கு, வாழ்க்கையில், தங்களுக்கு என்ன தேவை என்பது தெரிந்து இருக்கிறது. அவர்கள், மற்றவர்களை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை,” என்றாள் சுபத்ரா.
“”பெற்றவர்களுக்கு பயந்தது எல்லாம், நம் காலத்தோடு போய் விட்டது. இப்போது, நாம் தான் அவர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது,” என்றவர் தொடர்ந்து, “”நாம், வாழ்க்கையில் எப்போதோ பிரிந்து, இப்படி முதியோர் இல்லத்தில் வந்து சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்தோமா?” என்றார் கிருஷ்ணன்.
“”இந்த உலகின் மிகப் பெரிய மர்ம நாவல் மனித வாழ்க்கை தான். அதில், எப்போது என்ன நடக்கும் என்று, யாருக்கும் தெரியாது. இந்த மர்மம் மட்டுமில்லை என்றால், வாழ்க்கை, சுவை குன்றி போயிருக்கும் இல்லையா?” என்றாள் சுபத்ரா.
முதியோர் இல்லத்தில், கிருஷ்ணனுக்கும், சுபத்ராவிற்கும் பேச நிறைய நேரம் கிடைத்தது.
சுபத்ராவின் கணவர், அவளுடைய நாற்பதாவது வயதிலேயே, அகாலமாக மறைந்ததைக் கேட்டு வருந்தினார், கிருஷ்ணன்.
சுபத்ரா தனி மனுஷியாக நின்று, இரண்டு ஆண் குழந்தைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கிறாள். ஆனால், இன்று அந்தப் பிள்ளைகள், அவளை முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்றதை நினைத்த போது, அவருக்கு வருத்தமாக இருந்தது.
கிருஷ்ணனின் மனைவி, ஐந்தாண்டுகளுக்கு முன் மறைந்தார். அம்மா இருந்த வரை, பிறந்த வீட்டிற்கு அடிக்கடி வந்த பெண்கள், அவள் மறைவிற்கு பின், அப்பாவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
சுபத்ரா வருவதற்கு முன், முதியோர் இல்லத்தில் தனிமையை உணர்ந்தார் கிருஷ்ணன். சுபத்ராவின் வருகை, அவருடைய தனிமையைப் போக்கியது.
தினமும் காலையில், இருவரும் அகன்ற புல்வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வர். அப்போது, முப்பது வருடங்களுக்கு முன், சென்னை நகரத் தெருக்களில், அவர்கள் காதலர்களாக வலம் வந்த நாட்கள், இவரது நினைவுக்கு வரும்.
மாதா மாதம் இருவரும் ஒன்றாக வங்கிக்கு சென்று, தங்கள் பென்ஷன் தொகையை எடுத்தனர். தேவையான பொருட்களை வாங்க, இருவரும் சேர்ந்து, பெரிய காஞ்சிபுரம் சென்று வருவர்.
எப்போதாவது, ஓட்டலில் போய் சாப்பிடுவதும் உண்டு. சில நேரம், சுபத்ராவின் அறையில் இருக்கும், “டிவி’யில், பழைய சினிமா பாடல்களைப் பார்ப்பார் கிருஷ்ணன். அதில் வரும் பாடல்கள், அவர்கள் காதலர்களாக இருந்த போது வெளிவந்த பாடல்களாக இருந்தால், இருவருமே, பழைய நினைவுகளில் மூழ்கி விடுவர்.
”பத்ரா இந்த விடுதிக்கு வந்து, ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை.
நமக்குப் பிடித்தவர்கள் நம்முடன் இருக்கும் போது, காலம் ஓடுவதே தெரிவதில்லை இல்லையா… அப்படித்தான் இருந்தது, இவர்களுக்கும்.
ஆனால், இவர்களுடைய நட்பு, அந்த முதியோர் இல்லத்தில்,”முக்கிய’மாக விமர்சிக்கப்பட்டது. இருவரும், எப்போதும் சேர்ந்தே இருப்பதைப் பற்றி, அரசல் புரசலாகப் பேசத் துவங்கினர்.
ஒரு நாள், கிருஷ்ணனை தன்னுடைய அறைக்கு அழைத்தார் இல்ல மேனேஜர்.
“”மிஸ்டர் கிருஷ்ணன்… நீங்கள் கண்ணியமான உத்தியோகத்தில் இருந்திருக்கிறீர்கள். உங்கள் மீது இப்படியொரு களங்கம் வரலாமா?” என்று கேட்டார்.
“”சுபத்ரா என்னுடைய பால்ய சினேகிதி. நான் அவளுடன் பேசுவதால், மற்றவர்களுக்கு என்ன வந்தது?” சிரித்துக் கொண்டே கேட்டார், கிருஷ்ணன்.
“”கிருஷ்ணன் சார்… இந்த முதியோர் இல்லத்திற்கென்று, ஒரு கவுரவம் இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் சுபத்ரா அம்மாவுடன் நெருங்கிப் பழகுவதை நிறுத்தவில்லை என்றால், உங்களில் யாராவது ஒருத்தர், இந்த இல்லத்தை விட்டு வெளியில் சென்றாக வேண்டும்,” என்றார் மேனேஜர்.
சுபத்ராவிடம் இந்த செய்தியை சொன்னவுடன், உண்மையிலேயே மிகவும் வருந்தினாள்.
“சின்ன வயதில் தான் பிரச்னை என்றால், வயதான பிறகும் கூடவா கிருஷ்ணனுடன் பேசுவதற்குத் தடை?’ என்று நினைக்க, சுபத்ராவுக்கு சிரிப்பு வந்தது.
அன்றிரவு முழுவதும் யோசித்தார் கிருஷ்ணன்.
மறுநாள் காலை சுபத்ராவை மொபைலில் அழைத்து, “”சுபத்ரா… சின்ன வயதில் நம் பெற்றோருக்காகவும், குடும்பத்துக்காகவும் தியாகம் செய்தோம். இப்போது, நாம் நமக்காக வாழலாமா?” என்று கேட்டார்.
சுபத்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“”என்ன சொல்கிறீர்கள் கிருஷ்ணன்… எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லை,” என்றாள்.
“”நான் சொல்வதை சரியான தளத்தில் வாங்கிக் கொள். நாம் ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது… இந்தக் கடைசி காலத்தில், நாம் ஏன், ஒருவர், மற்றொருவருக்கு நல்ல துணையாக இருக்கக் கூடாது…” என்று அவர் கேட்க, சுபத்ரா யோசித்தாள்.
சிறிது நேரம் யோசித்தவள், பின், “”நீங்கள் சொல்வதை, நான் ஏற்றுக் கொள்கிறேன் கிருஷ்ணன்… முதலில் பெற்றோருக்காக வாழ்ந்தோம்; அப்புறம், நம் குடும்பத்திற்காக வாழ்ந்தோம். இனி, மீதமுள்ள கொஞ்ச நாட்களை, நாம், நமக்காக வாழ்வோம்,” என்றாள்.
“”எனக்கு இதுவரை ஒரு போன் கூட செய்து விசாரிக்காத என் மகள்களிடம், திருமணத்தைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை; நீ?” என்ற கிருஷ்ணனிடம், “”என் மகன்கள் என்னை உதறி, ரொம்ப காலம் ஆகிவிட்டது. இனி, அவர்களுக்கு என்னைப் பற்றி கவலையில்லை,” என்றாள்.
கல்யாணத்தைப் பதிவு செய்த அதிகாரி, இவர்களைப் பார்த்து, “”என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில், வீட்டை விட்டு ஓடி வந்து, கல்யாணம் செய்து கொள்ளும் சிறு வயதினரையே பார்த்திருக்கிறேன். முதன் முறையாக, இப்போது தான், திருமணத்தின் முழு அர்த்தம் புரிந்து, துணைக்காகத் திருமணம் செய்து கொள்பவர்களை பார்க்கிறேன். <உங்களுக்கு திருமணம் செய்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்ற போது, கிருஷ்ணனும், சுபத்ராவும் சிரித்தனர்.
– கிரிஜா ஜின்னா (ஆகஸ்ட் 2012)