கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 11,762 
 
 

“ஆமாம் உன் செவிகளில் பிரச்சினை இல்லை. ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணர் என்றுதான் நான் சொன்னேன்…”

ஃபாதரின் ஏற்கனவே சிவந்த முகத்தில் இன்னும் சிவப்பாக ரத்தம் அலைமோதி அடங்கியதைப் பார்த்தேன். ஃபாதர் திரும்பி தனது நடுங்கும் கரங்களால் அந்தச் சிறிய கோப்பையை மெது சிவப்பாக நிரப்பினார்.

“மன்னித்துக் கொள்; எனக்கு இது தேவைப்படுகிறது… தன் குழந்தையை வேண்டாம் என்று ஓர் அன்னை சொன்னால் அந்தக் குழந்தை என்ன பாடுபடும் தெரியுமா?”

நான் அமைதியாக இருந்தேன். வெளியே இரவுப்பூச்சிகளின் இனப்பெருக்க அழைப்புகள் சிறகடிப்பின் விநோத ஒலிகளாகக் கேட்டன.

“அதுவும் அந்தக் குழந்தைக்கு உலகமே தன் அன்னைதான் என்னும் போது..” ஃபாதரின் பிரெஞ்சு சாயல் படிந்த ஆங்கிலம் தளுதளுத்தது. அந்த அறையின் மெல்லிய குறைந்த வாட்ஸ் ஒளியில் வெண் தாடியும் காவி அங்கியுமாக ஃபாதர் பியரீ லெ சோக்ஸ் என்கிற அபிஷேகானந்தா ஏதோ ரவிவர்மா ஓவிய ரிஷியைப் போல் இருந்தார். சோகமான ரிஷி.

நடந்தவற்றை முதலிலிருந்து சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

“என்னைப் போக சொல்லிவிட்டார்கள். நான் உன்னோடு பேச வேண்டும்” என்று அந்த சோம்பலான மதிய வேளையில் ஃபாதர் தொலைபேசிய போது எனக்கு அது மேலோட்டமாகத்தான் அதிர்ச்சியாக இருந்தது. உள்ளூர நான் அதை எதிர்பார்த்திருந்தேன் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மாலை வெயில், காவேரியை, உருகி ஓடும் பொன்னாக அடித்துக் கொண்டிருந்தது. சுழித்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தாள்.

“ஃபிரான்ஸின் கிராமப்புற கார்னிவல்களில் மணமாகாத குடியானவப் பெண் கும்மாளியிடுவது போல் ஓடுகிறாள் பார்!” என்றார் ஃபாதர். சகஜமாக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு அவர் பிரயத்தனப்பட்டதற்கு அப்பாலும் அவரில் சோர்வு நிறைந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

மாலை நேரங்களில் காவேரிக்கரையில் அவருடன் உலாவுவது எனது சில மாத பழக்கமாகியிருந்தது. ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுணுக்குச் செல்லும் வழியில் இருக்கும் அந்த நதிக்கரையில் மாலை வேளைகளில் ஃபாதர் வந்துவிடுவார்.

எங்கோ பார்த்தபடி, “விரைவில் சென்றுவிடுவேன்” என்றார் ஃபாதர். மணல் வெளியில் அவர் காற்தடங்கள் அழுத்தமாக விழுந்தன.

“பிரான்ஸுக்கா ஃபாதர்?”

“தெரியாது. சிதறடிக்கப்படும் கோலிக் குண்டுகளுக்கு அவற்றின் போகுமிடத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்ன? ஆனால் என்னை உறுத்தும் விஷயமே வேறு… உனக்கு நேரம் இருக்கிறதா? நதிக்கரையில் நீண்ட இரவில் ஒரு கிழவனின் புலம்பலைக் கேட்க…”

“வீட்டுக்கே போய்விடலாம்” என்றேன்.

“அதுவும் சரிதான். எனக்கும் தாராளமாக ஊற்றிக் கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது” என்றார் ஃபாதர். அமைதியாக நடந்தோம்.

நான் திருச்சியில் ஒரு கல்லூரியில் தத்துவத் துறையில் ஆசிரியனாக இருக்கிறேன். கிழக்கத்திய சித்தாந்தத்தில் கிறிஸ்தவ இறையியலின் உரையாடல் என்கிற தலைப்பில் எங்கள் துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓர் உரையாற்ற வந்தபோதுதான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது… பிறகு அது நல்ல நட்பாகி இப்போது சில மாதங்களாக மாலை இணைந்து நதிக்கரையில் நடைப்பயிற்சி வரையாக…

கட்டை பிரம்மச்சாரியான என் வீட்டின் கதவுத்துவாரத்தில் நான் சாவியை நுழைத்தபோது மாலையின் இறுதி சூரியக்கதிர்கள் மெல்ல மங்கலாயின. ஃபாதர் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு கொடிமுல்லைச் செடியை, குழந்தையின் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். தனது மனதை மீண்டும் மீண்டும் மடை மாற்றுகிறார் என்று தோன்றியது.

ஹெகலும் சங்கரரும் ஸ்ரீ பாஷ்யமும் ப்ரண்ட்லைனும் தாறுமாறாக சிதறிக்கிடந்த அறைக்குள் நுழைந்து சுவிட்சைப் போட்டேன். நாற்காலியிலிருந்த சில புத்தகங்களை அசிரத்தையாக டீபாயில் வைத்துவிட்டு ஆயாசமாக அமர்ந்தார் ஃபாதர்.

ப்ரிட்ஜை நோக்கிப் போய் கொண்டிருந்த என் முதுகைத் தாக்கியது திடீரென வந்த ஃபாதரின் கேள்வி.

“என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“புரியவில்லை ஃபாதர்..”

“இல்லை, உன்னை எச்சரித்திருப்பார்களே என்னைக் குறித்து… நான் மதமாற்றிவிடுவேன் என்று… என்னைக் குறித்து என்ன நினைக்கிறாய்,…”

பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்; அவர் சார்ந்திருக்கும் அமைப்பான ’அமைதி ஆரண்யம்’ எனும் கத்தோலிக்க மடாலயமே ஒரு பெரிய சதிக்கூடம் என்று. ஆனால் நான் தெளிவாக அவனிடம் சொன்னேன், “நான் பழகுவது ஓர் அறுபத்தைந்து வயதான, நல்ல அறிவாளியும் எளிய மனிதருமான துறவியிடம். அவருடைய அமைப்புடனல்ல. இன்றைக்கு வரை என்னிடம் அவர் அந்த எண்ணத்துடன் பழகியதாகத் தோன்றவில்லை. ஆனால் அவரால் நான் கிறிஸ்தவராக்கப் படலாமென்றால் அதுவே எனக்கு நல்லது,” என்றே அதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன்.

அதையே இப்போதும் சொன்னேன்.

அவர் பெருமூச்சு விட்டார். “சரியான ஹிந்து அய்யா நீர்” என்றார். ஃபாதரின் ஆங்கிலம் எப்போதுமே ஒருவிதமாகத்தான் இருக்கும். ஃபிரெஞ்சுத் தாக்கமோ என்னவோ.

“ஆனால் உண்மை அதுதான்… அதற்காகத்தான் இந்தியா வந்தேன். உன்னிடம் சொல்வதற்கென்ன… எல்லாமே இப்போது பார்க்கும் போது… ஹூம்ம்ம்… உன்னை என்று அல்ல, அதாவது உன்னிடம் பழகியது உன்னை மதம் மாற்ற அல்ல. ஆனால் இந்த நாட்டுக்கு வந்தது… இந்த நாட்டையே… அதாவது இந்த நாட்டின் ஆன்மாவை… புரிகிறதா?”

“இல்லை” என்றேன் உண்மையாக, ஆனால் கூர்மையாக.

“நான் முதன்முதலாக வந்தது வட இந்தியாவுக்கு. கங்கைக் கரைக்குச் சென்றேன். அங்கு கங்கையும் இதே காவேரி போல, இன்னும் பெரிய பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஆங்காங்கே கட்டப்பட்ட துறைகளில் கரிய இந்திய உடல்கள் சூரியன் மின்னும் நதியில் முங்கியெழுந்தன. கரையோரமாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் காவிதான் அணிந்திருந்தேன். அந்த வழியாகச் சென்ற சில ஹிந்துக்கள் என்னைக் கும்பிடக்கூட செய்தார்கள்.

ஆனால் நான் அங்கே ஒரு திட்டத்துடன் வந்திருந்தேன். அவர்களின் ஆன்மாக்களை கர்த்தருக்காக வென்றெடுக்கும் திட்டம். அதற்கான போர் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம். என்னோடு அவனும் இருந்தான். அந்தக் கரையில் ஒரு சிறிய சிவன் கோயில் இருந்தது. லிங்கம், மேலே நீர்தாரை எப்போதும் ஒழுகும்படி. உள்ளே சென்றோம். எவர் கருத்தையும் கவராமல் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் திருப்பலியை நடத்தினோம்.”

ஃபாதர் உணர்ச்சிவசப்படுவது தெரிந்தது. அவருக்கு சிறிது மூச்சு வாங்குவது போல் இருந்தது. ஓல்ட் மாங்க் பாட்டிலை டீப்பாயில் வைப்பதற்காக, ஆர்தர் ஷோஃபனரையும் திருவாய்மொழியையும் தரையில் போட்டேன். அவர் கையில் சிறிய கண்ணாடிக் கோப்பையைக் கொடுத்து அதைச் சிவப்பாக நிரப்பினேன்.

“இங்கு வந்தபோது எனக்கு அவர்கள் ஒரு செயல்திட்டத்தை அளித்திருந்தார்கள் தெரியுமா? ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணா”

எனக்கு முதலில் முழுமையான அதிர்ச்சி அப்போதுதான் ஏற்பட்டது, ”அஹ் … என்ன சொன்னீர்கள் ஃபாதர்? ப்ராஜெக்ட் ரமணர் என்றது போல் ஏதோ.. சரியாகக் கேட்கவில்லை.”

“ஆமாம் உன் செவிகளில் பிரச்சினை இல்லை. ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணர் என்றுதான் நான் சொன்னேன்…”

வெளியே இரவுப்பூச்சிகளின் ஒலிகள்.

“விரூபாக்ஷக் குகைக்குள் சென்றுகூட கிறிஸ்தவ பலியை நடத்தினோம் தெரியுமா?”

“தவறில்லையா ஃபாதர்? இன்னொரு மதத்தினர் வழிபடும் இடத்தில்…”

“இன்னும் உனக்குப் புரியவில்லை. இது போர். சொன்னேனே, சிலுவைப் போர். உங்கள் வழிபாட்டை நாங்கள் எந்த அளவு மதிக்கிறோமோ அந்த அளவு அது எங்கள் தேவனுக்கே உரியது என்றும் நம்புகிறோம். எனவே அதனை எங்களதாக்குகிறோம். புரிகிறதா?”

“புரியவில்லை” என்றேன் நான். உண்மையாகவே புரியவில்லை.

“உன்னால் மட்டுமல்ல, எந்த ஹிந்து மனதாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது…நான் மிகப்பெரிய தவறை ஒரு தருணத்தில் செய்தேன்… தவறல்ல… ஆனால் என் தாயின் பார்வையில்.. அன்னை சபையின் பார்வையில்…” அவர் குரல் கமிறியது. “..அது தவறுதான்…” இப்போது ஒரு கேவல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. மீண்டும் ஒரு மிடறு விழுங்கி தன்னை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“நான் உங்கள் தியான முறைகளைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். வேடிக்கையாகத்தான் ஆரம்பித்தேன். ‘ஓம் நமசிவாய’. ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ எல்லாவற்றுக்குள்ளும் ஏசுவை நுழைத்தோம். அதற்கு ஒரு பெயர் கூட கொடுத்தேன் ‘மந்திரா ஸாண்ட்விச்’ ஹ ஹ.. ஓம் நமோ பகவதே ஏசுவாய ஹ ஹ… திபெத்தின் ஓம் மணி பத்மே ஹங் கூட எங்கள் கிறிஸ்தவ உள்ளிழுப்புக்குத் தப்பவில்லை என்றால் பாரேன்…ஹ ஹ..”

வலுவற்ற சுய இகழ்ச்சி கொண்ட சிரிப்பு.

சிறிய மௌன இடைவெளி.

அவரே தொடர, நான் காத்திருந்தேன். பின்னர் அவரது வார்த்தைகள் தொடர்ந்தன.

“ஆனால் மெதுவாக அப்பயிற்சிகள் எனக்குள் வேறு அறைகளைத் திறக்க ஆரம்பித்தன. இந்த விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெளிவாக ஆரம்பித்த போதுதான்…”

டணார் என்ற சத்தம், உறைந்திருந்த என்னை எழுப்பியது… அவரது கோப்பை கீழே விழுந்து சிதறியிருந்தது. அவர் அதைப் பற்றி கவனிக்காமலே தன் காவி அங்கிக்குள் ஏதோ துழாவிக் கொண்டிருந்தார். கருப்பாக ஒரு புத்தகம். முதலில் பைபிள் என்றுதான் நினைத்தேன். அதை அவர் எனக்கு நீட்டினார். அப்போதுதான் தெரிந்தது, அது டைரி. உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளை லாவகமாகத் தவிர்த்தவாறு கால்வைத்து அவரிடமிருந்து டைரியை வாங்கிக் கொண்டு என் நாற்காலியில் அமர்ந்தேன்.

“அதில் அடையாளம் வைத்திருக்கிறேனே… அதில் எழுதியிருப்பதைப் படியுங்கள்…”

வெளிர் நீல வண்ணத்தில் மகுடமேந்தி மகவேந்திய மாதா விண்ணில் நிற்கும் பட அட்டையால் அடையாளப் படுத்தப்பட்டிருந்த பக்கம், ஜூலை ஏழு என்றது. 1989.

நீண்டகாலமாகவே தன் டைரிகளை ஃபாதர் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்திருந்தார். சபையின் உத்தரவு அது. ஏனென்றால் உள்ளூர் சபை மற்றும் மடாலய அதிகாரிகளால் அவரது நாளேடு அவருக்குப் பின்னால் வழிகாட்டியாக பயன்படுத்தப் படவேண்டுமென்று உத்தேசமாம்.

ஃபாதரின் கையெழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அதில் ஒருவித பெண்மைத்தன்மை இருந்தது. ஏதோ மத்திய கால ஐரோப்பியப் பிரசுரம் போல நட்டநடுவில் அந்த எழுத்துகள் கருப்பு மையில் மிளிர்ந்தன.

ஆன்ம விழிப்பின் தொடக்கத்தில் ஏசு ஒரு குரு என்கிற அளவில் பயன்படுபவராக இருக்கலாம். ஆனால் ஏசு தேவையா என்றால் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் சொன்னால் ஆன்மப் பயணத்தில் எந்த குருவையும் போல் இறுதியில் ஏசுவும் கழற்றிவிடப்பட வேண்டும். உண்மையில் ஏசு… என் தேவனே… இதை எழுத என் கை நடுங்குகிறது, ஆனால் உண்மையில் ஏசு ஆன்மிகத்துக்கு அத்யாவசியத் தேவை கிடையாது. ஏசு இல்லாமலே ஒருவர் ஆன்மிக விழிப்பும் ஆன்ம சாதனையும் செய்து சத்தியத்தையும் மீட்பையும் இறை இயல்பையும் அடைய முடியும். எவன் தன் ஆன்மாவை உணர்ந்துவிட்டானோ அவனுக்கு கிறிஸ்துவில் நம்பிக்கையோ, பிரார்த்தனைகளோ, சபைகளின் திருப்பலியோ தேவை இல்லை.

நான் இதைப் படித்துவிட்டு அதிர்ந்தே நிமிர்ந்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக ஃபாதரிடமிருந்து இல்லை. மெல்ல அவரிடம் கேட்டேன்.

“இதை நீங்கள் வேறு யாரிடமாவது காட்டினீர்களா?”

அவர் சொல்வதற்கு முன்பே இதற்கான பதில் எனக்குத் தெரிந்திருந்தது. அவர் உண்மை என உணரும் எதையும் அவரால் உள்ளே வைத்துக் கொண்டிருக்க முடியாதவர்.

மெல்லச் சிரித்தார், விரக்தியாக.

“அவனுக்கே எழுதினேன். என் சீடனல்லவா… ஹ ஹா என்னையே வெளியே போக வைத்துவிட்டான். உடனே மேலே அதை அனுப்பிவிட்டான். ரோமா லோகுட்டா காஸ்ட்டா ஃபினிட்டா… ஹ ஹ… புரிகிறதல்லவா ரோம் பேசிவிட்டது. விஷயம் முடிந்துவிட்டது.. ஹ… நான் மண்டியிட்டுக் கதற வேண்டும்… மயா கல்பா மயா கல்பா மயா மாக்ஸிமா கல்பா… வேதாந்தம் பொய், அத்வைதம் பொய் இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் எழுப்பியிருக்கும் நாமரூபச் சுவர்களே உண்மை என என் நாட்குறிப்பில் எழுதி அதை ஒரு கடிதமாகவும் எழுத வேண்டும். இல்லாவிட்டால் அமைதி ஆரண்யம் விட்டு வெளியேற வேண்டும். ஆனால் அதை எத்தனை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?…”

நாற்காலி கிரீச்சிட்டது. மீண்டும் எழுந்து, அங்கியைத் துழாவி, மடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை எடுத்து என்னிடம் தந்தார். பிரித்தேன்.

உயர்தரக் காகிதம். உண்மையில் அது ஓர் உத்தரவுக் கடிதம். அதிகாரபூர்வமான உத்தரவு. “காங்கிரகேஷன் ஃபார் தி டாக்ட்ரைன் ஆஃப் பெயித்” (Congregation for the Doctrine of the Faith) என அதன் முகப்பில் இருந்தது. பொன்னிறத்தில் சிலுவையும் சாவியும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பை நான் அறிவேன். 1965-இல் இந்தப் பெயர் கொடுக்கப்படுவதற்கு முன்னால் அதன் பெயர், Congregation of the Holy Office of the Inquisition. இதிலிருந்து கடிதம் வந்திருக்கிறதென்றால், ஃபாதர் உண்மையிலேயே பெரும் பிரச்சினையில் இருக்கிறார். அவர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போலவே தோன்றுகிறது.

“தங்கள் எண்ண வெளிப்பாடுகள் கிழக்கத்திய இருளால் சூழப்பட்டு நம் புனிதத் திருச்சபையின் ஒளியை மறைப்பதாக உள்ளன. தங்கள் தப்பறையான கருத்துகளை மாற்றிக்கொள்ள மீட்பின் ஒரே வாசலான கர்த்தர் உங்களுக்கு அளித்துள்ள வாய்ப்பாகவே இதை நம் மேலான சங்கைக்குரிய பாப்பரசரின் திருவுள்ளம் கருதுகிறது. மாசான தீமைகளைக் கொண்ட கிழக்கத்திய மனப்பயிற்சிகள் ஆன்மிகம் என்ற பெயரில் வெறுமையை நோக்கியே செல்கின்றன. அவை மனதான ஆன்மாவை அழித்து இறைவனுடன் இருக்கும் நித்திய வாழ்வுக்கு நம்மை அருகதை அற்றவை ஆக்கிவிடுகின்றன. எனவே தாங்கள் உடனடியாக அமைதி ஆரண்யத் தலத்தை விட்டு இடம்பெயர்ந்து பாம்பேயில் இருக்கும் செமினரிக்குச் சென்று ஒரு வருட காலம் தவநோன்பு மேற்கொள்ளவும். தங்கள் கடிதம் மூலம் தங்கள் தப்பறைகளை மறுதலித்து வெளியிடும் பிரகடனம் எதிரியின் இந்தப் பிடியிலிருந்து இறை சேவகன் வெற்றி அடைந்ததை ஐயமற இந்தியர்களுக்கு நிரூபிக்கும் ஒரு வரலாற்று ஆவணமாகும் என்பதில் மேன்மை தங்கிய சங்கைக்குரிய பாப்பரசருக்கு எவ்வித ஐயமும் இல்லை.

அமைதி ஆரண்யத்தின் அனைத்து ஆவணங்களையும் பொறுப்புகளையும் தங்கள் ஆன்மிக ஈடேற்ற தவத்தின்போது அருட் சகோதரர் பெடீ மெச்சினிடம் அளித்துவிடவும்.”

பெடீ மெச்சின்… அசப்பில் ஃபாதர் இளவயதில் எப்படி இருந்திருப்பார் என்பதைப் போலவே இருக்கும் பாதிரியார். அவரும் ஃபிரெஞ்சுக்காரர்தான். காவி உடுத்திய தாடிக்காரர். ஒரு நாள் கல்லூரி நூலகத்துக்கு வந்த ஃபாதர், ”பெடீ மெச்சின் என் பிரதான சீடன், சுவாமி திரிசொரூபானந்தா” என்று உடன் வந்தவரை அறிமுகப்படுத்தினார். திரிசொரூபானந்தா என்கிற மெச்சின், “வன்க்கம்” என்றார் ஐரோப்பியத் தமிழில்.

ஃபாதர் அமரச் சொல்லும்வரை அமராமல் கைகட்டி நின்று கொண்டிருந்தார். ஃபாதர் என்னுடன் அத்வைதத்தில் முக்தியைக் குறித்து அது எப்படி கிறிஸ்தவ மீட்புடன் ஒட்டியும் வெட்டியும் போகிறதென சன்னமான குரலில் விவாதித்துக் கொண்டிருக்க, நான் அவ்வப்போது மெச்சினை கவனித்தேன். உரையாடலில் ஆர்வமில்லாமல் கண்களை மூடி தீவிரமாக ரோஸரியை உருட்டிக் கொண்டிருந்தார்.

நாங்கள் காண்டீனில் தேநீர் அருந்த எழுந்தபோது, “நாங்கள் விவாதித்த விஷயங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சகோதரர் மெச்சின்?” என்றார் ஃபாதர்.

“உரையாடல்களை நாம் நிகழ்த்துவது உண்மையை அறிய அல்ல ஃபாதர்; சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள. சகபயணிகளாகக் காட்டிக் கொண்டாலும் சபையின் பிரதிநிதியாக நாம் வழிகாட்டிகள்தான். இது ஃபாதருக்கும் தெரிந்ததுதான்.”

குரலில் பணிவு இருந்தது. கூடவே ஓர் எச்சரிக்கையும் இருப்பது போல எனக்கு அன்று தோன்றியதை வெறும் கற்பனை என உள்ளே தள்ளினேன்.

“உண்மையான அருட்பணியாளன்!” என்று உற்சாகமாகச் சிரித்தார் ஃபாதர்.

என் நினைவிலிருந்து மீண்டபோது ஃபாதரின் கண்கள் குத்திட்டு நின்றன. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அவரது பிரக்ஞை அந்த அறையைத் தாண்டி எங்கோ முழுமையாகப் பதிந்திருப்பதை என்னால் உணர முடிந்த்து.

“ஃபாதர்” என்றேன் மெதுவாக.

“எலிபண்டா” என்றார் தொடர்பே இல்லாமல்.

புத்தி பேதலித்துவிட்டதோ… சிறிது பயந்தேன்.

என் பயத்தைப் புரிந்துகொண்டவர் போல, “இல்லை நான் இன்னும் என்னை இழக்கவில்லை. என் அன்னை என்னை வேண்டாம் என்று விட்டாள். ஹ ஹ.. முதலை காலை கவ்வியிருக்கிறது என்பதை உணர்ந்துவிட்டாள் போலும்… ஹ ஹ..”

என்ன சொல்வதென்றே தெரியாமல் பேசாமலிருந்தேன்…

மீண்டும் “எலிபண்டா” என்றார், “நீ போயிருக்கிறாயா?”

இல்லை என்றேன்.

“போ… என்னால் மறக்க முடியாது… நான் முதன்முதலாகச் சென்றபோது அந்தக் கரிய குகைக்களுக்குள் என்ன எதிர்பார்த்தேன்? உண்மையைச் சொன்னால் பெரிதாக ஒன்றும் இல்லை… நான் ஏதோ பாகனீயக் கற்பனையை எதிர்கொள்வேன் என்றே நினைத்தேன்… ஆனால் கிரேக்க பாகனீயத்தின் வடிவழகின் நேர்த்திக்கு அருகில் வரமுடியாத ஆசிய மனதின் குறைபாடுகள் கொண்ட ஒரு கலை வெளிப்பாடு… பேருருக்களை கற்களில் வடிப்பதில் பேரானந்தம் கொள்ளும் எளிய ஆசியக் கற்பனையின் பூதாகர வடிவம். ஒரு மானுடவியல் விசித்திரம். அவ்வளவுதான்… அதைத்தான் எதிர்பார்த்தேன் ஆனால் என்முன் எழுந்த முகங்களோ… அதை எப்படிச் சொல்வேன்… ‘என் தேவனே!’ என்று கதறியபடி மார்பைப் பிடித்துக் கொண்டு அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டேன். என் ஐரோப்பிய கர்வம் கொண்ட கிறிஸ்தவ மனதுக்கு இது விக்கிரக ஆராதனையாளர்கள் உருவாக்கியதல்ல என்றுதான் எண்ணத் தோன்றியது. இந்த வடிவம்… அஞ்ஞானிகளால் உருவாக்கப்பட முடியாதது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். மைக்கலேஞ்சலோவின் சிருஷ்டி போல… இல்லை இல்லை அதைவிட… அதனால் தொட்டு விடவே முடியாத மகோன்னதமான ஓர் உச்சம்!

மறுநாளே ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம். அந்த இடத்தின் மகிமையை அந்தக் கலையின் உன்னதத்தை உன்னதங்களிலேயே உயரிய கர்த்தருக்கு அளித்தோம்.

இப்போது அதன் அபத்தம் என் முகத்தில் என் மார்பில் எப்படி அறைகிறது தெரியுமா… ஒரு மகத்தான சத்தியத்தை கல்லில் உறைய வைத்து அளித்திருக்கிறார்கள் இந்த நாட்டின் ஞானிகளும் சிற்பிகளும்… அதன் முன்னால் நான் நாமரூப மாயையின் சிறுமணல் மேட்டுக்கு ஆராதனை செய்திருக்கிறேன்… மகாமாயை என்னிடம் எப்படியெல்லாம் விளையாடி விட்டாள்…”

தள்ளாடியபடி எழுந்தார் ஃபாதர்.

“நாளை மும்பை செல்கிறேன்… இந்தக் கிழவனின் புலம்பல்களுக்காக உன் இரவையும் நல்ல மதுவையும் தந்தாயே.. உனக்கு வந்தனங்கள்…”

ஒரு வாரத்திற்குப் பிறகு கணிதப் பேராசிரியர் டேவிட் ஆரோக்கியம் அந்தச் செய்தியை எனக்குச் சொன்னார்… ஃபாதர் இறந்துவிட்டாராம்; மாரடைப்பு.

“எங்கே?” என்றேன்….

“எலிபண்டாவில்… மகாதேவன் என்று மூன்று தலைகள் சிலை இருக்கும் குகைக் கோயிலிலாம்…”

[இதில் உள்ள பல சம்பவங்கள் உண்மையானவை. தனிமனித அடையாளங்களுக்காகவும் புனைவுக்காகவும் பெயர்களும் சில சம்பவக் கோர்வைகளும் மாற்றப்பட்டுள்ளன.]

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *