கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 14,983 
 
 

கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் ‘அந்த’ச் சங்கதியைச் சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவளைப் பார்த்தவுடன் அவனுடைய மனம் மாறிவிடும். இப்படி எத்தனை நாள்தான் காலந்தள்ளுவான்? எப்படியாவது ஒரு நாள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டாமா? இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் தலை கிறு கிறுத்தது.

ராமகிருஷ்ணன் வைத்திய கலா சாலையில் மூன்றாவது வருஷ மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். கல்யாணியும் அவனுடைய வகுப்பில்தான் படித்தாள். இவ்விருவரும் வகுப்பில் கெட்டிக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சில சமயங்களில் பரிட்சைகளில் கல்யாணி, ராம கிருஷ்ணனைக் கூடத் தோற்கடித்து விட்டு, எல்லா மெடல்களையும் பரிசுகளையும் தானே வாங்கிக் கொண்டு விடுவாள்.

ஆனால், அவ்வளவு கெட்டிக் காரியான அவள் முகத்தில் எப் பொழுதும் துக்கமே தாண்டவ மாடும். அதற்குக் காரணம் ராம கிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவள் ஒரு பால்ய விதவை. அதுவுமல்லாமல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவள். உபகாரச் சம்பளம் பெற்றுப் பள்ளிக்கூடத் தில் படித்துக் கொண்டிருந்தாள். தான் ஒரு விதவை என்றும், ஏழை என்றும், தனக்கு உலகத்தில் மற்ற மாணவிகள் போல் உல்லாசமாக இருப்பதற்கு உரிமை இல்லையென்னும் எண்ணம் அவளிடம் பலமாக வேரூன்றியிருந்தது. அதன் பயனாக அவள் எப்பொழுதும் தலை குனிந்தவண்ணமாக இருப்பாள்.

இவளுடைய போக்கும், நடையும், சோகம் குடிகொண்ட வதனமும் மற்ற மாணவ மாணவி களுக்குப் பிடிப்ப தில்லை. அவளைப் ‘புஸ்தகப் புழு’ என் றும், ‘நடை பிணம்’ என்றும் சிரிப்பதும் பரிகசிப்பதும் சகஜ மாயிருந்தது.

ஆனால், சில காலத்துக்கெல்லாம், நடை பிணம் போல் இருந்த கல்யாணி திடீரெனப் புத்துயிர் பெற்று உணர்ச்சி யுடனும் மகிழ்ச்சி யுடனும் விளங்கலா னாள். அந்த மாறு தலுக்குக் காரணம் ராமகிருஷ்ணன் தான். ஒரு நாள் வகுப்பு முடிந்ததும் அவள் மாடியினின் றும் இறங்கித் தனியாக வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது கால் செருப்பு தடுக்கி விடவே புத்தகங் களைத் தடதட வென்று போட்டுக் கொண்டு கீழே விழுந்துவிட்டாள். வேறு யாராவது அப்பொழுது அங்கே இருந்திருந்தால், அவள் பாடு மிகவும் பரிகாசத்துக் கிடமாயிருந்திருக்கும். ஆனால், ராமகிருஷ்ணன் கீழே விழுந்த புஸ்தகங்களை எடுத்துக் கொடுத்து, ”எங்கேயாவது அடிபட்டதா?” என்று மிகவும் பரிவுடன் அவளை விசாரித்தான். அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட அவளுக்கு வெட்கமாக இருந்தது. ஒன்றும் சொல்லாமல், ”வந்தனம்” என்று மட்டும் கூறிவிட்டு, வேகமாகப் போய்விட்டாள்.

இப்படியாக ஆரம்பித்தது இவர்களுடைய சிநேகம். கொஞ்சங் கொஞ்சமாக, வாசக சாலையிலும் மற்றும் பல இடங்களிலும் சந்திக்கும் போதெல்லாம் ஒருவரை யருவர் யோக சோமங்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். இது நாளடைவில் நெருங்கிய நட்பில் முடிந்தது. அவனும் தன்னைப் போல் வறுமையில் அவதிப்படுபவன் என்பதைக் கல்யாணி தெரிந்து கொண்டாள். உபகாரச் சம்பளங்கூட வாங்காது கலாசாலையில் சம்பளங் கொடுத்து எப்படித்தான் படிக்கிறானோ என்பதை நினைக்கும் போதெல்லாம் ஆச்சர்யமும் அனுதாபமும் அடைவாள். அவளுடைய அனுதாபத்தைப் பெறும்போதெல்லாம் ராமகிருஷ்ணன் தானும் ஓர் ஏழை என்பதை மறந்துவிடுவான். இப்படிப் பரஸ்பர அனுதாபம் காட்டி நண்பர்களாய் இருந்த இருவரும், தாங்கள் திடீரெனக் காதல் கடலில் இறங்கியிருப்பதை வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொண்டனர்.

”கல்யாணி! உனக்காகத்தான் நான் இந்த வறுமைக் கொடுமைகளையெல் லாம் பொறுத்துக்கொண்டு படித்து வரு கிறேன். நீ இல்லாவிட்டால் எனக்கு இந்த உலகமே பாழ் போல் தோன்றும்” என்று பல தடவை அவளிடம் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறான். அவள் அதற்குப் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாள்.

இப்பொழுது கல்யாணி ஒரு புதுப் பெண்ணாக மாறிவிட்டாள். மௌன விரதம் பூண்டுகொண்டிருந்த அவள் எல்லா மாணவிகளிடமும் கலகல வென்று பேச ஆரம்பித்து விட்டாள். அவளிடம் ஏற்பட்ட இந்த மாறுதல்களைக் கவனித்த மற்ற மாணவ மாணவிகள் பல விதமாகப் பேச ஆரம்பித்தனர். பள்ளிக் கூட மாணவிகள் பேச ஆரம்பித்தால் கேட்க வேண்டுமா? ஆனால், ராமகிருஷ் ணனோ கல்யாணியோ அவற்றைக் காதில் போட்டுக்கொண்டவர்களாகத் தெரியவில்லை. இருவரும் தங்கள் பிற்கால சந்தோஷ வாழ்க்கையைப் பற்றிப் பல ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்வதிலேயே முனைந்திருந்தனர்.

2

ஆனால், ராமகிருஷ்ண னுடைய ஆகாயக் கோட்டைகள், ஒரு வாரத்திற்கு முன் அவன் தந்தையிடமிருந்து வந்த கடிதத்தினால் திடீரென இடிந்து மண்ணோடு மண்ணாய் விட்டன. அந்தக் கடிதத்தைக் கல்யாணியிடம் காண்பித்து ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டுமென்று, சென்ற மூன்று நாட்களாக மிகவும் பிர யாசைப்பட்டான். அவளை நேரில் கண்டதும் அவன் தைரிய மெல்லாம் மறைந்துவிடும். சாதா ரண விஷயங்களைப் பேசிவிட்டுப் போய்விடுவான். இன்று எப்படி யாவது ஒரு முடிவுக்கு வந்து விடுவது என்ற தீர்மானத்துடன், வழக்கமாகச் சந்திக்கும் வாசக சாலையின் வாசலில், யோசனை யில் ஆழ்ந்து நின்றுகொண்டிருந் தான். அவன் மனதில் கல்யாணிக் கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்பிலிருந்து உண்டான பல சம்பவங்கள், திரையில் படங்கள் தோன்றி மறைவது போன்று ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றி மறைந்தன.

கல்யாணியும் கடைசியில் வந்து சேர்ந்தாள். தன்னைக் கண்டு புன்னகையுடன் வருகிற வளை ஒரு குற்றவாளியைப் போல் ராமகிருஷ்ணன் பார்த்தான். வேறு ஒன்றும் பேசாமல், ”கல்யாணி! இந்தக் கடிதத்தை நீயே படித்துப் பார்!” என்று சொல்லி, அவளிடம் தன் தந்தை யின் கடிதத்தை நீட்டினான். அவள் அதை வாங்கிப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அப் பொழுது ராமகிருஷ்ணனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. முகத்தில் குப்பென்று வியர்க்க ஆரம்பித்துவிட்டது. அவளைப் பார்க்கச் கூடச் சகிக் காதவனாய் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். கல்யாணி தனக்குள் அக்கடிதத்தை வாசிக்க லானான். அதில் எழுதியிருந்த தாவது:-

”சிரஞ்சீவி ராமுவுக்கு, அப்பா அநேக ஆசீர்வாதம். நீ பரீட்சையில் இவ்வருஷம் தேறிவிட்டதைப் பற்றி மிகவும் சந்தோஷம். சம்பளமும் புஸ்தகமும் சேர்ந்து ஐந்நூறு ரூபாய் ஆகிறதென்று எழுதியிருந் தாயே, அதைப் பார்த்ததும் எனக் குக் கவலை அதிகமாய் விட்டது. உனக்கு நம் குடும்பத்தின் நிலைமை தெரியாது என்று சொல்லவில்லை. என்னால் அவ்வளவு பணம் அனுப்ப இப்பொழுது சக்தியே இல்லையே!

இருந்தாலும் நம் கஷ்டங்களுக் கெல்லாம் ஒரு வழி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நம்ப ஊர் தாசில் சேஷய்யர், போன வாரம் உன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போனார். உன் ஜாத கமும் அவர் பெண் சுசீலாவினு டைய ஜாதகமும் நன்றாகப் பொருந்தியிருப்பதாகச் சொல்கிறார். சித்திரையில் உன் லீவின்போது கல்யாணத்தைச் செய்துவிடலாம் என்றும், உன் மேல் படிப்பைத் தாமே கவனித்துக் கொள்வதாகவும் சொல்கிறார். பெண்ணை உன் அம்மா போய்ப் பார்த்தாள். நன்றா கத்தான் இருக்கிறாள். இப்படிப் பெரிய இடத்து சம்பந்தம் நம் போன்றவர்களுக்குக் கிடைப்பது துர்லபம். உன் படிப்புக்காக இனி எனக்கு ஒரு பைசாகூட அனுப்பச் சக்தி இல்லை. நீ பெரியவனாகப் போய்விட்டதால், உன்னை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. சீக்கிரத்தில் நம்மிஷ்டத்தை அவருக் குத் தெரிவிக்க வேண்டுமாதலால் உடனே உன் சம்மதத்தை அறிவிக் கவும்.

இப்படிக்கு அன்புள்ள,
வேங்கடராமையர்.”

இதைப் படித்ததும் கல்யாணிக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. உலகமே இருண்டுவிட்டது போல் ஒரு நிமிஷம் தோன்றியது. அவள் எண்ணாததெல்லாம் எண்ணினாள். சற்று யோசித்துப் பார்த்துவிட்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அவள் தன் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகவும் பரிவுடன், ”இதற்கு என்ன பதில் எழுதப்போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

அவள் இப்படிக் கேட்டதும், ராமகிருஷ்ணன் திடுக்கிட்டான். ஏனென்றால், அவள் கோபதாபப் படாமல் இவ்வளவு அமைதியாக நடந்து கொள்வாளென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சமாளித்துக்கொண்டு, ”நீயே சொல். நான் என்ன செய்வேன்? என் மனம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறது” என்றான்.

உடனே கல்யாணி, ”அப்படி யென்றால் நீங்கள் அப்பா சொல் வது போலவே செய்யுங்கள். சம்மதம் என்று உடனே பதில் எழுதிவிடுங்கள். நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டுத் தலைகுனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் அப்பொழுது பட்டபாடு விவரிக்க முடியாதது.

”கல்யாணி! அப்படியென்றால் என்னை ஒரு கோழையென்று நினைத்து வெறுத்துத்தானே இப்படிச் சொல்கிறாய்?” என்று தழுதழுத்த குரலில் ராமகிருஷ்ணன் கேட்டான்.

”இல்லை. அப்படி நினைத்திருந் தால் நான் வேறு விதமாகப் பதில் சொல்லியிருப்பேன். நாம் இரு வரும் இதுவரையில் கற்பனா உலகில் வசித்து வந்தோம். இன்று நிஜ உலகத்திற்கு வந்திருக்கிறோம். நடக்கமுடியாதவைகளைப் பற்றிப் பல ஆகாயக் கோட்டைகள் கட்டி மனம் புண்ணடைவதனால் என்ன பயன்? நீங்களே யோசித்துப் பாருங்கள்… என்னை மணந்து கொண்டால் உங்களுக்கு ஏதாவது உபயோகம் உண்டா? நானும் உங்களைப் போல் ஏழை. மேலும் நான் விதியின் கொடுமைக்கு ஆளானவன். சமூகத்தை எதிர்த்து இந்தக் காரியத்தைச் செய்ய நம் மிடம் அவ்வளவு சக்தி இல்லை. எனக்குத் தங்கை, தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களை முன் னுக்குக் கொண்டு வருவது என் பொறுப்பாயிருக்கிறது. அப்படியிருக் கையில் நம்முடைய சந்தோஷமே பெரிதென்று நினைத்து நான் உம்மைக் கட்டாயப்படுத்தினால், நான்தான் சுயநலக்காரியாவேன். நீங்கள் எங்கேயாவது சௌக்கிய மாக இருந்தால், அதுவே எனக்குப் போதும். அவ்வளவுதான் நான் கொடுத்து வைத்த சந்தோஷம். நான் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பொலபொல வென்று கண்ணீர் உகுத்தாள். ராமகிருஷ்ணனும் தாங்கமுடியாத துக்கத்தினால் சிறு குழந்தையைப் போல் விம்மினான். இப்படியாக இவர்களின் காதற் கோட்டை தகர்ந்து, பொடியாய் விட்டது.

அந்த வருஷம் கோடை விடு முறையில், ராமகிருஷ்ணனுக்கும் சௌபாக்யவதி சுசீலாவுக்கும் விவாகம் இனிதாக நடந்தேறியது.

3

இது நடந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது கல்யாணி, பாலூர் டிஸ்டிரிக்ட் போர்டு ஆஸ்பத்திரி யில் லேடி டாக்டர். ஒரு கவலையு மில்லாமல் பொது ஜன சேவையிலே கருத்தாய் வேலை பார்த்து வந்தாள். ஐந்து வருஷங்களுக்கு முன் ஏற்பட்ட மனப்புண் இப்போது ஒருவாறு ஆறியிருந்தது.

ஒரு நாள் பன்னிரண்டு மணி இருக் கும்… வீட்டின் வாசற் கதவை யாரோ தடதடவென்று தட்டினார்கள். கல்யாணிக்கு மிக்க அலுப்பாயிருந்தாலும் அதைப் பாராட்டாமல் போய்க் கதவைத் திறந்தாள். ஒரு கிழவர், கையில் லாந்த ருடன் காட்சியளித்தார். தமது பெண் ணுக்குக் கொஞ்ச நாளாக ஜுரம் என்றும், அன்று அதிகமாய் விட்டதால் பயமாக இருப்பதாகவும், உடனே வந்து பார்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். கல்யாணி தன் சிரமத்தை மறந்து, வேண்டிய மருந்துகளை எடுத்துக் கொண்டு அவருடன் கிளம்பினாள்.

அவள் சிகிச்சை செய்யச் சென்ற நோயாளி, ஓர் இளம் பெண். கல்யா ணியை அழைத்து வந்த கிழவரின் பெண், வீட்டுக் கூடத்து அறையில் ஒரு கட்டிலில் படுத்திருந்தாள். தேக நிலை யைப் பரிசோதித்ததில், அவள் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதைக் கல்யாணி தெரிந்து கொண்டாள். அதனால் அந்த வயோதிகரையும் அவர் மனைவியையும் கூப்பிட்டு ரகஸ்யமாக, ”இந்தக் கேஸைப் பற்றி நான் தைரியமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதற்கும் என்னால் ஆனவரை முயன்று பார்க் கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டதும் கிழவரும், அவர் மனைவியும் பதறினார்கள். ”ஐயோ! கொஞ்ச நாள் சீராடலாமென்று எவ்வளவோ பாடுபட்டு அழைத்து வந்தேனே! டாக்டர்! நீங்கள் எப்படியாவது அவளைப் பிழைக்க வைத்து விடுங்கள்! மாப்பிள்ளை இரண்டு நாளில் வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். வேண்டு மானால் தந்தியும் அடிக்கிறேன். வந்து பார்த்தால் அவர் மனசு எப்படி இருக்கும்?” என்று கண்ணீரும் கம்பலையுமாய் அவர்கள் இருவரும் கல்யாணியை வேண்டிக் கொண்டனர்.

கல்யாணி என்ன சிகிச்சை செய்யலாமென்று யோசனை செய்த வண்ணம் எதிர்ச் சுவரை உற்று நோக்கினாள். அவள் கவனம் அகஸ்மாத்தாக அங்கே மாட்டி யிருந்த ஒரு போட்டோவின் மேல் சென்றது. படத்தில் நிற்கும் அந்தப் பெண்ணும் வாலிபனும் யார்? பெண்தான் அங்கே அவள் முன் கட்டிலில் படுத்திருப்பவள். வாலிபன் வேறு யாருமில்லை; அந்தப் பழைய ராமகிருஷ்ணன் தான். அவள் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டாள். நோயாளியாய்ப் படுத்திருப்பவள், தான் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் இப்பொ ழுது இருப்பவள்.

இதை நினைத்ததும் அவளுக் குத் தன்னையறியாமலேயே கோபம் உண்டாயிற்று. கல்யாணி இப்படிச் சுவரைப் பார்த்து நின்றுகொண்டிருப்பதைக் கண்ட கிழவர், ”என்ன யோசிக்கிறீர்கள்? எனக்குப் பயமாயிருக்கிறதே! குழந்தை பிழைப்பாளா, மாட் டாளா? உண்மையைச் சொல்லி விடுங்கள்” என்றார். அவர் பேசி யதைக் கேட்டதும்தான், கல்யா ணிக்கு தான் சிகிச்சை செய்ய வந்திருக்கும் உணர்வு திடீரென்று வந்தது. அவள் தன்னைச் சமாளித் துக்கொண்டு, ”இல்லை, என்ன மருந்து கொடுக்கலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்… நீங்கள் ஆளை அனுப்புங்கள். நான் மருந்து அனுப்புகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

4

அன்றும் மறுநாளும் கல்யாணி நான்கு ஐந்து தடவை வந்து பார்த்துத் தக்க மருந்து கொடுத்துச் சிகிச்சை செய்தாள். அந்தப் பெண் ணுக்குக் குணமாகிக் கொண்டு வந்தது.

மூன்றாவது தினம் காலையில் அவள் நோயாளியைப் பார்த்து விட்டு, ”இனி பயம் இல்லை. கொஞ்சம் ஓய்வு வேண்டும். இந்த மருந்தையே கொடுத்து வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

மறு நிமிடம் ஒருவர் தடதட வென்று அவசரமாக உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் நேரே நோயாளியிடம் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு, ”உடம்பு எப்படி இருக்கிறது, சுசீ!” என்று பதைப்புடன் கேட்டார்.

கிழவர் குறுக்கிட்டு, ”குழந்தைக் குக் குணமாய் விட்டது. இனி பயமில்லை என்று டாக்டர் இப்போதுதான் சொன்னார். இவளை இந்தப் புண்ணியவதிதான் காப்பாற்றினாள்” என்று டாக்டர் கல்யாணி நின்றிருந்த இடத்தைப் பார்த்தார். ராமகிருஷ்ணனும் டாக்டருக்கு வந்தனம் கூறுவதற் காக அவளைப் பார்க்கத் திரும்பி னான். ஆனால் கல்யாணி அங்கே இல்லை! ராமகிருஷ்ணன் உள்ளே வந்தவுடனேயே, அவர்கள் அறியாமல் கல்யாணி வெளியே போய்விட்டாள்.

வண்டியில் சென்றபோது கல்யாணி, ”சுவாமி! எட்டாத கோட்டைகள் கட்டியதற்காக இந்த மனப்புண்ணைக் கொடுத்து என்னைத் தண்டித்தீர்கள். போதும், எப்படியாவது அவர்கள் இரண்டு பேரும் சௌக்கியமாகவும் சந்தோ ஷமாகவும் வாழட்டும்” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளுக்கு அது தகுந்த தண்டனையா?

– 10-03-1940

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *