கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 15,328 
 
 

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவள் மனம் இனம் புரியாத பரபரப்பில் ஆழ்ந்து போனது. தொண்டைக் குழிக்குள் தமிழ் நாட்டு ‘கோலி சோடா’ போன்ற ஓர் உருண்டை உருளுவது போன்ற உணர்வு.

போகலாமா… வேண்டாமா… அதற்கான பதிலை மனதின் ஆழத்தில் தேடித் தேடிப் பார்த்தாள். மாயமான் போல் வருவதும் மறைவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. அந்த தோட்டத்தில் நடந்த சாவோ வாழ்வோ எதற்குமே போகாமல் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி மறுத்து விட்ட போது இந்த இறப்பிற்கு மட்டும் போகக் கேட்டால் மகள் என்ன சொல்வாள்… எண்ணிப் பார்க்கும்போதே உள்ளத்துக்குள் ஒரு மெல்லிய திரை விழுந்து அது கொஞ்சம் கொஞ்சமாகத் தடிமனாகிக் கொண்டு வந்தது.

“என்ன பரிமளா… இன்னைக்கு முழுவதுமா என்னவோ மாதிரி இருக்கீங்க…?”

மகள் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

“இப்ப உண்மையிலேயே கேக்கறேன்மா… தோட்டத்லேயிருந்து சாவு செய்தி வந்த பின்னாடி ஒரே அமைதியாகிட்டீங்க.. ஏன்…?”

கேள்வி கேட்ட மகளைக் கூர்ந்து பார்த்தாள். அதில் ஏதோ ஒரு யாசகம் இழையாகியிருந்தது.

“எனக்கு இன்னைக்கு ‘சூப்பர் மார்கெட்’ல வருச லீவுதான்… போய்ட்டுதான் வருவோமே… நீங்க பொறந்த தோட்டம்ன்றதால பல உறவுக்காரவங்களும் கூட்டாளிங்களும் வருவாங்க.. அவங்கள சந்திச்ச மாதிரியும் இருக்கும்.. நீங்க பொறந்து ஓடியாடி வெளையாண்டு வளர்ந்த தோட்டத்த நானும் பாக்கலாம்.”

மகள் இப்படி அவளே ஒத்துக்கொண்டதை ஒரு வகையில் எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து போனாலும் ‘வாழ்ந்த தோட்ட மண்ணில் காலடி வைக்க வேண்டுமே,’ எண்ணும்போது உணர்வில் ஒரு முள் நெருடியது. அதனுடன் பல ஆண்டுகளாகப் பதுக்கிப் பாதுகாத்து வைத்திருந்த உணர்வுகள் உள்ளத்துக்குள் ஒரு புல்லரிப்பு இளம் கத்தரிக்காய்க் கொழுந்தைத் தின்னும் நத்தையாக ஊர்ந்தது.

தோட்டத்தில் இருநூறுக்கும் குறையாத மக்கள் வாழ்ந்தார்கள். அதில் நீலாவதி குடும்பமானது தானுண்டு தன் குடியும் வெட்டுத் தாளுமே கதி என வாழ்ந்த கணவனோடும் ஆறு பிள்ளைகளோடும் அடக்கமாக இருந்தது. ‘மோளுக்கு பரிமளா பேரு நல்லாருக்கும்!’ என்று நீலாவதி பிறசவத்துக்குப் பின்னால் மருந்து வாங்கப் போனபோது டிரசர் தன் விருப்பத்தைச் சொல்ல அந்தப் பெயரையே சூட்டும்படியாகி விட்டது.

அந்த மருந்தக உதவியாளருக்கு ஒடிசலான தேகம். பெண்கள் வாசம் பட்டாலே விலகி ஒதுங்கும் அப்பராணி மனுசன். அதனால், யாரும் நாக்கின் மேல் பல் படும்படியாக எதையும் சொல்லிவிடவில்லை.

குடும்பத்து மூத்த பிள்ளையான பரிமளா தோட்டத்துத் தமிழ்ப் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு ஏறக்கட்டினாள். குமரிப் பெண் வயதை எட்டியவுடன் வெளிக்காட்டு வேலைக்குப் பதிந்து விட்டாள் நீலாவதி. அப்போதும், ‘சூதாட்டமும் கள்ளுக் குடியும் இல்லாம மனுசன் கொஞ்சம் பொறுப்போட இருந்தா இந்த வெவரம் புரியாத புள்ளைய ஏன் வேலைக்கு அனுப்பப் போறேன்..!’ என்று உள்ளத்துக்குள் ஊமையாக அழுது கொண்டாள்.

***

காலையிலிருந்தே வானம் இலேசாக பிசுபிசுத்துக் கொண்டிருந்த பகல் பொழுதில் தோட்டத்து பால் காட்டிலிருந்து கொஞ்சம் விரசாக வந்து உறைந்த ரப்பர் பால் அப்பிக் கிடந்த வேலை காட்டு உடைகளைக் களைந்து புது கைலியும் ரவிக்கையும் அணிந்து மேலே ஒரு மாராப்புத் துண்டுமாக சித்தியவானை அடுத்த சுங்கைவாங்கி தோட்டத்திற்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றவள், அன்று மாலையே தன் ஊர்க்கார அண்ணனுடன் திரும்பியிருந்தாள். வந்த கையோடு மறுநாளே உடனடி‘நோட்டிசு’ம் கொடுத்துவிட்டாள். கொடுத்த மறுநாளே தோட்டத்தில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் சகலவிதமான உடைமைகளோடும் குடும்பத்தோடும் பயணமாகி விட்டாள். நீலாவதியின் நடவடிக்கையானது தோட்டத்துச் சனங்களுக்கு கனவில் கூட இப்படி நடக்குமா என எண்ணி வியந்து போகும்படி ஆகிவிட்டது. நீலாவதி குடும்பத்துத் தட்டு முட்டுச் சாமன்களை ஏற்றிய ‘போர்டு லாரி’ஒரு பர்லாங்கு தொலைவு தோட்டத்துப் புழுதிப் பாதையிலிருந்து இறங்கி ‘கவர்மெண்டு’ தார்ச்சாலையில் பயணப்பட்டு ஐம்பது மைலுக்கு அப்பாலிருந்த அடுத்த தோட்டத்தை நோக்கிப் பயணப்பட்டபோதுதான் உறுதிப்படுத்திக் கொண்டார்கள் நீலாவதி குடும்பத்தின் குடிப்பெயர்வைத் தோட்டத்துச் சனங்கள். ‘எனக்கு எல்லாந் தெரியும்… ஊம்மனசுக்கு சரின்னு பட்டத நீ செஞ்சிட்ட’ என நீலாவதிக்கு நெருக்கமாக இருந்த அடுத்த வீட்டுத் தோழி ஒருத்தி மட்டும் மனதுக்குள் மறுகிக் கண்ணீர் விட்டு வழியனுப்பினாள்.

அது அப்படியிருக்க…

அந்தத் தோட்டத்திலேயே வெளிக்காட்டு தண்டல் பிச்சமுத்து தோட்டத்து இள வயசு நங்கைகள் கொஞ்சம் என்ன சாடைமாடையாகப் பார்க்கும் சுமாரான அழகனாக இருந்தான். அவனுக்கு அமைந்த மனைவியானவள் சுமாருக்கும் சற்று கூடுதலான கருப்பும் குண்டு மூக்கும் தட்டை மூஞ்சியுமாக அவ்வளவாக உருவத்தில் எடுபடாமல் போனவளாயிருந்தாள்.

வெளிக்காட்டுச் சின்ன வயசு கண்காணி பேச்சிமுத்து மூன்று நாள் ஏன் எதற்காக சித்தம் கலங்கிப் பித்துப்பிடித்தனாகிப் போயிருந்தான் என்பதை அவன் மனைவி புரிந்து கொள்ளத் திராணி இல்லாதவளாகி, ‘அவ குடும்பத்தோட புள்ளை குட்டிங்கள கூட்டிக் கிட்டு அண்ணன்காரனோட திடுதிப்புன்னு போய்ட்டா… இந்த ஆளு சோறு தண்ணி மறந்து வீட்டு மோட்டு வளயப் பாத்து பைத்தியம் புடிச்ச கணக்கா இருக்காரு…’என முணகிக் கொண்டிருந்தாள். தன் வீட்டுக் கூத்தின் ஒரு பகுதியை மட்டும் பக்கத்து பால்மர வெட்டுக்காரியிடம் விலாவாரியாக விவரிக்க, ‘மூனா நெம்பர்ல இருக்கிற காட்டு மரத்து கீல ஒன்னுக்கு நின்னுருப்பாரு போல… ஏம் புருசன் ஒரு வாரமா இப்படி கெடந்துதான் கோயிலு பூசாரி ராமசாமி கிட்ட கயறு மந்திரிச்சி கட்டன பின்னாடிதான் நல்லாச்சு… அவரு கிட்ட கூட்டிட்டுப் போ..’என அவளுக்கு எட்டிய ஆலோசனையும் புத்திமதியும் கூறினாள்.

புதிய தோட்டத்துக்குக் குடி பெயர்ந்து போன தடம் கூட காய்வதற்குக் கூட இடம் தராமல் குடும்பத்தைக் கொண்டு வந்து சேர்த்த ஒன்று விட்ட அண்ணன் மகனுக்கும் பரிமளாவுக்கும் திருமணம் பேசப்பட்டது. மேக்குப் பல்லும் கருப்புமான மாமன் மகனைத் துணுக்கும் பிடிக்காமல் போனாலும் அவளுக்கு வேறு வழியில்லாமலானது. ‘கருப்பு நெறமும் நீட்டிகிட்டு நிக்கிற பல்லுமாடி சோறு போடப்போவுது… அவன் தோட்டத்துல டிராக்டர் டிரைவரா இருக்கானே அது போதாதா… உன்ன கட்டிக்கிறவ வானத்துல இருந்தா பொத்துக்கிட்டு குதிக்கப் போறான்…?’ என எப்போதும் எடுத்தெறிந்து பேசாத அம்மாக்காரி எறிச்சலுடன் கொட்டிய வார்த்தைகளுக்குச் சாட்டை வீச்சுக்கு அடங்கிய சர்க்கஸ் பிராணியாகி கழுத்தில் தாலியைத் தோட்டத்து மாரியம்மன் கோவிலில் நாலுபேர் வாழ்த்தவும் பத்து பேர் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டவும் மொய்ப் பணத்தோடும் ஏற்றுகொண்டாள்.

அதன் பின்பு, நீலாவதி திரை மறைவில் தொடர்ச்சியாகச் செய்த சில பரீட்சார்த்தங்கள் தோல்வியில் முடிய பத்து மாதங்கள் முழுமை பெறுமுன்பே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் பரிமளா. பேரக் குழந்தை வடிவாகப் பிறக்க மாமன் குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனது. மற்றதெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளப்படவில்லை!

நீலாவதிக்கு மட்டும் மனதுக்குள் ஒரு முள் அராவிக் கொண்டே இருந்தது. அதனூடாகத் தொடர் வெறுமையொன்றும் நிழலாடிக் கொண்டே பின் தொடர்ந்தது. பிறந்து வளர்ந்த தோட்டத்துச் சனங்களுக்கும் உறவுகளுக்கும் மகளுடைய திருமணத்துக்குத் திருமண அழைப்பிதழ் வைக்காமல் போனதோடு குழந்தை பிறந்த பெயர் சூட்டு விழாவுக்கும் யாருக்கும் குறிப்பாக தன் இளமைக்கால கூட்டாளிக்கும் கூடச்சொல்லாமல் திரையிட்டிருந்தாள். குழந்தைக்குப் பெயர் வைப்பதிலும் நீலாவதிக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் போனது.

இவ்வாறான தொடர் சஞ்சலங்களும் எண்ணங்களும் குமிழ் குமிழாய் வெளிவருவதும் நீர்த்து வெடித்துப் போவதுமாயிருக்க நெஞ்சில் வருடிய முள் அங்கேயே தங்கி முரடு கட்டிப்போக நீலாவதி ஒருநாள்… காலம் தன் முதுமையைக் கோலம் போட இறந்து போனாள்.

‘செத்துப்போன பிச்சமுத்துக்காக இங்கிருந்தே மௌனமாக அழுது தீர்த்து விடுவோமா… அது மட்டுமே போதுமானதாக இருக்குமா…இதனால் மட்டுமே இவ்வளவு நாள் தேக்கி வைத்துக் கொண்டிருந்த வலியும் எண்ணங்களும் ஒரு நாளில் வடிந்து வரண்டு போய் விடுமா… அந்த முகத்தைப் பார்த்து விட்டால் மட்டுமே ஆயுள் பரியந்தம் வரை ஒரு பிச்சைக்காரி அழுக்குத் துணியில் முடிந்து வைத்துக் கொண்டு சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவிழ்த்து அவிழ்த்து பார்த்துக்கொள்ளும் சில்லரைக் காசுகளைப் போன்ற அந்த நினைவுகளுக்கு ஒரு பூரணத்துவம் கிடைத்துவிடுமா…!’

“பரிமளா, நான் கெளம்பிட்ட… சொல்லிட்டு… இப்ப என்னவோ ரெண்டு மனசுல இருக்கிற மாதிரியில்ல இருக்கு… புறப்புடும்மா… நாந்தான் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன்ல..” மகளின் வற்புறுத்தலுக்கு அவள் என்னவோ ஏனோதானோவென இருப்பதாக வெளிக்குக் காட்டிக் கொண்டு புறப்பட்டாள்.

பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்த நாட்களும் இனிய வாழ்க்கையும் நினைவுக்கு எட்ட கண்கள் பனித்தன. இளமையையும் முதல் காதலையும் முழுமையாகத் தரிசிக்கு முன்பே, வாய் வரை கொண்டு சென்ற திராட்சையைத் தட்டிப் பறித்துக் கொண்டதுபோல் ஆகி விட்டது. தோட்டத்தை நெருங்க நெருங்க அவள் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டு வந்தது. மகளைப் பார்த்தாள். அவள் ஏதுமறியாதவளாக வண்டியைச் செலுத்துவதில் கவனமாக இருந்தாள். அந்த முகமும் கைகளும் பரிமளாவுக்கு இதயத்தின் கடைசி எல்லைக்குள் சென்று எதையோ துருவித் துருவித் தேடிக் கொண்டிருந்தது. எதையாவது சாக்காகச் சொல்லி திரும்பிவிடுவோமா நினைக்கும்போதே வண்டி கூப்பிடு தொலைவு நெருங்கியிருந்தது.

சாவு வீட்டுக்குள் அவள் நுழைந்தவுடன் சில முகங்கள் மட்டுமே பழசானதாகவும் நினைவுக்குத் தட்டுப்பட்ட முகங்களாகவும் இருந்தன. இன்னும் சில உருவங்கள் தோட்டத்து ரப்பர் மரங்களுக்கு ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்ததின் நினைவாக தட்டி நெளிக்கப்பட்ட தகரக் குவளைகளாகிக் கிடந்தன. தாயின் பழைய சிநேகிதி மட்டும் உடனடியாகக் கண்டு கொண்டவளாகி பரிமளாவை அணைத்து, ‘உங்கம்மா சாவுக்குக் கூட வர முடியாமப் போச்சே நீயும் சொல்லாம விட்டுட்யே,’ என பொய் முலாம் பூசாமல் அழுதாள்.

பிச்சமுத்துவின் சடலம் கண்ணாடிக் கூண்டுக்குள் வாய் கட்டப்பட்டு நெற்றியில் சில்லரை காசு வைத்துக் கிடத்தப்பட்டிருந்தது. வெளிக்காட்டு தண்டல் பிச்சமுத்து மட்டுமே அவள் நெஞ்சத்தின் அத்தனை மூலை முடக்கிலும் நிறைவு பெற்றிருந்தான். அத்தருணத்தில்…! நீலாவதி ஒரே நாளில் இவளைப் பெயர்த்து ஆன்மாவின் ஆணி வேரைப் பிடுங்கிக் கொண்டு போனதை எண்ணிக் கொண்டாள்.

பிச்சமுத்துவின் பெஞ்சாதி இவளை அறிந்தவளாகி நெருங்கி வந்து, ‘உன்ன அப்போ பாத்தது…மனுசன் என்ன தனி மனுசியாக்கிட்டு போய்ட்டாரே…’ என வயோதிகத்தில் வராத கண்ணீரை வலுக்கட்டாயமாக வரச்செய்து அழுதாள். ‘அது என்னவோ போ… அன்னைக்கு ஒருக்கா நான் கண்ண மூடிட்டா பரிமளா என் சாவுக்குவருமான்னு கேட்டாரு… ஏங்கேட்டாருன்னு எனக்கே வெளங்காமப் போச்சு போ…வந்து சேந்துட்டே..’ என சொல்லக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஒரு கேவல் மட்டுமே எழ அதை இறுக்கிப் புதைத்துக் கொண்டாள். அந்நேரத்தில்தான்..! அங்கு வந்த ஒரு வாலிபனை நேருக்கு நேர் நோக்கியவள் துணுக்குற்றாள். அச்சு அசப்பில் பிச்சமுத்துவை உரித்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் சின்ன முள் தைத்தவுடன் கிண்டியெடுக்கும் வரை வலி நிமிண்டிக் கொண்டேயிருக்குமே அதுவா…அல்லது பூ மலர்ந்து பரிணமிக்கும்போது ஒரு கண் கொள்ளக் காட்சி தருமே… அதுவா? அவளுக்கே விளங்காமல் போனது. பிச்சமுத்து மகன் முகம் மட்டுமே ஆழ்மனம் முழுவதும் அச்சடித்த பழங்கால மங்கிய ரவிவர்மா ஓவியமாக பதிந்து போனது. நெடிசனான மாஞ்சிவப்பு மேனி. வட்ட முகம். முன் நெற்றியில் சிறு கற்றையாக விழுந்த முடி. மகளின் முகத்தை ஒட்ட வைத்துப்பார்த்தாள். ‘போட்டோ ஸ்டேட்’ காப்பி போல் காட்டியது. உடனே அதைத் தூக்கிக் கடாச எண்ணியவளுக்கு பொய்த் தோற்றம் காட்டி மீண்டும் மீண்டும் வந்து போய்க் கொண்டே இருந்தது.

வண்டி சித்தியவான் வீட்டை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மகள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள். பரிமளாவின் நினைவுகள் அத்தனையும் பின்னோக்கிப் பயணத்தில் ஆழ்ந்தது.

அந்த அறியா வயதில் தீட்டிய தாசாக் கத்தி, சின்ன வக்குளில் காலையில் நீலாவதி கருக்களில் எழுந்து சுட்டுக் கொடுத்த இரண்டு தோசைகள், காலியான பத்து காசு ஆரஞ்சு போத்தலில் வரக்கோப்பி சகிதமாய் வெளிக்காட்டுப் பெண்களுடன் 40 ஏக்கர் ‘தீம்பாரு’க்கு போய்க்கொண்டிருந்தாள்.

‘இன்னைக்கு எல்லாரும் அவங்க அவங்களுக்கு குடுத்த பத்திய முடிச்சிடணும்… முடிக்காம விட்டா பெரிய கிராணி வந்து பாத்துட்டு கேட்டா நீங்கதான் பதில் சொல்லணும். அப்பறம் அர பேரோ கால் பேரோ என்னக் கேக்காதீங்க..’ என வெளிக்காட்டுத் தண்டல் பிச்சமுத்து கண்டிப்பு என எண்ணிக் கொண்டு முரடு தட்டாத இளங்குரலில் கட்டளையிட்டான். குழுமியிருந்த பெண்கள்,‘போங்க தண்டலே, போன மாசத்தி வரைக்கும் போடா பொடிப்பயலேன்னு கூப்பிட்ட எங்களுக்கே கொம்பு மொளச்சிட்ட மாரி கட்டளை போடற… நீயே பாக்கறயில்ல மீனாச் செடியும் கழுத்தறுத்தாங் கோரையும் ங்கொப்பன் ஒசரத்துக்கு வளந்து கெடக்கு… பத்திய இன்னிக்கே வெட்டி முடிக்க முடியாது… பாதிதான் முடிப்பம்..பெரிய ஐயா வந்தா நாங்க சொல்லிக்கிறோம்… நீ சொம்மநா கெட..’ என கூட்டத்திலேயே வெளிகாட்டு வேளையில் பல ஆண்டுகளாகச் சூரியவெப்பத்தில் குளித்து உழைப்பில் வெளிர் கருப்பேறிய முரட்டு மனுஷி ஒருத்தி தொனி உயர்த்த,‘அக்கா…அக்கா அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்கக்கா… அந்த ஆளைப்பத்தி உங்களுக்கே தெரியுமில்ல… இங்க வேலக்காட்ல பேசாம இருந்துட்டு சாயங்காலம் ஆபீசுக்கு கூப்ட்டு வாங்கு வாங்குன்னு வாங்கு வாருக்கா…’

இப்படி உச்சத் தொண்டையில் இட்ட கட்டளைக்கு வெளிக்காட்டுத் தொழிலாளிகள், ‘போங்க குட்டித் தண்டலே உங்களப் பத்தி எங்களுக்கு தெரியாதா அந்த பெரிய மரத்து வேர்மேல ஒக்காந்து அங்க தாவுதே அந்த கொரங்குங்களோட பேசிக் கிட்டிருங்க…’ என கேலியும் கிண்டலுமாமகப் பேசிக்கொண்டே அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பத்திக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

தொழிலாளப் பெண்டுகளின் தாசாக்கத்திகள் சுழற்சியில் சதக் சதக் எனும் ஒலி அந்த‘தீம்பாரில்’ எழும்பிச் செடிகளையும் கோரைகளையும் சாணிப்புற்களையும் சாய்த்துக் கொண்டிருந்தன. சரிக்குச் சமானமாக பரிமளாவின் கத்தியும் சுழன்றது. அப்போது… ஒரு இளம் மீனாச்செடியின் குருத்து தோன்றிச் சில மணி நேரமே இருக்கலாம். திமிறிக் கொண்டு எழுந்து நின்றது. அதை மட்டும் வெட்டியெறிய மனசில்லாமல் விட்டு விட்டு அதையே சில கணங்கள் இமைக்காமல் நோக்கினாள். செடியின் இளந்தண்டு அவளுக்கு அவனாகத் தெரிந்தது. அவனுடன் கலந்து கொண்டாடிய இன்ப நாட்கள் மனதுக்குள் தோன்ற பூரித்துப்போய் சில நொடிகள் அங்கேயே நின்று விட்டாள்.

‘அம்மா, தூங்கிட்டயா..!’

அரைத்தூக்கமல்ல… விழித்துகொண்டே உள்ளுணர்வுத் தூக்கமா…அது… விழிப்பு தட்டியபோது…

ஒரே வரிசை லயத்தில் பரிமளா வீட்டுக்கு வெளியே பச்சை மட்டை கட்டி அவளை உட்கார வைத்தது முதல் நீலாவதியும் பிச்சைமுத்துவின் தகப்பனும் தங்கள் குலகௌரவத்தைக் காக்கப் போராடியதும் அதன் விளைச்சளில் பிசைமுத்துவுக்கு கலியாணம் நடந்ததும் கல்லெறிந்த சிறுகுளத்தில் கரைக்கு வந்த சிற்றலையையாக நினைவுகள் மோதி நின்றன.

பொழுது மங்கிய அந்த வேளையில் இறப்பு வீட்டிற்குப் போய் வந்த சாங்கியக் குளியலில் தண்ணீரைத் தலையோடு ஊற்றும்போது ஒரு சொட்டுக் கண்ணீரும் அதில் ஐக்கியமாகிக் கரைந்தது. அதோடு, யாருக்கும் கேட்காத அளவு சின்ன விசும்பல். இந்த தண்ணீரோடு இவ்வளவு நாள் பாவிக்கிடந்த கிடந்த எண்ணங்கள் அழிந்து போகட்டும்.

புதிய மனுசியாகத் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்த பரிமளாவை நோக்கி, ‘நல்லா தலையோட குளிச்சிட்டியாம்மா..!’ மகளின் குரல் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டு நேருக்கு நேர் முகத்துக்கு முகம் பார்த்தாள். அதே முகம். அச்சு அசல் பிசகாமல்.

இறக்கி வைத்த அத்தனைச் சுகமான சுமைகளும் சுகந்தமான நினைவுகளும் மீண்டும் ஓடோடி வந்து அவளைச் சுமந்து தாலாட்ட ஆரம்பித்தன. அந்த நீரூற்று ஆன்மாவின் அத்தனை நரம்புகளிலும் மீண்டும் புதுப் பிறவியெடுத்து ஊடுருவி ஓட ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *