சூரிய கிரஹணத்தெரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 11,566 
 
 

ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

“பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு சாப்புட்ட அனுபவம்தான். ஆனா இங்கேனா எவ்ளோ சோறு,! எம்மாம் பெரிய கோழித்துண்டு, அட, இதுதான் லெக்பீஸா? நிறைய கொழம்பு, இன்னும் வெள்ளிரிக்காயும், அன்னாசியும் போட்ட, இனிப்பும் புளிப்புமான மேங்கறி, அப்புறம் தயிரில ஊறவச்ச என்னமோ ஒரு அயிட்டம், யப்பா, இன்னா ருசி, இன்னா ருசி, நாக்கெல்லாம் தேனா சொக்கிப்போச்சு போ!”

ராமக்காவைப் போலவே தான், ஊரிலிருந்து வந்திருந்த மத்த பொண்ணுங்களுக்கும் கூட, சாப்புட்டு முடிச்ச உடனேயே முகத்தில அப்படியொருபிரகாசம்.

”சும்மாவா சொன்னாங்க? நல்லா சாப்பிடணும்னா நாடு விட்டு போ ! நாக்கு வழிக்கணும்னா உள்ளூரிலேயே கிடன்னு,!”

அன்புரோஜாவுக்குத்தான் காலையிலேயே வயிறு புட்டுக்கிச்சு. சிங்கப்பூருக்கு வந்திறங்கியதிலிருந்தே அதுக்கு வயித்தாலெ போயிட்டிருக்கு.. பின்னெ என்ன ?வயிறா? இல்ல வண்ணாந்தாழியா?

பக்கத்து சீட்டுக்காரி வேண்டாம்னு சொன்ன சாப்பாட்டையும் கூட கேட்டுவாங்கி, இவளே ஃபுல் கட்டு கட்டினா? போதாமைக்கு, கப் கப்பா கேட்டு கேட்டு, காப்பியும், ஆரஞ்சுமா, குடிச்சிருக்கா ?கம்பங்களியும் கஞ்சியுமா குடிச்ச வயிறுக்கு, திடீர்னு, நெய்ச்சோறும் ,பன்னும், பட்டரும் ,சாஸும் தேனுமா, உள்ளே போனதும் புட்டுகிடுச்சி. என்னத்தை சொல்ல,? கூட்டிவந்த அண்ணாத்தைக்கே, பொறுக்கலை. நல்லா வுட்டு கடாசீட்டாரு. ஓசியில கிடைக்குதுன்னு இப்படியா கொட்டிக்கறதுன்னு கண்டமேனிக்கு திட்டிப்புட்டாரு. ஆனா, பாருங்க, திட்டி கொஞ்ச நேரத்துக்கெல்லாம், ”இந்தா இஞ்சிச்ச்சாறு, ! குடிச்சிட்டு கொஞ்ச நேரம் கம்முனு கிடன்னு,பெரிய கப்பு நிறைய இஞ்சிச்சாறு கொண்டுவந்து நீட்டினப்ப, அன்புரோஜாவுக்கு மட்டுமில்லே, பாத்துக்கிட்டிருந்த எங்களுக்கே கண்ணு கலங்கிடிச்சி. அண்ணாத்தையும் மனுஷன் தானே? என்ன இருந்தாலும் அவருக்கு மட்டும் மனசு கேட்குமா? வெளியூரிலேருந்து வந்திருக்கற நாங்கள்லாம் இனி அண்ணாத்தையோட பொறுப்புதானே? திட்டினாலும் மொட்டினாலும் இனி அவரு காபந்திலதானே நாங்க இருக்கப்போறோம்? அவரு கோவப்படறதிலே என்னா தப்பு? இந்த அன்பு ரோஜாவுக்குத்தான் அறிவு வேணாம்?. தா ! ரெண்டுவாட்டி பாத்ரூம் போயிட்டு வந்தப்புறம் அன்பு ரோஜா முகமும் தெளிஞ்சிடிச்சி, வவுரு வழிக்கு வந்திடிச்சிக்கான்னு சிரிக்கிறா, பாரேன், என்னத்தை சொல்ல ?

”இந்தா சாம்பார் சாதம் ! சாப்பிட்டுக்க“ ன்னு அண்ணாத்தைதான் ஒரு பொங்குசு திருப்பியும் கொணாந்து நீட்டினாரு. அன்புரோஜாவுக்கு மூஞ்சியெல்லாம் சிரிப்பும் வெக்கமும்தான். சும்மா சொல்லக்கூடாது. அண்ணாத்தை பாவம், நல்லமனுஷன் தான். அவரு மனசு கோணும்படி இங்கே யாருமே நடக்கக்கூடாது,ன்னு அப்பவே தங்கம்மாக்கா எங்களுக்கெல்லாம் ஆர்டர் போட்டுரிச்சி.. அட, தங்கம்மாக்கா கதையை கேட்கலையே? எங்கேயோ விருத்தாச்சலம் பக்கமாம்.குடிச்சு குடிச்சு கொடலு வெந்துபோயி அவுங்க வூட்டுக்காரர் பூட்டாராம். இருக்கற ரெண்டு பசங்கள வளக்க அக்கா பாக்காத வேலையே இல்லையாம். கேட்டா அந்த நாத்தம் புடிச்ச கதையெல்லாம் உனக்கெதுக்குடி? ன்னு கோவப்படும்..புடவ, துணிமணி, கில்ட்டு நகைங்கன்னு வருஷத்துக்கு ரெண்டு வாட்டி மலேசியாவுக்கு துணி விக்கப்போறியான்னு, காதர் மாமான்னு யாரோ அக்காவை கேட்டிருக்காங்க. அக்காவும் சந்தோஷமா தலையை ஆட்டியிருக்கு. ஆனா லாபமொண்ணும் அப்படி பெரிசா இல்ல. அப்பைக்குத்தான் இந்த ரத்தினம் அண்ணாத்தை, சிங்கப்பூருக்கு வறியான்னு கேட்டிருக்காரு. அக்கா மறுகேள்வி கேட்காம வந்திடிச்சி. பின்னே என்ன? சிங்கப்பூருக்கு இன்னா எல்லாரும் அப்படி சுளுவா போயிட்டு வந்துடமுடியுமா? ’இன்னா சோலிண்ணே ? ன்னு கேட்டப்ப,”ஏன் சோலி என்னான்னு சொன்னாத்தான் வருவியோ? ன்னு அண்ணாத்தை நக்கலா கேட்கவும் அக்கா கப்புனு வாயைப் பொத்திக்கிடிச்சி.பின்னே, என்ன, நாம இருக்கற பவுசுக்கு கேள்வியெல்லாம் கேட்கலாமா?. என்னா கூட்டர, கழுவற வேலையாத்தான் இருக்கும்? இருந்தா என்னா? புள்ளிங்கள ஆத்தா கிட்டே வுட்டுட்டு நிம்மதியாவாவத இருக்கலாம்ல., !னு தங்கம்மாக்கா அக்கடான்னு பொறப்பட்டு வந்துடுச்சி. காயலா கிடக்கற பெரிய ஆயி வீட்டுக்கு போனப்பதான் தங்கம்மாக்கா பழக்கம். வீட்டுக்கதை, என் நாதியத்த கதையெல்லாம் சொல்லி ஆத்திக்கிட்டப்பதான் அக்கா, சிங்கப்பூருக்கு வாறியாடின்னு கேட்டுச்சி. ஒருநிமிஷம் மாரியாத்தாவே எதிரில் நின்னு வரம் கொடுத்தாப்புல குப்புனு கண்ணிலே தண்ணி வந்துடிச்சி போ ! .என்னா ஏதுன்னு கேட்க எந்த பட்டுக்கெடப்பான் இருக்கா? ஆயியா அப்பனா தட்டுக்கெட ?கூட்டிட்டு ஓடி வந்த பேமானி அடிக்காத நாளில்லே ! பேசாத பேச்சில்லே , கண்ணுமுன்னாலேயே கூத்தியாளைக்கொண்டு வந்து கொட்டமடிச்ச நாதேறிப்பய தானே? எத்தைத்தின்னா பித்தம் தெளியும்னு, வக்கத்துப் போயி நின்ன நேரத்திலதானே, தங்கம்மாக்கா காராம்பசு கணக்கா கூட்டியாந்துச்சி. மொதல்லே அண்ணாத்தை ஏத்துக்கலைதான். ஆனா நேரில என்னிய பாத்தப்புறம்தானே பேசாம கூட்டியாந்துடுன்னு சம்மதிச்சாராம். இனிமே என்னா? நாலுகாசு சம்பாரிச்சு,காசு சேத்துக்கிட்டு, ஊர்க்குப்போயி தல நுமுந்து நடக்கணும். ச்சீ, ன்னு பாத்த நொங்க வாயிப்பசங்க முன்னாடி, ராமக்காவா, வா தாயி, ன்னு, மருவாதையா கூப்புட வைக்கணும். எல்லாம் மாரியாத்தா பாத்துக்கிடுவா? “இன்னுமா தூக்கம்? எங்கே உங்க பாஸ்போட்டுன்னு,” வந்த சத்தத்திலே அன்பு ரோஜாதான் கிட்டே வந்து போட்டு உலுக்குது.

“தே, வுடு, வுடு,“ன்னு மொணவிக்கிட்டே, கண்ணைத்திறந்தா, “என்னா, பிரியாணி தின்ன மயக்கம் இன்னும் தெளியலையா ?ன்னு நக்கலா சிரிச்சுக்கிட்டே, அண்ணாத்தை நிக்கிறாரு. அட, ! அண்ணாத்தை மட்டுமல்ல, அவருகூட யாரோ இன்னும் ஒரு ஆம்பளையாளு கூட நின்னுக்கிட்டிருக்கார். ”சீ, ச்சீசீ, !,ராமக்காவுக்கு அப்படியே கூசிப்[போச்சி .வாரிச்சுரிருட்டிக்கிணு, எந்திரிச்சவகிட்டே, புடவையை நல்லா இழுத்துப்போத்திக்கினு நின்ன சரோசாதான், காதுகிட்டே வந்து, ” யக்கா, பாஸூபோட்டுன்னு” குசுகுசுக்க, அப்பத்தான் விவரம் புரிஞ்சுது. , சட்டுனு பொட்டியைத் தொறந்து, பவ்யமாய் எடுத்துக் கொடுக்க, அப்படியே அஞ்சு பேர்கிட்டேயும் பாசுபோட்டை வாங்க்கிக்கினு, அண்ணாத்தை திரும்பியும் பாக்காம போயிட்டாரு. கூட வந்த ஆளுதான் தலையைக்குனிஞ்சுகிட்டே, போவும்போது, மெல்ல ஓரக்கண்ணாலே பாத்துக்கினு போவுதுன்னு, மஞ்சு சொல்லிச்சி பாவம் அண்ணாத்தை, அவருக்கு எவ்வளவு வேலையோ, ! தற்குறிங்க நம்மகிட்டே பேசிக்கிட்டிருக்கிறதா வேலை? “இன்னாக்கா, அண்ணாத்தை , நம்மள கண்டுக்கவே இல்லியே?” ன்னு, ராமாயிதான் மொணவுறா! ”தே, நம்ம கிட்டே உக்காந்து ஊட்டுநாயம் பேசறதுதான் அவுங்களுக்கு வேலையா?அக்கறையா டிக்கிட்டுபோட்டு, ராணிகணக்கா , ஏரோப்ப்லேன்ல வச்சு கூட்டியாந்து , வந்தன்னிக்கே, பிரியாணியும், கறியுமா, வயிறுபொடைக்க சாப்பாடு போட்டு வச்சிக்கிறது பத்தாதாங்காட்டியும்,, இன்னும் நம்ம ஊத்தவாயிகிட்டே உக்காந்து கதை பேசாததுதான் குத்தமாப்போச்சாக்கும் ?” தங்கம்மாக்கா சீனிச்சரமாய் வெடிக்க, என்னமோ தத்துவஞானியிடமிருந்து ஞானோபதேசம் கேட்டாற்போல், எல்லோருமே கப் சிப்பென்று அடங்கிப்போனார்கள்.

ராத்திரிக்கும் பொட்டலம் வந்துச்சி. சாம்பார் சாதம் . அதுவும் கூட ருசியாத்தான் இருந்திச்சி. ஊறுகாயும், மோரு மொளவாயும் , அப்ளப்பூவும் , கடிச்சுக்கினு, சாப்டப்ப, அதும் ஒரு கணக்கில ருசியாத்தான் இருந்திச்சி. அல்லாருமே சாப்ட்டவுடனே படுத்துட்டோம்.. சொல்லி வச்சாப்பில, மறுநாள் காலையிலேயே முழிப்பு வந்துடுச்சி. இட்டிலியோ, தோசையோ, , இல்லை, சிங்கப்பூர் பலவாரம் ஏதாச்சியும் தான் வரப்போகுதுன்னு ஆசையாக் காத்துக்கினு இருந்தோம். மணி எட்டு போயி பத்து ஆச்சி. நடுப்பகல் போயி மத்தியானத்துக்கும் மேலேயே ஆயிப்போச்சி.

ஒரு வா காப்பித் தண்ணி,கூட இன்னும் கிடைக்கலை. அண்ணாத்தையை இந்தப் பக்கமே காணோமே, , நம்ம வேலைக்காக எங்கே எல்லாம் அலைஞ்சுகிட்டிருக்காரோ ? வரட்டும், அண்ணாத்தை வற வரைக்கும் நாம எல்லாம் பொறுமையாத்தான் இருக்கணும்னு,சொன்னாலும தங்கம்மாக்காவுக்கே மூஞ்சி சரியா இல்லை.

ராத்திரி 10 மணிக்கு மேலே ஆனப்புறமும், ஒரு ஈ காக்கா தேடி வரலை. மறுநாளும் மத்தியானம் வரைக்கும் இதே கதை நீடிக்கவும், அன்பு ரோஜா அளுவத் தொடங்கிடிச்சி. மஞ்சுவும் ராமாயியும் வெளியே காட்டிக்கலையே தவிர அவுங்க மூஞ்சியும்விளுந்து தான் போச்சு. அப்பத்தான் திடீர்னு தங்கம்மாக்கா கீழே லாட்ஜ்காரரைப்பாத்துட்டு வாறேண்டின்னு, “புயலாப் புறப்பட்டுப் போச்சி. போனவ ஒரு மணிநேரமாயும் திரும்பி வராததைக் கண்டு,ராமாயிதான் நான் வேணும்னா போயி பாத்துட்டு வரட்டுமாக்கான்னு கேட்குது. போனா !போனா! போன இவளையும் காணோம்., ”யக்கா, யக்கா, கீழே தங்கம்மாக்கா லாட்ஜ்காரர் கிட்டே ஏதோ கோவமா, கத்தி கத்தி அளுதுகிட்டு கீது., !ன்னு தட தடன்னு ஓடியாறா ராமாயி.

”மெய்யாலுமா. ,?” அதிர்ந்து போய் இவர்கள் நிற்கும் போதே ஆவேசமாய் உள்ளே நுழைந்த தங்கம்மாக்கா, ”மோசம் போயிட்டோமேடி பொண்ணுங்களா?“ ன்னு நெஞ்சிலடித்துக்கொண்டு அழத்தொடங்கிவிட்டாள்.

ராமக்காவுக்கு பெருங்கவலையாப்போச்சு. என்னாச்சோ, ஏதாச்சோ, ங்கறதைவிட, அய்யோ,பசி, ஆம், பசியேதான்,கண்ணு மண்ணு தெரியாம அப்படி பேயாய் பசித்தது. முதல்ல வவுத்துக்கு ஏதாச்சும் குடுத்துட்டு அப்புறமா இந்தக்கா பிலாக்கணத்தை வச்ச்சுக்கக்கூடாதா?

பசிவேகத்தில் அவளுக்குக் கண்ணீரும் வந்தது. கோபமும் வந்தது. நேத்து ராத்திரி சாப்பிட்ட சாம்பார் சாதம் தான். ஒரு பொளுது, ஒரு நாளாச்சி,. தொண்டை காஞ்சு, வயிறு காஞ்சு, நாடி நரம்பெல்லாம் நொங்கு நொங்குங்குது. அல்லாருக்குமே யக்காவைப் பாக்கப்பாக்க அளுவையை அடக்கமுடியலை. பொக்குன்னு அளுவாச்சியை நிறுத்திட்டு, ,தங்கம்மாக்கா ,சாமி வந்தாப்பில, கேட்குது. ”கைக்காசு எவ்ளவுடி கீது? “ .50, 100, 150 ன்னு ஊருக்காசை அவுங்கவுங்க கையிலிருந்ததை அப்படியே குடுத்துட்டோம் . மறுக்காவும் வேகமா வெளியே போன தங்கம்மாக்கா ஒரு மணிநேரம் களிச்சு வந்தப்ப யக்கா கையில புளியோதரையும், வடையும், கொஞ்சம் சமோசாவும் இருந்திச்சி, நம்மூரு காசுக்கு இது கிடச்சதே பெரிசுன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுங்கடி,ன்னு யக்கா குடுத்தப்ப, பசியில கண்ணு தள்ளிப்போயிருந்த அத்தினிபேரும், பாஞ்சு பாஞ்சு சாப்பிட்டோம். விக்குன்னு விக்கல் வந்தப்ப, பைப்பில் உள்ளதண்ணியைப் புடிச்சு குடிங்கடி, ன்னு அக்கா சொல்லிடிச்சி. அட, அக்கா ஒண்ணியுமே துண்ணலியே,ன்னு, மிச்சமிருந்த ரெண்டு வடையைக் குடுத்தப்ப, ஊ, ன்னு ஊளையிடுற மாதிரி அப்படி அளுவுது.

”இன்னாக்கா விசயம்,” ? சொல்லிட்டு தான் அளுவேன்னு,”மஞ்சு தான் அதட்டுது, “அந்தக் கண்றாவியை இன்னாத்தைடி சொல்ல? அந்தப்பாவி, பட்டுக்கிடப்பான், சரியான டுபாக்கூராம், நம்மல ஏமாத்திட்டாண்டி. நம்ம பாசுபோட்டையெல்லாம் புடிங்கிட்டுப்போனவன் போனவன் தானாம். இனிமே வரவேமாட்டானாம். அந்த லாட்ஜ்கார தம்பிதான் சொல்லிச்சு, இனிமே எப்படி திரும்பிப் போகப்போறோம்னு நினைச்சாத்தான் ஈரக்குலையே நடுங்குது”

ஆனால் ஈரக்குலை ஆடாமலிருக்க மறுநாள் காலையிலேயே,லாட்ஜ்கார தம்பி வழி சொல்லிக்கொடுத்தார்.. பாஸ்போட்டு பிடுங்கிட்டுப்போனவனும் லாட்ஜ்கார தம்பியும் கூட்டுக் களவாணிகள்னு, பாவம் இந்தப் பொண்டுகளுக்குத் தெரியாதுன்னு,”கீழே கூட்டற பயலுவ பேசிக்கிட்டது யாருக்குத் தெரியும்? பரோட்டாக்கடையிலெ மங்கு கழுவ, பூக்கடையில பூக்கட்ட, காய்கறிக்கடையில காய் விக்க, அப்பாலெ சீனனோட ‘சிக்கன் றைஸ்’ விக்கற கடையில, கக்கூசு கழுவன்னு, ஒவ்வொருத்தியையும் ,பார்ட் டைம் வேலைக்குன்னு காலையிலேயே லாட்ஜ்கார தம்பி அனுப்பிவைச்சிட்டாரு. ஆனா கூட்டத்திலெ சிறிசா பாக்க அளகா இருந்த,ராமக்காவையும், மஞ்சுவையும் மட்டும் இந்த வேலைக்கு அனுப்பலை. கொஞ்சம் கில்ட்டு நகைகளை குடுத்து , தேக்காவில் அங்கங்கே உக்காத்திவச்சு, வித்துட்டு வரச்சொன்னார்.கிடைக்கற காசில லாட்ஜ் தம்பி பாதி எடுத்துக்கினு மீதியை நம்மளுக்கே குடுத்துடும். ஏதோ சாயந்திரத்துக்குள்ள , [அட, அது இன்னாடி ரோடு அது –?] இழவுவீடு மாதிரி கீற லாட்ஜுக்கு திரும்பும்போது, அன்னாட தினக்கூலி கிடைச்சதிலெ சந்தோசம் தான். ஆனா வந்ததிலிருந்தே ராமக்காவுக்கும் மத்தபொண்ணுங்களுக்கும் தான் ஆச்சிரியம், அது இன்னாடி, தேக்காவுல பாத்த மத்த தெருவிலயெல்லாம் அப்படி நல்லா தானே கீது. ஆனா இந்த ரோட்டில மட்டும் வீடுங்க அல்லாம் ஏன் இப்படி அவிஞ்சு போன மாறி கீது.ஆளு நடமட்டம் கூட ராத்திரிக்குமேலதான் .அட, சிங்கப்பூரிலெ இப்புடி கூடவா ரோடும் லாட்ஜும் இருக்கும். ஹ்ம்ம். கிராமத்தில கூட பாக்க முடியாத நாத்தம் புடிச்ச பெரிய பெரிய கரப்பான் பூச்சிங்களைப் பாக்கவே குமட்டிக்கினு வருது. , இந்த தெருவுக்குப்பேரு தான் இன்னா ? வாயிலேயே நுழைய மாட்டேங்குதே? வீரபாண்டிக்கு அன்னிக்குன்னு நல்ல வருமானம் , போ. ! மனசு சும்மா ரெக்கை கட்டிக்கினு பறக்கணும் போல அப்படி பறவாப் பறக்குது. ஒரு பாஸ்போட்டுக்கு 300 வெள்ளின்னு வித்தாலும் , இன்னிக்கு கலக்‌ஷன் ஜோர்தான்.ஆத்திரம் அவசரத்துக்கு 500 வெள்ளிகூட போகும். முத்தண்ணன், பாசுபோட்ட வித்துக்கொடுத்ததுக்கு நல்லாவே கவனிச்சுக்கிட்டாரு. என்னா? கொஞ்சம் மேலே ஊத்திக்கினா வானம் ரெட்டையாத்தெரியுது.

நெலாவைப்புடிச்சு பாக்கிட்டுல போட்டுக்கறாப்பில கிட்ட வந்து ஆலவட்டம் போடுது. ஆனாலும் அல்லாமே நல்லா ஷோக்காத்தான் கீது!. லிட்டல் இண்டியா எம். ஆர். டி, கிட்டெ வந்தப்ப, குடிச்ச மப்பு சும்மா அப்படியே ஆளைத் தூக்குது.

”அட, இங்கே பார்யா ! மிட்டாய் கலர் பொடவையில, மட்டரக பவுடர் தீற்றிக்கினு, உள்பாடி தெரியற மெல்லிசு ப்லவுஸு போட்டுக்கினு, உதட்டை நாவால் சுளட்டி, செயற்கையாய் சிரிச்சுக்கினு, சும்மா கில்மா கணக்கா நிக்கற பொண்ணைப் பார்த்தப்ப சிரிப்பு வந்து டுச்சி. யாருடா இது ? புச்சா கீது ? ! . சற்று முன் சாப்பிட்ட ஆட்டுக்கறியும் உள்ளே இறங்கிய சரக்கும், கொஞ்சம் தள்ளாட வைத்தாலும், உடம்பு இருந்த மத மதப்புக்கு கொஞ்சம் டாவடிச்சா தான் இன்னான்னு, மெல்ல நெருங்கினான் அந்த கில்மாவை. ”இன்னா ரேட்டு,” ,ன்னு அசிங்கமாய் இளித்துக்கொண்டே நெருங்கியவன் தீயை மிதித்தாற்போல் அப்படியே திரும்பி நடந்து விட்டான். “ஏன் , வோணாமா? உம் மனசு கோணாம நடந்துக்குவேன் , ஒருக்கா வந்துட்டுப்போயேன், ! ன்னு அந்தப்பெண் பின்னாலேயே ஓடிவர, குடித்த மப்பெல்லாம் இறங்கிவிட்டது. வீர பாண்டியால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. புடவையை இழுத்துப்போர்த்திக்கொண்டு,” அண்ணாத்தே”ன்னு பாஸ்போட்டை எடுத்து நீட்டிய அந்த அப்பாவிப் பெண்ணா இவள். முத்தண்ணனோட போன என்னை இந்தப்புள்ளைக்கு ஞாபகமில்லே. ஆனா, எனக்கு, — அய்யோ, கிராமத்தில தங்கச்சி குப்பு கூட இப்பிடித்தானே கூப்புடும் ? மனசெல்லாம் நெருப்பா எரிய, “இந்தாம்மா’ ன்னு , 50 வெள்ளியை எடுத்து நீட்ட, ”சும்மா எதுக்கு அண்ணாத்தே, ஊரிலேயே நெத்திவேர்வை நிலத்தில் விழ பாடுபட்டாத்தான் காசு. அந்தக்காசுலதான் கஞ்சியை குடிச்சிருக்கேன், சும்மான்னா எதுக்கு அண்ணாத்தே, ?என்ன பாவம் செஞ்சோமோ, இப்படி வந்து சீரளியறேன்? ’ ”நீ மட்டும் தனியாவா —-?” “அஞ்சு பேரு வந்தோம் அண்ணாத்தே! எங்க பாசுபோட்ட புடிங்கிட்டு,எங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட்டான் எங்களைக்கூட்டிட்டு வந்த பேமானி.. அங்கங்கே கிடச்ச வேலைய செஞ்சு வயிறு கழுவிட்டிருந்த என் சோட்டுப்பொண்ணுங்க ரெண்டு பேரை போலீசில புடிச்சிட்டுப்போயிட்டாங்க,! அண்ணாத்தே, வா, அண்ணாத்தே, ” என்று கையைப்பிடித்து ராமக்கா கூப்பிட, லேசாக பீர் வாடை ராமக்காவிடமிருந்து வருவதை வீரபாண்டியால் உணரமுடிந்ததும் ஏனோ ஒரு கணம் நின்றுவிட்டான்., அமிலம் கொட்டினாற்போல் அந்தக்கைகளை விலக்கிவிட நினைத்தாலும் உள்ளே போன சரக்கும் உடம்பு தினவும விடவில்லை . மப்பில் தள்ளாடிக்கொண்டே ராமக்காவோடு கூட நடந்தான்.

புடவையை தொடைவரை வழிச்சுக்கினு, ஸ்டெளட்டை ஒரு வா குடிச்சிக்கினு, முத்துஸ்கரி, ஸ் ல, வாங்கின பெரியமீன் தலையை சப்பி, ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டிருந்த அந்தப்பொம்பளையின் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. குப்புனு ஸ்டெளட்டோட மப்பில சிரிப்பு சிரிப்பா வருது. ”தா, இன்னா, இப்படி தரையில உக்காந்து தின்னுக்கிட்டிருக்கே, போயி ரூம்பில உக்காந்து தின்னா என்னா கேடு, ன்னு லாட்ஜகாரன் அதட்ட, “அட, சர்தான் போடா , நான் எங்கே உக்காந்து துண்னா உனக்கென்னடா? ,இல்லாங்காட்டியும் இது இன்னா மவாராசன் அரமனையா? குந்த வச்சு துகிலுரியற நாத்தம் புடிச்ச கேப்மாறி இடம்தானேடா? நம்பவச்சு கழுத்தறுத்த நாதேறி, !!

கூட்டிக்குடுக்கற உனக்கெல்லாம் எதுக்குடா மீச ? பேச வந்துட்டான்,பெரிசா ! ?” ன்னு, சீனிச்சரமாய் வெடிக்குது அந்தப்பொம்பிளை ……

”இங்கே என்னாக்கா பண்றே ? வாக்கா, வா, ரூம்புக்குப்போலாம் வாக்கா, ? ன்னு மஞ்சு வந்து இழுத்துக்கொண்டுபோக, ”இன்னைக்கு கலெக்‌ஷன் எவ்ளோடி,ன்னு அளுதுகிட்டே கேட்குது அந்தப் பொம்பள, வேற யாரு ? தங்கம்மாக்காதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *