கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 15,618 
 
 

”சீ, மணி என்ன ஆச்சு இன்னமுமா தூக்கம், எருமை மாட்டு தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே வேணு எதிர் அறையில் இருந்து கதவை திறந்துகொண்டு, ராதை படுத்திருக்கும் அறையில் நுழைந்தான்.

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி, தலையில் ஓர் ஈரத்துணியை போட்டுக் கொண்டு அயர்ந்த தூக்கத்தில் இருந்த ராதை, தற்செயலாக அப்போதுதான் திரும்பி படுப்பதற்காக புரண்டாள். ”எருமை மாட்டு தூக்கம்” என்ற கடைசி வார்த்தையைக் கேட்டு சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். கலைந்து கிடக்கும் தலை மயிரை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிய வண்ணம், படபடவென்று எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியில் பார்த்தாள். வெயிலின் அடையாளத்தைப் பார்த்து மணி நாலு என்பதை அறிந்து கொண்டாள். குழாயடியில் போய் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைந்து விட்டாள். அடுப்பை பற்றவைத்து காப்பி போட்டாள். ‘ஐயோ! மணி நாலு ஆயிற்றே. அவர்கள் வெளியில் போக வேண்டுமே’ என்று விசிறியால் அடுப்பை வீசிக்கொண்டே அதன் முன் உட்கார்ந்தாள். ‘அவர் புறப்பட்டு விடுவாரோ’ என்று அடிக்கடி அவ்விடத்தில் இருந்தபடியே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவ்வளவு அவசரமாக வேலையில் கவனம் இருந்தும், வேணு சொல்லிக்கொண்டு வந்த ‘எருமை மாட்டு தூக்கம்’ என்ற வார்த்தையும் அடிக்கடி அவள் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. ”ஆமாம்! நிஜந்தான். எருமை மாட்டு தூக்கம், பாழுந் தூக்கம், என்றைக்குத்தான் என்னை விட்டுக் தொலையுமோ; அல்லது முழிப்பில்லா தூக்கம் என்றுதான் வருமோ” என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அடுப்பை வீசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் காப்பியும் தயாராகி விட்டது; காப்பியை வடிக்கட்டி, பால் சர்க்கரை சேர்க்க வேண்டியதுதான் பாக்கி. வேணு சட்டை போட்டுக்கொண்டு வெளியில் போக புறப்பட்டு விட்டான்.

”கொஞ்சம் இருங்கள், இதோ காப்பி ஆகிவிட்டது. கொண்டு வருகிறேன்” என்று காப்பியைச் சேர்க்கப் போனாள்.

அதற்குள் வேணு ”ஆமாம் மணி ஐந்து அடிக்கப் போகிறது. எனக்கு அவசரமாக இன்று வெளியில் போகவேண்டும் என்று எப்பவோ சொன்னது” என்று சொல்லிக்கொண்டே வாசற்படிவரை வந்து விட்டான்.

ராதை சட்டென்று சென்று அவன் முன் பாய்ந்து, கதவை மூடினாள். ”காப்பி ஆகிவிட்டது எடுத்து வருகிறேன். சூடு ஜாஸ்தியாக இருந்ததினால் ஆற்றிக்கொண்டு இருந்தேன். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றாள். அவள் குரலில் சிறிது கோபமும் வருத்தமும் கலந்திருந்தது. எப்போழுதாவது ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டால், கெஞ்சி மன்றாடி, அவன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கும் ராதைக்கு இன்று கோபம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது. ‘’எவ்வளவு நேரம் ஆனாலும் இன்று காப்பி சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்’’ என்று மெதுவாக சொல்லிக் கொண்டே, காப்பி எடுத்து வருவதற்காக அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

அவள் அடுப்பங்கரைக்குள் சென்றதும், ‘சீ இந்தப் பிடிவாதம் ஆகாது. அதைத்தான் இன்று பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டு வெளியில் போக கதவைத் திறந்தான் வேணு.

”இதோ கொண்டு வந்துவிட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று சொல்லிக்கொண்டே, ராதை கையில் காப்பியோடு அவன் அருகில் வேகமாக வந்தாள்.

”உங்கள் உத்தரவுப்படிதான் நடக்க வேண்டுமோ, அதைத்தான் இன்று பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, வேணு வெளியில் சென்று விட்டான்.

ராதைக்கு கோபம், தூக்கம் இரண்டும் விஷக்கடி போல் உச்சஸ்தாயில் ஏறிவிட்டது. கதவை ‘படார்’ என்று அடைத்துத் தாழ்ப் போட்டாள். காப்பியை தானும் சாப்பிடாமல், தர்மாஸ் பிளாஸ்கில் விட்டு வைத்துவிட்டு, கூடத்தில் கிடந்த சாய்வு நாற்காலியில் வந்து படுத்துக்கொண்டாள். ”சரி, போய் வரட்டுமே, எனக்கென்ன வந்தது. என்னைக்கோ ஒருநாள் கொஞ்சம் தெரியாமல் தூங்கிவிட்டால், இந்த மாதிரி தண்டனை. சீ, என்ன பிழைப்பு. இதைவிட எங்கேயாவது போய் தொலைந்தால் நம் இஷ்டம் போல் இருக்கலாம். யாருக்காக பயப்பட வேண்டும். வருகிறது வரட்டும்; இன்று இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டியது. எத்தனை நாளைக்கு இப்படி மனசிலே வைத்துக்கொண்டு இருக்க முடியும்” என்று மனதை ஒருவிதம் சமாதானப்படுத்திக்கொண்டு, இரவு சாப்பாட்டுக்கு தயார் பண்ணுவதற்காக மறுபடியும் வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

இரவு சாதம்கூட சாப்பிடுவாரா என்பதே சந்தேகம் என்றாலும், நம் கடமையை நாம் சரியாகச் செய்து வைப்போம். பிறகு அவாள் அவாள் இஷ்டம்போல் செய்யட்டும்’ என்ற நினைப்பு.

அவள் பம்பரம் மாதிரி ஓடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மனசில் கசப்பிருந்தால் அது சோர்வுக்கும் சுறுசுறுப்புக்கும் தூண்டுதல்தானே. அவர்கள் வருவதற்குமுன், சமையலை முடித்துவிட வேண்டும் என்ற பல்லவி அவளது உள்ளத்தில் ஓயாது ஒலித்தது.

இரவு

ஏழு மணி ஆயிற்று. வேலைகள் எல்லாம் முடித்து, கை கால் கழுவிவிட்டு, கூடத்து தூணில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். வேணு வரும் சமயம் ஆயிற்று. நேரம் ஆக ஆக அவள் மனம் படபடவென்று அடித்துக்கொண்டே இருந்தது. ‘எதற்காக பயப்படுகிறோம்’ என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அறிந்து யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருந்தும், இந்தக் காரணமில்லா பயப்பிராந்தி எதற்காக ஏற்படுகிறது! – என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பது போல், அசைவற்று நாடியில் கை வைத்து மேல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மச்சுப் படியில் செருப்புச் சத்தம் கேட்டது. ”அவர்கள்தான் வந்து விட்டார்கள். வரும்போது அவர் எதிரிலேயே படக்கூடாது” என்று எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

வீட்டுக்குள் வந்த வேணு நேராக அறையில் சென்று உடைகளை மாற்றிவிட்டு, கை கால் கழுவிக்கொண்டு, எதிர் அறையில் சென்று ஜன்னல் அருகில் கிடந்த சாய்வு நாற்காலியில் படுத்தான். அவனுடைய செய்கைகளை மறைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ராதைக்கு சந்தேகம் அதிகரித்தது. பிளாஸ்கில் விட்டு வைத்த காப்பியை எடுத்துக் கொண்டு வேணு இருந்த அறையில் நுழைந்தாள். ராதையைக் கண்டதும் வேணு சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து ”என்னது காப்பியா? சரி இப்படி எடுத்து வா’ என்று வெளியில் வந்துவிடப் பார்த்தான். அவன் முகம் ஏதோ குற்றம் செய்து விட்டது போலுள்ள தோற்றத்தைக் காண்பித்தது. தலைமேல் மலையே இடிந்து விழுந்தால் கூட சற்றேனும் பயம் என்பது தோன்றாத அவனுடைய நெஞ்சு, இன்று ராதையைக் கண்டதும் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஜன்னல் அருகில் சென்ற ராதை எதிர் வீட்டு வெளி தளத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்தபின்பே ராதைக்குச் சந்தேகம் முற்றும் தெளிவுபட தொடங்கியது. பல நாட்களாக அவள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த சந்தேகம். இன்று அவள் நேரிலேயே பார்த்துவிட்டாள். ஆனால் வேணு இப்படிப்பட்டவனாவென்று அவளால் நம்ப முடியவில்லை. தன் கண்ணால் பார்த்த பிறகும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வாள்!

ஒரு நாளும் தனிமையை விரும்பாத வேணு, இப்போது கொஞ்ச நாட்களாக தனியாக அந்த அறையில் சென்று இருப்பதும், அவள் அருகில் சென்றால்கூட என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வேலை இருக்கிறது என்று ஏதாவது எழுதுவது போலவும், படித்துக்கொண்டிருப்பது போலவும் இருப்பான். ஆனால், அவன் மனம் எந்த மாதிரி இருந்தது என்ற உண்மை இப்போதுதான் அவளுக்கு அர்த்தமாயிற்று. ஓரோர் சமயம் வேணுவிடமே ‘அது உண்மைதானா?’ என்று விசாரித்துப் பார்க்கலாம் என்று நினைப்பாள். என்றாலும் ‘சமயம் வரும்போது கேட்கலாம்’ என்று மனதை அடக்குவாள். அன்று ஜன்னல் அருகில் சென்ற அவள் வேணுவிடம் கேட்பதற்காக நெருங்கினாள். ஒரு வேளை கோபப்பட்டு காப்பியோ, சாதமோ சாப்பிடாவிட்டால் என்ன செய்வது என்ற பயம். சாவகாசமாக கேட்டுக்கொள்ளலாம் என்று காப்பியை எடுத்துக்கொண்டு வேணு நின்றிருந்த கூடத்துக்கு வந்து விட்டாள்.

காப்பியை அவனிடம் கொடுத்தாள். வேணுவும் ஒரு தடையும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். சாயங்காலம் வீட்டை விட்டு அவன் சென்ற மாதிரியில், இப்போது காப்பி சாப்பிடுவான் என்று ராதை சற்றேனும் எதிர்பார்க்கவில்லை.

காப்பி சாப்பிட்டு விட்டு வேணு ராதையை பக்கத்தில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டு, ஏதேதோ ஆபீஸ் விஷயங்களும் அது, இது என்று பேசிக் கொண்டிருந்தான்.

ராதைக்கு அவன் பேச்சில் சற்றும் மன நிம்மதியோ, சந்தோஷமோ தோன்றவில்லை. எங்கே தன் செய்கையைக் கவனித்து விட்டாளோவென்று சந்தேகப்பட்டு, தன்னை அந்த மாதிரி நினைத்தது தப்பு என்று நினைக்கும்படி செய்வதற்காக, இந்தப் பாசாங்கு வார்த்தைகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். எப்போது பேச்சு முடியும், சாப்பாட்டு வேலைகளை முடித்துக் கொண்டு நிம்மதியாகப் படுக்கலாம் என்று சகித்திருந்தாள்.

”மணி ஆயிற்றே, சாப்பிடுவோமா” என்றான் வேணு சிறிது நேரம் கழித்து.

‘‘ஓகோ, சாப்பிடுவோமே’’ என்று ராதை எழுந்தாள். இரண்டு பேரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு படுத்துக் கொண்டார்கள். படுக்கையில் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் வேணு தூங்கி விட்டான்.

அதிகாலை

ராதைக்கு தூக்கமே வரவில்லை. அப்படியும், இப்படியுமாக புரண்டுகொண்டே கிடந்தாள். பிறகு எப்போதுதான் தூங்கினாளோ; அவளுக்கே தெரியாது. கண்ணைத் திறந்து பார்த்தாள். அறையின் ஜன்னல் இடுக்கு வழியாக சூரிய ஒளி தெரிவதைப் பார்த்து நேரம் விடிந்துவிட்டது என்று வெளியில் வந்து நித்திய வேலைகளைத் தொடங்கி விட்டாள்.

”நேற்றுத்தான் ஆபீஸில் லீவு எடுத்திருக்கிறேன் என்றார்கள். இன்று ஆபீஸிற்குப் போக வேண்டுமோ, வேண்டாமோ… எழுப்பலாமா” என்று நினைத்தாள். பிறகுதான் அவளுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைவுக்கு வந்தது. ”தூங்கட்டும். காப்பி எல்லாம் தயரான பிறகு எழுப்பலாம்” என்று அடுப்பங்கறைக்குச் சென்று விட்டாள். அப்பொழுதும் அவள் மனம் அவர் மேல் இருந்த சந்தேகத்தைப் பற்றி, ‘இன்றாவது சந்தர்ப்பம் வாய்த்த வேளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று துடித்துக் கொண்டிருந்தது.

காப்பி பலகாரங்களைச் செய்து வைத்துவிட்டு, வேணுவை எழுப்பப் போனாள். ஆனால், படுக்கையில் அவனைக் காணவில்லை; அவள் வந்து எழுப்புவதற்கு முன்னமே அவன் எழுந்து எதிர் அறையில் சென்று, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, நாற்காலியில் படுத்திருப்பதைப் பார்த்தாள்.

அன்று காலையில், படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது சிறிது தெளிவு ஏற்பட்டிருந்த அவள் மனது மறுபடியும் ஒரே குழப்பத்தில் சென்று விழுந்தது. ‘முந்திய இரவுதான் இதற்கு என்ன செய்வது’ என்று வெகு நாழிகைவரை நினைத்துப் பார்த்தும் ஒருவழியும் தெரியாமல் விதி போல நடக்கட்டும் என்று சமாதானப்பட்டாள். ஆனால் மறுபடியும் மறுபடியும், வேணு சந்தேகப்படும்படி நடந்துகொள்வதைப் பார்க்க அவளால் சகிக்க முடியவில்லை. சரி ‘காப்பி ஆச்சு’ என்றுகூட சொல்ல வேண்டாம், எப்போதான் வருகிறார்கள் பார்போமே’ என்று பேசாதிருந்து விட்டாள்.

சிறிது நேரம் சென்று அவனாகவே வெளியில் வந்தான். ”ராதை ராதை!” என்று அழைத்தான். ராதை பதில் பேசாமல் அவன் அருகில் வந்தாள். அவனுக்கு வேண்டிய சிற்றேவல்களை வழக்கம்போல் செய்தாள். அவனிடம் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவன் நோக்கம் அறிந்து, அவன் சொல்லாமலே அவள் அன்று வேலைகள் எல்லாம் செய்தாள்.

மத்தியானம்

மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் வேணு அந்த அறையில் சென்று ஒரு பாயை எடுத்து விரித்துப் படுத்துக்கொண்டான். ராதை சாப்பாடு முடிந்து வேலைகள் எல்லாம் ஆனபிறகு, வேணு இருந்த அறையில் நுழைந்தாள். அவன் பார்வையில் படும்படி சிறிது தள்ளி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். வேணு எதோ ஒரு புஸ்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். ராதை அவ்வறையில் நுழைந்ததைக்கூட கவனியாததுபோல் இருந்தான். ராதை இன்று எப்படியும் தன் சந்தேகத்தைப்பற்றி வேணுவிடம் கேட்க வேண்டும் என்ற திட நம்பிக்கையோடு அவ்வறையில் நுழைந்தாள். வேணு திரும்பிக்கூட பார்க்காததைக் கண்டதும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ஆலோசித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

வேணுவுக்கு ராதை அவ்விடத்தில் இருப்பது பிடிக்கவில்லை. அவளை என்ன காரணத்தைச் சொல்லி வெளியேற்றுவது என்று வெகுநேரம் யோசனை செய்து பார்த்தான். சிறிது நேரம் சென்று அவன் கையில் இருந்த புஸ்தகத்தை மூடி வைத்துவிட்டு ராதையைப் பார்த்து,

”என்ன ராதை ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறாய், இங்கே என் பக்கத்தில் வந்து உட்காரேன்” என்று அருமையாக அழைத்தான்.

எதிர்பார்க்காவிதத்தில் வேணு அம்மாதிரி தன்னை அருமையாக அழைப்பதை பார்த்ததும் ராதைக்கு மனதில் சிறிது மகிழ்ச்சி தோன்றவே, தானாகவே அவள் கால்கள் எழுந்து வேணுவின் அருகில் சென்று உட்காரும்படி செய்துவிட்டது. அவன் அருகில் சென்று உட்கார்ந்த பிறகுதான் அவள் தன்னையும் மீறிச் சில சந்தர்ப்பத்தில் தன் மனம் சாய்ந்து செல்வதை உணர்ந்தாள். பெண்கள் மனதை எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சில சமயத்தில் அன்பு வார்த்தைகள் அவர்கள் மனதை தளர விட்டு விடுகிறதே” என்று பரிதாபப்பட்டுக் கொண்டாள்.

கூர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.

”என்ன ராதை, பேசாதிருக்கிறாயே, ஏன் தூக்கம் வருகிறதா? அப்படியானால் போய்ப் படுத்துக்கொள்ளேன்; ஏன் வீணாக இருந்து கஷ்டப்படுகிறாய்” என்று அவள் கன்னத்தை தடவிக்கொண்டு சொன்னான்.

”ஆமாம், தூக்கம்தான் குறைச்சல்! அன்று ஒரு நாள் பகல் தூங்கியதற்குக் கிடைத்த தண்டனை போதாதா?”

”ஏன் என்ன பிரமாத தண்டனை. தண்டனையுமில்லை, ஒன்றுமில்லை. எனக்கு அவசரமாக வெளியில் போகவேண்டி இருந்தது. போனேன். நான் இருந்து காப்பி சாப்பிட்டுவிட்டு போனால், நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆள் வெளியில் போய்விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் அவசரமாகப் போய்விட்டேன். அதற்கென்ன பிறகு வந்து சாப்பிடவில்லையா? அதுக்கா இவ்வளவு கோபம் உனக்கு! அதுதான் இரண்டு நாட்களாக ஒருமாதிரி இருக்கிறாய். ஓகோ இப்போதுதான் அர்த்தமாச்சு.”

”ஒரு நாளைக்கு என்னவோ கொஞ்சம் தெரியாமல் தூங்கி விட்டால், அதற்கு எவ்வளவு கோபம் வந்து விட்டது உங்களுக்கு. அப்பா! போதும்!”

”யாருக்கு, எனக்கா கோபம்! சீச்சீ! கோபமுமில்லை ஒன்றுமில்லை. யார் சொன்னது கோபமென்று? என்னவோ அவசரமாகத்தான் போனேன் என்று சொல்லுகிறேனே!”

”ஆமாம் கோபம் இல்லாமத்தான் எருமை மாட்டுத் தூக்கம் என்று சொல்லுவார்களாக்கும்.”

”அடே அப்பா, இதுதானா? மத்தியானம் சாப்பிடும்போதே இன்று சாயங்காலம் மூன்று மணிக்கே வெளியில் போக வெண்டுமென்று சொல்லி இருந்தேனே, வந்து பார்த்தபோது இன்றும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஏதோ தெரியாது வாயில் வந்துவிட்டது. மனிதன் என்றால் எல்லா சமயமும் ஒரே மாதிரி இருப்பானா, ஏதோ கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக நீயும் கோபப்பட்டால் முடியுமா? யாராவது ஒருத்தர் தாழ்ந்து போனால்தான் சமாதானம் ஏற்படும். சரி, அதை ஏன் இன்று பேச வேண்டும். வேறு ஏதாவது பேசு” என்று வெற்றிலை போடுவதற்காக பாயில் எழுந்து உட்கார்ந்து, ஜன்னலில் இருந்த வெற்றிலைத்தட்டை இழுத்தெடுத்தான்.

எதிர் தளத்தில் அந்தப் பெண் நின்றிருந்ததைப் பார்த்து விட்டான். சடடென்று அவன் மனம் மாறியது. இன்னும் ஒரு தடவை அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ‘ராதை பார்த்துவிட்டால் என்ன நினைப்பாள்’ என்று மனதில் எழுந்த ஒரு சிறு கேள்வி; – அவளை அவ்விடமிருந்து ஏதாவது சொல்லி வெளியேற்றுவதுதான் சரி என்று அவனுக்குப் பட்டது.

”என் கண்ணே… ஏன் ஒருவருக்கொருவர் இப்படி மௌனமாக பேசாது உட்கார்ந்திருக்க வேண்டும். எனக்கு ஆபீஸ் வேலை கொஞ்சம் எழுத வேண்டி இருக்கிறது. நீ வேண்டுமானால் போய்ப் படுத்துத் தூங்கேன். நீ இங்கிருந்தால் எனக்கும் எழுத முடிகிறதில்லை. உன்னோடு பேசவேண்டும் என்ற ஆசை எழுத முடியாமற் செய்கிறது” என்று ஜாடையாக அவளை அங்கிருந்து போகும்படி செய்ய வழி பண்ணினான்.

”சாரி” என்று ராதை எழுந்திருந்தாள். அவள் மனம் அன்றும் பெரிய ஏமாற்றமடைந்தது. எப்போதான் இதற்கு முடிவு என்று பார்ப்போமே, அதிகம் பேசினால் கோபம் வந்து விடுமோவென்ற பயம். படுக்கப் போவதற்காகத் திரும்பினாள். அவள் கண்கள் ஏமாற்றப் பார்வையில் ஜன்னல் வெளியே நோக்கிற்று. அதே பெண், அதே தளத்தில் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். கூர்ந்து அவளையே சற்று நேரம் நோக்கினாள்; தனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று அந்தச் சிறிது நேரத்தில் அறிந்துகொண்டாள். அவள் மனம் குமுறிக்கொண்டு புகைந்தது; திரும்பி வேணுவைப் பார்த்தாள். அவன் விரித்த புஸ்தகத்தை நெஞ்சில் வைத்தபடி எதிர்ச் சுவரை நோக்கி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டாள்.

”சீ, என்ன பொய்! என்னை எப்படியும் இந்த அறையை விட்டு போகவேண்டும் என்று சொன்ன பொய்! ஏன்? ‘நீ இங்கிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. என் முன்னிருந்து எழுந்து போ’ என்ற ஒரு வார்த்தை போதாதா? இத்தனை ஆசை வார்த்தை! சீ அல்ல, பாசாங்கு வார்த்தை சொல்லி, பொய் சொல்லி ஏமாற்றுவானேன். இங்கேயேதான் இருப்பேன். எப்படியும் இன்று இரண்டில் ஒன்று அறிந்தாலன்றி இவ்விடத்தை விட்டு நகரமாட்டேன்” என்று மனதில் எழுந்த கோபத்தோடு உறுதி பண்ணிக்கொண்டு மறுபடியும் அவன் அருகில் உட்கார்ந்தாள்.

”ஏன் நீ படுக்கப் போகவில்லை, போய் படுத்துக்கொள்ளேன். நான் எழுதப் போகிறேன்” என்று வேணு லெட்டர் பேடையும், பௌண்டன் பேனாவையும் கையில் எடுத்தான்.

ராதை மௌனமாக அவனையே நோக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தது.

வேணு என்னமோ நாலு வரி எழுதுவதும் வெட்டுவதுமாக ஐந்து நிமிஷம் பொழுதை போக்கிப் பார்த்தான். ”பிடிவாதக்காரியிடம் அருமையாய்ச் சொன்னால் காரியம் நடக்காது,” என்று நினைத்து,

”ராதை, நீ போய் படுக்கணுமானால் படு; அல்லது ஏதாவது போய் படித்துக்கொண்டு இரு. நான் இதை எழுதி விட்டு வருகிறேன்.”

”ஆமாம்! எனக்குத் தூக்கம் வரவில்லை. ஏன் நான் இங்கு இருந்து விட்டால் என்ன? நான் என்ன உங்களை தொந்தரவு பண்ணுகிறேனா? என் பாட்டுக்குத்தானே உட்கார்ந்திருக்கிறேன்”.

”வீண் வார்த்தைகள் எதற்கு? நீ இங்கிருந்தால் எனக்கு எழுத முடிகிறதில்லை; போ என்றால், போயேன்” என்று சிறிது குரல் உயர்த்திச் சொன்னான் வேணு.

வேணுவினுடைய பிடிவாதத்தைப் பார்த்த ராதைக்கு கோபம் உச்சஸ்தாயில் ஏறிற்று. ”என்னதான் வருகிறது பார்ப்போம். இங்கிருந்து இப்போது எழுந்து போகக்கூடாது” என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு வேணுவைப் பார்த்து, ”முடியாது இவ்விடமிருந்து இன்று எழுந்து போகிறதில்லை” என்று அழுத்தமாக பதில் சொன்னாள்.

ராதையினுடைய இந்தப் பதிலைக் கேட்ட வேணுவுக்குக் கோபம் ஆவேசமாக வந்து பொங்கியது. ”எந்த விஷயத்திலும் பெண்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது. சீ கழுதே, எழுந்து போறயா இல்லையா, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவேன்!”

”அதைத்தான் இன்று பார்ப்போம். முடியவே முடியாது!”

”சீ அடம் பிடித்த கழுதை” என்று சட்டென்று வேணு எழுந்து, ராதையை இழுத்துக்கொண்டு வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

வெளியில் தள்ளப்பட்ட ராதைக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு நின்ற துக்கம், உடைபட்ட மதகு வெள்ளம் போல் கண்ணீராக அவள் புடவையை நனைத்தது. ‘இனி என்ன செய்வது?’ என்ற கேள்வியைக் கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சட்டென்று அவள் மனதில் பட்டது. ‘தற்கொலை ஒன்றுதான் இதற்கு ஆறுதல் அளிக்கும்’ என்று தோன்றிற்று.

அதற்கு வழி என்னவென்று நாலு பக்கமும் சுற்றி நோக்கினாள். அண்ணாந்து உயர நோக்கினாள். அவள் கண்ணில் ஒன்றும் படவில்லை. எப்படி தற்கொலை பண்ணிக்கொள்வது என்று ஒன்றன்பின் ஒன்றாக பல கேள்விகள் அவள் மனதில் எழ ஆரம்பித்தன. கயிறு கொண்டு உயிரைவிட வேண்டும் என்றால் ஒரு முழக் கயிறு கூட வீட்டில் இல்லை. மேலும் கயிறு தொங்கப் போடுவதற்கு ஒரு உத்திரமாவது சற்று சமீபத்தில் இருக்கிறதாவென்று பார்த்தாள். அதுவுமில்லை. விஷம், திராவகம் என்றால், நினைத்த உடனே எங்கிருந்து கிடைக்கும். என்ன செய்வது என்று அவள் மனம் எவ்வளவு போராடியும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. நேரம் ஆக ஆக அவள் தற்கொலை என்பது எளிதான காரியமல்லவென்பதை உணர்ந்தாள்.

ஆனால் துர்ப்பாக்கியவதியாக தான் இந்த உலகில் இருப்பதைவிட, சாவதே மேல் என்று பட்டது. இவ்விடத்தில் தற்கொலை செய்துகொண்டால் வேணு மேல் அந்த பழி விழுமே என்று நினைக்க அவளுக்கு தான் ‘ஒரு நீலி,’ என்று தோன்றியது. வேணுவுக்கு தன் மேல் அன்பு உண்டென்றால் அவன் வேறு ஒருத்தியை திரும்பிப் பார்ப்பானா? என்ற கேள்வி அவள் மனதில் எழும்போதுதான் அவளுக்கு சகிக்கமுடியாத துக்கம் மேலிடும். ஆனால், பல வருஷங்களாக அவனோடு இருந்து வாழ்க்கை நடத்தி வந்து கொண்டிருந்த ராதைக்கு, இப்போதுதான் அவன் பேரில் சந்தேகம் தோன்றியது. அதுவும் அவள் கண்ணால் நேரில் பார்த்தபிறகு! உலகத்திலேயே அவளுக்குப் பிரியமானது எது என்று கேட்டால் ‘வேணு’ என்ற உருவம்தான் அவள் அகக் கண்களில் சட்டென்று தோன்றும். ஐந்து நிமிஷம் வேணுவைக் காணாவிட்டால், அவள் உயிர் துடித்துக்கொண்டு இருக்கும். அவ்வளவு அபாரப்பட்ட அன்பு அவன் மேல் பதிந்து கிடந்தது. ஆனால், இந்த சந்தேகத்தில் கூட அவன் மேல் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டதே இல்லை. அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். ‘ஏன் என்னிடம் நேரில் சொல்லி, தன் விருப்பத்தை நிவர்த்தித்துக் கொள்ளக்கூடாது. என்னையேன் பொய் சொல்லித் துரத்த வேண்டும்?’ என்றுதான் பட்டது அவளுக்கு. தன் நினைப்புக்கு முடிவில்லாமல் போகிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம்; அன்பில்லாதவருடன் இருந்து எவ்வளவு நாட்கள் வாழ்க்கை நடத்துவது என்பது ஒரு பக்கம், ஒரு வழியும் தெரியாமல் வெளியில் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள். ”எவ்வளவு நேரம்தான் அழுது கொண்டிருப்பது. சீ, பெண்களுக்கு எதற்கெடுத்தாலும் அழுகைதான் முந்திவரும். அதனால் கண்ட பலன் என்ன?” என்று நினைத்து அவ்விடத்தை விட்டு எழுந்தாள். அவள் மனம் ‘வேணு அந்த அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான்’ என்று பார்க்க வேண்டும் என்று துடித்தது. கதவு இடுக்கு வழியாக நோக்கினாள். வேணு எழுந்து ஜன்னல் அருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளால் சகிக்க முடியவில்லை. ‘எங்காவது ஓடிப்போய் விடலாம், அவர் இஷ்டம் போல் இருக்கட்டும்’ என்று நினைத்தாள். ஒரு பேப்பர் எடுத்து வேணுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தாள். அவன் அறையில் இருந்து வெளி வந்ததும் அவன் கண்களில் படும்படியான ஒரு ஆணியில். அவள் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து மாட்டினாள். வெளியில் போவதற்குப் புறப்பட்டு விட்டாள். அவள் மனம் அலை மோதிக்கொண்டிருந்தது. கை கால் நடுக்கமெடுத்துக் கொண்டிருந்தது. தான் போகுமளவும், வேணு அறையை விட்டு வெளியில் வந்துவிடக்கூடாதே, என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள். வேணுவை ஒரு தடவை கடைசியாகப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மறுபடியும் அக் கதவு இடுக்கு வழியாக அவள் பார்வையை செலுத்தினாள். வெளியில் இறங்குவதற்கு அவளுக்குக் கூட கொஞ்சம் தைரியம் தோன்றும்படியாக, அவன் ஜன்னல் வழியாக அவன் மேல் விழும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தாள். ‘இனி பொறுத்தக் கொண்டிருப்பது சரி இல்லை’ என்று பட்டது அவளுக்கு. வெளியில் போனால் தன் கதி என்னவாகும் என்பதை அவள் சற்றேனும் எண்ணிப் பார்க்கவில்லை. புறப்பட்டு விட்டாள். ஆனமட்டும் கலங்கி மறியும் தன் மனதை கட்டுப்படுத்திப் பார்த்தாள்; முடியவில்லை ”கடவுள் விட்ட வழி, கால்கள் எவ்வழி நோக்கிச் செல்லுகின்றதோ அதே பாதையில் நடப்போம், பசிக்கோ களைப்புக்கோ ஒன்றும் சாப்பிடக் கூடாது; எவ்வளவு தூரம் நடக்க முடிகிறதோ நடப்போம். பிறகு எந்தயிடத்திலாவது சுருண்டு விழுந்தால் உயிர்தானே போகும்; போகட்டும்.” என்று மனதில் உறுதி பண்ணி கொண்டாள். ”ஐயோ நான் ஒரு பெண், எனக்கு வழியில் வேறு ஏதாவது அபாயம் ஏற்பட்டால் என்னை காத்துக்கொள்ளுவதற்கு உள்ள சக்தி எனக்கு வேண்டும்; அதற்கு என்ன செய்வது” என்று அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அலமாரியைத் திறந்து ஒரு நல்ல கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டாள்.”அன்றும், இன்றும், இனிமேலும் உள்ளன்போடு நேசிக்க வேண்டியது இந்த கத்தியைத்தான்” என்று அதை ஒரு விசேஷ பொருளென மதித்து, இரண்டு கண்களிலும் ஒத்தி, மடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மச்சுப் படிகளை விட்டு இறங்கி வாசல்படிவரை வந்தாகிவிட்டது.

அவள் மனதில் ‘நீ செய்வது தவறு’ என்று சிறு குரல் போல ஓர் எண்ணம் எழுந்தது. ‘சீ மனமே, நீயும் என்னை அடிமைப்படுத்தவா பார்க்கிறாய். முடியாது, முடியாது; உடல்தான் ஒருவருக்கு அடிமை. உயிர் ஒருவருக்கும் அடிமை இல்லை. அது எனக்குச் சொந்தம். ஆனால், எனக்கு அடிமை இல்லை. அதற்கு தன்னை எப்படி எப்படி காப்பாற்ற வேணுமோ, அதற்கு நன்றாகத் தெரியும். தன்படி செய்வதற்கு அதற்கு பூரண சுதந்திரம் உண்டு,’ என்று பலவாறாக நினைத்துத் தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

வாசற்படியில் நின்று, தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்று நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். வலக் கோடி கடைசியிலிருந்து ஒர் ஆள் அப்பாதை வழியாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஆள் போன பிறகு போகலாம் என்று சிறிது வாசல் பக்கம் இருந்து நாலு அடி உள்ளே வந்து கதவு மறைவில் நின்றாள்.

மாடியில் வேணு கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று வெளியில் சென்றுவிடப் பார்த்தாள். அந்த ஆள் அப்போதுதான் அவள் வீட்டுக்கு சமீபத்தில் வந்து கொண்டிருந்தான். ‘இந்த நேரத்தில் பரபரத்த தோற்றத்தோடு வெளியில் தனியாக இறங்குவதை, அந்த ஆள் பார்த்து விட்டால் சந்தேகித்து விடுவானோவென்று பயம். மறுபடியும் உள்ளே வந்து, அந்த கதவு மறையில் நின்றாள்.

மாலை

அறைக் கதவை திறந்து வெளி வந்த வேணு, நேராக குழாயடியில் சென்று, கை கால் கழுவிட்டு தாகத்துக்குத் தண்ணீர் கேட்பதற்காக ராதை எங்கே என்று பார்த்தான். ‘அவள் ஒரு இடத்திலும் இல்லை’ என்று அறிந்ததும் அவன் மனம் சட்டென்று உயர்ந்து, தாழ்ந்து நின்றது. ஒருவேளை பின்புறம் போயிருப்பாளோவென்று சந்தேகம். உரக்க இரண்டு மூன்று தடவை கூப்பிட்டுப் பார்த்தான். பதில் இல்லை. ‘எங்கு சென்றாளோ, யாரிடம் போய் என்ன கேட்பது?”

அவன் மனம் என்ன என்னவோ நினைக்கச் செய்தது. தன் தவறை நினைத்து வருந்தினான். ”சீ வருந்தி என்ன பயன்? வெளியில் எங்காவது சென்று பார்ப்போம்; ஏன் அவள் போக வேண்டும்? என் மேல் சந்தேகப்பட்டு விட்டாளோ? அது உண்மையானால் அவளை நான் இனி உயிரோடு பார்க்க முடியுமா? ஒரு சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத அவள், என் தவறைப் பார்த்து விட்டிருந்தால் எப்படி சகித்திருப்பாள். இன்று நான் நடந்து கொண்டதிலிருந்துதான் அவளுக்கு உண்மை தெரிந்து வீட்டை விட்டு போயிருப்பாள். ஐயோ, இனி எங்கே போய் அவளைத் தேடுவது? வழியில் யாராவது என்னவென்று கேட்டால், என்ன பதில் சொல்வது! இனி கால தாமதம் பண்ணக் கூடாது’ என்று அவசர அவசரமாகக் கொடியில் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான். தற்செயலாக திரும்பிய அவன் பார்வையில், கூடத்து கவரில் உள்ள ஓர் ஆணியில், அவள் அணிந்திருந்த நகைகளும், அதோடு ஒரு கடிதம் சொருகி இருப்பதையும் பார்த்தான்.

கடிதத்தை எடுத்துப் பிரித்து படித்தான். ‘நாலைந்து நாட்களாக என் மனதில் கிடந்து வாட்டிக் கொண்டிருந்த சந்தேகத்தை நேரில் பார்த்து அறிந்து கொண்டேன். இனி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். எனக்காக வருத்தப்பட வேண்டி வந்தாலும், தாங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் நான்காம் நாளுக்கு முந்தியே நின்று விட்டது. தாங்கள் இனி மேலாவது நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். இன்னும் உலகில் இருந்து இவ்வித கண்றாவிகளைப் பார்க்க என் மனம் இடந்தராது. அதனால் நான் என் இஷ்டம் போல் நடந்துக்கொள்ளுகிறேன். நான் செய்வது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள். என் காலத்திற்குப் பிறகேனும் நீங்கள் நல்லபடியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கைக்காவது நான் இந்த முடிவை சந்தோஷமாக எதிர் ஏற்கிறேன்,’ என்று எழுதி இருந்ததை வாசித்ததும், அவன் மனம் படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே அவன் சந்தேகித்தபடி முடிந்து விட்டதே என்று ரொம்ப வருத்தப்பட்டான். அவசர அவசரமாக மேல் வேஷ்டியை இழுத்து சரியாக தோளில் போட்டுக் கொண்டு, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘அவள் எங்கு அகப்பட்டாலும் அவள் காலில் விழுந்தேனும் மன்னிப்பு கேட்டு, அவளை வீட்டுக்கு அழைத்து வருவது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளிக் கிளம்பினான்.

கதவு மறையில் நின்றிருந்த ராதை, வேணுவின் வருகையை அவன் செருப்பு சத்தத்தில் இருந்து அறிந்துக் கொண்டாள். தான் அங்கு நின்றால் தன்னை வேணு பார்த்து விடுவான் என்று வெளியில் செல்வதற்காக மறுபடியும் தெருவை எட்டிப் பார்த்தாள். தெருவில் இன்னும் சில ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பதை பார்த்து, ‘சரி இப்போது சமயம் சரியாக இல்லை. இப்போது நான் வெளியில் சென்றால், அவரும் பின் தொடர்வார். பிறகு ஊர் அறிய இருவருக்கும் வீண் அவமானம். அவர் இப்போது நம்மை தேடித்தான் வெளியில் புறப்படுகிறார். அவர் வெளியில் சென்றபின் நாமும் வேறு பாதையாக அவர் கண்களில் படாமல் எங்காவது சென்று விடலாம்’ என்று நினைத்து கதவோடு ஒடுங்கி, அவர் பார்வையில் படாமல் மறைந்து நின்றாள்.

கீழே இறங்கி வந்த வேணு வாசலில் வந்து தெருவை இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தான். ஒன்று இரண்டு ஆட்களைத் தவிர அவன் தேடும் அல்லது தேடப் போகும் ஆளைத்தான் காணவில்லை. ஒரு தடவை வீட்டை திரும்பிப் பார்த்தான். வாசல் கதவு சிறு இடுக்கு வழியாக, ஒரு சிவப்புக் கலர் தெரிந்தது போல் இருந்தது. சட்டென்று அவன் மனதில் ‘ராதை இன்று என்ன கலர் புடவை கட்டி இருந்தாள்’ என்ற கேள்வி எழுந்தது. சிவப்புத்தான் என்ற முடிவுக்கு வந்தான். கதவண்டை போய் பார்த்தான். ராதை பயத்தினால் நடுங்கி ஒரு சிறு குழந்தை போல் உடம்பை எல்லாம் ஒடுக்கிப் புடவையை ஒதுக்கி கூட்டிப் பிடித்து கதவு மூலையோடு நெருங்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

பயந்து வெறுவிப் போய் நின்று கொண்டிருந்த ராதை வேணுவை பார்த்ததும், திடுக்கிட்டு அவன் முகத்தையே கூர்ந்து நோக்கி, அசைவற்று அப்படியே நின்று விட்டாள்.

வேணுவும் ஐந்து நிமிஷம் வரை அவளையே பார்த்து நின்றான்.

”என் ராதை இங்கு வந்து நிற்கிறாய்? வா, மேலே போவோம்’ என்று அழைத்தான் மெதுவாக. அவன் குரலில் பரிதாபம், மன்னிப்பு, இரண்டும் கலந்திருந்ததாக பட்டது ராதைக்கு. பதில் பேசாமல் அவன் பின் மாடிப் படிகளில் கால் வைத்து ஏறினாள்.

***

கமலா விருத்தாச்சலம்

(1917 – 1995)

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பொதுப் பணித்துறையின் புகழ்பெற்ற ஒப்பந்ததாரர் பி.டி.சுப்ரமணிய பிள்ளையின் மகளான இவர், தன்னுடைய பதினைந்தாவது வயதில் புதுமைப்பித்தனைத் திருமணம் செய்துகொண்டார்.

1935க்குப்பின் எழுதத் தொடங்கிய இவர், குறிப்பிட்ட சின்னஞ்சிறு சம்பவங்களையொட்டிய கதையாக்கத்தில் தேர்ந்தவர். தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் இவரின் முக்கிய கதைகள் பிரசுரமாயின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *