கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 14,219 
 
 

எட்டு மணிதான் ஆகிறது… செல்லம்மா அந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது, நான்கைந்து மாநகராட்சி ஊழியர்கள் மட்டும்தான் குப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்… சுற்றி முற்றியும் பார்த்துக்கொண்டே மதில் சுவரோரம் விசாலமாக நின்ற புங்கை மரத்தின் அடியில் அமர்ந்தாள்…

அவள் வழக்கமாக அமரும் மரம்தான், உச்சிவெயில் கூட உள்ளே புகமுடியாத அதன் அடர்த்திக்குள் ஐக்கியமானாள்… கையில் வைத்திருந்த மஞ்சள் பையை அருகில் வைத்துவிட்டு, சேலையின் தலைப்பால் முகத்தின் வியர்வையை துடைத்துக்கொண்டாள்… பச்சைப்புடவைக்கு சம்மந்தமே இல்லாத மஞ்சள் ரவிக்கை, அதிலும் ஆங்காங்கே கிழிசல்… “அறுவது வயசு கெழவி மேட்சிங் ப்ளவுசுதேன் போடுவியளோ?” மருமகள் ஒருமுறை இப்படி குத்திக்காட்டியதிலிருந்து, மறந்தும்கூட பொருத்தமான ஆடையை அவள் அணிவதில்லை…

மரத்தின் காய்ந்த இலைகள் சருகுகளாய் காற்றில் நகர்ந்தோடியதையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்… அவளும் இந்த சருகு போல, காலமென்னும் காற்றின் போக்கிற்கே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவள்தான்… இன்று நேற்று அல்ல, ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படியோர் காலைப்பொழுது அவளுக்கு வாடிக்கைதான்…

எட்டுமணிக்கு மரத்தடியில் அமர்வாள், ஒன்பது மணிக்கு வழக்கறிஞர் அறைக்கு சென்று பணத்தை கொடுப்பாள், பதினொரு மணி அளவில் வழக்கு விசாரணைக்கு வரும், அதிசயமாக எப்போதாவது விசாரணைகளும் நடைபெறும்… எல்லாவற்றையும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அடுத்த விசாரணைக்கான தேதியை மனதிற்குள் மனனம் செய்தபடியே அங்கிருந்து விடைபெறுவாள்…

இடைப்பட்ட ஏதோ சில நிமிடங்கள் காவலர்களால் அழைத்துவரப்படும் தன் மகனை பார்த்து, சாப்பிட எதாவது வாங்கிக்கொடுப்பாள்… அவனுடனும் அதிகம் எதுவும் பேசியதில்லை… சிறைக்குள்ளிருந்து வலிகளை சுமந்துவரும் மகனிடம், சம்பிரதாயத்துக்காக “நல்லா இருக்கியா முத்துமணி?”ன்னு கேட்பதற்கு அவள்
மனம் ஒப்பியதில்லை… ஆனாலும், மகனை பார்த்ததன் மனநிறைவு. அவள் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் நிறைவை கொடுக்கும் நிகழ்வாகவே இத்தனை காலமும் இருந்ததுண்டு… ஆனால், இன்றோடு வழக்கு முடிவதால், இந்த வழக்கங்களும் ஓய்ந்துவிடும்… சமயபுரத்தாளையும், வயலூரானையும் மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் நல்லதொரு தீர்ப்பை வேண்டி, வணங்கிக்கொண்டே இருந்தாள்…

ஒன்பது மணி ஆகிவிட்டது… நீதிமன்ற வளாகம் தன் வழக்கமான பரபரப்புக்குள் தன்னை ஆட்படுத்த தயாராகிவிட்டது.. கருப்பு கோட்டுகளும், காக்கி சட்டைகளும், பிக்பாக்கெட் திருடர்கள் முதல் நிலக்கரி ஊழல் திருடன் வரையிலான காக்டெயில் களவானிகளும் அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர்…

மெள்ள நிமிர்ந்து உட்கார்ந்தபடி, காக்கி சட்டைகளுக்கு இடையில் தன் மகன் வருகிறானா? என்று தேடினாள்… அந்த அலைபாய்ந்த கருவிழிகள், யாரோ அவளை பின்னாலிருந்து தொட்டவுடன் ஸ்தம்பித்து நின்றது… சட்டென
திரும்பிப்பார்த்தாள், செந்தில்தான் நின்றுகொண்டிருந்தான்… வெள்ளை சட்டை, ஊதா பேன்ட், கையில் புத்தகப்பையும், சாப்பாட்டு கூடையுமாக…

ஓடிவந்ததன் விளைவாக மூச்சிரைக்க நின்றான்…

“நீதானாடா? நான் பயந்துட்டேன்…” பெருமூச்சு விட்டுக்கொண்டாள் செல்லம்மா…

“நான்தான் வாரேன்னு சொன்னேன்ல, அதுக்குள்ள ஒனக்கு என்னாத்தா அவசரம்?”

உரிமையாய் கோபித்துக்கொண்டான்…

“ஒனக்கு என்னமோ பரிச்சை இருக்குன்னு உங்கம்மா சொன்னாளே, அதுனாலதான் தனியா வந்துட்டேன்… நீ பரிச்சைக்கு போவலையா?.. இது தெரிஞ்சா உங்கம்மா கோவிப்பாடா”

“இல்லாத்தா… அது சும்மா டெஸ்டுதான், ஒன்னும் பிரச்சின இல்ல..”

“என்னது?”

“அது சின்ன பரிச்சையாத்தா… அம்மாகிட்ட எதுவும் இதப்பத்தி சொல்லிக்காத… நீ எதாச்சும் சாப்புட்டியா?.. எதாவது வாங்கியாரவா?”

“ஒன்னும் வேணாம்டா… நம்ம வக்கீல ஒருதரம் பாத்துட்டு வந்துடலாம், வா”

“கேஸு நடந்த ஒவ்வொரு மொறையும் குடுத்தது போதுமாத்தா… அந்தாளு ஒன்னும் பெருசா வாதாடவல்லாம் இல்ல, நம்மகிட்டதான் வாய்கிழிய பேசுனாரு… தீர்ப்பு சொல்றதுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?… சும்மா உக்காரு!”

“ஏய் பெரியவுகள இப்புடியா மரியாதக்கொறைவா பேசுறது?.. அப்புடியே உங்கம்மா புத்தி!… நீ வரலைன்னா இரு, நான் போயிட்டு வாரேன்!” கோபித்தபடியே சேலையின் முனையை தலையில் முக்காடாய் போட்டபடி வேகமாய்
நடக்கத்தொடங்கினாள்… காலில் செருப்புகள் இல்லை, விரிசலாய் வெடித்த பித்தவெடிப்புகள் மண்ணில் தண்டும்போதல்லாம் வலியால் கால்கள் விம்மிக்குதித்தன…

ஓரிரு நிமிடங்கள் அமைதி செந்திலையும் நிலைகொள்ளவிடவில்லை… செல்லம்மா போன பாதை விழியே அவனும் நடக்கத்தொடங்கினான்… அவன் சித்தப்பா முத்துமணியின் மீதான பாசம், இப்படி பலரின் மீதும் வெறுப்பாய் வெளிப்பட்டுவிடுவதுண்டு… பலநேரங்களில் அவன் அம்மாவுக்கும் செந்திலுக்குமே இதைப்பற்றி சர்ச்சைகள் எழுந்ததுண்டு…

“திருட்டுப்பய சவகாசம் வேணாமுடா… அந்த கெழவியோட நீயும் கோர்ட்டு பக்கம் போனேன்னு தெரிஞ்சுது, மனுஷியா இருக்கமாட்டேன் ஆமா…”

“சித்தப்பா திருட்டுப்பயலா?… ஏன், உன் நகைய திருடுச்சா? பணத்த திருடுச்சா?..”

“திருடுனா மட்டும்தேன் திருட்டுப்பயலா?.. இல்லாத அசிங்கத்த செஞ்சு, குடும்பத்து பேர நாசமாக்குன அவன் திருட்டுப்பயதான்… நீயாச்சும் நல்ல சவகாசத்தோட இரு, அப்பதேன் நல்ல பழக்கம் உனக்காவுது வரும்!”
சொல்லிக்கொண்டே சட்டியை உருட்டுவாள், பானையை நொறுக்குவாள், சில நேரங்களில் அப்பாவின் மண்டையை பதம் பார்ப்பாள்… செந்திலின் அப்பாவோ புள்ளைப்பூச்சி, மனைவியின் செருமலுக்கே தடுமாறும் நபர்…

வழக்கறிஞர் அறைக்குள்லிருந்து செல்லம்மா வெளியே வந்தாள்… பின்னாலேயே வழக்கறிஞரும் அழுக்குப்படிந்த நூறு ரூபாய் தாள்களை எண்ணியபடி வெளிவந்தார்…

“ஒன்னும் கவலைப்படாதம்மா… நீ போகயில முத்துமணியையும் கூட்டிட்டு போய்டலாம்… அதிகபட்சம் மூணு வருஷம் தண்டனை குடுத்தா கூட, இந்த வழக்கு நடந்த மூணு வருஷத்தையும் தண்டனை காலமா கருதி, விடுதலை செய்ய சொல்லிடலாம்… குல்பார் சிங் வெர்சஸ் பஞ்சாப் கவர்மென்ட் கேஸ்ல…”

வழக்கறிஞர் வரிசைகட்டி சொல்லும்போதே இடைபுகுந்தான் செந்தில்…

“இன்னிக்கு சித்தப்பா வெளில வந்திடுவாரா?”

“வரவச்சிடலாம்…”

“வரமுடியாதுன்னு வெளில சொல்லிக்கறாக?”

“அவங்களுக்கு என்ன தெரியும் யூஸ்லஸ் பெல்லோஸ்… தமிழ்நாட்ல நடத்தப்படுற முதல் 377 ஐபிசி கேஸ் இது… முத்துமணிக்கு எதிரா அரசுதரப்பு சாட்சியா வலுவா எதையும் காட்டல… சிலரோட வாக்குமூலம் மட்டும்தான் பிரதானமா இருக்கு… அதவச்சு தண்டனை கொடுத்திடமுடியாது… ஜூனியர் விகடன், புதிய தலைமுறைனு மீடியா பார்வைல கூட கேஸ் வந்திட்டதால, சாட்சிகள் இல்லாம ஒன்னும் பண்ணிட முடியாது…”

ஒவ்வொருமுறையும் கூடுதல் பணத்திற்காக இப்படி அள்ளிவிடுவது இவர் வழக்கம்தான் என்றாலும்… கொடுக்கப்படும் சில நூறுகளுக்கு, குறைந்தபட்சம் அவர் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகளாவது இருவருக்கும் மருந்தாக மாறுவதுண்டு….

“நீங்க போய் வெயிட் பண்ணுங்க… நம்ம கேஸ் பதினாலாவது… ஹியரிங் வர்றப்போ சொல்லி அனுப்புறேன்!” சொல்லிவிட்டு அடுத்த வழக்கு தொடர்பாக, கோப்புகளை புரட்டத்தொடங்கிவிட்டார் வழக்கறிஞர்…

செல்லம்மாவும், செந்திலும் அதே மன நிம்மதியோடு வழக்கமான புங்கை மரத்தை அடைந்தனர்….

“வக்கீல் சொல்றாப்ல முத்துமணி வந்துட்டான்னா, சமயபுரம் போயி ஆத்தாளுக்கு முடி எறக்கணும்…”

“சரி அதை அப்பறம் பாத்துக்கலாம்… எப்புடியும் இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகிடும்… எதாச்சும் சாப்பிடாத்தா… அம்மா புளிசாதம் கட்டிக்குடித்திருக்கு, சாப்பிடுறியா?” சாப்பாட்டு கூடையை அவள் கண்முன் காட்டினான்…

“இல்லடா… பசிக்கவே இல்ல…”

“டீயாச்சும் வாங்கியாறேன், குடி” சொல்லிவிட்டு, செல்லம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் கடையை நோக்கி விரைந்தோடினான்….

சித்தப்பா வந்திடுவார்!.. முன்ன மாதிரி அவரோட நிறைய பேசலாம்.. ஆனால், அவர் பழையபடி வீட்டிற்கு வந்ததும் இயல்பா இருப்பாரா?.. அவரே இருக்க நினைத்தாலும், அம்மா விடமாட்டாள்… அவள் வடிக்கும் சோறைவிட, சொற்கள்தான் அதிக சூடாக இருக்கும்.. பேசாம பாட்டியோட சித்தப்பா, கொல்லைக்காட்டுல
குடிசை போட்டு தங்கிக்கலாம்… ஊருப்பயலுக பேச்சுலேந்து தப்பிச்ச மாதிரியும் இருக்கும்.. இப்பவே சித்தப்பாவப்பத்தி ஊருக்குள்ள அசிங்கமாத்தான் பேசிக்கறாங்க…

“யாரு அந்த ஆம்பள கூட படுத்து ஜெயிலுக்கு போன முத்துமணியா?”

“ஹோமோ பார்ட்டி முத்துமணியோட அண்ணன் மவனா நீ?”

முன்னது சித்தப்பாவிற்கான அடையாளமுமாக, பின்னது செந்திலுக்கான அடையாளமுமாக ஊருக்குள் உருவாகி வருடம் கூட கடந்துவிட்டது… ஆனால், இவற்றை செந்தில் பொருட்படுத்தியதில்லை… முத்துமணியை அதிகம் அறிந்தவன் செந்தில்… அப்பாவோ அம்மாவின் பேச்சுக்கு அடுத்த வார்த்தை பேசாத அப்பாவி என்பதால், ஊர் பிரச்சினையையும் சேர்ந்து கவனிக்கும் முத்துமணி அவனுக்குள் ரோல் மாடலாகவே உருவாகிவிட்டவன்…

சிறைசென்ற ஆரம்ப காலத்தில் மற்ற எல்லோரையும் போல இவனுக்கும் சித்தப்பன் மீது ஒரு வெறுப்பு இருந்ததென்னவோ உண்மை… ஆனாலும், காலம் பாசத்தை வெல்லச்செய்தது…

“ஒரு டீ தான?… இந்தாப்பா எடுத்துக்க…” டீக்கடைக்காரர் தோளில் கைவைத்து உலுப்பினார்…

பிளாஸ்டிக் கப்பில் டீயை, அது சிந்தாதபடி லாவகமாக பிடித்து மரத்தடியை நோக்கி நகர்ந்தான் செந்தில்… மரத்தை நோக்கி அருகாமையில் செல்லும்போதுதான், ஆத்தாவுடன் வேறு யாரோ இருவர் பேசிக்கொண்டிருப்பதை போல தெரிந்தது… ஒருவர் ஏதோ கேட்டுக்கொண்டே எழுதுவதை போலவும், இன்னொருவர் செல்லம்மாவை புகைப்படம் பிடிக்க முயல்வதை போலவும் தெரிந்தது… தன் நடையை
வேகப்படுத்தினான், நடந்த வேகத்தில் கப்பின் கால் பகுதி தேநீர் தரையில் தஞ்சம் அடைந்தது…

“உங்க பையன் எப்புடி ஹோமோசெக்ஸா ஆனார்?” செந்தில் அந்த இடத்தை அடைவதற்கும், அந்த நபர் இந்த கேள்வியை கேட்பதற்கும் சரியாக இருந்தது..

“உங்கம்மாகிட்ட போயி நீ எப்புடி பொறந்தன்னு கேளு, சொல்லுவாங்க…” சீறினான் செந்தில்…

பேனா நபரும், புகைப்பட ஆசாமியும் அதிர்ந்தனர்…

“ஏய் தம்பி, என்ன திமிரா பேசுற?… நாங்க பிரஸ் தெரியும்ல?” என்றபடி ஒரு அடையாள அட்டையை காண்பித்தது பேனா…

“ப்ரெஸ்’னா கடவுளா?.. சரி, கடவுளாவே இருந்தாலும் இதான் என் பதில் கேள்வி!”

“ஸ்கூல் படிக்குற பையன் வரம்பு மீறி பேசுற தம்பி” புகைப்படம் புகுந்தது…

“எல்லாம் படிச்ச உங்கள மாதிரி ஆளுங்க மட்டும் வரம்பு மீறி பேச ரைட்ஸ் இருக்கா? போங்கய்யா அங்குட்டு, வந்துட்டாங்க எப்ப ஆச்சு? எப்புடி ஆச்சுன்னு கேட்டுகிட்டு…” செல்லம்மாவின் அருகில் அமர்ந்தான்.. எங்கோ
வெறித்தபடி அமர்ந்திருந்தாள்… தான் வருவதற்கு முன் இன்னும் எத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்? என்பதை செந்திலால் யூகிக்க முடிந்தது…

இரண்டு பத்திரிகையாளர்களும் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்…

“டீ குடி ஆத்தா…” கப்பை கையில் திணித்தான்… தேநீரின் சூட்டால், உணர்வு மீளப்பட்டவளாக செந்திலை பார்த்தாள்… அவள் கண்கள் கலங்கியது…

வடிந்து வடிந்தே வற்றிய கண்கள் அது, இன்னும் மனதின் சோகங்கள் கண்ணீரை திரட்டி வெளிவிட்டது ஆச்சர்யம்தான்…

“அழுவாம குடியாத்தா… அவனுக போறானுக போக்கத்த பயலுவ… பத்திரிகை விக்கனும்னா யாரு மனசை பத்தியும் இவங்களுக்கு கவலையில்ல… எல்லாம் ஒரு ரெண்டு மாசம்தான்… சித்தப்பா வெளிய வந்துட்டா எல்லாம் சரியாகிடும்…

நீ டீய குடிச்சுட்டு செத்த நேரம் படு, ஆளு வந்தா கூப்பிடுறேன்” என்றான் செந்தில்…

“எனக்கு பசிக்கலடா.. எம்புள்ளைய பாக்குறவரைக்கும் தொண்டைக்குள்ள எச்சி கூட எறங்காதுடா… அவனப்பத்தி எதாச்சும் நல்லவிஷயம் தெரியவந்தா, நானே உன்கிட்ட வாங்கித்தர சொல்றேண்டா” சொல்லிவிட்டு மரத்தின் மீது சாய்ந்தபடி அமர்ந்தாள்… இன்னும் செல்லம்மா இறுக்கம் கலையவில்லை… கண்கள் பலவித
கற்பனைகளில் ஆழ்ந்திருந்தன, உதடுகள் கடவுளின் நாமத்தை உதிர்த்தபடியே இருந்தன…

செந்திலுக்கு மனம் முழுக்க குழப்பங்கள்தான்… தீர்ப்பை பற்றிய பதற்றமும், அதனை தொடர்ந்த சிக்கல்களை சமாளிப்பதும் அவன் வயதை மீறி திணிக்கப்பட்ட விதியின் விளைவு… ஏதோ ஒரு உள்ளுணர்வு, “எப்படியும்
இன்னிக்கு சித்தப்பா வெளில வந்திடுவார்!”னு அவனை நம்பவைத்துக்கொண்டே இருந்தது…

ஊரின் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முன்னே நின்றவரை, இந்த மூன்று வருடங்களாக எவருமே கண்டுகொள்ளவில்லை… ஒருமுறை மேட்டுத்தெருவில் சாலை போடுவதாக இரண்டுமுறை வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாத, பேரூராட்சி தலைவரின் சட்டையை பிடித்து சண்டை போட்டபோது ஊரே, “எப்பா முத்துமணி, சிங்கத்து கணக்கா செஞ்சுபுட்டப்பா… அந்த சேர்மன் ஆடிப்போய்ட்டாருல்ல…

வர்ற எலெக்சன்ல நீ கவுன்சிலர் எலக்சன்ல நில்லு, உன்ன அன்னபோஸ்ட்டா ஜெய்க்க வைக்குறோம்!” இப்படித்தான் கொண்டாடியது…

அதே வாய்கள்தான், இன்றைக்கு நாக்குகள் தடம் புரண்டதை போல, “இந்த பாரு செல்லம்மா, உம்மவன் ஜெயில்ல ரிலீஸ் ஆனாகூட ஊருக்குள்ள வரப்புடாது….

ஊருப்பயலுவ கெட்டு போய்டுவாணுக, நம்ம ஊருக்குன்னு ஒரு கௌரதி இருக்குல்ல!” என்றும் பேசியது… இந்த ஏச்சுகளையும், பேச்சுகளையும் எச்சிலைப்போல விழுங்கிக்கொண்டும்தான், இந்த மூன்று வருடத்தை கடந்திருக்கிறார்கள் செல்லம்மாவும் செந்திலும்…

பதினொரு மணி கடந்த சில நிமிடங்களில், ஒரு நபர் இவர்கள் இருவரையும் நோக்கி நடந்துவந்தார்…

“நம்ம கேஸ் வந்தாச்சு.. லாயர் உங்கள உள்ள வரச்சொன்னார்”

களைந்த முடிகளை அள்ளி முடிந்தபடி பரபரப்பாக எழுந்தாள் செல்லம்மா…

தொண்டைக்குழியின் எச்சிலை விழுங்கிவிட்டு செந்திலும் அந்த நபர் பின்னே நடக்கத்தொடங்கினான்… மைய கட்டிடத்தின் அருகாமையில் செல்லும்போது, ஒரு நாற்பதைம்பது நபர்கள் கையில் பதாகைகளுடன் நின்று
கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்… இப்படி கோஷங்களும், கொடி பிடித்தல்களும் அங்கு வழக்கமாய் நடக்கும் நிகழ்வென்பதால் செந்திலும், செல்லம்மாவும் அதனை பொருட்படுத்தாது கடந்து சென்றனர்… சில அடிகள் தூரம் கடந்து சென்றபின்பு, இருவரின் முன்னே சென்ற வழக்கறிஞரின் உதவியாளர் “இந்த கூட்டம் எதுக்கு ப்ரோட்டஸ்ட் பண்றாங்கன்னு தெரியுதா?” என்றார்…

“தெரியலையே?” என்றபடி உதட்டை பிதுக்கினான் செந்தில்…

“அவங்க வச்சிருக்கிற போர்டுல என்ன எழுந்திருக்குன்னு பாரு!”

அவர்கள் போட்ட கோஷத்தினால் போர்டுகள் முன்னும் பின்னும் நகர்ந்ததால், தடுமாறியபடி அதன் வாசகத்தை படித்தான் செந்தில்.. “கலாச்சார கயவனை தூக்கிலிடு!” “ஹோமோ முத்துமணியை விடுவிக்காதே!” “சட்டப்பிரிவு 377க்கு நியாயம் வழங்கு, குற்றவாளியை தூக்கில் போடு!” என்ற பலதரப்பட்ட வாசகங்களும் செந்திலை சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நிற்கவைத்தன…

“எல்லாம் நம்ம முத்துமணியை எதிர்த்த போராட்டம்தான்!” என்றார்…

“எதுக்கு எதிர்க்குறாக?” அப்பாவியாய் கேட்டாள் செல்லம்மா…

“அவங்க கலாச்சாரத்தை காப்பாத்தவாம்”

“யாரு போராடுறது?”

“எல்லா மதத்து அமைப்புகளும்தான்… இந்த விஷயத்துல இவங்க எல்லாரும் ஒத்துமையா ஆகிட்டாங்க” சொன்னபடியே கடிகாரத்தை பார்த்தார்…

“சரி நேரமாச்சு, சீக்கிரம் வாங்க!” என்றபடி முன்னே சென்றார் அந்த உதவியாளர்…

செல்லம்மா அந்த கூட்டத்தின் கோஷத்தை வெறித்தபடியே நின்றாள்…

“வா ஆத்தா… நேரமாச்சு!” என்றான் செந்தில்…

“நா வரலடா… நீ போயி பாத்து, என்ன தீர்ப்பு சொல்றாகன்னு வந்து சொல்லு…

எனக்கு படபடன்னு வருது!”என்று சொல்லிக்கொண்டே அருகிலிருந்த தூணில் சாய்ந்தபடி அமர்ந்தாள்…

“ஒரு டீ குடின்னா கேக்கல, இப்ப எதாச்சும் சொல்லு… இரு உன்ன வந்து கவனிச்சுக்கறேன்” கரித்துக்கொட்டியபடியே வேகமாக கட்டிடத்திற்குள் நுழைந்தான் செந்தில்…

செல்லம்மா, அமர்ந்தபடியே அந்த போராட்டத்தை இன்னும் வெறித்துக்கொண்டிருந்தாள்… எழுந்து சென்று அவர்கள் ஒவ்வொருவர் சட்டைகளை பிடித்தும், “எம்மவன் என்ன தப்பு பண்ணான்?… உங்கள யாரையாச்சும் படுக்க கூப்டானா?”ன்னு நியாயம் கேட்க அவளுக்கும் ஆசைதான்.. ஆனால், கணவன் இறந்தது முதலாகவே அடுத்த நபர்களிடம் அதிர்ந்துகூட பேசாத சுபாவம் உடையவள், எழுந்து சென்று அவர்கள் அருகில் செல்வதே இப்போது இயலாத காரியமாகிவிட்டது…

கோபத்தை கூட அவளால் கண்ணீரின் வழிதான் வெளிப்படுத்த முடிகிறது…

அழுதாள், தேம்பி அழுதாள், தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்… போவோர் வருவோரின் மாறுபட்ட பார்வை அவளை சங்கடப்பட வைக்கவில்லை… அப்படி தன்னை கடக்கும் எவராலும் தன் கவலையை புரிந்துகொள்ள முடியாது எனும்போது, அவர்களைப்பற்றி எதற்கு கவலைப்பட வேண்டும்!… ஓலமிட்டு அழுதாள்… அந்த போராட்ட கோஷங்களுக்கு மத்தியில், இவளின் ஓலம் கூட நிசப்தமாகிவிட்டது…

நிமிடங்கள் கழித்து, தூணில் தலை சாய்த்து மேல்நோக்கி விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்… கண்கள் மட்டும் விழியோரம் கண்ணீரை கசியவிட்டுக்கொண்டே இருந்தது… அழவோ, பேசவோ கூட அவளுக்கு
திராணியில்லை…

அவள் தலையை தொட்டது ஒரு கை… ஆற்றாமையோடு நிமிர்ந்து பார்த்தாள்…

பதற்றத்தோடு செந்தில் நின்றான்… ஒரு கையால் தூணையும், மறுகையால் செந்திலையும் பிடித்தபடி மெள்ள தடுமாறியபடி எழுந்து நின்றாள்…

“என்னாச்சு?” கேட்கும்போதும் கூட அழுகைக்கு இடையில்தான் வார்த்தைகள் வெளிவந்தன…

“ஆத்தா… பதட்டப்படாத… ஒன்னும் பிரச்சின இல்ல, நம்ம மேல் கோர்ட்டுக்கு போவலாம்… அங்க நல்ல தீர்ப்பு கிடைக்கும்!” சொல்லிக்கொண்டே அவனையும் மீறி அழத்தொடங்கினான் செந்தில்…

“ஐயோ.. என்னடா ஆச்சு தெளிவா சொல்லு…”

“பத்து வருஷம் ஜெயில் தண்டனையாம் ஆத்தா…” தலையில் அடித்து அழத்தொடங்கினான்… சில நிமிட அழுகைக்கு பிறகு செல்லாம்மாவின் முகத்தை கவனித்தான், அவள் கண்களில் கண்ணீர் இல்லை…

முந்தானையால் கண்ணீரை துடைத்துவிட்டு, தலைமுடிகளையும் சரிபடுத்தியபடி இயல்பாக நின்றாள்… ஆச்சர்யத்தோடு அவளை நோக்கினான் செந்தில்…

“டீ வாங்கிட்டு வாடா, பசிக்குது..” மிக இயல்பாகவே சொன்னாள்…

“ஆத்தா… உனக்கென்ன பைத்தியமா?… சித்தப்பாவுக்கு பத்து வருஷ தண்டனை கொடுத்திருக்காக, உனக்கு கவலை இல்லையா?” அதிர்ந்தே கேட்டான்..

“இப்பதான் நிம்மதிடா.. வெளில வந்திருந்தா, இந்த ஜனங்க அவன நிம்மதியா வாழவிட மாட்டாங்கடா… ஒரு பத்து வருஷம் இந்த எந்த இம்சையும் இல்லாம இருந்துட்டு வரட்டும், அதுக்குள்ளயாச்சும் இந்த சனங்க மனசு மாறுதான்னு பார்க்கலாம்!” அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திருந்தது… இந்த சமூகத்தில் உதிக்காத தெளிவு அது…

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஜெயில் தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *