கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,798 
 
 

அம்மா பரிமாறிய இட்லி குட்டி நிலவுகளைப் போன்றிருக்க, ரசனையுடன் ருசித்துச் சாப்பிட்டான் ராகேஷ்.

மங்களம் எதை சமைத்தாலும் அதில் அபரிமிதமான சுவை இருக்கும். காரணம், சமையலில் அன்பை சற்று தூக்கலாகவே கலப்பாள்.

”சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ளே சாப்பிட்டே முடிச்சிட்டியாண்ணா!” என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த தங்கையைப் பார்த்து ராகேஷ் முகம் சுளித்தான்.

”தீப்தி.. இங்கே வா!”

”என்னண்ணா?”

”என்ன இது?”

”துவரம் பருப்பும் சீரகமும் தீர்ந்து போச்சுனு அம்மாதான் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. அதைத்தான் வாங்கிட்டு வந்தேன்!”

”நான் அதைக் கேக்கல.. என்ன டிரெஸ் இது?”

தீப்தி நைட்டியின் மீது ஒரு டவலைப் போர்த்தியிருந்தாள்.

”தெருக்கோடியிலதான் மளிகைக் கடை.. அதான்..”

”இதோ பார்.. ஏற்கெனவே பல முறை சொல்லிட்டேன்.. இந்த டிரெஸ்ஸெல்லாம் வீட்டுக்குள்ள மட்டும்தான். வெளியில கூடாது. இது எனக்கு மட்டுமில்ல.. நம்ம அப்பாவுக்கும் பிடிக்காது. அம்மா, இதையெல்லாம் நீ பார்த்து சரி பண்ணக் கூடாதா?”

”சரிப்பா.”

”அண்ணா.. உன்னை ஒண்ணுக் கேட்கட்டுமா?”

”என்ன?” என்றான், கழுவிய கையை டவலால் துடைத்தபடி.

”எம்.பி.ஏ முடிச்சதும் கேம்பஸ் இன்டர்வியூல பாஸாகி மல்டிநேஷனல் கம்பெனியில எழுபதாயிரம் சம்பளம் வாங்கிற ஆள், இப்படி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பட்டிக்காட்டுத்தனமா முட்டுக்கட்டை போடறியே! இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜமில்லையா?”

”எது நல்லது கெட்டதுனு பெரியவங்களுக்குத் தெரியும்.. வாயாடாதே!”

”அண்ணா, நீ என்னை விட ஜஸ்ட் த்ரீ இயர்ஸ்.. மூணே வயசுதான் பெரியவன். ஏதோ கிழவன் மாதிரி பேசாதே. சரி, என்னை விடு.. என் அண்ணி அல்ட்ரா மாடர்ன் கேர்ளா இருந்தா என்ன பண்ணுவே?”

”நம்ம வீட்டுக்கேத்த மருமகளா மாத்துவேன்!” என்றவனுக்கு ஸ்வீட்டியின் ஞாபகம் வந்தது.

மாலையை சுமந்து, நான்கு சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்த தந்தையைத் தொட்டு வணங்கிவிட்டு அலுவலகம் கிளம்பிய ராகேஷ் தற்போது தங்கையின் திருமணத்துக்காக பணம் சேமித்துக் கொண்டிருக்கிறான். ஆறு மாதமாக வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். மூன்று மாதமாக ஸ்வேதா என்கிற ஸ்வீட்டியை இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறான்.

ஸ்வீட்டி..! கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ‘விஸ்காம்’ படிக்கும் அழகுப் பெண். அப்பா பிசினஸ்மேன். அம்மா மாலதி பணக்கார பெண்மணிக்குரிய அத்தனை தகுதிகளையும் உடையவள். அண்ணன் விஷ்வா, மேற்படிப்புக்கென கலிஃபோர்னியா போனவன், பாதியிலேயே கழன்று கொண்டு இப்போது இந்தியாவில் அப்பா பிசினஸில் சுட்டுப் போடும் கரன்ஸியை சுடசுடச் செலவு பண்ணிக் கொண்டிருக்கிறான்.

ஒரு ‘காபி ஷாப்’பில் ஆரம்பித்த நட்பு, காதலில் சிக்குண்டு விஸ்தீரணமாகி விட்டது. ராகேசுக்குத்தான் அவள் மிகப் பெரிய பணக்காரப் பெண் என்ற தயக்கம் அவ்வப்போது அலைக்கழித்ததே ஒழிய.. அவளுக்கில்லை.

”காதல் பிசாசே.. காதல் பிசாசே” – காலர் ட்யூன் ஒலிக்கவும் பைக்கை ஓரமா நிறுத்தி ‘செல்’லை எடுத்தான்.

”ஹாய் ஸ்வீட்டி!”

”எங்கே இருக்கே ராக்கி..?”

”எங்க ஆபீசுக்குப் பக்கத்துல!”

”சரி, அப்படியே திரும்பி சிட்டி சென்டர் வந்துடு.”

”ஹேய் நான் ஆபீசுக்கு..”

”நோ மோர் ஆர்க்யூமென்ட்! கூப்பிடறது ஸ்வீட்டி.. ஓகே?”

எதிர்முனை ஓசையிழந்தது.

தொய்ந்து போனான். ‘அவள் எப்போதும் இப்படித்தான். நினைத்தால் உடனே நடந்து விட வேண்டும். இந்தப் பழக்கத்தை மாத்தணும். மை காட்.. ஆபீஸில் ஏகப்பட்ட வேலையிருக்கே..’ பைக்கைத் திருப்பினான்.

பீட்ஸா ஹட்!

”ஜலபினோ சூப் ரெண்டு. ஹம்மி கபாப் ரெண்டு. கிரிஸ்பி ரோல் வித் அவுட் கார்லிக். பீட்ஸா டாகா டக் ரெண்டு.. ஓகே?”

ஆர்டர் செய்து விட்டு நிமிர்ந்தாள் ஸ்வேதா.

ராகேஷ் யோசனைக்குள் புகுந்திருந்தான்.

பிள்ளைகள் கண்டதையும் வெளியில் தின்னக் கூடாது என்பதற்காக மங்களம் பொரி உருண்டையும் முறுக்கும் செய்து டப்பாவில் அடைத்து விடுவாள். ஒருநாள் தீப்தி பீட்ஸா வாங்கி வந்து சாப்பிட்டதற்காக அவ்வளவு வசை கிடைத்தது.

‘இவளானால் வாயில் நுழையாத பண்டங்களின் பெயர்களை சொல்லி வரவழைக்கிறாள். மசாலாவும் சீசும் உடம்புக்கு ஆகாது என்று அவள் நல்ல மூடில் இருக்கும்போது சொல்ல வேண்டும்.’

”ஹேய் ராக்கி.. எங்கே போய்ட்டே?”

”சும்மா.. ஏதோ யோசனை..”

”அதை விடு.. நீ கேக்கவே இல்லியே..”

”எதை?”

நேத்து அஷ்ரப் கூட ஈ.சி.ஆர் ரோட்ல பாண்டிச்சேரி வரை பைக்ல ஸ்பீடா லாங் டிரைவ் போய் வந்ததைப் பத்தி.. எதிர்க் காத்து அப்படியே ஆளை கீழே தள்ளும் தெரியுமா? நீதான் ஸ்பீடாவே பைக்கை ஓட்ட மாட்டேங்கறியே.. யாராவது பார்த்துடுவாங்கனு என்னைப் பின்னால உட்கார வைக்கவும் பயப்படறே.. யூஸ்லெஸ் ஃபெல்லோ!”

நரம்பை சுண்டி இழுத்தாற்போல் வலித்தது ராக்கேசுக்கு.

”என் அப்பா பைக் ஆக்ஸிடன்ட்லதான் இறந்தார். அதான் கொஞ்சம் பயம். போகப் போக பிக்கப் பண்ணிக்கிறேன் ஸ்வீட்டி..”

‘ஆளைக் கீழே தள்ற வேகத்துல போனா பேலன்ஸ்க்கு அவனை இறுக்கப் கட்டிப் பிடிச்சுதானே ஆகணும்.. உடம்பு கூசாதா இவளுக்கு..’

வலியை மறைத்து வலிய சிரித்து வைத்தான்.

‘ராஸ்கல்.. இவ்ளோ சொல்றேன். கொஞ்சம் கூட பொறாமை வராதா உனக்கு. ‘இனி இப்படி யார் கூடயும் பைக்ல போகாதே ஸ்வீட்டி.. மனசு வலிக்குது’னு சொல்ல மாட்டியாடா?’

மனதுக்குள் மண்டிய எரிச்சலை மறைத்துக் கொண்டு அவளும் புன்னகைத்தாள்.

ஒரு பழக்கத்தை விதைத்தால் ஒரு நடத்தையை அறுவடை செய்வோம்!

அப்படித்தானோ?

ஸ்வேதாவின் அம்மாவைப் பற்றி ராகேஷ் நிறைய கேள்விப்பட்டு வருத்தப்பட்டிருக்கிறான்.

குடித்து விட்டு அந்நிய ஆண்களுடன் டிஸ்கொதேக்களில் ஆடுவாளாம்.

ஸ்வேதாவும் காலையில் போனில் அப்படித்தான் கூலாக சொல்கிறாள்.

டிஸ்கொதே போயிருந்தாளாம். விடிய விடிய ஆடியதில் களைத்துப் போய் இனிதான் தூங்கவே போகிறாளாம்.

அப்படியானால்.. அவள் அம்மாவைப் போல இவளும்.. யாருடன் ஆடியிருப்பாள்? குடித்திருப்பாளோ? ஐயோ.. எனக்கே அந்தப் பழக்கமில்லையே! இவள் என் குடும்பத்துக்கு எப்படி சரிப்பட்டு வருவாள்? இதெல்லாம் தவறு என்றால் ஏற்றுக் கொள்வாளா?

‘சீ போடா, நீயும் உன் காதலும்’ என்று ஒரேயடியாக தூக்கி எறிந்து விடுவாளோ?

‘ஸ்வீட்டி.. மை டியர்.. நான் உன்னை ரொம்பக் காதலிக்கிறேன்டா.. உன் பணமோ, வேற எதுவோ.. எதுவுமே வேண்டாம்.. நீ வேணும். கறந்த பால் போல் வெள்ளை மனசுடன் நீ வேணும். வேண்டாத சில பழக்கத்தைக் கைவிட வேண்டும். இதையெல்லாம் உன்னிடம் எப்படிச் சொல்வது?’ – மனசு பூனை போல் இப்படியும் அப்படியுமாய் தவித்தது.

சாலிக்கிராமத்தில் ஸ்வேதா சொன்ன முகவரியை மனதில் இருத்தி, பைக்கில் பயணித்துக் கொண்டு இருந்த ராகேசுக்கு உறுத்தியது.

இதுநாள்வரை பொது இடங்களில்தான் அவர்களின் சந்திப்பெல்லாம்! இன்றானால்..

”என் ஃப்ரெண்ட் ஷர்மி வீட்ல நாம சந்திக்கறோம்” என்றாள் ஸ்வேதா.

”எ.. எதுக்கு அங்கெல்லாம்?”

”சின்ன பப்பா.. பாவம் ஒண்ணுமே தெரியாது. கிளம்பி வான்னா.. வரணும். ஷர்மி வீட்ல அவங்க பேரன்ட்ஸ் யாருமில்லை. திருச்சி போயிருக்காங்க. நாம ஜாலியா.. ம்ம்..”

ராகேசுக்கு என்னவோ போலிருந்தது. இதென்ன குருட்டு தைரியம்? மனிதர்களை நம்பலாம். ஆனால், அவர்களுடைய இளமையை நம்பமுடியாதே! தனிமை தரும் தைரியத்தில் ஏதாவது நடந்துவிட்டால்? நோ.. இன்று அவளிடம் பேசியே ஆக வேண்டும். இதுநாள் வரை பொறுத்ததே போதும். அவள் தவறுகளை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ‘நான் அப்படிப்பட்டவனில்லை’ என்பதை உணர்த்த வேண்டும். அதே வேகத்தோடு புறப்பட்டான்.

கண்டுபிடித்துவிட்டான்.

ஆள் அரவமற்ற விஸ்தாரமான தெரு. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு இருந்தது.

ஸ்வேதா சொன்ன வீடு கொஞ்சம் பழமையான பங்களா.

இவனைப் பார்த்ததும் கேட்டைத் திறந்த ஸ்வேதாவின் முகத்தில் அத்தனை தெளிவில்லை.

”வா.. ராக்கி..”

”……..”

”இதுதான் ஷர்மி.. ஷர்மி, ஹி இஸ் ராக்கி!”

”ஹாய்!”
”ஹாய்” என்ற ஷர்மியின் முகத்தில் ஏளனம் இருந்தது.

”பேசிட்டிருங்க.. பீட்ஸா கார்னர் வரை போய்ட்டு வந்துடறேன்” என்று நாசூக்காக நகர்ந்த ஷர்மியும் படுமாடர்னாக இருந்தாள்.

”வா.. உள்ளே வா ராக்கி..” கைப்பற்றி ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவளை அப்படியே அறைய வேண்டும் போலிருந்தது.

அது.. பெட்ரூம்.!

”ரொம்பநாள் ஆசை ராக்கி.. உன்கூட சேர்ந்து ‘அந்த மாதிரி’ படம் பார்க்கணும்னு” என்றவள் ரிமோட்டை கையில் எடுத்தாள்.

விக்கித்துப்போன ராகேஷின் உள்ளம் உலையாய் கொதித்தது.

”ஏ..ய்..” என்று கை நீட்டித் தடுக்க முற்படுவதற் குள் ”சீ” என்ற உறுமலுடன் திரும்பினாள் ஸ்வேதா.

கண்களில் நீர். முகத்தில் காட்டம்.

”ஏமாத்திட்டே ராக்கி.. ஏமாத்திட்டே.. நீ இவ்ளோ சீப்பான ஆளா இருப்பேனு நான் நினைக்கவே இல்லை..” – குரல் நடுங்கிற்று.

ராகேஷ் முற்றிலும் புரியாதவனாய் புருவம் சுருக்கினான்.

”வாட்?”

”நான் வச்ச அத்தனை டெஸ்ட்லயும் நீ ஃபெயிலாய்ட்டே ராக்கி!”

”டெஸ்ட்டா? என்ன டெஸ்ட்?”

”நான் யாருன்னு உனக்குத் தெரியும். நீ யாருன்னு எனக்குத் தெரியும். நீ என்னை நேசிக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனா, நான் உன்னை நேசிக்க ஒரே ஒரு காரணம்தான் இருக்கு. உன் சிஸ்டரோட ஸ்பென்சர் வந்திருந்தப்ப.. அவ ஷால் சரியா போடலனு திட்டித் தீர்த்த பாரு.. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுதான் நான் உன்னை முதன் முதல்ல பார்த்தது. அதுக்கடுத்து சில சந்திப்புகள்.. உன் மேல நல்ல அபிப்ராயமும் காதலும் வந்தது.

நான் ரொம்ப ஏங்கிப் போயிருந்தேன் ராக்கி. அப்பா பிசினஸ், பிசினஸ்னு ஊர் சுத்தறார். நினைச்சுப் பார்த்தா, சட்டுனு அவர் முகம் கூட நினைவுக்கு வரமாட்டேங்குது.. அம்மா.. நான் எதிர்பார்த்த மாதிரி இருந்ததில்ல. பாய் ஃப்ரெண்டோட போய் நின்னா.. அம்மாவுக்கே உரிய அந்த ஜெர்க், பயம், சந்தேகப் பார்வை.. எதுவுமே அவங்ககிட்ட உருவாகல. வீட்டுக்கே கேர்ள் ஃப்ரெண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வந்து கூத்தடிக்கிற அண்ணன். ஒரே ஒருத்தர் கூட எனக்கு வழிகாட்டவோ, எடுத்துச் சொல்லவோ.. அவ்வளவு ஏன்.. அன்பு காட்டக் கூட யாருமில்ல. உன்கிட்டே இதைத்தானே ராக்கி எதிர்பார்த்தேன்?

‘அஷ்ரப் கூட பைக்ல போனேன்’னு சொல்றேன்.. ‘வேணாம் ஸ்வீட்டி.. உன் காத்து என்னைத் தவிர வேற யார் மேலயும் படக்கூடாது’னு ஒரு வார்த்தை வந்ததா உன்கிட்டேருந்து?”

”………..”

” ‘டிஸ்கொதே போனேன்.. விடிய விடிய ஆடிட்டு வந்தேன்’னு சொன்னப்ப ரத்தம் கொதிக்க வேணாமா ராக்கி? ‘இதெல்லாம் என் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது.. இப்படி குடிச்சிட்டு கூத்தடிக்கிறதா இருந்தா.. நீயும் வேணாம், உன் காதலும் வேணாம்’னு கோபமா, தில்லா ஒரு வார்த்தை.. வந்ததா உன்கிட்டேருந்து?”

”இல்லே.. நான் இதையெல்லாம்..”

”ஷட்டப் ராக்கி. பேசாதே! நான் அஷ்ரப்கூட, ரஞ்சித் கூட பைக்ல லாங் டிரைவ் போயிருக்கேன். வீக்லி ட்வைஸ் டிஸ்கொதே போகலைனா தூக்கம் வராது. அத்தனையும் விட்டொழிச்சேன். எப்ப உன்னைப் பார்த்தேனோ.. அப்பவே என்னை நான் மாத்திக்கிட்டேன். ஆனா, நீ என்னை ஏமாத்திட்டியே ராக்கி!”

”ஸ்..வே..தா!” தவித்தான் ராகேஷ்.

”இதோ இப்பகூட தனியா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டதும் வந்துட்டேல்ல? எப்பவும் எல்லை மீறாம பழகுவியே ராக்கி.. இப்ப மட்டும் என்ன? சபலமா? உனக்கா? தாங்க முடியலேடா! உன் தங்கையா இருந்தா.. பார்த்துக்கிட்டு சும்மா இருப்பியா? என்னை மட்டும் ஏன் கண்டிக்கலை ராக்கி? என் பணமா? நான் உன்னை உதறிடுவேன்ங்கற பயமா?”

”இல்லை ஸ்வேதா.. நான் எப்படி உனக்கு..?”

”போதும் ராக்கி. பேசாதே. உன்னோட எந்த சமாதானமும் இனி எடுபடாது. நான் ஆசைப்பட்ட வாழ்க்கைய உன்னால தர முடியாது. ஒரு மிடில்கிளாஸ் ராக்கிய.. அதே குணங்களோட கணவனா அடையணும்னு நினைச்சேன். ஆனா, ‘பொண்டாட்டி யார் கூட வேணாலும் ஊர் சுத்தலாம்.. கொட்டமடிக்கலாம்.. அவ விஷயத்துல தலையிடறதோ, கண்டிக்கறதோ அநாகரிகம்’னு நினைக்கிற எங்க வீட்டு ஆண்கள்ல ஒருத்தனா.. பணக்காரனா இருக்கணும்னு நினைக்கிற ராக்கி எனக்கு வேணாம்” என்றாள் மிக அழுத்தமாக.

”ஸ்வேதா!” – அவசரமாக அதிர்ந்தாள்.

”ஸாரி மிஸ்டர் ராகேஷ்.. நீங்க போகலாம். இனி உங்களை யதேச்சையா கூட பார்க்க விரும்பல.. போகலாம்!”

”ஸ்..வே..தா!”

”ப்ளீஸ்.. கெட் அவுட்!” அவன் முகம் பார்க்கா மல் ஒற்றை விரலை வாசலை நோக்கிக் காட்டினாள்.

அவளுடைய அவசர புத்தியும் அவனுடைய தயக்கமும் ஒரு நல்ல காதலை குழி தோண்டி புதைத்து விட்டது.

கூனிக் குறுகி வெளியேறினான்.

ஸ்வேதா கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

– அக்டோபர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *