தீர்வு புலப்பட்டபோது….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 9,510 
 
 

‘பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான். அவன் கூடவே உள்ளே வந்த ரசிகர் மன்றத் தலைவனும் அவனுடைய பால்ய நண்பனுமான சண்முகம் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

சடாரென்று ‘மைக்’ இப்போது மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் கட்சிகளில் ஒன்றான ‘ஜனமித்ர’ கட்சிப் பிரமுகர் கிஷோரின் முகத்துக்கெதிரே நீட்டப்படுகிறது.

“சொல்லுங்க! சென்னையில் ‘பூர்ணசந்திரன்’ கட்சிப் பிரமுகர் சின்னதம்பி, ’33 சதவிகிதம் மகளிர் ஒதுக்கீட்டில் உள்கட்ட ஒதுக்கீடு’ பற்றி எங்கள் சேனலுக்கு அளித்த பேட்டியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

பாராளுமன்ற கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போய் ஹாயாக ஒரு ‘சாயா’ குடிக்கலாம் என்று கிளம்பியவரை வழியிலேயே பிடித்து விட்டார்கள் போலும்!

அவருடைய ஒரு சில நொடி மௌனத்தை கூட பொறுக்க முடியாமல், “அவர் சொன்னது சரின்னு நெனைக்கிறீங்களா, இல்லே சரி இல்லேன்னு நெனைக்கிறீங்களா?” அந்த முழு நெர செய்தி சேனலின் இளவயது பெண் நிருபர் இடது கையால் முன் நெற்றியில் வந்து விழுந்த தலைமுடியை ஒதுக்கியபடியே வலது கையால் மைக்கை மீண்டும் கிஷோர் எதிரே நீட்டினாள்.

‘சரியில்லை’ என்றால் தோழமைக் கட்சியுடன் விரோதம் வந்து விடும். ‘சரி’யென்ற தொனியில் பேச கட்சி மேலிடத்தின் அனுமதி வேண்டும். மற்றபடி அவருக்கென்று தனியாக ஏது அபிப்ராயம்?

சட்டென்று எந்த உணர்ச்சியும் வெளிப்பட்டு விடாமல் கவனமாக காமிராவுக்கு முகத்தைக் காட்டினார் கிஷோர்.

“நீங்க சொன்ன விஷயம் இன்னும் எங்கள் கட்சித் தலைமையின் கவனத்திற்கு வரவில்லை” புன்னகை மாறா முகத்தோடு தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பேசினார்.

இப்படி மையமாக ஒரு பதில் சொன்னால் ஆல் பவர்ஃபுல் அக்கப்போர் செய்தி சேனல் அவரை சும்மா விட்டு விடுமா?

“சின்னதம்பியின் பேட்டியை நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? அது மகளிர் உள்கட்ட ஒதுக்கீடு விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடுக்கு எதிராக உள்ளது என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றாள் அந்த இளம் பெண் விடாப்பிடியாக.
எதிராளியை சிந்திக்கவே விடாமல் சிரித்த முகத்தோடு தந்திரமாகப் பேசி வலையில் சிக்க வைக்கும் மீடியாக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு கூறினாலும், அந்த நொடி ஊர் உலகமெல்லாம் நம்மைப் பார்க்கிறது,, நம் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பு சிலிர்ப்பூட்ட, சிலர் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஏதாவது உளறி விடுவதும் உண்டு.

அந்த செய்தி சேனல், பிறகு, அந்த ‘உளறலை’ வெகு அக்கறையாகத் தூக்கிக்கொண்டு போய் கூட்டணியிலுள்ள மற்ற கட்சித் தலைவர்களின் அபிப்ராயங்களை சேகரித்துக் கொண்டு, பிறகு முதலில் கருத்து சொன்ன சின்னதம்பியிடமே இவைகளைப் பற்றி கருத்து கேட்பது.. . . . . . . . . . . . . .

‘நாடு முழுவதும் இதே பாணியில் ஒருவர் சொல்வதை மற்றவரிடம் சொல்லி அதைப் பற்றி அபிப்ராயம் கேட்பதையே தொழிலாகக் கொண்டு, இருபத்தி நான்கு மணி நேரமும் சதா வாயில் கோலைப் போட்டு நோண்டி வார்த்தைகளை வரவழைப்பது தானே செய்தி சேனல்களின் முக்கியமான பணியாக இருக்கிறது? இந்த அரசியல்வாதிகளும் இதுக்கு ஈடு கொடுத்துக் கிட்டுத் தானே இருக்கிறாங்க? ஒருவருக்கொருவர் முகம் பார்க்காமல், நேரடியாகப் பேசாமல் மீடியா மூலமாகவே தந்திரமாக அரசியல் பண்ணுவதற்கு இந்த செய்தி சேனல்களை சில சாமர்த்தியமான அரசியல்வாதிகள் உபயோகப் படுத்திக் கொள்வதையும் தினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?’

“யப்பா!” என்று பிரமிப்போடு பெருமூச்சு விட்டான் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’.

“யாரோ எழுதிக் கொடுத்ததை பேசி நடிச்சிட்டுப் போறோம். எங்களுக்கெல்லாம் ‘சிறந்த நடிகன்’ னு விருது குடுக்கிறாங்க. ஆனா உண்மையா தலை சிறந்த நடிகர்கள் இந்த அரசியல்வாதிகள் தாம்ப்பா. ஆஸ்கார் உட்பட எல்லா விருதுகளும் கண்டிப்பா இவுங்களுக்குத் தான் போகணும்” என்றான் பக்கத்தில் அமர்ந்திருந்த சண்முகத்திடம்.

“இப்போதைக்கு இந்த உலகத்தில் மிக லாபகரமான வியாபாரம் அரசியல் தான் ஆறு! அவங்க காட்டுற சொத்துக் கணக்கே அதை நிரூபணம் செய்வது போல் தானே இருக்கு? இதே செய்திச் சேனல்ல அவங்க போன தேர்தல்ல என்ன கணக்கு காட்டினாங்க, இப்போ சொத்து விவரம் என்னன்னிட்டு காட்டிக்கிட்டுத் தானேயிருக்காங்க? கையில ஒத்தை பைசா இல்லாம அரசியலுக்கு வந்தவங்க எல்லாம் இப்போ கோடீஸ்வரனாத்தானே இருக்காங்க? அரசியல்வாதிங்க லாப நஷ்ட கணக்கு தெரிஞ்ச தேர்ந்த வியாபாரிகளாகவும் இருக்கணும். அதே சமயத்தில தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜனங்களுக்கெதிரே நல்லவனாக நடிக்கத் தெரிஞ்ச தலை சிறந்த நடிகனாகவும் இருக்கணும். உள்ளூர எதிராளியை எப்படி மடக்கலாம், வீழ்த்தலாம், பதவியைத் தக்க வைத்துக் கொள்ள என்ற எண்ணம் ஓடிக் கிட்டே இருந்தாலும், கிளிசரின் இல்லாமலேயே ஜனங்க எதிரே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடத் தெரியணும். மற்றபடி இவங்க வாழ்க்கைக்கு பெரிய கொள்கை பிடிப்பு எதுவும் தேவையில்லை.” என்றான் சண்முகம்.

“இவ்வளவு அழகா அரசியலை புரிஞ்சு வெச்சிருக்கிற நீயும் ஏன் மத்தவங்களைப் போல என்னை அரசியல்ல குதிக்கச் சொல்லி வற்புறுத்தறே? இது நியாயமா, சொல்லு!” என்றான் ஆறுமுகம் அங்கலாய்ப்புடன்.

“இது காலத்தோட கட்டாயம் ஆறு! காலம் காலமாகவே இங்கே ஒரு நடிகன் பேரும் புகழும் சம்பாதிச்சிட்டான்னா உடனே அதை அரசியலுக்கு நுழைவாயிலா வச்சிக்கிட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் நன்மை பண்ணணுங்கற அபிப்ராயம் இங்கே ஜனங்க மத்தியில, மீடியாக்காரங்க மத்தியில உலாவிக் கிட்டு தானே இருக்கு? சினிமாவில மட்டும் தீய சக்திகளை போராடி ஒழிச்சா போதுமா, நிஜ வாழ்க்கையிலேயும் ஏன் செய்யக் கூ£டாதுன்னு ஜனங்க நெனைக்கிறாங்களோ என்னவோ?” என்றான் சண்முகம் சிரித்தபடி.

“பார்த்தியா பார்த்தியா? நீயும் சேர்ந்து கிண்டல் தானே செய்யிறே என்னை?” என்றான் ஆறுமுகம் பரிதாபமான முகத்தோடு.

அதற்குள் அக்கப்போர் சேனலில் அடுத்த குடுமிப்பிடி சண்டை
ஆரம்பித்துவிட,

“அங்கே பார்! அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் அத்தனையும் எதிராளியை மடக்க, ஒரு விஷயத்தை திசை திருப்பி விடத்தானே உபயோகப்படுகிறது? ஜனங்களுக்கு எந்த நன்மையாவது மனம் வந்து செய்யறாங்களா? யப்பா! கபடம் வஞ்சகம் நிறைந்த இவங்க வேணா இதைத் தங்கள் குலத்தொழிலா செய்யலாம். நம்மால முடியாதுப்பா, ஆளை விடு!” என்றான் ஆறுமுகம்.

ஆனால் ஆறுமுகத்தின் உள் மனதில் எப்போதும் ஒரு நெருடல்……… தான் யாரால் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ, அந்த மக்களுக்குத் தன்னால் ஆன நன்மைகளை எந்த ரூபத்திலேயாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகம்…….. இருந்து கொண்டேயிருப்பதை அவனுடன் கூடவே இருக்கும் சண்முகம் நன்றாக அறிவான். ஆறுமுகத்தின் மென்மையான சுபாவத்திற்கும் நேர்மையான குணத்திற்கும் அந்த நன்மைகளைச் செய்வதற்கான களம் அரசியல் அல்ல என்பதும் உண்மைதான்.

ஆனால் இங்கே எல்லாவற்றையும் விட பலம் பொருந்தியது அரசியல்! பலவான்கள் கட்சிக்காரர்கள்! ஒரு தனி மனிதனாக இருந்து கொண்டு ஜனங்களுக்கு ஏதாவது நன்மையைச் செய்ய சாமான்யமாக விட்டு விட மாட்டார்கள். ‘இவன் ஏதோ ஒன்றை செய்து விட்டு ஜனங்களிடம் நல்ல பெயர் எடுத்து விட்டால், ஓட்டுப் போடும் ஜனங்கள் நம்மிடமும் அதை எதிர்பார்ப்பார்களே’ என்ற நினைப்புடனேயே அவனை சதா சீண்டி, தூண்டி விட்டு வாயிலிருந்து ஏதாவது வார்த்தைகள் வருமா என்று பார்ப்பார்கள். பிறகு அந்த வார்த்தைகளைத் தூக்கிக்கொண்டு மக்களிடையே சென்று, ‘இவன் கெட்டவன், சூழ்ச்சிக்காரன்’ என்று கூட்டம் போட்டு அறிக்கை விட்டு அரசியல் ஜாலங்கள் செய்து மோடி மஸ்தான் வித்தையெல்லாம் காட்டுவார்கள்.

ஆனால் ஆறுமுகம்அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவனுடைய லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

“இவுரு கண்டி இன்னித் தேதியில ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும். அப்புறம் பாரு! எப்படி தமிழ்நாடே கடல் மாதிரி ஆர்ப்பரிச்சிக்கிட்டு இவர் பின்னால ஓடி வருதுன்னு!” என்றான் வட சென்னை ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ரசிகர் மன்றத் தலைவர் ஏழுமலை.

‘ரசிகர்கள் மாதிரி நம்மால உணர்ச்சி வசப்பட்டு ஒரு முடிவெடுக்க முடியாதே. பழத்தையும் தின்று கொட்டையையும் போட்ட பழுத்த அரசியல்வாதிகளை நம்மால சமாளிக்க முடியுமா? இன்றைய தேதியில கட்சி ஆரம்பிக்கிற மற்றவர்கள் நிலைமை என்ன என்பதையும் பார்த்துக் கிட்டுத் தானே இருக்கிறோம்? அரசாங்கம், அரசியல் என்பது ஜனங்களுக்கு நன்மையை செய்வதற்கு என்பதெல்லாம் போய் இப்போது அவரவர்கள் பிழைப்பதற்கு ஒரு வழியாக அல்லவா உள்ளது? இந்த சூழ்நிலையில நம்மால தாக்குப் பிடிக்க முடியுமா? நாலையும் யோசிச்சுத் தானே காரியத்தில் இறங்க முடியும்?’ என்ற நினைப்பு மனதில் ஓட, அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் சண்முகம்.

இரண்டு வருடங்கள், இரண்டு முழு நீள வருடங்கள் ஆறுமுகம் பாடுபட்டு உழைத்து நடித்த படம் இன்று ரிலீசாகிறது. ஆறுமுகத்தின் கணிப்புப்படி இதுவும் ஒரு ‘சூப்பர் ஹிட்’ படந்தான். ரசிகர்களின் நாடித் துடிப்பை நேரிலேயே கண்டு விடும் ஆர்வத்துடன் அவனும் சண்முகமும் கறுப்பு பர்தா போட்டுக் கொண்டு சென்னையில் அண்ண சாலையிலுள்ள ஒரு முக்கியமான தியேட்டருக்குப் போய் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்தார்கள்.

தியேட்டர் வாசலில் காலையிலேயே ‘கட் அவுட்டிற்கு’ பால் அபிஷேகம் ஆகி விட்டது. துணித்திரை விலகி வெள்ளித் திரை தெரிந்ததுமே மலர்கள் தூவப்படுகின்றன. ‘ஆக்ஷன் ஆறுமுகத்தின்’ முகம் திரையில் தெரிந்ததுமே சிலர் நாணயங்களை வீசுகிறார்கள். மலர் மாலைகள் வீசப்படுகின்றன. ஆறுமுகம் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தாலே, ஆண் பெண் பேதமின்றி முன்னிருக்கை ரசிகர்கள் ‘ஹோ’ என்று எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

எப்போதும் செய்யும் ஆர்ப்பாட்டந்தான்! எத்தனையோ வருடங்களாக நடக்கும் விஷயங்கள் தான்! ஆனால் இன்று ஏனோ ஆறுமுகத்தின் மனதில் நெருடல் அதிகமாக இருக்கிறது.

‘இந்த ரசிகர்கள் இல்லாமல் நிச்சியம் ஆறுமுகம் என்கிற சாமான்ய மனிதன் பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகமாக’ உருவெடுத்திருக்க முடியாது. இந்த அன்பிற்கு, இவர்கள் என் மேல் வைத்திருக்கும் பிரதிபலன் கருதாத பாசத்திற்கு என்னால என்ன கைம்மாறு செய்து விட முடியும்?’ அவன் உள்ளம் ஊமையாக அழுதது.

பெயர் வெளியே தெரியாமல், லட்சம் லட்சமாக ஏழை எளியவர்களுக்கு படிப்பிற்கு, திருமணத்திற்கு, மருத்துவச் செலவுகளுக்கு உதவி புரிந்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அது மட்டும் போதுமா? தன்னால் இவர்களுக்கு இன்னும் ஏதோ செய்ய முடியும், ஆனால் செய்யத் தோது படவில்லை என்கிற நெருடல் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறதே?

மனம் அமைதியிழக்கும்போதெல்லாம் செய்வது போல சட்டென்று தன் பிரத்யேக அறைக்குச் சென்று தியானத்தில் அமர்ந்தான்.

தியானம் முடிந்து அமைதி தவழும் முகத்தோடு வெளியே வந்தபோது, ‘பளிச்’ சென்று மனதில் அந்த எண்ணம் உதயமாயிற்று.

‘இதை…இதையே ஏன் இளஞர்களிடம் எடுத்துச் செல்லக்கூடாது?’

துடிப்பும் ஆர்வமுமாக சண்முகத்திடம் தன் எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்டபோது அவன் உடனே உற்சாகமானான்.

“ரொம்ப நல்ல விஷயம் ஆறு! நாமளும் இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த நல்லதா ஏதோ செஞ்சோங்கிற மனத் திருப்தி நிச்சியம் நமக்கு ஆயுசுக்கும் இருக்கும். இதை எங்கிட்ட விட்டுரு. நா பார்த்துக்கிறேன்.” என்றான்.

அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களிலும் ஆறுமுகத்தின் புதுப்பட ரிலீஸ், அது அடையப் போகும் வெற்றியைப் பற்றிய செய்திகள்தான்! கூடவே ஒரு உபரித் தகவலாக ஆறுமுகம் தன் உடல் நலத்தையும், மனநலத்தையும் எவ்வாறு பேணுகிறான் என்கிற விஷயம் அவனுடைய யோகாசிரியரின் பெயர் விலாசத்தோடு வந்தது.

சினிமா பார்க்க வர தூண்டுகோல் இருப்பபது போல மற்ற நல்ல விஷயங்களுக்கும் ஒன்று வேண்டுமே? சண்முகத்தின் கணிப்பு சரியாகவே இருந்தது.

அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோவிலில் உறையும் அம்மன் தான் தனது இஷ்ட தெய்வம் என்று எத்தனையோ வருடங்கள் முன்பு ஒரு பத்திரிகை பேட்டியில் ஆறுமுகம் குறிப்பிட்டிருந்தான். உடனே சாமி கும்பிட அங்கே ரெகுலராக போக ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்களான இளைஞர்கள். இன்றைய தேதியில் அந்த ஊர் பெரிய டூரிஸ்ட் சென்டராகி விட்டது. அதே போல இன்றைய செய்தித்தாட்களில் வந்த செய்தியைப் படித்ததும் ரசிகப் பட்டாளம் உடனே அந்த யோக நிலையத்திற்குப் படையெடுத்தது.

“ஓ! நீங்க எல்லாம் ஆறுமுகத்தோட ரசிகர்களா? வணக்கம், வாங்க! உட்காருங்க!” அந்தப் பெரியவர் அவர்களை கை கூப்பி வணங்கி வரவேற்றார்.

‘நம்ப தலைவரே பெரியவரு! அவருக்கும் குரு இவரு! இவர் போய் நம்மை வணங்கி….’ ரசிகர்கள் விக்கித்துப் போனார்கள். சத்தமே யெழாமல் பணிவாக அமர்ந்தார்கள்.

“சரியான வயசில தான் ‘வாழும் கலை’ என்கிற இந்த மனவளக்கலை பயில வந்திருக்கிறீர்கள். இந்த வயசில உங்க உடம்பையும் மனசையும் நெறிப்படுத்தினா உங்க வாழ்க்கையே அற்புதமா மாறிடுமே?”

ரசிகர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அவர் கனிவான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் இல்லை. அது மட்டும் இல்லே. சென்னையில் எல்லா பகுதிகளிலும், அப்புறம் தமிழகமெங்கும் இந்த யோக நிலையத்திற்கு கிளைகள் உள்ளன. நீங்க இங்கே தான் வரணும்னு அவசியமில்லே. அவரவர் வீட்டுக்கருகிலேயே உள்ள கிளையில் பயிற்சி பெறலாம். இளைஞர்களான நீங்கள் எல்ல நலங்களையும் பெற என் ஆசிகள்!”

ஒரு நடிகனின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்ல விஷயங்களையும் விலாவாரியாக அலசுவதைத் தங்கள் கடமையாகக் கொண்டுள்ள பவர்ஃபுல் மீடியா, தினமும் ஆறுமுகத்தின்ஆயிரக்கணக்கான ரசிகர்கள் யோகா பயில தமிழகமெங்கும் உள்ள கிளைகளில் சேரும் விவரங்களையும், புள்ளி விவரக் கணக்கோடு தவறாமல் ஒளிபரப்பியது. ரசிகர் மன்றத் தலைவர்களெல்லாம் பொறுப்பெடுத்துக் கொண்டு மன்ற உறுப்பினர்களுக்கு தலைவரின் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கித்தருவதைப் போல, அந்தந்தப் பகுதி உறுப்பினர்களெல்லாம் யோகா வகுப்பில் சேருகிறார்களா என்பதையும் தங்கள் பொறுப்பாக எடுத்துக் கொண்டு கவனித்தார்கள்.

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் யோகா பயிலப்போவதையும் வீட்டில் உடல் நலம், மன நலம் பேணும் விவரங்களையும் பற்றி பூரித்த முகத்தோடு பேட்டியளித்தார்கள். ‘இப்பல்லாம் வெட்டியா ஊர் சுத்தாம ஒழுங்கா படிக்கணும் ஒழுங்கா வேலைக்குப் போகணும்னு நெனைக்கிறாங்க. எம் புள்ள குடியைக் கூட வுட்டுட்டான். இதுங்களுக்கு நல்லதெல்லாம் கத்துக் குடுத்து வாழ நல்ல வழியைக் காட்டின அவுரு நல்லா இருக்கணும்னு’ மறக்காமல் மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார்கள்.

தன்னைப் பின்பற்றி வாழத் துடிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தன்னாலும் ஏதோ செய்ய முடிந்தது என்பதை நினைத்து ஆறுதல் அடைந்த ஆறுமுகத்தின் மனதில் எத்தனையோ வருடங்களாக இருந்த நெருடல் விடை பெற்றுக் கொண்டு போக, வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதி உணர்ச்சி அவனுள் விரவிப் பரவியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *