செத்து செத்து விளையாடுபவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 16,880 
 

கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இருக்க விரும்பியதில்லை. குறைந்தபட்சம் பிடித்தவர்களின் லிஸ்ட்டில் தான் இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தபடி இருப்பான். வெள்ளிக்கிழமை கறி தின்னுவது, அந்த தெரு கோவிலில் தினமும் கொடுக்கிற சுண்டலை இரவு சரக்குக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்துவது என்று எதையாவது செய்தபடி இருப்பான். வீட்டில் இருந்தாலாவது அம்மா இவை எதையும் செய்ய விடாது. இது கேள்வி கேட்க ஆளில்லாத சென்னையின் பேச்சிலர் வாழ்க்கை. அது மட்டுமில்லாமல் நல்ல சோறு கிடைப்பதே கொஞ்சம் அபூர்வமான இந்த வாழ்வில் கறி சோறு கிடைக்கையில் நாள் கிழமை பார்க்க முடியுமா என்ன..?

ஆனால் இன்றுதான் கடவுள் அவருக்கு பிடிக்காதவர்களையும் சோதிப்பார் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான். விடிந்தும் விடியாததுமான அன்றைய அதிகாலையில் அவனது மொட்டை மாடி அஸ்பெஸ்டாஸ் அறையின் இத்துப் போன கதவை, அந்த பாழாப்போன கடவுளின் தூதுவனாக ஈஸ்வரன் வந்து தட்டியபோதுதான் அந்த உண்மை அவனுக்குப் புரிந்தது.

இந்த ஈஸ்வரன் உமையாள் சமேதன் இல்லை. கையில் மானும், மழுவும் கொண்டவன் இல்லை. மாறாக இவன் பேரைச் சொன்னதும், ரோக்கார் எனப்படும் பூச்சி மருந்தும், அரளி விதையும், தூக்குக் கயிறுமே நினைவுக்கு வரும்.

காலையில் தட்டப்பட்ட கதவைத் திறந்ததும் மணிகண்டன், தான் இன்னும் ஒரு கெட்டகனவுக்குள் இருப்பதாகவே நம்பினான். ஒன்பதரை ஆகியும் தூக்கத்தில் இருந்து விழிப்பதான ஒரு நிலை வராததால் அது கனவல்ல நிஜம் என்பதை அவன் ஒப்புக் கொள்ளவேண்டி வந்தது. இவனது திகில் பற்றிய எந்த பிரக்ஞையும இல்லாத ஈஸ்வரன் அவன் பாட்டுக்கு தண்ணீர் எங்கேயிருந்து பிடிக்க வேண்டும், பாத்ரூமை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் சூட்டிகையாக கற்றுக் கொண்டு, ரொம்ப காலம் அங்கே வாழ்பவனைப் போல சுவாதீனமாக வளையவரத் துவங்கிவிட்டான்.

மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்றைக்கு பார்த்தா இந்த இம்சை பிடித்தவன் வந்து தொலைய வேண்டும்?

ரொம்ப காலமாக அவன் ஃபாலோ செய்து வந்த வெற்றிகரமான இயக்குநர் ஒருவர்.. அவர் எப்ப ஆபீசில் இருப்பார், எப்ப இருக்க மாட்டார் என்பது அதி ரகசிய தகவல். அன்றுதான் தன் அலுவலகத்துக்கு எந்த நேரத்தில் வருகிறார் என்ற தகவலை ஒரு நண்பன் இவனுக்கு தெரிவித்திருந்தான். இயக்குனர் இவனது ஏரியாக்காரர். சொல்லப் போனால் இவனது சாதிக்காரர் என்பது இவனுக்கு நன்றாகத் தெரியும்.. அதே மாதிரி நிறைய படிப்பார் என்றும் அவரது பேட்டிகளில் இருந்து தெரிந்தது. இவனோ பல பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியிருக்கிறான். ஒரு இலக்கிய இணைய இதழில் சிறுகதை கூட எழுதியிருக்கிறான். இவனை அவர் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளும் அனைத்து தகுதிகளும் இவனுக்கு இருந்தது.

அவரிடம் மட்டும் சேர்ந்து விட்டால் இவனுக்கு ஏழாவது சொர்க்கம் நிச்சயம். ஐந்து வருடங்கள்.. எத்தனை வேதனை.. எத்தனை அவமானம்.. உப்புமா கம்பெனிகளின் உப்புமா இயக்குநர்களின் உதவியாளனாக அவன்களுக்கு சோறு சமைத்துப் போட்டு, ஜட்டி துவைத்து, அவன்கள் எடுக்கும் வாந்திகளை கிளீன் செய்து.. ஒரு படத்தில் வேலை பார்ப்பதற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறான். ஐந்து வருடத்துக்குப் பிறகு இப்போதுதான் இவனுக்கு ஞானம் பிறந்தது. உப்புமா படத்தில் வேலை என்றால் இன்னும் பத்து வருடம் ஆனாலும் இவன் ஜட்டி துவைத்தபடிதான் இருக்க வேண்டி இருக்கும். இந்த நரகத்தில் இருந்து விடுதலை ஆக வேண்டும்.. தனியாக படம் பண்ண வேண்டும் என்றால் இவன் எதாவது புகழ்பெற்ற இயக்குநரிடம் உதவியாளனாக வேலை பார்த்தே ஆகவேண்டும். ஒரே ஒரு படம். பிரபல இயக்குநரின் உதவியாளன் என்று டைட்டிலில் பேர் வந்துவிட்டால் போதும். அப்புறம் தயாரிப்பாளர்களை அணுகி கதை சொல்வது, பெரிய ஹீரோக்ககளிடம் கதை சொல்லி கால்ஷீட் பெறுவது எல்லாம் தன்னால் நடந்துவிடும். அதற்காகவே தனது ரெஸ்யூமை வெகு கவனமாக தயார் செய்து, துண்டு துக்கடா பத்திரிகைகளில் அவன் பெயரில் வந்திருந்த கவிதைகளை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு, நண்பர்கள் துணையோடு அவன் எடுத்திருந்த குறும்படத்தையும் ஒரு நண்பனின் லேப்டாப் புண்ணியத்தில் காப்பி எடுத்துக கொண்டு தயாராக இருந்தான்.

அவன் எதிர்பார்த்தது எல்லாம் அந்த இயக்குநரோடு ஒரே ஒரு சந்திப்பைத்தான். ஒரு தரம் சந்தித்து பேசிவிட்டாலே அவரை இம்ப்ரெஸ் செய்துவிட முடியும் என அவன் தீவிரமாக நம்பினான்.

அப்படியான சந்தர்ப்பம் அமைந்த ஒரு நாளிலேயே இவனது அறைக்கு ஈஸ்வரனும் அனுப்பப்பட்டது ஒரு கொடூரமான போன பிறவிப் பாவத்துக்கான இந்த பிறவி சம்பளமோ என்றெல்லாம் அவன் நினைக்கத் துவங்கினான்.

இந்த சனியன் பிடித்தவனை நம்பி அறையை விட்டுவிட்டுப போகவும் பயமாக இருநதது. இயக்குநரை கெரில்ல தாக்குதல் மூலம் எதிர்கொள்ள இந்த நாளை விட்டால் வேறு நாளும் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் மருகிக் கொண்டிருந்தபோதே ஈஸ்வரன் அவன் பாட்டுக்கு குளித்து முடித்து, சுத்த உடை அணிந்து மளமளவென்று சாப்பிட்டுவிட்டு இவனுக்கும் ஐந்து இட்லிகளை பார்சலாக வாங்கிவந்துவிட்டான். சாப்பிடுகையில் தொண்டையை அடைத்தது இட்லியா துக்கமா என்றே தெரியாத நிலையில் இட்லிகளை விழுங்கி வைத்தான் மணி..

அப்பிராணி முகத்தோடு அவனது அறையின் உடைந்த கண்ணாடியில் பார்த்து சந்தோஷமாக தலை வாரிக் கொண்டிருக்கும் ஈஸ்வரனைப் பார்த்து இவன் ஏன் பயப்படவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஈஸ்வரனையோ அவனது சரித்திரத்தையோ சரியாகத் தெரியவில்லை என்று அர்த்தம்.

ஊரில் அவனை ஈஸ்வரன் என்றோ ஃபுல்லு பெருமாளின் மகன் என்றோ சொன்னால்கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. மருந்தடி ஈசுவரன் என்றால் பச்சைப் பிள்ளை கூட சரியாக அவனை கைகாட்டிவிடும். மருந்தடிப்பது என்றால் நிலத்துக்கு மருந்தடிப்பது இல்லை. சாவதற்காக பூச்சி மருந்தைக் குடிப்பதைத்தான் அவன் ஊரில் மருந்தடிப்பது என்று கேனத்தனமாக சொல்லுவார்கள்.

இவனுக்கு நினைவிருந்த வகையில் ஈசுவரனின் கணக்கில் மொத்தம் பத்தோ பதினைந்தோ மருந்தடி சம்பவங்கள் உண்டு. சினிமாதான் எதிர்காலம் என்று இவன் ஊரைவிட்டு வெளியேறியபின் அந்த கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்பட்டிருக்கிறதோ என்பதை இவன் அறியமாட்டான்.

இவனுக்குத் தெரிந்து ஏழு வயதிலேயே ஈஸ்வரன் தனது கணக்கைத் துவங்கிவிட்டான். ஆனா ஆவன்னா போட்டு அவனுக்கு படிப்புக்கணக்கைத் துவக்கி வைத்த சலேத்து சார்தான் அவனது மருந்தடி கணக்கையும் முதன்முதலாக துவக்கி வைத்தார். அவன் மனதினுள் ஒளிந்திருக்கும் அந்த கொடூர மிருகத்தை அறியாமல் ஒரு நாள் வாய்ப்பாடு படிக்காததற்காக குச்சியை எடுத்து தொளுக்கு தொளுக்கு என்று தொளுக்கிவிட்டார். அந்த வயதில் நமக்கெல்லாம் பூச்சி மருந்துக்கும், இருமல் மருந்துக்கும் கூட வித்தியாசம் தெரிந்திருக்காது. இவனுக்கு என்னடாவென்றால் அதன் வித்தியாசம் தெரிந்திருந்ததோடு, குடித்ததும் அம்மாவிடம் வந்து மருந்தைக் குடித்துவிட்டேன் என்று தகவலும் சொல்லிவிட வேண்டும் என்ற டெக்னிக்கும் சரியாகத் தெரிந்திருந்தது.

அவனை காப்பாற்றிவிட்டார்கள் என்பது இருக்க, அன்றைக்கு நடைபெற்ற களேபரத்தில் சலேத்து வாத்தியாரின் தலை தப்பியது, அடிக்க வந்தவர்களின் காலிலெல்லாம் விழுந்து புலம்பிய அவரது மனைவியின் புண்ணியத்தால்தான். அத்தோடு டிரான்ஸ்பர் வாங்கிச் சென்ற அவர் அதற்குப் பின் எந்த மாணவனையாவது அடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

முதல் அட்டெம்ப்ட்டிலேயே ஒரு வாத்தியாரை ஊரை விட்டுத் துரத்தி துவக்கியவன் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை அந்த ஆயுதத்தைக் கொண்டே வீழ்த்தினான். இந்திராணியை அவன் காதலை ஏற்க வைத்தது. இவனுக்கு இவன் அப்பாவை ஒரு தொழில் செய்ய பணம் கொடுக்கச் செய்தது. அது நஷ்டப்பட்டபோது அந்த கடனை எல்லாம் அவரை அடைக்க வைத்தது.. இந்திராணியை கல்யாணம் செய்து கொள்ள அவன் வீட்டாரை சம்மதிக்க வைத்தது, அவளை விவாகரத்து செய்ய சம்மதிக்க வைத்தது, சொத்துக்களை இவன் பேரில் அவன் அப்பாவை மாற்ற வைத்தது. அதை எல்லாம் விற்றுக் குடித்தது, ஒரு திருட்டு கேசில் இருந்து போலீசே இவனை விடுவிக்க வைத்தது என்று இவனது சாதனைப் பட்டியல் மிக நீளம்..

இத்தனை இம்சைக்கு மற்ற வீடுகள் என்றால் செத்துத் தொலையட்டும் சனியன் என்று விட்டிருப்பார்கள். இவனது அதிர்ஷ்டமா இல்லை இவனை பெற்றவர்களின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. இவன் அவனது பெற்றவர்களுக்கு ஒரே மகன். அவனது அம்மா ஊரே பயப்படும் சண்டைக்காரி. இந்த இரண்டு கேடயங்களே அவனை எல்லா தற்கொலை முயற்சிகளில் இருந்தும் காப்பாற்றி வந்தன. அதிலும் எல்லா முயற்சிகளிலும் அவனது அம்மா முதல் முயற்சியில் பதறியது போலவே பதறுவாள். அந்த முறை அவன் மருந்தடித்ததற்கு காரணம் என்று யாரை கைகாட்டுகிறானோ அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிட்டுதான் மறு வேலை பார்த்தாள். இப்படியாக அவனது மரண விளையாட்டும் தொடர்ந்தபடியே இருந்தது.

சிறு வயதில் இவனது இந்த இம்சைக்கு பயந்து அவனை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ள நண்பர்கள் மறுப்பார்கள். அவர்கள் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்று இவன் ஒரு முறை ரோக்காரை கையில் எடுத்ததில் விளையாட்டே வேண்டாம் என்று அவர்கள் படிப்பின் பக்கம் பார்வையைத் திருப்பியது மட்டும்தான் ஈசுவரனின் புண்ணியக் கணக்கில் சேரும் என்று நினைத்தான்.

மணியைப் பொருத்த அளவில் ஈசுவரனை நெருப்பு மாதிரிதான் நடத்துவான். அதிகம் நெருங்கி விடாமலும் அதே நேரம் அதிகம் விலகி விடாமலும் பாதுகாப்பான தூரத்தில்தான் அவனை வைத்திருந்தான். என்ன செய்வது. சொந்தக்காரன் வேறு. அவனோடு பேச்சு வார்த்தையை முறித்துக கொள்ளவும் முடியாது. அப்படியாக ஒரேயடியாக விலகிவிடாமல் இருந்ததுதான் அவன் செய்த ஒரே தப்பு. அதுதான் இப்போது ஈசுவரனை அவனது சென்னை புகலிடத்தை தேடி வர வைத்துவிட்டது.

மணிகண்டனுக்கு இப்போது பைத்தியம் பிடிப்பது மாதிரி நிலைமை. புலி தன் இருப்பிடத்தை யாருக்கும் காட்டிக் கொடுக்காதாம். அப்படியே யாராவது அதன் இருப்பிடத்தை பார்த்துவிட்டார்கள் என்றால் இரவோடு இரவாக தன் குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு போய் ரகசிய இடத்தில் வைத்துவிடுமாம். இவனும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான். தான் தங்கியிருக்கும் இடத்தை ஊரில் எந்த நண்பனுக்கும் தெரியமல்தான் வைத்திருந்தான். நாசமாகப் போகிறவன் எப்படி இந்த விலாசத்தை கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. விலாசம் இருந்தால் கூட கண்டுபிடிக்க முடியாத இந்த சந்துக்குள், ஒரு பொந்துக்குள், ஒரு ஒடுக்குக்குள் இருக்கிற மொட்டை மாடி அறையை எப்படி சரியாகக் கண்டுபிடித்தான் என்றும் இவனுக்குத் தெரியவில்லை.

“என்ன மாப்ள.. கண்ணு கலங்கியிருக்கு..?” என்று திடீரென ஈசுவரன் கேட்டதும் இவன் திடுக்கிட்டு, “தெரியல மாப்ள. ரெண்டு நாளாவே கண்ணு இப்புடித்தான்..” என்று என்னத்தையோ சொல்லி சமாளித்தான். நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.

திடீரென ஈஸ்வரன் மணியைப் பார்த்துவிட்டு, “சரி மாப்ள.. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்புறேன். சாயந்திரம் திரும்பி வர்றதுக்கு அஞ்சு அஞ்சரையப் போல ஆயிரும். அதுக்கு லேட்டா ஆனாலும் கூட நீ கவலைப்பபடாத. இன்னைக்கு நைட்டு நாம ஒண்ணா சரக்கு சாப்புடுறோம். கறியும் கிறியுமா வெடுக்குன்னு சாப்பாடும் சாப்புடுறோம். எல்லாம் என் செலவு. என்ன..?” என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனான்.

இவனுக்கு ஒரே திகிலாகப் போய்விட்டது. என்ன வேலையாக வந்திருக்கிறான் என்று கேட்கவும் துணிச்சல் வரவில்லை. இங்கே எதாவது வேலையாக வந்து.. அந்த வேலை ஃபெயிலியராகி, இவன் பாட்டுக்கு மருந்தை குடித்துவிட்டு இந்த ரூமில் வந்து விழுந்துவிட்டால் இவனை எப்படி எந்த ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு அலைவது என்று தெரியவில்லை. அபூர்வமாக இது அவனது கடைசி அட்டெம்ப்ட்டாக இருந்துவிட்டால்..? ஈசுவரனின் அம்மா கையில் கத்தியோடு இவன் அறை வாசலில் உக்கிர தாண்டவம் ஆடுவதை நினைக்கவே இவனுக்கு வயிறு கலங்கியது. இயக்குநரை பார்க்க வேண்டிய நாள் வேறு.. எல்லாம் நம் தலைவிதி.. நடப்பது நடக்கட்டும். எல்லாம் விதி விட்ட வழி என்று நினைத்தபடி தனது ரெஸ்யூம் அடங்கிய பிளாஸ்டிக் ஃபைலைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.

**********

தி. நகரின் நெறிசலான சாலை ஒன்றிலிருந்து சட்டென உள் வாங்கும் ஒரு தெரு அது. அதை சந்து என்றும் கூட சொல்லலாம். ஆனால் உள்ளே நுழைந்துவிட்டால் அந்த சாலையின் பரபரப்பு ஏதும் இல்லாத அமைதியான தெருவாக இருந்தது. நண்பன் சொன்ன அடையாளங்களை வைத்து நேற்றே இவன் அந்த இயக்குநரின் ஆபீசை பார்த்து வைத்திருந்தான். அதனால் மூச்சு வாங்க வந்து நின்ற போது ஆபீசை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆபீசுக்கு எதிரே இருந்த அடர்ந்த தூங்குமூஞ்சி மரத்தின் நிழல் தந்த ஆசுவாசத்தோடு வியர்வையை துடைத்து, தலையை வாரி சரிப்படுததிக் கொண்டு நின்றான்.

நண்பன் கொடுத்த ஐடியாப்படிதான் திட்டங்கள் போட்டு வைத்திருந்தான். “அந்த ஆபீசுக்குள்ள போனா அந்த டைரக்டரோட அசோசியேட்தான் உன்னை டீல் பண்ணுவாரு மச்சி. அந்தாளு கைல நீ ரெஸ்யூம் குடுக்குறதும் ஒண்ணுதான், வழிவிடச் சொல்லி சுவத்துககு முன்னால நின்னு ஆரன் அடிக்கிறதும் ஒண்ணுதான். அநேகமாக நாம குடுக்குற ரெஸ்யூமை எல்லாம் அந்த அசோசியேட் உடனடியா குப்பைல போட்டுருவாருன்னு நினைக்கிறேன்..” என்று நண்பன் தெளிவாக சொல்லி இருந்தான். ஒரு போதும் அசோசியேட்டின் கையில் ரெஸ்யூமை கொடுக்கக்கூடாது. எப்பாடுபட்டாவது இயக்குநரைப் பார்த்து பேசி அவர் கையில் ரெஸ்யூமை கொடுத்துவிட்டால் வேலை முடிந்தது..

இப்படித்தான் அடுத்த பில்டிங்கின் மொட்டை மாடியில் வசித்த ஒரு நண்பனும் செய்திருந்தான். இவனை மாதிரியே டீக்கும், சிகரெட்டுக்கும் அலைவதும், ஏமாந்த புது அசிஸ்டண்ட் டைரக்டர்களை ஏமாற்றி ஆட்டையப் போடுவதுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவன்தான் அவன். ஏழெட்டு மாதத்துககு முன்பு இந்த இயக்குநரைப் பார்க்க அவர் ஆபீசில் தவமாய் தவமிருந்திருக்கிறான். நேரில் பார்க்க முடிந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவரது கையிலேயே ரெஸ்யூமை கொடுத்துவிட உடனடியாக அதைப் படித்துப பார்த்துவிட்டு அவனை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டுவிட்டார். அந்த படத்தில் வேலை பார்த்தவன் இப்போது அந்த இயக்குநரை மாதிரியே தாடி வைத்துக கொண்டு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லித் திரிகிறான். இவனை எல்லாம் மதிப்பது என்ன திரும்பிக்கூட பார்ப்பது இல்லை.

அவன் ஜெயித்த ரகசியங்களை கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டுதான் இவன் நண்பன் காட்டிய வழியிலேயே போவது என்று முடிவு செய்திருந்தான்..

இவனது திட்டம் ரொம்ப சிம்பிள். எதிரே தூங்குமூஞ்சி மர நிழலில் காத்திருப்பது. அந்த இயக்குநரிடம் ஒரு விநோத பழக்கம் உண்டு. டிஸ்கஷனின் நடுவில் எதாவது சீன் பிடிபடவில்லை என்றால் ஆபீசுக்கு வெளியே காம்பவுண்டுக்குள் சிகரெட் புகைத்தபடி நடந்து கொண்டே யோசிக்க ஆரம்பித்து விடுவாராம். இந்த மாதிரி ஒரு நாளைக்கு ஏழெட்டு முறை நடக்குமாம். சரியாக அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, அவர் சிகரெட்டைப் பற்றவைத்ததும் சடாரென்று அவர்முன் சென்று ரெஸ்யூமை நீட்டிவிட வேண்டும். முக்கியமாக அவரது ஒன்றுவிட்ட தாய்மாமா முத்தையாதான் இவனுக்கு தூரத்து உறவில் மாமா முறை என்பதை சொல்லிவிட வேண்டும். அழைப்பு முறையில் இவனும் இயக்குநரும் அண்ணன் தம்பி, பங்காளி என்பதையும் சொல்லிவிட வேண்டும். இதுதான் அவனை அவரிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக பயன்படப் போகிறது. இவன் காத்திருக்கத் துவங்கினான்.

~~~~

ஆபீசின் செக்யூரிட்டி உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருநதவன் இவனை கவனித்து கடுகடுத்த முகத்தோடு இவன் அருகில் வந்தான். அவனது முகத்திலேயே விபரீதத்தின் வாசனை அடிப்பதாக இவன் உணர்ந்தான்.

செக்யூரிட்டி, “என்ன சார் இங்க நிக்கிறீங்க?” என்று அதட்டலாக கேட்டவுடன்தான் எல்லா தடைகளையும் முன்கூட்டி யூகித்து திட்டம் போட்டவன், இப்படி ஒரு தடை இருப்பதை மறந்து போனதை உணர்ந்தான்.

படபடப்பை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றபடி, “சாரை பாக்க வந்தேன்..” என்றான்.

செக்யூரிட்டி, “சாரு புதுசா அசிஸ்டண்ட் தேவையில்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. வேணும்ன்னா உங்க டீட்டெயிலை என்கிட்ட குடுத்துட்டு போங்க. இங்க எல்லாம் நிக்கக்கூடாது..” என்றான்.

இவனுக்கு படபடப்பு கூடிவிட்டது. அசோசியேட் கையில் கொடுத்தாலே குப்பைக்குப் போகக்கூடிய சாத்தியக்கூறு உள்ள ரெஸ்யூம் செக்யூரிட்டி கைக்குப் போனால் இவன் முன்னாலேயே தெருவில் வீசப்படும் என்று இவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. எப்படியோ பதட்டத்தின் நடுவில் ஒரு ஐடியா ஃப்ளாஷ் ஆக, “சார்தான் வரச் சொல்லி இருக்காரு. போன் பண்ணுவாரு. அப்புறம் உள்ள வந்தா போதும்ன்னு சொன்னாரு..” என்று உறுதியாக ஒரு பொய்யை சொன்னான்.

செக்யூரிட்டி இவனை ஒரு கணம் ஊன்றி கவனித்தான். இவன் எப்படியோ பயப்படாமல் அவனது கண்ணை நேருக்கு நேர் பார்த்தான். அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் செக்யூரிட்டி பாட்டுக்கு உள்ளே சென்று நின்றுவிட்டான்.

இப்போது இயக்குநர் வெளியே வந்தாலும் இவனை எப்படி சமாளிப்பது என்று பதட்டமாகத் துவங்கியது இவனுக்கு.

அந்த பதட்டத்திலேயே நேரம் கழிந்தது. திடுமென இவன் எதிர்பாராத ஒரு கணத்தில் இயக்குநர் ஆபீசிலிருந்து வெளியே வந்தார். இவனுக்கு கைகால்கள் உடனடியாக அவர் முன் போகச் சொல்லி பதறினாலும் செக்யூரிட்டி இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றான். இயக்குநர் தன் பாக்கெட்டில் தேடி சிகரெட் பெட்டியை எடுத்தவர் அதிலிருந்த சிகரெட்டை எடுத்து வெற்று பாக்கெட்டை எறிந்தபடி பர்சையும் எடுத்து செக்யூரிட்டியிடம் எதோ சொல்ல செக்யூரிட்டி அவசரமாக வெளியே ஓடினான்.

அவசரத்தில் நன்றி சொல்ல இவனுக்கு எந்த தெய்வமும் ஞாபகம் வரவில்லை என்றாலும் ஏதோ ஒரு தெய்வத்துக்கு நன்றி சொன்னபடி மெல்ல காம்பௌண்டை நோக்கி நகர்ந்தான். மனதுக்குள் ஒரு ரைஸ்மில் ஓடத் துவங்கியது. டைரக்டர் சிகரெட்டைப் பற்றவைத்தபடி குறு நடை நடந்தபடி இருந்தார். இவன் கால்களின் நடுக்கத்தை மறைத்தபடி உள்ளே சென்று அவர் முன்னால் நின்றான். எதோ யோசனையில் இருந்தவர் இவனை என்ன என்பதுபோல பார்த்தார்.

இங்கு வருமுன் இந்த உரையாடலை இவன் மனதுக்குள் பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தான். ஒரு முறை என்ன பேசுவது என்று எழுதிப் பார்த்து மனப்பாடம் செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருந்தான். சும்மா பேசத்தானே போகிறோம் என்று மானசீகமான ஒத்திகையே போதும் என முடிவு செய்திருந்தான். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. பேச வார்த்தை எழவில்லை.

இயக்குநர், “என்னம்மா..? அசிஸ்டெண்ட் டைரக்டரா..?” என்று கேட்டார்.

இவன் கிளையிலிருந்து இரையைப் பார்த்து தலையாட்டும் ஓணானைப் போல தலையை மட்டும் ஆட்டினான்.

இயக்குநர் “இப்போதைக்கு வேக்கன்சியே இல்லம்மா. ரெஸ்யூமை உள்ள சக்திகிட்ட குடுத்துட்டுப் போ. தேவைப்பட்டா நானே கூப்புடுறேன்.” என்றார்.

இவனுக்கு படபடப்பாக ஆகிவிட்டது. “பத்திரிகைல எல்லாம் எழுதுவேன் சார். ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன்.. தேனிப்பக்கம்தான் சார் என் ஊரு..” என்று வாய்க்கு வந்ததை உளர ஆரம்பித்தான்.

பொறுமையோடும் புன்னகையோடும் தலையசைத்த இயக்குநர், “நல்ல விஷயம்தாம்ப்பா. ஆனா இப்ப என்கிட்ட தேவையான அளவு ஆட்கள் இருக்குறாங்களே.. உனக்காக யாரையாவது வேலைய விட்டு தூக்க முடியுமா என்ன..? சக்திகிட்ட குடுத்துட்டுப் போ. நான் கட்டாயம் கன்சிடர் பண்ணுறேன்.” என்றார்.

இவன், “நான் உங்க-“ என்று துவங்கி முத்தையா மாமா என்ற அடுத்த வார்த்தைக்குப் போகும்முன், ஒலித்துக கொண்டிருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தபடி உள்ளே நோக்கி கையைக் காட்டிவிட்டு போனில் பேசத் துவங்கிவிட்டார். இவனுக்கு வரம் கொடுக்க கூப்பிட்ட தெய்வம் முறத்தால் முதுகில் நாலு போடு போட்டு போகச் சொன்ன மாதிரி ஆகிவிட்டது.

அவ்வளவுதான். இதற்கு மேல் பேசினால் கோபப்பட்டுவிடுவார். தெரியும். சட்டென சாதுரியமாகப் பேசத் தெரியாத தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாக இருந்தது. நானும் உங்க மண்தான் சார். உங்களை மாதிரி மண் சார்ந்த கதைகளை காத்திரமாக என்னால் குடுக்க முடியும் என்று பெரிய பெரிய வார்த்தைகளைப் பேச முடியாமல் போனது ஏன் என்று அவனுக்கே புரியவில்லை. காலங்கார்த்தாலையில் ஒரு விளங்காதவன் முகத்தில் முழித்தால் இப்படித்தான் நடக்கும். இவனுக்கு காரணம் இல்லாமல் ஈசுவரன் மேல் கொலைக் கோபம் வந்தது. இயக்குநர் பேசியபடி நடந்து திரும்பியவர் அவன் இன்னும் அங்கேயே நிற்பதைப் பார்த்து கொஞசம் கோபமாக முறைத்தது மாதிரி இருந்தது. அவரது அசோசியேட் மூலம் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதைவிட தானே குப்பைத் தொட்டியில் ரெஸ்யூமை போட்டுவிடுவதே உத்தமம். ஆனாலும் இயக்குநர் முன்னால் ரெஸ்யூமை கொடுக்காமல் அப்படியே வெளியே போவது என்பது அந்த ஆபீசின் கதவை மூடி குறுக்கே கட்டையை வைத்து ஆணியடித்து சீல் செய்வது மாதிரி என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. இயக்குநர் பேசியபடியே அவனை உள்ளே என்று கைகாட்டவும், வேறு வழியே இல்லாமல் உள்ளே போனான்.

ஒரு டேபிளில் ஒருவர் உட்கார்ந்து போன் பேசியபடி இருந்தார் இவன் தயங்குவதைப் பார்த்ததும் போனில் ‘ஒரு நிமிஷம்..’ என்று சொல்லிவிட்டு, இவனிடம், “என்னம்மா..?” என்றார். அந்த ஆபீசில் எல்லாரும் இயக்குநரை மாதிரியே பேசுவார்கள் போல. இவன் எரிச்சலை அடக்கியபடி, “அசிஸ்டண்ட் டைரக்டர் சார்.. டைரக்டர் உள்ள சக்தி சார்கிட்ட ரெஸ்யூமை குடுக்கச் சொன்னாரு.. “ என்றான்.

“நாந்தான் சக்தி. இங்க குடு” என்றபடி கிட்டத்தட்ட அவனிடமிருந்து ரெஸ்யூம் இருந்த கவரை பிடுங்கிக் கொண்டு மறுபடி போனில் பேச ஆரம்பித்து விட்டார். இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவரிடமாவது கொஞ்சம் நம்பிக்கையான சொற்களை பேசி இம்ப்ரெஸ் செய்யலாம் என்றால் இவரும் போனில் பேசியபடி இருக்கிறார். கண் முன்னால் நம்பிக்கையின் கடைசி பனிக்கட்டியும் உருகி ஆவியாகிப் போனதை உணர்ந்து திரும்ப எத்தனித்தபோது, “யோவ் மாப்ள.. இங்க என்னய்யா செய்யுற..?” என்ற குரல் கேட்டு விதிர்விதிர்த்துப போனான்.

அதே வெள்ளந்தி சிரிப்புடன் ஈசுவரன் உள்ளே இருந்து வந்து கொண்டு இருந்தான். இவனுக்கு என்ன பேசுவது என்றே குழப்பமாகிப் போனது.

ஈசுவரன், “இங்கதான் நீயும் வந்தியா..? சொல்லி இருந்தா சேந்தே வந்திருக்கலாமே மாப்ள.. என்ன விஷயம்ய்யா..?” என்றான். என்னமோ இவனை விட பெரிய மனிதன் மாதிரி தொனியில் அவன் பேசியது இவனுக்கு கடும் எரிச்சலாக இருந்தது. யாரும் இல்லாமல் இவனும் அவனும் மட்டும் இருந்து, அவன் மருந்தடிப்பான் என்ற பயமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரே குத்து குத்தி அவன் மூக்கை இவன் உடைத்திருப்பான்.

ஈசுவரன், “என்ன.. மாம்சை பாக்க வந்தியா..?” என்றான். அவன் மாம்ஸ் என்று சொன்னது இயக்குநரைத்தான் என்று புரிந்தாலும் இவனால் நம்பவே முடியவில்லை.

“இல்ல மாப்ள.. அவர்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேருறதுக்காக..” என்பதை அவனிடம் இவன் ஏன் சொன்னான் என்று தெரியவில்லை.

ஈசுவரன் முகம் பிரகாசமாக, “மாம்சுகிட்ட அஜிஸ்டண்டா சேரவா..? எங்கிட்ட சொல்லக்கூடாதா மாப்ள..? வாய்யா..” என்று இவனை தரதரவென இழுத்தபடி வெளியே வந்தான். இயக்குநர் உள்ளே நோக்கி வந்து கொண்டிருந்தார். ஈசுவரன், இவனை இயக்குநர் முன்னால் நிறுத்தி, “மாம்சு.. இது யாருன்றீங்க..? உங்களுக்கு தம்பிதேன் மாம்சு.. பயங்கரமான படிப்பாளி. புத்தகத்துல எல்லாம் நெம்ப எளுதுவாப்ல. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காப்ல.. அது என்ன படிப்புய்யா மாப்ள..?” என்றதும் இவன் பதட்டத்துடன், “எம்பிஏ..” என்று மட்டும் சொனனான்.

ஈசுவரன் நிறுத்தாமல், “உங்ககிட்டதேன் அஜிஸ்டண்டா சேரணும்ன்னு வந்தாப்ல போல மாம்சு.. என்ன சேத்துக்க மாட்டீங்களா..?” என்றான்.

இயக்குநர் பெரிய புன்னகையுடன், “அப்புடியா..? பத்திரிகைல எல்லாம் எழுதியிருக்கியா..?” என்று இவனிடம் கேட்கவும், “ஆமாம் சார்.. நிறைய கவிதை எழுதியிருகேன். ஷார்ட் ஃபிலிம் கூட பண்ணியிருக்கேன். சக்தி சார்கிட்ட குடுத்திருக்கேன் சார். வேணா போயி வாங்கிட்டு வரவா..?” என்றான்.

வேண்டாம் என கையமர்த்தியவர், “சிஸ்டத்துல வேகமா டைப் பண்ணுவியா..? தமிழ் டைப் தெரியுமா..?” என்றார்.

இவன் சந்தோஷமாக, “ரொம்ப ஃபாஸ்ட்டா டைப் பண்ணுவேன் சார். டிடிபி தெரியும். டைப்பிங் படிச்சு தமிழ் லோயர் பாஸ் பண்ணியிருக்கேன்..” என்றான்.

“இப்புடியே உள்ள வந்து ஜாயின் பண்ணிக்க. எழுதி வச்ச சீன் பேப்பரை எல்லாம் எடுத்து உடனடியா டைப் பண்ண ஆரம்பிச்சிரு..” என்றவர் ஈசுவரன் பக்கம் திரும்பி, “போதுமா மாப்ள..?” என்று புன்னகையுடன் சொல்ல. ஈசுவரன் பெரிய புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டு, “சந்தோசம் மாம்சு.. சரி.. உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். அம்பத்தஞ்சுன்னா முடிச்சிறலாம். என்ன சொல்றீங்க..?” என பேசியபடி உள்ளே போனான்.

இவன் நடந்ததை நம்ப முடியாமல் அப்படியே திகைத்து நின்றான்.

******
இரவின் கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு படுக்கப் போகும்முன் ஈஸ்வரன் சொன்னான். “அந்தப் புள்ள வேற கலியாணம் பண்ணிக்கிருச்சு மாப்ள. ஆத்தா செத்துப் போயிருச்சு. அப்பா மட்டும் தானா பொங்கி சாப்புட்டுக்கிட்டு தனியா கெடக்காரு. ரியல் எஸ்டேட்டதான் பொழப்புன்னு ஆயிருச்சு. நல்லா சம்பாதிக்கிறேன். யாருக்குன்னுதான் தெரியல மாப்ள..”

சொல்லிவிட்டு உறங்கப் போய்விட்டான். இவன்தான் வெகுநேரம் உறங்காமல் விழித்திருந்தான்.

***********

Print Friendly, PDF & Email

1 thought on “செத்து செத்து விளையாடுபவன்

  1. ஈஸ்வரனைப் பத்தி மாம்சுக்கும் நல்லாத் தெரியும் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *