கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 10,211 
 

ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டுக் கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். குளிர் எங்களை விரோதத்துடன் எதிர்கொண்டது.

ஆரம்பமே கோளாறு. மும்பையிலிருந்து ஃப்ராங்ஃபர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, ஃப்ராங்ஃபர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத் தவறவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் நாங்கள் தாமதமாய் வந்ததால், எங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லவேண்டிய பீட்டர் க்ராஸ் இரண்டு மணிநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார். நாங்களே ஒரு டாக்ஸி பிடித்து அவர் வீட்டுக்குப் போக வேண்டும். டாக்ஸி எங்கே பிடிப்பது, டிப்ஸ் எவ்வளவு தரவேண்டும், டிரைவருக்கு இடம் தெரியுமா, ஒழுங்கான வழியில் போவானா என்று சில்லறைக் கவலைகள் மனதில் இறைந்திருந்தன.

பீட்டர் கிராஸ் என்னும் ஆஸ்திரியர் எங்களுக்கு நண்பர். நான் உறுப்பினராய் இருந்த மதராஸ் ரோட்டரி கிளப்பில் கலாசாரப் பரிவர்த்தனை திட்டத்தினால் அவர் எங்களுக்கு நண்பரானார். இந்தியாவுக்கு ஆராய்ச்சி செய்ய வரும் வெள்ளையர்களை கிளப்பின் இந்திய உறுப்பினர்களின் வீடுகளில் தங்கவைக்கும் இந்தத் திட்டத்தில் பீட்டர் இரண்டு மாதங்கள் எங்களோடு மதராஸில் தங்கியிருந்தார். வெள்ளைக்காரர்களுக்குக் கலை, கலாசாரம், சரித்திரம் சார்ந்த சில சமாசாரங்களால் இந்தியா மேல் ஏற்படும் அதீத ஆர்வத்தில் நம் உஷ்ணம், காரம், குப்பை, தூசி அத்தனையையும் பொறுத்துக்கொண்டு வந்து அவர்களின் தனித்தன்மையான கோணத்தில் இந்தியாவை அலசி ஆராய்ந்து நமக்கெல்லாம் புலப்படாத இந்தியாவின் வசீகரங்களைச் சேகரித்துக்கொண்டு சந்தோஷமாய்த் திரும்பிப்போகிறார்கள். பீட்டர் அப்படி வந்தவர்தான். போன வருடம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வந்திருந்தார். வந்த முதல் வாரம் கடுகே காரம் என்று அலறி, வாரம் முழுக்கப் பேதியாகி பின்னர் சுதாரித்துக்கொண்டு, அரை டிராயரும் டீ ஷர்ட்டும் முதுகுப் பையுமாய் அலைந்து, ஒரு கோயில் விடாமல் சுற்றி, அதன் மூலை முடுக்கெல்லாம் கேமராவில் அடக்கி, அவைகளின் சரித்திரத்தை ஆராய்ந்து, இட்லி தோசை பிடித்துப்போய், அவரின் வெள்ளைத்தோலைப் பொன் வறுவலாய் ஆக்கிக்கொண்டு திரும்பிவிட்டார். எங்களோடு தங்கியதால் மரியாதை நிமித்தம் எங்களை ஆஸ்திரியா அழைத்திருந்தார். ஐரோப்பிய ஹோட்டல்களின் டாலர் மிரட்டலில் பயந்து சிக்கனமாய் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தோதாய் பீட்டரின் அழைப்பை ஏற்று நாங்கள் கிளம்பி வந்திருந்தோம்.

எதிர்ப்பக்கம் டாக்ஸி நிலையம் தென்பட்டது. கவலை தோய்ந்த முகத்தோடு வரும் எங்களைப் பார்த்தவுடனே எங்கள் நிராதரவற்ற நிலையை உணர்ந்து ஓர் ஆஜானுபாகு ஆஸ்திரிய டாக்ஸி ஓட்டி வந்து நின்றான். டாக்ஸி, ஆட்டோக்காரர்களுக்கு வேறு என்ன தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ, மான் கூட்டத்தில் மெத்தனமாகவோ, சோணியாகவோ திரியும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் துரத்தி தன் இரையாக்கும் ஒரு சிறுத்தையின் உணர்வு அபிரீதமாய் (அபரிமிதமாய்???) இருக்கிறது. கூட்டமாய் வரும் பயணிகளில் தயங்கியபடியே சுற்றுமுற்றும் பராக்குப் பார்த்தபடி வரும் பலியாளைச் சட்டென்று தேர்ந்தெடுத்து அமுக்கி, அந்த அந்நியப் பிரதேசத்தில் அவனை உய்விக்க வந்த ரட்சகன் மாதிரி …. அங்கதான சார்… போயிறலாம் சார்….. வாங்க சார்’ என்று பயணிகளின் சேவைக்காகவே தங்களை அர்ப்பணித்துக்கொண்டது போல பாவனை காட்டும் ஆசாமிகள். வாகனத்தில் உட்கார்ந்ததும் ஐம்பது ரூபாய் வாடகை ஆகும் இடத்திற்கு ஐந்நூறு ரூபாய் கூசாமல் கேட்கும் காலிகள். என்னுடைய சுட்டுத்தள்ள வேண்டியவர்கள் பட்டியலில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்குப் பிறகு ஆட்டோ/டாக்ஸி டிரைவர்களைதான் வைத்திருக்கிறேன்.

அந்த ஆஸ்திரிய சிறுத்தை, சுற்றுவட்டாரத்தில் தென்பட்ட வெள்ளைக்காரர்களை விட்டு விட்டு அந்த இடத்தின் திருஷ்டிப்பொட்டு மாதிரி இருந்த எங்களை அணுகி ‘டாக்ஸி?’ என்று வினவினான். அவன் சாம்பல் கண்களை, என் ஐந்தடி தூரத்திலிருந்து அண்ணாந்து பார்த்து ‘எஸ்’ என்றேன் தயக்கமாய், ஓர் ஆசியமுக டாக்ஸிஓட்டி எவனாவது தென்படமாட்டானா என்று சுற்றிலும் தேடியபடி. ஆசிய டாக்ஸி டிரைவர்களின் கயமைத்தனத்தை முக லட்சணம், உடம்பு மொழி, வாய் ஜாலம் எல்லாவற்றையும் பழக்கம் காரணமாய் என்னால் எளிதில் கணிக்க முடியும். அந்த வெள்ளைக்காரனை என்னால் கொஞ்சமும் எடைபோட முடியவில்லை.

அவன் உயரமே என்னை மிரட்டியது. ரத்த சோகை வெள்ளைத் தோலில் பொன்நிற மயிர்கள் உறுத்தலாய்த் தெரிந்தன. சுத்தமாய் ஷவரம் செய்யும் வெள்ளைக்காரர்களின் பொதுத்தன்மைக்கு மாறாய் செம்பட்டை நிறத்தில் பெரிய மீசையும் தாடியும் வைத்திருந்தான். அவன் அணிந்திருந்த தொப்பிக்கு அடங்காத நீளமான கூந்தல் தோளில் வழிந்தது. ஆங்கிலம் தெரியாத, ஜெர்மன் பேசும் இந்த ஊரில் ஓர் ஆஸ்திரிய வண்டி ஓட்டியுடன் எப்படி மன்றாடப்போகிறேன் என்று யோசனையில் சட்டையில் முகவரி காகிதத்தைத் தேடினேன். அவன் என்னைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்ததை, அந்த முகம் அறையும் குளிரிலும் என் கவலை ஓட்டத்திலும் நான் சரியாய்க் கவனிக்கவில்லை . பீட்டரின் முகவரி எழுதிய காகிதத்தை அவனிடம் நீட்டினேன்.

‘யு நோ திஸ் ப்ளேஸ்…? பாக்மன் காசே… டிஸ்ட்ரிகெட் ஃபோர்ட்டீன்.’

அதைப் பார்த்துவிட்டு ‘நோ ப்ராப்ளம்…. ஐ கேன் ஃபைண்ட் இட்’ என்று புன்னகைத்தான்.

அவன் கொஞ்சமாய் ஆங்கிலம் பேசியது ஆறுதலாய் இருந்தது. அவன் எங்கள் உடமைகள் வைத்த வண்டியைத் தள்ளிக்கொண்டு போய் டாக்ஸி என்ற மஞ்சள் விளக்குக் கிரீடம் வைத்திருந்த அந்த மெர்சிடிஸ் பென்ஸை அடைந்தான். நான் குளிரில் மார்போடு கையை அணைத்தபடி நின்றதாலோ என்னவோ முதலில் கதவைப் பணிவாய்த் திறந்து எங்களை அமரச்சொன்னான். நான் அதைச் சட்டை செய்யாமல் ஏதாவது ஒரு பையை அவன் வேண்டுமென்றே ஏற்றாமல் விட்டுவிட்டல் என்ன செய்வது என்ற கவலையில் எங்கள் உடமைகளைச் சரியாக வைக்கிற சாக்கில் அவன் பக்கமே நின்றுகொண்டேன். அவன் எங்கள் பெட்டிகளைப் பின்புறம் திணித்தான். நான் அதைச் சரிசெய்கிறமாதிரி ஒரு பையை முன்னும் பின்னும் அசைத்துவிட்டு நின்றேன். அவன் டிக்கியை மூடியவுடன் காரின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டோம். இருக்கையின் பஞ்சு மென்மை எங்களை முனகாமல் ஏற்றுக்கொண்டது.

‘மெர்சிடிஸ் டாக்ஸி… வாடகை அதிகமா இருக்கப்போவுது’ என்றாள் மனைவி.

‘கேட்டுடுங்களேன்….. அதிகம்னா வேற சாதாரண டாக்ஸில போயிடலாமே…’ என்றாள் விடாமல்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை …. இந்தூர்ல மெர்சிடிஸ் சகஜம்’ என்றேன் நான், அதே கவலையுடன்.

அவன் வந்து முன் சீட்டில் உட்கார்ந்து, என் முகவரிக் காகிதத்தை இன்னொரு முறை பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த சின்னப் புத்தகத்தின் பக்கம் புரட்டி, விரலால் மேய்ந்து…. திருப்தியானவுடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு முன் பக்கக் கண்ணாடி வழியாக என் முகம் பார்த்து ‘வி வில் கோ?’ என்று புன்னகைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.

மெர்சிடிஸின் சஸ்பென்ஷன் ஆதரவில் கார் வழுக்கிக்கொண்டு போனது. நகரத்தின் சுவடு இல்லாத வனாந்தரம் போன்ற அந்த இடத்தின் அடர்த்தியான மரங்கள் குளிருக்கு விறைத்துப்போனதுபோல அசையாமல் நின்றிருந்தன. அந்தச் சாயந்தர மூன்று மணிக்கே இருட்டு லேசாகக் கவிந்து வாகனங்கள் வெளிச்சக் கண்களால் விழித்துக்கொண்டு விரைந்து போய்க்கொண்டிருந்தன. அவன் வாகனத்து டேப்ரிக்கார்டரை இயக்கி மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தை, ஹீட்டரின் இளஞ்சூடான காற்றுடன், கார் முழுக்க மென்மையாய் நிரப்பினான். ‘சைக்காவ்ஸ்க்கி ….’ என்றான் எங்கள் தகவலுக்கு . அவன் பணிவு, தேவையில்லாத புன்னகை, சங்கீதம் போடும் கரிசனம் என்று அவனது ஒவ்வொரு சைகையும் என் கவலையை அதிகரித்தது. யதேச்சையாக முகத்தைத் திருப்பியதும் அவன் தனக்கு முன்பிருந்த கண்ணாடி வழியாய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. கண்கள் சந்தித்ததும், ‘யு ஆர் ஃப்ரம் இண்டியா?’ என்றான், நான் எதிர்பார்த்தபடி.

‘யெஸ்.’

‘நார்த் ஆர் சவுத்.’

‘நார்த்’ என்றேன் ஏதோ சொல்லித் தட்டிக்கழிக்கும் மனப்பான்மையில். பெரும்பாலான வெள்ளைக்காரர்களுக்கு நார்த் தான் தெரியும். டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் என்கிற சுற்றுலா முக்கோணமும் சப்பாத்தி, தந்தூரிச் சிக்கனும் மட்டும்தான் இவர்களுக்கு இந்தியா.

‘டெல்லி?’ என்றான் விடாமல்.

‘யெஸ்.’ அடுத்து பத்திரிகைகளிலோ அவர்கள் ஊர் தொலைக்காட்சியிலோ பார்த்த தாஜ்மகால் பற்றிச் சிலாகிப்பான்.

‘யு ஆர் கமிங் ஹியர்… ஃபர்ஸ்ட் டைம்.’

நான் இன்னொரு ‘யெஸ்’ சுவாரசியமில்லாமல் உதிர்த்துவிட்டு முகத்தைத் திருப்பி வெளியே பார்த்தேன் அவனிடம் பேச விருப்பமில்லை என்கிற தோரணையில். நான் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசுவதை விரும்பாதவன். அவர்கள் பேசும் ஊர்வம்பும் அரசியலும், சினிமாவும் எனக்குப் பிடிக்காதவை. மேலும், இவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேசுவது ஆழம் பார்க்கும் செயல் என்பது என் கருத்து. ஆள் சாதுவா? சண்டியா? வழி தெரிந்தவனா இல்லை எந்த வழியாய் அழைத்துப்போனாலும் பேசாமல் இருக்கும் மௌனியா என்று கணிக்கும் உத்தி. மதராஸ் ஆட்டோவில் பயணித்து நான் கற்ற பாடம். ஒரு சமுதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்த ஊரின் வாடகை வண்டி ஓட்டுநர்கள்தான். இன்னும் இரண்டு நூற்றாண்டுகளானாலும் நம் தேசம் உருப்படப்போவதில்லை என்பதை நம்மூர் ஆட்டோ டிரைவர்கள் நடத்தையிலிருந்து உத்தரவாதமாக என்னால் சொல்லமுடியும்.

மும்பை விமான நிலையத்தில் பின்னிரவு கிளம்பி ஃப்ராங்ஃபர்ட்டில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தூக்கம் இழந்த அசதியில் நானும் மனைவியும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தூங்கிப்போனோம். சைக்காவ்ஸ்க்கி , நாங்கள் தூங்குவதை முன்னிட்டு தன் ஆறாவது சிம்பனியின் பி மைனர் வயலினில் கீழ்ஸ்தாயியிலேயே, உறுத்தாமல் சஞ்சாரம் செய்தபடி இருக்க, ஹாரன் அடிக்காத, முன்னால் போகும் காரை வையாத அழுத்தமான அற்புதமான அமைதியில் நாங்கள் என்ன முயன்றிருந்தாலும் தூங்காமல் இருந்திருக்கமுடியாது. எதிர் திசையில் நழுவும் வாகனங்களின் சக்கரங்கள், ஈரமான சாலைகளில் விரைவதால் ஏற்பட்ட சீரான அரவம் எங்கள் தூக்கத்துக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல காதுகளை வருடின. வாகனத்தின் இளஞ்சூட்டிலும், பளிங்குச் சாலையின் குலுக்கலில்லா விரைவிலும் தடங்கலில்லாமல் ஆழ்ந்த உறக்கத்துள் உறைந்தோம்.

ஒரு சின்ன அவசர ப்ரேக்கின் தள்ளல் எங்கள் இருவரையும் எழுப்பியது. மனைவி திடுக்கிட்டு எழுந்து, சிவந்த கண்களோடு இன்னும் வந்து சேரலயா? டைம் என்ன?’ என்றாள் வாயைத் துடைத்துக்கொண்டு. கார் நின்ற இடத்தில் நான்கைந்து போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு வாகன ஓட்டத்தைச் சீராக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்தப்பக்கம் ஒரு கார் பாதையிலிருந்து கொஞ்சமாய் விலகி பனிக்குவியலுக்குள் சிக்கியிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன். முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. இவ்வளவு நேரம் ஆகுமா என்ற சந்தேகத்தில் நான் அவன் தோளை லேசாகத் தட்டி ‘வேர் ஆர் வி?’ என்றேன்.

அவன் ‘ஃபிப்டீன் மினிட்ஸ் மோர்’ என்றான்.

டாக்ஸி மீட்டரைப் பார்த்து ‘என்னங்க 310 ஷில்லிங் காமிக்குது? ரூபாய்ல எவ்வளவு?’ என்றாள், ஐரோப்பாவுக்குப் பயணமாகிற ஏற்பாடு செய்திருந்த தினத்திலிருந்து அன்னியக் கட்டணங்களை இந்திய ரூபாயில் பெருக்கியபடி இருந்த மனைவி.

‘கிட்டத்தட்ட 1400 ரூபா….’

‘நாசமாப் போச்சு. ஏர்போர்ட்லர்ந்து சிட்டிக்குள்ள வர 1400 ரூபாயா…! இவன் ஏமாத்தறான்ங்க…. சுத்து வழில வந்திருக்கான்…’

எனக்கும் அந்தச் சந்தேகம் தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் மறுபடி அவன் என்னை உற்று நோக்கும் பார்வை தெரிந்தது.

‘ஊருக்குள்ள வர்றதுக்கு எவ்ளோ வாடகை ஆகும்னு பீட்டர் கிட்ட கேட்டுகிட்டீங்களா?’

‘இல்ல, அவரு வந்து பிக்கப் பண்ணிக்கற ஐடியா இருந்ததால் கேட்டுக்கலை.’

அவரை ஃபோன் பண்ணி ஏர்போர்ட்டுக்கு மறுபடி வரச்சொல்லியிருக்கலாங்க…. நீங்கதான் சங்கோஜப்பட்டுகிட்டு கூப்பிட மாட்டேன்னுட்டீங்க.’

‘அந்த ஆளு தன் வேலையை உட்டுட்டு வீட்லந்து வந்து, நாம ஃப்ளைட்டு மிஸ் பண்ணது தெரியாம மூணு மணி நேரம் காத்திருந்துட்டு வீட்டுக்கு திரும்பிப் போயிருக்காரு. அவரை மறுபடி ஏர்போர்ட்டுக்கு வான்னு எப்டி கூப்படறது?’

‘ஃப்ராங்ஃபர்ட்ல கனெக்ட்டிங் ஃப்ளைட் விட்டுட்டோம்ல. அங்கிருந்து அவருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கலாம்.’

‘பண்ணேன்ம்மா , ஃபோன் அடிச்சிகிட்டு இருந்தது. அவரு எங்கியோ வெளிய போயிட்டாரு போல…. இதெல்லாம் எப்டி தவிர்க்க முடியும் சொல்லு.’

‘அநியாயம்ங்க…. நம்மூர்ல ஆட்டோக்காரனுக்கு மீட்டர் மேல பத்து ரூபா குடுக்க சண்டை போடுவீங்கல்ல…இங்க சேத்து வச்சி அழுங்க. எவனோ இளிச்சவாயனுங்க மாட்னாங்கன்னு ஊரைச் சுத்திக் காமிக்கறான்.’

‘ஏமாறணும்னு இருந்தா ஏமாந்துதான் ஆகணும். புது ஊரு. ஆளுங்களைத் தெரியாது…’

‘ஊரை நல்லா பாத்துக்கங்க…. தனியா ஒரு முறை வரவேணாம்.’

‘கொஞ்சம் பேசாம வர்றியா…’

மறுபடி கண்ணாடியில் கண்கள் சந்தித்தன. அவன் தன் கண்களை என்னிடமிருந்து விலக்கிக்கொண்டான்.

டாக்ஸியின் வேகம் குறைந்திருந்தது. மஞ்சள் ஒளி தெறிக்கும் ஜன்னல்கள் கொண்ட கட்டடங்கள், சாலையிலிருந்து அள்ளிப்போட்ட பனிக் குன்றுகள், புகை கக்கும் சுவாசத்தோடு நடக்கற மனிதர்கள், சக கார்கள், மெல்லிய மணியோசையோடு வளைந்து நெளிந்து போகிற சிவப்பு டிராம் வண்டிகள் என்று நகரத்தின் அடையாளங்களைப் பார்ப்பது ஆசுவாசமாய் இருந்தது. அவன், என் முகவரி எழுதிய காகிதத்தை இன்னொரு முறை எடுத்துப் பார்த்துவிட்டு இடமும் வலமுமாய்ப் பார்த்தபடி ஓட்டி வந்து வேகம் குறைத்து

ஓரிடத்தில் நிறுத்தினான். எங்கள் இலக்கு எண் தெரிந்தது. ‘யுவர் அட்ரஸ்’ என்றான் சுருக்கமாய். நான் என் பர்ஸிலிருந்து, மனம் லேசாக அடித்துக்கொள்ள, 400 ஷில்லிங் சேகரித்து எடுத்துக்கொண்டு இறங்கினேன்.

காரை விட்டு இறங்கி வந்து டிக்கியைத் திறந்தான். எங்கள் உடமைகளை எடுத்து வைத்தான். பெட்டியைக் கீழே வைக்கக் குனிந்தபோது அவன் கழுத்திலிருந்து ஒரு ருத்ராட்ச மாலை நழுவித் தொங்கியது. நிமிர்ந்து எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு சட்டைக்குள் போட்டுக்கொண்டான்.

‘பனி விலுந்து ரோடு மோஸ்மா இர்க்கு…அதனால் வற்ர லேட் ஆச்சு. சுத்தி வல்லை…தப்பா நெனைக்காதிங்க. மெட்ராஸ்லந்து வந்த உங்கல பாக்க ரெம்ப மகில்ச்சி…’ என்றான்.

– கலைமகள், ஜூலை 2004 இலக்கியச் சிந்தனை மாதாந்திரப் பரிசுக் கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *