கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,824 
 

நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு. சேரும் மாணவர்களுக்கோ படித்து தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசை. ஆனால் அதற்காக வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கூட்டத்தை சேர்ந்தவர்களுக்காக, மீசை நனையாமல் கூழ் குடிப்பதற்கென்று வடிவமைக்கப் பட்ட சிறப்பு “உறிஞ்சு குழல்” வகுப்பு. அனைவரின் வசதியையையும் உத்தேசித்து பணி முடிந்து வந்த பின் மாலை வேலைகளில் வகுப்பு மூன்று மணி நேரம் தொடர்ந்து நடக்கும். வகுப்பு ஆசிரியர்களும் நகரில் உள்ள பெரிய நிறுவனங்களில் மேலதிகாரிகளாக இருப்பார்கள், அதுதான் அவர்களின் மிக… மிக… முக்கியத் தகுதி.

அந்த ஆசிரியர்கள் தாங்கள் செயல்முறையில் அறிந்தவற்றையும் இணைத்து உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால் வெறும் “ஏட்டுச் சுரைக்காய்” போல் இல்லாமல் வகுப்பு உற்சாகமாகப் போகும். மாணவர்களும் கல்வி கற்கும் ஆர்வத்தில் உள்ளவர்களாதாலால் தவறாமல் வந்துவிடுவார்கள். ஆனால் வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தை வகுப்பில் செலவழிப்பதால் அனைவரும் அலுத்து சலித்து விளக்கெண்ணை குடித்தவர்கள் போல் அமர்ந்திருப்போம். சின்ன வயதில் பெற்றோர்கள் செலவழித்த பொழுது கல்லூரியில் வகுப்புக்கு மட்டம் போட்டவர்கள், திரைப்படத்திற்கு சென்றவர்கள் எல்லோரும், சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் பொழுது தவறாமல் வகுப்புக்கு வருவது காலம் செய்த கோலம். முதுநிலை வகுப்பென்பதால் மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

அன்று நடந்த வகுப்பை எடுத்தவர் மிகப்பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அத்துடன் நாட்டின் மிகப்பிரபலமான நிறுவனத்தின் உயர் அதிகாரியாகவும் இருப்பவர். அதாவது பேரன்பிற்குரிய நம் அப்துல் கலாம் ஐயா போன்று என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வகுப்பில் இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. வகுப்பிற்கு பதிவு செய்யும் நாளில் அடித்துப் பிடித்து செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த வகுப்பிற்காக காத்திருந்து ஒரு ஆண்டு விரயமாகிவிடும். அவரைப் பற்றிய இந்த நீண்ட முன்னுரை அவர் மேன்மையை, முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டது. அவரது பெருமை தெரிந்தால்தானே அவர் சொன்ன கருத்து எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

இப்பொழுது வகுப்பிற்கு போவோம். வகுப்பு ஆரம்பித்து சிறிது நேர பாடத்திற்கு பிறகு ஆசிரியர் ஃப்ராங்க் கேட்டார்.

“சிறந்த நிர்வாகியாக இருக்க ஒருவருக்கு என்ன தகுதி வேண்டும், எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். முதல் வரிசையில் இருப்பவரில் இருந்து ஆரம்பிக்கலாம், எங்கே நீங்கள் சொல்லுங்கள், என்ன தகுதி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று முதல் மாணவரிடம் கேட்டார்.

“தன்னம்பிக்கை”

ஃப்ராங்க் இல்லை என்று தலை அசைத்து அடுத்தவரைப் பார்த்தார். இதற்குள் நாங்கள் சிறந்த நிர்வாகியின் தகுதி என பொதுவாக வழக்கில் உள்ள தகுதிகளையோ அல்லது இதுவரை பாடத்தில் படித்ததையோ மனதில் தேர்வு செய்து கொண்டோம்.

“வழிகாட்டி செல்லும் திறன்”
“இல்லை, அடுத்து?”

“அனுசரித்துப் போகும் குணம்”
“ம்ஹூம்”

“வசீகரிக்கும் குணம்”
“அதிகாரம் செலுத்தும் திறமை”
“பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் பண்பு”
“முடிவெடுக்கும் திறமை”
“நிறைய பணம்”
“எதற்கும் கலங்காத மனம்”
“நிர்வாகயியல் பட்டம்”
“சிரித்த முகம்”
“மோசமான சூழ்நிலையிலும் பொறுப்பேற்பது”
“எதிர்த்து நிற்கும் குணம்”
“பொறுமை”
“புத்திசாலித்தனம்”
“திறமையான ஊழியர்களை திருப்தியுடன் வைத்துக் கொள்வது”
“ஊழியர்களை மனிதர்களாக மதிப்பது”
“தகுதியற்றவர்களை வெளியேற்றுவது’

வரிசையாக நாங்களும் சொல்லிக்கொண்டே போனோம்.

ஃப்ராங்க்கோ “ஆமாம் சாமி” என்பதற்கு எதிர்ப்பதமாக “இல்லை சாமி”யாகிப் போனார். இதைப் படிக்கும் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தகுதியை இங்கே சொல்லுங்கள். நிச்சயம் அந்த பதிலும் சரியான பதிலாக இருக்காது. வகுப்பில் உள்ள அனைவரும் ஒரு சுற்று பதில் சொல்லியாகிவிட்டது. ஃப்ராங்க்ற்கு மட்டும் திருப்தியில்லை.

“உங்களுக்கு யோசிக்க மேலும் அவகாசம் வேண்டுமா?”
“ஆமாம்”
“சரி, பத்து மணித்துளிகள் எடுத்துக் கொள்ளுங்கள்”

எங்களை தனியே விட்டுவிட்டு ஃப்ராங்க் வெளியில் சென்று அறைக்கு வெளியே தாழ்வாரத்தின் கைப்பிடியைப் பிடித்தவாறு வானத்தை வெறித்து நோக்கினார்.

எளிதான பதில் கூட தெரியாத இந்தக் கூட்டம் எப்படி நிர்வாகயியலில் தேறப் போகிறது என நினைத்தாரா, இல்லை அவர் சரியாக பாடம் நடத்தவில்லை என தன்னையே நொந்து கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். நானும் நம் கணித நூல்களில் விடைப்பக்கம் இருக்குமே அதுபோல அந்த புத்தகத்திலும் கடைசியில் ஏதாவது இருக்குமா எனத் தேடிப்பார்த்தேன். அந்தக் கவைக்குதவாத புத்தகத்தில் அப்படி ஒன்றையும் காணோம். சில மாணவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பில் மடிக்கணினி, இணைய இணைப்பு, கைபேசி இல்லாத காலம் என்பதால் கூகிளில் தேடி பதில் கண்டுபிடிக்க முடியாத நிலை.

மீண்டும் உள்ளே வந்த ஃப்ராங்க் இப்பொழுது இந்தக் கோடியில் இருந்து ஆரம்பித்தார். நாங்களும் பதில்களை மாற்றி சொன்னோம், ஆனால் அவை அடுத்தவர்கள் சொன்ன பதில்களின் மறுசுழற்சிதான். ஃப்ராங்க் வெறுப்பேறி பாதியிலேயே நிறுத்தச் சொன்னார்.

“உங்களால் சரியான பதில் சொல்ல முடியாது எனப் புரிகிறது. நேரத்தை வீணடிப்பானேன், உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன்,” என்றவர் தான் கொண்டு வந்த கோப்பிலிருந்து ஒரு செய்தித்தாளின் சில நகல்களை உருவினார். வரிசைக்கு ஒன்றாக ஒரு நகல் கொடுத்தார்.

அது ஞாயிறன்று வரும் செய்தித்தாளின் கேலிச் சித்திரங்கள் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டது. ‘ப்லான்டி’ (Blondie) என்ற நகைச்சுவை சித்திரக் கதை அதில் சித்தரிக்கப் பட்டிருந்தது. கதைப்படி ப்லான்டியின் கணவன் ‘டேக்வுட் பம்ஸ்டட்’ (Dagwood Bumstead) ஒரு சாப்பாட்டுராமன், சோம்பேறி, தூங்குமூஞ்சி பெரும்பாலான கதைகளில் அவன் சோஃபாவில் படுத்து தூங்கியவாறுதான் இருப்பான் (இந்த விளக்கம், அந்தக் கதைகளைப் படிக்காத யாராவது ஓரிருவர் இருந்தால் அவர்களுக்காக கொடுக்கப் பட்டது).

அவர் கொடுத்த நகலில் இருந்த கதையும் அது போல ஒன்றுதான். வீட்டில் மனைவி, மகன், மகள் என ஒவ்வொருவரும் வந்து டேக்வுட்டிடம் உதவி கேட்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வேலையைக் கொடுப்பார்கள். நம் கதாநாயகனோ, இதோ செய்கிறேன் …இதோ செய்கிறேன் என்று படுத்தே கிடப்பான். ஒவ்வொருவராக பொறுத்திருந்து பார்த்து விட்டு பிறகு அவர்களே தங்கள் வேலையை முடித்துக் கொள்வார்கள்.

அதைப் படித்துவிட்டு நாங்கள் குழப்பத்துடன் ஃப்ராங்க்கின் முகத்தைப் பார்த்தோம். அவர் சிரித்தவாரே எங்களிடம் சொன்னார், “இப்பொழுது புரிகிறதா சிறந்த நிர்வாகியாக, மற்றவர்களை வேலை வாங்குவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று? நீங்கள் ஒரு “சோம்பேறி”யாக இருக்க வேண்டும். இந்த ஆளிடம் சொல்வதற்கு நானே செய்துவிடலாம் என நினைப்பவர்கள் அடுத்தவர்களை வேலை வாங்கும் தகுதி இல்லாதவர்கள்.”

பின் குறிப்பு: இது நூறு விழுக்காடு உண்மை நிகழ்ச்சி கதை வடிவம் கொண்டுள்ளது. இதைப் படித்து நடைமுறைப் படுத்த நினைத்தால் அது உங்கள் சொந்த விருப்பம், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்.

செயல்முறை பகுதி/உதவி:
அடுத்தவரை வேலை வாங்க சில யுக்திகள்:
(1)
இது சிங்கப்பூரின் “ஒலி” பண்பலை வானொலியில் கேட்டது. ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால் சரியாக நினைவில்லை. வீட்டில் உங்களுக்கு கணவர் கைவேலைகளில் உதவியாகஇருப்பாரா? என்பதைப் பற்றிய நேயர்களின் கருத்து நிகழ்ச்சி. அதில் ஒரு பெண்மணி நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம் கூறியது.

“எங்க வீட்டுக்காரர் எனக்கு நல்லா உதவி செய்வாருங்க”

“அட, அப்படியாம்மா …நீங்க கொடுத்து வச்சவங்கதான். எப்படி செய்வார், என்னென்ன உதவி செய்வார் …இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்”

“அதுவாங்க, அது வந்து… அவருக்கு எல்லா வேலையையும் அழகா, நறுவிசா செய்யனுங்க. அவரும் எது செஞ்சாலும் நல்லா நேர்த்தியா செய்வாரு.

எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தெரியாதுங்க. ஏதோ கசா முசான்னு காரியத்த பண்ணி முடிச்சுடுவேன். அதப் பார்க்க அவருக்குப் பொறுக்காது. சரி,சரி நீ சும்மா இரு, நானே செஞ்சு தரேன்னு சொல்லிட்டு, அவரே செஞ்சு முடிச்சிடுவாரு”.

(2)
இந்த யுக்தி என் தம்பி என் அம்மாவிடம் உப்பயோகித்தது. இப்பொழுது மனைவியிடம் இது செல்லுபடியாகவில்லை என நினைக்கிறேன். அதாவது ஒரு வேலை கொடுத்தால், செய்வதற்கு முன், கேள்வி மேல் கேள்வியாக ஒரு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு உயிரை எடுக்கவேண்டும்.

“தம்பி, காய்காரம்மா வரல, சைக்கிள எடுத்திட்டு சீக்கிரமா கொஞ்சம் கடைக்குப் போய் இந்த லிஸ்ட்ல இருக்கிறத வாங்கிட்டு வாயேன்”

“ஏன் சைகிள்ளதான் போகனுமா, என் டூ வீலர்ல போகக் கூடாதா?”

நீ எதுலயோ போய்க்க, ஆனா சீக்கிரமா வா, பாத்து வாங்கு… பழசு, பூச்சி இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு வராத”

“ஏன், அதையும் லிஸ்ட் மேலேயே எழுதிடுங்களேன், கடைக்காரன் பாத்துட்டு நல்லா காயா தருவான்ல, எனக்கு எப்படி பாத்து வாங்கறதுன்னு தெரியாது”

“அவங்கள நம்ப வேண்டாம், ஃப்ரெஷா இருக்கான்னு நீயே பாரு. அப்படியே சின்ன வெங்காயம் நல்லா இல்லன்னா கைய வீசிக்கிட்டு வந்திடாத, பெரிய வெங்காயமாவது வாங்கிட்டு வா?

“பெரிய வெங்காயம்னா என்ன அளவு?

“அதே அளவுதான், இது ஒரு கிலோன்ன அதுவும் ஒரு கிலோதான். சீக்கிரம் போ, சமைக்க நேரம் ஆவுதுல்ல”

“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகவா? அதுக்குள்ள இந்த கேம் முடிஞ்சுடும்.”

“நீ பத்து நிமிஷம்னா எவ்வளவு காலம் எடுத்துப்பேன்னு எனக்குத் தெரியும், உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, என் புத்தியத்தான் சொல்லனும், தொண்ட தண்ணி வத்தினதுதான் மிச்சம், நான் வேலைக்காரிய அனுப்பிக்கிறேன்”.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *