தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,441 
 
 

அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில், முன் நெற்றியில் இருக்கும் தழும்பு மட்டும் பளீரென்று, துலங்கும் செழுமைக்கு திருஷ்டி பதிப்பு போல.

முழுதாய் நரைக்க இன்னும் 20 சதவீதம் இருக்கிறது என அறிவிக்கும் கருமையூடாடும் நரை, கேசக்கற்றை வாரிவிடப்பட்ட விதம், எதிராளியை கவரும் விதத்தில் இருக்கும் இளமை அல்ல, முதுமை கூட ஓர் அழகு தான் என ஜெகன்னாதனைப் பார்ப்பவரை கணிக்க வைக்கும்.

ஏனோ தெரியவில்லை, ஒரு வாரமாக அவருக்குள் ஊர்ந்து கிளைக்கும் நினைவலைகளின் எதிரொலியாக இதோ… பிறந்த மண்ணிற்கு பயணமாகி விட்டிருந்தார்.

தழும்பு

“”அப்பா… இந்த பயணம் இப்போ அவசியமா? ப்ரஷர் வேற நாளுக்கு நாள் அதிகமாகுது. ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆச்சுதுன்னா, நானில்லே கிடந்து திண்டாடணும். சொன்னா கேளுங்கப்பா!” மணிபாரதியின் குரலில் எரிச்சல் அடங்கியிருந்தது.

“”போகணும்ன்னு தீர்மானமாய்ட்டது மனசுக்குள்ளே,” என்றவரின் சொல்லை எதிர்க்க துணிவின்றி, படியிறங்கிப் போனான் மணிபாரதி.
ஒரே ஒரு மாற்றுடுப்பு, குடை சகிதமாக ஜெகன்னாதன் கிளம்பிய போது, பொழுது நண்பகலைத் தொட்டிருந்தது.

மாலை ஆறரை மணிபோல, ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்திருந்தார் ஜெகன்னாதன்.

ரயில்வே ஸ்டேஷன் தாண்டி, ஒரு கிலோ மீட்டர் தொலைவில், தலைவிரிச்சான் ஆலமரமும், அதைத் தாண்டி, சலசலக்கும் குளத்து நீரின் அலை பரவலும், நீரில் பிரதிபலிக்கும் செந்தாழை கணபதியின் கோவில் ராஜகோபுரமும், எதுவும் மாறவில்லை. இன்னும் மனதிற்குள், பால்ய பருவத்து குமிழிகள் குதித்துக் கும்மாளமிட்டன.

ஜடை கார்த்திகேயன், குண்டு தனபால், நீர்யானை கோவிந்தசாமி என, குழுவின் பிரதானிகளாய் திரியும் சக தோழர்கள் முகம் நினைவில் பிரதிபலிக்க, தன்னையும் மீறின ஓர் உற்சாக அலை பரவல் உள்ளத்தினுள்.
பைக்கட்டை இரண்டு தோள்களில் வழியவிட்டு, கழுத்தில் சுருக்கு போல மாட்டி, ஒரு கையில் பிடித்தபடி உலகை அளந்த நாட்கள் எல்லாம், நேற்று நடந்தது போல் உள்ளது.

காலத்தின் சிறகுகள் இறக்கை முளைத்து பறந்த வேகத்தில், திசைக்கொருவராய் சிதறி, உருமாறி, யார், யார் எங்கிருக்கின்றனரோ என்ற சுவடின் உருத் தெரியாது போயிருந்தது, வாழ்வின் வழித்தடங்களால்.
பத்தாம் வகுப்பில், பட்டை பெருமாள் கோவில் பின்புறம் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ச்சியானார் ஜெகன்னாதன்.

உயர்கல்வி முடித்து, பாங்க் தேர்வு எழுதி, பாங்கின் உயர் அதிகாரி பதவி வரை உயர்ந்து, வயது முதிர்வின் காரணமாக, ஓய்வு பெற்று முழுதாய் பத்து வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.

அறுபத்தெட்டு வயது ஜெகன்னாதனிற்குள், ஊரையும், உற்ற தோழர்களையும் காண முகிழ்த்த ஆவல் தான், ஊரில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார், இப்போது!

ரயில் ஓட்டுச்சார்பு இறக்கின அந்தக்கால வீட்டில் தான், மகளை தாரை வார்த்துக் கொடுத்திருந்தார். சொந்த அக்காவின் மகன். பிறந்த மண்ணின் மீதான நேசம், வளர்மதியை வளமான வாழ்வு வாழ வைக்கும் என்ற அவரின் எண்ணம், துளியும் வீணாகவில்லை.

மண்ணின் மகிமையை உணர்ந்த பெண்ணாய் மண வாழ்க்கையில் ஆண், பெண் என, வகைக்கு ஒன்றாய் ஈன்று, பெருமையுடன் இருந்தாள் வளர்மதி.
“”யாரு… அப்பா… வாங்க… வாங்க… ஒரு போனடிச்சிருந்தா, ஸ்டேஷனுக்கு ஆளனுப்பி இருக்க மாட்டேனா? ஏன்ப்பா… நடந்தா வந்தீங்க… அம்புட்டு தொலைவிலேர்ந்து…” தகப்பனை சற்றும் எதிர்பாராத பரபரப்புடன் வரவேற்றாள் வளர்மதி.

“”ஹை… தாத்தாவா… டேய் ரமேசு… ஊர்லயிருந்து நம்ம தாத்தா வந்திருக்கார்டா…” பேத்தியின் குரல் உச்சஸ்தாயிலில், அவரின் வரவை உள்ளே ஒலிபரப்பிற்று.

“”உங்களுக்கெல்லாம் ஒண்ணுமே வாங்கலையேடா செல்லம். ஏதோ நினைப்பு, நாலு நாளா ஊரைப் பார்க்கணும்ன்னு… அதான் கிளம்பினேன். நாளைக்கு காலையில், கடைத்தெருவுக்குப் போய் ஜமாய்ச்சுடலாம் என்ன…” பேரன், பேத்தியை இருபுறமும் நெகிழ்வுடன் அணைத்தவராய், உள்ளே சென்றார்.

“”நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்ப்பா. கருப்பண்ணசுவாமி கோவில் புரவியெடுப்புக்கு வருவீங்கன்னு ரொம்பவும் எதிர்பார்த்தோம். உங்களுக்கு உடம்பு முடியாமப் போச்சு. இப்போ பரவாயில்லையாப்பா, நெஞ்சு சளி தொந்தரவு…” வளர்மதி பேச்சு வாக்கில், நீர் சொம்புடன் எதிரே வந்து நின்றாள்.

“”ம்… வயசானாலே, ஒண்ணு போனா ஒண்ணுன்னு வந்து குடியேறிடும்ன்னு சொல்றது சரியாய்த்தானம்மா இருக்கு. உங்கம்மா போனதுமே, என் மனோபலம் போச்சு. திரேக சவுக்யம், உயிரோட நாட்களின் எண்ணிக்கையை எண்ணிக்கிட்டுருக்கு.”

“”என்னப்பா என்னென்னவோ பேசிட்டு… நாங்கள்ளாம் இல்லையா? இங்கேயே நிம்மதியா இருங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்றீங்க. அம்மாவோட வாழ்ந்த வீட்ல தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கீங்க. ஆமாம்! அண்ணன், அண்ணி எல்லாரும் சவுக்கியம் தானேப்பா?”

“”ம்… எல்லாரும் நல்ல சவுக்கியம்தான்ம்மா. மாப்பிள்ளை எங்கே காணோம்.”

“”வர்ற நேரம் தான்ப்பா. குழந்தைகளோட பேசிட்டிருங்க… சமையலை முடிச்சுட்டு வந்துடறேன்ப்பா.”

“”அம்மாடி வளர்மதி… எனக்காகன்னு எதுவும் வேண்டாம். ஒரு வாய் ரசம் சோறு இருந்தா கூட போதும். உங்களை எல்லாம் பார்த்ததுலயே மனசு நிறைஞ்சுடுச்சு.”

வளர்மதி காதில் வாங்கினால் தானே… பரபரப்பாய் அந்த நேரத்திற்கு, அப்பாவிற்கு பிடித்த பருப்பு உருண்டைக் குழம்பு, அப்பளம், ரசம், பொரியல் என தயாரித்து விட்டிருந்தாள்.

பேரன், பேத்திகள், அபாரமான அறிவு வளர்ச்சியில், கேள்விகள் கேட்டு துளைத்தனர். கதை சொல்லச் சொல்லி பிடிவாதம் பிடித்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மொட்டை மாடியில், “நிலாச் சோறு’ சாப்பிட்டு, பதினொரு மணி வரை, ஊரின் தற்போதைய நிலவரம், உறவுகளின் வாழ்க்கைத் தரம் என அசை போட்டத்தில், திவ்யா தாத்தாவின் மடியிலேயே தூங்கி விட்டிருந்தாள்.

மறுநாள் —
குளித்து முடித்து, வெள்ளை வெளேர் கதர் சட்டை, ஜிப்பா, ஊன்று குடை சகிதமாய், வீட்டின் எதிர்புறம் இருந்த, “செல்ல முத்துமாரி’ கோவிலுக்குச் சென்றார் ஜெகன்னாதன். சற்று நேர வழிபாடு முடித்து, தெருவிறங்கி நடந்தார்.

தனபால் இருந்த வீடு, நினைவில் பளிச்சென்றிருந்தது. எங்கே இருக்கிறான் என்று அறியும் ஆவலுடன் படியேறினார்.

“”இங்கே தனபால்ன்னு ஒருத்தர்… பெரிய கடை வீதியில் ஜவுளிக்கடை வெச்சிருந்தாரே… நான் அவரோட பால்ய சிநேகிதன்.”

“”மல்லிகா… உங்கப்பாவோட பால்ய சிநேகிதராம், வந்திருக்காங்க…” சோபாவிலிருந்த நபர் மீண்டும் பேப்பரில் மூழ்க, ஜெகன்னாதனுக்கு என்னவோ போலானது.

“”அப்பா… அப்பா தவறிப் போய் எட்டு மாசமாகிறது. வாங்க உள்ளே…” என எதிர்கொண்டாள், மல்லிகா என விளிக்கப்பட தனபாலின் மகள்.

அழைப்பை மறுக்க இயலாது, உள்ளே பிரவேசிக்க வேண்டியதாகிப் போனது. “மழ மழ…’ என புதுக்கருக்குடன், புது மோஸ்தரில் இருந்த கூடத்து சுவரில் பெரிதாய் தனபாலின் உருவப்படம், சந்தன மாலையை தழையத் தழைய சுமந்து காற்றிலாடிக் கொண்டிருந்தது.

குண்டு தனபால் சாவை தரிசித்து, சடலமாக குழிக்குள் அடைக்கலமாகி விட்டிருந்த விஷயம், நெஞ்சை என்னவோ செய்தது. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒரு சில வார்த்தைகள் பேசி வெளியேறினார்.

உடன் படித்தவர்களில் ஒருவரையேனும் சந்திக்காது இன்று திரும்புவது இல்லை என்ற வைராக்கியத்துடன், உச்சி வெயில் முகம் மறைக்க, கைவசம் இருந்த குடையை விரித்து நடந்தார். நெஞ்சுக் கூட்டிற்குள் மெலிதான சுவாசத் திணறல்… சிரமப்பட்டு சுவாசிக்க வேண்டியிருந்தது.
முத்தாளம்மன் கோவில் எதிர்புறம் தான், கோவிந்தசாமியின் வீடு இருந்தது. அதே வீட்டில் இன்னும் இருக்கிறானோ… இல்லை வாழ்க்கைப் பயணத்தில் வழித்தடம் மாற்றியமைத்து, வாசஸ்தலம் மாற்றிக் கொண்டு விட்டானோ… இல்லை தனபாலைப் போல, அவனும் போய் சேர்ந்து விட்டிருப்பானோ…

நினைவுகள் உள்ளே கேள்விகளுடன் அலைபுரள, கம்பி கேட்டைத் தள்ளித் திறந்தார். பதிலாய், விரைப்புடன் ராஜபாளையத்து உயர்ரக நாய் ஒன்றின் குரைப்பொலி. சற்றே பயந்து, கேட்டை மூடி பின்வாங்கினார்.

நட்சத்திர ஜன்னல் பதிப்புகளுடன், முண்டா பனியன் ஆசாமி ஒருவர் எட்டிப் பார்த்தார்.

“”நாய் கட்டித்தான் போட்டியிருக்கு… பயப்படாம வாங்க…”

ஜெகன்னாதன் தைரியமாய் உள்ளே பிரவேசித்தார். கோவிந்தசாமி பற்றி விவரமாகக் கூறினார்.

“”ஓ… கோவிந்தசாமியா… அவர் இப்போ எங்கேயிருக்காருன்ற விவரம் சரியா தெரியலை. நாங்க இங்கே வந்து ஒன்பது வருஷமாகுது. தொழில்ல ரொம்ப நொடிச்சுப் போயிட்டதால, வீட்டை வித்துட்டார். அவரோட மூத்த பையன் காமராசு, ரெண்டாவது தெருவுல தானிருக்கார். அவர்கிட்ட வேணா விசாரிச்சு பாருங்க, தகவல் தெரியும். டேய் வேணு… ஐயாவுக்கு காமராசு வீடு காட்டிட்டு வா…” உள்நோக்கி குரல் கொடுத்தார்.

“”தகவலுக்கு ரொம்ப நன்றி,” இரு கரம் கூப்பி நடந்தார்.

வேணு என்ற அந்த வாலிபன், அவசரமாய் வெளிப்பட்டான்.
ஜெகன்னாதனின் தேடலுக்கு வழித்துணையானான்.

“”இந்த வீடுதானுங்க,” கைகாட்டி விட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.

“”கோவிந்தசாமியோட மூத்த மகன் காமராசுன்றது…”

“”காமராசு நான் தான். நீங்க?” என்றவனின் முகத்தில் கேள்விக் குறிகள்.

“”நான் கோவிந்தசாமியோட ஒண்ணா படிச்சவன். இதே ஊர் தான். அப்பாவை பார்க்கணும்ன்னு ஒரு நினைப்பு…”

“”அப்பாவோட சிநேகிதரா… உள்ள வாங்க…” குரலில், வேற்றாள் என்ற தன்மை மாறி, சற்றே நெகிழ்வு இழையோடிற்று.

“”இங்கே தானிருக்காரா அப்பா?”

“”ம்… இப்போ தான் ரெண்டு மாசமா இங்கேயிருக்கார். ஆஸ்துமா ட்ரபுள். கண் ஆபரேஷன் வேறு செய்திருக்கு. மேலே மாடி அறையில் தான் அவர் இருப்பிடம்,” காமராசு முன்னோக்கி படியேற, சுவாச அழற்சியுடனே, சிரமப்பட்டு படியேறினார் ஜெகன்னாதன்.

கோவிந்தசாமி, மிகவும் மெலிவாய் நரையூடாடும் கிருதாவுடன், முன்னந்தலை முக்காவாசி வழுக்கையாகி விட்டிருக்க படுத்து கிடந்த கோலம், இதுவா கோவிந்தசாமி என்றிருந்தது ஜெகன்னாதத்திற்கு. “பொதும் பொதும்…’ என்றிருந்த அந்த திரேகத்தை, முதுமை தின்று விட்டதா? காலத்தின் செல்கள் கரையானாய் அரித்துப் போட்டு விட்ட மிச்சத்தின் உயிர்க்கூடு தானோ இந்த தோற்றம்?

“”கோவிந்தா… என்னை யாருன்னு தெரியறதா?'” அருகில் சென்று குனிந்து கரம் பற்றினார்.

திரும்பி முகத்தில் ஊடுருவி பார்வை பதித்தவரை, நெஞ்சுச்சளி ஒரு உலுக்கு உலுக்கி திணற வைத்தது.

“”கோவிந்தா… நிதானம்… எழுந்துக்க வேணாம். சிரமம் வேணாம். படுத்தே இரு…” என்றவர் அமர வாகாய், சேரை இழுத்துப் போட்டான் காமராசு.

“”யாரு?” என்றவரின் முன்பற்கள் மூன்றைக் காணோம்.

“”யாருன்னு நீ தான் சொல்லணும்!” கைகளைப் பற்றினார் ஜெகன்னாதான்.

“”நீ… நீ ஜெகன்னாதன் தானே?

ஜெகன்னாதன் மின்னலாய் ஒளிர்ந்தார்.

“”கோவிந்தா… என்னை மறக்கலைன்னு ரொம்ப சந்தோஷம். பார்த்த உடனே பெயரை சொல்லிட்டியே.”

“”ம்… உன் முன்நெற்றித் தழும்பு தான், உன்னை ஜெகன்னாதன்னு எனக்கு அடையாளம் காட்டிடுச்சு. ஏன்னா, கோலி சோடா பாட்டில் விட்டெறிஞ்சு, இந்த மாறாத் தழும்பை உண்டாக்கினவனே நான் தானே…” எழுந்து உட்கார முயற்சி செய்தவரை, காமராசுவும், ஜெகன்னாதனும் சேர்ந்து கைதாங்கலாய், முதுகிற்கு தலையணையை முட்டுக்கொடுத்து உட்கார வைத்தனர்.

“”காமராசு… இவர் என் சிநேகிதர். குடிக்க ஏதேனும் கொண்டு வா.”

“”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் கோவிந்தா… உன்னையாவது பார்ப்பேனா, இல்லையான்னு ஒரே நெருடல். ரொம்பவும் மெலிஞ்சுட்டேடா, கோவிந்தா!”

“”ம்… எல்லாம் காலத்தோட செயல். தொழில்ல நம்பி ஏமாந்து, வீடு போனது, கையிருப்பும் கரைஞ்சது. ராமா, சிவான்னு மனநிம்மதி தேடி, சேவாஸ்ரமம் போய் நாலு வருஷம் இருந்தேன். உடம்பு முடியலை, சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கு. ஊர் மண்ல உயிரை விட்டா பரவாயில்லைன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம்.

“”காமராசுவுக்கு கடுதாசி போட்டேன். வந்து கூட்டிட்டு வந்துட்டான். நாட்களை நகர்த்திட்டு இருக்கேன். தன்னிச்சையா நடக்க முடியலை, எழுந்துக்கவும் முடியலை, சீக்கிரம் போய் சேர்ந்துடணும் ஜெகன்னாதா…” தெளிவான குரலில் குமுறினார் கோவிந்தசாமி.

“”தனபால் தவறிட்டான் தெரியுமா?”

“”ம்… கேள்விப்பட்டேன். யாருக்கு மனசுல நினைப்பு இருக்கு. வாழ்க்கை முழுக்கவும் ஓட்டம். மனைவி, குழந்தைகள், உற்றம், சுற்றத்துல கவுரவம், அந்தஸ்துன்னு மாராத்தான் ஓட்டம், மாரடைப்பு வரலை, மனசு தான் அடைபட்டு போச்சு. எதுவும் நிலையில்லை ஜெகா… யாரும் நமக்காக, எதையும் இழந்துட முன் வர்றதில்லை. சுயநலம், அதையும் தாண்டின எதிர்பார்ப்பு. வாழ்க்கை பணத்தால ஆனது. உறவுகள் நிலைச்சு, வலிமையா நிக்கணும்ன்னா, ஸ்திர சொத்துக்களை தக்க வச்சிக்கணும். இல்லைன்னா, என்னோட கதி தான்!”

“”கோவிந்தா … ரொம்பவும் பேசறே. போதும் ஓய்வெடு. உன் ஒருத்தனையாவது பார்த்தேன்ற சந்தோஷம். வரட்டுமா?”

“”ஜெகா… ஊருக்கு போறதுக்குள்ள, இன்னொரு தரம் வந்துட்டுப் போடா மறக்காம!”

“”பார்க்கிறேன்…” ஆதரவாய் கைகளை அழுந்தப்பற்றி விடைபெற்றவரின் கண்களில், நெகிழ்வுடன் நீர் திரண்டது. தொண்டைக் கண்டம் ஏறி இறங்கிற்று.

கோவிந்தசாமி முகத்திலும் நட்பின் இறுக்கம் இழையோடிற்று.

“”உடம்பைப் பார்த்துக்கோ கோவிந்தா…” என்றவராய், மாடிவிட்டு இறங்கி, தெரு தாண்டி சாலையில் நடந்தார், மகள் வீடு நோக்கி. வெயிலின் முகம் மேற்கே குவிந்திருந்தது. முதுகில் சுடச்சுட தகிக்கும் சூரியக் கதிர்கள். குடை விரித்து தோள் பரப்பை மொத்தமாய் மறைத்து நடந்தவரின் நெற்றித் தழும்பை, விரல்கள் தன்னிச்சையாய் தடவிப் பார்த்தன.

– ஆர்.கீதாராணி (டிசம்பர் 2010)

ஆர்.கீதாராணி
கல்வித் தகுதி: எம்.காம்.,அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிகிறார். எழுத்துப் பணிக்காக தமிழக அரசின் குறல்பீட பாராட்டிதழ் மற்றும் கர்நாடக மாநில ஆய்வு மையத்தின், “வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றுள்ளார்.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 8

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *