கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 11,822 
 

அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். அம்மா வந்த வேளை என்னவள் மஞ்சு கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தாள். எனவே இனியும் போர்வைக்குள் சுகம் காணமுடியாது என்று கண்டதும் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தேன்.

அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு வந்திருந்தார். முதல் நாள் இரவு சுசி அக்காவின் சாவீட்டில் தங்கி நின்ற சோர்வோ நித்திரைக் கலக்கமோ சிறிதுமில்லாமல் அழுத்தித் துடைத்ததுபோன்ற சிவந்த முகமும் நெற்றியில் திருநீற்றுக் கீறலுமாக அம்மா கதவடியில் நின்றார். அம்மாவை அந்தக் கோலத்தில் காண்பதும் கோயில் முன்றலில் கண்மூடி நின்று கும்பிடுவதும் ஒன்றுபோல்தான் எனக்குத் தோன்றுவதுண்டு. முகத்தில் வயதின் காரணமாகச் சுருக்கங்கள் விழத் தொடங்கிவிட்டாலும் அம்மாவின் முக அழகும் எல்லாரையும் வேண்டுமென்று நினைத்துப் பழகும் இதமும் அவர் மீது எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு தனி மதிப்பைக் கொடுத்திருந்தன. எனக்கு அதிலுள்ள பெருமையை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லிக்காட்டத் தவறுவதில்லை.

“என்னம்மா, நேற்று ராத்திரி அங்கை செத்தவீட்டிலை கனபேர் நிண்டவையோ?” அம்மாவுக்கு துடக்குத் தொற்றியிருக்கும் முற்றத்துக்கு வந்து திண்ணையில் ஏறமாட்டார் என்றுதெரிந்தபடியால் வாசலில் வைத்தே கேள்வியைத் தொடுத்தேன்.

“ஊரிலையுள்ள எல்லாப் பெம்பிளையளும் வந்து நிண்டவையள். பாவம் அந்தச் சுசீலாவைத்தான் பாக்கேலாமல் கிடக்கு. இந்த வயசிலை பிரியன் போன பிறகு குஞ்சு குருமன்களை வைச்சுக் கஷ்டப்படப்போறாளெண்ட கவலையிலை எல்லாப் பெம்பிளையளும் அவளுக்குப் பக்கத்திலையே ஆறுதலுக்கு இருந்தனாங்கள்.” என்றாள்

“ஓமோம், சுசி அக்கா பாவம்தான். அத்தான் இப்பிடித் திடீரெண்டு போவாரெண்டு ஆருக்குத் தெரியும்?” எனது மனச் சுமையை அம்மாவிடம் சொல்லி அழவேண்டும்போலிருந்தது.

“பிள்ளை எங்கை?” என்று உட்புறம் நோக்கியபடியே கேட்டாள் அம்மா.

“அங்கை குளிக்கிறாள்.”

“அவளை அங்கை கூட்டிக்கொண்டு வந்திடாதை. இப்பதான் மூண்டுமாதம், வலுகவனமாயிருக்கவேணுமெண்டு டாக்குத்தர் சொன்னவரெல்லோ. இண்டைக்கு, நாளைக்கு வெளியிலை வெளிக்கிட வேண்டாம். இதைச் சொல்லத்தான் வந்தனான். நான் போறன் மோனை. அங்கை பறை அடிக்கப்போறாங்கள். இவன் சிவபாலனுக்குத் தந்தி அடிச்சுக்கிடக்காம். மத்தியானம் வந்திடுவான், அதுக்குப் பிறகுதான் எடுக்கிறதெண்டு அங்கை பறைஞ்சவையள். அவன் மட்டக்களப்பாலையெல்லோ வரவேணும். மாயவா, வழியிலை ஒரு விக்கினமுமில்லாமல் வந்து சேரவேணும்.” அம்மா வல்லிபுரக்கோயில் திக்கை நோக்கிக் கும்பிட்டார். கையோடு, “நான்போறன் மோனை, நீ கொஞ்சத்தாலை வந்தால் காணும்.”

‘ஓமம்மா, நான் கொஞ்சத்தாலை வாறன்!”

அம்மா, மருகளைக் காண விரும்பி இன்னொரு முறை உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினார். அம்மா செல்வதையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் விரைந்து நடப்பதிலிருந்து தெரிந்தது அக்கா மீது எவ்வளவு பற்றுவைத்திருந்தாரென்பது. நாலு தெருக்களுக்கு அப்பாலிலிருந்து ஒப்பாரிச் சத்தம் எங்கள்வீட்டுப் பக்கம் மெல்ல வந்துகொண்டிருந்தது. கொடிகாமத்திலிருந்து பறை மேளம் வர எட்டு மணியாகும். அதன் ஓசை கேட்கமுன்னரே என் நெஞ்சு அழுகை முட்டி வெடித்துவிடும்போலிருந்தது.

சுசீலா அக்கா எனது பெரியையாவின் ஒரே மகள். சின்ன வயதிலிருந்தே அவளை சுசி அக்கா என்று கூப்பிட்டுப் பழகிவிட்டது. பெரியையா எனது ஐயாவின் மூன்று அண்ணன்மார்களில் மூத்தவர். அந்தக் காலத்தில் சிங்கப்பூரிலிருந்து அள்ளிக்கட்டிக்கொண்டுவந்த காசு பணத்தையெல்லாம் தண்ணிபோலச் செலவழித்திருந்தார் என்ற பெயர் எடுத்திருந்தாலும் பிள்ளைகள் இருவருக்கும் நிறையவே எழுதிக் கொடுத்திட்டுத்தான் போனார் பெரியைய்யா. சுசி அக்காவை அப்போதிக்கரி செல்வரத்தினத்துக்குப் பேசிச் செய்யவேண்டுமென்ற விருப்பத்தோடு என் ஐயாவைத் தூதனுப்பவென்று நூறுதரம் எங்கள் வீட்டுக்கு வந்திருப்பார். மூத்த தமையன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த ஐயா கையில் உள்ள வேலையையெல்லாம் விட்டுவிட்டு அந்தக் களியாணத்தை நிறைவேற்றிவைத்தார்.

சுசி அக்காவுக்குத் தம்பிமார் இல்லை. அதனால் அன்றாடம் அவள் வீட்டுக்குப்போய்வந்த என்னைச் சொந்தத் தம்பியாகவே நினைத்து நடத்திவந்தாள். அண்ணன் சிவபாலன் ஓவசியர் வேலைக்கு எடுபட்டு பல நாடெல்லாம் சுத்திக் கடைசியில் மட்டக்களப்புக்கு மாறிப்போனதோடு அங்கேயே மாண்டுபோனார் என்று பெரியம்மா – சுசிஅக்காவின் அம்மா சொல்லி நெடுகிலும் கண்ணீர் வடிப்பாள்.

சுசி அக்காவுக்கு இப்போது நாற்பது வயது இருக்கும். கல்யாணம் கட்டியகையோடு விடுவிடுவென்று நாலு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். அப்போதிக்கரி அத்தான் சிங்கள ஊரெல்லாம் மாறிமாறி வேலை செய்துகொண்டிருந்ததால் பிள்ளைகளைப் படிப்பித்தாலென்ன அவர்களைக் கட்டி மேச்சாலென்ன எல்லாக் கடமையும் அவள் தலையிலேயே பொறிந்து கிடந்தது. ஆனால் அத்தான் எந்தக் கண்ணுக்கெட்டாத் தூரத்தில் உத்தியோகம் பார்த்தாலும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சிக் குலாவுவதிலும் சுசி அக்காவுக்கு வகை வகையாக சேலை துணி வாங்கிக் கொடுப்பதிலும் குறை வைப்பதில்லை. லீவில் வீட்டுக்கு வரும்போது அரிசி மூட்டைகளும் மூடிக்கட்டிய சட்டிகளில் எருமைத் தயிரும் பிள்ளைகளுக்கென வாங்கிய நட்டு நொடுக்குகளும் பெட்டிகளாயும் சாக்குகளாயும் தட்டிவானில் வந்து இறங்கும் காட்சியை நானும் கண்டதுண்டு. சுசி அக்கா கல்யாணம் கட்டும்போது அவளுக்கு இருபத்தொரு வயது. அப்ப அத்தான் அவளிலும் பத்து வயது மூப்பாம். இதை அவள் பலமுறை எனக்குச் சொல்லிச் சிரித்திருக்கிறாள். ஆனால் அப்படி வயது வித்தியாசத்தை இருவரிடமும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அத்தான் எப்போ பார்த்தாலும் இளந்தாரிபோல் மிடுக்காய் இருந்ததுதான் காரணமாயிருக்கவேண்டும். அத்தான் ஊருக்கு எப்போ வந்தாலும் வெள்ளை வேட்டியும் பட்டு சேர்ட்டும் அணிந்து சின்னன் பொன்னன்கள்பின்னும் முன்னும் இழுபடக் குடும்பம் முழுவதையும் கூட்டிக்கொண்டு சிவன் கோயிலுக்கோ சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்கவோ போவதைப் பார்த்தவர்கள் அத்தானின் கம்பீரமான உருவத்தையும் அக்காவின் அழகையும் கண்டு இன்னொருமுறை திரும்பிப்பார்க்காமல் அகலமாட்டார்கள்.

சுசி அக்காவின் அழகை நான் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன். அன்றைக்கு எந்தச் சேலையைக் கட்டவேண்டுமென்று சிலவேளை என்னைக் கேட்பாள். “உங்களுக்கு எந்தச்சீலை கட்டினாலும் வடிவுதான், அக்கா” என்று நான் சிரித்தபடி சொல்வேன். நான் மேல்படிப்பை முடிக்கிற தறுவாயில் அக்காவுக்கு ஒன்றிரண்டு தடவை சொன்னது நினைவிலிருக்கிறது. “அக்கா, எனக்கு உங்களைப்போலை வடிவான, குணமான பெம்பிளையைத்தான் களியாணம் கட்டவிருப்பம்.” என்று சொல்லுவேன். அதற்கு அவள், “முதல் நீ படிப்பை முடிச்சு நல்லவேலையிலிருந்து கை நிறையச் சம்பாரி. நாலா பக்கத்தாலையும் உனக்கு களியாணம் பேசிவருகினமோ இல்லையோண்டு பார். அப்ப அதிலை உனக்குப் பிடிச்ச பெம்பிளையை நல்லாவிசாரிச்சபிறகு கட்டு. நான் பாத்துக்கொண்டு இருக்கத்தானேபோறன்!” என்பாள்.

என்னுடைய திருமணம் கிட்டத்தட்ட சுசி அக்கா சொன்னதுபோல்தான் நடந்தது. எனக்கு அம்மா பார்த்த பெண்களில் இவள் மஞ்சுவைத்தான் ஓரளவுக்காவது தெரியும். அவளின் அங்க லட்சணங்களும் குடும்பப் பின்னணியும் எனக்கு எட்டமுடியாத உயரத்தில் இருந்தன என்பதும் ஆரம்பத்தில் நன்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் நான் சட்டத்தரணியாகித் தொழிலில் மட்டையடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து என்னைப் பற்றிக் கொஞ்சம் நல்ல பெயர் எப்படியோ எங்கள் கிட்டத்து, தூரத்து உறவினர் மத்தியில் பரவியிருந்தது. இவளைப் பெண்பார்க்கும் அரிய சந்தர்ப்பம் எனது படிப்பாலோ தொழிலாலோ கிடைத்திருக்குமென்று அப்போதுநான் துப்பரவாக நம்பவில்லை. ஆனால் அது எப்படியோ கைகூடிவிட்டது. அன்று அவள் எவ்வளவு அழகாகவும் அடக்கமாகவும் உடம்போடு ஒட்டிப்போன சேலையும் இடுப்பின்கீழ் ஊஞ்சலாடும் தடித்த பின்னலுமாக என் முன்னால் வந்து அமர்ந்தாள். நான் அவளையே நெடு நேரம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேனாம். என்னோடு வந்த தங்கைமார் பிறகு சொல்லி என்னைக் கேலி செய்தார்கள். மஞ்சு நிறையப் படித்தவள் மட்டுமல்ல நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள். சண்டை சச்சரவுகளில் ஒருபோதும் ஈடுபடாவிட்டாலும் ஒன்று இரண்டு கெட்ட பழக்கங்கள் மட்டுமேயிருந்த என்னை அவர்கள் தங்கள் பெண்ணுக்குக் கல்யாணம் பேசி வந்தபோது எங்கள் வீட்டில் எல்லாருக்கும்பெரிய ஆச்சரியமாகவே இருந்தது.

மஞ்சுவைத் தெருத் திண்ணைகளில் பலமுறை கண்டு என் வயதொத்த இளைஞர்களைப்போல் அவளின் அழகிலும் நடையிலும் மனதைப் பறிகொடுத்திருக்கிறேன். நேரில் காணும்போது என்னை நோக்கி மெல்லச் சிரித்துவிட்டுத் தலையைக் குனிந்தபடி நடந்து சென்றிருக்கிறாள். அவ்வேளைகளில் ஒருதரமாவது அவளுடன் பேச்சுக் கொடுக்கவேண்டுமென்று நான் நினைத்ததில்லை. அவ்வளவுக்கு நான் அவள்மீது மிகவும் மதிப்பும் ஒருவகையில் பயமும் கொண்டிருந்தேன்.

கடைசியில் பெண் பார்க்கப்போன இடத்தில் எனக்கு என்ன நடந்ததோ தெரியாது, நான் என்ன சொல்லப்போகிறேனோ என்று எல்லாரும் எதிர்பார்த்திருக்க நானோ ஒன்றும் சொல்லாமல் யோசனையுடன் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்குச் சம்மதந்தான் என்று அங்கேயே சொல்லிவிட்டால் அப்படி அவசரப்பட்டு எடுத்த முடிவு உண்மையில் பிழையான முடிவு என நாளை தெரியவரலாம். அதைத் திருத்தமுடியாமலும் போகலாம் என்ற தயக்கத்திலேயே மௌனம் சாதித்தேன். பின்னர் அம்மாவின் உசுப்பல்களுக்கெல்லாம் மசியாது சில நாட்களைக் கழித்தேன். அநியாயமாக நல்ல சந்தர்ப்பம் நழுவிவிடுமோ என்ற பயமும் என்னை ஒருபக்கம் ஆட்கொண்டிருந்தது. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட சுசி அக்காதான் வழிகாட்டுவாள் என்ற நம்பிக்கையுடன் அவளை அணுகினேன். “உன்ரை அம்மா இஞ்சை வந்து அழுதழுது சொல்லிப்போட்டுப் போனா. நீ பாத்த பிள்ளை உனக்கு நல்ல பொருத்தமானவளாம். நீ மட்டும் ஏன் இப்பிடி இழுத்தடிக்கிறையெண்டு சொல்லிக் கவலைப் பட்டா. எண்டாலும் நீ தயங்குகிறதிலையும் ஞாயம் இருக்குது. எதுக்கும் ஒருக்கால் அந்தப் பிள்ளையோடை தனிப்படக் கதைச்சுப்பார். அப்ப உனக்கு ஒருவேளை அவளிலை விருப்பம் வரக்கூடும். என்னசொல்லுறை, தம்பி?” என்று மிக ஆதரவாகக் கேட்டாள். சுசி அக்காவின் விருப்பத்துக்குச் சம்மதித்த பிறகு நாலுபேருக்குத் தெரியாமல் அவளைத் தன் வீட்டுக்குக்கூப்பிட்டாள். அவளும் விபரம் தெரியாமல் அங்கே போக அக்காவின் திட்டத்தின்படி நானும் அங்கே போக எல்லாம் அக்காவின் விருப்பப்படி நடந்தது. அக்கா வீட்டில் நடந்த அந்தச் சந்திப்புத்தான் எனக்கு அவள்மீது பிடிப்பு ஏற்படச் செய்ததிலும்பார்க்க என்மீது அவளுக்கு இன்னும் கூடிய விருப்பம் ஏற்பட வழிசெய்தது. திருமணத்துக்கு முதல் நாள் வரை இப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ இவள் செய்த சதியாகத்தான் இருக்கவேண்டும்.

தெருவில் என்னைக் காணும்போதெல்லாம் தலை குனிந்தபடி போகிறாளே இவள் நிச்சயம் மிகவும் அடக்கமானவளாகத்தான் இருக்கவேண்டுமென நான் அன்று மஞ்சுவை ஆகாயமளவு உயரத்துக்குத் தூக்கிவைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தபோது அவளோ எப்படி என்னை அடையலாம் எனத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாள் எனப் பின்னர்தான் அறிய நேர்ந்தது. ஒருபெண் ஒருவனை ஒருமுறை விரும்பிவிட்டாலோ அவனை அடைவதற்கு அவள் எல்லாப் பிரயத்தனங்களும்செய்வாள். தனது விருப்பம் நிறைவேறும்வரை அவள் ஓயப்போவதில்லை. அதுவும் மஞ்சு போன்ற அசமடக்குக்காரி அடுத்த நிமிடம் என்ன செய்யப்போகிறாள் என்பதைப் படைத்த பிரம்மாவினாலும் ஊகிக்கமுடியாது. இவள் ஒவ்வொரு முறையும் வழியில் என்னைக் காணும்போது தலையைக் குனிந்தபடி தன் திட்டத்தை நிறைவேற்றுகின்ற சிந்தனையில்தான் மூழ்கியிருந்திருக்கவேண்டும். அவளுக்குக் திருமணப் பேச்சு வீட்டில் ஆரம்பமானபோது என்னையே கட்டுவேன் என்று பிடிவாதத்தில் இருந்தாளாம். அவளின் விருப்பத்தில் பேரில்தான் அவளுடைய பெற்றார்எங்கள் களியாணப் பேச்சை ஆரம்பித்தார்களாம் என்பதைக் களியாணம் நடந்து அடுத்த நாள்அவள் மூலமே நான் அறிந்தபோது இவள் எவ்வளவு பொல்லாத காரியக்காரியாக இருக்கிறாளேயென வியந்துபோனேன். அட கடவுளே! இவளுக்கு என்மீது விருப்பம் இருந்ததை ஆரம்பத்திலேயே அறியாமற்போனேனே! அறிந்திருந்தால் நானும் காதல் அப்படி இப்படி எனக் கனவுகளில் லயித்திருப்பேனேயென என் தலையில் இப்போது அடித்துக்கொள்கிறேன். இனியென்ன இந்த அக்கிரமக்காரியிடம் அகப்பட்டுக்கொண்டாயிற்று! இவள் என்மீது வைத்திருக்கும் அளவற்ற காதலில்தான் நான் அநியாயமாக மாட்டுப்பட்டுவிட்டேன்.

திருமணத்துக்குப் பிறகு இப்படியான காதல் பற்றிய உணர்வுகள் கரைதட்டிவிடுமென்று அனுபவப்பட்டவர்கள் சொல்வார்கள். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன் மஞ்சுமீதுநான் கொண்ட உயர்வான எண்ணங்களும் மதிப்பும் இன்னும் சொல்லப்போனால் ஆசையும் இன்று இன்னும் மெருகு கூடிப்போய் இருக்கிறதேயொழியக் குறையவில்லை. ஆனால் அவளின் ஒருசில போக்குகளைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருக்க நியாயமில்லை. அவை அக்காவுடனோ அம்மாவுடனோ கதைக்கக் கூடியவையாகவும் இருக்கவில்லை. நினைத்தால் ஒருபக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் ஆச்சரியமாகவும் இருக்கும்.

மஞ்சு குளித்துவிட்டு வரும்வரைக்கும் காலைக் கோப்பிக்காக நான் ஒற்றைக் காலில் தவம் செய்துகொண்டிருந்தேன். எனது தவம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதும் எனக்கு நன்கு தெரியும்.

திருமணமான நாளிலிருந்து நமது வீட்டின் சின்ன அறையைத் தனது சாமி அறையாக்கிவைத்திருந்தாள் மஞ்சு. எனது பழைய சயிக்கிள், புத்தக அலுமாரிகள் மற்றும் எனது எழுத்துலகத்துக் காணான் கோணான்கள், இன்னும் பல தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் இன்னொரு அறைக்குள் ஒதுக்கிவிட்டுச் இந்தச் சின்ன அறையைத் தன் சொந்த அறையாக்கிக்கொண்டாள். கோயிலுக்குப் போய்ப் பழக்கமில்லாத எனக்கு இப்படி ஒரு சாமிப் பைத்தியம் வந்து வாய்த்ததேயென்று முதலில் கொஞ்சம் தடுமாறித்தான்போனேன்.

அன்றொரு நாள் காலை இவளுடைய பூசை புனஸ்காரங்கள் எந்த அளவுக்குப் போகின்றது என்பதை விடுப்புப் பிடுங்கவென்றெண்ணிச் சின்ன அறைக்குள் சிமிக்கிடாமல் எட்டிப்பார்த்தபோது எனக்குப் பெரும் ஆச்சரியம்தான் காத்திருந்தது. மஞ்சு வேளைகாலையோடு எழுந்து குளித்து முடிந்ததும் அவசரம் அவசரமாக சேலையைச் சுற்றிக்கொண்டு வழியெல்லாம் கேசத்திலிருந்து தண்ணீர் ஒழுக சாமியறைக்குள் நுழைவதைக் கண்டிருக்கிறேன். கிணற்றடியோரமாக மதிலுக்கு மேலாய் வளர்ந்து நின்ற செம்பருத்தி மரங்களிலிருந்து இருகைகள் நிறையப் பூக்களைப் பறித்துக்கொண்டு அவள் சரக் சரக்கென நடந்து பூசை அறைக்குள் நுழைவதை நாவூறுபடும்படியாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்படியாக, மணி குலுக்கி ஊரைக் கூட்டாமல், எண்ணேய் விளக்கை ஏற்றி முகட்டுக்கு வர்ணம் பூசாமல், சாம்பிராணி எரித்து எனக்குச் சளிபிடிக்க வைக்காமல் அவள் அமைதியாகச் செய்யும் வழிபாட்டைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இந்தச் சடங்குகளெல்லாம் பல வீடுகளில் அன்றாடம் நடக்கிறவைதான். ஆனால் என்னவளின் மௌன நாடகத்தின் இறுதியில் அவள் செய்வதுதான் எனக்கு வியப்பாக இருக்கும். சாமி அறைக்குள் வந்ததும் மூடிபோட்ட குட்டி எவர்சில்வர் சிமிழிலிருந்து குங்குமத்தை ஒருவிரலால் ஒற்றியெடுப்பாள். பின்னர் மறுகையால் கழுத்தில் தொங்கும் தாலிக்கொடியை சட்டைக்கூடாக வெளியே உருவியெடுப்பாள். கொடியில் ஊசலாடும்தாலியை மிகப் பயபக்தியுடன் பிடித்து அதன் முகத்தில் விரலில் ஒற்றியுள்ள குங்குமத்தைப் பதித்து அதைத் திறந்திருக்கும் இரு கைகளிலும் ஏந்திக் கண்ணை மூடியவாறு ஒருசில விநாடிகள் தியானத்திலிருப்பாள். பிறகு தாலியைத் தன்னிரு கண்களிலும் மாறி மாறி ஒற்றிவிட்டு மெதுவாகப் பழையபடி சட்டைக்குள் செருவிக்கொள்வாள். அது என் கைபடக் கட்டிய தாலி. தங்கத்தில் கொடி வேண்டியதில்லை, தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் சுற்றிக் கட்டினாலேபோதும் என்று திருமணத்துக்கு முன் என்னிடம் தயங்கித் தயங்கிச் சொன்னவள்தான் மஞ்சு. நானோ கொடியையும் தங்கத்தில் கட்டிவிடுகிறேனென்று அவளைச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. அப்படியானால் கொடி பெரிதாய் வேண்டாம்,சின்னதாய் சங்கிலிபோல் இருந்தாலே போதும் என்றும் வேண்டினாள். “சில பெண்கள் தாலிக்கு இரு பக்கங்களிலும் தங்கக் காசுகளையும் கோர்த்து சட்டைக்கு வெளியே தெரியும்படிதானே கட்டுகிறார்கள்” என்று நான் என் பக்கத்து நியாயத்தைச் சொன்னேன்.“அவர்கள் அப்படிக் கட்டிக்கொள்ளட்டும். அது அவர்கள் விருப்பம். எனக்கு நீங்கள் என் நெஞ்சுக்குள்ளே மறைவாக இருக்கவேண்டும். இதுதான் என் விருப்பம்.” எனத் தலைகுனிந்தபடி அமைதியாக ஆனால் உறுதியாகச் சொன்னாள். “பேதைப் பெண்ணே, உன் விருப்பம்போல் செய்வோமடி” என்று நான் அவளின் முகத்தை என்முன்னே உயர்த்திக் கூறியபோது அவள் கண்களில் நீர் முட்டியதைக் கண்டு அதிர்ந்தேன். இனி அவளை இப்படிக் கண்ணீர் முட்டச் செய்வதில்லையென்று அன்றே நான் தீர்மானித்துக்கொண்டேன். அவளின் விருப்பப்படியே நான் கட்டிய தாலி அவளின் இள மார்பகங்களின் இடுக்கில் அவற்றின் கணகணப்புக்கு மத்தியில் நேற்றுப் பிறந்த குழந்தைபோல் கண்ணை இறுக மூடியவாறு உறங்கிக்கொண்டிருக்குமென்றே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அந்தத் தாலிக்கு இவ்வளவு ஆராதனை நடக்கிறது என்பதை நேரில் கண்டபோது எனக்கு முதலில் சிரிப்புத்தான்வந்தது.

எனக்கு அப்போது வேண்டியிருந்ததெல்லாம் என் மனைவி அழகாயிருக்கவேண்டும், என்மீது அளவற்ற அன்பாயிருக்கவேண்டும். நானும் அவள்மீது எல்லையற்ற அன்பைச் சொரியவேண்டும். இதற்குமேல் திருமண வாழ்வில் வேறென்ன வேண்டும்? ஒருவன் தன்மனைவிமீது வெறுமே அன்பும் அக்கறையும் கொண்டால் போதுமா?. அவள் என்மீது காட்டும் அன்புக்கு மேலாய் என் உயிரின்மீதும் அக்கறை கொள்கிறாளே! நான் கட்டிய தாலியை நானாகவே உருவகப்படுத்தி அதைத் தன் நெஞ்சோடு எப்போதும் ஒட்டி வைத்திருப்பதெல்லாம் என் இதயத் துடிப்பை அவள் உணரவேண்டுமென்ற ஏற்பாடாக இருக்குமோ?

இன்றும் வழக்கமான கதைதான். ஒரு மனிதன் வாசலில் நின்று உள்ளே நடப்பவற்றையெல்லாம் நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறானேயென்று துளிகூடப் பிரக்ஞையில்லாமல் மஞ்சு தன்பாட்டுக்குத் தாலி பூசை செய்துகொண்டிருந்தாள். அந்தத் தாலியில் அன்றாடம் வைக்கும் குங்குமம் அடுத்த நாள் குளிப்பில் கரைந்துவிடுவதால் அது என்றும் புத்தம் புதியதாய் மினுங்கியபடி இருந்தது. “நான்தான் இங்கே உருப்படியாக இருக்கிறேனே, ஏன் மஞ்சு தாலிக்குப்போய் இப்படிப் பூசை செய்கிறாய்? சரி, வெள்ளி, ஞாயிறு என்று நல்லநாள் பெருநாளில் செய்தால் போதாதா? ஒவ்வொரு நாளும் காலையில் என்னைக் காக்கவைத்துவிட்டு இப்படிப் பூசை செய்தால் நான் நூறு வயதுமட்டும் இருப்பேனென்று நம்புகிறாயா?” என அவளைக் கேலி செய்வதுபோல் கேட்டேன். அதற்குப் பதிலாக ஒரு புன்னகைதான் அவளிடமிருந்து வந்தது. திருமணமான புதிதில் மஞ்சு கேட்டுக் கொண்டாளே என்பதற்காக என்னிடமிருந்த புகைப்பழக்கத்தை ஒரேயடியாக விட்டுவிட்டேன். என் மனைவி சொல்லியதன்பேரில் விடுவதற்காகத்தான் இந்தப் பழக்கத்தில் வேண்டுமென்றே தொற்றியிருந்தேன் என்ற உண்மையை அவளிடம் அவிழ்த்தபோது எப்படி இருந்தாலும் கெட்டபழக்கத்தை நான் கைவிட்டதற்காக மிக்க மகிழ்ச்சியடைந்தாள். அப்போது அவள் முகத்தில்தோன்றிய நன்றி உணர்வு நான் அவளை ஏமாற்ற முயன்றேனெனத் தெரிந்தும் அவள் சிறிதும் என்னைக் குறை கூறவில்லை. என் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியாகக் கருதி என்னை இவ்வளவுக்கு ஏற்றுக்கொள்கிறாளே அவளின் சின்னச்சின்ன ஆசைகளை நான் கெடுப்பானேனென்று அவளின் ஒவ்வொரு செயலுக்கும் துணையாக நின்றேன். ஆனாலும் என்ன?. எனது தாலிக்குச் பூசை செய்த பிறகுதான் எனக்கு வேண்டிய மரியாதைகளெல்லாம் கிடைக்கும். எனவே அன்றாடம் பூசை முடியும்வரைக்கும் பொறுமையாயிருக்கப் பழகிக்கொண்டேன்.

நான் காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சுசி அக்கா வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசலில் அப்போதுதான் பின்னிய பச்சைத் தென்னோலைமீது அமர்ந்தபடி கொடிகாமத்துப் பறை மேளகாரர் ஊர் அரள்க அரள்கவென அடித்துக்கொண்டிருந்தனர். முற்றத்தில் நுழையும் ஒவ்வொருவரையும் சடசடவெனப் பறைகள் அதிர வரவேற்றனர். நான் வாசலை வந்தடைந்தவுடன் உள்ளே போகாமல் தெருவோரமாக மேளலயத்தில் என்னை மறந்து நின்றுகொண்டேன். மேளகாரர்கள் தங்களுடைய சொந்த மனவருத்தங்களைச் சொல்லித்தான் ஒவ்வொரு அடியையும் அடிக்கிறார்கள் போலிருந்தது. அவர்களும் மனிதர்கள்தானே. இந்த ஒரு நாள் வேலையில் அவர்களுக்குக் கிடைக்கும் அற்ப சொற்ப வரும்படியில்தான் அந்தக் கிழமையின் வாழ்க்கையைப் பெரும்பாலும் ஓட்டவேண்டும். அடுத்த தடவை நல்லதுக்கோ கெட்டதுக்கோ மனிதர் தங்களைக் கூப்பிடும்வரை எப்படி நாட்களைக் கடத்துவோம் என்ற ஆதங்கமும் கவலையும் அந்த ஒவ்வொரு அடியிலும் கரைந்து ஒழுகுவதை நான் உணர்ந்துகொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தமது கடமையை ஒழுங்காகச் செய்வதில் அக்கறையாகத்தான் இருந்தார்கள். வீட்டு வாசலில் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அடித்துவிட்டுச் சுடுகாடு வரைக்கும் இரண்டு மைல் தூரம் மேளத்தையும் சுமந்து அடித்தபடி நடக்கவேண்டும். வழியில் எங்களூர்ச் சந்தையை அணுகுமுன் மெத்தைக்கடைச் சந்தியில் குறைந்தது இருபது நிமிடமாவது மேளச்சமா நடத்துவார்கள். எல்லாப் பக்கமும் கடை வியாபாரமும் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போகும்படி சந்தி நடுவில் வட்டமாக மேளகாரர் அத்தனைபேரும் நின்று உடம்பெல்லாம் வியர்வை வழிந்தோட அடிப்பதைக் கேட்க சுற்றுவரச் சனக்கூட்டம் அலைமோதத் தொடங்கிவிடும். தாங்கள் நடுநாயகமாக நின்று சமா வைக்கும் அந்தச் சந்தர்ப்பத்தை மனதிலிருத்தித்தான் அவர்கள் இப்போது பொறுமையுடன் அடிக்கிறார்களோவெனவும் எனக்கு எண்ணத்தோன்றியது.

நான் அக்கா வீட்டு முற்றத்தில் இறங்கியதும் உறவுக்காரர்கள் சேர்ந்து நேற்று இரவிரவாகப் போட்ட பந்தலின்கீழ் அத்தானின் உடல் சகல மரியாதைகளுடன் பளபளக்கும் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. சிவபாலன் அண்ணர் மட்டக்களப்பிலிருந்து வரும் வரைக்கும் காத்திருப்பதென்று அங்கே ஓடியோடிக் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர் சொன்னார். அவர் அத்தானுக்கு நேரே இளையவர். இனி அவர் சொன்னபடிதான் இங்கே எல்லாம் நடக்கப்போகிறது என்பதால் வந்தவர்கள் எதிலும்தலையிடாமல் ஒதுங்கி நின்று நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். நான் வளவுக்குள் நுழைந்தபோது எழும்பிய ஒப்பாரி இப்போது ஓரளவுக்கு ஓய்ந்துபோனது. ஒருவனின் சாவீட்டில் எமக்கு நாளை ஏற்படப்போகும் இறப்பை நினைத்துத்தான் மனம் தாளாமல் அழுகிறோம் என்ற சித்தாந்தத்தை நான் செல்லும் ஒவ்வொரு சாவீட்டிலும் உணர்ந்துகொள்ளத் தவறுவதில்லை.

யாழ்தேவி பஸ்ஸில் சிவபாலன் அண்ணர் வரவில்லையானால் அவர் ஒரேயடியாக வரவில்லையென்று தீர்மானிக்கவேண்டியதுதான் என்று அத்தானின் தம்பி என் காதுபடச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது.

சிவபாலன் அண்ணரின் சிவந்த பொலிவான முகம் என் மனக்கண்முன் ஒரு விநாடி தோன்றி மறைந்தது. எப்போதுமே சிரித்தபடியிருக்க இவரால் எப்படித்தான் முடிகிறதோவென நான் பலமுறை வியந்ததுண்டு. தான் மட்டக்களப்பில் மாண்டுபோன கதையையும் அவர் சிரிப்பின் மத்தியில்தான் எங்கள் வீட்டுக்கு வந்தபோது ஒருமுறை சொல்லியதும் நினைவுக்கு வந்தது. பெரியம்மாவின் கூற்றுப்படி ‘அந்தத் தேவடியாள்தான் ஒண்டும்தெரியாத என்ரை பிள்ளையை மருந்து போட்டு மயக்கிப்போட்டாள்’ என்பது எவ்வளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் அண்ணனும் அவளும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதும் இருவரும் மிகச் சந்தோசமாகவே குடும்பம் நடத்துகிறார்கள் என்பதும் நான் நன்றாக அறிந்த உண்மை.

அக்கா வீட்டுக்குப் பக்கத்திலுள்ள உடையார் வீட்டுச் சந்தியில் யாழ்தேவி பஸ் வந்து நிற்பதை யார் முதலில் வந்து வீட்டில் சொல்வது என்பதில் அங்கே நின்ற ஒருசில சிறுவர்களுக்கிடையே பெரும் போட்டியை ஏற்படுத்திவிட்டது. சிவபாலன் அண்ணர் எப்படியிருப்பார் என்று தெரியாமலே பயணத்தால் வருபவரின் தோற்றத்தைக்கொண்டு அவரை மட்டுப் பிடிக்கலாமென்ற நம்பிக்கையில் அவர்கள் வீட்டுக்கும் சந்திக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

“யாழ்தேவி பஸ் வந்திட்டுது” என்று ஒரு சிறுவன் வந்து வாசலில் கூவிவிட்டுப் போனான். அக்கா வீட்டுத் தெருவின் அந்தலையிலிருந்து பார்த்தால் உடையார் வீட்டுச் சந்தி கூப்பிடு தூரந்தான். பஸ் வந்து ஐந்து நிமிடமாயிற்று. அது அக்கா வீட்டைத் தாண்டியும் போய்விட்டது. ஆனால் அண்ணனை மட்டும் காணவில்லை. செய்தி அக்காவின் காதுக்கு இதுவரை எட்டியிருக்கும். இந்தத் துயரமான வேளையில் கூடப்பிறந்த சகோதரனை அருகில் காணாத பெண்ணின் மனம் மேலும் எப்படிப் புண்பட்டிருக்கும் என்பதை என்னால் எண்ணவே முடியாதிருந்தது. அண்ணனுக்கு என்ன இடைஞ்சல்கள் ஏற்பட்டதோவென்ற யோசனையில் அக்கா தன் கவலையை இரட்டிப்பாக்கியிருப்பாள். அண்ணனைக் காணவில்லை என்பதால் அவள் நிமிர்ந்து கூட்டத்தில் நின்ற என்னையாவது பார்க்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அவளின் கண்ணுக்கு எட்டும்படியாக நின்றுகொண்டேன்.

நேற்று அத்தான் காலமாகியதிலிருந்து குனிந்த தலை நிமிராமல் உயிரற்ற அத்தானின் உடம்பையே வெறித்து நோக்கியபடி இருந்தாள் அக்கா. ஒரு கிழமை லீவில் வந்த அத்தான் நாலாம் நாள் மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் அன்றைய பேப்பரை அகல விரித்தபடி ஈஸிசேரில் சாய்ந்துகொண்டார். இடையில், குசினியில் வேலையாயிருந்த அக்காவைக் கூப்பிட்டு ‘குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டாப்பா’ என்றார். அக்கா கிளாஸில் தண்ணீரைக் கொண்டுபோய் அத்தானிடம் நீட்டியபோது விரித்த பேப்பர் நெஞ்சில் கிடக்கத் தலை சரிந்து நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்துகிடந்தார். அடுத்தகணம் அக்காவின் “ஐயோ, என்ரை சுவாமி” என்ற அலறல் நாற்புறமும் கேட்க அடுத்த இரண்டு நிமிடத்தில் வீடு உறவினர்களால் நிரம்பிவிட்டது. எவர் வந்தென்ன எப்படி அழுதென்ன அத்தான் அக்காவிடம் ஒரு சொல்கூடச் சொல்லாமல் விடைபெற்றுவிட்டார். அப்போது உதிர்ந்த கண்ணீரின் சுவடுகள் இன்றும் அவள் கன்னங்களில் காய்ந்து இறுகிப்போயிருந்ததைக் கண்டேன். அத்தானின் இறந்த உடலை முதலில் கண்டு அழுது ஒடுங்கிப்போனவள் இப்போதும் அதேநிலையில்தான் இருந்தாள். ஒரு சொல், ஓவென்று ஒரு அழுகை. எதுவுமேயில்லை. வந்திருந்த பெண்களெல்லாம் சுற்றுவர நின்றும் அருகில் இருந்தும் அவள் அழாமலிருக்கிறாளேயென்ற பயத்தில் அரண்டுபோயிருந்தார்கள்.

இனியென்ன சிவபாலன் அண்ணன் வரமுடியாமற்போய்விட்டது. அவரின் பதில் தந்தி இன்றோ நாளையோ வரக்கூடும். இல்லையேல் எல்லாம் முடிந்தபிறகு இங்கு அவர் தலையைக் காட்டவும்கூடும். “இனிக் காத்துக்கொண்டிருக்கேலாது, எடுக்கவேண்டியதுதான்” என்று அத்தானின் தம்பி முடிவெடுத்துவிட்டார்.

பறை மேளம் ஓய்ந்துபோயிருக்க ஐயர் அசுரவேகத்தில் அக்காவுடைய மூத்தமகனின் கையையும் உலக்கையையும் ஒருங்காய்ப் பிடித்துத் திருப்பொற்சுண்ணம் இடித்துக்கொண்டிருக்க இளையதுகள் சுற்றிவர என்ன நடக்கிறதென்பதை அறிய முயன்றும் விளங்கிக்கொள்ள முடியாமல் மற்றச் சொந்தக்காரப் பிள்ளைகளோடு எரியும் பந்தங்களைக் கைகளில் பிடித்துக்கொண்டு தகப்பனின் தலைமாட்டில் நின்றார்கள். விபரம் தெரியாத கடைசியான்தான் எங்கேயோபோய் ஒழிந்துகொண்டது. நாளைக்கு, “அம்மா, அப்பா இனி எப்ப வருவார்?” என்று இந்தக் குழந்தை நிச்சயம் கேட்கப்போகிறது. அந்தக் குழந்தைக்கு அக்கா என்ன மறுமொழியைச் சொல்லப் போகிறாளோவென்று நான் ஒருபுறம் கலங்கிக்கொண்டிருந்தேன்.

ஐயர் மூட்டையைக் கட்டிக்கொண்டு வெளியேறியதும் சடங்குகள் ஒவ்வொன்றும் முறையான ஒழுங்கில் நடந்தேறின. அதுவரைக்கும் ஓரமாய்ப் பெண்களோடு அமர்ந்து நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருந்த செல்லம்மா பெரியம்மா தான் இனித் தலையிடவேண்டியதுதான் என்பதுபோல் இப்போது எழுந்து நின்று அப்படியும் இப்படியுமாகக் கைகளை வீசிக் கட்டளையிடத் தொடங்கினாள். ஊரில் எல்லாரிலும் பார்க்க வயது முதிர்ந்த பெண் என்பதாலும் தன் அன்பாலும் அக்கறையாலும் உறவுக்காரரை வளைத்துப்போடும் வல்லமையுள்ளவள் என்பதாலும் செல்லம்மா பெரியம்மாவின் பேச்சுக்கு ஊரில் மறுபேச்சுக்கிடையாது.

இறந்தவனின் உடம்பை எப்போது வீட்டிலிருந்து அகற்றிவிடலாமென்பதில்தான் அங்கே எம கிங்கரர்போல் நின்ற நாலைந்து வயதுவந்தவர்களின் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அவர்களில் ஒருவர் சவப் பெட்டியின் மூடியை ஒரு கையில் ஏந்தியபடி பெட்டியை மூட அவசரப்பட்டவர்போல் நின்றுகொண்டிருந்தார். ஒருவர் இறந்துவிட்டால்அவர் ஆசையாய்க் கட்டியெழுப்பி பெண்சாதி, பிள்ளைகளோடு வாழ்ந்து அனுபவித்த சொந்தவீட்டுக்கும் அவருக்கும் இனி எந்த வகையிலும் உரித்தில்லை என்று ஆகிவிடும்போலிருக்கிறது. இறப்புக்கு இவ்வளவு வல்லமை இருப்பதனால்தான் நாமெல்லாம் அதற்கு அஞ்சுகிறோமா?

பெட்டியை மூடவந்துவிட்டார்களெனக் கண்டதும் செல்லம்மா பெரியம்மா மாரடிக்க வந்த பெண்களையெல்லாம் வரிசைப்படுத்தினாள். அங்கு வந்த ஒவ்வொரு பெண்ணும் தன் உயிருக்குயிரான ஒருவரை இழந்தார்போன்றே தம் மார்பில் ஓங்கி அடித்து அலறுவதைக் காணத் தைரியமின்றி நான் அவதியுற்றேன். சுபி அக்கா அப்போது எழுந்து நிற்க முயன்றாள் போலும் அவளின் முழு உடம்பும் நடுங்கிக்கொண்டிருந்தது. தடுமாறி எழுந்தவளை பக்கத்தில் நின்ற பெண்கள் தாங்கிக் கொண்டார்கள். எனது அம்மாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். இனி அக்கா தன் கணவனுக்கு இறுதியாகச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும். அத்தானுக்கு அவள் இதுவரை செய்யாத கடமைகளா? பசும் கொடிபோன்ற அக்கா அவரின் பயில்வான் போன்ற உடலின் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் நேற்றுவரை ஈடுகொடுத்தவள்தானே! இவையெல்லாம் திருமணமான பெண் தன் கணவனுக்குச் செய்தேயாகவேண்டும் என்ற பழைய சம்பிரதாயத்தை நாமெல்லாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதனாலா? நிச்சயமாக இல்லை. அது எனக்கு நன்றாகத்தெரியும். இந்த இருவரும் இறுக்கமான அன்பால் பிணைக்கப்பட்டவர்கள். அத்தான் எத்தனை பெரிய மல்லனாக இருந்தபோதும் ஒரு நாளாவது அக்காவை “ஏய்” என்று அதட்டியிருக்கமாட்டார். இங்கே பெட்டிக்குள் நெருக்கியடித்துக்கொண்டு படுத்திருக்கும் அத்தான் அக்காவின் அன்புக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார் என்பது எனக்கும் ஊரவர்களுக்கும் நன்றாய்த் தெரியும். உத்தியோகத்தில் எத்தனையோ முரட்டு மனிதர்களையும் வாகனங்களையும் கட்ட் மேய்த்தவர் வீட்டில் அக்காவின் அன்புக்கு முன்னால் ஒரு சேவகன்போலவே வாழ்ந்துவந்தார். அக்காவின் மெல்லிய உடலுக்குள் எத்தனை உறுதியும் திறமையும் இருந்தன என்பதெல்லாம் வெறும் பொய்யாகத்தான் இருக்கவேண்டுமென இப்போது எழுந்து நின்ற அக்காவின் தோற்றம் என்னைச் செவிப்பறையில் அடித்துச் சொல்லிற்று. சுற்றிவந்து மாரடித்து அழுத பெண்களை விலக்கிவிட்டு பெரியம்மா அக்காவின் அருகில்வந்தாள். “பிள்ளை, கொடியைக் கழட்டி உன்ரை மனிசன்ரை நெஞ்சுக்கு மேலை வையணை! ”பெரியம்மா மிக மெதுவாகத்தான் சொன்னாள். பெரியம்மாவின் கட்டளை அங்கு சூழ்ந்திருந்தசுமங்கலிப் பெண்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் இருந்திருக்கவேண்டும். தமது தாலியைத்தான் யாரோ திடீரென அறுக்க முயல்கிறாரெனத் திடுக்கிட்டுஉணர்ந்தவர்போல் ‘ஓவென’ அரற்றினர்.

ஏனைய பெண்களின் அரற்றலையும் மீறிக்கொண்டு அக்காவின் ஓலம் எழுந்தது, “என்ரை ராசா!” அத்தான் இறந்துவிட்டாரெனக் கண்ட அந்த விநாடியில் அலறிய பிறகு இன்றுவரை ஒருசொல்லைக்கூட உதிர்க்காமல் இறுக்கமாயிருந்த அக்காவின் அலறல் பந்தலைப் பிய்ப்பதுபோல் எழுந்தது. சுற்றி நின்றவர்களெல்லாம் வெலவெலத்துப்போனார்கள். அந்தக் கொடியை அவர் எப்போது கட்டினாரோ அன்றிலிருந்து அதை ஒருபோதும் கழற்றியதில்லை சுசி அக்கா. செல்லம்மா பெரியம்மா சடங்கு முறையைத் தயவாய்ச் சொல்லியதும் அக்கா தன் நெஞ்சில் கைகளை இறுக்கமாய் பதித்துக்கொண்டு தன் தாலியை அறுக்க எவருக்கும் இடம் கொடுக்கப்போவதில்லை என்பதுபோல் அத்தானையே உறுத்துப் பார்த்தபடி வெறி பிடித்து நின்றாள். அவளின் உடல் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. நேரம் நெருங்கிவிட்டது. சவப் பெட்டியின் மூடியைத் தூக்கி வைத்துக்கொண்டு நின்றவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரியம்மா மனதைத் திடப்படுத்திக்கொண்டு அக்காவுக்கு இன்னும் அருகில் வந்தாள். எந்தப் பெண்ணால்தான் முடியும் இன்னொரு பெண்ணின் தாலியைக் கழற்றும்படி கட்டளையிட? ஆனால் கணவன் இறந்தால் மனைவி தாலி அறுத்தவளாகிறாள் என்ற எல்லாருக்கும்தெரிந்த உண்மையை பெரியம்மா தன் சொந்த வாழ்வில் கண்டும் உணர்ந்தும் மனம் வெடித்து அழுதவள். “கழட்டி வையடி தாலியை!” அவளுடைய ஒவ்வொரு சொல்லும் சுசி அக்காவின் வாழ்வோடு விளையாடிய விதியை மல்லுக்கு அழைப்பதுபோலிருந்தது. அக்கா கடைசியில் தன் தாலிக்கொடியைக் கழற்றி அத்தானின் உணர்சியற்ற நெஞ்சின்மேல் வைத்து அதன்மீதே தலையை ஓங்கி அடித்து அரற்றினாள். சுற்றி நின்ற பெண்களும் கூடவே அழுதார்கள். அந்த அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனத் தைரியமின்றி நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

சடங்குகள். அர்த்தமற்ற பழைய சடங்குகள். போனவனின் பெருமையைப் பேண இருக்கிறவளின் உணர்வுகளைச் சித்திரவதை செய்யும் சடங்குகள். இனி அவள் வாழாவெட்டிதான் என்று அடித்துக் கூறும் சடங்குகள்! பெண்ணே, உனது நெற்றி இனிக் குங்குமம் வைக்க அருகதையற்ற பாழ் நெற்றியென்று சாடும் சடங்குகள். ஆனால் இச்சடங்குகள் மணம் முடித்திருக்கும் ஆண்கள் பெண்கள் எல்லாருக்கும் ஏதோ பேருண்மையை அடித்துச்சொல்ல முயல்வதுபோலவும் எனக்குத் தோன்றியது

அன்றைய எல்லாச் சடங்குகளும் ஒருவாறு நடந்து நிறைவேறின. நான் சுடுகாட்டிலிருந்து மீண்டு அக்கா வீட்டுக்கு வந்தபோதிலும் அவளைக் காணத் தைரியமின்றி மனமெல்லாம் அக்கா தன் தாலிக்கொடியைக் கழற்றிவைத்துவிட்டு அழுத அழுகையைச் சுமந்துகொண்டு வெளியேறினேன்.

எனது வீட்டுக் கிணற்றடியில் அப்போதுதான் காய்ச்சி இறக்கிய அரப்பும் தேசிக்காயும் சட்டியில் எனக்காகக் காத்திருந்தன.தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. கிணற்று ஒட்டில் தோய்த்துக் காய்ந்த உடுப்புகளும் துவாயும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. நான் அவற்றையே சில கணங்கள் வெறித்தபடி நின்றேன். “உன் முன்னாலும் பின்னாலும் நடப்பவற்றைப் நன்றாய்ப் பார்க்கிறாய்தானே! உன் மனைவி தன் கணவன் என்ற முறையில் உனக்குச் செய்யும் ஒவ்வொரு சின்னக் கடமையையும் அவள் உன்மீது காட்டும் பணிவையும் எல்லையற்ற அன்பையும் மறக்காமல் உன் மனதில் எழுதி வைத்துக்கொள். நீ அவளுக்கு ஒருபோதும் செய்யாத இதுபோன்ற எண்ணற்ற காரியங்களையெல்லாம் அவள் எதற்காக இவ்வளவு மனச் சந்தோசத்தோடு உனக்குச் செய்கிறாள் என்பதை ஒருமுறையாவது சிந்தித்துப்பார்” என்று அப்பொருட்கள் என் நெஞ்சிலே தொட்டுச் சொல்வதுபோலிருந்தது. அன்று அள்ளி வார்த்த தண்ணீரிலும் பார்க்க என் கண்களிலிருந்து வழிந்த தண்ணீரே அதிகமாகக் கொட்டியதுபோலுமிருந்தது.

முழுகி முடிந்து உடுப்புகளை மாற்றிக்கொண்டதும் என் கால்கள் என்னை அறியாமலேயே என் மஞ்சுவின் சின்னச் சாமி அறைக்குள் இட்டுச்சென்றன. அறை வாசலில் மஞ்சு எனக்காகக் காத்திருந்தாள். அன்றைக்கென்னவோ அவள் இன்னும் அழகாகவும் அற்புதமாகவும் எனக்குத் தோன்றினாள். அவள் உடுத்தியிருந்த மெல்லிய பருத்திச் சேலை அவளின் மார்பக வளைவுகளில் தவழ்ந்து இறங்கி இடுப்பின்மீது கண்ணாமூச்சி விளையாடியது. மாலை வெயிலின் மந்தகாசத்தில் அவளின் இதழ்கள் தின்பதற்கென்றே தயாரானவைபோல் சிவந்திருந்தன. நடு உச்சி பிரித்து மலையருவிபோல் இறங்கிய கூந்தலில் செம்பருத்தியொன்று மெல்ல என்னை எட்டிப் பார்த்தது. மலர்ந்த முகத்தில் தாய்மையின் ஆரம்ப இழைகள் ஓடக் கண்களைச் சிமிட்டிப் புன்னகையால் என்னை ஆரத் தழுவினாள். நான் அவளின் கண்களில் தோன்றிய கனிவால் கட்டுண்டு அவளருகில் போய் நின்றேன். என்னை அறையினுள்ளே கூட்டிசென்று தட்டிலிருந்த திருநீறை விரல் நுனியால் எடுத்து என் நேற்றியில் இட்டாள். நான் நிமிர்ந்து அவளின் கண்களினூடாகப் பார்த்தேன். அந்த ஒவ்வொரு கணத்திலும் நானே அவளின் வயிற்றில் கருவாய், குழந்தையாய் அவளை உள்ளிருந்து உதைப்பவன்போல் உணர்ந்து நெகிழ்ந்தேன். ஒரு பெண் தன் வயிற்றில் அணு அணுவாய் வளரும் கண்ணுக்குப் புலப்படாத குழந்தையின் ஒவ்வொரு சிறு அசைவும் தன் நாடி நரம்புகளிலெல்லாம் ஊர்ந்து இதயத்தையே உலுக்குவதை உணர்ந்து தனக்குள்ளேயே கிளுகிளுக்கும்போதெல்லாம் அந்த அற்புதமான கணங்களை அவளுக்குத் தந்த கணவனுக்கும் நன்றி கூறுகிறாள் அன்பதை எத்தனை ஆண்கள் அறிவார்கள்? அவள் எல்லாம் விளங்கிக் கொண்டவள்போல் நின்றாள். நான் அவளை அள்ளி இறுக அணைத்தபோது அவள் அணிந்திருந்த சட்டைக்கு மேலாய் நான் கட்டிய தாலி என் நெஞ்சில் பட்டது. இதே தாலிதான் அன்றாடம் நூறுமுறை அவளை நான் அணைத்த போதெல்லாம் என் மார்பில் நோகும்படியாக அழுந்தியது. ஆனால் இன்று அது மெத்தெனப்பதிந்ததை உணர்ந்து அவளுடைய அணைப்பின் சுகத்தில் குழந்தையானேன். அவள் புன்னைகைப்பதுபொலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். ஓ, இந்தப் புன்னகை ஒன்றே போதும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *