கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 12,024 
 
 

‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த மேசையிலிருந்த பீட்டர் சூயிங்கத்தைக் குதப்பிக் கொண்டு கேட்டான்.

~~என்ன இரண்டு நாள் சிக் லீவ் போட்டதற்கு இரண்டு கிழமை சம்பளத்தை வெட்டியிருக்கின்றார்கள். பார்க்க எரிச்சலாக இருக்கிறது’

~~யாரும் வேலை தெரியாத பேர்ஸனல் ஆபிசர் புதிதாக வந்திருப்பார்கள். எங்களின் சம்பளத்தில் கை வைத்துப் பிராணனை வாங்குகின்றார்கள்’

பீட்டர் வழக்கம் போல ஒரு விமர்சனத்தைக் கொடுக்க, பீட்டர் ஏதோ சர்ச்சில் பாதிரியாராயிருந்து உபதேசம் செய்தால் மிகப் பிரபலமாவான்.

அவர்களின் டிபார்ட்மெண்ட் செக்ரட்டரி ஆயிஷா முகமட் இவர்களின் சம்பாஷனையைக் கேட்டிருக்கவேண்டும்.

~~நான் தேவையான இன்பர்மேஷன் எல்லாம் கொடுத்தேன், ஏன் இன்னும் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை?’
ராகவன் தன்னிடம் விசாரணைக்கு வர ஆயிஷா விளக்கம் கொடுத்தான்.

~~நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். ஆயிஷா நான் ஒரு தரம் ஐந்தாம் மாடிக்குப் போய் வருகின்றேன்’.
ராகவன் எழுந்தான். நடையில் அவனின் கோபம் பிரதிபலித்தது.

ஐந்தாம் மாடியில் உள்ளவர்களை முதலாம் மாடியில் வேலை செய்வோர் மாடிப்படிகளில் அல்லது லிப்டுகளில் சந்தித்திருக்கின்றார்கள்.எப்போதாவது இருந்து நடக்கும் ஆபிஸ் பார்ட்டிகளில் சந்தித்திருக்கின்றார்கள். ~ஹலோ,ஹவ் டு யு டு| என்பதற்கு மேல் பெரிய சிநேகிதம் ஒன்றும் இது வரையுமில்லை. ஐந்தாம் மாடி ஆபீசர்களின் வேலை இடம் முதலாம் மாடியினரை விட வசதியானது என்றதொரு தகவலும் சிலவேளை அடிபடும். அதற்குக் காரணம் ஐந்தாம் மாடியில் பெரிய விசாலமான இடம் வெறுமையாய் இருப்பதும்.அந்த இடத்தில் அங்கு வேலை செய்யும் சிலர் தங்களுக்கு விருப்பமான ப+ மரங்களையோ அல்லது செடிகளையோ நட்டு வைத்திருப்பதும் ஒன்றாகும்.

வசந்த காலத்தில் ஐந்தாம் மாடி கந்தர்வ லோகம் போல் கவர்ச்சியாக இருக்கும். அதற்குக் காரணம் பேர்ஸனல் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்யும் அழகிகள் மட்டும் காரணமாய் இருக்கலாகாது.

உதாரணமாக நான்காவது மாடி எக்கவுண்ட் டிபார்ட்மெண்ட்டை எடுத்தால் கிட்டத்தட்ட எல்லோரும் நடுத்தர ஆண்களும் பெண்களுமாக இருப்பார்கள். வாழ்க்கையின் வசதியின் சின்னங்கள் வயிற்றிலும் கழுத்திரும் கன்னத்திலும் தசைப்பிடிப்பாக வழியும்.
மூன்றாம் மாடி ஐடி டிப்பார்ட் மெண்;ட்டை எடுத்தால் செக்கரட்டரிய பெண்களும் ஐ.டி ஆண்களும் என்று ஒரு சிலரைத் தவிர மற்றெல்லாம் இன்போமேஷன் டெக்னோலோஜி இளைஞர்களாகத் தான் தெரிவார்கள்.

எப்போதும் பிஸியாக இருக்கும். அதற்குக் காரணம் ஐ.டி டிப்பார்ட்மெண்ட் முழுக்க இளைஞர்கள், இளைஞிகள் என்பதல்ல. அவர்களின் முகத்தில் பிஸியுடன் சேர்ந்த உற்சாகமாக இருக்கும்.

இரண்டாம் மாடி,, பிளானிங் டிபார்ட் மெண்ட். அரசாங்க சேவையை எப்படிப் பிளான் பண்ணி மக்கள் நலம் பெறத்தக்கதாகச் செய்யவேண்டும் என்று சிந்திக்கும் பட்டாளம் பெரும்பாலானோர் முன் தலையில் மொட்டை விழுந்தவர்கள்.சிந்தனையில் தீவிரத்தில் மயிரிழந்த பலர் அங்கிருப்பர்.

முதலாம் மாடிக்காரர் அரசாங்க திட்டங்களை அமுல் நடத்தும் ஆபீசர்கள். ராகவன் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்கின்றான்.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு நாள் சிக் லீவு போட்டது யாருடைய பிழையின் காரணமாகவோ அவனது இரண்டு வார சம்பளத்தை வெட்டி விட்டது.

எரிச்சலுடன் ஐந்தாம் மாடியை அடைந்தபோது ஜன்னல்களுடாக லண்டன் யாரோ வரைந்த சித்திரம் போல் அழகாகத் தெரிந்தது.
மிலேனியம் டோம், தேம்ஸ் நதிக்கப்பால் கிரினிவிச் நகரில் கம்பீரமாய் நிமிர்ந்து தெரிந்தது.

லண்டனிலேயே பெரிய கட்டிடமான நஷனல்வெஸ்ட் மினிஸ்டர் பாங்க் கட்டிடம் தூரத்தில் யாரோ நட்டு வைத்த தூணைப் போல உயர்ந்து நின்றது. அதையடுத்து பெரிதும் சிறிதும் குட்டையும் பருமனுமான எத்தனையோ கட்டிடங்கள்.

ஆவனுடைய ஆபிஸ் இருக்கம் முதலாம் மாடியில்,ஜன்னல்கள் அருகில் வைக்கப்பட்டிருந்த அழகிய கோலங்களில் செடிகளும் கொடிகளும் முதலாம் மாடி வழியாக இரட்டைத் தட்டு பஸ் வண்டிகள் தான் தெரியும்.

~~’யாரைப் பார்க்க வேணும்’ மை அடித்த விழிகளை அகல விரித்தபடி ஒரு பெண் ராகவனைக் கேட்டாள்.

‘பேர்ஸனல், ம்ம் சிக் லீவு விடயங்களைக் கவனிக்கும் ஆபீசரைப் பார்க்க வேணும்’

அழகிய விழிகள் உள்ளவர்கள் நடனத்திற்கு ஒரு முத்திரைக்கு விரல்களைப் பதம் பிடிப்பது போல ஒய்யாரமாகத் தன் கைகளை நீட்டி,’அதோ அந்த மேசையில் இருப்பவரைக் கேள்’ என்றாள்.

அவள் காட்டிய மேசையிலிருப்பவர் மிகவும் உயர்ந்து வளர்ந்த ஒரு கறுப்பு ஆபீசர்.

இவனைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து ‘குட் மோனிங்| என்றார்.

‘குட் மோர்னிங்’ .அவன் முனங்கித் தள்ளினான். சம்பளத்தை வெட்டிய ஆபீசர் இவராகத்தான் இருந்தாலும் அந்த சிநேகிதமான அவரின் முகமலர்ச்சியைத் தாண்டிப் போய் ராகவனால் சண்டை போட முடியாது போலிருந்தது.

‘என்னிடம் என்ன உதவியை எதிர்பார்க்கின்றீர்கள்?’

தனது சம்பளம் வெட்டுப்பட்ட கதையை, கோபத்தை அடக்கிக் கொண்டு சொல்லி முடித்தான்.

‘சரியான நேரத்தில் சரியான தகவல்கள் வந்து சேராவிட்டால் இப்படியும் நடக்கும். எனிவே சம்பள விடயங்களைப் பார்ப்பது நானில்லை. அதோ இருக்கிறாளே மிஸ் நேதன், அங்கே போய் விசாரியுங்கள்’

அவர் சுட்டு விரல் காட்டிய இடத்தை ராகவன் நோக்கி நடந்தான்.

இவனுக்கு முதுகுப் பக்கம் தெரிந்தாற் போல் கொம்பிய+ட்டரில் தட்டிக் கொண்டிருக்கும் பெண்ணின் அருகில் போய்,’ஹலோ’ என்றான்.

அவளும் ‘ஹலோ’என்று சொல்லிக் கொண்டு திரும்பியபோது ஜன்னலால் வந்த சூரிய வெளிச்சத்தில் கண்கள் கூவியது போலும் ஒரு தரம் கண்களை வெட்டி விட்டு,’என்ன வேண்டும்?’ என்று கேட்டாள்.

அவளுக்கு அவள் வாய் மறுமொழி சொல்வதற்கு முன் அவன் கண்கள் அவளின் அந்த எடுப்பான தோற்றத்தை இளமையைத் தாண்டிக்கொண்டு பறை சாற்றியாது. அவளது எடுப்பான் அல்லது மிடுக்கான(?) தோற்றம்) படம் எடுக்க சிந்தனையோ இவள் எந்த நாட்டு இளவரசி என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டது. அவன் அப்படியே ஒரு கணம் சிலையான உணர்வு.இப்படியும் ஒரு பேரழகா?

அவனது மறுமொழி சட்டென்று வராததால் ‘சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்களா?’ தோற்றத்தைப் போல் குரலிலும் மிடுக்கும் (அல்லது எடுப்பு)

‘நிச்சயமாக சரியாக இடத்துக்குத் தான் வந்திருக்கிறேன்’ அவன் குரலில் குறும்பு.

அவளுக்கு அது பிடிக்கவில்லை.’என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’

இரண்டு மாதம் பழகியவளாக இருந்திருந்தால்,’என் மனைவியாக இருக்கும் உதவியைச் செய்வாயா?’ என்று கேட்டிருப்பான்.ஆனால் முன் பின் தெரியாத பெண்ணிடம் அலட்டவில்லை. தன் சம்பளப் பிரச்னையை சுருக்கமாகச் சொன்னான்.

அவள் புருவத்தைச் சுருக்கிக்கொண்டாள்.’நீங்கள் பிழையான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நான் சம்பளம் விடயம் பார்ப்பதில்லை. ஆபீசர்களின் மேலதிக படிப்பு சம்பந்தமான பகுதியைப் பார்க்கின்றேன். யார் உங்களை என்னிடம் அனுப்பியது?’

அவன் அந்த கறுப்பு ஆபீசர் இருந்த இடத்தைக் காட்டினான்.

‘ஜோசுவா…. ஏன் தேவையில்லாமல் பிழையான தகவல்களைச் சொல்கிறாய்?”

ஜோசுவா என்ற மனிதனுக்கு இவள் மகாராணியா?

அவள் குரலில் கோபத்துடன் இரைந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் பார்த்தார்கள்.ராகவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

”ஓ ஐயாம் சாரி ஜான். நான் காட்டியது பிழை என்றால் மன்னித்துவிடு” உயர்ந்த உருவம் தாழ்ந்த குரலில் குழைந்தது.

‘மிஸ்டர் நேர்விங்டன் தான் இந்த டிபார்ட்மெண்டைப் பார்ப்பார். அவர் இரண்டொரு நாள் லீவு என்று நினைக்கின்றேன்’

அவள் உத்தியோக தோரணையில் சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

‘சிரமம் தந்ததற்கு மன்னிக்கவும்’ அவன் முணுமுணுத்தான்.

அவள் இவனைப் பார்க்காமல் ‘குட் பை’ சொன்னாள்.அவனுக்கு எரிச்சலாக வந்தது. எத்தனை உதாசீனமான போக்கு. இவளுக்கு யாரில் கோபம்?

அவன் கீழே வந்து ஆயிஷாவிடம் ஒரு தரம் தன் சம்பள விடயம் பற்றி ஒப்பாரி வைத்துவிட்டு தன் இருக்கைக்குப் போனான்.
அவன் எந்த ஊராக இருக்கலாம்? நிச்சயமாக ஆசியப் பெண் தான். மேற்கத்திய நாட்டில் பிறந்து வளர்ந்த ஆசியப் பெண் என்பது அவள் மிடுக்கிலேயே தெரிந்தது.

ஜான் நேதன் என்பது ஆசியப் பெயரில்லை. ஜேன்,ஜனட், ஜனின் என்ற பெயர்களைச் சுருக்கி ஜான் என்று கூப்பிடுவார்கள். நேதன் என்பது ய+தப் பெயர். அந்தப் பெண்ணைப் பார்த்தால் ய+தப் பெண்ணாகத் தெரியவில்லையே. ஓரு வேளை ய+தக் கணவனைத் திருமணம் செய்திருப்பாளோ?

”ஐந்தாவது மாடியில் புதிதாக வந்திருக்கும் இந்தியன் பிய+ட்டியை சந்தித்தாயா?” பீட்டர் இன்னொரு சூயிங்கத்தை வாயில் போட்டபடி கேட்டான்.

‘வாட்’| ராகவன் பீட்டரை விழித்தான்.

‘அது தான், என்னைப் பார்க்க உனக்கு என்ன துணிவு என்று அடித்துக் கேட்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பாளே ஒரு பெண்…..இரண்டு மூன்று கிழமைக்கு முதற் தான் வந்து சேர்ந்தாள்”. பீட்டர் சொல்லிக்கொண்டே போனான்.

இந்தியப் பெண்ணாகத் தான் இருக்கவேண்டும் என்று அவன் நினைத்தது சரி தான்.ஆனால் அவள் பெயரைப் பார்த்தால்..
அவன் அதன் பிறகு அவளைப் பற்றி யோசிக்க நேரமில்லை. வேலைப் பழுவில் மறந்துவிட்டான்.

இரண்டொரு நாட்களுக்குப் பின் ஐந்தாம் மாடிக்கு மிஸ்டர் நேர்விங்டனைத் தேடிச் சென்றபோது அவள் இவனைக் கண்டும் காணாததும் போல தன் வேலையில் மூழ்கியிருந்தாள். தெரிந்த அடையாளத்துக்கு ஒரு புன்சிரிப்பே போதுமே!அதுகூட இல்லை.
மிஸ்டர் நேர்விங்டன் இவன் சம்பள விஷயம் பற்றி மிகவும் அனுதாபம் காட்டினார்.உடனடியாக இவனுடைய பைல்களைப் பார்ப்பதாகச் சொன்னார்.

அவன் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பியபோது அவள் ஸ்ராவ்ரூமுக்குப் போவது தெரிந்தது. இன்னொரு தரம் அந்தக் கண்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை அடங்கிவிட்டது.

அது நடந்து இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டன.

ஆபீசிலிருந்து ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இடம் மாறிப் போகிறார். எல்லாரையும் பார்ட்டிக்கு வரச் சொல்லி ஈ- மெயில் அறிவித்தது.

அவனுக்குத் தலையிடியும் தடுமலும் வேலைக்கே வரவில்லை.பார்ட்டிக்கும் போகவில்லை.

“பேர்ஸனல் டிபார்ட்மெண்டிலுள்ள ஜான் உங்களைப் பற்றி விசாரித்தாள்”. ஆயிஷா சொன்னபோது ராகவன் திடுக்கிட்டான்.

“ஆயிஷா அந்த இந்தியப் பெண் என்னைப் பற்றி விசாரித்தது அன்று சொன்னது பொய் தானே?”லஞ்ச் ரைமில் ஆயிஷnவைக் கேட்டான்.

ராகவனின் கோபம் ஆயிஷாவுக்குச் சிரிப்பைக் கொணர்ந்தது.

“அழகான பெண், அது தான்’ ஆயிஷா இழுத்தாள். அவன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.அன்று புதிய டெலிபோன் டிரக்டரி (ஆபிஸ் டிரக்டரி) வந்திருந்தது.

ஐந்தாவது மாடிப் பேர்ஸனல் ஆபீசர்களின் பெயரில் ஜானகி சுவாமிநாதன் என்ற நீளப்பெயரைப் பார்த்ததும் அவனுக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வந்தது.

ஜானகி சுவாமிநாதன் என்ற பெயரையா ஜான் நேதன் என்று மாற்றியிருக்கிறாள்?

சுவாமிநாதன் ‘சாம்| என்றும் அன்னலெட்சுமி ‘ஆன்| என்றும் லண்டனில் மாறுவது மிகவும் சர்வசாதாரணம்.

ஒரு தாவலில் மேலே போய் ‘ஹலோ ஜானகி சுவாமிநாதன்’ என்று வாய் நிறைய அழைக்கவேண்டும் போலிருந்தது.ஆனால் நேரம் இருக்கவில்லை.

ஜூன் மாதம் என்று பாராமல் லண்டன் காற்றிலும் மழையிலும் அடிபட்டு அழுதுகொண்டிருந்தது.

சனிக்கிழமை நடந்த கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா இந்தியாவை வென்றுவிட்டது. கிரிக்கட் பார்க்கவென்று,டி.விக்கு முன் நிஷ்டை செய்து காய்ச்சலும் வந்துவிட்;டது. ராகவனின் தடுமலும் இருமலும் இன்னும் விடவில்லை. ஆபீசிலிருந்து அண்டகிறவுண்ட் ஸ்ரேசனுக்குப் போய்க்கொண்டிருந்த போது அவளும் வந்து கொண்டிருந்தாள்.

“ஹலோ ஜானகி சுவாமிநாதன்” அவன் அப்படிச் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது முகத்தில் தெரிச்தது.

“ஏன் அழகான பெயரை அப்படி மாற்றினீர்கள்?”

அவள் மறுமொழி சொல்லவில்லை, “இந்தியப் பெண் என்று சொல்லிக் கொள்ள வெட்கமா?”

அவன் விடாமல் கேள்வி கேட்பது அவளுக்கு எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.

“இந்தியாவைப் பற்றி பெருமையாகச் சொல்ல என்ன இருக்கிறது? இத்தனை தூரம் வந்து இரண்டு வெற்றிக்கு மேல் எடுக்கமுடியாத வீரம்” அவள் பொரிந்தாள்.

“கிரிக்கட்டில் தோல்வி என்றால் பெயரை மாற்றுவதா?’ அவன் சிரித்தான்.
“அப்படியில்லை,ஜானகி என்ற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை..” மிடுக்கான தோற்றத்துக்கும் இப்போது உடைந்து போன வசனங்களுக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

“எனது பெயர் ராகவன், என்ன காரணத்துக்காகவும் பெயரை மாற்றமாட்டேன்”

“அது உன் விருப்பம்’

பிளாட்பாரத்துக்குப் போனான். இருவரும் இரு எதிர்த்திசைகளில் ஏறிக்கொண்டார்கள். ‘ஜானகி என்ற பெயர் பிடிக்காது’- அவளின் உடைந்த குரல் மனத்தைக் குடைந்தது. ‘ஜான்’ என்று சுருகிக்கொண்ட ஜானகியிடம் அவனுக்குப் பரிதாபம் வந்தது.

“பின்னேரம் பாருக்குப் போகிறேன். வருகிறாயா?உனது மூக்கடைப்புக்கு ஒரு நல்ல விஸ்கி எடுத்தால் சுகமாயிருக்கும்||- பீட்டர் சூயிங்கம் குதம்பிய மொழியில் உதிர்த்தான்.

“உம் உம்” ராகவனுக்கு முழு மூச்சான வேலை.

ஜானகி என்ற பெயர் வேண்டாம் என்று சொல்லும் ஜான் யாரோ சிநேகிதிகளுடன் பாரில் உட்கார்ந்திருந்தாள்.

இந்தியப் பெயர் வேண்டாம், இந்திய கலாச்சாரமும் வேண்டாம் என்பதன் பிரதிபலிப்பா இது?

இவனைக் கண்டதும் அவள் முகத்தில் ஆச்சரியம் சந்தோஷமானதா அல்லது சங்கடமானதா என்று அவனால் எடைபோட முடியவில்லை.

இரண்டு தரம் விஸ்கி ஓடர் பண்ணியவுடன் மூக்கடைப்பு போய்விட்டது. ஜானகி சிவப்பு வைன் கிளாசுடன் இவனைக் கடைக்கண்ணால் பார்ப்பது அவனுக்குத் தெரியும்.

எட்டு மணியளவில் ஒவ்வொருவராய் ‘பாரை’ விட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவன் ஸ்ரேஷனுக்கு வந்தபோது அடுத்த பிளாட்பாரத்தில் ஜானகி நின்றிருந்தாள். ஐந்து மணியிலிருந்து ஒரு மணி வரை கடல் அலை போல் மோதும் மனித சமுத்திரம் ஸ்ரேஷனில் இல்லை. அங்குமிங்கும் ஒன்றிரண்டு மனிதர்கள். அவளைத் தவிர எந்த ஆசியர்களும் அந்த பிளாட்பாரத்தில் இல்லை.

சிக்னல் ஃபெயிலியர் காரணமாக இவன் போகும் ரெயில் பத்து நிமிடம் லேட்டாக வரும் என்ற அறிவிப்பு வந்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது. தடுமல், இருமல்,தலையிடி இப்போது விஸ்கி எடுத்து தலைச்சுற்று வேறு.

சுட்டென்று படியேறி அடுத்த பிளாட்பாரம் போனான். ஏன் அப்படிச் செய்தான் என்று தெரியாது.

‘ஹலோ ஜானகி’ அவள் இவன் வரவை கடைசிவரைக்கும் எதிர்பார்க்கவில்லை என்று முகத்தில் தெரிந்தது.

“இந்தியப் பெயரில் விருப்பமில்லை. இந்தியப் பெண்ணாக இருக்கவும் விருப்பமில்லையா என்று கேட்கப் போகிறீர்களா?” நிதானத்துடன் கேட்டாள்.

“நான் எதுவும் கேட்பதற்கு வரவில்லை” அவன் மழுப்பினான்.

“அப்படியானால் ஏன் இந்த பிளாட்பாரத்தில் நிற்கிறீர்கள்?”அவள் குரலில் கிண்டல்.

“தெரியாது”- அவன் உண்மையைச் சொன்னான்.

“வாட்” அவள் குழப்பத்துடன் கத்தினாள்.

“ரெயின் லேட்டாகப் போகிறது.சிக்னல் பெயிலியராம்” அவன் பேச்சை மாற்றினான்.

“அதற்கென்ன,எப்படியும் ஒரு ரெயின் வரும் தானே?”

“இந்த இடம் என்ன ஒன்பது மணிக்குப் பிறகு பாதுகாப்பாக இருக்காது” அவன் குரலில் இருந்த உண்மையான பரிவு அவளை அவனைப் பார்க்க வைத்து.

“ஸ்ரேஷனில் தனியாக நிற்கும் பெண்களில் பரிதாபப்படுவதில் உங்களுக்கென்ன லாபம்?”

அவனுக்கு எரிச்சல் வந்தது. எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர இவளுக்கு வேறெதுவும் தெரியாதா?

“ஜானகி,ஆபீசில தெரிந்த பெண்ணொருத்தியை அபாயமான இடத்தில் Ms.’ஜான் நேதன்’பார்த்தபடியாற் சொல்கிறேன். அட்வைஸ் பிடிக்காவிட்டால் மன்னித்துக் கொள்.”

அவன் எடுத்தெறிந்து பேசியது அவளைப் புண்படப் பண்ணியிருக்கவேண்டும்.

மௌனமாக இருந்தாள். ஸ்ரேஷன் வெளிச்சத்தில் அவள் கண்கள் பனித்து,பளபளத்தது தெரிந்தது.

ரெயின் வந்தபாடாயில்லை. வாசனைத் திரவியத்தின் மணம் அவனை என்னவோ செய்தது.

ஜான் நேதன் என்று அவளை அறிமுகம் செய்து கொண்ட சம்பவத்தை நினைத்துக் கொண்டான்.

‘ட்ரெயின் வர லேட்டாகம்போலிருக்கிறது. டாக்சி எடுத்துக் கொண்டுபோவது பாதுகாப்பு என்று நினைக்கிறேன்’. அவனின் ஆலேசனையை அவள் மறுக்கவில்லை.

“ஏன் உங்கள் உண்மைப் பெயரை இப்படி அநியாயமாக்கி வைத்திருக்கிறீர்கள்?”- ராகவன் ஜானகியைப் பார்த்துக் கேட்டான்.

ஏதோ, பேச்சுக்காகக் கேட்கவில்லை. இந்தக் கேள்வியை எப்போதோ கேட்கவேண்டும் என்று நினைத்திருந்ததால் சட்டென்று கேட்டுவிட்டான்.

அவள் மறுமொழி சொல்லவில்லை. டாக்சி ஓடிக்கொண்டிருந்தது.

மழையில் நனையும் லண்டன் தெருக்களில் பார்வையைப் பதித்திருந்தாள். அவள் போகவேண்டிய இடம் இன்னும் அரை மணித்தியால தூரத்தில் இருக்கிறது. ஒன்பது மணி இருளில் லண்டன் தெருக்கள் மங்கலாயின.

டக்சி வீட்டுக்கு முன்னால் நின்றது. அவள் இறங்கி டக்சிக்காரனுக்கு காசைக் கொடுத்தாள். அவன் பார்வை எங்கோ பதிந்திருந்தது. பக்கத்தில் உள்ள அண்டகிரவுண்ட் ஸ்ரேஷன் என்னவாக இருக்கும் என்று மனம் தேடிக்கொண்டிருந்தது.

“காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்”.அவள் குரல் மென்மையாகவிருந்தது.

மழை தூறிக் கொண்டிருந்ததால் அவள் தன் ஹாண்ட்பாக்கைத் தலையில் வைத்து மழைத்துளிகளிலிருந்து தலைமயிரைக் காப்பாற்றப் பாடுபட்டாள்.

அவள் அப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்காமல் அவன் முகத்தில் தர்மசங்கடம் பளிச்சிட்டது.

அப்போது அவளின் வீட்டுக் கதவு திறந்தது. தாயாய் இருக்கவேண்டும். மகளின் இளவயது இல்லையே தவிர முகபாவம் அப்படியே இருந்தது.

மகளோடு இன்னொரு அந்நியனைக் கண்டதும் அந்தத் தாயின் முகத்தில் அதிர்ச்சி ஒரு கணம் வந்து மறைந்தது.

“காபி சாப்பிட்டுப் போங்கள்”ஜானகி இரண்டாம் தரம் கேட்டாள்.

“ஆமாம் தம்பி மழையும் காற்றுமாயிருக்கிறது” அந்தத் தாயின் குரலின் கனிவு ஜானகி சிலவேளைகளில் எடுத்தெறிந்து பேசும் சுபாவத்திற்கு எதிர்மாறாக இருந்தது. தாயையும் மகளையும் தவிர வேறொருத்தரும் இல்லாத வீடென்று தெரிந்தது. சுவரில் ஒரு பெரியவரின் படம் மாலையுடன் அஞ்சலி செய்தது.

அதைத் தவிர சுவரில் நிறையப் படங்கள்.ஜானகியில் இளம் வயதை ஞாபகமூட்டுவதாக இருந்தது. அத்தோடு ஒரு இளம் பையனின் படமும். அது ஜானகியின் தமையின் என்று யாரும் சொல்லத்தேவையில்லை. மகளும் தாயும் குசினிப் பக்கம் போனார்கள். ஏதோ பேசுவது கேட்டது.

ஜானகி ஒரு சில நிமிடங்களில் காபியுடன் வந்தாள். தாய் ஏதோ செய்வதாகத் தெரிந்தது. “தம்பி சாப்பிட்டுப் போனால் என்ன,தோசை செய்து வைத்திருக்கேன்” அந்தத் தாயின் தமிழ் இவனைக் குளிப்பாட்டியது. ராகவன் ஒரு தமிழன் என்று ஜானகி சொல்லியிருப்பாள் போலும். இதுவரைக்கும் அவன் ஜானகியுடன் தமிழில் பேசவில்லை. அவளும் பேசவில்லை.

அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. இந்த வீட்டுக்குள் வரும் யோசனையே இல்லாமல் ஜானகிக்குத் துணையாக டாக்சியில் வந்தானே தவிர விருந்து சாப்பிட வரவில்லை.

தாயின் வற்புறுத்தல் மட்டுமல்ல நீண்டநாளாக வீட்டுச்சாப்பாடு கிடைக்காத ஏக்கமும் இருந்தது.

இவன் தன்னுடன் வேலை செய்பவன் என்று ஜானகி இவனை அறிமுகம் செய்து வைத்தபடியால் ‘என்ன டிப்பார்ட்மெண்டில் வேலை செய்கிறீர்கள்’ என்று விசாரித்தாள். தான் ‘ரிட்டயர் பண்ணிய ஆசிரியை’ என்று சொன்னாள் ஜானகியின் தாய். ராகவன் தாய் கேட்ட கேள்விக்குச் சுருக்கமாக பதில் சொன்னான்.

சில நாட்களுக்குப் பின் லிப்ட்டில் ஜானகியைச் சந்தித்தான். அவள் எப்போதும் போல் தேவையுடன் பேசிக்கொண்டாள். அவளின் தாய் மாதிரி கலகலவென்று பேசவில்லை. அவன் தன் வீட்டில் தோசை சாப்பிட்ட தோழமை அவள் தொனியில் இல்லை.

அடுத்த கிழமை அவசரவேலையாய் ஐந்தாம் மாடிக்குப் போனபோது, “உங்களுக்குப் போன் பண்ணலாம் என்றிருந்தேன்” ஜானகி தயக்கத்துடன் சொன்னாள்.

“ஏன் டாக்ஸியில் துணையாக வரவேண்டுமா?” அவன் குறும்பாகக் கேட்டான்.

அவள் முதல் முறையாக வாய்விட்டுச் சிரித்தாள். மிக இனிமையான ஓசை, அழகான பாவம்,அணைத்துக் கொள்ளத் தூண்டும் தோற்றம். அவன் உணர்ச்சிகைளை மறைத்துக் கொண்டான்.

“என் தகப்பன் இறந்து இரண்டாவது வருட ஞாபகப் ப+சை வைக்கிறாள் அம்மா.உங்களை சாப்பிட வரச் சொன்னாள்”
அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சரி என்று சொன்னான். ஜானகியை விட அவளின் தாயின் அன்பு அவனைக் கவர்ந்திருந்தது.

அவன் றெட்பிறிட்ஜிலுள்ள அவள் வீட்டுக்குப் போன ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்தகாலப் ப+க்கள் அவர்களின் வாசவை அலங்கரித்திருந்தன.

“வாங்க தம்பி”தாய் அன்புடன் வரவேற்றாள். வீட்டில் இன்னும் சிலர் வந்திருந்தனர். நாராயணன் என்று தன்னை அறிமுகம் செய்த மனிதர் ஜானகியின் தமையன். அவருடன் அவரது ஆங்கில மனைவியும் இரு அழகான குழந்தைகளும் பாட்டியுடன் செல்லம் பண்ணிக் கொண்டிருந்தன.

எத்தனை அன்பான குடும்பம்? ஜானகி மட்டும் ஏன் பெரும்பாலான நேரங்களில் எதையோ பறிகொடுத்தவள் போலிருக்கிறாள்?
காலையில் பதினொரு மணிக்குப் போனவன் எப்படித் தான் நேரம் போனதென்று தெரியாமல் சந்தோசமாகப் பொழுது போக்கினான்.
பின்னேரம் ஜானகியின் தமையன் குடும்பம் போன பின் ஜானகி மேல் மாடிக்குப் போன பின்னர் “நீங்கள் வந்ததற்கு நன்றி தம்பி” அந்தத் தாயின் கண்களில் நீர் பனித்தது. ஏதோ சோகத்தை துளி காட்டும் கண்ணீர் அந்தத் தாயின் கண்களை நிறைத்தது.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அடிக்கடி பர்மிங்காம் போய் அம்மா கையால் சாப்பிட முடியாத துக்கம் இன்று போய்விட்டது”

“தம்பி இங்கிலாந்திலேயே பிறந்தீர்களா?”

அவன் ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.

“அப்பா- அம்மா எந்த நாடு? எந்த ஊர்?”வழமையான – முதுமையான கேள்வி.

“நாங்கள் தமிழர் என்பதே போதுமென்று நினைக்கிறன். ஆதிமூலம் அறிந்து என்ன லாபம்”அவன் கிண்டலாகச் சொன்னான். தாய் பெருமூச்சுவிட்டாள்.

அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ‘பழமைவாதியாய் தெரியும் இந்தத் தாயின் மனதைப் புண்படுத்தி விட்டேனோ?”

“மன்னிக்கலும் , நான் பாரம்பரியத்தைக் காட்டி மனித உணர்வுகளைச் சிறைப் பிடிக்க விரும்பவில்லை. நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு பகுதியிலிருந்து வந்தவர்கள்.

அரையும் குறையும் என்றாலும் ஏதோ ஒரு தாய்மொழியில் பற்று வைத்திருப்பவர்கள். அந்த நேசம் தான் ஜானகியுடன் என்னைப் பழக வைத்தது.

அவன் நீண்ட வசனங்கள் பேச விரும்பவில்லை என்றாலும் அந்தத் தாய்க்கு அவன் நம்பிக்கையை அதாவது “எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இம்மண்ணில் வாழ்ந்து மடிந்து போகும் நிரந்தரமற்ற வாழ்க்கையைக் கொண்டவர்கள்”என்று சொல்லவேண்டும் போலிருந்தது.

தாய் அழுதுவிட்டாள். அவன் பதைபதைத்தான். ஏன் வந்தோம் என்றாகிவிட்டது. ஜானகி மாடியில் என்ன பண்ணுகிறாள்? அவள் வந்தால் இந்தத் தாய் அழுவதை நிறுத்திக் கொள்ளலாம்.

“தம்பி என் மகனும் இப்படித் தான் சொன்னான். அவன் அப்படிச் சொன்னதற்காக அவனை வீட்டை விட்டே துரத்தி வி;ட்டார்” அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் கேள்விக்குறியுடன் புருவத்தை உயர்த்தினான்.

“தம்பி அவர் இறந்த பிறகு என் வீட்டுக்கு வந்த முதல் இந்தியர் உம்..உம்.. தமிழர் நீங்கள், மனம் இன்றைக்கு மிகவும் குழம்பிவிட்டது. எலிசபெத்தை – அது தான் என் மகனின் மனைவி- என் மகன் நாராயணன் விரும்பியபோது என் கணவர் அவன் கலாச்சாரத்தை மறந்து, பண்பைவிட்டு இன்னொரு சாதியில் – இன்னொரு இனத்தில் திருமணம் செய்வதை எதிர்த்தார். கொடுமையாக என் மகனை வைதார். தான் இறக்கும் வரை அவன் முகத்தில் வி;ழிக்கப் போவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்” அவள் சுவரில் மாட்டியிருந்த அவர் படத்தைப் பார்த்து அழத் தொடங்கிவிட்டாள். அழுவது அவருக்காகவா அல்லது அவர் விதித்து வைத்திருந்த சட்டதிட்டங்களுக்காகவா ?

அவன் மௌனமாக இருந்தான்.

“மனம் நிம்மதியடைய யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருக்கய்யா” அந்தத் தாயின் துயரம் நெஞ்சைப் பிளந்தது.

“ஜானகியைத் தன் ஆசைப்படி ஆச்சாரம் பார்த்து, சாதி பார்த்து, தராதரம் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தார். அவள் நிலை என்னைப் பைத்தியமாக்குகிறது”

ஜானகி திருமணமானவளா?- அவன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

“என்ன நடந்தது?” என்று தன்னையறியாமல் கேட்டு விட்டான்.

“என்ன நடந்ததா.. ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு விதத்தில் …” அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு விம்மினாள்.அவனுக்குப் புரிந்ததும் புரியாமலும் இருந்தது.

“அப்பாவின் கட்டளையை கடவுள் கட்டளையாக நினைத்து வளர்ந்தவள், வாழ்ந்தவள் ஜானகி. அப்பாவின் ஆசைக்குத் தடை சொல்லாமல் கல்யாணம் செய்து குடித்தனம் செய்ய இந்தியா போனாள்”

தாய் இன்னொரு தரம் அந்தப் பெரியவரின் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.

“லண்டன் மருமகளின் காதிலும் கழுத்திரும் பாங்கிலும் இருந்த பளபளப்பைப் பார்த்த குடும்பம். அவள் மனதில் இருந்த பண்புக்கு மதிப்புக் கொடுக்கவில்லை தம்பி”

அவன் கதை கேட்க அங்கு வரவில்லை. அந்தத் தாயோ தன் மனதிலிருந்த பாரத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவேண்டும் என்ற ஆவேசத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.

“நாங்கள் நாற்பது வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்தவர்கள். வரும்போது எந்தப் பண்பாட்டை மனதில் வைத்திருந்தோமோ அதே பண்பாட்டில் கிட்டத்தட்ட இன்னும் வாழ்கிறோம். ஊரிலுள்ள எங்கள் சொந்தத்தை ஆன்மீக உணர்வுடன் அணுகுகின்றோம். ஆனால் உலகம் மாறும் வேகத்தில் சிலர் உண்மைக்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாது வாழ்க்கையைக் குழப்புகிறார்கள். நான் ஒரு இந்தியப் பெண் என்ற உணர்வுடன் வாழ்ந்த என் மகளை,அவள் லண்டனிற் பிறந்து வளர்ந்ததால் இந்தியா அருவருப்பாக பார்த்ததை தாங்காமல் அவர் மாரடைப்பில் போய்விட்டார்.கட்டிய தாலியின் கனம் கழுத்தை அழுத்த என் மகள் லண்டன் வந்து சேர்ந்தாள். புராணத்தில் ஒரு ஜானகி. என் வயிற்றில் ஒரு ஜானகி. அந்த ஜானகியை தீயில் இறக்கினார்கள். இந்த ஜானகியை தீயால் அழிக்கப் பார்த்தார்கள்.

அந்தத் தாயின் கண்கள் கடலாயின. ஒரு வருடத்தில் ஐயாயிரத்துக்கும் மேலான இந்தியப் பெண்கள் சொந்த வீட்டிலேயே தீயில் வெந்து சாகிறார்கள். காரணங்கள்???

அவன் நெஞ்சை நெருப்புச் சுட்டது. “என்னை ஏன் பார்க்கிறாய் என்பது போல் நெருப்பாய் பார்ப்பாளே அந்த இந்திய பிய+ட்டி”.

இப்படித் தான் ஜானகியை பீட்டர் வர்ணித்தான்.அப்படியாவளையா சந்தேகித்தார்கள்?

அவள் லண்டனில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் சந்தேகப்பட்டு அவள் புகுந்த இடம் அவளைப் பரலோகம் அனுப்ப முயற்சித்ததா?

“தம்பி லண்டனில் பெண்ணுக்கு இருக்கிற சுதந்திரம் இந்தியாவில் இருந்தால் இண்டைக்கு இந்தியா எப்படி இருக்குமோ தெரியாது. லண்டனில் வாழ்கிற இந்தியப் பெண்களுக்கு தங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் சுதந்திரங்களுக்குள்ளேயே தாங்கள் வளர்க்கப்பட்ட இந்தியக் கலாச்சாரத்திற்கு மதிப்புக் கொடுத்து சிறைப்பட்டு வாழ்வதை தூரத்திலிருப்பவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.”

ஜானகி வருவது கேட்டது.தாய் அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

ஜானகி தாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். தாயின் கண்ணீருக்குக் காரணம் அவளுக்குத் தெரியும். ஜானகியை ஜான் என்று மாற்றிக் கொண்டான் துயரக்கதையை அவன் இனிக்கேட்பானா? அவன் பார்வை அவளில் ஒரு நிமிடநேரம் அலைந்தது. ஜானகியில் பல உருவங்கள் தெரிவதான உணர்ச்சி.

‘ஜான் நேதன்’ என்று சொல்லிக் கொண்டதற்குப் பின்னணியாய் இருந்த சரித்திரம் அவனுக்கு ஆத்திரத்தையும் அவளில் ஆனதாபத்தையும் உண்டாக்கியது.

“தம்பிக்கு என்ன வயது?”அந்தத் தாய் ஏதோ பேசவேண்டும் என்பதற்காகக் கேட்டிருக்கவேண்டும்.

“கல்யாண வயது என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கின்றாள்” அவனை அறியாமல் அவன் குறும்புத்தனம் வெளிவந்தது.

ஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் வீட்டுக்குப் போக ஆயத்தம் செய்தபோது ஜானகியின் தாய் வடை,முறுக்கு என்று ஏதோ எல்லாம் கட்டிக்கொடுத்தாள்.

“என் மருமகள் சைவமாகிவிட்டாள்.அவளுக்காக நிறையச் செய்தேன்” ப+ரிப்புடன் சொன்னாள் தாய்.மருமகளில் வைத்திருக்கும் அன்பு வார்த்தையில் வெடித்தது.

இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கும் ஜானகியின் மைத்துனி, இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்த ஜானகியைச் சந்தேகித்த அவளின் இந்தியக் கணவன்! உலகம் விசித்திரமானது.

அவனை வழியனுப்ப ஜானகி வாசல் வரை வந்தாள். அவன் பெயர் ராகவன். அவள் பெயர் ஜானகி. அவன் மௌனமாகப் பெருமூச்சுவிட்டான்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி ,டென்னிஸ் போட்டி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

ஆபீசில் சம்மர் காலப் பார்ட்டி வழக்கம் போல் நடந்தது. பரந்து விரிந்த பார்க்கில் ஆபீசைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்குமிங்கும் உட்கார்ந்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஜானகி இவனை வேண்டுமென்றே ஒதுக்கி நடத்துவது போலிருந்தத. அவனுக்கு காரணம் தெரியும். பின்னேரம் ஏழு மணி வரைக்கும்,ஆபிஸ் விளையாட்டுப் போட்டியும் பார்ட்டியும் தொடர்ந்தது.

சிலர் தள்ளாடினார்கள். சிலர் பாடினார்கள். ஒரு சிலர் ரவுண்டர்ஸ் விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஆபீசர்களில் எத்தனை நிறம், எத்தனை மொழி, எத்தனை வித்தியாசமான குணங்கள், ஒரு இடத்தில் வேலை செய்வதனால் உண்டான ஒற்றுமையுடன் உரையாடினார்கள்.

ஸ்ரேஷனுக்கு வரும் வழியில் எத்தனையோ பேருடன் அவளும் வந்தாள்.

“அம்மா எப்படி?” அவன் ஏதோ பேசவேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை. உண்மையாகவே அந்த அன்னமிட்ட அன்னையை நினைத்துக் கேட்டான்.

ஜானகி நிமிர்ந்து பார்த்தாள். மிக மிக சோகமான பார்வை. “அம்மாவிடம் உங்களைப் பற்றி இனி விசாரிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்”. ஜானகி சொன்னாள். அவன் மௌனமானான்.

“இதோ பாருங்கள், நாங்கள் சில பலவீனங்களால் நிலை தடுமாறிப் போகிறோம். அப்படி அம்மாவும் தடுமாறி உங்களிடம் என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்கக்கூடாது என்பதற்காகத் தான் இப்படிச் சொன்னேன்”

ஜானகி நடந்து சென்றாள், துணிவாக.

– இந்தியா ரு டே பிரசுரம்

(யாவும் கற்பனை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *