கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 15,450 
 

Cream Center இல் நாகராஜனை எதேச்சையாக சந்தித்தேன். கூடவே ஒரு பதினேழு வயது பெண். அழகாக இருந்தாள். நாகராஜின் மனைவி சாயலாக இருக்கவேண்டும். கொஞ்சம் மூக்கில் கொஞ்சம் மோவாயில் மட்டும் நாகராஜ். அவனைப்பார்த்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். நாங்கள் ஒன்பதாவது படிக்கும்போது நாகராஜ் எங்கள் கிளாசில் சேர்ந்தான். நாங்கள் கேள்விப்பட்டிராத ஏதோ பெசன்ட் நகர் என்றான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெசன்ட் ஸ்கூல், அப்புறம் வீட்டில் தனியா அனுப்பவே அனுப்பாத எலியட்ஸ் பீச். “அங்கே தினோம் கொலை நடக்குண்டா” என்ற ரீதியில் தமிழ்வாணன் மற்றும் சங்கர்லால் பாதிப்பில் பேசிக்கொள்வோம்.

அங்கே வீடெல்லாம் வந்துடுத்தா என்ற ஆச்சரியத்தோடு மட்டுமின்றி “டேய்! நீ தினம் பீச்சுக்கு போலாம் இல்ல” என்று பொறாமைப்பட்ட நாகராஜ். அவனை விவரிப்பது இந்த கதைக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவது இல்லையென்றாலும் விவரிப்போம்:

மெல்லிசாக இருப்பான் . கை, காலெல்லாம் Tenderராக இருக்கும். கொஞ்ச நளினத்தொடுதான் நடப்பான். முகத்தில் அதீத expressions கொடுத்துப்பேசுவான். அப்போது வெளி வந்திருந்த “பொட்டு வைத்த முகமோ” பாட்டு அவனுக்கு ரொம்பவும் favourite. “நன்றாகப்பாடுவேன்” என்று அவனே சொல்லிக்கொண்டு சிலரை டெஸ்கின் மேல் குவித்துக்கொண்டு சன்னமான குரலில் யாருக்கும் கேட்காதபடி பாடுவான். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்கிறவரைக்கும் கேட்டுத்தீர்த்துவிடுவான். இங்கே பாட்டு நடந்து கொண்டிருக்கும்போது பெண்டுகள் பக்கம் குறும்புச்சிரிப்பும், கேலிப்பார்வையும் சர்வ சாதாரணமாகத்தென்படுவது ஏனோ எங்களில் சிலருக்கு வெட்கமாக இருக்கும். இந்த நாகராஜன் செய்துவைத்த ஒரு சில காரியங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படும் முன்பு, நான் Cream Center இன் மானேஜர் பார்க்கும் “அடேய் பாதகா” பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டும். மேலும் சுற்றி இருப்பவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் vegetable Sizzler தெலுங்கு சினிமாவின் தேவலோக சீன போல புகை கக்கிக்கொண்டு என் டேபிளுக்கு வந்துவிட்டது. “அப்பறம் பார்க்கலாம்” என்று sizzler ஐ நோக்கி படையெடுத்தேன்.

நாகராஜ் ஒரு extrovert என்றுதான் சொல்லவேண்டும். சட்டென்று ஒட்டிக்கொள்ளும் சாதுரியம் அவனுக்கு இருந்தது. நாங்களெல்லாம் பேசவே வியர்த்து விறுவிறுக்கும் பெண்களிடம் சர்வ சாதாரணமாக போய் பேசிவிட்டு ஒரு வெற்றிச்சிரிப்புடன் எங்களை நோக்கி சிவாஜி கணேசன் நடை நடந்து வருவான். வசுந்தரா, ராஜி போன்ற சுந்தரவடிவுடைய பெண்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லைஎன்றாலும், சந்திரிகா, கீதா போன்ற நோஞ்சான்கள் மத்தியில் நாகராஜனுக்கு ஒரு charismatic மரியாதை இருந்த விஷயத்தை எப்போதும் போல ஈயம் தான் கண்டு சொன்னான். முக்கியமாக வசுந்தராவுக்கு அவனைக்கண்டால் ஆகாது. ஏனென்றால் ஒரு முறை கிளாஸ் பெண்கள் பார்க்கும்படி நாங்கள் கிரிகெட் விளையாடும்போது நாகராஜன் போட்ட முதல் பந்திலேயே சுந்தர் அவுட் ஆகிவிட்டதுதான்! நாகராஜ் பாட ஆரம்பித்தாலே வசுந்தரா குரலை உசத்தி ஏதானும் சொல்வாள். ஒரு முறை காந்தி நகர் மூணாவது மெயின் ரோடில் நாகராஜனுக்கும் சுந்தருக்கும் சின்ன கை கலப்பு ஏற்பட்டுவிட்டது என்று பராபரியாக செய்தி வந்தும் இருவரும் அதை confirm செய்யவே இல்லை.

கதை கொஞ்சம் அலை பாய்வதால் ஜேம்ஸ் அரவாமுதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன். இந்த ஜேம்ஸ் நாகராஜின் பெசன்ட் நகர் நண்பன். எங்களுக்கு அவனைத்தெரியவே தெரியாது, அந்த கிரிகெட் மாட்ச் நடைபெறும் வரை. அவன் பெசன்ட் ஸ்கூலில் படிக்கிறான் என்ற விஷயம் மட்டும் நாகராஜ் சொல்லி தெரியும். இப்போது இந்த விவரம் போதும். ஏனெனில் இவன்தான் இந்தக்கதையில் பிற்பாடு ஒரு திருப்பத்தை உண்டு பண்ணப்போகிறான்..

(வாசகர்கள் எங்கே ஜாய்ஸ் அரவாமுதன் என்று கேட்பது காதில் விழுகிறது. தொடரும் போட இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?)

ஜாய்ஸ் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் இல்லை? சரி, சொல்கிறேன். அவள் ஜேம்ஸ் அரவாமுதனின் அழகான தங்கை. பாவாடை தாவணியுடன் பெசன்ட் ஸ்கூலுக்கும், மத்தியான வேளைகளில் பைஜாமா தாவணியுடன் சாரதா ஹாப்மன் என்னும் பெரிய சாரதா டீச்சரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள கலாக்ஷேத்ராவுக்கும் போய் வருவாள். நாங்கள் யாரும் அவளைப்பார்த்ததே இல்லை. விவரங்கள் எல்லாம் நாகராஜ் உபயம். இது விஷயமாக ஈயம் ஒன்றும் உபயோகமாக இல்லை என்பது ஆச்சரியம். ஈயத்தை தனியாக மடக்கி விசாரித்தபோது, ” டேய்! அவளெல்லாம் வெளி area. அங்கெல்லாம் போய் கேட்கக்கூடாது” என்று Non Compete ரேஞ்சுக்கு பதில் சொல்லி ஒதுங்கிக்கொண்டான். சென்ற மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈயத்தை பெசன்ட் நகரில் பார்த்ததாகவும் அவன் கையில் ரத்தக்கறையுடன் நொண்டி நொண்டி நடந்து சைக்கிளில் எறிச்சென்றதாகவும் ஒன்பதாம் கிளாஸ் வெண்டைக்காய் என்னும் குமார் சொன்னதற்கும், ஈயம் ரெண்டு மூணு நாள் முழங்கையில் ப்ளாஸ்திரியுடன் வந்ததும் ஒப்பிட்டுப்பார்த்தபோது ஏதோ புரிகிற மாதிரி இருந்தது.
” அடுத்த முறை எங்க எரியா பக்கம் வந்தே அந்தரங்கமான இடத்தைப்பிசைஞ்சுருவோம்” என்று மிரட்டப்பட்டதாகவும் ஒரு வதந்தி உலாவியது. ஈயத்தின் ஆப்தனான மனோகருக்கு A 1 பபிள்கம் வாங்கிக்கொடுத்து கேட்டதில், நாகராஜன் தான் ஈயத்தை பெசன்ட் நகர் பக்கம் வரவழைத்து ஆள் வைத்து அடித்து விட்டான் என்ற உண்மை வெளியே வந்தது. ஈயமும் நாகராஜனும் பேசாமல் இருந்ததற்கான காரணம் விளங்கிவிட்டதால் நாங்கள் அந்நாளைய தர்மப்படி அது பற்றி கேள்வி கேட்காமல் மௌனம் காத்தோம். மொத்தத்தில் ஜாய்ஸ் பற்றி நாகராஜ் சொல்வதுதான் final word என்றாகி விட்டது. நாங்களும் கண்ணில் காணாத அவளை விட்டுவிட்டு அருகாமை பெண்டுகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.

நாகராஜின் பர்சனாலிட்டி ஒரு மாதிரி சுவாரஸ்யமாக விரிய ஆரம்பித்தது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அவன் ஒரு Fixer என்ற ரேஞ்சில் உலா வர ஆரம்பித்தான். நாகராஜன் தான் சொன்னான் என்று ஒரே விஷயம் பலப்பல வெர்ஷன்களில் சுற்றுவது கொஞ்சம் வசீகரமாகவே இருந்தது என்று சொல்லவேண்டும். ஹரிகிருஷ்ணன் கோதைநாயகி, சுந்தர் வசுந்தரா, சந்திரிகா, மனோகர் என்று எல்லா மாட்டர்களிலும் நாகராஜன் contribution இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஒன்றிரண்டு சமயம் நாகராஜ் வழக்கத்துக்கு விரோதமாய் தலை குனிந்து அமைதியாக இருக்க, விசாரித்தால், ” “நல்லது பண்ணப்போன, என்னையே மாட்டிவிடராண்டா” என்று அரைகுறையாய் ஏதானும் சொல்லுவான். சுரேந்திரனும் ராஜேந்திரனும் பழி சண்டை போட்ட போது அதை முழுக்க முழுக்க ஊதி விட்டது நாகராஜ்தான் என்று பேச்சு நிலவியது. அந்த Fixer பெயர்ப்புராணத்துக்கு வருகிறேன்.

SSLC முதல் வாரம் time டேபிள் வெளியிட்டார்கள். அதில் வாரம் இரண்டு முறை வரும் PT பீரியட் உண்டு. அன்று மாலைதான் தெரிந்தது, அதே நேரத்தில்தான் பத்தாம் கிளாசுக்கும் PT என்று. ஆசிரியர் இல்லாமையோ, அல்லது வேறு ஏதோ logistics குழப்பத்தில் எங்கள் இரண்டு கிளாசுக்கும் ஒரே நேரத்தில் PT. இதன் தாத்பர்யம் என்னவென்றால் கிரிகேட் செட் மற்றும் வாலிபாலுக்கு பழி சண்டை ஏற்படும். ரெண்டு கிளாசிலும் இவைதான் பிரதான விளையாட்டு. இந்த விஷயத்தில் நாங்கள் ரெண்டு க்ளாசுமே ஒத்துழையாமையைப்பின் பற்றினோம். நாகரஜந்தான் “நா சரி பண்ணறேண்டா” என்று முன் வந்தான். பத்தாம் கிளாஸ் சித்தார்த்திடம் அடிக்கடி பேசினான். சித்தார்த்தும் பெசன்ட் நகரிலிருந்து வருபவன் என்பது ஒரு கூடுதல் உபாயமாக இருந்தது போலும். ஒரு முறை ஒக்காரை ரங்கராவ் கிளாசில் ” சார், கொஞ்சம் வெளியில் போகணும்” என்று பர்மிஷன் கேட்க, ” அப்படி என்ன கிழிக்கப்போரே” என்ற அவருக்கு, ” PT பீரியட் விஷயமா பேசணும்” என்று ஏதோ வட கொரியா சமாதான லெவலு க்கு பந்தா பண்ணிவிட்டு வெளியே போனான். ஒக்காரை சீரியசாக sulphur dioxide பற்றி சொல்லிகொண்டிருந்தபோது, இரைச்சலுடன் ஓடி வந்து” டேய்! PT பீரியட் ப்ராப்ளம் சரி பண்ணியாச்சு” என்று கத்திக்கொண்டே உள்ளே வர, ஒக்காரை கடுப்பாகி, அவனை கிளாஸ் வாசலில் மண்டி போடச்சொல்லிவிட்டார். அப்பவும் சிவாஜி ஸ்டைலில் ” போட்டு வைத்த முகமோ” முணுமுணுக்கிறான் என்றுதான் பட்டது. ஒக்காரை கிளம்பின கையேடு அவனைச்சூழ்ந்து கொண்டபோதுதான் அவனின் Innovative solution எங்களை உவப்பாக்கியது.

“இனிமே time table மாத்தமுடியாது என்று என்சி சார் சொல்லிட்டார். அதனால, நா என்ன சொல்றேன்னா, வருஷம் முழுக்க நம்ம ரெண்டு கிளாசும் கிரிக்கெட் வாலிபால் மேட்ச் போட்டுக்கொள்ள வேண்டியது. கிரிக்கெட்டில் டபிள் இன்னிங்க்ஸ், வாலிபாலில் பெஸ்ட் ஆப் பைவ். continuedஆ ஆடிக்கொள்ளலாம். so , ரெண்டு டீமுமே விளையாடலாம், எப்படி” என்றபோது நிஜம்மாகவே அவனின் புத்திசாலித்தனத்தை மெச்சினோம். சித்தார்த்தும் நாகராஜனும் இது பற்றி வீட்டுக்கு அருகில் பேசும்போது ஜேம்ஸ் அரவாமுதன், “பெசன்ட் ஸ்கூலிலும் இதே மாதிரி ப்ராப்ளம் வந்தபோது இப்படித்தான் பண்ணினோம்” என்று சொன்னதை வைத்துத்தான் இந்த முடிவு என்பது பிற்பாடு தெரிந்தது!
இந்த கிரிகெட் மாட்ச்சில்தான் ஒரு முறை நானும் கிருஷ்ணமூர்த்தியும் பந்து தேடப்போகும்போது ருத்ரமூர்த்தி சாரை மாலாவின் வீட்டில்…..உங்களுக்கு மாலா கதை நினைவில் இருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் உங்களை மறுபடியும் Cream Center க்கு அழைத்து செல்லவேண்டிய சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. அது, நாகாராஜனும் அவன் பெண்ணும் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் மனைவி கண்ணில் படவில்லை. அசௌகரியம் போலும், இவர்களுடன் வரவில்லை.
சரி, கிரிக்கெட் மாட்ச் பற்றியும் மாலா கதை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தோம். எங்களின் அதீத கிரிக்கெட் வெறியால் ஸ்கூல் விட்ட பிறகும் கிரிக்கெட் சாகசத்தை தொடரவேண்டும் என்று எங்கள் கஸ்தூரிபாய் நகரில் டைமண்ட் கிரிகெட் சங்கம் என்று ஆரம்பித்து தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டை ஸ்டம்ப் அடித்து சாயங்காகாலங்களில் விளையாடுவோம். இன்றைய அம்பிகா அப்பளாம் சிக்னலுக்கு எதிரே நாங்கள் விளையாடிய நிகழ்ச்சி பற்றி வேறு ஒரு கதையில் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி விளையாடும்போதுதான் கிருஷ்ணமூர்த்தி ஸ்கூட்டரில் அடிபட்டுக்கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அது பற்றி இன்னொரு சமயம் வைத்துக்கொள்வோம்.

சனி, ஞாயிறுகளில், பக்தவத்சலம் நகர், அல்லது வேங்கடரத்தினம் நகர் டீமுடன் மாட்ச்சும் உண்டு. எங்களில் யாராவது அவ்வப்போது ஜகா வாங்கிவிடுவதால் டீம் தொத்தலாகி, வேறு ஏரியாவிலிருந்து கடன் வாங்கிக்கொள்வோம். இப்படித்தான் ஒருமுறை St Bedes இல் படிக்கும் P C பிரகாஷை எங்கள் டீமில் சேர்த்துக்கொள்ள அவன் அப்போது முதல் டிவிஷனுக்கே விளையாடிக்கொண்டிருந்தான். டாஸ் ஜெயித்து பாட்டிங் எடுத்தவுடன் ஓபனிங் இறங்கினான். எதிரே எங்களை ரன் ஓட ஓட விரட்டி எடுத்து அவுட் ஆகாமலே எண்பது அடித்துவிட்டான். எண்பது ரன் என்பது அந்த லெவல் கிரிகெட்டில் எட்டாக்கனியான ஸ்கோர். எதிர் டீம் இவன் யாருடா என்று விசாரிக்கப்போய், உண்மை வெளியே வந்து கை கலப்பில் முடிந்த அந்த மாட்ச்சில் வெளிப்பட்ட சங்கரின் வீரம்பற்றியும் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த டீமில் தான் ஆடலாமா என்று நாகராஜ் தூது விட்டிருந்தான். நாங்கள் எங்களுடைய இல்லாத bye law வை உத்தேசித்து, ” அதெப்படி, அவன் நம்ம பேட்டையே இல்லியே என்று அனுமதி மறுத்து விட்டோம். ஆனால் நாகராஜ் வெளியே, ” இந்த டைமன்ட் டீம் பசங்க எங்க டீமுக்கு வான்னு கெஞ்சினாங்க. எப்படிடா முடியும், நா பெசன்ட் நகர் ஆச்சே ன்னு முடியாதுன்னுட்டேன்” என்று சொல்லிகொள்ளுவான்.
மறுபடி Cream Center. பில் கொடுத்துவிட்டு நான் எழுந்தபோது, நாகராஜும் எழுந்து விட்டதை கவனித்தேன். வாசலுக்கு வந்தோம். கூடவே அவன் பெண்ணும். சீட் எப்போ காலியாகும் என்று ஒரு கோஷ்டியே வாசலில் காத்திருந்தது.

” இப்போ எங்கே இருக்கே” என்று நாகராஜனைக்கேட்டேன்

” Chief Arbitrator ஆ இருக்கேண்டா ஹைகோர்ட்டில்தான் என்னோட ஆபீஸ்”

” நீ இந்தியன் பாங்கில இருந்தாயே”

” ஆமா, அது ஆச்சு,விட்டு பன்னண்டு வருஷம். law படிச்சேன். அட்வகேட்டா கோர்ட்டுல ஆர்க்யு பண்ணறதைவிட இந்த மாதிரி சமரசம் பண்ணி வெக்கற வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சமரசம் பண்ணிவெக்கற வேலை , அதுவும் நாகராஜனுக்கு!

இப்போ சொல்லியே ஆகவேண்டும் அந்த சரித்திரப்ரசித்தி பெற்ற கிரிக்கெட் மாட்ச் பற்றி.

நாகராஜ்தான் ஆரம்பித்தான். “எங்க பெசன்ட் நகர் டீமோட மாட்ச் ஆட வரீங்களா” என்று. நிறைந்த ஆலோசனைகளுக்குப்பிறகு ஒரு ஞாயித்துக்கிழமை மூணிலிருந்து ஆறு வரை என்று தீர்மானிக்கப்பட்டது. இடம் பெசன்ட் நகர் கிரௌண்ட். இப்போது பஸ் டெர்மினஸ் இருக்கும் இடம்தான் எங்கள் மாட்ச் நடைபெற்ற இடம் என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். எதிரே கம்யுனிட்டி ஹால் பாதி கட்டிக்கொண்டிருந்தது எங்களுக்கு பெவிலியன் போல சௌகரியமாக இருந்தது. நாகராஜ்தான் எங்களுக்கும் அந்த டீமுக்கும் இடையே போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்தான். அது மிக நல்ல டீம் என்று நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். நாள் நெருங்க நெருங்க நாகராஜ் ஏனோ எங்களுக்கு சாதகமாக பேச ஆரம்பித்தான். நிச்சயம் உதை வாங்கிடுவோம் என்று பரிதாப்பட்டான் போலும்.

” ஜேம்ஸ் ரொம்ப நல்ல பாட்ஸ்மன். ஆப் சைடுல பயங்கர ஸ்ட்ராங்.”

” சிட்னா செம்ம பாஸ்டா போடுவான்”

” எஸ் மோகன் சுமாரான ஸ்பின்னர்தான். அவனோட போலிங்லதான் நீங்க செமத்தியா அடிக்கமுடியும்’
இந்த ரீதியில் டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தான்.

“நா விளையாட மாட்டேண்டா உங்களுக்கு எதிரே நா எப்பிடிடா. அதனால அம்பயரா இருப்பேன். கவலயே படாதீங்க. நா நம்ம சப்போர்டுதான்”.

வெளிப்படையா மறுத்தாலும் உள்ளுக்குள் இந்த மாதிரி உதவி இருந்தா நல்லதுதான் என்று தோன்றியது.

” டேய்! அந்த ஜேம்ஸ் சரியான முரடன். போங்கு வேற அடிப்பான். அவன் கிட்ட நீங்க ஜாக்கிரதையா இருந்துடுங்க” என்று வேறு எச்சரிக்கை செய்து இருந்தான்.

மாட்ச் நடந்து முடிந்தது. எதிர்பார்த்தது போல நாங்கள் 30 ரன்களில் தோற்றோம். சில ஆச்சரியமான நிகழ்வுகள் மட்டும் சொல்ல வேண்டும்.

” நாகராஜ் ஆடவும் இல்லை, அம்பயராகவும் இல்லை.”

“மாட்ச் அன்று ஏதோ எங்களை புதிதாகப்பார்ப்பவன் போல நடந்து கொண்டான்”

” எங்களுடைய ஒவ்வொரு அவுட்டுக்கும் மிகையாக ஆர்ப்பரித்தான்.

ஜேம்ஸ் தான் அடி அடி என்று அடித்து ஜெயித்துக்கொடுத்தான்.
அவன் ஆடும்போது நாகராஜ், ஜெமி! கிழிடா! நாஸ்தி பண்ணுடா!, தொத்தல் போலிங் , காஜி அடி!” போன்ற அந்தககால கிரிக்கெட் பிரயோகங்களை வீசிக்கத்திக்கொண்டிருந்தது எங்களுக்கு வெறுப்பாக இருந்தது. வின்னிங் ஷாட் அடித்ததும் அந்த சைடு பையன்கள் குதித்து டான்ஸ் ஆட, நாகராஜன் அதீதமாக சத்தம் போட்டு கொண்டாடினான்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம்.

ஜேம்ஸ் எங்களிடம் வந்து ” நல்ல ஆடினீங்க. இது உங்களுக்கு புது க்ரௌண்டு இல்ல. அதான். பசங்கள ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க. நா கண்ட்ரோல் பண்ணறேன் அவங்களை. அடுத்த மாட்ச் வேணா உங்க க்ரௌண்டுல வெச்சுக்கலாம். “Let us be friends” என்று சொல்லிவிட்டு, அருகினில் வந்து “நாகராஜை ரொம்ப நம்பாதீங்க. அவனை நாங்க டீமிலேயே சேர்த்துக்க மாட்டோம். அம்பயரா நின்னு சாதகமா பண்ணறேன்னு சொன்னான். அதுதான் அவனை அம்பயராகூட நிக்க விடலை நான்” என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு ” See You All’ என்று நடந்து போனான்.

அதற்கப்புறம் நாகராஜனுக்கு கிளாசில் மவுசு குறைந்து, ரொம்பவுமே தனிமைப்பட்டு அமைதியாகி விட்டான். அவசியம் தவிர யாரும் அவனுடன் அதிகம் வைத்துக்கொள்ளவில்லை. ஈயம்தான் கொஞ்ச நாள் அவனை வாயால் புரட்டிகொண்டிருந்தான். பிறகு அவனுமே வேறு கவலைகளுக்கு நகர்ந்து விட்டான்.

பல வருஷங்களுக்கு பிறகு நான் ஒருமுறை டாதர் எக்ஸ்ப்ரெஸில் அவனைப்பார்த்தேன். இந்தியன் பாங்கில் இருப்பதாகச்சொன்னான். கல்யாணப்பத்திரிகை வந்ததாக எந்த friend உம சொல்லவில்லை. அதோடு மறக்கப்பட்டுவிட்டு, அப்புறம் இப்போதுதான் Cream சென்டரில்..

கார் எடுத்து வரப்போன valet இன்னும் வரவில்லை.

” என்ன நாகராஜ், ஒய்ப் வரலியா?”

அந்தப்பெண் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, நாகராஜ். ” ஒ! உனக்கு தெரியாதில்ல. இவளுக்கு அஞ்சு வயசாயிருக்கும்போதே எங்களுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது. இவள் அம்மாவோட வளரணும்னுதான் ஜட்ஜ்மென்ட். வாராவாரம் சனிக்கிழமை மட்டும் என்னுடன்.”

நான் கொஞ்சம் அசௌகரியமாக நெளிந்து, பின் சமாளித்து, அந்தப்பெண்ணின் தோளை வாத்சல்யத்துடன் அணைத்து,

“பேர் என்னம்மா?” என்று கேட்டேன்.

“ஆலிஸ் அரவாமுதன் அங்கிள்” என்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *