கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 14,230 
 

நீளமான தலைப்புகளை வாசித்து மூச்சு இரைத்தது போல்தான் உனக்கும் அவனுக்குமான இடைவெளி நீண்டு கிடக்கிறது. உன் வீட்டு வரவேற்பறையில் சினைகொண்டது போல் ஒரு பல்லி ஓர் எறும்பின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது. அலமாரியின் நிழலில் எறும்பைக் காணாமல் திகைத்து நிற்கிறது. எறும்பின் புண்ணியமோ என்னமோ, அதைக் காணவே இல்லை.

பார்க்காத ஒரு நொடியில் அந்த எறும்பைப் பல்லி விழுங்கிவிட்டதோ என்றுகூட உனக்குத் தோன்றலாம். சுற்றி உள்ள சந்தோஷங்களில் இருந்து சிலர் சந்தோஷங்களை எடுத்துக்கொள்வார்கள். இருக்குமிடம் எல்லாம் சந்தோஷமாக்கிக்கொள்வார்கள் இன்னும் சிலர். நீ சிரிக்கிறாய்… ஆனால், அதில் சிரிப்பு இல்லை.

அலை அடித்துப் போகிற துரும்புகூட சில நேரம் மீள் அலையின் போக்கில் கரையில் ஒதுங்குவது உண்டு. நீ நதியலை மாதிரி. நீர் அடித்துச் செல்லும் திசைகளில் மிதந்து செல்கிறாய். வெளியே பார். ஒரு பூ மலர்ந்து இருக்கிறது. ஆனால், உன் கவலை மேஜையில் வைத்த உருண்டை இட்லிகளை ஏன் அவன் சாப்பிடவில்லை என்பது தான்.

‘இத்தத் தூக்கி எறிஞ்சா, என்னாகும்? இந்தியாவில் குண்டுவீச்சுனு தலைப்புச் செய்தியா வரும்’ என்று அவன் கிண்டல் செய்தபடி சாப்பிட்ட நாட்கள் உன் கண்ணுக்குள் நிழலாடி, நிழல்கள் கரைந்து கண்ணீர் ஆகின. என்ன பெண் நீ? உணர்வுகளுக்காக அழவா நீ பிறந்திருக்கிறாய்? காரணங்கள் அற்ற உணர்வுகளின் சங்கடம் உன் கண்களில் தேங்கி நிற்கிறது.

தனிமையின் கூர்நொடிகளில் மின்விசிறியின் ஓசைகூட பிரமாண்டமாக எதிரொலிக்கிறது உனக்கு. உன் தனிமையின் வலிகளை உணர்ந்திருப்பானா அவன்? அல்லது, பெண்மையை முற்றிலும் நிராகரிக்கும் ஆண் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உணர்வு அவனிடமும் இருக்கக்கூடுமோ?

இங்கே பார். நீயும் அவனும் எடுத்துக்கொண்ட புகைப்படம். நீ கூட லேசாகப் புன்னகைக்கிறாய். அவன் முகத்தில் ஓர் இறுக்கம் இருக்கவே செய்கிறது. ஒருவேளை, ஏதாவது நிர்பந்தத்தில்தான் உன்னைத் திருமணம் செய்துகொண்டானோ? முறைக்காதே. பயமாக இருக்கிறது. ஒரு பேச்சுக்குச் சந்தேகங்களைக் கேட்கக் கூடாதா?

இப்போதும் அவனை விட்டுக்கொடுக்கப் பிடிக்காத உன் மனநிலையை அவன் புரிந்துகொண்டால் சரி. ஆனால், புரிந்து கொள்வானா? அவனுக்கான பல பிரச்னைகளில் நீ ஒரு துரும்பாகக்கூட இருக்கலாம். மையப் புள்ளியாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உன் அம்மா, நடுக்கூடத்தில் உட்கார்ந்து புட்டுக்கு மாவு பிசைவாள். உப்புத் தண்ணீரை ஒரு சின்னக் குவளையில் வைத்துக்கொண்டு மாவில் தெளித்துப் பிசறுவாள். பாசிப் பயிறை கடுகு, வத்தல் போட்டுத் தாளித்துத் தேங்காய்ப் பூ துருவிப் போட்டு சீனி தூவுவாள். எல்லாவற்றுக்கும் அததற்கான வாசனை உண்டு. உன் தனிமைக்கான வாசனை?

வெறும் காற்று அலையும் அறை. ஒரு ராஜகுமாரியின் உயிர் இருக்கும் வசியப்பெட்டி போல உன் வானொலி. அதில் இழையும் இசை உன் மேல் படர்ந்து ஜன்னல் வழியே தப்பிக்கிறது. எதுவும் தங்குவதில்லை உன்னுடன். உன்னைத் தவிர.

நீ இழந்த உன் குழந்தையின் குரலை நீ மறுபடியும் கேட்க முயல்கிறாய் என்று கடவுள் சொன்னார். பிறக்காத ஒரு குழந்தையின் குரலுக்காக யாசகம் கேட்கிற ஒரே மனுஷி நீயாக மட்டுமே இருக்க முடியும். அல மாரியைப் பார்த்தால் இட்லியாகத் தெரிகிறது. ஆரஞ்சு வண்ணத்தில் உடுப்பு. வசம்புக் கயிறு. தலைமுடியில் குத்த சிவப்பு க்ளிப். கடவுளுக்கு உன் அலமாரியைக் காட்ட வேண்டும்.

தங்கம் அக்கா தெரியுமில்லையா உனக்கு? புருஷனைக் கைக்குள் போட்டுக்கொண்டு மாமியாக்காரியை அடிக்கிற பிடாரி. ஆனால், அவளை மாதிரி உன்னால் தத்துவம் பேச முடியுமா? ஒன்று செய், உன் புத்தகங்களுக்கு உயிர் கொடுக்க கடவுளிடம் வரம் கேள். அதில் பிடித்த புருஷனைக் கட்டிக்கொள். ஹா… ஹா..!

சிரிப்பதைப் பார்த்துப் புருவம் சுருக்குகிறாய். நீ ரொம்பவும் அழகாக இருக்கும் சமயங்கள், நீ புருவம் சுருக்குகிற நேரங்கள். நீ அழகு என்று சொல்லும்போது ஏற்படும் சந்தோஷம், அவன் சொன்னால் எப்படி இருக்கும் என்று மறுகேள்வி கேட்கும்போது நதியின் அலையில் சுருளாக மறையும் நிலவாக மறைகிறது.

எங்கு வந்தது, எப்படி வந்தது இந்த இடைவெளி? ஒரு துண்டுக் காகிதம் தரையில் விழுந்த சப்தம் பிரமாண்டமான பரிணாமங்களை அடைவது போல், ‘சாப்பிடுறீங்களா?’ என்று நீ கேட்கிறாய். ‘ம்’ என்கிறான். அவன் தட்டுச் சாப்பாட்டை எடுத்துவைக்கிறாய் ‘குழம்பு விடவா?’ என்றதும், ‘ம்’ என்கிறவன் ‘கொஞ்சமா’ என்று நீளமான வாக்கியம் ஒன்று பேசியதுபோல எச்சில் மிடறு விழுங்குகிறான்.

எங்கோ தொமீல் என்று சத்தம் கேட்கிறது. நீ சடார் என எழுந்து எட்டிப் பார்க்கிறாய். பக்கத்து வீட்டு ஜன்னல், காற்றில் மூடின சத்தம். கீழே உட்கார்கிறாய். அவன் நிமிர்ந்தே பார்க்காமல் சாப்பிட்டபடி இருக்கிறான். நீ விரலைத் தட்டுக்கு நேரே நீட்டி, ‘கூட்டு’ என்கிறாய்.

‘வேணாம்.’

‘ஏன், ஒண்ணுமே பேச மாட்டேங்கிறீங்க?’

‘ம்?’ என்கிறான்.

‘அதான்…’

‘ரசம்’ என்கிறான்.

கண்களில் நீர் நிறைகிறது உனக்கு. அவன் போன தும் வீட்டைப் பூட்டிவிட்டு விறுவிறு என்று எங்காவது போய்விட வேண்டும். ‘ரசம்’, ‘ம்?’ என்று அவன் தனியாகப் பேசட்டும் என்று உனக்குத் தோன்றுகிறது.

பாதிச் சாப்பாட்டை மீதி வைத்துவிட்டு எழுந்தான். ஒரு நாயாவது வளர்த்திருக்கலாம் நீ. அல்லது உனக்கா வது ஒரு வால் இருந்திருக்கலாம். மறுபடியும் முறைக் கிறாய். ஏன் உனக்கு அவன் மேல் மட்டும் கோபம் வந்தாலும் உடனே மறைந்துவிடுகிறது?

அந்தப் பல்லி, எறும்பைப் பிடித்துவிடக்கூடும்.நாளைய பொழுது விடிந்துவிடக்கூடும். ஆனால், உங்க ளுக்கான இடைவெளி நீண்டுகிடக்கும், இரை உண்ட மலைப் பாம்பின் விஸ்தாரத்தோடு. மீதி சாப்பாட்டை என்ன செய்ய என்று யோசித்து, ஷெல்ஃபில் இருந்து ஒரு தட்டை எடுத்து மூடிவைக்கிறாய். ஆம்பூர் பிரியாணி பற்றி உன் அப்பா பேசும் வார்த்தைகளின் வாசம் இப்போது உன்னைச் சுற்றிக்கொள்கிறது.

ஒரு பல்லியாக, ஒரு எறும்பாக, ஒரு நாயாக, ஒரு வானொலிப் பெட்டியாக நீ பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா உனக்கு? நல்லவர்கள் எல்லோருமே தோற்றுப்போகிறவர்கள்தான் என்று உச்சி மலையில் நின்று கண்ணீர் வழிய வழியச் சொல்லத் தோன்றுகிறதா?

நீ சாய்ந்துகொள்ளத் தோளும் உன்னைப் பாதுகாக் கும் ஸ்பரிசமும் அவனிடம் இருக்கிறது. ஆனால், அவனிடம் மட்டுமே இருக்கிறது. பல்லியிடமிருந்து தப்பிய எறும்பு இப்போது நீ மூடிவைத்த தட்டின் வெளிப்புறமாக ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கையைச் சாப்பிடலாம். அலமாரியில் வைக்கப்பட்ட வசம்புக் காப்பு, பிறக்காத குழந்தைக்காகக் காத்திருக்கலாம்!

மெள்ள எழுந்து ஜன்னல்களை நீ சாத்தும் வேகத்தைப் பார்த்தால், நீ இந்த இடைவெளியைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பவில்லை. வெளியே இடைவெளியைக் கிழித்துக்கொண்டு கிளம்பப் போகிறாற்போல் தோன்று கிறது.

கடைசி ஜன்னலைப் பூட்டும்போது அவன் கடந்து போன சாலையைப் பார்க்கிறாய். பார்வைகள் அநாதை யாகுமா? உன் கண்களில் உலவுகிறது ஓர் அநாதையின் முற்றுப்பெறாத பயணம். தூக்க மாத்திரைகள் சாப் பிட்டோ, தூக்குப் போட்டோ, நீ முடிவு மேற்கொள்ளப் போகிறாயோ என்று பயம் வருகிறது முதன்முதலாக.

நிதானமாக நடந்து கழிப்பறைக்குள் போகிறாய். நாலுக்கு எட்டடி அறை. சுவரில் இருக்கும் ஷெல்ஃபில் பழைய தமிழ் வார சஞ்சிகைகள் கிடக்கின்றன. உன் உதடுகள் ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என முணுமுணுக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ படத்து சூர்யா மாதிரி, முதுகில் கிடார் சுமந்து அவன் வந்து கதவைத் தட்டுவான் என்று நினைக்கிற வேளையில், எதிர்பாரா மல் இரண்டு குழாய்களையும் திறந்துவிடுகிறாய்.

மூடின கதவு, ஜன்னல் வழியாக சப்தங்கள் வெளி யேற முடியாத தருணத்தில் இரைச்சலாக வழியும் அருவியாக நிசப்தம் கிழித்து உன் காலடியில் வந்து விழுகின்றன நீர்த் திவலைகள்!

– 25-03-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *