கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 12,292 
 
 

அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும் பூமிக்குமாக இருட்டு கறையாக அப்பியிருந்தது. பூதாகரமான அந்த இருட்டைக் கண்களால்மூடித்திறந்தும் பார்த்தான். அவனது கண்களுக்கு இருட்டைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை.

மணி பனிரெண்டு. மின்சார நிறுத்தம் வேறு. அவனைச்சுற்றிலும் நிசப்த மயம் நிலவியது. அவனுள் துடிக்கும் லப் டப் இதயத்துடிப்புகள் மிதியடி எழுப்பும் சப்தமாக அவனுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன .

அவன் கண் முன்னே நீண்டுக்கிடந்தது கிழக்கு மேற்கு சாலை. கண்களை கட்டிக்கொண்டு வாகனம்ஓட்டலாம். அப்படியொரு நேர் சாலை அது. மேகத்தைக் கரைத்து மெழுகியது போன்ற அந்த இருட்டுக்குள் சாலையின் நடுவில் தீட்டப்பட்டிருந்த வெண் பட்டை மடிப்புகலையாத கதர்த்துண்டு போல கண்களில் பளிச்சிட்டது. சாலையின் தென் புறத்தில் ஒரு பேருந்து நிழற்குடை. அந்த நிழற்குடைக்குள்தான் பாண்டிபீடியை புகைத்துக்கொண்டும் நெருப்பை உள்ளங்கைக்குள் மறைத்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தான்.

அவனது மேனியைக் காற்று தடவிச்சென்றது . இருப்பினும் அவனுக்கு வியர்க்கவே செய்தது.நெற்றியில் வியர்வை அரும்புகள் .அதை ஆள்காட்டி விரலால் வழித்துத் தரையில் எறிந்தான். மெல்லசெருமிக்கொண்டு,தொண்டையைஎச்சிலால் நனைத்துக்கொண்டான்.
அவன் பேருந்தை முரட்டுத்தனமான பார்வையுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது அதில் அவன் பயணம் செய்வதற்கு அல்ல. பயணம் செய்வதாக இருந்தால் இத்தனை நேரம் அவன் பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. எத்தனையோ வாகனங்கள் அவனை கடந்து சென்று விட்டன. அதிலொன்றில் ஏறிப் பயணம் செய்திருக்கலாம். அவன் பேருந்திற்காகக் காத்திருப்பதற்கான காரணம் வேறு.

அவன் கையில் ஒரு சோடா பாட்டில். அதற்குள் அரை லிட்டர் பெட்ரோல் இருக்கிறது. பாட்டிலின் வாயில் சுருட்டி அடைக்கப்பட்ட கதர் துணி.சட்டைப்பைக்குள் ஒரு தீப்பெட்டி . அவ்வளவேதான்! இதைக்கொண்டு அவன் நிகழ்த்தப்போகும் நிகழ்வு நாளை தலைப்புச் செய்தியாகக்கூட வரலாம் .
அரசாங்கப் பேருந்துஅது.இந்நேரம்அந்தப்பேருந்து வந்திருக்க வேண்டும். எப்ப வேண்டுமானாலும் வரும். எப்ப வேண்டுமானாலும் போகும். அதற்கு ஏது நேரம்…….? எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் எப்படியும் அந்தப் பேருந்து வந்துவிடும். வந்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேருந்தைத் தேக்க வேண்டும். பேருந்து நின்றதும்……………………………………. நடத்தப்போகும் நிகழ்வுகளை மனத்திற்குள் ஓடவிட்டான்.

மணி பனிரெண்டைத் தாண்டி, கால், அரை , முக்காலைத்தாண்டி ஒரு மணிக்கு வந்து விட்டது. ஆனால் பேருந்து இன்னும் வரவில்லை. இந்நேரம் வந்திருக்க வேண்டுமே? ஒரு வேளை இன்றைக்கு பேருந்து வராதோ? கேள்விக்கணைகள் அவனை குடைந்து எடுத்தன.
தூரத்தில் திடீரென“ டமார் “பேரொலி !. திட்டுத்திட்டுகளாக தீப்பிழம்புகள். கண்களைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.டீசல் நெடியில் தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது .
நடந்திருப்பது என்ன…? பாண்டி சட்டென ஊர்ஜித்து விட்டான். தான் நடத்திட வேண்டிய சதியை வேறொருவன் நடத்தி முடித்திருக்கிறான் என்பதை நினைக்கையில் பாண்டி முகத்தில் ஏமாற்றம் அப்பிக்கொண்டன.

டக்டுக், டக் டுக்,……… முகம் தெரியாத ஓர் இளைஞன் ஓடி வருகிறான். “ பொஸ், பொஸ் “ என மூச்சுகளைக் கக்கியபடிகூலி வேலைக்கு சென்று ஊருக்குத்திரும்பும் அன்றாடங்காச்சிகள். எரிந்துகொண்டிருக்கும் பேருந்தைப்பற்றி கதைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

“ இந்த ரூட்ல மொத பஸ்ஸே சி1 தானேப்பா “– என்கிறான் அந்த இளைஞன். அவனின் கணீர் குரல் நிழற்குடையில் பதுங்கிக்கொண்டிருந்த பாண்டிக்கு வெண்கலக்குரல் போல் கேட்டது. அந்தக்குரலைக் கேட்டதும் பாண்டிக்கு அட்ரீனல் சுரந்தது. பயம் சப்பென அவன் முகத்தில் ஓங்கி அறைந்தது. அது குணாவின் குரல் . கூடப்பிறந்த தம்பியின் குரல். குணா தன்னை பார்த்துவிட்டால் இந்நேரத்தில் இங்கே என்ன வேலை என்ன விசாரிக்கச்செய்வான். கையில் வைத்திருக்கும் பொருட்களைப்பார்த்தால் கூடப்பிறந்த அண்ணன் என்று கூட பார்க்கமாட்டான் . போலீஸாரிடம் காட்டிக்கொடுத்து நையப்புடைத்து விடுவான்.

பாண்டி தன் தலையை ஆமையைப்போல இழுத்துக்கொண்டு முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டான்.பேச்சுக்குரல்கள் மிக அருகினில் கேட்டது.

“ எத்தனையோ பிள்ளத்தாச்சிகள சுமந்த பஸ் ஆச்சே. “

“ எவ்ளோ பேரை ஏத்தினாலும் அசராமே போகுமே “

“ நம்ம மாவட்டத்தில அதிக வசூல் இந்த பஸ்தானேப்பா “

“ என்னதுக்கு இந்த பஸ்ஸ கொளுத்திருப்பான் ? “.

“ என்னதுக்கு கொளுத்தினானோ…….? பாவிகளுக்குக் காரணமாக கிடைக்காது . சாதிம்பான், மதம்பான், கட்சித்தலைவருக்கு வயிற்று வலிம்பான். இதுக்கெல்லாம் ரொம்ப விசுவாசமுனு காட்டிக்கிறவன்க தன்னல கொளுத்திக்கிறணும். இல்ல அவனோட பைக்கையோ , வீட்டையோ கொளுத்தி விசுவாசத்தை காட்டணும்.

“ இந்த நாட்டில பஸ் ஏற்படுத்தின புரட்சி அவனுங்களுக்கு எங்கே தெரியப்போகுது. அவன்களுக்கு தெரிஞ்சது சாதி , மதம், தலைவர் , கட்சி, கத்தரிக்காத்தான் .”

“ ரயில் மாதிரி , விமானம் மாதிரி பஸ்ல பஸ்ட் கிளாஸ், செகன்ட் கிளாஸ்னா இருக்கு. சமத்துவத்தை மக்க மனசில முதல்ல விதைச்சது பஸ்தானேப்பா ”

குணா வெறும் பிண்டமாகத்தான் நடந்தான். அவனுடைய நினைவுகள் எல்லாம் எரிந்துக்கொண்டிருக்கும் பேருந்தில்தான் இருந்தது. பேருந்தில் அவன் கழித்த பொழுதுகள் , அவன் செய்த கேலி, கிண்டல்கள், அதில் தூங்கி எழுந்த நினைவுகள் அவனை சிலந்து வலையாக பின்னத்தொடங்கின.

பேருந்து நிறுத்தத்தில்மாணவர்களுக்கிடையே பரபரப்பு. கைக்கடிகாரத்தை பார்ப்பதும், பேருந்து வரும் திசையை எட்டிப்பார்ப்பதுமான ஆர்ப்பரிப்பு. பேருந்தின் சன்னல் வழியே புத்தக பையைத் திணித்து எப்படியேனும் ஒரு இடம் பிடித்திட வேணும் என்கிற துடிப்பு. இறுக்கைகளுக்கு இடையில் , படிகளுக்கு அருகாமையில் எப்படியேனும் உடம்பை நுழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு என ஒவ்வொரு நிறுத்தமும் ஆர்ப்பரிக்கும்.

ஆடைகளைச் சரி செய்து கொண்டும் , புத்தகப்பையின் ஷிப்பை இழுத்து விட்டுக்கொண்டும் படிகளில் கால் வைக்க வேகம் காட்டும் பிஞ்சுக்கழந்தைகள். மாணவர்கள். படி வரைக்கும் கூட்டம் நிறைந்து வழியுமோ ? வௌவாலைப்போல தொங்கிக்கொண்டு, நிறுத்தத்திற்கு நிறுத்தம் இறங்கி ஏற வேண்டிருக்குமோ?………………………… என்கிற பயம் அவர்களை தினமும் ஆட்கொண்டு பயமூட்டும்.

“ பஸ் வந்தாச்சு . பஸ் வந்தாச்சு . வேகமா ஓடிவாங்க …….“. புத்தக மூட்டையை சுமந்துக்கொண்டு வியர்வைக்காட்டில் நனைந்து, மேல் மூச்சு. கீழ்மூச்சு வாங்க காற்றை கிழித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள் மாணவர்கள். .

பேருந்து, நிறுத்தத்தில் நின்றபடி மூச்சு வாங்குகிறது. உள்ளுக்குள் அடர் நெரிசல். பயணிகள் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டும்,ஒருவர் கால்களை ஒருவர் மிதித்துக்கொண்டும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“ போலாம் ரேஸ் …………“ என்றபடி விசில் கொடுத்தார் நடத்துனர். அவரின் கட்டளையை பேருந்து உதாசீனப்படுத்திவிட்டது. பேருந்து நகரவில்லை . மூச்சு வாங்கிக்கொண்டு “ டர், டர்………….“ காசநோயாளி மாதிரி இழுத்துக்கொண்டு அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

“ யாரப்பா ட்ரைவர்? பஸ்ஸ எடுப்பா. உள்ளே நிக்க முடியல. ஒரே புழுக்கமா இருக்கு “

ஓட்டுனர் ஹாரன் கொடுத்தப்படி. “வேகமா ஓடி வாங்க“ என்கிறார். மூச்சு இறைக்க ஓடி வந்த பள்ளிச் சிறுமிகள் முண்டியடித்துக்கொண்டு முன் படியில் ஏறுகிறார்கள். “ போலாம் ……போலாம் “ என்றான் ஓர் இளைஞன் அவன்தான் குணா.

தகரத்தைக் கம்பியால் கீறுவதைப் போல ஒரு “ கிரீச்“ சத்தம் . அந்த சத்தம் பயணிகளை எச்சரிக்கை செய்கிறது. தனக்கு எதோ ஒரு ஊனம் என்பதை எடுத்துச்சொல்கிறது. உறுமிக்கொண்டு ஒரு குலுக்கல். சக்கரத்தை உராய்த்துக்கொண்டு மெல்ல கிளம்புகிறது.
நடத்துனர் உடலை வளைத்து நெளித்து பயணிகளை விலக்கி பயணிகளுக்குள்நுழைகிறார். “ டிக்கெட், டிக்கெட்…………………. “

“ கண்டக்டர் சார்……………. சில ஊர் பஸ்ல டீவி இருக்கு. எப்.எம் ரேடியோ இருக்கு, சிடி பிளேயர் இருக்கு. இந்த பஸ்ல ஸ்டேரிங்க், பிரேக் இதைத்தவிர வேற என்ன இருக்கு? ” கேட்டான் குணா. அவன் குறும்புக்காரன் . எதையாவது சொல்லாமல் அவனால் பயணம் செய்ய முடியாது.

“ என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க. ட்ரைவர், கண்டக்டர்னு நாங்க ரெண்டு பேரு இருக்கோமே “ என்கிறார் நடத்துனர். இளைஞர்கள் வட்டத்தில் திடீர் சிரிப்பு. வாயிற்குள் அடைப்பட்டுக்கிடந்த காற்று உடைந்து தெரிக்கிறது.

“ யாரப்பா எப்.எம், டீவி எல்லாம் கேட்டது?“ பேச்சிற்குள் நுழைகிறார் ஓட்டுனர்.

“ நான்தான் சார் “

“ யாரு எலக்டீரீசன் குணாவா?“

“ ஆமா சார் “

“ நீங்க தினமும் இந்த பஸ்ல வந்துப்போறவராச்சே. உங்க செலவுல ஒரு எப்.எம் வாங்கி வக்கிறது? “

ஓட்டுனர் அப்படிச்சொன்னதும் பயணிகள் அனைவரும் குணாவைப் பார்க்கிறார்கள். இதற்கு அவன் என்ன சொல்லப்போகிறான் என வினாத்தொற்றி பார்க்கிறார்கள்.அவனுக்கு பதில் சொல்லத்தெரியாதா என்ன? . ஏன் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என சொல்லாமல் இருந்தால்தான் உண்டு. குணாமுடிகளை கோதி விட்டுக்கொண்டு கதாநாயகனாக தன்னை பாவித்து கொண்டு நிற்கிறான்.

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்று மூச்சு வாங்குகிறது. நடத்துனர் பின் படியிலிருந்து இறங்கி முன் படியை நோக்கி வருகிறார். “ யாரப்பா படியில ? இறங்கி ஏறுங்க…….“ என்றவாறு படியில் தொங்கிய பயணிகளை விலக்கி முன் படியில் ஏறுகிறார்.

அதே குணா சொன்னான். “ கண்டக்டர் சார்……… பஸ்தான் கூட்டமா இருக்குல. நீங்க அடுத்த பஸ்ல வந்தாத்தான் என்னவாம்? “ துண்டித்துக்கிடந்த சிரிப்பு மீண்டும் உதடுகளில் ஒட்டிக்கொண்டது. சில்லரை காசுகள் சிதறியதைப்போல கெலுகெலுப்பு. உடலைக்குலுக்கி கெக்கே , கெக்கே என வெடிக்கும் பட்டாசு சிரிப்புகள்.

“ இது நல்லா இருக்கே “ என்றபடி சில்லரை பையை அக்குள்குள் வைத்துக்கொண்டு , பயணிகளை நெறித்துஓட்டுனரை நோக்கி நுழைகிறார் நடத்துனர்.

“ குணா……….. நான் சொன்னதுக்கு ஒரு பதிலையும் காணோமே ?” விட்ட இடத்திற்கு வருகிறார் ஓட்டுனர்.

“ என்னது சார். எப்.எம் செட் தானே ? நான் வாங்கி வக்கிறேன் சார். ஆனா ரெண்டு கண்டிசன் ” .

பயணிகளின் காதுகள் குணா நிற்கும் பக்கம் திரும்புகிறது.

“ என்னதுய்யா ரெண்டு கண்டிசன்?“

“ இந்த பஸ் கடைசி வரைக்கும் இந்த ரூட்லதான் ஓடணும் “

“ இது என்ன முடியாத விசயமா? டெப்போவில ஒரு வேண்டுகோள் வச்சிட்டாப் போச்சு. அடுத்து…………….? “

“ அதோப்பாருங்க.ஒருத்தர் சைக்கிள்ல போய்க்கிட்டிருக்காரு. அவர இந்த பஸ் முந்தணும்“

குணா இப்படிச்சொன்னதும் , ஒரு பொக்கை வாய்க் கிழவி “ நல்லா சொன்னே தம்பி “ என்றவாறு “குபீர்“ என வெடித்தாள். அவள் வெடித்த வெடிப்பில் அவள் வாயிலிருந்த வெற்றிலை எச்சில் பயணிகளின் முகத்திலும் , சட்டையிலும் பன்னீர் தெளித்தது. குணா அவசரம் அவசரமாக சட்டையை உதறிவிட்டுக்கொண்டான். “ இதோ பாருங்க ட்ரைவர் சார். இந்த பாட்டிய இனி உங்களுக்கும் பக்கத்தில உட்கார உச்சிக்கிருங்க . இங்கே நின்னு எங்க சட்டைகள நாறடிச்சிருச்சு “ என்றவன் பாட்டியின் கன்னங்களை வருடி “ பாட்டி பார்த்து சிரி. சொச்சப்பல்லும் விழுந்திடப்போகுது “ என்றான்.

குணாவின் நையாண்டி மேளத்தை கேட்ட ஒரு போலீஸ் அதிகாரி தொப்பைக்குலுங்க சிரித்தார். வசதியாக உட்கார்ந்துக்கொண்டு பாதி உறக்கத்தில் இருந்த டீச்சர் சிரிப்போ, சிரிப்பென சிரித்தார். ஒரு தாத்தா “ பொக், பொக் “ எனக் குலுங்கினார். பயணிகள் அத்தனைப்பேர் முகத்திலும் பூப்பூவாக சிரிப்பு சொரிந்துக்கிடந்தது. ஒரு மாணவி புத்தகப்பையை நன்றாக முதுகில் கிடத்திக்கொண்டு “ நல்லா சொன்னீங்கண்ணே “ என்றவாறு சிரிப்பை வாயிற்குள் அடக்கி முயற்சித்துத் தோற்றுப்போனாள்.

“ அண்ணே ………….. பசங்க எல்லாம் சேர்ந்து இந்த பஸ்க்கு ஒரு எப்.எம் செட் வாங்கி வையுங்க. நாங்க கடிகாரம் ஒன்னு வாங்கி ட்ரைவருக்கு நேரா மாட்றோம். “ என்றாள் பள்ளிச்சீருடையில் நின்ற சிறுமி.

“ நல்லா செய்யுங்கடி கண்ணு. நம்ம பஸ்டியம்மா இது “ என்றபடி அவளது கன்னத்தை வருடி நெட்டிமுறித்தாள் ஒரு மூதாட்டி.

“ குணா மாதிரியே நீயும் ஒரு கன்டிசன் போடுறீயா? இல்ல….. ?“ என ஒரு இழு இழுத்தார் ஓட்டுனர்.

“ அப்படியெல்லாம் எந்த கன்டிசனும் கிடையாது சார். எங்க மேல ஈவு, இரக்கப்பட்டு பாவம், புண்ணியம் பார்த்து ஒன்பது, ஒன்பதே கால் மணிக்கெல்லாம் எங்கள ஸ்கூல்ல இறக்கி விட்டாப் போதும் சார் “

அந்த சிறுமியைப்பார்த்துகுணா கேட்டான் . “ என்னம்மா தங்கச்சி , ஈவு மட்டும்தான் பார்க்கணுமா? இல்ல மீதி , வகுக்கும் எண், வகுபடும் எண்ணெல்லாம் பார்க்கணுமா?“

“ அதெல்லாம் நாங்க பார்த்திருக்கிருவோம்ண்ணே . ட்ரைவர் சார் எங்க மேல ஈவு மட்டும் பட்டால் போதும் ” என்றவள் “ எப்படிண்ணே இப்படியெல்லாம் பேசுறீங்க ?“ என்றபடி குணாவின் முகத்தை பார்த்தாள்.

குணாவிற்கு அப்படி கேட்டது ரொம்பவும் பெருமையாக இருந்தது. “ ரூம் போட்டு யோசிக்கிறோம்ல ” என்றபடி தலையை ஆட்டியவன் பேருந்துடன் சேர்ந்து அவனும் குலுங்கினான.

பேருந்து பள்ளங்களில் ஏறி இறங்கி , வளைந்து நெழிந்து , உறுமி , கர்ஜித்து , சாய்ந்து குலுங்கி நிறைமாத யானையைப்போல திசையை கிழித்து சென்று கொண்டிருந்தது.

பேருந்தை ஒரு நிறுத்தத்தில் நிறுத்திய ஓட்டுனர் “ குணா……..நீங்க சொன்ன சைக்கிள் பார்ட்டிய பஸ் முந்தியாச்சு .“ என்றபடிகுணா பக்கம் திரும்பி நானொரு விமான ஓட்டி என்பதைப்போல முகத்தை பெருமிதமாகக் காட்டினார். “ நாளைக்கே பஸ்க்கு எப்.எம் வந்தாகணும். இல்ல எப்.எம் மாதிரி நீ பாடிக்கிட்டு வரணும் “ என்றார்.

பயணிகள் கண்ணாடி , சன்னல் வழியாக சாலையைத் திரும்பிப்பார்த்தார்கள். சைக்கிள்க்காரர் , முகத்தில் வியர்வைக்காடு வழிய வேகு , வேகுவென சைக்கிளை மிதித்துக்கொண்டு பேருந்துக்குப்பின்னால் வந்துக்கொண்டிருந்தார்.

குணா சட்டைக்காலரை இழுத்து விட்டுக்கொண்டு சொன்னான். “ நாளை முதல் பயணிகள் கேளுங்க , கேளுங்க , பாடல்களை கேட்டுக்கிட்டே இருங்க ”

பயணிகள் முகத்தில் ஆனந்தத் ததும்பல். எழுந்து அடங்கும் பூரிப்பு, கொக்கரிக்கும் குதூகலமாக பேருந்து நிரம்பி வழிந்தது.

நேற்று வரைக்கும் கிராமங்களை சுமந்துச் சென்ற பேருந்து, பள்ளி மாணவர்களை இலவசமாக ஏற்றிச்சென்ற பேருந்து, குழந்தைகளுக்கு தொட்டிலாகவும் , கர்ப்பினி பெண்களுக்கு அவசர ஊர்த்தியாகவும், இருந்த பேருந்து இதோ தீக்கிரையாகி சிதைந்து, குட்டி டைனோசர் எலும்புக்கூட்டைப்போல பரிதாபமாக கண் முன்னே காட்சியளிக்கிறது. பச்சை, மஞ்சள் கலந்த வண்ணப்பூச்சுகள் தன் சுய சாயத்தை இழந்து அதில் புகையும் , கறையும் அப்பியிருக்கிறது. உலர்ந்து காய்ந்து போன சருகுகளாகத் தகரங்கள் . உருகி ஒழுகிப்போயிருக்கும் தாமிர உலோகம் . தாறுமாறாக விரிசல் விட்டிருக்கும் முன், பின் கண்ணாடிகள். இருக்கைகளில் பொசிங்கிய நெடி . டயர்கள் உருகி சாலையில் நெகிழ்ந்துபோயிருக்கின்றன.

தீக்கிரையான அந்தப்பேருந்தை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள், பயணிகள் எனப் பலரும் குழுமி நின்று பார்க்கிறார்கள். குணா ஆழ்மனக்கிடங்கில் ஓர் உந்தல். பேருந்தை தடவிப்பார்த்திட வேண்டும் என்கிற தவிப்பு. எரிந்த பேருந்திற்குள் நுழைகிறான் குணா . நாலாபுறமும் சுற்றும் முற்றும் பார்க்கிறான். எரிந்த நிலையில் கிடக்கும் எதோ ஒன்றை தொடுகிறான் . அழுக்கைத் துடைத்து பார்க்கிறான். அது அவன் வாங்கி வைத்த எப்.எம் செட் . எரிந்து கருகி நுணுங்கிப்போயிருக்கிறது. அவனுக்குள் விம்மல் . கண்கள் பனிக்கின்றன.

அடுத்து மேற்கூரையை நிமிர்ந்து பார்க்கிறான். கைப்பிடிகள் துண்டாகி கிடக்கின்றன. தகரம் மட்டுமே மிச்சமாக எஞ்சி இருக்கிறது. ஓட்டுனர் இறுக்கைக்கு அருகில் கடிகாரம் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அது பள்ளி மாணவிகள் அவர்களுக்குள் வசூல் செய்து வாங்கிவைத்த கடிகாரம் . அது முழுவதுமாக எரிந்து, கடிகார முட்கள் மட்டும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. அதை மெல்ல தொடுகிறான். . சாம்பல் உடைந்து ,உதிர்ந்து கீழே கொட்டுகின்றது. சாம்பல் உதிர்வது அவனுக்கு உயிர் உதிர்வதைப்போல இருக்கிறது.
மாற்றுப்பேருந்து நீண்ட நேரமாக “ பீ…………ம் ” எனஒலி எழுப்பிக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஓட்டுனர் வேறு சத்தம் கொடுக்கிறார். “உங்கள்ள ஒருத்தன்தான் அந்த பஸ்ஸ கொளுத்திருக்கணும். அதை பார்த்தது போதும் . வாங்கப்பா வாங்க.“. பயணிகள் முண்டியடித்துக்கொண்டு விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க ஏறுகிறார்கள். பேருந்து மெல்ல கிளம்பி சகதியில் இறங்கி ஏறுகிறது.

பாண்டி பேருந்தை நோக்கி ஓடிவருகிறான். சக்கரத்தில் சிக்கியிருந்த சகதி பாண்டி உடுத்திருந்த ஆடையில் ஓங்கி அறைகிறது .பாண்டி முகத்தில் கோபம். சட்டென பற்றும் அவமான ரணம். உள்ளுக்குள் சங்கடமான தவிப்பு. கீழே குனிந்து சகதியை அள்ளிப் பேருந்து மீது எறிய ஓங்குகிறான்.

குணாவிற்கு “ பகீர் “ என்றிருக்கிறது . பதறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து குதிக்கிறான். பாண்டியின் கைகளை இறுகப் பற்றுகிறான். “ அண்ணண்ணே……………. ப்ளீஸ்ணே. வேண்டாம்ண்ணே…………….இனி நம்மள சுமக்கப்போறது இந்த பஸ்தானே. சாரிண்ணே ……… விட்டுருங்கண்ணே ……… .“ பாண்டி முன் கெஞ்சுகிறான், மன்றாடுகிறான், கண்ணீர் உகுத்து ஆர்ப்பரிக்கிறான்.

பாண்டி மண்டைக்குள் “ கிண்ண் ” என்றிருக்கிறது. அவனுக்குள் ஒரு குற்றுயிர்துடிக்கிறது. மனக்கிடங்கிற்குள் ஒரு குடைச்சல். இதுவரைக்குமில்லாத ரணவேதணை அவனை ஆட்கொள்கிறது. பொங்கிப்பொங்கி அடிவயிற்றிலிருந்து கிளம்பி வரும் வார்த்தைகளை அவன் உச்சரிக்கிறான். “ இனி நா மாட்டேன்…………….மாட்டவே மாட்டேன்……“

– ஜனவரி, 2014 (நன்றி: http://akaramblogspot.blogspot.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *