இன்னும் சற்று தூரத்தில் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம். பேருந்தில் இருந்து இறங்குவதற்காக கடைசி படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது அந்த குளந்தங்கரை திண்டில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர் எழுந்து வந்து சாலையோரம் நின்று கொண்டார்கள். எங்கள் ஊர்காரர்கள் போல தெரிந்தது. நெருங்கும் போது தான் இருவரில் ஒரு பெண்ணை அடையாளம் தெரிந்தது. சந்தியா. என் சொந்தத்தில் வரும் ஒரு மாமன் மகள். பேருந்து நின்றவுடன் நான் இறங்க, அவர்கள் இருவரும் ஏறிக்கொண்டார்கள். ஏறும் போது,அவள் என்னை கவனிக்க வில்லை. பேருந்து நகர ஆரம்பிக்கும் போது அவளுக்கு புரிந்து போல சட்டென திரும்பிப் பார்த்தாள். முகம் மலர்ந்து ஒரு பெரும் புன்னகை. கோடை வெயிலின் தாக்கத்தை எங்கிருந்தோ வந்த ஒரு குளிர்த் தென்றல் தணித்து சென்றதை போன்ற பரவசம் என் மனதில். சந்தியாவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. முன்பை விட கொஞ்சம் சதைபிடிப்புடன் இருந்தாள். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் உடலளவில் நல்ல மாற்றம் அதனால் தான் அவளுக்கு சட்டென அடையாளம் தெரியவில்லை போலும்.
பேருந்து நிறுத்ததில் இருந்து வீடு அரை கிலோ மீட்டர் தூரம், இருபக்கமும் வயல் வெளிகள். கொஞ்சம் தூரத்தில் ஒரு அரச மரம். அதன் அருகில் ஒரு கோவில். அரச மரத்தை சுற்றிலும் முன்பு நாகர் சிலைகள் இருக்குமாம், நாட்கள் செல்லச் செல்ல நாகர் சிலைகள் காணமல் போய் வெறும் படிக்கட்டுகள் மட்டுந்தான் அதில் எஞ்சியிருந்தன. நானும் சந்தியாவும் அந்த படிக்கட்டுகளில் தான் உட்கார்ந்து ஊர்கதைகள் முதல் உலக வரலாறுகள் வரை பேசிக்கொண்டிருப்போம். அவளுக்கு புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம். தான் ஒரு ஆசிரியையாக வர வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பாள். இப்போது சந்தியா நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாளாம், அம்மாவிடம் சந்தியா பற்றிய பேச்சு வந்தா, “குட்டி, பாத்தா சிரிச்சுட்டு மட்டும் போவா, பேசமாட்டா, பெரிய பவுறு புடிச்சுருக்கு போல” என்று அலுத்துக்கொள்வாள். சில குடும்ப பிரச்சனைகளால் எங்கள் இருவருக்கும் நிச்சயக்கப்பட்ட திருமணம் நின்றது எல்லாருக்கும் பெரிய வருத்தம். எட்டு வருடங்கள் ஓடிவிட்டது அரச மரத்தை கடக்கும் போது, யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தேன் யாரும் இல்லை. முன்பு இந்தப் பகுதியில் நல்ல ஆள் நடமாட்டம் இருக்கும். இப்போது ஊருக்குள் மினி பஸ் வந்துவிட்ட பிறகு யாரும் இந்தப்பக்கம் அவ்வளவாக வருவதில்லை.
வீட்டிற்கு வந்துவிட்டேன் அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருந்தாள். சென்னையில் இருந்து பெருந்தில் பல மணி நேரப் பயணம் செய்து வந்ததால் நல்ல களைப்பு. குளித்து சாப்பிட்டு முடித்து படுக்கலாம் என்று அறைக்குள் சென்ற போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.
“என்னடே, எப்ப வந்த ” சிரித்துக்கொண்டே வந்தார் குமார் கூடவே மேலும் இருவர், ஏறத்தாழ ஐம்பது குடும்பங்கள் வாழும் எங்கள் ஊரில் சொந்தஆட்டோ வைத்திருக்கும் ஒரே ஆள், வீட்டில் இருந்து சென்னைக்கு போகும் போது பெரும்பாலும் குமாரின் ஆட்டோவில் தான் நாகர்கோவில் வரை போவதுண்டு. குமாருடன் வந்தவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் பெயர் தெரியவில்லை. ஊரில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்ட இந்த பதினாறு வருடங்களில் எப்போதாவது தான் ஊருக்கு பயணம் நடக்கும். அதனால் பலரை அடையாளம் தெரிவதில்லை குறிப்பாக அவர்கள் பெயர்கள்.
“இன்னைக்கு காலைல தான் வந்தேன்” என்று நான் கூற, “லீவுலயா வந்துருக்க” என்று இன்னொருவர் தொடர்ந்தார். “ஆமா” என்று சொல்லி புன்னகைத்தேன். அதே நேரம் அடுக்களையில் இருந்த அம்மா, பேச்சுச் சத்தம் கேட்டு, வராண்டாவிற்கு வந்தாள்,
“ஆங், வாங்கடே, என்னா ஆளுகள இங்னோடி காணுக்கே இல்ல”
“பிரிவு நடக்குல்லா, எல்லா எடத்துக்கும் போய்ட்டு இருக்கோம்” என்று முன்றாமவர்
“அப்பா வீட்டுல இல்லியா ” என்று குமார் என்னிடம் கேட்க,
“காலையிலேயே போன ஆளு, இன்னும் வரல உச்சைக்கு சாப்பாட்டுக்கு வந்துருவாரு” என்று அம்மா பதிலளித்தாள்.
“சரி வந்தா சொல்லிடுங்க, வரிக்கு வந்துட்டு போனோம்னு”
“ம், சரி. ஐயப்பன இந்த தடவ வரில சேக்கியளோ? என்று அம்மா புதிதாக ஆரம்பித்தாள்,
“ஆமா, அவனுக்கு அப்பா படுக்கைல இல்லியா, சுடுகாட்டுக்கு எங்க போறது, முன்ன மாதிரி வீட்டுகிட்டயா வைக்க முடியும், வந்து கமிட்டில கேட்டுருக்கான், புதுசா சேரணும்னா தண்டம் கட்டனும், அப்புறம் வரி”
“ம்ம்ம்”
“தண்டமா, அது எதுக்கு” என்று நான் கேட்க,
“ஊர் வரி போட்டப்ப இவனுவ சொக்காரமாருவ எல்லாம் சேந்துகிட்டு ஊருல சேரமாட்டோம்னு பிரச்சனை பண்ணுனானுவ, இப்ப வந்து திடீர்னு சேரணும்னா எப்படி, பொறவு ஊருல இருக்கவனுவ எல்லாம் கேள்வி கேப்பானுவ, அதுக்கு தான், இது ஊர்ல ஏதாச்சும் பொதுச் செலவு வரும் போது உபயோகப்படும்லா” என்று குமார் சொல்லிக்கொண்டே, “சரி நாங்க கிளம்புறோம்” என்று நகர ஆரம்பித்தனர். அம்மா மீண்டும் அடுக்களைக்கு போய்விட்டாள்
வாழும் இடத்தை விட செத்த பின் தேவைப்படும் சுடுகாடு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது. சுடுகாட்டின் தேவைகாக சமரசத்திற்கு தயார் ஆகியிருக்கிறது ஒரு குடும்பம். முன்பு பொது சுடுகாடு என்றெல்லாம் இல்லை. வீட்டு முற்றதில் ஒரு மூலையில் தான் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்வார்கள். தினமும் மாலையில் அங்கு விளக்கேற்றி இறந்தவர்களுக்கு மரியாதை செய்யப்படும். இது போன்ற வீட்டருகில் இருக்கும் கல்லறைகள் பகலில் எங்கள் விளையாட்டுப் பகுதியாக இருக்கும். பேய் ஆவி என்ற பயமெல்லாம் இருக்காது, தாத்தா பாட்டி போன்றவர்கள் உள்ளே உறங்குகிறார்கள் என்ற எண்ணம் மட்டும் தான் மிஞ்சும்.
“கோவில் கொடைக்கு நீ வருவியா?: என்று அம்மா அடுக்களையில் இருந்து கேட்க
“ஒ, இது கொடைக்கான பிரிவா” என்று அப்போது தான் வரி வசூலின் காரணம் புரிந்தது.
“தெரியல, பாப்போம்” என்ற வாறே நானும் அடுக்களைக்குள் நுழைந்தேன்
“ஆமா இப்ப யாரு சாமியாடுயது” அம்மாவை பார்த்துக்கேட்டேன்.
“குருவி ராஜன் இருக்கான் தெரியுமா, அவனுக்க அண்ணங்காரன் தான்”
குருவி ராஜன் நான் இரணியல் பள்ளியில் படிக்கும் போது என்னுடன் தினமும் பேருந்தில் கூட வருபவன். அவன் வளர்ந்த பிறகும் உருவம் மிக சிறியதாக இருக்கும் அதனால் குருவி என்று பட்டப் பெயர் வந்தது. ஊரில் பல ராஜன்கள் இருக்க இவனுக்கு குருவி என்ற பட்டப்பெயர் சேர்ந்து குருவி ராஜன் ஆகிவிட்டான்.
“ஆனா, சுடலைமாடன் கோவில்ல சாமியடுற பாச்சா மாதிரி சாமியாட முடியாது” என்று நான் சொன்னேன்.
“பாச்சா எல்லாம் போயாச்சு” என்றாள் அம்மா.
ஊரில் எல்லாருக்கும் பட்டப்பெயர் இருப்பது போல், சுடலை மாடனாக சாமியாடும் அவருக்கு “பாச்சா” என்பது பட்டப்பெயர், அவருடைய உண்மையான பெயர் இன்று வரை எனக்கு தெரியாது. பாட்டி வீட்டின் அருகில் தான் அந்த சுடலை மாடன் கோவில் ஒரு பெரிய பாறையின் மேல் இருக்கும் அந்த கோவிலின் அருகில் ஒரு பெரிய ஆலமரம். ஆலமரத்தின் கிளைகள் பாறையையும் கோவிலையும் தாண்டி பரவியிருக்கும். கொடை விழாவின் போது ஆலமரத்தில் விழுதுகளில் கட்டப்பட்டிருக்கும் சீரியல் லைட்டைப் பார்ப்பர்தற்கு இரவில் ஒளி மழை பெய்வது போல இருக்கும். இரண்டு நாட்கள் கொடை விழா நடக்கும். முதல் நாள் இரவு பூசையின் போது தான் முதல் சாமியாட்டம் இருக்கும். சுடலைமாடன் கோவில் கொடை விழாவின் முக்கியமான அம்சம் கணியான் ஆட்டம், பெண் வேடமிட்டு ஆடும் ஆண்களின் ஆட்டம். பறையிசைக்கு அவர்கள் சுழன்று சுழன்று ஆடுவது, அவ்வளவு அழகாக இருக்கும். பாச்சாவுக்கு சாமி வந்துவிட்டால் கணியான்களோடு ஆட்டம் களை கட்டும், சுடலை மாடனுக்கான மணிகள் பொருத்தப்பட்ட அந்த அரைக்கால் சட்டையையும் தொப்பியையும் போட்டுக்கொண்டு கொளுந்து விட்டு எரியும் அரையாள் பொக்கமுள்ளம் பெரிய தீ பந்தத்தை தூக்கிக்கொண்டு இளம் கணியான்களுக்கு இணையாக அறுபதுகளில் இருக்கும் பாச்சா ஆடும் ஆட்டத்தில் மொத்த கூட்டமும் கிறங்கி இருக்கும். பின் இரண்டாம் நாள் மதிய பூசையின் போது ஒரு ஆட்டம், அன்று இரவு சாம பூசையின் ஆட்டம் குறைந்தது ஒரு மணி நேரமாவது நீடிக்கும். அந்த வயதிலும் தளர்வடையாமல் அவர் ஆடுவது ஆச்சரியமான விசயம் தான்.
எனக்கு எவ்வளவு சாமியாட்டம் பார்க்கப் பிடிக்குமோ அதே அளவு சந்தியாவிற்கும் பிடிக்கும். சிறுவயதில் எங்கள் விளையாட்டு நேரங்களில் சில சமயம் சாமியாட்டம் நிகழும், தும்பை பூ செடிய பிடுங்கிக் கைகளில் வேப்பிலையை போல வைத்துக் கொண்டு தலையை விரித்துபோட்டு, சந்தியா ஆடுவாள். பன்னீரு கொடுல என்று நாக்கை துருத்திக் கொண்டு அவள் சொல்லும்போது சமயத்தில் இவளுக்கு நிஜமாக சாமி வந்துவிட்டதோ என்று எண்ண வைக்கும். ஊர்ப்பக்கமுள்ள எல்லா கோவில்களிலும் சாமியாட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும் எல்லா கொடை விழாக்களில் கண்டிப்பாக சாமியாட்டம் இருக்கும். சில கோவில்களின் கொடை விழாக்களின் போது சாமியாட்டம் பார்ப்பதற்கென்றே வெளியூர்களில் இருந்து எல்லாம் ஆட்கள் வருவார்கள். அருள் வாக்கு கேட்பது தனி. ஆனால் பார்ப்பதற்கேன்றே ஒரு கூட்டம் இருந்தது. நானும் சந்தியாவும் பாட்டியுடன் கிட்டத்தட்ட அருகில் இருக்கும் எல்லா கோவில்களின் கொடைக்கும் போய்விடுவோம் சாமியட்டம் பார்ப்பதற்காகவே. சிறு வயதில் சாமியாட்டம் பார்ப்பதற்கு சுவாரசியாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் பயத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. அப்படி பார்த்து பயந்த முதல் சாமியாட்டம் கெஜி மாமாவுடையது.
அப்பாவின் பணியை முன்னிட்டு அப்போது நாங்கள் இராமநாதபுரத்தில் இருந்தோம். சந்தியா ஊரில் இருந்தாள். கோடை விடுமுறைக்கு மட்டும் தான் ஊருக்கு வருவது வழக்கம். ஊர் கோவிலில் சித்திரை கொடைவிழாவும் அந்த சமயத்தில் தான் நடக்கும். அந்த சித்திரைக் கொடைவிழாவின் முன்றாம் நாள், வலிய படுக்கையும் மகா தீபாராதனையும் நடந்து கொண்டிருந்தது. வலிய படுக்கையின் ஒரு அங்கமாக அன்னதானத்திற்கானசோற்று மலை கோவிலின் முன்னால் சிறு குன்று போல் குவிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் மற்ற காய்கறிகளும் சமைத்து கொட்டப்பட்டிருந்தது. ஒரு தீப் பந்தமும் ஊன்றப்பட்டிருந்தது. நையாண்டி மேளக்காரர்கள் முழு வீச்சுட்டன் வாசித்துக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக எல்லா வருடமும் பரமேஸ்வரி அம்மனாக ஆடும் கோமதி ஆச்சிக்கு ஏற்கனவே சாமி வந்து ஆடிக்கொண்டிருந்தாள், ஒரு கையில் வேப்பிலையும் இன்னொரு கையில் சிறிய சூலாயுதமும் இருந்தது. கழுத்தில் பிச்சிப்பூ ஆரமும் எலுமிச்சை ஆரமும் போடாப்பட்டிருந்தது. நாகரம்மான ஆடும் செல்விச் சித்திக்கு சாமியாட்டத்தின் துவக்கத்தில் இருந்தாள், இரு கைகளையும் சேர்த்து, பாம்பு படம் எடுப்பது போது கைகளை காட்டிக் காட்டி அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தாள், சித்தியின் மகனான செந்தில் ஒரு துண்டை எடுத்து சித்தியில் சேலையை சரிசெய்து கட்டிக்கொண்டிருந்தான்.
நையாண்டி மேளக்காரர்கள் ஒரு பக்கமென்றால் வில்லுப்பாட்டுக்காரர்கள் ஒரு பக்கம் இரு தரப்பு சேர்ந்து அந்த இடத்தையே ஒருவித பரவச நிலைக்கு கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்கள், அந்த இசைக்கு சும்மா கூட ஆட தோன்றும். நான் கோவிலின் நீண்ட படியின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நடப்பவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்கள் பக்கம் சந்தியா நின்று கொண்டிருந்தாள், அவ்வப்போது என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். எனக்கு முன்னால் ஒரு படி கீழே கெஜி மாமன் உட்கார்ந்திருந்தார். ஏற்கனவே இரண்டு பேர் ஆடிக்கொண்டிருக்க, முன்றாவதாக இசக்கியம்மனாக ஆட எல்லார் கண்களும் கெஜி மாமனின் அண்ணனான கிருஷ்ணன் மாமாவின் மேலேயே இருந்தது. போன வருடம் அவர் தான் ஆடினார். எல்லார் கண்களும் அவர் மீதே குவிவதை பார்த்த ஒரு மேளக்காரர் கிருஷ்ணன் மாமாவின் அருகே வந்து வாசிக்க தொடங்கினார். ஆனால் கிருஷ்ணன் மாமாவிடம் எந்த சலனமும் இல்லை. இரு கைகளை கூப்பியவாறு நின்று கொண்டிருந்தார். அவர் மீது சாமி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆடிக்கொண்டிருந்த கோமதி ஆச்சி கிருஷ்ணன் மாமாவின் அருகில் வந்து கொஞ்சம் திருநீறை எடுத்து முகத்தில் வீசி அவர் தலையில் கையை வைத்து ஆடிக்கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் கிருஷ்ணன் மாமாவின் மேல் இசக்கி இறங்கி ஆடலாம் என்ற எண்ணம் வந்தது. என்னை பார்த்த சந்தியா நான் ஆடட்டும்மா என்பது போல் சைகை காண்பித்தாள். “அடிவாங்குவ” என்று கையை ஓங்கினேன். எல்லார் முகத்திலும் ஒருவித இறுக்கம்.
திடீரென, என் முன்னால் அமர்ந்திருந்த கெஜி மாமன், “ஊய்ய்ய்ய்” என்ற பெரும் சத்தத்துடன் தரையில் விழுந்து உருளத் தொடங்கினார். மொத்த கூட்டமும் விலகியது. அவர் உருளத் தொடங்கிய இடத்தில் இருந்து இருபடி தூரத்தில் இசக்கிக்கான உருக்கெண்ணை விறகடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. இந்த தீடீர் அமளியால் எல்லாரும் ஒருவித அதிர்ச்சிக்குள்ளாகி மீண்டனர் குறிப்பாக கோவில் கமிட்டியினர். நல்ல உடற்கட்டுடன் இருந்த கெஜி மாமானை நான்கைந்து பேர் தரையில் இருந்து தூக்கினர், திமிறித் திமிறி எழுந்தவரை அவர்களால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. அதற்குள் கோவில் பூசாரி அருகே சென்று, “யாரு நீ, உனக்கென்ன வேணும்” என்று அதட்டலோடு கேட்டார், பற்களை நற நற வென்று கடித்த கெஜி மாமான் இசக்கிக்கான பீடம் இருக்கும் இடத்தைக் கைகளை நீட்டிக் காட்டினார். எல்லாருக்கும் புரிந்து விட்டது, கிருஷ்ணன் மாமாவின் மேல் வந்திருக்க வேண்டிய இசக்கி கெஜி மாமனின் மேல் இப்போது. திமிறித் திமிறி ஆடிக் கொண்டிருந்த இசக்கியான கெஜி மாமன், “யேய்ய்ய்ய் நிறுத்து , எல்லாத்தையும் நிறுத்து” என்று பெருஞ்சத்ததுடன் அலற. நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டது. அவ்வளவு பெருங்கூட்டத்தில் எந்தச் சலனமும் இல்லை. பெரும் அமைதி. அதுவரை இயல்பாக இருந்த எனக்கு அந்த அமைதி பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியது. அதுவரை திமிறிக்கொண்டிருந்த கெஜி மாமன் சிறிது சாந்தமானார். பிடித்திருந்தவர்களின் பிடி விலகியது. மெல்ல நடந்து இசக்கியின் பீடத்திற்கு சென்று அதில் இருந்த கமுகின் பூவை எடுத்து முகத்தில் தேய்த்துக்கொண்டார். சிறிது பூவை பிய்த்து வாயில் போட்டு மென்றார். அமைதி தொடர்ந்தது. யாரும் பேசவில்லை. தூரத்தில் நின்றிருந்த தங்கப்பனை கூப்பிட்டு பன்னீர் வாங்கி தலையில் ஊற்றிக்கொண்டார். அடுப்பில் கொத்திக்கொண்டிருந்த உருக்கெண்ணையை கையில் எடுத்து தலையிலும் உடம்பிலும் தேய்த்துக்கொண்டே, வில்லுப்பாட்டு குழுவினரிடம் சென்று மீண்டும் பாடத்தொடங்குமாறு சொல்ல, நையாண்டி மேளமும் மீண்டும் தொடங்கியது. அதற்குப் பின் அன்றைய உச்ச பூசைக்கு கெஜி மாமன் ஆடிய ஆட்டத்தை போல இதுவரை கண்டதில்லை. அன்று மாலை சந்தியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது என்னுள் கெஜி மாமன் ஏற்படுத்திய பயத்தை சொன்னேன். “கெக்கெ பிக்கே” என்று சிரித்தாள். “நானெல்லாம் பயறமாட்டேனே, பயந்தாங்கோளி” என்று மீண்டும் சிரித்தாள்.
சில சமயங்களில் இப்படி கோவில்களில் சாமியாடுபவர்களுக்கு ஏன் சாமி வருகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்று யோசிப்பது உண்டு. அந்த சூழ்நிலை அந்த குறிப்பிட்ட பகுதியில் எழுப்பப்படும் இசை ஒலியா, அல்லது அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துகிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழும். ஆனால் அந்த காலகட்டத்தில் இது போன்ற கேள்விகளை யாரிடமாவது கேட்டால், சாமி விசயம் பேசக்கூடாது என்பதாகத் தான் பதில் வரும். இப்படி சாமியாடுபவர்கள் அவர்கள் ஆடி முடித்த பின் மயங்கி சரிந்து சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். அதுவும் எப்போது விளங்கியதில்லை. சந்தியாவிடம் கேட்டால் கிண்டல் செய்வாள், அதனால் அவளிடம் கேட்பதில்லை.
இப்படி கேள்விகளாக மட்டுமே இருந்த சமயத்தில் தான், இராமநாதபுரத்தில் இருந்து ஊருக்கு மீண்டும் திரும்பினோம். அப்போது சில பிரச்சனைகளால் எங்கள் குடும்பத்திற்கு சந்தியாவின் குடும்பதிற்கும் உறவு நிலை அவ்வளவு சுமுகமாக இல்லை, பேச்சு வார்த்தை குறைந்திருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். வீட்டின் அருகில் இருக்கும் தென்னந்தோப்பின் நடுவே ஒரு காவு உண்டு. அந்த காவில் ஒரு சிறிய கோவில். ஒரு பெரிய வேப்ப மரம் மற்றும் ஒரு சரக்கொன்றை மரங்களின் நடுவே, பதிக்கப்பட்ட முக்கோண வடிவிலான ஒரு கற்சிலை தான் கோவில். என்ன சாமி என்றெல்லாம் யாருக்கும் தெரியாது, ஆனால் பல வருடங்களாக அந்த சிறிய கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றப்பட்டு வருகிறது. பொதுவாக அந்த தென்னந்தோப்பின் உரிமையாளர்களின் வீட்டில் உள்ளவர்கள் தான் பூசாரிகள். அப்போது அந்த தென்னந்தோப்பு தாத்தாவிடம் இருந்தது. நாங்கள் செல்லுவரை மாமா ஒருவர் தான் அந்த கோவிலில் விளக்கேற்றுவார். நாங்கல் சென்ற சமயம் வயதில் சிறியனான என்னிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எல்லா வெள்ளிக்கிழமையும் சிலையை கழுவி அலக்காரம் செய்து விளக்கேற்ற வேண்டும்.
. சந்தியா பெரிய பெண் ஆகிவிட்ட படியால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை அத்தை விரும்புவதில்லை. அதனால் இந்த கோவிலுக்கு அவள் வரமாட்டாள். சில நாட்கள் ஆச்சி வருவாள், ஒரு நாள் ஆச்சியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,
“ஏன் ஆச்சி, இது வரைக்கு இது என்ன சாமின்னு தெரியாதா?
“யாருக்கு தெரியும் பொதுவா சாமி, இன்ன சாமின்னு தெரிஞ்சு நாம என்ன செய்யப்போறோம், ஆனா ஒன்னு இது சக்தியுள்ளதாக்கும்” என்றாள்
“எப்படி சொல்லுற”
“இன்னா, இங்கன கெடக்குல்லா, காய்ஞ்ச சுள்ளியள யாராச்சும் எடுத்துட்டு வீட்டுக்கு எடுத்துட்டு போய் கஞ்சி கறி வச்சா நாலு நாளைக்கு படுக்க வச்சுரும்”
“அப்ப நீ மட்டும் எடுத்துட்டு போற, நாம் தான் வெளக்கு வைக்கியம்லால, உனக்கு கொடைச்சலு கொஞ்சம் கூடிகிட்டு தான் வருது பாத்துக்க, நீ வெளக்கு வைக்கிய வேலைய பாரு இருட்டிகிட்டு இருக்கு, சீக்கிரம் வீட்டுக்கு போவோம்” என்று முடித்துக்கொண்டாள்.
நான் விளக்கு வைக்கப் போகும் நேரங்களில் யாராவது உடன் வந்தால் கொஞ்சம் சந்தோசப்படுவேன். காரணம் ஒரு பயம். சாமிக்கு பயந்து அல்ல. பாம்பிற்கு. கோவில் இருக்கும் பகுதியில் ஒரு பாம்பு நடமாடுவதாக அந்த பகுதியை கடந்து செல்லும் பலரும் வந்து கூறுவார்கள். அந்தி சாயும் மாலை நேரத்தில் தன்னந்தனியாக அந்த தென்னந்தோப்பின் அந்தபகுதிக்கு செல்வதே திகிலூட்டுவதாக இருக்கும். காவுகளில் தான் பாம்புகள் அதிகம் இருக்கும் என்ற பேச்சும் சேர்ந்து பயத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சாயங்காலமும் இந்த பயத்துடனே கழியும். அதனை எதிர்கொள்ள நாட் போக்கில் வேண்டுதலை மனதிற்குள்ளேயே நடத்த துவங்கினேன். கோவிலுக்கு சென்று திரும்பும் வரை பாம்பு கண்களில் படக்கூடாது என்பதாக இருக்கும். மழை நேரங்களில் அங்குமிங்கும் ஊர்ந்து திரியும் ஆயிரங்கால் அட்டை கூட பயமுறுத்த துவங்கியது. வீட்டில் இருந்து சிலை கழுவுவதற்கான தண்ணீர் நிரம்பிய குடம், விளக்கிற்கான எண்ணை மற்ற பொருட்கள் என்று கிளம்பும் போதே பாம்பின் படம் மனதில் ஆடத்துவங்கிவிடும்.
பயத்தினை எதிர்கொள்ள நாட்போக்கில் பூசை செய்யும் சாமியையே வேண்டத்துவங்கினேன். இது ஒரு சரணடைதல் போல தான் அப்போது தோன்றியது. அந்த இடத்தில் பாம்பு இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அந்த பிரமை அந்த யூகம் ஒரு வித பயத்தை உருவாக்கி ஒரு சரணடைதலை நோக்கிய தள்ளியதை இன்று உணர்கிறேன். இப்படி பயமும் அதனை எதிர்கொள்ள வேண்டுதலும் என்று போய்க் கொண்டிருந்த வெள்ளிக்கிழமைகளில் ஒருநாள், பயபக்தியுடன் சிலை கழுவி, சந்தனக் குறியிட்டு, ஆரம் சார்த்தி, விளக்கேற்றி, சூடம் கொளித்தி தீபாராதனையும் முடிந்தது. எப்போது விளக்கேற்றி முடித்தவுடன் கெவுளி சத்தம் வந்த பிறகு தான் கோவிலில் இருந்து கிளம்ப வேண்டும் என்பது ஆச்சியின் உத்தரவு. அதனால் அன்றைக்கும் கெவுளி சத்தத்திற்காக் காத்து நின்று கொண்டிருந்த வேளையில், கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கின. திடீரென்று கால்கள் நடுங்கத் தொடங்கியது ஒரு பயத்தை உருவாக்கியது. இருட்டத்துவங்கிவிட்டது, அருகில் யாரும் இல்லை, கத்தினால் கூட யாருக்கும் கேட்காது. கால்களில் இருந்த நடுக்கம் மெல்ல மெல்ல உடலி பரவத் தொடங்கியது. கெவுளிச் சத்தம் இன்னும் வரவில்லை. நடுக்கத் தோடு பயமும் சேர்ந்து கொண்டது. ஒரு வேளை எனக்கு சாமியாட வந்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட உடல் முழுதும் வேர்க்கத் துவங்கியது. தரையில் உருண்டு திமிறித் திமிறி ஆடிய கெஜி மாமனின் ஆட்டம் நினைவுக்கு வந்தது. இங்கு யாரும் இல்லை. எனக்கு ஏன் இந்த நடுக்கும் வந்தது காரணம் தெரியவில்லை. ஆனால் நடுக்கம் அதிகரித்துக்கொண்டே போனது. குடத்தில் இருந்த நீரை எடுத்து அருகில் இருந்த செம்பருத்திச் செடியின் மூட்டில் ஊற்றிவிட்டு மற்ற பொருட்களை யெல்லாம் எடுத்து வைக்கத்தொடங்கினேன், நடுக்கத்தோடு.
கெவுளிச் சத்தம் வந்தபாடில்லை. தூரத்தில் ஒரு கோவிலில் மணியடிக்கும் சத்தம் கேட்டது, நடுக்கம் குறையவில்லை. ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தேன். காற்று இல்லை ஆனால் கோவிலின் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் ஒருவித அலைபாய்தலோடு அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரமிருந்தால் நான் முழு சாமியாடிகாக மாறிவிடுவேனோ என்ற பயம் கலந்த எண்ணம் முழுதும் ஆக்கிரமித்திருந்த அந்த வேளையில், மிக மெல்லிதாக கெவுளிச் சத்தம் கேட்டது. என்ன செய்கிறோம் என்ற தெளிவே இல்லாதது போல மிக வேகமாக கோவிலின் சிறிய கதவை சாத்திவிட்டு, குடம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிக்கு ஓடி வந்தேன். அந்த பெரிய தென்னந்தோப்பின் கடப்பது என்பது பெரும் கானகத்தை கடந்து வருவதற்கு ஒப்பானதாக இருந்தது. வீட்டிற்கு வந்த பின்னும் நடுக்கம் தீரவில்லை, ஒரு வித படபடப்புடன் இருந்த என்னைப் பார்த்து,
“என்னல் ஆச்சு, யாம் இப்படி மூச்சு வாங்க ஓடியாற” என்றாள் அம்மா,
“ஒன்னுமில்லம்மா” என்று சொல்லியவாறே எனது அறையில் போய் கட்டிலில் விழுந்தவன் அடுத்த நாள் காலையில் தான் எழுந்தேன். அன்று மாலை சந்தியாவிடம் சொன்னேன், கொஞ்ச நேரம் அமைதியாக என்னைப் பார்த்தாள். சட்டென்று, “ஆமா நான் தான் உன்மேல வந்தேன்” என்று சொல்லிச் சிரித்தாள். “போல, உனக்கு இதே வேலையாப்போச்சு” என்று என்று எழுந்தாள், அவள் கையில் இருந்த பெரியாரின் உரைகள் என்ற புத்தகம் நழுவி கீழே விழுந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த போது ஒரு நாள், “லெ, விடியக் காலைல குளிச்சுட்டு கோவிலுக்கு போவ கூடாதால, எவ்ளொ வருசம் ஆச்சு, நீ கோவுலுக்கு போயி” என்றவாறே படுக்கையில் இருந்த என்னை அம்மா எழுப்பினாள். “எந்தகோவிலுக்கும் இப்ப போறதில்லமா” என்றவாறே போர்வையை மீண்டும் தலைக்கு மேல் இழுத்தவாறே, கலைந்த கனவை ரீமா கல்லிங்கலுடன் தொடர நித்திரையில் ஆழ்ந்தேன்.