கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 13,093 
 
 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகவனுக்கு சோதனை நாள். அநேகமாக நரகம் தான். மற்ற நாட்களில் கஷ்டமில்லை, ஆபீஸ் போய் தப்பித்துவிடலாம். ஆனால், இன்றைக்கு அப்படி முடியாது. நிச்சயமாக வீட்டில் இருக்க வேண்டும். எல்லா அவஸ்தைகளையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும்.
எங்கோ போய்விட்டு கொஞ்ச நேர இடைவெளிக்குப் பின் வீட்டுக்குத் திரும்பிய போது பூரணி இன்னும் தணியவில்லை என்று தெரிந்து மனம் துணுக்குற்றான்.

பெரியவளுக்கு “தொம்” “தொம்” மென்று முதுகில் அடி விழ அவள் அடிக்குத் தப்பிக்க பயத்துடன் மூலைக்கு மூலை ஓடிக் கொண்டிருந்தாள். ராகவனைப் பார்த்ததும் உயிர் வந்தது மாதிரி “அப்பா” அப்பா’ என்று கதறிக் கொண்டு ஓடி வந்து ராகவனின் பின்னால் ஓளிந்து கொண்டாள். அவள் விசும்பலும் ஓலமும் பலமான அடி விழுந்திருக்கிறது என்று உணர்த்திவிட, ராகவனுக்கே பரிதாபமாக போய்விட்டது. ரோகினிக்கு கொஞ்சம் குறும்புதான். அடிப்பதால் பிள்ளைகள் திருந்தி விடும் என்பதில் ராகவனுக்கு நம்பிக்கையில்லை..

ஆனால், பூரணி ஓயவில்லை, எலியைப் பிடிக்கின்ற பூனையாய் ரோகினியைச் சுற்றி வர பூரணியைத் தடுத்து நிறுத்துகிற முயற்சியில் ராகவன் கொஞ்சம் மேலேயும் போய் பூரணியை முரட்டுத்தனமாக தள்ளவும் வேண்டியதாகிவிட்டது.

“பீடை, சனியன், தரித்திரம்… என் உயிரை எடுக்கறதுக்கினே வந்து சேர்ந்திருக்கு எழவு” என்று பூரணி குழந்தையைச் சபித்தாலும் வசவுகள் ஓன்றிரண்டு தன்னைத் தாக்குவதை ராகவனால் உணர முடிந்நதது. ரோகிணி தப்பியாகிவிட்டது. ஆனால், பூரணியின் பார்வையில் இருந்து புறப்பட்ட எரி ஈட்டிகள் ராகவனுக்கு ஒரு மோதலுக்குத் தயாராயிருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியத்தை உணர்த்தவே அவன் ஆரம்பித்தான்.

“இது என்ன குழந்தையா, மாடா… அடிக்கறதுக்கும் ஒரு அளவில்லையா என்ன… படாத இடத்தில் பட்டு ஏதாவது ஆயிட்டா என்ன ஆகிறது பூரணி….”

“போகட்டும்… செத்துப் போகட்டும். ஒன்னும் குடிமுழுகிடாது…”

ஆத்திரத்துடன் பூரணியை வெறித்தான் ராகவன். அவள் இதற்கெல்லாம் மசிகிற மாதிரி இல்லை..

“இவ்வளவு பேசற ஆள் கொஞ்ச நேரம் வீட்டுல இருந்து கொழந்தைகளைப் பார்த்துகாம வெளியில என்ன கொட்டிக் கிடக்கு…”

ராகவன் ஒன்றும் பதில் பேசவில்லை ஞாயிறு ஒரு நாள் மட்டும் அப்படி இப்படி நின்று காலை நேரங்களில் தெரிந்தவர்களுடன் சாவகாசமாய் பேசலாம். இதற்கும் தடை போடுகிற மாதிரி வக்கனையாக பூரணி பேசியது அவன் உள்ளுக்குள்ளே மண்டியிட்டிருந்த எரிச்சலைக் கிளப்பியது பொறுத்துக் கொண்டான்.

பூரணி எப்போதும் கடுகடுப்பாகத்தான் பேசுவாள். இப்போது இரண்டு மூன்று வருஷங்களாகத்தான் இப்படி. அதற்கு முன்பு இப்படி யில்லை, சுமூகமாகத்தான் எல்லாம் நடந்தது. இப்போது தாமபத்தியமே வெறுத்துப்போகிற மாதிரி அன்னியோனியமும் சௌஜன்யமும் தொடர்ந்து இருக்கப் போகிறதா இல்லையா என்பது கேள்விக் குறியாகிக் கொண்டிருந்தது. குழந்தைகள் என்ற பாலம் மாத்திரம் இல்லையேன்றால் எப்போதோ எல்லாம் பிய்த்துக் கொண்டு போயிருக்கும் நல்ல வேளையாக ஒன்றுக்கு இரண்டாக இருந்ததால் பொழுது போய்க் கொண்டிருந்தது…
நாளாக நாளாக உறவு குறைந்து கொண்டேதான் போனது…

பூரணியின் கையில் சாப்பிடுவதே கூட நரகமாக இருந்தது ராகவனுக்கு அவளும் கூட விரும்பி அவனுக்கு எதையும் செய்கிற மாதிரித் தெரியவில்லை, இதற்கு மாற்று என்ன வென்றுதான் ராகவனுக்கு புரியவில்லை, தன்னுடைய அண்மை அவளுக்குத் தேவையில்லை போல் தெரிந்தது.

தன்னுடைய தேவைகளைப் பற்றி அவள் கவலைப்படத் தயாராயில்லை யென்றும் புரிந்தது – சஞ்சலமும் சங்கடமும் தினமும் அலைகழிக்க உள்ளுக்குள்ளே வெந்து கொண்டிருந்தான் ராகவன்.

கொஞ்சம் பற்றாக்குறை இருந்தது என்பது வாஸ்தவம்தான். ஆனால், இதைவிட பஞ்சம் இருக்கிற எவ்வளவோ இடங்களில் கணவன் மனைவி ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிராக இருக்கிறதில்லையா என்ன…

ஒரு நாள் இதைப்பற்றி தன் நண்பனிடம் பிரஸ்தாபித்தான் ராகவன்.

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மணி கல்யாணம் ஆகி ஏழு வருஷமாகிறது… என்னைக் கண்டா அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கலை…என்னைப் பிடிக்கலைங்கறபோது எனக்கு மாத்திரம் எப்படி அவளைப் பிடிக்கும்… வீட்டுக்கு போகவே பிடிக்கறதில்லை எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாய் நடக்கிறது… பாரேன் ஒரு மாற்றம் இருக்கும்னு ஊருக்கு அனுப்பிச்சேன்… ரெண்டு மாசம் கழிச்சி வந்தா அவ ஊர்ல இருந்தது எனக்கு எவ்வளவு திருப்தியா இருந்ததோ அதேமாதிரி என்னைப் பிரிஞ்சு இருந்தது அவளுக்கும் திருப்தியா இருந்திருக்கும் போலத் தெரிகிறது. வந்ததும் பிரச்சனைதான் – ஸ்டேசனுக்குள்ளேயே ஆரம்பிச்சிடிச்சின்னு
வைச்சுக்கோயேன்… இவ்வளவு நாள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருந்தோமேங்கற தவிப்பு கூட இல்லைன்னா ரெண்டு பேர் மத்தியிலே எவ்வளவு பிடிப்பு இருக்கும்னு புரிஞ்சுக்கோ எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை.”

“இதொன்னும் புதிசில்லை ராகவா.. பல இடங்களிலே இப்படித்தான் நடக்கிறது இந்த மாதிரி ஒரு விரக்தியான சூழ்நிலை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்கு மத்தியில் வரத்தான் செய்யுது…இந்த மாதிரி நிலைமையிலே அனுசரிச்சி பழைய நிலை கொண்டு வரலேண்ணா விபரீதமாப் போகும்…”

“என்ன ஆகும்கறே..”

“தாம்பத்தியத்திலே விரக்தி ஏற்பட்டா என்ன வேணுமானாலும் ஆகும்பா… ஒரு மனுசனோட கஷ்டநஷ்டங்களை வெளிப்படுத்தாமே அடக்கி சங்கடப்பட ஆரம்பிச்சா இரத்த அழுத்தம் அது இதுன்னு வரலாம்… இந்த மாதிரி விரக்தியோட வெளிப்பாட்டுக்கு பழகின இன்னொரு பெண்கிட்ட ஆறுதல் தேடப் போய் பலவீனமான ஒரு சூழ்நிலையிலே அது விபரீதமான விளைவுகளே கொண்டு போய்விடறதுமுண்டு… ஏன் தற்கொலை, பெரிய குடும்பங்களிலே விவாகரத்து இதுக்கெல்லாம் காரணமே இதுதான். இவ்வளவு வருத்தப்படறே நீ நாளைக்கு வழி தவறவும் ஏதுவாகலாம் இதை மொதல்ல சரியாக்க முயற்சி செய்யனும்…”

கேட்கக் கேட்கத் திக்கென்றது ராகவனுக்கு மணி சொன்னது.விளைவுகள். ஆனால், அதைத் தீர்க்கிற வழிகள் அவன் சொல்லவேயில்லை…

“இதுக்கு என்ன செய்யலாம் மணி”

“இதை நீயேதான் தீர்க்கனும்… ஏழு வருஷமா உன் மனைவியோட புழகி அவளோட பிரச்சனைகள் குணம் எல்லாம் உனக்குத்தானே தெரியும்… நீதான் சரிசெய்யப் பார்க்கணும் இதை நான் எப்படித் தீர்க்க முடியும்… மணி சொன்னது வாஸ்தவம் என்று புரிந்தது ராகவனுக்கு விரக்தி ஒரு பெண்ணை எங்கேயும் கொண்டு செலுத்திவிடும் என்பது உண்மை தான். பிரச்சனை எங்கே என்றுதான் தெரியவில்லை தன்னை மாதிரி பயங்கள் பூரணிக்கும் இருக்குமா என்ற சந்தேகம் மனதுக்குள் எழுந்தது ராகவனுக்கு.

அன்று புது ரூபத்தில் சண்டை ஆரம்பித்தது…

“ஏங்க… நம்ம ரோகிணியை கலைவாணியிலே சேர்த்துடலாமில்லையா – இங்கிலீஸ் மீடியம்..”

“ஏகப்பட்ட டொனேஷன் கேப்பாங்களே…”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே…. எங்க மாமா சொன்னாரு அஞ்சாயிரம் ரூபாயிலே சேர்த்துடலாம்… மத்தவங்களாயிருந்தா பத்தாயிரம் செலவாகும்..”

“அஞ்சாயிரம் அப்புறம் டிரஸ்… பீஸ்.. அது இதுன்னு ஏகப்பட்ட செலவாகுமே நம்மாலே தாக்குப்பிடிக்க முடியுமா பூரணி.. டொனேஷன் கொடுத்து சேர்ரது எனக்கு பிடிக்கலை.. ஏன் தமிழ் மீடியத்துலே என்ன கெட்டுப் போச்சி… நாங்களெல்லாம் எலிமெண்டரி ஸ்கூல்லே படிச்சுத்தான் டிகிரி வாங்கினோம்…’

“உங்க காலத்திலே நீங்க சோத்துக்கு இல்லாம கஞ்சி குடிச்சி.புஸ்தகம் வாங்க காசில்லாம தர்மத்துக்கு நோட்டுப் புத்தகம் கொடுத்தவங்க கிட்ட கெஞ்சி ஒரே சட்டையைத் தொவைச்சி போட்டு ஸ்கூல் போய் படிச்ச வருல்லே – என் புள்ளைங்களும் அப்படியே இருக்கணுமா… புள்ளைங்கள கௌரமா வளக்கனுங்கற ஆசையே உங்க மனசிலே வராதா…”

“எது கவுரவம்.. நம்ம யோக்கியதையை மீறி டொனேஷன் கொடுத்து இங்கிலீஸ் மீடியத்திலே சேக்கறதுதான் கவுரவமா.. தமிழ் மீடியத்திலே படிக்கறது அவ்வளவு கேவலமா… அதெல்லாம் தேவையில்லே…அநாவசியம்…”

உள்ளுர ராகவனுக்கும் ரோகிணியை இங்கிலீஸ் மீடியத்தில் விடத்தான் ஆசை. ஆனால், அது வாயில் வரவில்லை, கூடவே தன் பஞ்சத்தை பூரணி குத்திக் காட்டியதால் வேறு வெகுண்டு போயிருந்தான்.

“நீங்க ஒண்ணும் படிப்பு விஷயத்தில் தலையிட வேண்டியதில்லே…நான் சீட்டுப் பணத்தை எவ்வளவு தள்ளிப்போனாலும் பரவாயில்லை எடுத்து சேர்க்கத்தான் போறேன்..’

சீட்டுப் பணத்தை எடுக்கப்போறேன் என்று பூரணி சொன்னதும் பக்கென்றது ராகவனுக்கு. அதற்கென்று ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தான் அவ்வளவும் வீண்தானா… அதைவிட தன்னை மீறி பூரணி ஒரு காரியம் செய்வதை அவனும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தனக்கென்று என்னதான் மதிப்பு வைத்திருக்கிறாள் இவள். தான் ஒரு தூசுக்கும் துடைப்பத்திற்கும் சமம் என்று நினைக்கிறாளா இவள் என்ற கொதிப்பு எழுந்தது.. ஒன்றும் பேசாமல் போய்விட்டான்.

இரண்டு நாள் கழித்து இன்னுமொரு பிரச்சனை எழுந்தது…

“பூரணி எங்க ஆபிஸ்காரங்க ஒரு எடத்துல நெலம் வாங்கி பிரிச்சுப் போட இருக்காங்க ரெண்டாயிரம் ரூபா அட்வான்ஸ் கொடுத்தா நமக்கும் ஒரு மனை ஒதுக்குவாங்க வருஷக் கடைசியிலே மிச்சப்பணத்தைக் கட்டினா போதுமாம்..

“பணத்துக்கு எங்கே போறது..”

“எங்கேயும் போக வேண்டாம். ரோகிணியோட செயினை வச்சிவேணா பணம் வாங்கி..”

ஒரு வார்த்தை பேச விடாமல் குறுக்கிட்டாள் பூரணி “இருக்கிறது அது ஒண்ணுதான் – ஏதோ கல்யாணம் கார்த்திகைக்கு கௌரவமாப் போட்டுட்டுப் போறோம் அதுவும் என் செயினை அழிச்சிப் பண்ணினது அது இவ கழுத்தில் இருக்கிறது உங்களுக்குப் பொறுக்கலை…”

“நான் மாத்திரம் வீண் பண்றதுக்காவா கேக்கிறேன்…”

“பெண் குழந்தைக்கு இப்போது இருந்து சேர்த்தாதானே நடக்கும்..’

“ஏன் மனையா சேர்த்தா ஆகாதோ..”

“சேர்க்கலாம். இப்போ இது போகும் – அப்புறம் பணம் பத்தாம என் நகை போகும் – வெறும் கழுத்தோட நிற்க எனக்கு தைரியமில்லை. அப்படி ஒண்ணும் நிலம் வேண்டாம். நேரம் வரட்டும் பார்க்கலாம்..”

சப்பென்றாகி விட்டது ராகவனுக்கு எத்தனையோ திட்டங்கள் எல்லாம் தவிடுபொடி.. அவனுக்கு தெரிந்தது எல்லாமே முன்னேற்றமான திட்டங்கள்தான் எதையுமே அவள் கேட்கவில்லை. எவ்வளவு தள்ளிப் போனாலும் சீட்டுப் பணம் எடுத்து ரோகிணிக்கு ஐயாயிரம் ரூபாய் டொனேஷன் கொடுப்பது ஸ்கூல் சேர்ப்பது என்பது என்று பூரணி வரை நிச்சயமாகிவிட்டது… தான் சொல்லி எதுவும் நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் ராகவன் பொறுமையின் எல்லைக்கே போய்விட்டான்.

“ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுஷியா.. எனக்கும் புத்தியிருக்கு என்னால் தான் இந்த வீடு நடக்குதுங்கற உணர்ச்சியாவது இருக்கா உனக்கு இனிமே உங்கிட்ட ஒரு விஷயத்தையும் நான் சொல்லப் போறதில்லை.. எப்படி நீ நாசமாகப் போனா எனக்கென்ன… இந்த வீட்டுப் பிரச்சனை எதுலேயும் நான் தலையிடப் போறதில்லை சம்பளத்தைத் தூக்கி எறிஞ்சிடறேன். எனக்கு வேண்டியது மூணு வேளைச் சாப்பாடும் – ரெணடு ஜதை டிரஸீம் இந்த வீட்டுலே பொணம் விழுந்தாக் கூட நீயே பக்கத்திலே இருந்து நடத்து..”

“சந்தோஷம் அப்படி விட்றது ஆம்பிள்ளைக்கு அழகு’ என்று நிச்சயமாய் உறுதியாய் பூரணி சொன்னபோது ராகவனுக்கு புத்தியே பேதலித்துவிட்டது. என்ன ஜென்மம் இவள் – இவளைத் திருத்த முடியவே முடியாதா…

மறுவாரம் சர்க்குலேஷன் லைப்ரரிக்காரன் புத்தகம் கொண்டு வந்து தரவில்லை, “அம்மா வேண்டாம்னுட்டாங்க ஸார்” என்று புத்தகம் போடுகிற பையன் வழியில் பார்த்து சொல்லி விட்டுப் போனான்.

“சர்க்குலேஷன் லைப்ரரிக்கு ஏன் பணம் தரல்லே” என்று ஆத்திரத்துடன் ஆரம்பித்தான் ராகவன் – குரலில் இருந்த கசப்புக்கு அளவில்லை.

“வாடகை ஏத்தியாச்சு… நான் ராத்திரி பாலை நிறுத்தியாச்சு தெரியுமா.. இனிமே எல்லாம் அப்படித்தான்…”

மனைவியை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துவிட்டு எதும் பேசாமல் இடத்தைவிட்டு நகர்ந்தான் ராகவன். இருந்த ஒரே சந்தோஷம் அதுவும் பிடுங்கியாகிவிட்டது… கேவலம் நாற்பது ரூபாய் யாருக்காக இந்த உழைப்பு… கஷ்டம்… யார் புரிந்து கொண்டார்கள் தன்னை. சலூனுக்கு வந்த போது கிருஷ்ணன் இவனுக்காகவே காத்திருந்த மாதிரி தனியாக இருந்தான்.

“வாங்க ஸார் – கட்டிங்கா, ஷேவிங்கா…”

“ரெண்டு தாம்பா…” என்றவாறு உட்கார்ந்தான் ராகவன்.

“தொழில் எப்படி நடக்குது…”

“ஏதோ ஓடுது ஸார்… வீட்டுல எல்லாம் சௌக்கியங்களா…”

“இருக்காங்கப்பா…”

கிருஷ்ணன் சடசடவென்று கத்தரி கோலின் ஒலி நயத்தோடு தலைமுடியை வாங்கிக் கொண்டிருந்த போது கிருஷ்ணன் சம்சாரம் வந்து நின்றாள். வேலையை நிறுத்தி மனைவியின் பக்கம் திரும்பினான் கிருஷ்ணன்.

“என்ன கண்ணு என்ன சமாச்சாரம் வேலைக்குப் போகலே…”

“போகணும் தான்…மத்தியானம் சோத்துக்கு என்ன கண்ணு…”

“அரிசிக்கு கூட காசு இல்லை மாமா…”

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அழைத்துக் கொண்ட முறை விசித்திரமாக இருந்தது ராகவனுக்கு. கிருஷ்ணன் சம்சாரத்தின் முகம் பார்க்க சகிக்க முடியாதது. கிருஷ்ணனும் கோரம்தான். இந்த அவலட்சனங்களின் “கண்ணு” அழைப்புகள் பெரிய வேடிக்கை தான்.

“மத்தியானத்தைப் பத்தி இப்ப என்ன கண்ணு இப்போ சாப்பிட்டியா….”

“இல்லே”

“வேணுமா”

“வேணுந்தான் என்ன செய்யறது…”

“கேக்க வேண்டியதானே… இந்தா கண்ணு” என்று ஒரு ஐந்து ரூபாய்க் காசை எடுத்து அவள் கையில் கொடுத்தான் கிருஷ்ணன். மொதல்லே சாப்புட்டு வேலைக்குப் போ..”

“மத்தியானம் சோத்துக்கு..”

“நீ வா எல்லாம் இருக்கும்….”

“நான் அப்போ வேலைக்குப் போவட்டுமா. மாமா..”

“போயிட்டு வா”

அவள் கவலையற்று புறப்பட்டுப் போய்விட்டாள்….

“என்ன கிருஷ்ணா… ரொம்ப சிரமமோ….”

“எல்லாம் இருக்க வேண்டியது தாங்க ஒரு சின்ன எடம் வாங்கின கடன் இருக்கு – வேலைக்குப் போய் அவளே கட்டறா… “ராகவன் ஸ்தம்பித்தான்;.

“மத்தியானம் சாப்பாட்டு விஷயம் எப்படி.”

“ஐயா தர்ற பணத்திலே கொஞ்சம் அரிசி வாங்கி வடிச்சிட்டாப் போவுது. அது ஒரு பிரச்சனைங்களா – புளியும், உப்பும் காரமும் சேர்ந்தா குழம்பு.”

“புள்ளைங்க படிக்குதா.”

“ஆங்… பெரிய படிப்பு – சுமாராத்தான் படிச்சாங்க. படிச்சு ஆபீஸ்க்கா போக முடியும் – அதெல்லாம் இந்தக் காலத்திலே எங்க முடியப்போகுது. ஸ்கூல் விட்டு நிறுத்திவிட்டேன். ஒரு லெட்டரை படிக்கற படிப்பு இருந்தாப் போதாதா..” “நானே உக்காந்து புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். இப்போ நம்ம புள்ளைங்க தினத்தந்தி படிக்கும் ஸார்… டைலரிங் மாதிரி கத்துக்க விட்டிருக்கேன்… தொழில் பழக்கித் தரேன் சரிங்களா”

“உன் சம்சாரத்துக்கு உம்மேலே ரொம்ப பிரியம் போல தெரியுது…”

“பிரியமா… கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா ஸார்…”

“ஏதாவது மந்திரம் போட்டு வச்சிருக்கியாப்பா”

“இதுக்கெல்லாம் மந்திரம் எதுக்கு ஸார்… சிம்பிளா ஒரு வழியிருக்கு… அவளை நாம கவனிச்சிக்கணும்… அதுபோதும்…”

“அது என்ன நாம அவளை கவனிச்சிக்கறது…..”

“புரியலையா ஸார்…. ரொம்ப ஸிம்பிள்…எந்த விஷயத்திலேயும் கண்ணுவுக்கு என்ன தொந்தரவுகன்னு நான் பார்த்துக்குவேன். முக்கியம் அதான்… அப்புறம் அவ கண்ணை வச்சி என்னைக் கவனிச்சிக்குவா…அவளை நாம கவனிச்சிக்கனும்.. நம்மளை அவ கவனிச்சிக்குவா அதான் மந்திரம் மாயம் எல்லாம்… நாம ஒரு படி கவனிச்சா பொம்மளை நம்மை ரெண்டு படி கவனிச்;சிக்குவா…”

பொறியில் அடிபட்டுக் கண்திறந்தது ராகவனுக்கு… கசாப்புக் கடைக்காரனிடம் சாது பெற்ற ஞானம் மாதிரி.. இது ஏன் நமக்குப் புரியவில்லை. வீட்டுக்கு வந்த போது பூரணி குழந்தைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்… “மணியாச்சு…. குளிச்சாத்தானே எனக்கு வேலையாகும்…உங்கப்பா டிபனுக்கு வந்துடுவார்… சனியனுங்க….”

புது மனுஷனாய் ராகவன் உள்ளே நுழைந்திருந்தான்.. “ஐயோ…சலூனுக்கு போயிட்டு வந்து எல்லாத்தையும் தொடாதீங்க… கிரகம்…”

வேறு நேரமாக இருந்தால் சுள்ளென்று எரிந்து விழுந்திருப்பான்.

“எதையுமே தொடல்லே சாமி.. அட நீங்க யாரும் குளிக்கலையா…வாங்க நான் குளிப்பாட்டறேன்….”

“சோப்பை வீண் பண்ணிடுவீங்க.. நானே குளிப்பாட்டறேன்…”

“இல்லே….. கொஞ்சமா போட்டுடறேன்… நீ போய் டிபன் வேலையைக் கவனி…”

குழந்தைகளை கூட்டிப்போய் குளிப்பாட்டி துவட்டி தன் குளியலை முடித்து அவர்களை ஒழுங்குக்குக் கொண்டு வந்த போது டிபன் ரெடியாக இருந்தது… டிபனுக்கு செய்த துவையல் கொஞ்சம் ருசியாக இருந்தது…

இதமாக இல்லாவிட்டாலும் பூரணி பதமாக இருந்தாள். சாயந்திரம் ஆபீஸ் விட்டு வந்த போது பூரணி கொஞ்சம் உற்சாகமான மனநிலையில் இருப்பதாகத் தெரிந்தது… காபி சாப்பிட்ட பின் நிதானமாக உட்கார்ந்தான் ராகவன்..

“பூரணி… ஒரு விஷயம் நான் இனிமே சாயந்திரம் வர முடியாது…வர ராத்திரி ஒன்பது மணியாகும்…”

“ஏன் ஆபீஸில் வேலை ஜாஸ்தியோ….”

“இல்லே… ஒரு எடத்திலே பார்ட் டைம் வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.. வாரம் ஐநூறு ரூபாய் தருவாங்க.. ஜெனரல் மெர்ச்செண்ட் வேற வசதிகளும் இருக்கும்.. பல சரக்குகளின் விலை குறைவா கிடைக்கும்.”

ஆச்சரியத்துடன் கணவனை உற்றுப் பார்த்தாள் பூரணி.

“வேலை எங்கே.. ஆபீஸீக்குப் பக்கத்திலா..”

“இல்லே டவுன்லே….”

“ஆபீஸீக்கும் டவுனுக்கும் மூணு மைல் ஆகுமே.. எப்படிப் போவீங்க..”

“சைக்கிள்ளே தான்…”

“சிரமமா இருக்காதா…”

“இருக்கும் தான்… அதப்பார்த்தா எப்படி பணம் இருந்தா உனக்கு எவ்வளவு உதவியா இருக்கும்…”

எங்கேயோ ஒரு முறுக்கு விட்டு பூரணி நெகிழ்ந்தது தெரிந்தது.

தலையைக் குனிந்து கொண்டு விரலால் கோடு போட்டுக் கொண்டிருந்தாள் பூரணி;. லேசாக கலங்கியிருப்பாளோ தெரியவில்லை

“பாரேன் ஒரு வேடிக்கையை ஆபிஸீலே எல்லாப் பசங்களும் குழந்தைகளுக்கு இங்கிலீஸ் மீடியம் தேவையில்லைப்பா அநாவசிய கௌரம்ங்கறானுங்க… கடைசியிலே ஒவ்வொருத்தனும் இங்கிலீஸ் மீடியத்துலதான் சேர்த்திருக்குறானுங்க அயோக்கியனுங்க…”

அவன் பேசியதை பூரணி பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

“ஒன்பது மணி வரை வேலை செஞ்சுட்டு நெஞ்சு வலிக்க சைக்கிளை மிதிச்சிட்டு வர்றதுக்கு உங்களுக்கு கஷ்டமா இருக்காதா…’

நீண்ட இடைவெளிக்குப் பின்பு தன்மேல் அக்கரையுடன் உண்மையான
பரிதாபத்துடன் பூரணி அவள் கையை எடுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டான் ராகவன்…

“இப்படியே எத்தனை நாள் இருக்கறது பூரணி ஏதாவது செய்யனும் மில்லையா அதான். என் சிரமம் ஒன்றுமில்லே இதிலே… உனக்குன்னு ஆசைப்பட்டா கூட ஏதும் செய்ய முடியலேன்னு எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன் தெரியுமா…”

பூரணியின் கட்டுகள் அதோடு விட்டுப் போயின… பெண் பலவீனமானவள்.. ரொம்ப பலவீனமானவள்.. அன்பு செய்தால் தன்னை சமர்பிக்க அவள் நேரம் காலம் பார்ப்பதில்லை. உடைந்து போன பூரணியின் கண்களில் நிற்காமல் கண்ணீர் பெருக்கெடுத்தது…”

ராகவன் இழுத்து பூரணியை தன்னோடு சேர்த்துக் கொண்டான்…

“பைத்தியமே… என்ன இது…..ச்சீ…”

“நான் நகை வச்சி பணம் தரேன்.. நீங்க ஒரு சின்ன டி.வி.எஸ். மாதிரி வண்டி வாங்கிக்குங்க… டொனேசன் கொடுத்து குழந்தையை சேர்க்கறது ஆடம்பரம் தான்… உடம்பைக் கெடுத்துக்க கூடாது அதான் முக்கியம்…. நீங்க தான் எல்லாத்துக்கும் ஆதாரம். நான் உங்களை ரொம்ப நாளா கவனிக்கலை… ஆமாம் தானே….

பூரணி மடைதிறந்த மாதிரி பேசிக் கொண்டே போனாள்… அருவி
மாதிரி வார்த்தைகள் வந்தன… இனி அவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள்
எழலாம். ஆனால், இந்த சௌஜன்யம் நிச்சயம்.. இந்த சௌஜன்யம்
பிரச்சனைகளை பொடியாக்கி விடும்.. எந்தப் பூட்டும் பலமானது தான் –
சாவி ரொம்ப சிறிதாகவும் இருக்கலாம். எதுபோட்டால் திறக்கும் என்பது தான் முக்கியம்…

Print Friendly, PDF & Email

2 thoughts on “சாவிகள்

  1. ஒரு நல்ல உளவியலை ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர். பெண்களின் இயல்பை நன்றாக எடுத்து சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *