கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,825 
 

மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது.

எங்கு பார்த்தாலும் நெடிய மரங்கள். முதன் முதலாய் இங்கு வருபவர்கள் ஏதோ பண்ணை வீட்டிற்குப் போவது போல முதலில் உணர்வார்கள். இதுவரை தாங்கள் அனுபவித்த நகர நெரிசலையும் வாகன இரைச்சலையும் தற்காலிகமாக மறக்கச் செய்யும் இயற்கைச் சூழல்.

தூரத்தே தெரியும் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் விலையுயர்ந்த சோபாவின் நுனியில் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

“பிளீஸ் கம் இன்” ஆளில்லாத அந்தப் பெரிய வரவேற்பரையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது அந்த மந்திரக் குரல்.

மேஜையில் எதையோ சரி செய்தவாறு “ம், சொல்லுங்க” என்றார் மாத்யூ.

“என் பெயர் ரிஷி” என்றவுடன் தன் நெருக்கத்தை பார்வையில் பதித்தவாறு “சொல்லுங்க ரிஷி” என்றார்.

“டாக்டர் எனக்கு தொடர்கதை மாதிரி தொடர்ந்து ஒரு கனவு வருது. மறுபடியும் மறுபடியும் அதே கனவு. தலை வெடித்துவிடும் போல இருக்கு. சில சமயம் ஆரம்பத்திலிருந்து. சில சமயம் இடையிலிருந்து மீண்டும் மீண்டும்” என்று ஒருவழியாகக் கோர்வை இல்லாமல் கொட்டித்தீர்த்தான் ரிஷி.

மேஜையில் இருக்கும் சீவாத பென்சிலை தன் விரலிடுக்குகளில் வைத்து சிலம்பம் சுற்றுவது போல சுற்றிக்கொண்டே “ இண்ட்ரஸ்டிங்க். ஒரே ஒரு தடவை அந்தக் கதையை, சாரி, அந்தக் கனவை என்னிடம் சொல்லுங்க ரிஷி. அப்போதான் நான் உங்களுக்கு டிரீட்மெண்ட் கொடுக்க சுலபமா இருக்கும்” என்று உற்சாகப்படுத்தினார் டாக்டர் மேத்யூ பெர்ணாண்டஸ்.

“டோரிக்குப்பம் ஒரு கடற்கரைக் கிராமம் சார்”

இந்த சாரெல்லாம் வேண்டாம் ரிஷி. உங்கள் நெருங்கிய நண்பரிடம் சொல்வது போல் இயல்பாக கனவில் வந்ததை அப்படியே கூறுங்கள்” மாத்யூ இடைமறித்தார்.

“அந்தக் காலத்தில் அந்த கிராமத்தின் பெயர் மேட்டுக்குப்பம் எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள், நீண்ட மணல் மேடுகள். விட்டு விட்டு வீசும் கடல் காற்று காயவைத்திருக்கும் மீன் பிடி வலைகளை முன்னும் பின்னும் தொட்டில் போல ஆட்டும். விடியலிற்கு முன்பே மீனவர்களை வழி அனுப்பி விட்டு குப்பத்திற்கு வரும் மனைவிமார்களின் கண்ணில் தேங்கி கன்னத்தில் உருண்டு விழ மறுக்கும் கண்ணீரின் பிடிவாதத்தை உப்புக்காற்று சிறிது அசைத்துப்பார்த்து தோற்றுப்போகும்.

கிராமத் தலைவன் எசக்கி ராஜாவிற்கு 90 வயதிற்கு மேல் இருக்கும். வறுமையை அம்மணமாகத் தோல் உரித்துக்காட்டும் நலிந்த ஓட்டு வீடு. தாழ்வாரத்தில் துருவேறிய கம்பிக் கிராதிகளை இணைத்திருக்கும் இற்றுப்போன மரச் சட்டங்கள்.

அவரின் ஓரே பேத்தியின் பெயர் டோரியன் ஜோசப்பின். அந்தக் கிராமத்தில் பிறந்த அதிகப்படியானவர்களின் பெயர்களில் “டோரியன்” என்ற பெயர் கர்ணனின் தங்கக் கவசம் போல ஒட்டிக்கொண்டிருக்கும். உதாரணமாக கூட்டு ரோடில் கடை வைத்திருக்கும் டோரியன் புருஷோத்தமன், ஊரில் இருக்கும் இளவட்டங்களின் ஓரே அழகியாக வலம் வரும் டோரியன் மஞ்சுளா, பள்ளி இறுதி படிப்பை முடித்து மீன் பிடி ஏலத்தை நடத்தும் டோரியன் தனபால் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, லண்டனில் இருந்து டோரியன் சீமாட்டி தன் துரைக் கணவருடன் இந்தியாவிற்கு வந்தாள்.

ஒரு சமயம் விடுமுறைக்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திற்கு வந்தவள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டாள். டோரியன் சீமாட்டியின் கொள்ளை அழகும், சகஜமாக அனைவரிடமும் பழகும் வெகுளித்தனமும் அனைத்து கிராமத்து இளைஞர்களையும் ஒரு சேர கட்டிப்போட்டது. விடுதலை போராட்டம் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டம் அது. விடுதலைப் போராட்டத்திற்கு அங்கிருக்கும் கிராமத்து இளைஞர்களை ரகசியமாக ஒன்று திரட்டிய பெருமை டோரியன் சீமாட்டியையே சாரும்.

எசக்கி ராஜா, தொண்டைமான், வல்லம் பெருமாள், சீனிவாசன் அனைவருக்கும் மீன் பிடி துறையில்தான் வேலை. படகிலிருந்து கூடைகளில் மீன்களை நிறைத்து வண்டியில் ஏற்ற வேண்டும். மற்ற நேரங்களில் உடற்பயிற்சிக் கூடங்களில்தான் அவர்களைப் பார்க்க முடியும். டோரியன் சீமாட்டி அனைவருடனும் சகஜமாகப் பழகினாலும், தொண்டைமானிடம் மட்டும் கூடுதல் அக்கரையுடன் இருந்தாள். இது கிராமத்தார்களின் கண்களை அதிகமாக உறுத்தியது.

“இண்டிரஸ்டிங்க் ரிஷி. கோ அஹெட்” என்று மாத்யூ உற்சாகப்படுத்தினார்.

துரைக்கு டோரியன் சீமாட்டியின் மேல் சந்தேகம் எழுந்தது. அதைக் கூடுதல் மெருகுடன் நிறமேற்றி ஊரார் மூலம் தெரிய வெகுண்டெழுந்தார் துரை. டோரியன் சீமாட்டியிடம் இதைப் பற்றி நேரே கேட்டுவிடலாமா என்ற தயக்கத்தில் பல நாட்கள் அமைதியில்லாமல் கழித்தார்.

எதிர்பாராமல் ஒரு நாள் ஏற்பட்ட கை கலப்பில் தொண்டைமானைக் காப்பாற்ற துரையுடன் போராடியப்போது குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே டோரியன் சீமாட்டியும் தொண்டைமானும் உயிர்துறந்தார்கள்.

சிறிது நாளில் துரைக்கு உண்மை தெரிய வந்ததும் தான் செய்த இந்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை அந்தக் கிராமத்திலேயே இருக்கத் தீர்மானித்தார். ஏராளமான சமுதாயப்பணிகளை மேற்கொண்டார். டோரியன் சீமாட்டியின் நினைவாக ஊர் மக்கள் துணையுடன் கடற்கரை ஓரத்தில் ஒரு தேவாலையம் கட்டினார். அதை அடுத்து ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம். நாட்டு விடுதலை குறித்து கிராமத்து இளைஞர்களை ரகசியமாக உத்வேகப்படுத்தினார். இதை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மீண்டும் லண்டன் செல்ல உத்தரவிட்டது. தன் சேமிப்பு முழுவதையும் தொண்டைமான் குடும்பத்திற்கு எழுதிவைத்த துரை கிராமத்து இளைஞர்களை கடைசியாக சந்தித்து ஏராளமான பரிசுப் பொருட்களை அளித்தார்.

அடுத்த நாள் மீன் பிடிக்கச் சென்ற சிலர் கடற்கரையில் துரை இறந்து கிடப்பதாகக் கூறினார்கள். கடற்கரையில் டோரியன் சீமாட்டியின் பெரிய படம் ஒன்றினை மார்போடு இறுக அணைத்து வானத்தை பார்த்தவாறு அவர் இறந்து கிடந்ததார். ஊர்ப் பெரியவர்கள் கடல் அன்னைதான் துரையை பழிவாங்கிவிட்டதாகக் கூறினார்கள். ஆனால் எசக்கி ராஜாவும் அவன் நண்பர்களும் தொண்டைமானின் ஆவிதான் நிச்சயம் துரையை அடித்து போட்டிருக்கவேண்டும் என்று நம்பினார்கள். அதற்குப் பிறகு சரியாக எதுவும் ஞாபகத்தில் இல்லை” என்று ஒரு வழியாக தன் கனவை முடிவிற்குக் கொண்டு வந்தான் ரிஷி.

அனைத்தையும் மிகப் பொறுமையாகக் கேட்ட மாத்யூ, மேஜையில் இருக்கும் நாள் காட்டியைப் பார்த்துக் கொண்டே “மறுபடியும் என்னை நீங்கள் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க வேண்டியிருக்கும். டில் தென் கீப் கூல் ரிஷி” என்று எழுந்து வந்து ஆதரவாக அவன் தோளை ஆதரவாகப் பிடித்தார்.

வரவேற்பறையில் இருக்கும் சோபாவில் ஒரு முதியவரும் ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தார்கள். அந்த இளைஞன் ஒரு சாயலில் தான் கனவில் கண்ட தொண்டைமானைப் போல் இருந்தான். இது நிச்சயம் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்த ரிஷி அவனை மீண்டும் பார்த்தான். ரிஷியைப் பார்த்து அந்த இளைஞன் சிரித்தான். பதிலிற்கு ரிஷியும் சிரித்தான்.

வரவேற்பறையின் வாசல் பக்கம் அரிஸ்டாட்டில், கார்ல்மாக்ஸ், ஐவன் பாவ்லோ, சிக்மண்ட் ஃப்ரெட் படங்கள் இருந்தது. இடது பக்கம் ஓரே ஒரு பெண்ணின் படம். மிகவும் எழிலான மங்கை ஒருத்தி பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப்போடும் அதிகார மிடுக்குடன் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடமைந்த அலங்கார திவானில் மிகவும் ஒயிலாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள். அவளின் பின்புலம் விடியலின் இழந்து போன நம்பிக்கைகளை மீட்டெடுக்கும் அடர் சிகப்பில் ஆரம்பித்து குழந்தைகள் கைதட்டி ரசிக்கும் பல வண்ணங்களில் இருந்தது.

எவ்வளவு முயன்றும் ரிஷியால் அவன் பார்வையை அந்தப் படத்தில் இருந்து பெயர்த்தெடுக்கவே இயலவில்லை. துரை இறக்கும் போது கடற்கரையில் இருந்த அதே டோரியன் சீமாட்டியின் படம். அதே வசீகரத் தோற்றம். படத்தின் கீழ் உள்ள குறிப்பில் டோரியன் சீமாட்டி (1915-1943) என்றிருந்தது.

வரவேற்பறையில் இருக்கும் அழைப்பு ஒலி பெருக்கியில் “தொண்டைமான், பிளீஸ் கமின்” என்ற குரல் கேட்க ரிஷி அதிர்ச்சியுடன் தொண்டைமானையே உற்றுப்பார்த்தவாறு இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *