கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,902 
 
 

சும்மா இருக்கிறவனைச் சுண்டி, சுரண்டி விடுறது… ஆசை, ஆவல்தான்!!

என்ன புரியலையா…?!

இது முகவுரை. பொருளுரைக்கு வர்றேன்.

நான் கடவுள் மறுப்பாளன். எந்த நிலையிலும் கடவுள் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவன்.

இப்படிப்பட்ட எனக்கு….

கால எந்திரம், காலப்பயணம் பத்தி தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசை. அதனால் அவைகளைக் கணனியில் தேடிப் பிடிச்சேன்.

எல்லாம் சாத்தியம் இல்லாதது மாதிரியே தோணுச்சு.

அப்போதான்… இந்த சித்தர்கள் இடையில் புகுந்தாங்க.

அவுங்க…. தன் உடலை ஒளி உடலாக்கி அண்டவெளியில் பயணம் செய்து வேற்றுக்கிரகங்களுக்குப் போயிருக்காங்க. வேற்றுக்கிரகவாசிகளைப் பார்த்திருக்காங்க, பழகி இருக்காங்க. இறந்தவர்கள் உடல்களில் புகுந்து கூடு விட்டு கூடு பாய்ந்திருக்காங்க..என்கிற செய்திகள் ஒளி, ஒலி வடிவாகவும் இருந்தது .

இதெல்லாம் ஏற்கனவே நான் படிச்சது, பார்த்ததுதான். அப்போ எல்லாம் இது சாதாரண கதை, கற்பனை என்கிற நினைப்பு. இப்போ இந்த புதுசோட இணைச்சு பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியம், அதிர்ச்சி.

இதுல ஒரு வேடிக்கையும் அகப்பட்டுச்சு.

திருமூலர் என்கிற ஒரு மாபெரும் சித்தரை ஒரு வேற்றுக்கிரக சித்தர் ஏமாத்தி இருக்கார்!

திருமூலர்…. தன் உடலை ஒளி வடிவாகி வேற்றுக்கிரகத்திற்குப் போயிருக்கார். அங்கே ஒரு சித்தரைக் கண்டிருக்கார், பேசி இருக்கார்.

அவர்…” நீங்க இங்கே வந்த வித்தையை நான் கொஞ்சம் பார்க்கனும், பரிசோதிக்கனும் காட்டுங்க….”கேட்டிருக்கார்.

இவர் மகா புத்திசாலி.

“அதையெல்லாம் காட்ட முடியாது. நீ எடுத்துக்கிட்டு ஓடிப்போயிடுவே!” சொல்லி மறுத்திருக்கார்.

அந்த ஆள் எத்தனுக்கு எத்தன். ஜித்தனுக்கு ஜித்தன் போல.

“நான் அப்படிப்பட்ட அயோக்கியன் கிடையாது. சுத்த யோக்கியன். வேணும்ன்னா பரிசோதனை செய்து பாருங்க” சொல்லி இருக்கார்.

திருமூலர் நம்பி அதை எடுத்துக் காட்டி இருக்கார்.

அந்த ஆள் அதை சடனாய் வாயில எடுத்து வச்சி அடக்கிகிட்டு உடனே பஞ்சாய்ப் பறந்துட்டார்.

வெகு நேரம் கழிச்சும் திரும்பல.!!

அப்போதான் திருமூலருக்குச் சுதாரிப்பு வந்து அக்கம், பக்கம் இருந்தவர்களை விசாரிச்சிருக்கார்.

அதுக்கு அவர்கள்…

“அவன் மகா திருடன். அவனிடம் ஏமாந்திருக்கீங்களே!” சொல்லி இருக்காங்க.

உடனே இவர் வேறு சக்தியால் பறந்து அவனைத் தொடர்ந்திருக்கார்.

அந்த ஆள் கிகரம் விட்டு கிரகங்கள் தாவி தப்பிச்சிருக்கார்.

இவரும் அவரை விடாமல் மடக்கிப் பிடிச்சி… அவர் வாயில அடக்கி வச்சிருந்ததை பிடுங்கிட்டார்.

அப்பவும் அந்த புத்திசாலி தன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல்….

“என் வாயில உள்ளதை எப்படி பறிக்கலாம்….?” ன்னு சண்டை போட்டிருக்கார்.

“என் உடமையைப் பறிக்கிறதுல தப்பில்லே…!” ன்னு இவர் சொல்லிட்டுக் கிளம்ப…. அவர் சடார்ன்னு திருமூலர் கால்ல விழுந்து…

“என்னை இப்படியே விட்டுப் போனால் நான் என் கிரகம் போக முடியாது. என்னை அழைச்சுப் போய் அங்கே விடுங்க..” கெஞ்சிருக்கார்.

அதுக்குத் திருமூலர்….

“தப்பு செய்ததுக்குத் தண்டனை. இங்கேயே கிட!” சொல்லி திரும்பி இருக்கார்! இந்த நடப்பை தன் நூலில் செய்யுளாகவும் எழுதி இருக்கார்.

இதைப் படிச்சதும்…

‘சர்வ வல்லமை படைத்த இந்த சித்தர் சாதாரண மனிதனாய் எப்படி ஏமாந்தார்…? ஒரு வேளை இந்த ஆள் விண்வெளியில் பறந்தது, கிரகங்களுக்கெல்லாம் போய் வந்தது எல்லாம் கதை, கற்பனை, கப்சாவோ..?’ எனக்குள் தோன்றியது.

அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல்…….

‘இது யானைக்கும் அடிச் சறுக்கல். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் மட்டுமில்லாமல் எங்கேயும் உண்டு!!’ ன்னு மனசை மாத்திக்கிட்டேன்..

சரி அதை விடுங்க.

நான் கடவுள் மறுப்பாளன் என்றாலும்…. குடும்பத்தோடு எல்லா கோயில்களுக்கும் போயிருக்கேன்.

அங்கே இருக்கும் தெய்வங்களை வணங்காமல் அவைகளை யார் கட்டினது, எப்படி கட்டினார்கள், தெரிஞ்சி, அங்குள்ள கட்டிடக்கலை, சிற்பங்களை எல்லாம் ரசிச்சி திரும்பி இருக்கேன்.

அப்படி நண்பர்களோடு கொல்லிமலை, திருவண்ணாமலை, சதுரகிரி, வெள்ளையங்கிரி, பர்வதமலை, சபரிமலை, வடக்கே… அமர்நாத், வைஷ்ணவி கோயில் போன்ற இடங்களுக்கெல்லாம் போய் வந்திருக்கேன்.

வீட்ல சோத்தைத் தின்னுட்டு சும்மா இருக்காம எல்லா இடங்களையும் சுத்திப் பார்த்து தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே.! அப்படித்தான் சுத்தினேன். ஆனா…எங்கேயும் எல்லா இடங்களிலும் நான் மனிதர்களைத்தான் பார்த்தேனேத் தவிர தெய்வங்களைப் பார்க்கலை, தரிசிக்கலை.

ஒருவேளை… கடவுள் மறுப்பு என்கிற என் ஊனக்கண்களுக்கு அவைகள் தெரியாமல் போச்சோ என்னவோ.

அதை விடுங்க….

இது நாள்வரையில் கோயில் வாசல்களில்…. காவி கட்டி, ஜடாமுடி தரித்து, சாம்பல் பூசியவர்களையெல்லாம் சித்தர்கள், முனிவர்கள் என்று பார்க்காமல் குடும்பம் சொந்தபந்தங்களை வெறுத்து வந்து ஒதுங்கி…வயிற்றுப்பாட்டிற்காக வேசம் போட்டு பிச்சை எடுத்து வாழும் பிச்சைக்கார்கள், வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள் என்றே நினைத்திருக்கிறேன், மதித்திருக்கிறேன்.

அப்புறம்… மனிதனை நீட்டுறது, குறுக்கிறது, பூவாய், பொருளாய், விலங்காய், பறவையாய் மாத்தி எடுத்துப் போறது, அவர்கள் வானத்தில் பறக்கிறதையெல்லாம் ராமாயணம், மகாபாரதங்களில் படிச்சிருக்கேன். அந்த புராண படங்களிலேயும், விட்டாலாச்சாரியார் படங்களிலேயும்தான் பார்த்திருக்கேன்.

இப்போது என்னவென்றால்…இந்த சித்தர்கள் அட்டமா சித்திகள் என்கிற எட்டு வித்தைகள் கற்று… அதில் முதன்மையானதான் அணிமா சித்தியில் அணுவைப் போல் உடலை சிறிதாக்கி, அண்டவெளியில் பயணித்து, கிரகங்கள் தொட்டு, திரும்ப மகிமா சித்தியில் உடலைப் பெரிதாக்கி வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் பெரிய ஆட்கள்தான் என்கிற ஆச்சரியம் நினைப்பு தோன்ற எனக்குள் பாலைவெளியில் பசும்புல் ஒன்று அரும்பியதைப் போல் ஒருவிழிப்பு, உணர்வு.

அது அப்படியே பெரிதாகி…. அவர்களைப் பார்க்க ஆசை, சந்திக்க ஆவல்.!!

அடுத்தக் கட்டமாய் அவர்களை எங்கு சந்திக்கலாம்ன்னு யோசனை.

மனதில்…. திருவண்ணாமலை, கொல்லிமலை,சதுரகிரி, வெள்ளையங்கிரி…. இடங்கள் வரிசை கட்டின.

குலுக்கலில் சதுரகிரி சதிராடியது.

காரணம் இருக்கிறது.

இந்த சதுரகிரிக்கு எத்தனையோ தடவைகள் சென்று வந்திருந்தாலும் ஒரு முறை என்னோடு வந்த ஆன்மீக நண்பர்கள் தங்கள் தெய்வ தரிசனத்தை முடித்துவிட்டு சித்தர்களைச் சந்திக்கும் ஆவலில் , ஆசையில்…. அவர்களை எங்கே தரிசிக்கலாம் ?… என்று அங்கே விசாரித்து அந்த மலையின் உச்சிக்கெல்லாம் சென்று அலைந்தார்கள்.

நானும் அலைந்தேன். மலைகள்தான் கரடு, முரடாகவும், கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் அழகாகவும் தெரிந்ததே தவிர ஒரு தெய்வம், சித்தர்கள், மனித நடமாட்டமில்லை.

திரும்பினோம்.

வழியில்…. இவர்கள் ஏன்… மனித கண்களுக்குத் தென்பட வில்லை. ? என்பது கேள்வியாக முளைத்தது.

அவர்கள் ஊனக்கண்களுக்கெல்லாம் தட்டுப்பட மாட்டார்.! பதிலாக வந்தது.

ஒரு வேளை சாட்டிலைட், ரேடார் போன்றவற்றிக்கெல்லாம் அகப்படுவார்களோ தோன்றியது. அப்போதைக்கு அதைப்பற்றிய ஆழ்ந்த யோசனை இல்லை. விட்டுவிட்டேன்.

இப்போதும் அது முளைத்தது.

கூகுளில் அலசினேன்.

சித்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திடீரென்று தோன்றினார். விர்ரென்று வானத்தில் மறைந்தார் என்றுதானிருந்தது.

சேட்டிலைட், ரேடார்களில் அகப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

சரி. எத்தனை நாட்கள் ஆனாலும் இருந்து பார்த்து விட்டு வரவேண்டும். முடிவெடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

சதுரகிரி…….

சுந்தர, சந்தன மகாலிங்க பாதைகளில் நிறைய பக்தர்கள் மட்டுமில்லாமல் காவி உடுத்தி, ஜடாமுடிகள் தரித்தவர்ககளும் வரிசையாக இருந்தார்கள்.

இப்போது நான் அவர்கள் மீது இருந்த பழைய பார்வையை விலக்கி மரியாதையாகப் பார்த்தேன்.

எல்லோரும் காவி கட்டி, ஜடாமுடி, ,கழுத்தில் கொட்டை பட்டையோடு இருக்கிறார்களே….. இதில் யார் முனி, சித்தர், பிச்சைக்காரர்…? குழப்பம்.!

எவராய் இருந்தாலும் விசாரிப்பதுதான் முடிவு என்று தெளிந்து….. – கண்களைச் சுழலவிட்டேன்.

எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றினார்கள். ஒரு வழியாய் துணிந்து 50 வயது உள்ள ஒருவர் அருகில் அமர்ந்தேன்.

“சாமி..!” மெல்ல அழைத்தேன்.

‘என்ன..?’ என்பதைப் போல் அவர் என்னைப் பார்த்தார்.

சட்டைப் பையிலிருந்து ஒரு முழு 500 ரூபாயை எடுத்து நீட்டினேன்.

வாங்கிக் கொள்ளவில்லை.

“தங்களுக்குக் காணிக்கை!”

வாங்கிக் கொண்டார்.

“நீங்க இங்கே எத்தனைக் காலமா இப்படி இருக்கீங்க…?”

“சுமார் 30 வருச காலம்”

“ஆன்மீகத்துல அவ்வளவு ஈடுபாடா…?”

“ஆமாம்!”

“ஆரம்பத்திலிருந்து சதுரகிரிதான் உங்க இருப்பிடமா..?”

“ஆமாம்!”

“உங்க சொந்த ஊர்..?”

“……………….”

“பயப்படாம சொல்லுங்க. சும்மா தெரிஞ்சிக்க ஆசை”

“திருவாரூர்!”

“நான் காரைக்கால்!”

“பக்கம் ..?”

“ஆமா.”

“……………………..”

“இங்கே நிறைய சித்தர்கள் இருக்கிறதாய்க் கேள்விப்பட்டேன். உண்மையா..?”

“உண்மை!”

“நீங்க அவரைப் பார்த்திருக்கீங்களா…?”

“இல்லே…!”

“ஏன்… ?”

“என் கண்களுக்குத் தென்படவில்லை.!”

“மத்தவங்க பார்த்திருக்கங்களா…?”

”தெரியாதுன்னு சொல்றதை விட பார்த்திருக்க வாய்ப்பில்லே என்பதுதான் சரி!”

“அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்களைச் உச்சியில் சிலர் பார்த்ததாய் சொல்றாங்களே!…”

“ஆமாம்!”

“உண்மையா…?”

“இருக்கலாம்…!”

“இன்னைக்குப் பௌர்ணமி. நான் பார்க்கமுடியுமா…?”

“அதிர்ஷ்டம் இருந்தால் தென்படுவார்!”

“அந்த இடம் எங்கே இருக்கு…?”

“இப்படியே மேலே போகனும்…”வழியைக் காட்டினார்.

“உங்களால் வரமுடியுமா..?”

“தேவை இல்லே. அவர்களைத் தேடி அங்கேயே ஒருத்தர் இருக்கார்.!”

“நன்றி சாமி. புறப்படுறேன்!”

“சரி!” தலையசைத்தார்.

எழுந்து அவர் காட்டிய வழியில் நடந்தேன்.

பாதை இல்லாமல் கரடுமுரடான ஒரு மணி நேர மலையேற்றம். எங்கும் பாறைகள், புற்பூண்டுகள், மரங்கள், செடி, கொடிகள். மனித நடமாட்டமே இல்லை.

களைத்து ஒரு பாறையில் அமர்ந்தேன்.

அன்னாந்து பார்த்தேன். உச்சி இன்னும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தது.

குருட்டு தைரியத்தில் வகைதொகை இல்லாமல் வந்து மாட்டிக்கொண்டோமா…?!

‘கரடி, புலி, காட்டு விலங்குகள்!’ நினைக்க பயம் வந்தது.

அந்த சாமி… இங்கே ஒருவர் இருப்பதாகச் சொன்னாரே..! அவரை விட்டுவிட்டோமா , வழி தவறிவிட்டோமா..? – நினைத்து சுற்றிலிலும் பார்வையை விட்டேன்.

தூரத்தில் மரம் போன்ற ஒரு பெரும் செடியில்…. காவி துணி காற்றில் ஊசலாடியது.

எழுந்து நடந்தேன்.

நெருங்க நெருங்க… பாறைகளான குகை. உச்சியில் சிறு மரம். அதில்தான் அடையாளமாய்…. காவி துண்டு காற்றில் ஆட்டம்.

அதன் அருகில் கொடிக்கம்பம் போன்ற இரும்பு குழாயின் உச்சியில் சூரிய ஒளியை மின்சாரமாக்கித்தரும் தகடு – சோலார் பேனல்.!

குழப்பமாக இடத்தை அடைந்ததும்…அதைவிட அதிர்ச்சி, ஆச்சரியம்.

குகை வாசலில் உள்ள கற்பாறையில் மடிக்கணணியுடன் ஒரு 40 வயதில் இடுப்பில் காவி, கழுத்தில் உத்திராட்சக் கொ ட்டை, நெற்றியில் பட்டையுடன் ஒரு சாமி… எதிரில் வந்த என்னைக்கூட கவனிக்காமல் தலை கவிழ்ந்து தன் கணனி வேலையிலேயே குறியாய் இருந்தார்.

“சாமி!” அழைத்துக் கலைத்தேன்.

நிறுத்தி ஏறிட்டார்.

குகைக்குள்ளிருந்து சாம்பிராணி, ஊதுபத்தி மணம் வெளி வந்து மணத்தது.

“கோயிலா…? பார்க்கலாமா..?.” கேட்டேன்.

அவர் பதிலேதும் சொல்லாமல் மௌனமாய் என்னைப் பார்த்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பின்….

“பார்க்கலாம்!” மடிக்கணினியை பக்கத்தில் உள்ள பாறையில் வைத்து விட்டு எழுந்து குகைக்குள் சென்றார்.

நானும் அவரைத் தொடர்ந்து குனிந்து சென்று நிமிர்ந்தேன்.

உள்ளே ஒருவர் புழங்கும் அளவிற்கு இடம். வெளிச்சத்திற்கு ஒயரில் தொங்கும் ஒரு எல்.ஈ.டி மின் விளக்கு.

குகை நடுவில் இயற்கையாய் அமைந்ததைப் போல் லிங்க வடிவில் ஒரு சுயம்பு லிங்கம். அதற்கு எண்ணெய் தடவி, காட்டுப்பூக்கள் அணிவித்து அலங்காரம். அதன் அருகில் இரண்டடி உயரத்திற்கு அழகான ஒரு சிவன் சிலை. கல்லினால் செதுக்கப்படாமல் ஏதோ ஒன்றினால் செய்யப்பட்டது போலிருந்தது. அதற்கும் துணி உடுத்தி பூக்களால் அலங்காரம்.

இவைகளுக்கு எதிரில் ஒருஎண்ணெய் ஊற்றி எரியும் அகல்விளக்கு. அதன் அருகிலுள்ள தரை பாறைக் குழியில் சாம்பிராணி தணல், மெலிதாய் புகை. அதன் அருகிலேயே… சூடம் ஏற்றி அணைத்தற்கான அடையாளம். இரண்டு வாழைப்பழங்கள் அதன் மேல் ஊதுபத்தி.

குகையின் ஒரு மூலையில் சமையல் பாத்திரங்கள், அடுப்பு. அருகில்… கொஞ்சம் தள்ளி பட்டாம்பூச்சிகளாய்ப் பறக்கும் நாலைந்து சிறு ஆளில்லா விமானங்கள்.- டுரோன்கள்!

குழப்பமாக அவருடன் வெளி வந்துஅவர் முன் அமர்ந்து கலவரமாகப் பார்த்தேன்.

“என்ன பார்க்குறீங்க…? இது என் தவக்குகை!”

“பு….புரியல…?!”

“புரியும்படி சொல்றேன். அடிப்படையில் நான் ஒரு மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி. சிறு வயதிலிருந்தே எனக்கு தெய்வ பக்தி அதிகம். அதன் காரணமாய் படிப்பை முடிச்சதும் ஆன்மீக பணியில் ஈடுபட்டு அப்படியே பத்து வருடங்களுக்கு முன் இங்கே வந்தேன். இப்போ எனக்கு வயது நாற்பது. வந்ததும் இங்கே உள்ள மத்த சாமியார்களை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உண்டு, உறங்காமல் சரியான தெய்வ பணியில் ஈடுபட்டு வந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் தானாக வந்து சேரும் பக்தர்கள் காணிக்கையை என்ன செய்யிறதுன்னு சதா சிந்தனை. அந்த யோசனையில் போகர் மாதிரி ஒரு நவபாஷாண சிலை செய்ய ஆசை. உடனே செயலில் இறங்கி கண்ணில் பட்ட ஆயிரக்கணக்கான இலை, தழைகளை பறித்து வந்து அரைத்து சிவன் சிலை செய்தேன். அதுக்கு நானே சிவபாஷான சிலைன்னும் பெயர் வைத்தேன். அதுதான் சுயம்பு லிங்கத்திற்கு அடுத்து உள்ள சிலை. அதற்கும் தினம் பால், பன்னீர்,இளநீர் அபிஷேசகங்கள் உண்டு. இதுவரை எந்த சேதமும் இல்லே. அப்புறமும் மனசு திருப்தி படலை. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசனை.

அப்போதான்…. சாட்டிலைட், ரேடார்களில் சிக்காத சித்தர்களை கண்டுபிடிச்சி நாமும் தரிசித்தால் என்னன்னு ஞானோதயம் உண்டாச்சு. உடனே இதெல்லாம் வாங்கி இப்படி செய்யலாம்ன்னும் புத்தியில் பட்டுச்சு. விளைவு…? இடம் தேடி அலைந்தேன். இந்த இடம் கிடைச்சிச்சு. அப்படி ஆளில்லா விமானங்களை வாங்கி அதில் காமிராக்களைப் பொருத்தி ராப்பகலாய் அலையவிடுறேன் . இந்த பணி இங்கே மட்டுமில்லாமல் திருவண்ணாமலை, கொல்லிமலை இடங்களிலும் என் சீடர்கள் இப்படி இந்த பணியை செய்யிறாங்க. ஆனா… எங்கும் இதுவரையில் ஒரு சித்தரும் அகப்படாததுதான் ஆச்சரியம். அதுக்காக என் தவம், முயற்சியை விடப்போறதில்லே. என் மூச்சு இருக்கும்வரை இந்த பணி இருக்கும். அதுக்குப் பிறகும் என் சீடர்கள் வெற்றிகரமாய்த் தொடர்வார்கள்.!” சொல்லி நிறுத்தினார்.

எனக்குள் சிலிர்த்தது.

“வணக்கம் ஐயா. வர்றேன்!” விடை பெற்று கிளம்பினேன்.

பொருளுரை சொல்லியாச்சு.

முடிவுரை சொல்றேன்.

“கால எந்திரம், அதில் பயணம்…போன்ற கண்டுபிடிப்புகள் சரியானதாய் இருக்கலாம். ஆனா…இது எந்த சாமானியப்பட்ட மனிதனுக்கும் சரிப்படாது என்பதுதான் சத்தியம், நிச்சயம், நிதர்சனம்.!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *