கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 11,949 
 
 

நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை சொல்லியாக வேண்டும்.

நான் ஒரு திருடன் இப்போது அல்ல.மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளை வேட்டி சட்டை அணிந்துக் கொள்ளவில்லை.பதவி பிரமாணம் எல்லாம் எடுக்கவில்லை.நானாக பணியில் நேரடியாக இறங்கிவிட்டேன்.ஆபத்தான தொழில் செய்து தாராளமாக சம்பாதித்தேன்.திருடன் என்ற பெயரை.அதற்கு முன் திருடியதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.எப்போதாவது என்று இருந்த பழக்கம் வாடிக்கையானது அப்போதில் இருந்து தான்.

அப்போது குடும்ப வருமானம் பரவாயில்லை.இன்று போல் வீழ்ந்துகிடக்கவில்லை.சொந்த காலில் தான் நின்றுக் கொண்டிருந்தது.அது அப்படியே காலூன்ற தவறியது தான் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம்.அது வேறு கதை.எங்கே விட்டேன்….

மூன்றாம் வகுப்பு,சில்லரை தட்டுபாடு இல்லாமல் குடும்ப வண்டி ஓடியது.ஆகவே கண்ணில் பட்ட நிலங்களுக்கு எல்லாம் தன் குடையின் கீழ் அடைக்கலம் தந்த இங்கிலாந்து சாம்ராஜியத்தை போல தட்டுபட்ட சில்லரைகளுக்கு எல்லாம் என் சட்டைப் பைக்குள் அடைக்கலம் கொடுக்க ஆரம்பித்தேன்.ஏன் திருடினேன்1 அதை விளக்கினால் இது ஒரு நாவலாக மாறிவிடக்கூடும் சிறுகதையாகவே முடித்துவிடுகிறேன்.

பிரித்தானியாவின் மேரிகோல்டு துவங்கி குட்டே,ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டியென பிஸ்கட்டுக்களும்,மிக்சர் முதலான காரவகைகள், பால் கோனென ஐஸ்கிரீம்ங்களும்,பழங்களென அநேக வகை நொருக்கு தீணிகள் மாறி மாறி எங்கள் வீட்டில் கிடைக்கும்.சுதந்திரத்தை தவிர.அப்படியே திண்பண்டங்கள் குவிந்து கிடந்தாலும்,நினைத்த நேரத்தில் எல்லாம் கிடைக்காது.என் பெற்றோர் கொடுக்கும் போது தான் சாப்பிட வேண்டும்,அவர்கள் கொடுப்பதை தான் சாப்பிட வேண்டும்.

என்ன செய்வது எப்படியாவது அரைத்துக் கொண்டே இருக்க வேண்டுமே.வரவர பிரத்தாணியா மீது பிரேமை குறைந்து வருகிறது.மாறாக தெருவோர கடையின் தேன்மிட்டாய்களும்,ஈ மொய்க்கும் பன்களும் என்னை அலைக்கழித்தன.வீட்டில் கேட்டால் “தெருக்கடையில் எல்லாம் எதுவுமே வாங்ககூடாது.ஒழுங்க வீட்ல இருக்கிறத முதல்ல திண்ணு” என்று வழக்கம் போல மிரட்டினார்கள்.

வேறுயாரிடமும் கேட்டும் பழக்கமில்லை.மீறி கேட்டால் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.தானாகவும் யாரும் எனக்கு காசுக் கொடுப்பது இல்லை.தப்பி தவறி யாராவது கொடுத்தால் தேசிய கீதம் பாடுவது போல கைகளை இருக்கி மூடிக்கொள்ள வேண்டும்.மறந்து கையை நீட்டிவிட்டேன்,அப்பாவும் நீட்டிவிடுவார்.விதிவிலக்காக வற்புறுத்தி யாராவது காசு தந்தால் அப்பா அம்மா முன்னிலையில் அப்படியே உண்டியலில் போட்டாக வேண்டும்.வேறுவழியே இல்லை என்று தான் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தேன்.

ஏதோ என் திருட்டுக்களை நியாயப்படுத்த இப்படி அளக்கவில்லை.திருடியதை ஒரு சுதந்திர போராட்டமாக காட்டிக் கொள்ளவும் விழையவில்லை.நான் திருடனாக மாற சுதந்திரம் மறுக்கப்பட்டது தான் அடிப்படை என்பதையே பிந்தைய நாட்களில் தான் புரிந்துக் கொண்டேன்.ஆனால் கதை அதுவல்ல.

முதலில் ஒவ்வொரு நாணயமாக எடுக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்தபடியே மாட்டிக் கொள்ளவில்லை.வெற்றிக்களிப்பில் பணியை தொடர்ந்தேன்.சில மாதங்களில் ஒரு இனம் புரியாத உத்வேகம் வந்தது.கண்முடித்தனமான தைரியத்தில் சிக்கும் நாணயங்களை எல்லாம் வாரிசுருட்டிக் கொண்டு திரிந்தேன்.ஆனால் அப்பாவிற்க்கு கணக்கு தெரியவில்லை என்று நான் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.

மாட்டிக்கொண்டது கூட தெரியாமல் கடமையே கண்ணாக இருந்தேன்.அப்பாவை நோக்கினேன்.நொடிக்குநொடி கோவத்தில் வெடித்து கொண்டிருந்தார்.முட்டிப்போடுவது தான் தினசரி சேட்டைகளுக்கு எனக்கு கொடுக்கப்படும் தண்டனை.வழக்கமான தண்டனைக்கு அன்று ரெஸ்ட்.நேரடியாகவே ஆக்ஷனை ஆரம்பித்துவிட்டார் அப்பா. கம்பி,தகடு,என்று கண்டமேனிக்கு சுமைகளை தூக்கி தூக்கி காய்த்து போன கரங்கள் என் தோலை பதம்பார்த்தன.

தந்தை அடிக்கும் போது ஓடி வந்து “தெரியாமல் பண்ணிட்டான்.இனிமே இப்படி செய்யமாட்டான்.புள்ளைய அடிச்சே கொன்னுராதிங்க” என்று காப்பாற்றும் அம்மாவிற்க்கு எல்லாம் நான் கொடுத்து வைக்கவில்லை.லாக்கப்பில் லாடம் கட்டும் எஸ்.ஐயின் லட்டி ஒடிந்துவிட்டால் இன்னொரு லட்டியை எடுத்துக் கொடுக்கும் ஏட்டு போல தான் என்னம்மா.நிர்கதியாக நொருக்கப்பட்டு கிடந்தேன்.இட்லரின் கடைசி கால ஜெர்மனிப் போல.”தோல உருச்சிடுவன் கம்மனாட்டி. இந்த வயசுலே இன்னா வேல பாக்குது பாரு.திருட்டு நாயி” என்று மிரட்டிவிட்டு அப்பா நடையைக்கட்டினார். கொஞ்ச நாளைக்கு வாலை சுருட்டிக்கொண்டேன்.

வந்த வழி தெரியாமல் வலி பறந்ததும்,வேதாளம் முருங்கைமரத்தில் ஏறியது.ஆனாலும் அடுத்த அடுத்த முயற்சிகளில் ஏமாற்றமே மிஞ்சியது.சில்லரைகளின் கருவூலங்கள் எல்லாம் கண்ணும் கருத்துமாக இடமாற்றம் செய்யப்பட்டன.ஐ.ஏ.எஸ்களை போல.எங்கே சென்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அழுத்தும் அரசியல்வாதியை போல நானும் விடுவதாக இல்லை.சும்மாவா சொன்னாரு வள்ளுவர்.”முயற்சி திருவினையாக்கும்”.கைநிறைய திருடியவன் ஒன்று இரண்டென்று தேடி தேடி சம்பாதிப்பதை நினைக்கையில் தன்னிரக்கம் ஊற்றெடுத்தது.ஆனால் நாணயம் சிக்கிய வேகத்தில் நானும் சிக்கினேன்.

கண்ட இடத்தில் கிடப்பதில் கை வைத்தாலே கண்டுபிடித்து உப்பு கண்டம் போடுபவர்கள்,வைத்த இடத்தில் பைசா இல்லையென்றால் புளியோதரையா கிளரிக்கொண்டுயிருப்பார்கள்.அதே பழைய தண்டனைகள்.வலி பழகியது தான் என்றாலும்,விளைவு வேறு விதமாக இருந்தது.வீட்டில் பணத்தை பார்ப்பதே உள்நாட்டில் பிரதமரை பார்ப்பது போல ஆனது.

நான்கைந்து மாதத்தில் தொழில் நொடித்துவிட்டது.கொண்டாட்டமாக கழிந்த நாட்கள் மடிந்து தின்பண்டங்களுக்கு திண்டாட்டமானது.எந்த அளவுக்கு என்றால் ஒரு நாள் எங்கு துளாவியும் பத்து பைசாகூட கிட்டவில்லை.எதர்ச்சையாக ஆணியில் தொங்கிய அப்பாவின் பச்சை சட்டை கண்ணில் பட்டது.அந்நாள் வரை அப்பாவின் சட்டை பேன்டில் நான் கை வைத்தது கிடையாது.தேவையான சில்லரைகளை பீரோவும்,மிக முக்கியமாக உண்டியல்களும் எனக்கு கொடுத்து வந்தன.அந்த பாரியும்,ஓரியும் கையைவிரித்த பின்னால் என்ன செய்வது கையை பிசைவதை தவிர.துணிந்து அப்பா சட்டைபையில் கைவிட்டேன்.சிகரெட்டும்,நிஜாம் பாக்கும் வாசனையால் இணை நாகங்களை போல பின்னிபிணைந்து அவ்விடத்தை ஆக்கிரமித்து இருந்தன.சிகிரேட் வாசமே எனக்கு சத்ரு.அதிலும் அப்பா பிடிப்பது ஃபில்டர்கூட கிடையாது.ஒரு ரூபாய் சிசர்.சொல்லவா வேண்டும்.

ஹமாம் மணத்தோடு திரும்பி வெறியோடு அச்சட்டையை தலைகீழாக உதறினேன். இரண்டு ரூபாயுடன் புறப்பட்டேன்.சமீபமாக கானலாக இருந்த காசு கையில் வந்ததும் கண்ணை மறைத்தது.

நல்ல வேலையாக நான் வீடு திரும்புகையில் அப்பா வீட்டில் இல்லை.அதே சமயம் ஏட்டிற்க்கு எஸ்.ஐயாக புரோமோஷன்.கோலும் கையுமாக காத்திருந்தாள்.

வீட்டிற்குள் நான் ஓரடி எடுத்து வைத்ததும், சார்ஜ் எடுத்த ஜோரில் ஸ்ட்ரிக்டா லட்டி சார்ஜ் பண்ணிட்டாள்.அடி பழசு தான்.ஆனாலும் அம்மாவின் அடி புதுசு.நிஜமாக வலித்தது. உடல் அல்ல உள்ளம்.சோகம் நெஞ்சை முட்டினாலும் அம்மா தானே என்ற அலட்சியத்தில் அவளின் வசவுகளையும் அதட்டல்களையும் காதில் போட்டுக்காமல் வீதியில் இறங்கி ஓடினேன்.பக்கத்து தெருவை கூட தாண்டவில்லை.மூச்சிரைக்க விரட்டி வந்து காலரை பிடித்து இழுத்து கொண்டுபோனாள்.வீட்டிற்க்குள் தள்ளி எட்டிமிதித்தாள். அமைதியாக சமையலறைக்குள் நுழைந்த போது,எஸ்.ஐ அம்மாவாக மாறிவிட்டாள்.திண்பண்டம் எடுத்து வந்து கொடுத்து என்னை சமாதானப்படுத்தி புத்திமதி சொல்லப் போகிறாள் என்று நினைத்தேன்.நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்….சென்ற வேகத்தில் வத்திபெட்டியோடு திரும்பிய அம்மா அதில் இருந்து ஒரு குச்சியை உருவி உரசினாள்.நெருப்பை முகத்தருகே கொண்டு வந்து “சூடு வச்சிடுவன்.வாலை சுருட்டிக் கொண்டு போட்ரத திண்ணுட்டு ஒழுங்கு மரியாதையா படிக்கிற மயிற பாரு” என்று அதட்டினாள். சொல்லி வைத்தது போல சமயத்தில் வந்தார் அப்பா.வந்ததும் வராததுமாக ரெண்டு தட்டுதட்டி உச்ச ஸ்தாயிலில் தன் எச்சரிக்கை பிரசங்கத்தை தொடங்கினார்.உச்சக்கட்டமாக “பால்டாயில் ஊத்தி சாவடிச்சிடுவன்” என்றார்.

அந்த வார்த்தை நிஜமாகாது என்பது ஒரு வாரத்துக்குள்ளாகவே கண்டுக்கொண்டேன்.சும்மா அப்படி தான் மிரட்டுவார்கள்.சாகலாம் அடிக்கமாட்டார்கள்.வீட்டவிட்டு போன போது என்ன ஆச்சி பக்கத்து தெருகூட தாண்டல தேடிவந்தாங்களா இல்லையா.

அந்த உண்மையை உணர்ந்த நொடியிலிருந்து உண்ணதமான தொழிலை துணிச்சலோடு தொடர்ந்தேன்.இந்த காசு தான் கண்ணில் படுவனா என்றது.ஸ்விச்சர்லாந்தில் உறங்குவது போல சில்லரைகள் பத்திரமாக எங்கோ பதுக்கபட்டன.மிகவும் சவாலான அந்நாட்களில் தான் ஸ்பெக்ட்ரம் போல… சரி வேண்டாம். வாட்டர் கேட் போல இமாலய திருட்டு ஒன்றில் ஈடுபட்டேன்.

அன்று ஊரிலிருந்து பாட்டி வந்து இருந்தாள். எனக்கும்,தங்கைகளுக்கும் சேர்த்து முழுசாக நூறு ரூபாய் கொடுத்தாள்.அதுவும் என் கையில்.டிவிஸ்ட் என்னவென்றால் கொடை நடந்தது அப்பா அம்மா முன்னிலையில்.வேறு வழியும் மணமும் இல்லாமல் எல்லோர் முன்பாகவே அத்தாளை உண்டியலில் போட்டேன்.மணமோ அடங்குவதாக இல்லை.கண்ணெதிரே நாவை இழுக்கும் பசுமையான வயற்காடு,பின்னே பிடித்து இழுக்கும் கயிறு,இடையே சிக்கிக்கொண்டு பதைபதைக்கும் பசுவை போல தவித்தேன்.மாலை பாட்டி ஊருக்கு புறப்பட்டாள்.அப்பா அவளை வழி அனுப்ப பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினார்.அம்மாவும் அவளின் அம்மாவை பின்தொடர்ந்தாள்.

உண்டியலை மறந்து அப்படியே வைத்துவிட்டு போனார்கள்.உற்சாகத்தோடு உண்டியலை அணுகினேன்.வெகு நாட்களாக கைவரிசையை காட்டாததால் அம்பானியின் கஜானாவை போல கணத்து இருந்தது.பொம்மை வடிவில் இருந்த பிளாஸ்டிக் உண்டியல் என்னை பார்த்து முறைப்பது போல தெரிந்தது.போட்டு கொடுத்துவிடுவேன் என்பது போல விழித்தது.அதை தலைகீழாக திருப்பி தூக்கி அடிபக்கம் இருந்த மூடியை தடவினேன்.மூடியின் மீது அப்பா டேப் அடித்து இருந்தார் அலாக்காக பிரிக்க முயன்றேன். நேற்று தான் நகம் வெட்டிவிட்டார்கள்.ரொம்ப சிரமப்பட்டு டேப்பை பிரித்தேன்.

நோட்டு மேலே நின்றுவிட்டது.மொத்த சில்லரைகளையும் கொட்டி தாளை கண்டெடுத்தேன்.வழியனுப்ப போனவர்கள் வந்துவிடுவார்களே என்ற பதற்றத்தில் சில்லரைகளை உண்டியலுக்குள் வேகவேகமாக வழியணுப்பினேன்.பதறிய காரியம் சிதறியது.பொறுக்கிப்போட்டு உண்டியலை மூடினேன்.பிரித்து விட்டிருந்த டேப்பால் மூடியை மறைத்தேன்.சரியாக ஒட்டவில்லை.சுருக்கம் படர்ந்து விட்டது.புது டேப் ஒட்டலாமா என்றால் டேப் எங்கே என்று தெரியாது.முடிந்தவரை சுருக்கத்தின் மேல் தடவிவிட்டேன்.ஆள்வரும் அரவம் கேட்டு அப்படியே உண்டியலை வைத்துவிட்டு போய் டி.வி முன் அமர்ந்து கொண்டேன்.

இந்த சாதனையை செய்தது ஐந்தாம் வகுப்பில்.நினைத்தது போலவே உண்டியல் எட்டயப்பனானது.நிரம்பி வழிந்த நாணயங்களால் அது தன் நாணயத்தை பறைசாற்றியது. அடியுதைக்கு ஆயத்தமான உடம்பிற்கு ஏமாற்றம்.ஆச்சரியமாக அப்பாவின் முரட்டு கைகளிலே கண்ணாக இருந்தேன்.இளைத்து இறந்துப்போன யானையின் இரட்டை தும்பிக்கை போல அவை அசைவின்றி கிடந்தன.அப்போது தான் அப்பாவின் உதடுகளும் அசைவற்று கிடப்பதை உணர்ந்தேன்.ஒன்றும் புரியாதவனாய் நானாக முட்டி போட்டேன்.அப்பாவிடம் எதிர்வினை இல்லை.

தொலைக்காட்சிக்குள் எதையோ தொலைத்துக் கொண்டிருந்தார்.எதை தொலைக்கிறார்? என்னையா? யாரிடமோ சொல்வது போல அம்மா “எவ்வளவு அடிச்சும் திருந்தாத திருட்டு நாய்ட்ட எங்களுக்கு பேச்சு மூச்சி எதுவும் கிடையாது”,என்றாள்.

வழக்கம் போல சும்மா மிரட்டுகிறார்கள் என்ற எண்ணம் வானவில்லின் வண்ணமானது.கதர் உடுத்தி வந்த மாவோ போல அப்பா காட்சியளித்தார்.வாரக்கணக்கில் அவரின் சத்யாகிரகம் தொடர்ந்தது.அத்தியாவசியமாகிவிட்ட பிராந்தி கூட அவரோடு ஒத்துழைத்தது.இப்படியே நாட்கள் இணைந்து வாரத்தை உருவாக்கின.வாரங்கள் சோகமாக ஓடி மாதத்தில் கலந்தன.தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்று அப்பா போராட்டத்தை தொடர்ந்தார்.ஐ.ஜியே ஆனாலும் அம்மா அல்லவா மணமிலகினாள். பூசலை முடித்து வைக்க துடித்தாள்.எனக்கும் ஏதோ மாதிரி இருந்தது.அடி உதையை எதிர் கொண்டு வளர்ந்த எனக்கு அகிம்சையை எதிர்க்கொள்ள தெரியவில்லை.திருட்டிலும் நாட்டம் குறைய துவங்கியது.

உடனே அகிம்சையின் வெற்றியென்று கருதவேன்டாம்.என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை.வாய்ப்பு கிட்டினாலும் ஒட்டி பிறந்த இரட்டையர் போல மாட்டிக்கொள்ளும் வாய்ப்பும் சேர்ந்தே வந்தது.அதையும் கடந்து அபூர்வமாக சில்லரை சிக்கினாலும் பிரயோஜனம் இல்லை.பழக பழக பாலே புளிக்கையில் தெருவோர தேன்மிட்டாய் எல்லாம் எம்மாத்திரம்.கடைகளில் விற்கப்பட்ட அநேக தின்பண்டங்கள் ஏற்கனவே என் நாவிற்கு சமர்ப்பணமாகிவிட்டன.பெட்டிக்கல் மிட்டாயும்,பூமா வீட்டு மாங்கா ஊறுகாவும் மட்டும் இன்னும் நாக்கை ஈரமாக்கின.மற்றவற்றை மொய்க்கும் ஈக்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்.

இப்படியே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை போல தொழில் பற்று கொஞ்சகொஞ்சமாக குறைய துவங்கியது.ஒரு நாளில் தான் தனக்குள்ளாக பேசுவது போல அம்மா முணுமுணுத்தாள் “நீயா போய் மன்னிப்பு கேளுடா”.நான் அப்பா பக்கம் திரும்பினேன்.டியூப்லைட்டின் தூக்கத்தை களைக்க அப்பா பாடுபட்டு கொண்டிருந்தார். அறியாமை என்னும் இழிவான தூக்கத்தில் இருந்து என்னையும் எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பது அப்போது எனக்கு புறியவில்லை.

அமைதியே உருவாக அவர் அருகில் சென்று நின்றேன்.என்னை பொருட்படுத்தவே இல்லை.அரைநிமிடம் பார்த்துவிட்டு,அம்மா குசுகுசுத்தாள். “கால்ல விழுந்து தொட்டு கும்டு”.அப்படியே அப்பாவின் பாதங்களை பற்றினேன்.பயமும் பதற்றமும் சேர்ந்து கைகளை உதறின.காணாமல் போன குழந்தை மீண்டும் அன்னையிடம் சேர்ந்தது போல துக்கமும் இன்பமும் மாறிமாறி மனதை அழுத்தின.

எதிர் பார்த்தபடி அப்பா மன்னித்து விட்டார்.மகன் திருந்திவிட்டான் என்று வழக்கமான பாணியில் சுபம் போட்டு முடியவில்லை என்கதை.என் தொடுகையை உணர்ந்து அப்பா வெடுக்கென்று விலகினார்.முகம் கைக்கால் கழுவி வெளியே கிளம்பினார்.நான் எழுந்துஅம்மாவை பார்த்தேன்.தோல்வி தொற்றிக் கொள்ளாத தொலைவில் இருந்தாள்.நான் வாயடைத்து போய் நிமிர்ந்தேண் டியூப்லைட் விழித்துக் கொண்டிருந்தது.காவிரி டெல்டா போல என் கண்கள் வரண்டு இருந்தன.

அன்று மாலை விளையாட்டுகளை முடித்துக் கொண்டு நான் வீடு திரும்புகையில் ரிட்டேர்மென்ட்டான எஸ்.ஐ போல,விஷமற்ற நாகம் போல அப்பா அமர்ந்திருந்தார்.அருகில் அந்நிலையை ஆமோதிப்பவலாக அம்மா.”வந்து இந்த சேர்ல உக்காருடா” என்றார்.மொழிகளை துறந்தவனாய் நான் போய் அமர்ந்தேன்.சட்டை பையில் கைவிட்டு சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னிடம் நீட்டினார்.பணம் மேல நமக்கு கண்ணு இருக்கானு? டெஸ்ட் பண்றாரா காச வாங்குனா நம்மள நாலு வாங்கு வாங்கிடுவாரோ? என்று என்னுள் பயம் கொழுந்து விட்டுக்கொண்டிருந்தது.அதனால் அப்படியே உறைந்தேன்.”பிடி” என்று கைகளுக்குள் அப்பா திணிப்பார் என்று எதிர்ப் பார்க்கவில்லை.இதற்கு முன் அப்படிபட்ட அப்பாவை நான் பார்த்ததே இல்லை.ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்மேல் ஓடின.

தயக்கத்தோடு நோட்டுக்களை பிரித்து எண்ணினேன்.ஊறிப் போயிருந்த பத்து ரூபாய் நோட்டுக்கள் மூன்று இருந்தன.சிசரை இழுத்து விட்டபடி அப்பா சொன்னார்.”மூந்து பாருடா”.புரியாமல் விழித்தேன்.உறுதியான குரலில்,அவர் “நோட்ட மூந்து பாரு” என்றார்.ஐயம் தீராதவனாய் ஒரு நோட்டை எடுத்து முகர்ந்தேன்.“இண்ணா வாசன வருது?” அப்பா கேட்டார்.“வேர்வை வாசன” என்றேன் நீருக்குள் இருந்து ஒளிப்பது போல என் குரலை உணர்ந்தேன்.”சரி மீதி ரெண்டிலும்?” என்று அடுத்த வினாவை அப்பா தொடுத்தார்.பாதி வேலையை முடித்துவிட்டது போல அவர் முகம் பிரகாசமானது.முகர்ந்துவிட்டு பழைய பதிலே சொன்னேன்.

பிரகாசம் மேலும் கூட அவர் கேட்டார்.”அந்த வேர்வ உன்னுதா?”.பாரபட்சம் இல்லாமல் இருபுறம் தலையசைத்தேன். “அப்புறம் யாருது” என்றபடி என்னையே உற்று நோக்கினார்.அந்த அப்பாவை எனக்கு தெரியும்.கணக்கு சொல்லிக் கொடுக்கையில் நான் சரியாக கூட்டி வகுத்தால் வெற்றிக் களிப்பில் நிறைவடையும் ஆசிரியரான அப்பாவை.

“உன்னுது” என்றேன். ”ஆம் யாருது?” என்று மீண்டும் கேட்ட அப்பாவிடம்,மென்ருமுழுங்கி சொன்னேன் “உன்னுது”.

”தெரியிது இல்ல.இது நான் வேர்வ சிந்தி சம்பாதிச்சது.நாளெல்லாம் மூட்டத்தூக்கி நான்விட்ட வேர்வைக்கான கூலி.என் பணம் இத நீ எப்புடி எடுக்கலாம்? எந்த பணத்துல உன் வேர்வ வாசன இருக்கோ அதான்டா உன்ப்பணம்……”

எப்போது முடித்தார் என்றுகூட தெரியாமல் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.எதையும் எதிர் பார்க்காதவராய் துண்டை உதறி தோளில் போட்டபடி அப்பா உள்ளறைக்கு சென்றார்.

அவரது சொற்களை சுமந்தபடி காற்று என்னை சூழ்ந்துக் கொண்டது. வேர்வை! வேர்வை! வேர்வை! மணம்! பணம்! மணம்! பணம்! உனது! உனக்கே! உனது! என்று மூளைக்குள் எதிரொலி கேட்டுக்கொண்டேயிருந்தது.மனதுக்குள் யாரோ உளியை வைத்து ஆழத்தில் வெகு ஆழத்தில் குடைந்துக் கொண்டே போனார்கள்? எத்தனையடியோ தெரியவில்லை.ஊற்று பெருக்கெடுத்தது அந்த ஆழத்து நீர்.விழியை கால்வாய் ஆக்கியது.

சில நாட்களில் அந்த எதிரொலிப்பு ஓய்ந்தது.மடியும் முன்னர் வேர்வை! மனம்! உனது! பணம்! என்ற முடிச்சை மூலைக்குள் போட்டுவிட்டு ஓய்ந்தது.அத்தோடு திருட்டுக்கு பெரிய கும்பிடு கனவிலும்.

பணத்தை கண்டால் மூக்கை முடுக்கிவிட்டேன்.வீட்டிலும் நம்பிக்கை பிறந்தது.உச்சக்கட்டமாக எட்டாம் வகுப்பு படிக்கையில் வீட்டில் நான் தான் அருண்ஜெட்லி.

இருபத்தி இரண்டாவது ஆண்டில் வாழ்க்கை வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கையில்,ஒருநாள் பரிதி கடலில் நீராடிவிட்டு நிழலுக்குள் தலைத்துவட்ட வருவது போல போஸ்ட்மேன் வாசலில் வந்து நின்றார்.மணி ஆர்டரை கொடுத்துவிட்டு கரைத்தொட்ட அலை போல கடலுக்குள்ளே திரும்பினார்.தமிழ் மாதயிதழ் ஒன்றில் அச்சேரிய என்னுடைய ஒரு கவிதைக்காக என்று எம்.ஒ குறிப்பு அறிவித்தது.நம்முடைய கவிதையை போட்டதே பெரிய விஷயம்.இதுல காசுவேற கொடுக்குறாங்கடா எப்பா!

இரண்டாக மடிக்கப்பட்டிருந்த தாள்களை பிரித்தேன்.ஐம்பது ரூபாய் இருபது ரூபாயுமாக இரண்டு நோட்டு.தனியாக ஐந்து ரூபாய் நாணயமாக மொத்தம் எழுபத்தி ஐந்து ரூபாய்.சற்றுநேரத்தில் மூளைக்குள் கிரைண்டர் சுற்றியது.இதயதுடிப்பு கூடியது.முகத்தை யோசனை மூடியது.மூக்கோ வழக்கம் போல வாசனை தேடியது.

தாமதிக்காமல் நோட்டை நாசிக்கு தூக்கிக் கொடுத்தேன். துளாவிப் பார்க்கையில் முதலில் போஸ்ட் மேனின் மணம் என்றுபட்டது.நம்பாமல் முகர முகர புதுப்புது வியர்வை மணங்கள்.யார் யாருடையது என்று அடையாலம் தெரியாத மணங்கள்.எங்கோ எப்போதோ எவர் எவரோ சிந்தியவற்றின் மணங்கள்.அவையூடாக தான் அவர்கள் இப்பணத்தை அடைந்தார்களா?.

அப்படியே இன்னும் ஆழம் இன்னும் ஆழம் என்று பாசி போல நாசி வழியாக வழுக்கி கொண்டே சென்றேன்.புத்தம் புது மணமொன்றை நெருங்கினேன்.எங்கோ பழக்கபட்டது என அறுபட்டது.கருவரை மகவு போல மணச்சிதரல்கள் இல்லாதவனாய் அம்மணத்தை அல்லி அல்லி பருகினேன்.உள்ளே செல்லச்செல்ல தான் உணர்ந்தேன்.ஆம்! அது என்னுடையது.என் மூளைச் சிந்திய வியர்வையின் வாசனை அது.அப்படியென்றால் இது என்னுடைய பணம்.நான் வியர்வை சிந்தி முதன்முதலாக சொந்தமாக சம்பாதித்தது.பெருமிதம் புன்னகையை ஈன்றது.பெருமையோடு விரல்களால் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தேன்.

துருப்பிடிக்காத எஃகு நாணயமும் கண்ணுக்கு தென்படாத ஏதோவொரு பாகத்தில் வியர்வைத் துளிகளை தேக்கி வைத்திருந்தது.என் வியர்வை நெடி….வழிந்த கண்ணீரை துடைத்தேன்.இதய துடிப்பை போல அப்போதும் ஓயாமல் மூளைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது அப்பாவின் சொற்கள்…..

– இச்சிறுகதை அசோகமித்ரன் நினைவு சிறுகதைப்போட்டி 2016-17யில் பாராட்டுக்கு உரிய சிறுகதையாக பரிசுப்பெற்றது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “தந்தை சொல்மிக்க

  1. பாதி கதையை படிக்கையில் கண்களில் நீர் கசிய துடங்கியது துடைக்க மறந்தவளாக மேலும் படிக்கையில் கண்கள் நீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டது பிறகு என்னை அறியாமலே என்னுள் ஏற்பட்ட சிரிப்பு கதை முடிந்து விட்டதையும், கவிஞர் வளர்ந்து விட்டதையும் உணர்த்தியது.

  2. எழுத்தாளர் கோவர்தனா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *