திக்கு தெரியாத காட்டில்

1
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,151 
 
 

மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள், வரிசையாக நின்று பயமுறுத்தின. பல்லைக் கடித்தபடி எழ முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள்.
நாலைந்து நாட்களாகவே, அவளுக்கு தலை சுற்றல் இருந்தது. முதல் நாள் மகனும், மருமகளும், ஒரு திருமணத்திற்கு குழந்தைகளுடன் காலையிலேயே சென்று விட்டதால், இவளுக்கும், இவள் கணவர் வீரராகவனுக்கும் மட்டுமே சமையல் செய்ய வேண்டும். அப்படியும் வீரராகவனுக்கு கீரை மசியல், ரசம், காரட் பொரியல் செய்து, அப்பளத்தையும் பொரித்து வைத்து விட்டே படுத்தாள்.
மனைவி இப்படி சோர்ந்து படுத்திருப்பதை, ஒரு நாளும் பார்த்திராத வீரராகவன்,””வைதேகி… என்னம்மா ஆச்சு?” என்று பதறினார்.
“”ஒன்றுமில்லை, லேசாக தலைச் சுற்றுகிறது. படுத்தால் சரியாகி விடும்.”
“”இல்லை வைதேகி… இரண்டு நாட்களாகவே உன் முகம் சரியில்லை. ராத்திரி கூட நீ அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாய். என்ன செய்கிறது உனக்கு… பரசு கிட்டே சொல்லி, டாக்டரிடம் போய் வரலாமா?”
திக்கு தெரியாத காட்டில்“”அடடா… கொஞ்சம் முடியவில்லை என்று படுக்கக் கூடாதா? ஏன் ஊரைக் கூட்டுகிறீர்கள்?” என்று எழுந்தே விட்டாள்.
வீரராகவனுக்கு மனம் கேட்கவில்லை. அன்று இரவு சாப்பிட்டு, “டிவி’ முன் அமர்ந்திருந்த மகனிடம் மெதுவாக வந்தார்.
“”பரசு… அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. நாளைக்கு டாக்டரிடம் கூட்டிப் போகலாமா?”
“”என்னப்பா உடம்பிற்கு… எனக்கு இப்போ கூட தோசை செய்து போட்டாங்களே…”
“”பல்லை கடித்துக் கொண்டு செய்கிறாள். நாலைந்து நாட்களாகவே தலை சுற்றுகிறதாம். ராத்திரி சரியாக தூங்கிறதில்லை.”
பக்கத்தில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கனகா, “”முந்தா நாள், அடைக்கு, தேங்கா எண்ணெயை நிறைய ஊற்றி செய்த போதே நினைத்தேன்; இது போல வருமென்று… இதற்கெல்லாம் டாக்டரிடம் போனால் பீஸ், மருந்து என்று நானூறும், ஐநூறுமாக கறந்து விடுவார். இந்த பணத்தை நாம் தானே அழ வேண்டும்? <உங்கள் ஒருத்தர் சம்பாத்தியத்தில் தான் இந்த குடும்பம் ஓடுகிறது என்பது ஞாபகமிருக்கட்டும்… இதிலே, ரெண்டும் பெண்ணாப் பெத்து வச்சிருக்கோம். பிள்ளையை பெற்றிருந்தாலாவது, ஒரு பைசா கையிலே இல்லேன்னாலும் அவனைச் சார்ந்து வாழலாம். பெண்ணைப் பெத்தா, நகை, நட்டு செய்து போடணும். எங்க வீட்டிலே போட்ட, 20 பவுன் நகை தவிர, குண்டுமணி தங்கமாவது இந்த வீட்டுல இருக்கிறதா?” என்று படபடக்கவும், மவுனமாக அங்கிருந்து நகர்ந்து விட்டார் வீரராகவன்.
சமயலறையைத் துடைத்து, கோலம் போட்டுக் கொண்டிருந்த வைதேகி, கூசிப் போனாள். மருமகள் இப்படி ஜாடை மாடையாக, அவர்களது ஏழ்மையைச் சுட்டிக் காட்டுவது, அவளுக்கு பழகிப் போனாலும், தன் உடல் நிலை காரணமாக வந்த இந்த ஏச்சு, அவளைக் கூச வைத்தது.
அவர்கள், நடுத்தர வசதிக்கும் குறைவானவர்கள் என்று தெரிந்து தானே, கனகாவின் தந்தை, இவர்கள் வீட்டை தேடி வந்து, பரசுராமனை மாப்பிள்ளையாக்கிக் கொண்டார். கனகாவும், இதெல்லாம் தெரிந்து தானே, பரசுராமனை கட்டிக் கொண்டாள்!
வீரராகவனின் தந்தை சென்னைக்கும், காஞ்சிபுரத்திற்கும் நடுவில் இருந்த கிராமத்தில், வைதீகம் செய்து வந்தார். வீரராகவன் கஷ்டப்பட்டு படித்து, எஸ்.எஸ்.எல்.சி., முடித்ததும், தந்தைக்கு உதவ, சென்னையில் ஒரு வேலை தேடிக் கொண்டார். அவரது சம்பளத்தின் பெரும்பகுதி, குடும்பத்திற்கே செலவழிந்தது. அந்த காலத்தில், வைதீகத்தில், நாலணாவும், எட்டணாவும் பெற்று வந்த வீரராகவனின் தந்தைக்கு, வீரராகவன் அனுப்பிய பணம், பெரும் தொகையாக இருந்தது.
வீரராகவனுக்கு வாழ்க்கைப்பட்ட வைதேகி, கணவனின் நிலையறிந்து, கட்டும், செட்டுமாக செலவழித்தாள். ஒரே மகன் பரசுவை, பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தனர். சமயத்தில் பற்றாக்குறை ஏற்படும் போது, தன் சொற்ப நகைகளையும் கொடுத்து சமாளித்தாள். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால், பரசுவுக்கு வங்கியில் வேலையும் கிடைத்தது.
வீரராகவனும், வைதேகியும், தங்கள் கஷ்டங்களுக்கு முற்றுப் புள்ளி விழுந்துவிட்டதாகக் கருதினர். ஆனால், அது கமாதான் என, பரசுவின் கல்யாணத்திற்கு பின் தெரிந்தது.
பரசு வேலையில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே, கனகாவின் தகப்பனார், மகளின் ஜாதகத்தையும், போட்டோ வையும் தூக்கிக் கொண்டு, அவர்களது வீடு தேடி வந்து விட்டார்.
முதலில் பயந்தாள் வைதேகி. அவர்களது தகுதிக்கு மீறிய பெண் எடுப்பதில், அவளுக்கு விருப்பமில்லை. ஆனால், பரசு இந்த சம்பந்தத்தை விரும்பியது தெரிந்ததும், மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
அவளது பயம், உண்மையாகி விட்டது. கையில் காசு இல்லாமல், சொத்தும் இல்லாமல் இருந்த மாமனார், மாமியாரை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள் கனகா. தங்களது இக்கட்டான நிலை, வைதேகிக்கு நன்கு புரிந்தது. ஆகவே, எல்லா வேலைகளையும், தானே இழுத்துப் போட்டு செய்து, அந்த வீட்டிற்கு இன்றியமையாதவளாகி போனாள். இருந்தாலும், அவர்களது பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி பேசுவதில், தயங்கவே இல்லை கனகா.
காலை 7.00 மணிக்கு படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்ட கனகா, சமையலறைக் கதவு திறக்காமல் இருந்ததைக் கண்டு திகைத்துப் போனாள்.
இந்நேரத்திற்கு, மாமியார் விளக்கு ஏற்றி, ஏதேனும் ஒரு சுலோகத்தை முணு முணுத்தபடி, சமையலறையில், சமைத்துக் கொண்டிருப்பாள்.
“என்ன ஆச்சு இந்த கிழத்துக்கு… குழந்தைகளும், கணவரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்ப வேண்டும். வாசலில் கோலம் கூட போடலை…’
எரிச்சலுடன் கதவைத் தட்டினாள் கனகா. கதவு திறந்து கொண்டது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் வீரராகவன். அவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பதால், தூக்கம் பிடிக்க, இரவு வெகு நேரம் ஆகிவிடும். காலையில் மெதுவாகத் தான் எழுந்திருப்பார்.
அவரது கட்டிலுக்கு கீழே படுத்திருந்த வைதேகியின் கோலம், கனகாவுக்கு அச்சம் கொடுக்கவே, “”அம்மா, எழுந்திருங்க…” என்று மெதுவாக அவளது தோளைத் தட்டினாள்.
“இனி, உனக்கு நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை…’ என்று கூறுவது போல, வைதேகியின் உடல் அசைய மறுத்தது.
“”ஐயயோ… அம்மாவைப் பாருங்களேன்…” என்று, கனகா கத்த, பதறி எழுந்தார் வீரராகவன். பரசுவும், ஓடி வந்தான்.
யார் என்ன அழுது என்ன பயன்… சுமங்கலிப் பட்டத்தை வாங்கி, மீளாப் பயணத்திற்கு புறப்பட்டு விட்டாள் வைதேகி.
மனைவியின், இந்த திடீர் மரணத்தை, வீரராகவனால் தாங்க முடியவில்லை. ஒருவேளை, டாக்டரிடம் காட்டியிருந்தால், அவள் பிழைத்திருப்பாளோ என்று நினைக்க ஆரம்பித்தார். கையில் பைசா இல்லாமல், எல்லாவற்றுக்கும் மகனை சார்ந்திருப்பதால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது என்று, மனசுக்குள் மருகினார் வீரராகவன்.
இரு நாட்களுக்குப் பின், துக்கம் விசாரிக்க வந்திருந்தார் உறவினர் ஒருவர். தன் அறையிலிருந்து வந்த வீரராகவன், அவரை அணுகி, “”என் மனைவியை டாக்டரிடம் கூட்டிப் போகணும்; எங்கிட்டே பைசா இல்லை. காசு கொடுங்க,” என்று, கை கூப்பி நின்றார்.
வந்தவர் அரண்டு விட்டார். முகம் சிவந்தாள் கனகா.
“”ஏங்க… உங்கப்பா ஏதோ பேத்தறார் பாருங்க,” என்று, கணவனை அழைத்தாள்.
ஆனால், எதையும் லட்சியம் செய்யாமல், “”பணம் கொடுங்க, என் பொண்டாட்டியை டாக்டரிடம் காட்டணும்,” என, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் வீரராகவன்.
அரண்டு நின்றிருந்த அந்த உறவினர், “”கனகா… உன் மாமியாரின் திடீர் மரணத்தால், இவர் மனம் பேதலிச்சு போயிருக்கு. நல்ல டாக்டரிடம் காட்டு,” என்று கூறி, நழுவினார்.
பரசுவும், அதிர்ந்து போயிருந்தான்.
அன்று மட்டுமல்ல, அதன் பின், வீட்டிற்கு யார் வந்தாலும், வீரராகவன் இது போல பேசவே, “”கனகா… அப்பாவை டாக்டரிடம் கூட்டிப் போகலாமா?” என, தயக்கத்துடன் கேட்டான் பரசு. மருத்துவச் செலவை நினைத்து, மறுத்தாள் கனகா.
“”அதெல்லாம் வேண்டாம்… காம்போஸ் மாத்திரை கொடுத்து, தூங்க வைக்கலாம். நல்லா தூங்கி எழுந்தால், சரியாகிவிடும்.” என்றாள்.
ஆனால், சரியாகவில்லை. அதனால், அவரது அறையிலேயே அவரை முடக்கி வைத்தனர்.
வைதேகி இறந்த பின், வீட்டு வேலைகளை பார்க்க, ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள் கனகா. ஆனால், அவள் வேலைக்கு வரும் போதெல்லாம், வீரராகவன் அவளிடமும்,
“”என் பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லை; டாக்டரிடம் கூட்டிப் போகணும். காசு கொடு…” என்று கேட்க ஆரம்பிக்க, அவள் மிரண்டு வேலையை விட்டே போய் விட்டாள்.
அதனால், வேறு வழியில்லாமல், வீரராகவனை குடும்ப டாக்டரிடம் கூட்டிப் போனார்கள். அவரை பரிசோதித்த டாக்டர், “நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவருக்கு, மனைவி திடீரென இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் கடிதம் தருகிறேன். மனநல மருத்துவரை பாருங்கள்…’ என, கடிதம் கொடுத்து அனுப்பினார்.
“”என்ன கனகா, நாளைக்கு லீவ் போடட்டுமா? மனநல மருத்துவரிடம் போனால், டெஸ்ட் அது, இதுன்னு நாள் பூரா போய் விடும்,” என்றான் பரசு.
“”நாள் மட்டுமா போகும்… சேர்ந்து பணமும் இல்லையா போகும்?” குதர்க்கமாகக் கேட்டாள் கனகா.
“”என்ன செய்யறது… அம்மா போறதற்கு முதல்நாள் கூட அப்பா சொன்னார், டாக்டரிடம் அம்மாவைக் கூட்டிட்டு போகணும்ன்னு. அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், அம்மா உயிரை காப்பாத்தி இருக்கலாமோன்னு கூட தோன்றுகிறது.”
“”ஏன் இப்படி பேத்தறீங்க… ஒவ்வொருத்தருக்கும், இத்தனை மூச்சு என்று கடவுள் எண்ணி வைத்திருக்கும் வரை தான், மூச்சு விட முடியும். ஏதோ சுமங்கலியாய், நோயில் படுக்காமல், நமக்கு செலவு வைக்காமல் போனாளேன்னு சந்தோஷப்படுங்கள்,” என்று நொடித்த மனைவியிடம், ஏதும் பேச முடியாமல் அடங்கிப் போனான் பரசு.
நாட்கள் நகர்ந்தன.
“”என்னங்க… உங்க அப்பா இம்சை வரவர தாங்க முடியலேங்க. இன்னிக்கு எங்க பெரியப்பா பையன், அவனோட பொண்ணு கல்யாணத்திற்கு கூப்பிட வந்திருக்கான். அவன் கிட்டே போய், வழக்கமான பல்லவியைப் பாடி, காசு கேட்டிருக்கார். எனக்கு அவமானமாப் போச்சு.”
கண்களைக் கசக்கினாள் கனகா.
“”என்னை என்ன செய்ய சொல்றே… எனக்கும் சங்கடமாத்தான் இருக்கு. அவரை, ஏதாவது முதியோர் இல்லத்தில் வேணும்ன்னா சேர்த்து விடலாமா?”
“”அதையும் விசாரிச்சுப் பார்த்துட்டேன். டெபாசிட் தொகையா, திருப்பி தராத பணமா, இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். தவிர, மாசம் ஆயிரம் ரூபாய் சாப்பாட்டிற்கு தரணுமாம். இங்கே என்ன பிள்ளை இல்லாத சொத்து கொள்ளை போறதா… இல்லை, உங்க அப்பாகிட்டே தான் காசு பணம் இருக்கா…
“”போன மகராசி, தாலிக் கயிற்றிலே இருந்த ரெண்டு தாலி குண்டுகளைத் தவிர, வேறே ஒண்ணும் விட்டுட்டுப் போகல… உங்கப்பா இன்னும் இருபது வருஷம், அம்மா வயசையும் சேர்த்து இருப்பார்.”
“”அப்போ, என்னை என்ன தான் செய்யச் சொல்றே?”
“”அப்படிக் கேளுங்க…” என்றபடி, குரலைத் தாழ்த்தி, அவள் சொன்னதைக் கேட்டதும், பரசு அரண்டு போய் விட்டான். தானாடா விட்டாலும், தன் சதை ஆடு@ம!
“”என்ன பேய் அடிச்சது போல நின்னுட்டீங்க… நான் பல நாளா யோசித்துதான், இந்த முடிவிற்கு வந்தேன். நமக்கு இருக்கிறது ரெண்டும் பெண்கள். உங்கள் அப்பா பைத்தியம் என்று தெரிந்து விட்டால், நாளைக்கு அவர்களுக்கு கல்யாண மாவதே கஷ்டம். அதை நினைவில் வச்சு, ஒரு முடிவிற்கு வாங்க,” கண்டிப்பான குரலில் கனகா சொல்ல, தயங்கினான் பரசு.
“”சரி… எதற்காக அவரைக் காசியிலே விடணும். இங்கேயே பழனி, திருச்செந்தூர் என்று விட்டுவிடலாமே கனகா?”
“”யாரையாவது பார்த்தால் தான், உங்கப்பா இப்படி நடந்துக்கிறாரே… தவிர, மத்த நேரமெல்லாம் நன்றாகத் தான் இருக்கார். அதனால், தமிழகத்தில் எந்த இடத்தில் விட்டாலும், அட்ரசை சொல்லி வந்து விடுவார். அதனால் தான், காசியிலேயே விட்டுவிட்டு வரலாம் என்கிறேன். தவிர, காசியிலே, செத்துப் போனால், அவர் காதிலே சிவனே கர்ண மந்திரம் சொல்லி, கூட்டிட்டு போகிறார் தெரியுமா?” கனகா தெளிவாகப் பேச, செய்வதறியாது எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினான் பரசு.
அதன்படி குழந்தைகளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு, மாமியாருக்கு காசியில் திதி செய்வதாக அக்கம் பக்கத்தில் சொல்லி விட்டு, கங்கா காவேரி விரைவு வண்டியில் வீரராகவனோடு ஏறி விட்டனர்.
நள்ளிரவு.
தூக்கத்திலிருந்து விழித்தாள் கனகா. ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனில், நின்றிருந்தது வண்டி.
ரயிலில் வியர்த்துக் கொட்டவே, நிறைய பயணிகள் இறங்கி பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். பரசுவை எழுப்பினாள் கனகா.
“”என்னங்க… என்ன ஸ்டேஷன் இது… ரயில் ரொம்ப நேரமா நிற்கிற மாதிரி தெரியுது?”
இறங்கிப் போய் பார்த்துவிட்டு வந்தான் பரசு.
“”இந்தியிலே, ஏதோ எழுதி இருக்கு. யாருக்கு தெரியும் பேர்… ஏதோ ஒரு குட்ஸ் வண்டி தடம் புரண்டு போச்சாம். சரியாவதற்கு இன்னும், ஒரு மணி நேரம் போல ஆகுமாம்.”
“”எனக்கு ஒரு யோசனை தோணுது. உங்க அப்பாவை விட, காசிவரை போவானேன்… காசி கிட்டத்தட்ட சுற்றுலா தலமாகி விட்டது. யாராவது தெரிஞ்Œவங்க, அப்பாவைப் பார்த்து கூட்டி வந்து விட்டால் என்ன செய்யறது… இங்கேயே விட்டு விடலாம்.”
கனகா சொல்வதை மறுக்கும் நிலையில் இல்லாத பரசு, தூங்கிக் கொண்டிருந்த தந்தையை எழுப்பி, பிளாட்பாரத்தில் இறங்கினான். அவரைக் கூட்டிக்கொண்டு பிளாட்பாரத்தின் கோடிக்கு சென்றவன், அங்குள்ள ஒரு பெஞ்சில் அவரைப் படுக்க வைத்து, போர்த்தி விட்டான்.
ஏற்கெனவே, தூக்க மாத்திரையின் ஆதிக்கத்தில் இருந்தவர், உடனே தூங்கியும் போனார். அவரைப் பார்த்த அவனுக்கு, கண்கள் கலங்கின; மனசு கனத்தது. தன் பையிலிருந்து, பணம் எடுத்து, எண்ணிக் கூட பார்க்காமல், அப்பாவின் சட்டைப் பையில் திணித்தான்.
ரயில் புறப்படத் தயாராக இருப்பதாக, ஹாரன் அடித்த சமயத்தில், ஓடிவந்து பெட்டியில் ஏறினான் பரசு.
ஏற்கனவே, மனநிலை சரியில்லாதவராக வீரராகவன் இருந்ததால், அவர் காணாமல் போய்விட்டதை யாரும் சந்தேகிக்கவில்லை.
வீரராகவன் காணாமல் போய், ஆறு மாதங்கள் ஆகி விட்டன.
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஈசி சேரில் சாய்ந்த படி, கனகா கொடுத்த காபியை குடித்துக் கொண்டிருந்த பரசு, தங்கள் வீட்டு வாசல் முன் ஒரு கார் வந்து நிற்பதைக் கண்டு, “”கனகா உங்கள் வீட்டு மனிதர்கள் யாரோ வருகின்றனர் பார்…” என்றான்.
“”பின்னே, காரில் வருகிற மாதிரி உறவுக்காரங்க உங்களுக்கு இருக்காங்களா என்ன?” என்று, எகத்தாளமாக பேசிக்கொண்டே வாசலுக்கு சென்றாள் கனகா.
“”இது தானே வீரராகவன் வீடு?” என்று காரிலிருந்து இறங்கியவர் விசாரித்தவுடன், “”ஆமா… நீங்க யார்?” என்று தயங்கினாள்.
வீரராகவனின் சொந்த கிராமத்திலிருந்து வந்திருப்பதாக அவர் சொன்னதும், பரசு வாசலுக்கு விரைந்தான். “யார் இவர்? அப்பாவை தேடி எதற்கு வந்திருக்கிறார்? ‘ என்று குழம்பினான்.
“”உன் பெயர் பரசுராமன் தானே… உன் தாத்தாவும், என் தாத்தாவும் அண்ணன் தம்பிகள். என் தாத்தாவிற்கு, இந்த வைதீகத் தொழில் பிடிக்கவில்லை. ஆகவே, பிழைப்பை தேடி மும்பை கிளம்பி விட்டார். அதனால் தான், நமக்குள் தொடர்பு விட்டுப் போய்விட்டது.” என்று, அறிமுகப்படுத்திக் கொண்டார்…
“”இப்போது எதற்கு, உன்னை தேடி வந்திருக்கிறேன் என்றால், குடும்பத்தில், பல இன்னல்கள் வந்ததால், குலதெய்வத்தை கும்பிட்டுவா என்று ஒரு ஜோதிடர் சொன்னார். அதற்காக, நம் கிராமத்திற்கு குல தெய்வத்தை கும்பிடப் போனேன். அங்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் ஒரு தகவல் காத்திருந்தது…” வந்தவர் நிறுத்தினார்.
பரசுவும், கனகாவும் பரபரத்தனர்.
“”நம்ம தாத்தாக்களுக்கு பூர்வீக சொத்தாக, பத்து செண்டு தரிசு நிலம் இருக்கு. தரிசாய் இருந்ததால், யாரும் அதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், இப்போ அதற்கு கிராக்கி கூடிவிட்டது. ஒரு பி.பி.ஓ., கம்பெனி நம்ம நிலத்தை சுற்றி இருக்கிற நிலங்களை எல்லாம் வாங்கி விட்டனராம். நம்ம நிலத்தையும் வாங்க தயாராக இருக்காங்க…
“”ஆனால், நாம கிராமத்தை விட்டு வெளியேறி, பல ஆண்டுகளாகி விட்டதால், நம்மை தேட முடியவில்லை. இப்போ, நான் கிராமத்திற்கு போனபோது என்னை அணுகினர். எங்க அப்பா மட்டுமில்லே, உங்கப்பாவும் இந்த நிலத்திற்கு வாரிசு உரிமை உள்ளவராயிற்றே! அதனால, எப்படியோ யார் யாரையோ பார்த்து, உங்க முகவரியை கண்டு பிடித்து விட்டேன். நாம் கேட்கிற தொகையைத் தர, அவங்க தயாராய் இருக்காங்க…”
“”என்ன விலை தருவதாக இருக்காங்க?” ஆர்வத்துடன் வினவினாள் கனகா.
“”பத்து செண்டுக்கும், 50 லட்சம் வரை தர தயாராய் இருக்காங்க… நாம் இன்னும் கூட்டிக் கூட கேட்கலாம்.”
“”50 லட்சமா?” வாயைப் பிளந்தாள் கனகா. “அப்போ நம் பங்கிற்கு, சரிபாதி, 25 லட்சம் வரும்…’ என்று கணக்குப் போட்டது, அவள் மனசு.
“”உன் அப்பாவை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறேன். இன்று ஒரு நாள் லீவு போட்டால் போதும். அவர் கையெழுத்து போட்டு, பணத்தை வாங்கியதும் வந்துவிடலாம். அதிர்ஷ்டம் வர்றதா இருந்தால், எந்த விதத்திலாவது வந்துவிடும் இல்லையா… இல்லாவிட்டால் முப்பது வருஷம் கழித்து, நானும், அப்பாவும் குலதெய்வம் தரிசனத்திற்காக நம்ம கிராமத்திற்கு வருவோமா?” உற்சாகமாக அவர் பேச பேச, பரசுவும், கனகாவும் மூச்சுவிட மறந்தனர்.
“”என்ன பரசு… எங்கே உன் அப்பா?’ வந்தவர் சந்தேகத்துடன் கேட்டார். அவர் பார்வை வீட்டினுள் துழாவியது. சுவற்றில் காய்ந்து போன மல்லிகை மாலையில், வைதேகியின் படம் மட்டும் இருந்தது.
“”அவர்… காணாமல் போய்விட்டார். என் மாமியார் போனதும், புத்தி பேதலிச்சுப் போச்சு… நாங்கள் தேடாத இடமில்லை.” தயங்கியபடி சொன்னாள் கனகா.
“”என்ன சொல்கிறீர்கள்… அவர் கையெழுத்து இல்லாமல் விற்க முடியாதே. இறந்து போயிருந்தாலாவது, நீ, அவரது ஒரே வாரிசு என்று வாங்கி விடலாம். ஆனால், இப்போ என்ன செய்யறது… காசியில் காணாமல் போனதாகச் சொல்கிறீர்களே… அங்கு போய் தீர விசாரியுங்கள். போட்டோவுடன் பேப்பரில் விளம்பரம் போடலாம்.” அவர் சொல்ல, கனகாவும், பரசுவும் தவித்தனர்.
காசியில் காணாமல் போனால் தானே, தேடி கண்டுபிடிக்கலாம், வடக்கே ஏதோ ஊர் பேர் கூட தெரியாத ஸ்டேஷனில் விட்டுவிட்டு வந்ததை எப்படி சொல்வது?
வீடுதேடி வந்த அதிர்ஷ்டம், கை நழுவிப் போய்க்கொண்டிருப்பதை இருவருமே உணர்ந்தனர். தாங்கள், தெரிந்து செய்த தீங்கே, வில்லனாகிப் போனதும், “தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற சொலவடையும், நன்கு புரிந்தது.
வாடிப்போன மல்லிகை மலருக்கு இடையே, புன்னகைத்துக் கொண்டிருந்தாள் வைதேகி.

– ராஜலட்சுமி கவுரிசங்கர் (அக்டோபர் 2012)

வயது : 69
படிப்பு : எம்.எஸ்சி., கணிதம்
கடந்த 1966 முதல் எழுத்து துறையில் கால் பதித்து வருகிறார். “கண்ணன்’ பத்திரிகையில் முதன் முதலில் எழுத ஆரம்பித்து, அதில் 20க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். அதன் பின், பல இதழ்களில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பல சிறுகதை போட்டியில் பங்கு கொண்டு, பரிசும் பெற்றுள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. நிறைய புத்தகங்கள் படிப்பது இவரது பொழுதுபோக்கு.

Print Friendly, PDF & Email

1 thought on “திக்கு தெரியாத காட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *