கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 11,477 
 

“நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது.

கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து அரை பாட்டில் குளிர்ந்த நீரைக் காலி செய்துவிட்டு, ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சுழலவிட்டு, மீண்டும் கட்டிலில் தன் உடலைத் திணித்தாள்.

தப்பிச் செல்ல முடியாத ஏக்கத்தில் இன்னொரு தரம் கிறீச்சென்று சப்தமெழுப்பி ஓய்ந்தது அந்த இரும்புக்கட்டில்.

சித்ராக்குட்டி

மீண்டும் தன் கண்களை மூட மிகுந்த பிரயாசை வேண்டியிருந்தது சரோஜாவுக்கு. பகலிலோ இரவிலோ எப்போது தூங்கினாலும் சரி, இப்படிப் பாதித் தூக்க அபார்ஷன் விழிப்புகள் அவளுக்குப் பழக்கமாகி விட்டன, கடந்த பத்துப் பதினைந்து நாட்களாகவே.

“”எங்களை ஏமாற்றியதன் பலனை நீங்க நல்லா அனுபவிப்பீங்க” .

ஓயாமல் சரோஜாவின் காதுகளில் அறைந்து கொண்டே இருக்கிறது அந்தக் குரல்.

சித்ராகுட்டியின் தகப்பனின் குரல்.

ஓர் ஏழைத் தகப்பனின் அடிபட்ட குரல்.

“சே கஷ்டப்படுகிற குடும்பம் என்று கொஞ்சம் இரக்கப்பட்டுப் பெண் கேட்கப் போனது தப்பாப் போச்சு’ – நூற்றியெட்டாவது தடவையாகத் தன்னையே நொந்து கொண்டாள் சரோஜா.

போன மாதம் நடந்த விஷயம் அது.

புராண வைராக்கியம், மயான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் கூறப்படுவதில் முதலாவது வைராக்கியத்தைத் தன் வாழ்வில் முதன் முதலாகத் தானும் கொஞ்சம் நடைமுறைப்படுத்திப் பார்க்கத் துணிந்தாள் சரோஜா.

கோயில் ஒன்றில் கேட்ட கதாகாலட்சேபத்தின் விளைவாக, சற்றே வசதியான நிலையிலிருக்கும் தங்கள் குடும்பத்திற்கு, ஓர் ஏழைக்குடும்பத்திலிருந்து பெண் எடுத்தால் என்ன என்ற சிந்தனை வேரூன்றத்தொடங்கியது சரோஜாவின் மனசில்.

சிறிய வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், அவர் விட்டுச் சென்ற சொந்தவீடு, ஓரளவு பணம், நகை இவற்றுடன் தன்னுடைய டீச்சர் வேலைச் சம்பளத்தையும் கொண்டு வசதியாகவே வாழ்ந்து வந்த சரோஜா, தன் ஒரே மகன் ரகுவுக்கும் நல்ல படிப்புக்கு வழி செய்து கொடுத்தாள்.

புத்திசாலிப் பையன் ரகுவும் அபார மூளை, அயராத உழைப்பு, கை நிறையச் சம்பளம், மனசு முழுக்க அம்மாவின் மீதான பாசம் என்றே வளர்ந்திருக்கிறான். திருமணம் என்ற அடுத்த மைல் கல்லை நோக்கி அவனது வாழ்க்கைப் பயணம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ரகுவுக்கு ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து பெண்ணெடுத்தால் புண்ணியத்துக்குப் புண்ணியமாகவும் போகும். கைக்கு அடக்கமான ஒரு மருமகள் கிடைத்ததாகவும் இருக்கும் என்ற நினைப்பு காலட்சேபம் கேட்ட நாளில் முளைத்தெழுந்து, சில நாட்களிலேயே அது விருட்சமாய் வளர்ந்து நின்றது. அதை நடைமுறைப்படுத்த முனைந்ததுதான் தப்பாகிப் போய் விட்டது.

மகன் ரகுவுக்குத் தெரியாமலேயே தரகரிடம் சொல்லிவைத்துக் கிடைத்த வரன்களில் ஜாதகமும் புகைப்படமும் மிகவும் மனசுக்குப் பிடித்ததாக அமைந்தது சித்ராக்குட்டியுடையதுதான்.

சித்ராக்குட்டி.

அப்படித்தான் செல்லமாக அழைத்தார்கள் அவளைப்பெற்றவர்கள்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரை. ஒண்டுக் குடித்தனம். வட்டிக் கடையில் கணக்கெழுதும் அப்பா. வரிசையாக ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஓய்ந்து போன நோயாளி அம்மா. குதிர்ந்து நிற்கும் மூன்று பெண்களில் மூத்தவள்தான் இந்த சித்ரா. ஆனாலும் குட்டி, படு சுட்டி.

குழி விழும் மாம்பழக்கன்னம். குறு குறு விழிகள். பளிச்சென்ற நெற்றி. நீண்ட அடர்ந்த கூந்தல் அருவி. ரகுவுக்கு ஈடான உயரம். இந்த ஏழைக் குடிசைக்குப் பாரம். ரகுவுக்குத் தெரியாமல் (எப்படியும் அம்மா பேச்சைத் தட்டமாட்டான் என்ற துணிச்சலுடன்), அவன் ஆஃபீஸ் போயிருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடுப்பகலில் பெண் பார்க்கச் சென்றிருந்தாள் சரோஜா.

பார்த்தவுடன் பிடித்துப்போனது.

“காபிக்குச் சர்க்கரை போதுமாம்மா” என்ற சித்ராக்குட்டியின் கிளிக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் இவள்தான் மருமகள் என்று ஒரு போதையே தலைக்கேறி விட்டது சரோஜாவுக்கு.

“வரும் ஞாயிற்றுக்கிழமை பையனையும் அழைத்துக்கொண்டு வந்து ஒரு தரம் பார்த்து விடுகிறேன், அதுவும் ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான். எங்க பையனைப் பற்றிக் கவலையில்லை. நான் சொல்லுவதற்கு மறு பேச்சுப் பேச மாட்டான். உங்க பெண்ணுக்கு என் பையனைப் பிடிக்கணும் இல்லையா? என்ன சொல்றே சித்ராக்குட்டீ?”

சரோஜாவின் பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு அந்தக் குடும்பமே உணர்ச்சிவசப்பட்டுக் குப்புறக் கவிழ்ந்தது. மூத்த பெண்ணுக்கு ஒரு சொர்க்கவாசல் திறந்தது என்று மொத்தக் குடும்பமும் மகிழ்ந்தது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு வயசான பெண் தேவதையாகவே பார்க்கப்பட்டாள் வருங்கால சம்பந்தி சரோஜாம்மாள்.

“அப்ப சரி, என் பையன் வந்து பார்த்த பிறகு ஓரிரண்டு வாரத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாம். கல்யாணத்தை உங்க வசதிக்குத் தகுந்தபடி செஞ்சு கொடுங்க. என்ன சரியா?”

சித்ராக்குட்டியின் அப்பா தன் வயதையும், அம்மா தன் நோஞ்சான் உடம்பையும் ஒரு கணம் மறந்து சரோஜாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

“உங்க பெரிய மனசுக்கு நீங்க ரொம்ப நல்லாயிருக்கணும்மா” என்று வார்த்தைகளால் சாமரம் வீசிக்கொண்டே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிள்ளையாண்டான் ரகு, தன் கம்பெனி முதலாளி சுவாமிநாதன் தனக்குப் பெண் கொடுக்கிறேன் என்று சொல்லியதாகத் தெரிவித்த மறுகணமே சரோஜாவின் காலட்சேப வைராக்கியம் கலகலத்துப் போனது.

யோசிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை சரோஜா.

கோடீஸ்வர முதலாளி வீட்டுப் பெண் எங்கே? இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டின் பெண் வாரிசு எங்கே?

சிலமணி நேரத்துக்கு முன்பு தான் சித்ராக்குட்டியைப் பெண் பார்த்துவிட்டு வந்த தகவலை சரோஜா தன் மகனுக்குச் சொல்லவே இல்லை.

இரக்கம், புண்ணியம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு, தன் அன்பு மகனுக்கு வந்துள்ள பேரதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ள அவள் தயாராயில்லை.

“சரிப்பா ரகு, நாளை மறுநாள் சம்பந்தம் பேச அவங்களை வரச்சொல்லிவிடு” என்று சொல்லிய சரோஜாவால், “”காபிக்குச் சர்க்கரை போதுமாம்மா?” என்று கேட்டுக் கன்னம் குழியச் சிரித்த சித்ராக்குட்டியைத் தன் நினைவுகளிலிருந்து சுலபத்தில் இறக்கிவைக்க முடியவில்லை. விடிவதற்குச் சற்றுநேரம் முன்புதான் கண்ணயர்ந்தாள்.

பொழுது விடிந்தது.

சமையலில் மனசு செல்லவில்லை.

ரகுவை ஆபீஸ் கேன்டீனிலேயே சாப்பிட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவன் கிளம்பிய மறு நிமிடமே விருட்டென்று போனை எடுத்த சரோஜா சித்ராக்குட்டியின் அப்பா கொடுத்திருந்த வட்டிக்கடை நம்பரை டயல் செய்தாள். ஏதேனும் பொய் சொல்லியாவது அவர்கள் சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

“நமஸ்காரம், சொல்லுங்கம்மா” என்று உற்சாகமூர்த்தியாகக் குரல் கொடுத்தவரிடம் .

“தப்பா நினைச்சுக்காதீங்க, நேத்து நான் ஏதோ ஒரு வேகத்துலே உங்க வீட்டுக்கு வந்து, உங்க பெண்ணை என் பையனுக்குப் பண்ணிக்கிறாதாகச் சொல்லிவிட்டேன். விஷயம் தெரிஞ்சு என் அண்ணன் என்னிடம் பிலுபிலுன்னு சண்டைக்கு வந்துட்டார். அவருடைய பெண் இருக்கும்போது எப்படி வெளியிலே சம்பந்தம் பேசலாம்னு ஒரே சத்தம் போட்டார் அண்ணன்”

“நீங்..நீங்க…என்னம்மா சொல்ல வர்றீங்க?” எதிர்முனைக்குரல் தழுதழுத்தது.

“விஷயம் இதுதாங்க. உங்க பெண் சித்ராவுக்கு வேறு நல்ல இடத்துல வரன் பாருங்க. என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உங்க பெண்ணுக்கு”

“போதும், நிறுத்துங்கம்மா” என்று இடைமறித்த குரலில் அடிபட்ட வெறி தெரிந்தது.

“என்னங்க இது அக்கிரமம், நீங்களே பெண் கேட்டு வந்தீங்க. சம்மதம் சொன்னீங்க. அந்த அறியாத பொண்ணு மனசுலே தேவையில்லாத ஆசையை வளர்த்துட்டு, அடுத்த நாளே மனசு மாறி இப்போ என் பொண்ணு வேண்டாம்னு சொல்றீங்க. உங்க பேச்சை நம்பி மாப்பிள்ளையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் நாங்களும் சம்மதம் சொன்னோம். கஷ்டப்படுகிற குடும்பத்துல பிறந்த என் பொண்ணுக்கு நல்ல இடம் அமைஞ்சதுன்னு நாங்க பட்ட சந்தோஷத்துக்கு ஒரு ராத்திரிதான் ஆயுளா? ஏழைப்பட்ட குடும்பம்னா உங்களுக்கு அவ்வளோ இளக்காரமாப் போயிடுச்சா? இதோ சொல்றேன் கேளுங்கம்மா. எங்களையும் எங்க பெண்ணையும் இப்படி ஏமாற்றியதன் பலனை நீங்க கட்டாயம் அனுபவிப்பீங்க”

பேசிய குரல் சட்டென்று தன்னைத் துண்டித்துக் கொண்டது.

“திக்’கென்று நெஞ்சை அடைத்தது சரோஜாவுக்கு.

இதென்ன வம்பாகி விட்டது. கோடீஸ்வரக் குடும்பத்தின் சம்பந்தத்திற்காக ஓர் ஏழைக்குடும்பத்தின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துக் கொண்டு விட்டோமோ.

“நீங்க நல்லா அனுபவிப்பீங்க”.

பத்தடி நீளத்தில் பளபளவென்று ஒரு கார் வந்து நின்றது.

“வாங்க, வாங்க” என்று பட்டுப்புடவையின் தலைப்பை இழுத்துப் போர்த்தியபடி வாசலுக்கே சென்று வரவேற்றாள் சரோஜா.

உடம்பெல்லாம் பட்டுச்சரிகையும் தங்கமும் இழைத்து, கிடைத்த இடத்தில் கொஞ்சம் முகமும் வைத்துப் பொருத்தியது போன்ற ஓர் ஐம்பது வயதுப்பெண்மணியுடன் கிரே கலர் கோட்டு சூட்டில் இதுதாண்டா பணக்காரக் களை என்பது போல் காட்சியளித்த சுமார் அறுபது வயசுக்காரர் பிரசன்னமாகி, “”நமஸ்காரம்மா” என்றார்.

இவர்களுடன் காரிலிருந்து இறங்கிய இளம் பெண் ஜீன்ஸ் டாப்ஸில் பளபளத்தவள், வாடாமல்லிக் கலர் நகப் பாலீஷும் உதட்டுச் சாயமுமாக சங்கோஜம் துறந்தவளாய் “ஹாய் மாமி” என்று சிரித்தாள்.

சரோஜாவின் மனம் அனிச்சையாக சித்ராக்குட்டியை ஒருகணம் நினைத்துப் பார்த்தது.

“வாங்க, உள்ளே வந்து உட்காருங்க. ரகு எல்லாம் சொன்னான். உங்க சம்பந்தம் கிடைக்கிறது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றாள், பல்செட்டு முத்துக்கள் பளீரிட. சரோஜா வீட்டு சோபாவின் பழைய மோஸ்தர் மனசுக்குப் பிடிக்காததைபோன்ற ஒரு தோரணையில் பட்டும் படாமலும் அமர்ந்து கொண்ட ரகுவின் முதலாளி,

“எங்களுக்கும் சந்தோஷம்மா, உங்க பையன் ரகு நல்ல சின்சியர் வொர்க்கர். கம்பெனியை நல்லா பொறுப்பாகப் பார்த்துக்கிறார். கூடிய சீக்கிரம் சேல்ஸ் மேனேஜரிலிருந்து ஜி.எம். ஆகப் புரமோஷன் கொடுக்கப் போகிறேன். அப்படியே எங்கள் வீட்டு மாப்பிள்ளையாகவும் டபுள் புரமோஷன் கொடுத்திடலாம்னு இருக்கேன்” என்று சொல்லித் தன் பேச்சைத் தானே ரசித்து ஒரு அதிரடிச் சிரிப்பு சிரித்தார்.

“எனக்கும் ரொம்ப சந்தோஷம். என் வீட்டுக்காரர் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதுதான் ஒரே வருத்தம்”

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்த ரகு, “”வாங்க சார் வாங்க மேடம்” என்று தன் வருங்கால மாமனார் மாமியாரை வரவேற்றான்.

“ஹாய் சுமி”

“ஹாய் ரகு”

ஏற்கெனவே பழகியிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்ட சரோஜா, “டிஃபன் சாப்பிடலாமே?” என்றாள்.

“இன்னொரு நாள் சாப்பிடுறோம்மா, ஜஸ்ட் எ கூல் ட்ரிங்க் வில் டூ” என்றார் முதலாளி.

“யெஸ் ஸார்” என்று எழுந்த ரகு, ஃப்ரிட்ஜைத் திறந்து தயாராக இருந்த பழச்சாற்றைக் கண்ணாடி தம்ளர்களில் நிரப்பி, டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து,

“ப்ளீஸ் டேக்” என்று சொல்லி உபசரித்தான்.

“அப்போ, அடுத்த வெள்ளிக்கிழமை எங்க பங்களாவிலே நிச்சயதார்த்தம், வந்துடுங்கம்மா” என்று சரோஜாவிற்குத் தகவல் சொல்வது போல் சொல்லிவிட்டு எழுந்துகொண்டார் முதலாளி மாமனார். பட்டுச்சரிகை போர்த்திய நகைக்கடையும் கிளம்பியது.

“பை ரகு” என்று அவன் முதுகில் செல்லமாகத் தட்டி விட்டு, பியூட்டி பார்லர் மிச்சம் வைத்த தலைமுடியைச் சிலுப்பிக் கொண்டு கிளம்பினாள் சுமி.

“அந்த சித்ராக்குட்டியை மறந்துவிடடி சரோ’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சரோஜா, வந்தவர்கள் மூவரையும் வழியனுப்பினாள்.

பிள்ளை கேட்டு வந்தவர்கள் ஒரு தாம்பூலம், பழம், தேங்காய், புஷ்பம் எதுவும் ஒரு மரியாதைக்குக் கூட வாங்கி வராமல் வெறும் கையை வீசி வந்ததும், கல்யாணப்பெண் என்று சொல்லப்படுபவள் வருங்கால மாமியாருக்கு ஒரு நமஸ்காரம் கூடச் செய்யாததும், மாப்பிள்ளையாகப் போகிறவன் தன் கையால் கூல் டிரிங்க் கொண்டு வந்து கொடுத்து உபசரிப்பதும்.

“நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சாபம் வேலை செய்கிறதா?

சற்றே தன் எண்ணங்களை உதறி உதிர்க்க முயன்றாள் சரோஜா.

அந்தச் சித்ராவின் தகப்பன் யார் எனக்குச் சாபம் கொடுக்க? என் பிள்ளைக்கு ஒரு கோடீஸ்வர சம்பந்தம் அமையும் போது பெற்றவளான நானே அதைக் கெடுக்க முடியுமா? உலகத்தில் ஒரு பெண்ணைப் பிள்ளை வீட்டார் வந்து பார்த்ததாலேயே கலியாணம் செய்துகொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம்?

தனக்குதானே பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்பும் சொல்லிக் கொண்டாள் சரோஜா, தனக்குச் சாதகமாக.

படகுக்கார் கிளம்பியதும் பவ்யமாகக் கையசைத்து வழியனுப்பி விட்டு உள்ளே வந்த மகனின் கன்னத்தைத் தடவி, “”ரகு, நீ அதிர்ஷ்டக்காரன்டா” என்று திருஷ்டி கழித்தாள் சரோஜா.

சுவாமிநாதனின் பங்களாவில் நடந்த நிச்சயதார்த்தமும் சரி, ஒரு மாதம் கழித்து நகரின் ஆகப்பெரிய திருமண மண்டபத்தில் நடந்தேறிய ரகு சுமி கல்யாணமும் சரி, நிகழ்வுகளின் ஒவ்வொரு துளியிலும் பணக்கார வசதியின் முத்திரையுடன் விளங்கின.

வந்திருந்த சரோஜா உறவுகள் அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல, ரகுவின் அதிர்ஷ்டத்தை மெச்சிவிட்டுப் போனார்கள்.

சரோஜாவும் நீங்க நல்லா அனுபவிப்பீங்க-வையும், சித்ராக்குட்டியின் பால் வடியும் முகத்தையும் சில வாரங்கள் மறந்திருந்தாள்.

கல்யாண கலாட்டாக்கள் முடிவுக்கு வந்து, ரகுவும் முதலாளி மகள் சுமியும் தேனிலவுக்காக சிம்லாவுக்குக் கிளம்பிப்போன அடுத்த கணமே, “காபிக்கு சர்க்கரை போதுமாம்மா?” என்றகேள்வியும் குழந்தைச்சிரிப்புமாய் அந்த சித்ராக்குட்டியின் முகமும் மீண்டும் சரோஜாவின் நினைவு அடுக்குகளில் குடியேறிக்கொண்டது.

நானும் கூட வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் செல்லக்குழந்தையைப்போன்று, சித்ரா அப்பாவின் “நீங்க நல்லா அனுபவிப்பீங்க’ அசரீரியாய்க் காதுகளை வட்டமிட ஆரம்பித்தது.

டிவி சீரியல்களைப் பாதியில் அணைத்துக் கண்ணை மூடுவதும், மூடிய கண்களை நீண்ட நேரம் மூடியிருக்க முடியாமல் விழிப்புக் கண்டு கட்டில் கிறீச்சிடக் கீழிறங்குவதும், பாதிக்கு மேல் படிக்க முடியாமல் நாவல்களும் வாரப் பத்திரிகைகளும் கூடைக்குள் எறியப்படுவதும், அரைகுறையாய்த் தின்றுவிட்டு மீந்த உணவுப்பண்டங்களுடன் சாப்பாட்டுத் தட்டு வேளை தவறாமல் காய்ந்து போய் ஸிங்கில் கிடப்பதுமாக நாட்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்தன.

நடுவில் ஒரு நாள் காலை வேளையில் கேபிள் டிவி வேலை செய்யாமல் போனதைச் சரி செய்ய மாலை வரை தாமதம் செய்த கேபிள் ஆட்களைப்பார்த்துப் பொறுமையிழந்து போய், “நீங்க இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்பீங்க” என்று சொல்லிவிட்டு, ஒரு கணம் உதட்டைக் கடித்துக்கொண்டு தன்னையே குட்டிக்கொண்டாள் சரோஜா.

இரவு ஏழுமணிக்கு டெலிபோன் அழைத்தது. செல்போனுக்கு சரோஜா பழகவில்லை.

“நாளைக்குத் திரும்பி வர்றோம்மா” என்று டெலிபோனில் சொன்ன மகனை மருமகளுடன் எதிர்கொள்ளத் தயாரான சரோஜாவின் கனவுகளில் மீண்டும் ராத்திரி முழுக்க சித்ராக்குட்டியும் அவள் அப்பாவும் கொட்டமடித்தார்கள்.

பொழுது விடிந்தது. குளித்துவிட்டுப் பூஜைகளை முடித்துக்கொண்டு, மதியம் வரவிருப்பதாகச் சொல்லியிருந்த ரகுவுக்குப் பிடித்த அவல் பாயசம், மோர்க் குழம்பு, புதினாத் துவையல், உருளைக்கிழங்கு பொரியல் எல்லாம் செய்து வைத்துக் காத்திருந்தாள்.

சூடு குறையாத மூடிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டவையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடும் சுவையும் குறைய ஆரம்பிக்க, மாலை நான்கு மணிக்குப் போன் ஒலித்தது. ரகுதான் பேசினான் .

“தப்பா நினைச்சுக்காதம்மா. டூர் முடிஞ்சு நேரே சுமி வீட்டுக்கு வந்துட்டேன். அப்புறம் ஒரு விஷயம்மா.டோண்ட் மிஸ்டேக் மீ. என்னை இந்த வீட்டிலேயே தங்கிவிடச் சொல்லிட்டாங்கம்மா. அன்றன்றைக்கு இரவே கம்பெனி விஷயங்களையெல்லாம் மாமாவோடு டிஸ்கஸ் பண்ணுவதற்கு இதுதாம்மா ரொம்ப வசதி. நீ கவலைப்படாதே. வாரா வாரம் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போகிறேன். உன் கூடவே துணைக்கு இருக்க ஒரு நம்பகமான வேலைக்காரியை ஏற்பாடு செய்து விடறேம்மா. என்னம்மா சொல்றே நீ. ஆர் யூ அப்ùஸட். டோண்ட் ஒர்ரிம்மா. நான் வாரம் தவறாமல் வந்து பார்த்துக்கிறேன்ம்மா. ஹலோ….அம்மா…. ஹலோ…”

படக்கென்று டெலிபோனை வைத்துவிட்டு, உடம்பெல்லாம் வியர்வையும் படபடப்புமாய்க் கட்டிலில் சாய்ந்து கொண்ட சரோஜா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“சித்ராக்குட்டி. நான் அனுபவிக்க ஆரம்பிச்சாச்சுடி”.

– அக்டோபர் 2013

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *