கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 9,716 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘நாமிருவர் நமக்கிருவர்’ என்கிற கோஷம் இந்தியாவிலே பிரபலமான காலத்தில் இக்கதை எழுதப்பட்டது. இதனை மனதிலிருத்திக் கொண்டு இக்கதை வாசிக்கப்படுதல் வேண்டும். ‘ஈழநாடு’ இதழ் பத்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலைந்து கதைகளுள் ஒன்றாக ‘சிறுகை நீட்டி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. 7-1-71 இல் ஈழநாடு, பின்வருமாறு எழுதியது:
உருவகக் கதைத் துறையிலும் சிறுகதைத் துறையிலும் எம்.ஏ.ரஹ்மான் குறிப்பிடத் தக்கவர். உத்திகளுக்கு இவர் முதலிடம் வழங்குபவர்.

***

காலை இளம் வேளை. அதன் மோனத்தவமியற்றுங் கோலம்.

படிப்பறையிலிருந்து அன்றைய விரிவுரைகளை ஆயத்தஞ் செய்து கொண்டிருந்த சதாசிவத்தாரின் பார்வை ஜன்னலுக்கு வெளியே தெறித்துப் பாய்கின்றது.

தனிக்கிளையைத் திருத்தவிசாகப் பெற்றிருந்த ஒற்றை ரோஜாவும் யௌவனப் பூரிப்பின் தூதாகக் குமிண் நகையை அலர்த்தும் அதன் முனைப்பும்.

பாடங்களிற் பற்று இற்றதோ? பூவிலே பற்று முற்றிக் கணிந்ததோ?

சதாசிவத்தார் விருப்பு வெறுப்பு எதற்கும் வெளிச்சமிடாத இயல்பினர். அவருடன் நீண்ட காலமாக நெருங்கிப் பழகுபவர்கள்கூட, அவர் ஆஸ்திகரா அல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு இன்னமும் ஆராய்வுகள் நடத்துகிறார்கள். அவருடைய விரிவுரைகளிலும் உரையாடல்களிலும் நாஸ்திகக் கருத்துகள் விரவிக்கிடக்கும். ஆனால், அவருடைய நெற்றியில் விபூதிப் பட்டையும் சந்தனப் பொட்டும் நித்திய அலங்காரச் சின்னங்களாக நிலைத்துள்ளன!

அலையும் மனத்தைச் சிந்தனையின் முச்சை சுண்டியிழுக்க, பார்வை மேஜைக்கு மீளுகின்றது. ஒரு ரூபாய் நாணயம், அதே இடத்தில், அப்படியே இருக்கின்றது. நூலின் பக்கங்களுக் கிடையிலே புலனைச் சிறைப்பிடிக்குந் தவிப்பு.

‘பித்தா பிறை சூடி…’

மனைவியின் தேவாரம். அவளுடைய குரல் பூஜையறையிலிருந்து பக்தியின் முற்றிய பாவத்துடன் பரம்புகின்றது. குயிலின் குரலிலே மண்டிக் கிடக்குமே ஒரு வகைச் சோகம்; அஃது அக்குரலுக்குச் கரையிட்டிருப்பதான த்வனி.

நினைவுத் திரியிலே நீ ஏற்றப்படுகின்றது. உடற் கொட்டிலே செம்மிக் கிடக்கும் வெடி மருந்திலே நீ பற்றிப் படந்ததும்…

கடந்த ஐந்து ஆண்டுகளாக நியமம் நாட்டியது போல இதே வேளையில் நி உற்கைகளை உகுத்து அவருடைய உள்ளங் கருகிக் கொண்டேயிருக்கின்றது. அஃது அவர்தம் அந்தராத்மாவைத் தவிர வேறு எவருமே அறியாத பரம இரகசியம்.

‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா…’

வினையின் பலிதம் நானா பக்கமும் பொறிகள் கிளம்புகின்றன. தீயின் பொறிகளா? நினைவின் பொறிகளா? அவற்றின் வண்ணமும் பல; வகையும் பல!

பொறி ஒன்று

‘தோடு€டைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி…’

பக்தியின் புதுப் புனலிலே தோய்த்தெடுக்கப்பட்ட பிஞ்சுக் குரல் பூஜையறையிலிருந்து மிதக்கின்றது.

படிப்பறையிலே விரிவுரைகளை ஆயத்தஞ் செய்து கொண்டிருக்கும் சதாசிவத்தாரின் புலன் அப்பாடலிலே பசை கக்கிப் பிணைகின்றது.

பாடுபவள் ரேணு. முதிர்ந்த பக்தியைப் பிழியும் அப்பிஞ்சுக் குரலிலே தனித் த்வனி களைகட்டுகின்றது. இந்த ஈடுபாடு அவருடைய பலவீனம். அதிலேகூட ஒருவகை இதம் ஊறுகின்றது.

சின்னஞ் சிறு பெண்! அவளுடைய வயதைப் பிறந்த நாள் என்ற சரித்திர நிகழ்ச்சியிலிருந்து கணக் கெடுக்க மனம் மறுக்கின்றது. ‘பெண் வளர்த்தியோ? பீர்க்கு வளர்த்தியோ? மகள் ரேணு இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலை புத்தி அறிஞ்சிடுவாள். நீங்கள் சிவனே என்று சரித்திரம் உண்டு-பிரசங்கங்கள் உண்டு எனத்திரியுங்கோ. அப்புறம், எது எதில் வந்து விடியப் போகிறதோ பார்த்திருங்கள்’ என்று தினமும் முன்று வேளை படியளப்பது போல, இதனை ஞாபக மூட்டா விட்டால் அன்று ‘பிறவா நாளே’. ஐந்து வயதை நோக்கி எழில்நடை போடும் ரவியுடன் ரேணு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளை ஆறு வயதுகளுக்கு மேலே கணிக்க மனம் ஒப்புவதே இல்லை.

‘தோதுதைய தெவியன் விதையேதியோர்…’

குதலையின் இனிமையும் குறும்பின் ஏமாப்பும் இழையோடக் குருத்துக் குரல் ஒன்று பூஜையறையிலிருந்து புதிதாகக் கிளம்புகின்றது.

“அம்மா! இவன் தம்பி செய்யிறதைப் பாருங்கோவன்…”

“மற்போருக்குச் சோடி கிடைத்துவிட்டதா?” அடுக்களையிற் பிரசவமான அம்மாவின் குரல் அதிகாரஞ் செலுத்துகின்றது.

“நான் தேவாரம் பாடத் துவங்கினால், அவன்தானே ஒரே ஒரே வந்து குழப்பிறவன்.” –சிணுங்கலின் சிரசுதயம்.

“ரவி, அக்காச்சி பாடட்டும் மகன். நீங்க இஞ்சை அம்மாட்ட வாருங்கோ.”

“மாத்தன்…நானும் பாதுவன்.” அடுப்படி அதிகாரம் ரவியிடம் செலாவணியாவதில்லை.

“மகள், ரேணு! தம்பி சும்மா பாடினால் அவனுக்குத்தானே வாயுளையப் போகுது? பத்தியோடை நீங்கள் பாடினால், உங்களுடைய குரல்தானே ஆண்டவனுக்குக் கேட்கும்!” பக்கச் சாய்வாக இருந்தாலும், நடுத்தீர்ப்பு வழங்கிய திருப்பதியை அடுப்படிக் குரல் பெறுகின்றது.

சதாசிவத்தார் நூலின் பக்கங்களைப் புரட்டுகின்றார்.

நூல்கள் – படிப்பு – வித்துவம் எல்லாம் மனைவிக்கு அற்புதமானவை. எதுவும் பக்தியில் இயங்குவதான குருட்டுப் போக்கு, குருட்டு பக்தி, குருட்டுத்தனஞ் சார்ந்தன; நியாயஞ் சார்ந்தனவல்ல. ஆனால், அவளுடைய பக்தி என்ற நிலைக்களனில், அந்தக் குருட்டுப் போக்கிலேகூட நியாயம் இருப்பதான சாயல் எதனாற் தோன்றுகின்றது? அடிவானம் வெறுஞ் சாயல் என்பது புத்தி பூர்வம். ஆனாலும் அதன் ரம்மியத்தில் மனதை ஒன்றுபடுத்தவும் முடிகின்றது.

‘பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே’

பிஞ்சுக் குரலிலே காம்பீரியக் கவர்ச்சி குழைத்து ரேணு தேவாரத்திற்கு முத்தாய்ப்பு வைக்கின்றாள். ரவியின், ‘பிற்பாட்டு’தூர்ந்து போக பக்தியின் ஓங்காருமும், அபிநயக் கசிவும்!

சதாசிவத்தாரின் புலன் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனுடைய வரலாற்றிலே செப்பமாக வேர் இறங்குகின்றது.

அடுத்த பொறி

பண்டைய யாழ்ப்பாண அரசின் எல்லைகளையும் பரப்பினையும் சதாசிவத்தார் பெருமையுடன் மனக்கண்களிலே துலக்கிப் பார்க்கின்றார்.

‘போத்துக்கேயர் இந்த மண்ணிலே காலடி எடுத்து வைக்காதிருந்தால்…’

‘இருந்தால்?’ என்ற நுணுக்கமான முச்சை போட்டுக் கற்பனைப் பட்டத்தை எதிர்காற்றிலே புறக்க விடுகின்றார்.

மேலெழுந்த பட்டத்தின் வால் இடைவெளியில் அறுந்து விழுந்ததா? பட்டம் திடீரெனக் கரண மடித்துத் தொம்மென்று நிலத்திலே குத்திக் கிடக்கக் காரணம் என்ன?

“அம்மா, அம்மா…” அதற்குமேல் ஒலிகள் சொல்லுருவம் தாங்க மறுக்கின்றன. தொண்டை துக்கத்திற் கனக்க ரேணுவின் விக்கல்!

“ஏன் டீ? ஸ்கூலுக்குப் புறப்பட்டு நின்று ‘முட்டைக் கண்­ர் வடிக்கிறாய்?”

வானத்தில் வலம் வரும் முகிற் கூட்டங்களிலே ஆண்டவன் தண்­ரை மறைத்து வைத்திருப்பதைப் போன்று, கண்­ரை மறைத்து வைத்திருப்பதற்குப் பெண்களின் கண்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் போலும்.

“தையற் பெட்டியிலே நான் வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணோம்.”

“உனக்கு ஏது ஒரு ரூபாய்?”

“நேற்று நீங்கதானே தந்தீங்க?”

“அதைத் தையல் டீச்சரிட்டை குடுக்குத்தான் வருவா, குடுக்கலாமென்று தையற் பெட்டியிலே வைச்சிருந்தனான்.”

“இப்பொழுது காசுக்குக் கால் முறைச்சு நடந்து போயிற்றுதாக்கும்…”

“நேற்றுப் பின்னேரம் ரவி என்ரை தையல் பெட்டியை எடுத்துப் பார்த்தான். நான் கண்டனான்…”

“என்னடா ரவி?”

“இல்லை அம்மா. நான் அத்தாச்சீன்ர காசு எடுத்த இல்லை. அத்தாச்சி பொய் சொல்லுது” – ரவி குரலை உச்சஸ்தாயிக்கு எழுப்புகின்றான்.

மேற்கொண்டும் ஒரு வார்த்தை கண்டித்துப் பேசினால், அவன் அடம் பிடித்தலின் அச்சியை அடைவான் என்பது அத்த ஸ்தாயியின் எச்சரிக்கை. அதைத் தீர்ப்பதற்கு அநுமாரும், அவர் உதவியுடன் பர்வதமலையும் நிச்சயந் தேவைப்படும். அஃது அம்மாவுக்குந் தெரியும்.

“தம்பி பொய் சொல்ல மாட்டான். தையற் பெட்டியை நீ ஆட்டத்திலே எங்கேயாவது வைத்திருப்பாய். யாரோ ஒரு களவாணிப்பெட்டை அதைத் திருடியிருக்கிறாள். நடந்தது அதுதான்” – பக்கத்தில் நின்று பார்த்தவளைப் போல அம்மா தீர்ப்பு வழங்குகின்றாள்.

சதாசிவத்தாராற் படிப்பறையில் குந்தியிருக்க முடியவில்லை. வெளியே வருகின்றார்.

“ஒரு ரூபாவுக்காக ஏன் இவ்வளவு பெரிய இது? நம்முடைய அஜாக்கிரதையினால் அது காணாமற் போய்விட்டது. டீச்சருக்குப் புதிதாக ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினால், விவகாரம் அவ்வளவில் முடிந்துவிடும்” எனச் சமரசத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பிக்கின்றார்.

“உங்களுக்கு மகா அலெக்ஸாந்தரைப் பற்றியும் யூலியஸ் சீஸர் பற்றியும், நெப்போலியனைப் பற்றியும் மணித்தியாலக் கணக்கிலை பேசத் தெரியும். அந்த அளவுக்கு வீட்டிலை நடக்கிறதோ, ஊரிலே நடக்கிறதோ தெரியாது. ஸ்கூலுகளிலை இப்ப வரவரக் களவாணிக் கூட்டம் புழுத்துப் பெருகுது. இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கை நீளும்…நாளைக்குப் பத்து, எங்கடை இளக்காரந்தான் களவாணிப் பட்டாளத்தை உருவாக்கும்” – மனிவி கோடை மழையாட்டம் பிரசங்கம் பொழிந்து நிறுத்தினாள்.

அவளுடைய உதட்டுக்கும் உள்ளத்திற்குமுள்ள உறவைச் சதாசிவத்தார் அறிவார். அவளுக்கு இறுக்கமான கை. யாழ்ப்பாணச் சிக்கனத்தின் அறுவடை! கல்லூரியில் சுற்று நிருபங்களாக வலம் வரும் நன்கொடை ‘லிஸ்டு’களில் இரக்கச் சுபாவங் காரணமாக அள்ளிக் கொடுத்து, சம்பளத்திலே விழும் துண்டுகளுக்குப் பூரண விளக்கம் கொடுக்க முடியாது கைகளைப் பிசைந்து நிற்பது அவருடைய அநுபவம்.

வீரியம் பம்பரத்தை மணலிலே சுழலவிட்டு, அவர் படிப்பறைக்குள் மீளுகிறார்.

1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊவாப் புரட்சியிலே பங்குபற்றிய கதாபாத்திரங்களைப் பற்றிய நினைவுகளில் மனத்தினைக் குவிக்கும் முயற்சி.

“இந்தாடீ, ரேணு! டீச்சரிட்டைச் சொல்லி, அந்தக் களவாணிப் பொடிச்சியைக் கண்டு பிடிச்சு நல்ல பூசை வாங்கிக் குடு. அப்பிடி அவளைக் கண்டு பிடிக்காட்டி, ஆனைப்பந்திப் பிள்ளையாரிட்டை நேத்திக்கடன் வைச்சிட்டு வா. அந்தக் களவாணிப் பெட்டையின்ரை கையை அழுக வைச்சு ஆண்டவன் காட்டுவான்.”

அம்மாவின் சுபாவமே அப்படி ‘பழிகிடப்பது’, ‘நேர்த்திக் கடன் வைப்பது’, ‘கை அழுகும்’, ‘கண்ண விஞ்சு போகும்’, என்ற சொற்றொடர்கள் பல ஏகதேசமாக வந்து விழும்.

சரித்திர பாத்திரங்கள் அவருடைய மனத்திலே ஒன்ற மறுக்கின்றன. மனத்திலே சுளுக்கு, ஊர்பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிரு ககும் அந்தக் களவாணிப் பெட்டையின் மீது அநுதாபஞ் சுரக்கின்றது.

‘ஊரார் பெற்ற பிள்ளைகளை ஏன் கரிதுக் கொட்ட வேண்டும்? ரேணு மட்டும் சற்று ஜாக்கிரதையாக இருந்திருந்தால் களவே போயிருக்காதல்லவா? அத்துடன், நேர்த்திக்கடனை ஏற்று, அதற்குப் பிரதியுபகாரமாகக் கையழுகப் பண்ணுதல் ஆகிய சிரமங்களும் கடவுளுக்கு ஏற்பட்டிருக்காதல்லவா?’

மனிவியிடங் கேட்க சதாசிவத்தாரின் மனம் உன்னியது. ஆனாலும், வினையை அவர் விலை கொடுத்து வாங்க விரும்பமில்லை.

என்னுடைய எண்ணங்கள் – போக்குகள் என்ற மட்டத்திற்கு என் மனைவியால் உயர முடியவில்லை. அஃது அவள் குற்றமா? என்னால் அவளுடைய மனோபக்குவ நிலைகளுக்கு இசைவாக இறங்கிவர முடிவதில்லை. ஓடும் ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

சமகால நிகழ்ச்சிகளைப் பற்றி அவர் அதிகம் அக்கறைப் படுவதில்லை. அவை சரித்திரத்திற்குள் புகுந்த பிற்பாடுதான் சொந்த பந்தபாச உணர்ச்சிகளிலிருந்து அவற்றைப் பிரித்து வைத்து, சரித்திர நியதியான பெறுபேறுகளைக் கற்பித்தல் சாத்தியமானது என்பது அவருடைய அறிவு வாதம்.

அறிவு வயலை உணர்ச்சிப் பசு மேய்கின்றது!

இன்னொரு பொறி

சதாசிவத்தார் உலாத்தலுக்குப் புறப்படுகின்றார். அவருடைய வழியை மறிப்பவனைப்போல ரவி எதிரில் வந்து நிற்கின்றான். குறும்புத் தனம் விழிகளிலே ஒழுக, அந்த விழிகளே முகம் முழுவதையும் அடைத்திருப்பதான அபூர்வக் களை.

“அப்பா தாசு அஞ்சு. நான் ததமாத்தன்.”

குதலை உச்சரிப்பில் டகரங்களையும், ககரங்களையும் தகரங்களாக மாற்றுவது எப்படி அவன் ஏகமோ, அப்படியே எண்களில் அதிக மதிப்புப் பெற்றது ஐந்துதான் என்பது அவன் நம்பிக்கை.

“ரவி, நீங்கள் யாருடைய பவுண்?”

“நான் அப்பான்த தந்தப்பவுண்….”

“அப்ப, அப்பாவுக்கு மகன் காசு காட்டுவான்!”

சங்காகக் குவிந்து கிடக்கும் பாற் கையை விரித்துக் காட்டுகின்றான். சிறு கைப்பீடத்தில் ஒரு ரூபாய் நாணயம்.

“தம்பிக்கு தீதபோத்த நான் எதுத்த.”

எந்தக் காசைப் பொறுக்கி எடுத்தாலும், அஃது அப்பாவின் காசு என்பது ரவியின் கட்சி. படிப்பறைக்குள் அம்மாவோ, ரேணுவோ வருவது அபூர்வம். மேஜையின்மீது விரித்துக் கிடக்கும் நூல்கள் வனவிருட்சங்களென்றும், அவற்றினூடே அலைந்து திரியும் சிங்கம் சதாசிவத்தார் என்றும் அவர்கள் கற்பித்திருக்கக்கூடும். அந்த வனத்திலே ரவி மட்டும் அணிற் குஞ்சு போன்று துள்ளித் திரிவான். புத்தகங்களை விளையாட்டுப் பொருள்களாக்கிக் கண்ட கண்ட இடமெல்லாம் இறைத்து வைப்பான். இதற்காக ரவியை அவர் சில சமயங்களிற் சினப்பதும் உண்டு; அரிதாகக் கண்டிப்பதும் உண்டு. ‘ஏண்டா ரவி! அந்தத் துருவாசர் குடியிருக்கிற ஆசிரமத்திற்குள் நீ போனாய்?’ என்று அவன் அம்மாவின் சீற்றம் அவர் மீது இலக்குப் பார்ப்பதும் உண்டு. இத்தனைக்கும் ரவி தன் போக்கின் மன்னன்.

“அப்பா காசை அப்பாவிடம் மகன் தருவான்” எனச் சதாசிவத்தார் தமது கையை நீட்டுகின்றார்.

“மாத்தன் முத்தாசு தாங்க தாசு தாறன்.”

“கடைக்குப் போய் மகனுக்கு நிறைய முட்டாசு வாங்கிக் கொண்டு அப்பா வருவார்.”

ரவி எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவனைப்போல களுக் கென்று சிரித்து, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அப்பா கையிலே வைக்கின்றான்.

அவனை அள்ளி அணைத்து அவனுடைய குருத்துக் கன்னங்களிலே முத்தமிட்டு அவர் வெளியேறுகின்றார்.

சாயங்கால வேளைகளில், பொதுநூல் நிலையத்திற்குச் சென்று, அன்றைக்கு வந்திருக்கும் புதினப் பத்திரிகைகளையெல்லாம் வெள்ளாடு மேய்ச்சல் போட்ட பின்னர் வாவிக் கரையில் சுத்தமான காற்று வாங்கும் திருப்தியுடன் உலவுவார். அப்படிச் செய்வதினால் முன்னேறி வரும் உலகத்துடன் தானுஞ் சேர்ந்து முன்னேறி வருவதான எண்ணத்தின் நிறைவு.

வாவிக் கரையில், விழிகளை நிலத்திலே புதைத்துக் கற்பனைக்கு ஏதேச்சையான சுதந்திரம் அளித்து, கால்களின் இயக்க வேகத்திலே சுதந்திரம் அளித்து, கால்களின் இயக்க வேகத்திலே சஞ்சாரஞ் செய்து கொண்டிருந்த சதாசிவத்தாரை ‘குட் ஈவினிங்’ என்ற குரல் தடுத்து நிறுத்துகின்றது.

நிமிர்ந்து பார்க்கின்றா‘. எதிரில் வித்துவான் நடராசா பல்லெல்லாம் வாயாக நிற்கின்றார். இருவரும் பால்யத்திலிருந்து நெருக்கமான நண்பர்கள்.

“தங்களை வீட்டிற்கு வந்து பார்க்கலாம் என்றிருந்தேன்…எதிர்பாராத விதமாக…”

“பீடிகை இருக்கட்டும் என்ன விசேஷம்?”

“வந்து…நம்ம பகுதியிலுள்ள கண்ணகி அம்மன் வழிபாடு குறித்து வரலாற்று நூலொன்று எழுதியுள்ளேன். கண்டி ராஜ்யத்தின் ஓர் அங்கமாக இந்தப் பகுதி இருந்த காலத்தைப் பற்றிய குறிப்புகளும் நூலிலே வருகின்றன. கால வரையறைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஒரு தடவை சரிபார்த்துத் தந்தீர்களானால்…”

“அவ்வளவுதானே? நாளை மறுதினம் காலையில் வீட்டுக்கு வாருங்கள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சரி பார்த்து விடலாம்.”

பேசிக் கொண்டு ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் வந்து விடுகிறார்கள்.

“வாருங்கள்! தேநீர் அருந்திச் செல்லலாம்.” எனச் சதாசிவத்தார் அழைக்கின்றார்.

“வேண்டாம்.”

“ஏன்? தேநீருக்குக்கூட இடமில்லாமல் மத்தியானச் சாப்பாட்டை வயிற்றுக்குள் போட்டு நிரப்பி வைத்திருக்கின்றீர்களா?” எனக் கேட்ட சதாசிவத்தார் கட கடத்துச் சிரிக்கின்றார்.

சிற்றுண்டிக்கும் தேநீருக்குமிடையிற் பல கதைகள் தொட்டந் தொட்டமாக உருட்டப்படுகின்றன. பழைய மதுவைப் போன்று, பழைய நினைவுகளும் போதையூட்ட வல்லன என்ற அநுபவம் இருவருக்கும்.

பில் வருகின்றது. ரவி கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தில் எண்பத்தைந்து சதங்கள் கரைகின்றன. மிச்சம் பதினைந்து சதங்களும் ரவிக்கு உவப்பான மிட்டாய்களாக மாறுகின்றன. கையும் கணக்கம் சிரி!

பிறிதொரு பொறி

மனத்திலே சோகக் கேவலின் கீறல். அதன் ரிஷ’மூலத்தை அறியும் முயற்சியில் சதாசிவத்தார் சலித்துப் போகின்றார். நேரத்தைப் போக்குவதற்காகப் படிப்பறையிலே ஒட்டிக் கிடப்பதற்கும் அலுப்பு. பஸ் நிலையத்தை நோக்கி விசுக்குப் பயணம்.

பஸ் நிலையம். பஸ் ஒன்று புறப்பட ஆயத்தமாக இருக்கின்றது. ‘இதில் ஏறுவோமா? வேண்டாமா?’ என மனத் தளம்பல்!

அடுத்த பஸ் என்றால் சௌகரியமாகப் போகலாம். அதுவரையில் இங்கு தூங்கிக் கொண்டு நிற்பதா? நெரிசல் என்றாலும் கல்லூரிக்குப் போய் விட்டால்…

பஸ்ஸ’லே தொற்றிக் கொள்ளுகின்றார். இருப்பதற்கு ஆசனமில்லை. அவரைக் கண்டதும் இரண்டொருவர் எழுந்து, “சேர்! இதில் இருங்கோ” என மரியாதை செய்கிறார்கள். தன்னுடைய பெருமையை நிலைநாட்டுவதற்காக மற்றவர்களுடைய உரிமைச் சௌகரியத்தை அபகரிக்க அவர் மனம் ஒப்பவில்லை. எனவே, அவற்றை மறுத்து, வெளவால் தொங்கலிற் சுகம் அநுபவிக்கும் பயணம்.

டிக்கட் பெற்றதும், இரண்டு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். அதே நேரத்தில், வாரின் பிடியிலே நிலை குத்திய சமநிலை வழுவுகின்றன. அதைச் சமாளித்துக் கொண்டே அகப்பட்ட இடத்திற்குள் சில்லறைகளைப் போடுகின்றார்.

அந்தச் சில்லறைகள் ஒழுகி, பஸ்ஸ’ற்குள் விழுகின்றன! ‘சதாசிவம் சே’ரின் சில்லறைகளைப் பொறுக்கிக் கொடுக்கும் எத்தனத்திற் பலருடைய கைகள் பஸ்ஸ’ன் தளத்தில் நீந்துகின்றன.

முகையாக இருந்த ஞானம் இதழ் நெகிழ்த்தி…

கடந்த இரண்டு நாள்களாக அவர் அணியும் காற்சட்டையின் இடப் ‘பக்கட்’டில் ஒரு ரூபாய்க் குத்தி வழுவி விழக்கூடிய அளவுக்கு ஓர் ஓட்டை அதற்குள் கைக்குட்டை மட்டுந்தான் வைப்பது என்ற பிரக்ஞை பூர்வமாகப் பிரதிக்ஞை எடுத்துள்ள போதிலும், ஞாபக மறதியிலே தொற்றிய தடுமாற்றங்களும் நடக்கின்றன.

ஞான வழித் தடத்தில் பிறிதொரு கிளை!

கிளைப் பொறி ஒன்று

சதாசிவத்தார் ஒதுக்கும் வேப்பெண்ணெய் விவகாரங்களுள் ஒன்று கணிதம். பாடசாலையின் மாணாக்கராக வளர்ந்த நாள்கள் தொட்டே கைமுனு எல்லாளன்மீது படையெடுத்த ஆண்டு, அசோகன் கலிங்கத்துப் போர் நடத்திய ஆண்டு, முஹம்மது நபி ஹ’ஜ்ரி இயற்றிய கிறிஸ்தவ சகாப்தம், நோர்மன் இனத்தார் பிரித்தானியத் தீவைக் கைப்பற்றிய ஆண்டு, பைஸாந்திய சாம்ராஜ்யத்தின் கோநகரான கொன்ஸ்தாந்திநோபிள் இஸ்லாமியர் வசமான ஆண்டு, வஸ்கோடிகாமா கள்ளிக்கோட்டையையும், கொலம்பஸ் அமெரிக்கக் கரையையும் அடைந்த ஆண்டுகள் என ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத ஆண்டுகளை அவர் ‘டக் டக்’ கென்று ஒப்புவிப்பார்.

‘ஆனால், இன்றுகூட இரண்டை இரண்டாற் பெருக்கி, இரண்டால் வகுத்து, இரண்டைக்கூட்டி, இரண்டைக் கழித்தால் என்ன விடை? என்று கேட்டால், இரண்டு தாள்களையும் அரை மணி நேரத்தையும் செலவு செய்த பின்னர், ‘இதோ தாள்கள் இருக்கின்றன. ஏதாவது விடை வரத்தான் செய்யும். நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்…’ என்று சற்றுக் கூச்சப்படாமற் பதில் சொல்லுவார்.

மனைவி என்ற பெயரில் ஒருத்தி அவர் வாழ்க்கையிற் புகுந்து, ரூபாய் சதங்கள் என்று எண்ணிக் கணக்கு வைக்கத் தொடங்கி விட்டாள். அவளுடைய ‘கசவார’ப் போக்குச் சில சமயங்களில் எரிச்சலை ஊட்டினாலும், கணக்கு வைத்துக் கொள்ளும் சனியன் தொல்லையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதான திருப்தி பல தடவைகளில் ஏற்பட்டிருக்கின்றது.

காலையில், அந்த ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின்மீது கசிந்த அநுதாபம் காரணமாகக் கணக்கிலே புதிய அக்கறை முறைவிட்டு மனத்தினை அலைக் கழிக்கின்றது.

இந்த வாரத்தில் இன்று மூன்றாவது ‘வேர்க்கிங்டே’. ஐந்து ரூபாய் நோட்டுடன் வாரம் ஆரம்பித்தது. தேநீர் சிற்றுண்டு வகைகள் ‘கண்டீன்’ கணக்கில். நடராசாவைப் பார்ப்பதற்கு முன்னர், நண்பர்கள் என்ற கோதாவில் விருந்தாளிகள் தட்டுப்படவுமில்லை. எனவே, இந்தக் கணக்கின் படியும் ஒரு ரூபாய் சொச்சந்தான் செலவாகியிருக்க முடியும். மிச்சம் மூன்று ரூபாய்களும் சில்லறைகளும்…ஒரு ரூபாய் நாணயத்தை இடப் பக்கட்டிற்குள் கை தவறிப்போட, அது ஓட்டையின் மூலந் தொலைந்துபோக, ரவி மூலம், ரேணுவின் தையற் பெட்டியிலே கிடந்த பணம் என் கணக்கிலே சேர்ந்ததா?

கள்ளன் ரவியா? நானா?

ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையைப் பற்றிய நினைவுகள்….

‘வந்தாறுமூலை சென்றல் கொலிச்! சேர் இறங்கவில்லையா?’ – கொண்டக்டரின் குரல்.

நன்றி தெரிவிக்கும் பாவனையும், அசட்டுத் தனமும் இணைந்து கலக்கும் பாங்கிலே அவர் முறுவலிக்கிறார்.

“ரேணு! தையல் டீச்சர் வந்தாவா?”

“வந்தா…”

“ரூபாய் களவு போனதைப் பற்றிச் சொன்னீரா?”

“சொன்னனான்…”

“பிள்ளையளை விசாரித்தா. ஒருத்தரும் எடுக்கேல்லையாம். நான் தான் வழியில் எங்கேயாவது தொலைத்திருப்பேன் என்று டீச்சர் சொல்லுகிறா …”

“அது எப்பிடியடி வழியிலே தொலையும்? தையல் பெட்டியிலே ஓட்டையா? ரூபாய்க்குக் கால் முறைச்சதா? கேட்டியாடி டீச்சரை?”

“கேட்டா அடிப்பா…”

“அவ நொட்டத்தான் இருக்குது. நாளைக்கு ஐந்து சதம் தாறன். பிள்ளையாரின்ரை உண்டியலிலை ‘அந்தக் களவாணிப் பெட்டையைக் காட்டு’ எண்டு நேந்து போட்டுட்டு வா. நானும் முடிச்சிலை காசு கட்டி வைக்கிறன். ஒரு கிழமையிலே கள்ளி யார் எண்டு தெரியுதோ இல்லையோ பாப்பம்.”

“சரி அம்மா…”

ரேணுவின் ரூபாய் அகப்படவில்லை. அப்படியாயின், அப்பணம் என் கணக்கிலே சேர்ந்திருக்கலாம். நாளைக்குக் காலையில் தேவாரம் முடிந்ததும், அவளிடம் ஒரு ரூபாய்க் கொடுத்து விவகாரத்தை முடித்துக் கொள்வதுதான் புத்தி.

தீர்மானத்திற்கு வந்த பின்னர், நேற்றையைப் போலவே இன்றும் உலாத்தலுக்குக் புறப்படுகின்றார்.

எந்த முடிவுக்கு வந்தாலும், ஊர்பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின் மீது சுரந்துகொண்டிருக்கும் அநுதாபம்.

“பித்தா பிறைசூடி பெருமானே
அருளாளா…”

பக்தியின் புதுப் புனலிலே தோய்த்தெடுக்கப் பட்ட பிஞ்சுக் குரல் பூஜையறையிலிருந்து மிதந்து வருகின்றது.

ஒரு ரூபாய் நாணயம் அதே இடத்தில் அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றது.

ரேணு ஸ்கூலிக்குப் போகும்பொழுது அதனைக் கொடுத்து, ரவிமூலம் நான். அவளுடைய பணத்தைத் திருடியதாகப் புழுகி வைக்க வேண்டும்.

புழுகுதல் சமன் பொய்யா?

வாய்மையின் இடத்தில் வைக்கப்படும் பொய்மை எது?

1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊவாப் புரட்சியிலே பங்கு பற்றிய கதாபாத்திரங்களுடன் சதாசிவத்தாரின் மனம் ஒன்றுகின்றது.

மேல் காற்று இழுத்ததா? நூல் நைந்து அறுந்ததா?

“அப்பா, அப்பா” எனக் குரல் எழுப்பியபடி ரவி படிப்பறைக்குள் நுழைகின்றான்.

“என்னடா ரவி?”

“மாமா ஒதுத்தர் அப்பாவைப் பாத்த கவந்தார்…”

‘யாராக இருக்கலாம்?’ என்ற வினாக் ‘குறியை முகத்திலே அப்பிக் கொண்டு சதாசிவத்தார் ஹோலுக்கு வருகின்றார். ‘அப்பொயின்மெண்ட்’ பிசகாது வித்துவான் நடராசா வந்து நிற்கின்றார்.

“வாருங்கள்….என்னுடைய படிப்பறைதான் வசதியான இடம்…ரவி, அம்மாவிடம் சொல்லுங்கோ, இந்த மாமாவுக்கு தேநீர் கொண்டு வரச் சொல்லி…”

“தேத்தாவா?”

“ஓம்…”

ரவி அடுக்களைப் பக்கமாகத் துள்ளிக் கொண்டு ஓடுகின்றான்.

சதாசிவத்தாரும் நண்பரும் படிப்பறைக்குள் நுழைகின்றார்கள்.

வித்துவ உலகம் ஒன்று அதற்குள் விரிகின்றது. நேர ஓட்டத்தின் பிரக்ஞை இற்றுவிடுகின்றது.

ஓர் உதிரிப் பொறி

சரித்திரம் என்பது எலும்புக் கூடுகளின் தேதிகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் வித்தையல்ல. அது ஜ“வத் துடிப்புள்ளது. இதன் காரணமாகத்தான், எதிர்காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையில் நியாய பூர்வமான வளர்ச்சியை அது கற்பிக்கின்றது. இதனை மறந்து சரித்திர உண்மைகளைச் சிறு சிறு அரசியல் ஆதாயங்களுக்காகத் திரித்துப் பேசுபவர்கள் சமுதாய விரோதிகள் – தேசத் துரோகிகள். அவர்களுக்கு ஏற்ற தண்டனை தூக்கு மேடையே.

பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பின் விரிவுரைகளுடன் சதாசிவத்தார். ஒன்றுகின்றார்.

“இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத்தையும், கலாசாரச் செல்வங்களையும் கட்டி வளர்த்ததிலும், பாதுகாப்பதிலும் தமிழர்களுடைய பங்களிப்பு மகத்தானதாகும். தனிச் சிங்கள இரத்தத்தின் இன்றைய சிரேஷ்ட வாரிசுகளாகத் திகழ்பவர்களின் மூதாதையர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகும், சுதேசியப் பண்பாட்டினை நிலைநாட்டத் தமிழ் மன்னர்கள் உழைத்தார்கள். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் இனத்தால் தமிழன், மதத்தால் சைவன். ஆனாலும், அவனுடைய ஆட்சியிலே, அவனுடைய ஆதரவுடனேயே, பௌத்த சமயத்தின் புனருத்தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நாட்டின் வைதீக பௌத்தத்தைப் பாதுகாப்பதாக நம்பப்படும் மல்வத்தை பௌத்த பீடத்தைத் தோற்றுவிக்கக் கால்கோளாக விளங்கியவனும் அவனே. சுய நயங்களை மட்டுமே கருதி, சிங்களப் பிரதானிகள் கண்டி நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயருக்குக் கையளிக்கப் பேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது, சிங்கக் கொடியின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இறுதி வரை போராடிய ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும் ஒரு தமிழன். கண்டி நாடு ஆங்கிலேயர் வசமாகிய பின்னரும், மூன்று நூற்றாண்டு காலமாக அந்நியருக்கு எதிராகக் கட்டி வளர்க்கப்பட்ட சுதந்திர தாகம் தணியவில்லை. இதனால், 1818 ஆம் ஆண்டில் ஊவா சுதந்திரப் போர் வெடித்துக் கிளம்பியது. கெப்பிட்டிப்பொலவும் பங்கெடுத்த அப்புரட்சிக்கு விலபாவே தலைமை தாங்கினான். அவனும் ஒரு தமிழனே…”

விரிவுரையை இடையிற் பிளந்து, கல்லூரி பியூன் வகுப்பறையில் நுழைகின்றான். அதிபரின் குறிப்பு ஒன்று கைமாறுகின்றது.

அதைப் பிரித்துக்கூடப் பார்க்காது சதாசிவத்தார் தொடர்ந்து வகுப்பினை நடத்துகிறார்.

அணி அடிக்கிறது; பாடம் முடிவடைகின்றது. அதிபர் அனுப்பிய குறிப்பினைப் பற்றிய பிரக்ஞை முளைக்கின்றது; அதனைப் பிரித்துப் பார்க்கின்றார்.

சீதையை விழுங்கப் பூமி பிளந்தது போல, அவரையும் விழுங்கப் பூமி பிளப்பதான அவதி!

குறிப்பினை மீண்டும் ஒரு தடவை அவரால் வாசிக்க முடியவில்லை. கண்களிலே தேங்கிய கண்­ர்த் துளிகள் பார்வைக்கு அந்தகப் போர்வை விரிக்கின்றன. அழுகை என்னும் பலவீனத்திற்குள் அவர் தன்னை முற்றாக ஒப்புக் கொடுக்கின்றார்.

பின்னும் ஒரு பொறி

ரேணு! நீ இறந்துவிட்டாயா? காவோலைகளே பழுத்து விழும் என்று சொல்வார்கள். நீ பச்சைக் குருத்தடி! ஆனைப்பந்திப் பிள்ளையாரின் பகற் பூஜைக்குச் சென்று அம்மாவின் தூண்டுதலின் பேரில், ஊர்பேர் தெரியாத உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின் கை அழுக வேண்டும் என்று பிரார்த்தனை செலுத்த உன் பிஞ்சு மனம் இடம் கொடுத்ததா?

தையல் டீச்சரிடம் கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் நாணயத்தைக் காலையிலே எடுத்து வைத்திருந்தேனே…அதனை உன்னிடந் தரக்கூடாது என்று தடுப்பதற்காகக் காலன், நடராசா என்ற உருவில், என் அறைக்குள் நுழைந்தானா?

ஸ்கூலில் வைத்த புத்தகங்களை இன்னொரு களவாணிப் பெட்டை எடுத்துவிடக் கூடுமென்ற அச்சத்தினாலா, எதிரே வந்த ‘லொறி’ யையுஞ் சட்டை செய்யாது, வீதியிலே பாய்ந்தாய்?

என் ரேணுக்குஞ்சு! லொறியின் சக்கரங்களுக்கிடையில் நீ மரணாவஸ்தைப்பட்ட அந்தக் கணம்…

அதிகாலையில், பக்தியின் புதுப் புனலிலே தோய்த் தெடுக்கப்பட்ட பிஞ்சுக் குரலிலே தேவாரம் பாடுவாயே! அதைக் கேட்டின் புற்ற கடவுளின் உள்ளத்தில், இந்தக் குருத்துப் பருவத்தில் உன்னைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற கொடூரம் எப்படி மனைகோலியது? எப்படி முற்றி விளைந்தது?

உன் கணக்குப் புத்தகத்தின் பக்கங்களுக்கிடையில் ஒரு ரூபாய் நாணயம் கண்டெடுக்கப் பட்டதே! என்னைப் போன்று நீயும் பணத்தை ஞாபக மறதியாக அங்கு வைத்து விட்டு…

ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்ட அந்தக் களவாணிப் பெட்டையின் கை அழுகவே இல்லை. அந்த அரூபி உன் அம்மாவைப் பார்த்து நகைத்துக் கொணடிருக்கிறாளா? இல்லாவிட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளாக உன் அம்மாவின் உள்ளம் ஏன் அணு அணுவாகச் சாம்பி அழுகிக் கொண்டிருக்கின்றது.

அதோ, பக்தி கட்டித்த பாவத்தில் அவள் தேவாரம் பாடுகிறாள். பாடவில்லை, அழுகிறாள். ஓயாத நீண்ட அழுகுரல்…

….பொறி

“அத்தா உனக்களாயினி அல்லேன்
எனலாமே…”

பூஜையறையிலே இருந்து வரும் குரல் சோகத்தின் கனிச்சாறு பிழிகின்றது.

படிப்பறையிலிருக்கும் சதாசிவத்தாரின் கண்களிலே பனித் துளும்பல். அதற்கு அணை சமைக்கும் முயற்சியில், பார்வையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிகின்றார்.

தனிக் கிளையைத் திருத்தவிசாகப் பெர்றறிருந்த ஒற்றை ரோஜா, யௌவனப் பூரிப்பின் மலர்ச்சி காட்டுகின்றது.

“ரவி! இங்கை வாருங்கோ…அம்மாவோட கூடத் தேவாரம் பாடுங்கோ…”

“அம்மா எல்லோருக்குமாகச் சேர்த்து நீங்கள் பாடினால் போதும்,” – ஐந்தாம் தமிழ் மலர்ப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிய வண்ணம் ரவி கூறுகின்றான்.

“நான் பாடிக்கொண்டே இருக்கின்றேன். கடந்த அஞ்சு வருடங்களாக எல்லோருக்குமாகச் சேர்த்துத் தான் பாடிக் கொண்டே இருக்கிறேனேயடா…இந்த வீடு சிரிக்க ஒரு பெண் குழந்தை வந்து இந்த வயிற்றிலே பூக்க மாட்டாளா?”

ஆவேசத்தில் வெட்கம் இற்றுவிடுகின்றது.

பூஜையறையில் விம்மற் சத்தம் கேட்கின்றது.

அக்குரல் சதாசிவத்தாரின் குழலட்டையைத் திட நிலைக்குக் கொண்டு வருவதைப் போல…

“ரவி இண்டைக்கு ஆடிச் செவ்வாய். நான் விரதம். எனக்காக ஒருதடவை வந்து பாடுவா மகனே!” கெஞ்சுதலிலே விம்மல் முட்டுகின்றது.

ஒரு ரூபாய் நாணயம், அதே இடத்தில், அப்படியே இருக்கின்றது.

டீயே! இன்றைக்கு ஆடிச் செவ்வாய் விரதமா? நீ எப்படித்தான் முறையிட்டாலும், நோன்பிருந்தாலும், ஓர் இரகசியத்தை மட்டும் கடவுள் உன்னிடம் சொல்லவே மாட்டார்.

ரவி பிறந்த பிற்பாடு தென்னிந்திய கல்வெட்டுகளைப் பற்றி ஆராய்வுகள் நடத்த இந்தியாவில் ஓராண்டு காலம் வாழ்ந்தேனல்லவா? அப்பொழுது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றிய அழுகுக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஓர் ஆணும் போதும் என்ற ஒருவகைத் திருப்தி. கருத்தடைக்கான சத்திரசிகிச்சை பெற்றேன். ஊர் திரும்பியதும் உனக்கு சமாதானம் கூறலாம் என நம்பினேன். ஆனால், நீண்ட நாள் பிரிவுக்குப் பின்னர் நீ என்னிடம் சொன்னவற்றைக் கேட்ட பொழுது…உன் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள எனக்கு உரிமையுண்டா? அந்த உண்மை எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக என்னையே சுட்டுக் கொண்டிருக்கின்றது. எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்த உண்மையைச் சொல்லுந் துணிவு என் நாவிற்கு ஏற்படவே மாட்டாது.

“சிறையாடும் மடக்கிளியே இங்கேவா தேனேடுபால் உணத்தருவேன்…”

பூஜையறையிலிருந்து இன்னொரு தேவாரம், பக்தியின் முற்றிய பாவத்துடன் பரம்புகின்றது. அத்துடன் ரவியின் பிஞ்சுக் குரலும் நேர்த்தியாக இழைகின்றது.

– சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *