கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,390 
 

திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில், ஒரு கூடாரம் முளைத்திருந்தது; நிறைய பேரின் நடமாட்டமும் தென்பட்டது…

“பாமா… இங்க வந்து பாரு…” என்று அவர் கூறியதும், மரக்கரண்டியுடன், அடுக்களையில் இருந்து ஓடி வந்த பாமா, மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். முகத்தில், சன்னமாய் ஆச்சரிய ரேகையும், மெல்லிய புன்னகையும் தோன்றியது.

“அடடே… யாருங்க இவங்க…?”

“எதுக்கு இப்படி இளிக்கறே… காலையில இருந்து உள்ளுக்கும், நடைக்கும் ஒன்பதாயிரம் தரம் நடக்கறியே, நீ பார்க்கல?” எரிந்து விழுந்தார்.

“ம்ம்க்கும்… எனக்கு அதுதான் வேலையா? அந்த காலிமனை யாருதுன்னு கூட தெரியாது. நாம இங்க குடி வந்து, மூணு வருஷமாய் பொட்டல் காடாத்தான் இருக்கு. அந்த இடத்தை காவல் பண்றது தான், என் வேலையா?”
ஜன்னல்பாமா போய் விட்டாள். அவளைப் போல், நடேசனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அவருடைய, “சமூக பொறுப்புணர்வு’ காலை வேளையில், நிச்சயம் சுறுசுறுப்பாய்த் தான் வேலை செய்யும்.

அரசுத் துறையில் உயர்வான வேலையில் இருந்து, 50 வயதில் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார். அதுவும் ஆயிற்று, ஐந்து வருடங்களுக்கு மேல்! வியாசர்பாடியில் மகனும், நீலாங்கரையில் மகளும் வசதியாக வாழ்கின்றனர். ஓய்வூதிய பணத்தில், இந்த சொகுசு பங்களாவை வாங்கிப் போட்டார். நிறைய நேரம் கிடைப்பதால், எண்ணற்ற சமூகநல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

பாமாவிற்கு அவர்களை நிறைய பிடித்திருந்தது. சிறிசும், பெரிசுமாய் நிறைய பேர் இருந்தனர். ஒரு நடுத்தர வயது தம்பதி; அவர்களுடைய மகன், மகள், பேரப் பிள்ளைகள் போல் தோன்றியது பார்ப்பதற்கு.

மரத்தடியில் பெரிய பானையில் சமைத்தனர். கோணி மீது காய்கறிகளைப் போட்டு, அரிவாள்மனையில் அரிந்தனர். மண்பானையில் வேக வைத்த குழம்பின் வாசம், மூக்கை துளைத்தது.
மாலை நேரத்தில், கூடார வாசலை கூட்டி கோலமிட்டு, நீர் தெளித்து, துப்புறவு செய்தனர். லாந்தர் வெளிச்சத்தில் சமைத்து, நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டனர். இரவு வெகு நேரம் சிரிப்பும், பேச்சுமாய் கழிந்தது.

அவர்கள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கின்றனர் என்பது கூட, இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆண்களும், பெண்களுமாய் அனைவரும் வேலைக்கு போய் விடுகின்றனர். ஓரிருவர் மட்டும், கூடாரத்தில், பகல் வேளையில் இருக்கின்றனர்.

“பாமா… அவங்க யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்…” வீட்டிற்குள் நுழையும் போதே, பத்து வயது குறைந்த உற்சாகத்தில் உள்ளே வந்தார், நடேசன்.

“யாராம்?” அசுவாரஸ்யமாய் கேட்டாள்.

“மெயின் ரோட்டை ஒட்டி ஒரு காலிமனை இருக்குல்ல… அத ஒட்டி ஒரு ரோடு போகுது. அங்க, ஒரு காலிமனையில தான், இத்தனை நாளும் இருந்திருக்காங்க… இப்போ, அங்கே கட்டட வேலை ஆரம்பமானதும், இவங்க இங்க இடம் மாறிட்டாங்க… இவங்களுக்கு, இப்படி இடம் விட்டு, இடம்விட்டு போறது தான் பொழப்பே…”

“அப்படியா… இதக் கண்டுபிடிச்சு நமக்கு என்ன ஆகப் போறது..”

“அடிப்போடி இவளே… நம்பளப் போல, சமூகப் பொறுப்புள்ள மனுஷனோட முதல் வேலை என்ன தெரியுமா… நம்மள சுத்தி நடக்குற மாற்றங்களை கண்டுபிடிச்சு, எந்தத் தப்பும் நடக்காம தடுக்கறது தான்… உன்கிட்ட போய் சொல்றேன் பாரு, தண்டம் தண்டம்.”

பாமாவிற்கு அவர்களிடம் எந்தத் தவறும் இருப்பதாய் தோன்றவில்லை. கள்ளம்கபடம் இல்லாமல் இருந்தனர். வாழ்க்கையை துளித்துளியாய் அனுபவித்து வாழ்கின்றனர். இரவானால், டிரான்சிஸ்டரில் அவர்கள் பாட்டுக் கேட்டு, சிரித்து விமர்சனம் செய்தபடி, தங்கள் வீட்டு சிறிசுகளை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது, அழகிலும் அழகு!

இதுபோன்ற அடிமட்ட மக்களிடம் இருக்கும் ஒட்டுறவு, தாத்பர்யம், தம்மைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திடம் இல்லையென்ற அங்கலாய்ப்பு, அவளுடைய மனசில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது…

அன்று வெள்ளிக்கிழமை…

அந்தப் பகுதியில் இருந்த விநாயகர் கோவிலில், குடமுழுக்கு விசேஷம் நடந்தது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நடேசனின் முயற்சியும், கைங்கர்யமும் பெருமளவில் இருந்தது.

“ஸ்வேதா… நம்ம அபரஞ்சி விநாயகருக்கு நாளைக்கு குடமுழுக்கு. ஒரு நடை வந்துட்டுப் போயேன்…” நேற்று மகளுக்கும், மகன் விக்னேஷுக்கும் போன் செய்து அழைத்துப் பார்த்தாள். இருவருமே முக்கிய வேலை இருப்பதாய் கூறி விட்டனர்.

கூடாரத்தில் இருந்த பெண்களும், ஆண்களும், புதுசு உடுத்தி, கோவிலுக்கு போவதும், வருவதுமாய் இருந்தனர். கோவில் பிரசாதத்தை வாங்கி வந்த அவர்களில், மூத்த பெண்மணி, உருண்டை பிடித்து தர, அத்தனை பேரும் அவளைச் சுற்றி அமர்ந்து, கையேந்தி கவளம் வாங்கி உண்டனர். அவர்களுக்குள், பேசிச் சிரிக்க, நிறைய விஷயமிருக்கும் போல; அடிக்கொரு தரம் சிரித்துக் கொண்டே இருந்தனர்.

“வாங்க ஸ்டீபன் சார்…” என்ற நடசேன், மனைவியை அழைத்து,””பாமா… யாரு வந்திருக்காங்க பாரு…” என்றார்.

சப்பாத்திக்கு மாவு பிசைந்த கையுடன் வெளியில் வந்தவள், அவருக்கு வணக்கம் தெரிவித்தாள். பக்கத்து ப்ளாட் ஸ்டீபன், நடேசனைப் போலவே சமூக சேவகரும் கூட. வேலைக்கு போகிற வேலை இல்லாததால், வெட்டி வேலையை, வேலையாக்கி கொள்பவர்.

“நடேசன் சார், நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க… நான் ஆடிட்டர் வரதன் மூலமா, இந்த இடம் யாருதுன்னு கண்டுபிடிச்சு, இப்படி ஒரு கும்பல், அவங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிற தகவலை, மெயில் பண்ணிட்டேன். பொறுத்திருங்க, ரெண்டொரு நாள்ல எல்லாம், “க்ளியர்’ ஆயிடும்.”

காபியுடன் வந்த பாமாவுக்கு, “சுரீ’ரென்று சுட்டது; காபியும், அவர்களுடைய வார்த்தையும்.

நடேசன் பெருமிதமாய் அமர்ந்து இருந்தார். அன்னிய நாட்டின் அபகரிப்பில் இருந்து, தாய்நாட்டை மீட்ட மிதப்புடன்… பாமாவுக்குத் தான் அதிக வருத்தமாய் இருந்தது.

இரண்டாம் நாள் காலையில், போலீசும், நில உரிமையாளரின் வக்கீலும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும், கூடார வாசிகளுக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது.

வாசலில் நின்ற ஸ்டீபனும், நடேசனும், கட்டை விரலை உயர்த்தி, வெற்றிச் செய்தியை பரிமாறிக் கொண்டனர்.

இறுதியில் கூடார வாசிகள், மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் அங்கிருந்து கிளம்பினர். பெண்களும், குழந்தைகளும், மிகுந்த கண்ணீருடன் ஆளுக்கொரு சாமான்களை கையில் பற்றியபடி, இலக்கின்றி நடந்து, கண்களில் இருந்து தேய்ந்து மறைந்தனர்.

ஸ்டீபனும், நடேசனும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு, நில உரிமையாளரின் வக்கீலிடம், நிலத்திற்கு வேலியிடும்படி, இலவச அறிவுரையை வாரி வழங்கி விட்டு வந்தனர்.

“பாமா… விடிஞ்சு இவ்வளவு நேரமாகுது… அந்த ஜன்னலை திறந்து வச்சா என்ன?” எரிச்சலாய் கேட்டபடி, ஜன்னலை திறக்க முற்பட்டார் நடேசன்.

“திறக்க பிடிக்கல… நீங்க திறக்கறதும் பிடிக்கல…” என்றாள். ஆச்சரியமாய் பார்த்தார் நடேசன்.

“பாவம்… அவங்க இருக்கறதுக்கு இடமில்லாம தானே, இங்கே வந்து இருந்தாங்க. வசதியான வாழ்க்கை மட்டுமே தெரிஞ்ச உங்களுக்கு, வாழ்வாதாரத்தை பத்தின கவலையில்ல… யாரோட இடத்துலயோ இருக்குற அவங்களை, குத்துயிரும் கொலை உயிருமா இங்கிருந்து விரட்டியடிச்சது, எப்படி மனிதாபிமான வேலையாகும்… இது தான் சமூக சேவையா?”

“ஓ… அதுதான் உன் கோபமா… இப்படிபட்டவங்களை தங்க விடறது தப்பு பாமா…”

“ஒத்துக்கறேன்… ஆனா, இவங்க அப்படியில்லைன்னு உங்களுக்கும் நல்லாத் தெரியும். இந்த பகுதியிலேயே, பல வருஷமா இருக்காங்கன்னு நீங்க தானே சொன்னீங்க… வீடில்லாத எல்லாருமே, தப்பானவங்களா இருக்க வேண்டிய அவசியமில்லையே… எல்லாரையும் நம்பறது எப்படி தப்போ, யாரையும் நம்பாம இருக்கறதும் தப்பு தான்.”

தேவையான விஷயத்துக்கு கூட, பாமா, இப்படி கோபங்கொண்டு பேசியதில்லை. நடேசனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“சரி விடு… உனக்கு அதெல்லாம் புரியாது. போய், காபி கொண்டா.”

தன்னுடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்தி விட்டு பேசும் கணவனை, இன்னும் கோபமாய் பார்த்தாள்.

“ஆமா… எனக்கொன்னும் புரியாது… உங்களுக்குத்தான் எல்லாம் புரியும். ஆறு மாசத்துக்கு ஒருமுறை கூட, நம்ப புள்ளைங்க இந்தப் பக்கம் எட்டிப் பாக்குறது இல்லை. இவ்வளவு பெரிய வீடும், ஜன்னலும், தள்ளி நின்னு என்னை எளக்காரம் பண்றதை, நான் யார்ட்ட சொல்லி அழ முடியும்?

“இந்த நேரத்துல தான், எனக்கு அந்தக் குடும்பம் ரொம்பவும் வடிகாலா இருந்தது. சிரிப்பும், கூத்துமா அவங்க இருக்கறதை பார்க்கையிலே, நானும் அவங்கள்ல ஒருத்தியா என்னை கற்பனை பண்ணி, சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். இப்போ… ஜன்னலைத் திறந்தா தெரியற வெறுமை, என் முகத்தை கண்ணாடியில பாக்குற மாதிரி இருக்கு. நாம என்னத்தை அனுபவிச்சுட்டோம், அவங்களை விட…” இயலாமையாய் சொன்னாள்.

“அதே தான்… அதே கோபந்தான் எனக்கும் பாமா… உட்கார வச்சு, பத்து பேருக்கு சாப்பாடு போடற வரும்படி இருக்கு… ஆனா, நம்பள தேடி வர யாருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும், ருசிச்சு, கழிச்சு வாழற அவங்களைப் பார்த்தா, எனக்கு கோபம் வந்தது… “நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதிச்சுத் தான் நிம்மதியா, சந்தோஷமா வாழ முடியும்டா நடேசா’ன்னு, எப்பவும் எங்கப்பா என்கிட்ட சொல்வாரு. எனக்கு அது கிடைக்கல… ஆனா, இது எதையுமே செய்யாம, அவங்களுக்கு அது கிடைக்குது… அத நினைச்சா தான், எனக்கு வெறுப்பா இருக்கு.”

கணவனை உற்றுப் பார்த்தாள் பாமா. சமூகசேவை என்று அனத்திக் கொண்டிருந்த கணவனுடைய உண்மை முகம், அப்பட்டமாய் அந்த நொடியில் புலப்பட்டது. அவளுடைய பார்வை வீச்சைத் தாங்காமல், தலை கவிழ்ந்தபடி எழுந்து போனார், நடேசன்.

அதன்பின், அவர் என்றைக்குமே ஜன்னலைத் திறக்க எத்தனிக்கவே இல்லை!

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *