தன் கணவர் டாக்டர் ரகுராமின் மேசை மேலிருந்த கடிதத்தின் விலாசத்தைப் படித்ததும், திடுக்கிட்டாள் நந்தினி.
கடந்த நான்கு இரவுகளாக ரகுராம் அமர்ந்து, அவரது தாய் மொழியான தமிழில் எழுதிக் கொண்டிருந்த கடிதம் அது.
திடீரென்று தன் கணவர் ரகுராமனுக்கு வந்திருக்கும் இந்தப் பிரச்னையை, எப்படி சமாளிப்பது என்பதில் திகிலும், தடுமாற்றமும் ஏற்பட்டது நந்தினிக்கு.
மற்ற எல்லா விஷயங்களிலும், நார்மலாகத் தென்படும் ரகுராமிடம், எப்படி இப்படியொரு முரண்பாடு உதித்திருக்கும் என்று சொல்லத் தெரியாத ஒரு பயமும் தோன்றி, அடி வயிற்றில் சில்லிப்பை உண்டாக்கியது.
பத்து வருடங்களுக்கு முன், பரலோகம் போய்ச் சேர்ந்து விட்ட தன் பெற்றோருக்கு, கடிதம் எழுதுவது என்ன மாதிரியான மன நோய்? “அல்சிமீர் டிசீஸ்’ என்று அமெரிக்காவில் பலராலும் பேசப்படும் புத்திபேதலிப்பின் ஆரம்பமோ இது?
எகனாமிக்ஸ் படித்தவள் நந்தினி; அவளுக்கு, “ஹூயூமன் சைகாலஜி’ அதிகம் அறிமுகமில்லை; புத்திசாலி. அரைகுறை இல்லாமல் மனதளவில் முழுசாகவே ஒரு அமெரிக்கக் குடிமகள். நடை, உடை, எண்ணம், பாவனைகள் எல்லாவற்றிலுமே.
அதனால், அவளைப் பொதுவாக எந்த செயலும் அச்சுறுத்தாது. அவள் பெற்ற குழந்தைகள், அபிஷேக்கும், அபிலாஷாவும் பிரிந்து சென்று, தனித்து வாழ்வதை அவளால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடிந்தது. அந்த உலகின், ஊரின் நியாயங்களும், தர்மங்களும் அவளால் உணரக் கூடியதாக இருந்தது.
ஆனால், இது வேறு; யு.எஸ்.,சின் மிகச் சிறந்த பாலிமர் கம்பெனியின் ஆராய்ச்சித் துறையில், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் டாக்டர் ரகுராமின் இந்த விசித்தரச் செயல், அவள் எதிர்பார்க்காதது.
தன் கலக்கத்தைத் தவிர்த்து, இந்த விஷயத்தை மிகக் கவனமாகக் கையாள வேண்டுமென்பதில், அவளுக்குச் சந்தேகம் எழவில்லை.
டாக்டர் ஸ்டெல்லா, ரகுராமனின் குடும்பத் தோழி; அதோடு தொழில் ரீதியாக மிகச் சிறந்த, “கவுன்சிலர்!’ மனச்சிதறல் மற்றும் குழப்பங்கள், விரக்திகள், மனச் சோர்வு, தற்கொலைத் தூண்டுதல்கள் என்று பலவாறாக உண்டாகும் அமெரிக்க நாகரிகத்தின் விரைவு வாழ்க்கைக்கு, ஸ்டெல்லா போன்றவர்கள் இன்றியமையாதவர்கள்.
நந்தினியின் வயதொத்தவள் ஸ்டெல்லா. எனினும், ஒருமுறை மணமுடித்து, மணவிலக்குப் பெற்றவள். அவள் தன் தொழிலை மிகவும் நேசிப்பதால், மறுமணம் தேடவில்லை; திருமண வாழ்க்கையின்மையின் வெறுமை உறைக்கவில்லை.
ஸ்டெல்லாவிடம் செல்லுமுன், தான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது என்று நந்தினிக்குத் தோன்றியது.
“”ஐம் ப்ரீ ஆப்டர் சிக்ஸ் டுடே… எங்கே போகிறோம் டியர்?” என்று புன்னைகையுடன் கேட்ட ரகுவின் கேள்விக்கு, நேரடியாகப் பதில் கூறாமல், “”உங்களுக்கு காபியா இல்லை டீயா?” என்றாள் நந்தினி, டோஸ்டரில், ப்ரெட்டை செருகியபடி.
“”இதென்ன கேள்வி. எனக்கு காலையில் எப்போதும் காபி தானே? என் அம்மா தயாரிக்கும் பில்டர் காபியின் மனமே தனி…” என்றபடி டைனிங் டேபிளில் வந்தமர்ந்தார் ரகு.
சமீப காலமாக இதுபோல், அவரது தாய், தந்தை பற்றிய குறிப்புகள் வருவது நந்தினிக்குப் பழகியிருந்தது. சில சமயம் வியப்புடனும், பல சமயங்களில் அசுவராசியமாகவும் கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு, இன்று அதற்கு வேறொரு முக்கியத்துவம் பெறுவது சுரீலென்று உறைத்தது.
தன்னுடைய பவுலில் கார்ன்ப்ளேக்சை பாலில் கலக்கியபடி, ரகுவுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள் நந்தினி.
“”அப்படியா… நாங்கள் இந்தியாவின் வட மாநிலத்தில் பெரும்பாலும் டீதான் குடிப்பது வழக்கம்… எனக்கு காபியே அவ்வளவாகப் பிடிக்காது,” என்ற நந்தினி, “”நீங்கள் இந்தியா சென்று கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது இல்லை?” என்று சாதாரணமாகக் கேட்பவள் போல் கேள்வியை முன் வைத்தாள்.
ரகுவின் கண்களில், திடீரென்று ஒருமாற்றம் தெரிந்தது. சற்றே பழுப்பாக முழுசாகக் கருமை பாயாத விழிகள், கண்ணாடித் துண்டுகள் போல் பளபளத்தன.
“”ஆம்… டில்லியில் ஒரு கான்பரன்சுக்காக போனேன்… அப்போது கூட சொந்த ஊருக்குப் போகவில்லை…”
அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் நந்தினி.
“”ஏன் போகவில்லை…?”
அதற்கு முன்பே, அவர் தாய் – தந்தை இறந்து விட்ட செய்தி வந்தாகி விட்டது. அதை அவர் உணர்கிறாரா என்பதைச் சோதிக்கவே அந்தக் கேள்விக் கொக்கியை மாட்டினாள்.
“”என்னவோ போக வேண்டுமென்று தோன்றவில்லை… ஆனால், சீக்கிரம் போக வேண்டும்…” என்றார் தனக்குத்தானே சொல்லிக் கொள்பவர் போல்.
“”ஏன்… எங்கே… எதற்கு?” என்றாள் நந்தினி.
அவளை நேராகப் பார்த்தார் ரகு.
“”என்னுடைய சொந்த ஊருக்கு. கும்பகோணம் என்று பெயர். இந்தியாவின் தென் மாநிலத்தில் உள்ள சென்னைக்கு அருகே உள்ள கோவில்கள் நிறைந்த ஊர் அது…” பின்னர் தொடர்ந்து, “”நந்தினி… எனக்கு என் அம்மாவையும், அப்பாவையும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது…” என்றார், மிகவும் மெதுவான குரலில். அவர் குரலில் அப்போது வெளிப்பட்ட தழுதழுப்பு, நந்தினிக்குப் புதியது.
“”அவர்கள்… பாவம்… மிக நல்லவர்கள்…” என்றார் முனகும் குரலில்.
நந்தினி புருவங்களை உயர்த்தினாள். இது மிகவும் கடினமான தருணம். பத்து ஆண்டுகளுக்கு முன், ரகுவின் தாயும், அதற்கு அடுத்த ஆண்டு அவர் தந்தையும் இறந்து விட்டதாக வந்த செய்திகள், நந்தினிக்கு நன்றாக நினைவில் இருந்தன.
அந்தச் செய்திகளைக் கொண்டு வந்ததும், ரகு தான். அதை நந்தினியிடம் ஒரு அறிவிப்பு போல் தெரிவித்து விட்டு, லைப்ரரியில் போய் அமர்ந்து, கதவை மூடிக் கொண்டார். மிகுந்த சினமோ, துக்கமோ ஏற்படும் போது ரகு, ஸ்டடி ரூம் உள்ளே சென்று, மணிக்கணக்கில் அமர்வது அவளுக்குப் பழக்கமானதொன்று.
நந்தினிக்கு ரகுவின் பெற்றோரிடம் நேரடிப் பழக்கமோ, பரிச்சயமோ இல்லாததால், முதன்முதலாக ரகுவின் தாய் இறந்த செய்தியை அவர் அறிவித்த போது, எந்தவிதமான தனிப்பட்ட உள்<உணர்வும், அவளிடம் ஏற்படவில்லை, அதற்காக அவள் ரகுவின் உணர்வுகளையும், குறைத்து மதிப்பிட வில்லை.
தாயின் மரணச் செய்தியைக் கொண்டுவந்த அன்று, ரகுவிடம் அவள் கேட்ட கேள்வி, இன்றும் அவள் நினைவில் இருக்கிறது.
“நீங்கள் இந்தியா போக வேண்டுமா ரகு?’ என்றாள்.
ரகு அப்போது தொழில் ரீதியாக, மிகவும் உச்சத்தில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.
“உயிரில்லாத உடம்பைப் போய்ப் பார்த்து, நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று பதில் சொன்னார். இந்த பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று, நந்தினிக்குப் புரியவில்லை. ஆனால், அவர் போக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பெரும்பாலான இந்தியர்கள், அமெரிக்க மண்ணில் ஊன்றிக் கொண்டாலும், வாழ்வு, சாவு போன்றவைகளில் விட்டுக் கொடுத்துப் பார்த்ததில்லை. அதனால், அடுத்த ஓராண்டில் அவர் தந்தையின் காலமான செய்தி சொன்ன போது, “ஐம் சாரி ரகு… என் அனுதாபங்கள்…’ என்று, ஒற்றை வரியுடன் நிறுத்திக் கொண்டாள்.
இருந்தாலும் ரகு, அவரது பெற்றோரைச் செய்த அலட்சியம் கொஞ்சம் மிகையாகவே பட்டது. அவர்களுக்கு இவர் இப்போது இருந்தாற் போலிருந்த கடிதம் எழுதுவதாவது, நேரில் போய்ப் பார்ப்பதாவது?
நந்தினிக்கு இந்த அனுபவங்களுக்கு வாய்ப்பில்லை. பெற்றோர், மரணத்திற்குப் பின்தான், அவள் யு.எஸ்., வந்தாள். அவளுக்கு வேறு உறவினர் கிடையாது. பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டு விருந்து ஒன்றில், அறிமுகமான ரகுவின் தொடர்பு, இருமனமும் ஒத்ததால், திருமணத்தில் முடிந்தது.
கிளை பிரிந்த நினைவுகளைக் கலைத்து விட்டு, “”நாம் இன்று மாலை டாக்டர் ஸ்டெல்லாவைப் பார்க்கப் போகிறோம்… ரகு!” என்றாள் மென்மையாக.
“”அபிஷேக், அபிலாஷாவின் பிரிவு, உன்னை மிகவும் பாதித்து இருக்கிறது நந்தினி… ஸ்டெல்லாவின் கவுன்சிலிங் உனக்குத் தேவை இல்லையா?” என்றார் ரகு புன்னகையுடன்.
“”அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்…” என்றாள்.
“” உன்னை உன் யுனிவர்சிடியில் வந்து, ஐந்து மணிக்குப் பிக் அப் செய்து கொள்கிறேன்…” என்றபடி காபியைப் பருகிவிட்டு எழுந்து சென்றார் ரகு.
மிக மலர்ந்த முகமும், மென்மையும் ஒருசேர இருக்கும் அமெரிக்க பெண் மணிஸ்டெல்லா. அவள் பேச்சு வார்த்தைகள், மிகவும் தேர்ந்தெடுக் கப்பட்ட சொற்களாகவும், அழகான முறையில் கோர்க்கப்பட்ட வாக்கியங்களாகவும் இருக்கும். மனிதர்களைப் புரிந்து கொள்வதில், தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவள்.
ஸ்டெல்லா, ரகு, நந்தினி மூவரும், சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் நந்தினி நாசுக்காக, “”நான் உங்கள் தோட்டத்தைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்து விட்டு வருகிறேன்…” என்று ஸ்டெல்லாவையும், ரகுவையும் தனியே பேசவிட்டு, வெளியே வந்தாள்.
ஸ்டெல்லாவுக்கு, கார்டனிங்கில் மிகுந்த ஈடுபாடு உள்ளதால், அவள் தோட்டம் மிக விரிவாகவும், அழகாகவும் இருக்கும். மாலையில் இதமான வெயிளில் அந்தத் தோட்டம் இன்னும் அழகாக இருந்தது.
கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கழித்து, உள்ளே வந்த நந்தினியை,””வா நந்தினி… நாம் இருவரும் சேர்ந்து சாப்பிட ஏதாவது செய்வோம். ரகு… நீங்கள் சற்று நேரம், “டிவி’ பார்த்துக் கொண்டிருங்கள்…” என்று கூறிவிட்டு, நந்தினியை உள்ளே அழைத்துச் சென்றாள் ஸ்டெல்லா.
“”நந்தினிக்கு உங்கள் உதவி தேவை ஸ்டெல்லா… எங்கள் குழந்தைகளின் பிரிவு, அவளை மிகவும் பாதித்து இருக்கிறது…” என்றார் ரகு பரிவுடன்.
“”நிச்சயமாக… நந்தினிக்கு என் உதவி எப்போதும் உண்டு,” என்று மென்மையாக கூறியபடி, உள்ளே சென்றாள் ஸ்டெல்லா.
ஸ்டெல்லாவின் முகத்தை மிகுந்த ஆவ<லுடனும், கவலையுடனும் நோக்கினாள் நந்தினி. ஸ்டெல்லாவின் முகம், சற்றுத் தீவிரமடைந்தது.
“”ரகுவிற்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய மனத் தடுமாற்றம், நம்மில் பலருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது வயதாவதின் அறிகுறி என்றும் கொள்ளலாம். அவருக்கு வந்திருப்பது, “செலக்டிவ் அம்னீஷியா!’
“”அவருடைய தாய், தந்தை இருவரும், அடுத்தடுத்த வருஷங்களில் இறந்ததாக, நீ கூறினாய். அது அவருடைய உள் மனசில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
“”ஆனால், எது என்ன காரணத்தினாலோ இந்தப் பத்து ஆண்டுகளில், அந்த இரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகளை மட்டும் மறக்கச் செய்திருக்கிறது. அதன் பின்னர், அவர் மகன் மற்றும் மகள் அவரைப் பிரிந்து சென்றபோது தான், அவருக்கு அந்தத் துன்பத்தின் ஆழம் உறைத்திருக்க வேண்டும்.
“”தான் எப்போதுமே தவறு செய்யாதவன் என்ற கர்வம், அவர் மனசில் இருப்பதால், தன் தாய், தந்தையரை இன்று நினைவு கூர்வதன் மூலம், தனக்குத் தானே நியாயம் கற்பித்துக் கொள்ள முயல்கிறார் ரகு… சாரி… அவர் என்பது அவர் மனது.
“”அவர் திடீரென்று, அவரது பெற்றோரைப் பற்றியும், சில தூரத்து சொந்தங்களைப் பற்றியும், என்னிடம் இப்போது பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். இது, நான் இதுநாள்வரை பார்க்காத ரகுராமனின் முகம்…” எனறாள் ஸ்டெல்லா லேசாகச் சிரித்தபடி.
“”நான் கூடத்தான்…” என்றாள் நந்தினி பெருமூச்சுடன்.
“”இதற்கு என்ன செய்யலாம் ஸ்டெல்லா… “மென்டல் டிமென்ஷியா’ அது இது என்று இது விபரீதமாகக் கூடுமா?”
“”நந்தினி… ப்ளீஸ்! இது தற்காலிக மனக் குழப்பம்தான்… பார்ப்போம். நீங்கள் இருவரும், ஏன் ஒரு முறை இந்தியாவில் அவருடைய ஊருக்குப் போய் விட்டு வரக் கூடாது?” என்றாள் ஸ்டெல்லா.
“”போய்…”
“”ஒருவேளை அங்கு போனால், அந்த ஊரில் அவர் பெற்றோர் இல்லை என்பது அவருக்கு உண்மை நிலையை உணர்த்தக் கூடும். அதனால்தான் சொல்கிறேன்… நீ அநாவசியமாகப் பயப்பட வேண்டாம். லெட் இட் பி எ ஹாலிடே பார் யு போத்…”
நந்தினி தலையசைத்தாள்.
அடுத்த ஒரு மாசத்தில் இந்தியாவுக்குப் பயணமாயினர் ரகுராமனும், நந்தினியும். நந்தினிக்கு இந்த ஒரு மாசத்தில், ரகுவிடமிருந்து வெளிப்படும் சொந்தப் புராணம், பழைய கதை கொஞ்சம் பழக்கமாகிவிட்டது. அவர் இது நாள் வரை அவளுடன் பகிர்ந்து கொள்ளாத பல சிறு வயது சம்பவங்களை, வீட்டு நிகழ்வுகளை, கல்லூரி நாட்களை, தாய் தந்தை குணங்களைப் பற்றிப் பேசினார் ரகு.
“இத்தனை தெளிவாகப் பழைய நாட்களை நினைவில் கொண்டு பேசும் இவருக்கு, இந்த மரணம் பற்றிய சமாச்சாரம் மட்டும் எப்படி மறந்து தொலைந்தது? இதற்குப் பெயர், “செலக்டிவ் அம்னீஷியா’வா இல்லை, “செலக்டிவ் அப்செஷ’னா?’ என்ற எரிச்சலுடன் கூடிய வினா கூட அவள் மனசில் எழுந்தது.
சென்னையில் ஒரு நாள் தங்கி, பிறகு கும்பகோணம் பயணப்பட்ட போது, நந்தினியிடம் சொன்னார் ரகு.
“”நான் அப்பாவுக்கு ஒரு போன் கூடப் பண்ணாமல், கடிதம் மட்டுமே போட்டிருக்கிறேன்… நான் திடீர் என்று போய் நிற்கும் போது, அவருக்கு ஏற்படப் போகும் இன்ப அதிர்ச்சியை நினைத்தால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது…” என்றார்.
நந்தினி வறட்சியாகப் புன்னகை செய்து, “யாருக்கு?’ என்று நினைத்துக் கொண்டாள். திடீரென்று உண்மை தாக்கும் போது, ரகு எப்படி நடந்து கொள்வார். “அபிலாஷாவையோ, அபிஷேக்கையோ உடன் அழைத்து வந்திருக்கலாமோ…’ என்று கூட ஒரு எண்ணம் எழுந்தது.
“சே… நான் அத்தனை பயந்தாங்கொள்ளி இல்லை… என்ன நிகழ்ந்து விடப் போகிறது! உண்மை தெரியும் போது, அவருக்கு அவரது மறதியும், முட்டாள் தனமும் புலப்படும்… ஆனால், வழக்கம் போல் அவர் போய் <உட்கார, “ஸ்டடி ரூம்’ தான் இருக்காது…’ என்று சமாதானம் பண்ணிக் கொண்டாள்.
இந்தியா – குறிப்பாக சென்னையில், தட்பவெப்பமும், மாசு படிந்த சூழலும், கசகசவென்று எங்கு பார்த்தாலும் அலைபாயும் கூட்டமும், நந்தினிக்கு நிறையவே எரிச்சலை ஏற்படுத்தியது.
“”சாக்கடைக்கும், குப்பைமேட்டுக்கும் பக்கத்தில் நின்று, மொபைலில் பேசுகின்றனர்… ம்ஹூம்… இதுதான் இந்தியா…” என்றார் ரகு அலுப்புடன்.
“”வழக்கம் போல ஒரு ஓட்டலில் தங்கி, பிறகு எங்கள் வீட்டுக்கு போகலாம்…” என்று, தாங்கள் பயணம் செய்த, “ஏசி’ காரை ஒரு நல்ல ஓட்டலுக்கு விடச் சொன்னார் ரகு. நந்தினிக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது.
ஆனாலும், அவளுக்குள் உள்ளூர ஒருவிதமான பயம், ஜுரம் போல் உஷ்ணமாகப் பரவியபடி இருந்தது.
காலையில் எழுந்ததும், இருவரும் அவர்கள் வந்த காரில், ரகு சொன்ன விலாசத்திற்குக் கிளம்பினர். நல்லவேளையாக டிரைவராக வந்த இளைஞனுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்தது.
அந்த அக்கிரகாரத்தில் கார் நுழைந்த போது, ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன், மக்கள் சற்றுக் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். காரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி விட்டு, ரகுவும், நந்தினியும் கீழே இறங்கினர். என்னவென்று சொல்லத் தெரியாமல் இருவருக்குமே மனசு துணுக்குற்றது.
ரகுவும், டிரைவரும் வேகமாக அந்தச் சிறிய கும்பலைப் பிளந்து கொண்டு சென்றனர். நந்தினியும் அவர்களைத் தொடர்ந்தாள்.
இரண்டு மூன்று நடுத்தர வயதான மற்றும் இளைஞரான பிராமணர்கள், நின்று கொண்டிருந்தனர் அந்த மிகப் பழைய வீட்டின் முன்னால்.
தன் வழவழத்த தமிழில் அருகில் இருந்தவரிடம், ரகு ஏதோ கேட்க, அவர் பதில் சொன்னார்.
“”தொண்ணூறு வயசு… ஒரே பிள்ளை. அமெரிக்காவில் செட்டில் ஆய்ட்டான். திரும்பிக் கூடப் பார்க்கல… பத்து வருஷத்துக்கு முன்ன பொண்டாட்டி செத்துப் போனா… அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பிச்சார்; அவன் வரலை.
“”அடுத்த வருஷம், அவர் கோபம் தாங்காமல், தானே செத்துப் போயிட்டதாக செய்தி அனுப்பினார்… அப்பவும் வரலை… அதுக்கப்புறம், அவர் எந்தத் தொடர்பும் வச்சிண்டதா தெரியலை… பக்கத்து வீட்டில இருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு, பிரமை பிடிச்சவர் மாதிரி இருந்தார்…
“”ஆனா, சமீபத்தில அமெரிக்காவிலேர்ந்து ஏதோ கடிதாசி வந்துதாம். என்னன்னு தெரியலை. நேத்தி ராத்திரி சாதாரணமாத்தான் தூங்கப் போனார். அப்படியே போய்ச் சேர்ந்துட்டார். பாவம்… ஆமாம்… நீங்க… யாரு?” என்றார் அருகில் இருந்த பிராமணர்.
பார்வை நிலைகுத்தி ரகு இருக்க, அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். நேரே தெரிந்த ரேழியில் ஒரு வயதான உருவம் கிடத்தப்பட்டு இருந்தது.
மெதுவாக அந்த உடலை நோக்கி சென்றார் ரகு.
அதற்குள் இன்னொருவர், அவர் தோளைத் தட்டி, “”சார்… கேட்கிறோமே… நீங்கள் யாரு?” என்றார்.
“”நான் தான் அவர் மகன்… அப்பா… அப்பா…” என்று, மனதை மூடியிருந்த படிப்பு, அந்தஸ்து, பணம், புகழ், கர்வம் என்ற எல்லாப் போர்வைகளும் உரிந்து விழ, கதறி அழ ஆரம்பித்தார் ரகு.
– ஆகஸ்ட் 2010