தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை.
“எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை விறகுக்கடைக்காரருடையதா? என்று தூக்கக் கலக்கத்தில் புரியவில்லை.
“ராத்திரி எல்லாம் பேயோட டூயட்டு பாடியிருக்கான் டோய்” என்று விறகுக் கடையில் விறகு பிளக்கும் கணேசுவின் கேலிக்குரல் கேட்டு சடக்கென்று எழுந்து கொண்டவனின் கண்ணெதிரே ஒரு பொம்பளையின் பாதங்கள் தொய்ந்துபோய்த் தொங்கிக் கொண்டிருந்தன. மின்சாரம் பாய்ந்தவன் போல் சட்டென்று ஆலமரத்தடி மேடையிலிருந்து குதித்து இறங்கி அந்தக் கால்களுக்குரியவளைப் பார்த்தான்.
சாந்தி அக்கா.
தனசேகர் எடுபிடி வேலை பார்க்கும் மாயாண்டி டிபன் மற்றும் டீக்கடையில் பாத்திரங்கள் கழுவிக் கொடுக்கிற சாந்தி அக்கா.
தனசேகரை வாய் நிறைய ‘தம்பீ’ போட்டுக் குழைவாகக் கூப்பிடும் சாந்தி அக்கா.
தன் கூட்டத்தில் தவறிப்போய் வெள்ளை நிறத்தில் பிறந்து வைத்து, அதன் காரணமாகவே நாள் தவறாமல் தனது புருஷனின் சந்தேகத்திற்கும் அடிதடிக்கும் ஆளாகும் சாந்தி அக்கா, “வெள்ளச்சி’ என்ற தன் பட்டப் பெயருக்காகத் தன் கல்யாணத்திற்குப் பிறகு ஒரு தடவை கூடச் சந்தோஷப்பட்டதில்லை. எப்போதும் ஆலமரத்தடிக்கு வராதவள், நேற்று ராத்திரி எட்டு எட்டரை மணிக்கு அந்தப் பக்கம் உலாத்தியபடி, “இன்னிக்கும் அந்தக் கூறு கெட்டவன் என்னப் பொளந்துட்டாண்டா தம்பீ'” என்று கண்கலங்கியவள், இதோ இந்த ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்றிற்குப் புடவை கட்டிவிட்டதைப் போல் தூக்கில் தொங்கிகொண்டிருக்கிறாள்.
தனசேகருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
பதினைந்து வயசு தன்ஸýவுக்கு ஊரு விட்டு ஊரு தாண்டி வந்த உடன் பிறவா உறவு, சாந்தி அக்கா.
“யக்கா” என்று அலறியபடி சாந்தியக்காவின் அருகில் நெருங்கினான்.
“டேய் களுத, வாடா இப்பிடி” என்று டீக்கடைக்காரர் மாயாண்டி அவனை இழுத்துத் தடுத்தார்..
சாந்தி அக்காவின் புருஷனுக்குத் தகவல் போய் அவன் ஓடி வந்து சாராய நாற்றம் குறையாமல் பெருங்குரலெடுத்தான்
“என் ராசாத்தீ, என் செல்லக்கிளீ… என்ன வுட்டுட்டுப் போயிட்டியாடீ? ஏஞ்சாமி மாரே, நான் என்ன குத்தம் செஞ்சேன்னு என்ன அம்போன்னு வுட்டுட்டுப் போயிட்டா? தெரியலியே சாமீ. என் செல்லக்கிளிய அடிச்சாக்கூட மெதுவாத்தானே சாமி அடிப்பேன்”
“டேய், டேய், நீயா வாயக் குடுத்து மாட்டிக்காதடா” என்று அவனை அங்கிருந்து அப்பால் தள்ளிக்கொண்டு போயினர் சிலர். அவனுடைய சாராயக்கடை நண்பர்களாயிருக்க வேண்டும்.
போலீஸ் வந்தது. சுற்று வட்டாரம் பரபரப்படைந்தது.
ஆலமரத்தின் கிளைகளில் குடித்தனம் செய்து கொண்டிருந்த பறவைகளும் அணில்களும் கீழே நடக்கும் எதையும் சட்டை செய்யாமல் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தன.
தூக்கிலிருந்து இறக்கப்பட்ட சாந்தி அக்காவின் உடல் சவக்கிடங்கிற்குப் போயிற்று.
“தூங்குறாப்புலயே இருந்துச்சு பாரேன்” என்ற வழக்கம் மாறாத டயலாக்கையும் ஊர்க்கிழவிகள் சிலர் அலுப்பின்றி எடுத்துவிட்டார்கள்.
பிணம் ஆம்புலன்ஸ் ஏறிப் பயணித்த அடுத்த சில நிமிடங்களில், “டா…ய்” என்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த சாந்தி அக்காவின் அண்ணன், இத்தனை நாள் பாசம் மொத்தமாகப் பீறிட சாந்தி அக்காவின் புருஷனுக்குத் தன் கையால்தான் சாவு என்று சபதம் போட்டான்.
கொஞ்சம் தள்ளியிருக்கும் மாயாண்டியின் டிபன் மற்றும் டீக்கடை விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தத் தற்கொலையின் பரபரப்பில் தானும் பங்கு பெற்றது. சாந்தி அக்கா புருஷனின் கொடுமைகளை ஊர் வாய் ஆங்காங்கே கூடி நின்று விலாவாரியாகப் பேசி அலசியது.
சாந்தி அக்காவின் உடம்பை அறுத்துப் பார்த்துத் தையல் போட்டுப் பிறகுதான் தருவார்களாம். இறுதி ஊர்வலம் நாளைக்குத்தான் என்ற தகவல் பிற்பகலில் வந்தது
காலையில் நாஷ்டா நேரம் மறந்தே போனது.
தனசேகருக்குப் பசி எடுத்தது.
கிராமமும் இல்லாத, குக்கிராமமும் இல்லாத இரண்டும் கெட்டான் ஊர் கொல்லகொட்டாய்.
ஆஸ்பத்திரி, பெரிய பள்ளிக்கூடம், பாத்திரக்கடை, துணிக்கடை எல்லாவற்றுக்கும் இந்த ஊருக்கு வடக்கு திசையில் மணலே வயிறாகி மணல் லாரிகளையும் மாட்டு வண்டிகளையும் ஏராளமாகப் பெற்றுப் போட்டுவிட்டு பிரசவ ஆஸ்பத்திரி பெட்டில் படுத்துக்கிடக்கும் பெண் போல் காட்சி கொடுக்கும் கெüண்டின்ய நதியைத் தாண்டி எதிர்க்கரையில் இருக்கும் பெரிய கிராமத்திற்குப் போக வேண்டும்.
எல்லாச் சிற்றூர்களிலும் அருள்பொழியும் டென்ட்டுக் கொட்டாய் கூட இந்த ஊரைக் கைவிட்டு விட்டது. அதுக்கும் ஆற்றுக்கு அந்தப்புறம்தான் நடையைக் கட்ட வேண்டும்.
எல்லாப் பெரிய ஊர்களிலும் இருக்கும் ஒரே வசதி இந்த ஊரிலும் உண்டு.
டாஸ்மாக் கடை.
இதைத்தவிர ஒரு கொழுத்த மீசைப் பெரியவர் பரம்பரை பரம்பரையாய் ஆற்றங்கரைப் பாழ் மண்டபத்தில் சாராயம் காய்ச்சுவதும் நடக்கிறது. மொத்தத்தில், சாந்தி அக்காவின் புருஷன், டீக்கடை மாயாண்டி போன்ற குடிகாரர்களுக்கு மட்டுமே ஒரு சொர்க்கமாய் இருக்கின்ற ஊர் இது.
இதில் தனசேகர் வந்து ஒண்டிக்கொண்டது ஒன்றும் பெரிய சரித்திர நிகழ்வெல்லாம் இல்லை.
நாலு ஊர் தள்ளிப்போனால் வருகிற ராஜாக்குப்பம் என்ற இன்னொரு கிராமத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த மூத்த மகன். ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்ததே அதிசயம்.
இந்த ஏழைக்குடும்பங்களுக்கே ஒரு சாபக்கேடு. ஒன்று குடும்பத்தலைவன் இறந்திருக்கவேண்டும் அல்லது அவன் உயிரோடிருந்தால் ஒரு குடிகாரனாகவோ தீராத நோயாளியாகவோ இருக்க வேண்டும்.
தனசேகரின் தகப்பனுக்கு நெஞ்சுக்கூடு துருத்திக்கொண்டு தெரியும் சயரோகம். கனத்த கோடையில் கூட நிற்காத இருமல்.
களை பிடுங்குவது, நாற்று நடுவது, கொல்லத்து வேலை, மாடுகளை கறக்கும் வேலை என்று தனசேகரின் அப்பனுக்கும் சேர்த்துச் சுழன்றாள் அம்மாக்காரி. இதில் தனசேகரை அடுத்து நாலு பெண்குட்டிகள் வேறு.
போன வருஷம், பக்கத்து வீட்டு விசேஷம் ஒன்றிற்காகத் தங்கள் ஊருக்கு வந்திருந்த மாயாண்டி பேச்சு வாக்கில் தனக்கு வேலைக்கு ஓர் ஆள் வேண்டுமென்று சொன்னதைக் கேட்டு அவனுடைய டீக்கடைக்கு எடுபிடியாக தனசேகரை அனுப்பிவிட்டாள் அவன் அம்மா.
“நீ தான் சூதானமா நடந்துக்கிட்டு உன் தங்கச்சிங்களைக் கரையேத்தணும்டா கண்ணு” குருவித்தலையில் குடும்பப்பொறுப்பு என்னும் பாறாங்கல்.
தனசேகரின் அம்மாவுக்கு மாதா மாதம் நானூறு ரூபாய் அனுப்புவதாகவும், அவனுக்கு மூன்று வேளை சோறு போடுவதாகவும் பேச்சு. பல நாட்களில் இரண்டு வேளைதான் கிடைக்கும்.
டீக்கடையின் பழைய சுவரின் ஆணி ஒன்றில் இரண்டு செட் டிராயர் சட்டை வைத்த பையைத் தொங்கவிடலாமென்றும், ராத்திரி டீக்கடை எதிரிலிருந்த ஆலமரத்து மேடையில் தனசேகர் படுத்துக்கொள்வது என்றும் மாயாண்டிக்கும் அவனுக்குமிடையே வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டது. எப்போதாவது மழை பெய்தால், போனால் போகிறதென்று டீக்கடையில் ஒரு பெஞ்சியினடியில் தன்ஸýவுக்குச் சிறிது இடமும் தரைவிரிப்பாக பேப்பரும் வழங்கப்படும்.
தன்ஸவிடம் பிரியமாகப் பேசும் ஒரே ஆள் சாந்தி அக்காதான்.
இதோ அவளும் போயாகிவிட்டது.
கொல்லகொட்டாய் கிராமத்து ராஜவீதிகளில் தனது பசியை மறப்பதற்காக ரெண்டு மூன்று சுற்று சுற்றி வந்தவன் விறகுக்கடையை கடக்கும் போது பெரிய புளியமரத் திம்மையை ஆப்பும் கோடாலியும் கொண்டு பிளந்து கொண்டிருந்த கணேசு ஒரு கணம் தன் கைவீச்சை நிறுத்தி விட்டு, “”டேய் தன்ஸ, கொஞ்ச நாளைக்கு டீக்கடையிலே படுத்துக்கடா. ஆலமரத்த சுத்தி அந்த சாந்திப்பொண்ணு பேயா அலையுண்டா” என்று ஒரு குண்டைப் போட்டான்.
அடிவயிற்றில் சிலீரென்று ஐஸ் கட்டி உருண்டது தனசேகருக்கு.
மழையில்லாத ராத்திரியில் டீக்கடையில் படுக்க மாயாண்டி முதலாளியின் சம்மதம் கிடைக்குமா? முதலில் மாயாண்டியின் புதிய சம்சாரம் ஒத்துக் கொள்வாளா? பசியுடன் ராத்திரிப் படுக்கைக் கவலையும் புதிதாகச் சேர்ந்து கொண்டது.
சாந்தி அக்கா ஆவியா வந்து என்னைக் கொல்லுமா? அந்த நல்ல அக்காவா. ஊஹூம். இருக்காது. ஒரு வேளை பேயிலே நல்ல பேயின்னு கெடையாதோ. எல்லாப் பேய்ங்களுமே மனுசாளைக் கொல்ற பேய்ங்கதானோ.
இவன் பசி அறிந்துதான் பகல் இரண்டு மணிக்கே மாயாண்டியின் கடை திறந்ததா, இல்லை சாந்தி அக்காவின் இறப்புக்கு அரை நாள் துக்கம் அனுஷ்டித்தது போதும் என்று முதலாளி மாயாண்டியாருக்கு யோசனை தோன்றிவிட்டதா தெரியவில்லை.
கொல்லக்கொட்டாய் கிராமத்தை பசி தெரியாமல் இருப்பதற்காக இரண்டு மூன்று தடவை சுற்றிவிட்டு மீண்டும் ஆலமரத்தடிக்கு வந்த தனசேகரை மாயாண்டி அழைப்பது கேட்டது
“டே களுத… எங்கடா போய்ட்ட? வாடா ஒடனே”
தன் பெயரே தனசேகர் இல்லை என்று அவன் நினைக்கும் அளவுக்குக் “களுத’ பழகிவிட்டது.
மரத்தின் கிழக்குத் திக்கில் இருபது தப்படி தூரத்தில் இருந்த டிபன் மற்றும் டீக்கடை வாசல் பெஞ்சியில் இதற்குள் ரெண்டு மூன்று பேர் அமர்ந்து பீடி பிடித்தபடி படக்கதை படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
பட்டன் பிய்ந்து எந்த நேரமும் தன் மானத்தைக் கப்பலேற்றத் தயாராயிருந்த அரைக்கால் சட்டையைத் தன் தடித்த அரைநாண் கயிற்றைக் காவலாக்கிப் பத்திரப்படுத்திய தனசேகர், விர்ரென்று டீக்கடையில் பிரவேசித்தான்.
டீக்கடை மேடை மீது நீராவியில் குளிக்கும் பாய்லரை அடுத்து ஒரு நீண்ட கைப்பிடி வைத்த அலுமினியப் பாத்திரத்தில் கொதிக்கும் டீயின் வாசனை அவன் மூக்கைத்துளைத்தது. பக்கத்தில் பாலும் கொதிநிலையில் இருந்தது. இரண்டு பெரிய கண்ணாடி பாட்டில்களில் பன்னும் கேழ்வரகு பிஸ்கட்டும். கடைக்குப் பின்புறம் உள்ள ரூமில் ரோசா அக்கா – மாயாண்டியின் மூன்றாவது புது மனைவி – மசால்வடை போடும் வாசம் டீ வாசனையுடன் மல்லுக்கு நின்றது.
“எப்படியும் கஸ்டமருங்க பெஞ்சியக் காலி செஞ்சுட்டுப் போவுற வரைக்கும் முதலாளி நம்ம பசிக்கு எதுவும் சாப்புட வுட மாட்டாரு”
யதார்த்ததை உணர்ந்துகொண்டு இன்னும் ஒரு அரை மணிநேரப் பட்டினிக்கு மனசளவில் தன்னைத் தயார் செய்து கொண்டு, “”எதானா வாங்கியாரணுமா மொதலாளி?” என்றான்.
“ஆமாண்டா களுத, போய் புள்ளயார் கோவில் பக்கத்துக் கடயில நான் சொன்னேன்னு கடனுக்கு ரெண்டு கிலோ சக்கரை வாங்கி வந்துட்டு, அதோ அங்கக் குமிச்சிருக்குற டீத் தம்ளருங்களையும், தட்டுங்களையும் கழுவிடு. சக்கரை வாங்கிட்டு ஜல்தியா வரணும். அந்த சாந்தி பொண்ணுதான் செத்துடுச்சே. பாத்தரம் களுவுறதுக்கு வேற ஒரு பொட்டச்சி கெடைக்குற வரைக்கும் நீ தான்டா அதெல்லாம் களுவணும். ம்…ம்… ஜல்தியா வா”
“ஏன் ரோசா அக்கா பொட்டச்சி இல்லியா’ என்று தன் மனசில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் கிளம்பினான்.
சர்க்கரை கட்டிக் கொடுத்த எல்லப்பன், மளிகைக்கடை எடுபிடி ராசா ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் பிள்ளையார் கோவில் பின்புறத்தில் கோலி, கிட்டிப்புள் ஆடும் தன்ஸýவின் தோஸ்து. சர்க்கரையை வாங்கிக்கொண்ட தனசேகர் ராசாவிடம் கேட்டான்:
“சாந்தி அக்கா ராத்திரிக்குப் பேயா வருமாடா”
“தூக்குப் போட்டுக்கிட்டு செத்தவங்க அப்பிடித்தான் பேயா வருவாங்கன்னு எங்கம்மா சொல்லிருக்குடா” என்று சீரியஸôக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் ராசா.
அதிகரித்த கவலையுடன் டீக்கடைக்குத் திரும்பினான் தனசேகர்.
ராத்திரிக்கு எங்கே படுப்பது? மாயாண்டி முதலாளி என்னா சொல்வாரோ? புதுசா வந்த பொண்டாட்டி வேற. முத பொண்டாட்டிய அடிச்சுத் தொரத்திட்டாரு. ரெண்டாவது இவுரோட கடைக்கு இட்டிலி அவிச்சுக் கொட்டி, வடை சுட்டுப் போட முடியாம தானே தன்னோட வூட்டுக்குக் கௌம்பிடுச்சு. இந்தப் பொங்கலுக்கு எந்த சந்தையிலயோ போயி மூணாவுதா ரோசா அக்காவப் புடிச்சிட்டு வந்துட்டாரு. இந்தக்கா வந்து நாலு மாசம்தான் ஆவுது. அது சரி… சாந்தி அக்கா இன்னிக்கு ராத்திரி என்னா பண்ணும் புரியலியே. பேசாமே நம்ம முதலாளிகிட்ட அவுரோட பளய லுங்கி ஒண்ணுத்தக் கேட்டு வாங்கி, தலை வரைக்கும் இளுத்து மூடிக்கிட்டு ஆலமரத்து மேடையிலேயே படுத்துடலாமா. பேய் என்ன, போர்த்திக்கிட்ட லுங்கியை விலக்கிட்டா நம்மளை எளுப்பப் போவுது. அதுவும் சாந்தி அக்காவோட பேயி. “தம்பீ தம்பீ’ன்னு என்னை ஆசயாக் கூப்புடுமே. அதுவா என்னை கொல்லப் போவுது. எல்லாஞ்சரி. பேய்… பேய்தானே. அது தன் புத்தியக் காட்டாம இருக்குமா? புள்ளையாரப்பா, சொடல மாட சாமி. எனக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா.
மாறி மாறிச் சிந்தனை செய்தவன், ஆலமரம் அருகில் வந்ததும், அனிச்சையாக அந்த ஆல மரத்தை ஓட்டமாய் ஓடிக் கடந்தான். பேய் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம்.
“களுத, எவ்ளோ நேரண்டா, இந்தா இந்த டீயையும் வடையும் தின்னுட்டு பாத்திரம், தம்ளருங்களக் கழுவு”
“எனக்கு இப்பப் பசிக்கல மொதலாளி” என்று சொல்லிவிட்டு சாந்தி அக்கா பற்றிய சிந்தனைகளுடன் பாத்திரங்களைத் தனக்குத் தெரிந்த வரையில் துலக்கினான்.
பால் ஏடு காய்ந்து போய் வரமாட்டேன் என்று பாத்திரத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தது. முழுவதுமாக ஏடு போகத் துலக்கத் தெரியவில்லை.
சாந்தி அக்கா இருந்தால் எப்பிடி அக்கா நீ இவ்ளோ சுத்தமா இதெல்லாம் கழுவுறேன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். ம்க்கும். அதுதான் போயிடுச்சே. அது இருந்தா இந்த வேலை ஏன் நம்ம தலையில விளுது.
“பால் பாத்திரத்தை இன்னும் சுத்தமாக் களுவுடா களுத”
இப்போது பசித்தது தனசேகருக்கு.
“ஒரு டீ குடிச்சுட்டுக் களுவறேன் மொதலாளி”
“சரி சரி ஜல்தி” என்று கூறிய மாயாண்டியிடமிருந்து ஒரு சுமாரான டீத் திரவத்தை வாங்கி உறிஞ்சிவிட்டுக் காய்ந்துபோன பால் பாத்திரத்துடன் விட்ட இடத்திலிருந்து போராடத் தொடங்கினான்.
இந்த இடத்தில்தான் குந்தி உட்கார்ந்து பாத்திரம் கழுவியபடி சாந்தி அக்கா தனசேகருக்கு மட்டும் கேட்கும் குரலில் நேற்று மதியம் கூடப் பேசினாள் –
“கட்டுனா இந்த வெள்ளச்சியத்தான் கட்டுவேன்னு நாப்பது முறை எங்க வூட்டுக்கு நடையா நடந்தாண்டா தம்பி எம் புருசன். பக்கத்தூரு பேங்க்குல வாச்சு மேனா இருக்கான். சீரு செனத்தியெல்லாம் கூட ஒண்ணும் வேணாம்னுபுட்டான். எங்கெரகம். ஒரு நாள் சைக்கிள்ல பொடவ கொண்டாந்து விக்கிறவங்கிட்ட ஒரு வார்த்தை சிரிச்சுப் பேசுனதுக்கு சந்தேகப்பட்டு அடிச்சான். அதுக்கப்புறம் நின்னா குத்தம். குந்தினா குத்தம். அடி… ஒத. இதுல குடி வேற. சம்பாரிக்கறதெல்லாம் குடிக்கே போவுது. ராத்திரி டூட்டி முடிஞ்சு வந்தா தொரைக்கு வயணமா ஆக்கி வெச்சிருக்கணும். பொறந்த வூட்ல ராசாத்தி மாதிரி இருந்த நான் இப்போ அங்கங்க வூட்டு வேலை செஞ்சு, பத்துப் பாத்திரம் களுவிப் பொழைக்கிறதாப் போயிடுச்சு. என்னிக்காவது ஒரு நாள் நான் நாண்டுக்கிட்டுத்தான் சாவப் போறேன். நல்ல வேளை இன்னும் கொழந்தை குட்டின்னு ஆவல. இருந்தா, அதுங்களுக்கு நம்மள விட்டா யார் இருக்கான்னு கவலைப் படணும்?”
சொல்லிய தினத்தன்றே அதை நிறைவேற்றுவாள் என்று தனசேகர் எதிர்பார்க்கவில்லை. தினம் தினம் புலம்புவதை விட இன்று என்னவோ கொஞ்சம் கூடுதலாகப் புலம்புகிறாள் என்றே அவனது சிற்றறிவுக்கு அந்த நேரத்தில் தோன்றியது.
அக்காவுக்கு ஆறுதலாக எதையாவது இந்த நேரத்திற்குப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்ட தனசேகர்
“ஒங்க அப்பா, அம்மா, அண்ணன் தம்பிங்க கேக்க மாட்டங்களா அக்கா?” என்றான்.
“அதையேன் கேக்குற. அதான் ஒரு தரம் சண்டயிலே எங்கப்பனையே நாலு அடி போட்டு வூட்டுப் படி ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டானே இந்தப் பாவி”
என்ன சொல்வதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் யோசித்த தனசேகர், “”கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. நான் பெரியவனா வளந்துடறேன். அப்புறம் பாரு, ஒம் மேலே கை வெச்சா ஒம் புருஷனைப் போட்டுப் பொளந்துடறேங்க்கா”
கொஞ்சமாய்ச் சிரித்த சாந்தி அக்காவின் பதிலில் விரக்திதான் வெளிப்பட்டது.
“சந்தோஷண்டா தம்பீ. என்ன சொல்றது? எந்தப் பொண்டாட்டியும் தம் புருசனை இன்னொர்த்தன் அடிக்கறதைப் பொறுத்துக்க மாட்டா. ஆனா இவன் என்னை தெனமும் பொளக்குறது கூடப் பரவாயில்லடா. என் வயசாளி அப்பனையுமில்ல அடிச்சுட்டான். அதுக்காகவாவது அவனை யாராச்சியும் நாலு அடி போட்டா எனக்கு சந்தோஷந்தான்டா. சரி சரி. இதெல்லாம் சின்னப்புள்ள ஒங்கிட்ட பேசிக்கிட்டு”
“என்னாம்மா அங்க பேச்சு சத்தந்தான் கேக்குது. பாத்திரம் களுவறயா இல்லியா?” என்ற மாயாண்டியின் குரல் கேட்டவள் பரபரப்புடன்
“இதோ ஆயிடிச்சி மொதலாளி” என்றாள்.
“டேய் களுத, தன்ஸý, இங்க வந்து பிஸ்கட்டு பாட்டிலத் தொடைடா. அங்க என்னடா ஒனக்குப் பொம்பளையோட பேச்சு”
உடன் பிறவாத் தம்பியிடம் தன் மனசு பாரத்தை இறக்கி வைக்க முடிந்த நிம்மதி சாந்திக்கு.
ஆனால், அக்காவின் அவலநிலையை நினைத்து தனசேகரின் மனசு அப்போது முதல் தலையில் ஏற்றிய விறகுச் சுமையாய்க் கனக்க ஆரம்பித்தது.
சாந்தி அக்கா சந்தோசமாச் சிரிப்பு சிரிச்சி ஒரு தரமாவது பாக்கணும் என்று பெரிய மனிதன் போலச் சிந்தித்தான்.
என்னால் எப்போதாவது சாந்தி அக்கா புருஷனை அடிக்க முடியுமா. இல்லாட்டி யாரையாவது ஆளை வெச்சு நல்லா ஒதை குடுக்கலாமா. மளிகைக்கடை ராசா ஒல்லிபிச்சான். வெறகு பொளக்குற கணேசு தாட்டியம்தான். ஆனாலும் சாந்தி அக்கா புருசன் முன்னாடி அவன் பூச்சிதான். இவனுங்களை நம்பிப் பிரயோஜனம் இல்ல. நாமளே கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒடம்ப வளர்த்துக்கிட்டு, தைரியம் வந்தவுடனே அவனை நாலு சாத்து சாத்த வேண்டியதுதான்.
ராத்திரி எல்லாம் இதே நினைப்புடன் தூங்கியவன் தூக்கம் விழித்ததும் சாந்தி அக்காவத் தூக்கில்தான் பார்த்தான்.
மாலை மணி ஐந்தரை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும்.
“இன்றைக்கு ராத்திரி ஆலமரத்தடியா? டீக்கடையா?” தலைவலித்தது தனசேகருக்கு.
சட்டென்று டீக்கடை முன்பு நின்று டீக்கு ஆர்டர் செய்தார்கள் நாலு பேர்-
“மாயாண்டி, விஷயம் தெரியுமா?” என்றது நாலில் ஒரு குரல்.
“இப்பிடி திடீர்னு கேட்டா எப்பிடி? நீதான் சொல்லணும்”
“தூக்குப் போட்டுச் செத்துசே, சாந்திப் பொண்ணு. அதும் புருஷனுக்கு நல்ல கவனிப்பாம் போலீஸ் ஸ்டசன்லே”
“அப்பிடியா?”
“ஆமாம்பா. அவ தூக்குப் போட்டுத் தற்கொலை செஞ்சதுக்கு இவந்தான் காரணம்னு மச்சாங்காரனும், மாமங்காரனும் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டங்களாம். அய்யா வுட்ருங்கய்யான்னு கெஞ்சரானாம். எங்க வுடறது. போற வரவங்களெல்லாம் ஆளுக்கு நாலு அடி போட்டு இப்போ எளுந்து நடக்கவே தள்ளாடுறானாம். அந்தப் பொண்ணக் கொடும செஞ்சதுக்கெல்லாம் அனுபவிக்கணுமில்லே”
“நல்லா வேணும்பா அந்தப் பயலுக்கு. குடிகாரக் கம்னாட்டி” இது மாயாண்டியின் எதிர்வினை.
பளிச்சென்று பல்பு எரிந்தது தனசேகரின் மூளைக்குள்.
சாந்தி அக்காவின் புருசன், அந்தப் படுபாவிப் பயலுக்கு நல்லா அடி விளுந்திருக்கு. அக்கா இதக் கேட்டா எத்தினி சந்தோசப்படும். பாவி, எவ்ளோ நாள் அக்காவை அடிச்சுக் கொடுமைப் படுத்தியிருக்கான். இன்னிக்கு ராத்திரி எப்புடியும் சாந்தி அக்கா ஆவியா வரும். அதுங்கிட்டே இதச் சொல்லப்போறேன். “சந்தோசண்டா தம்பீ…’ அப்பிடீன்னு சொல்லி சாந்தி அக்கா நல்லா வாய் வுட்டுச் சிரிக்கப்போவுது. அக்கா சிரிக்கும் போது இத்தினி நாள் பாத்தத வுட அளகாயிருக்கும்.
இரவு மணி எட்டரை.
ரோசா அக்கா வைத்த வெங்காயக் குழம்பு தனசேகருக்கு அன்று மிகவும் ருசியாயிருந்தது. ஒரு பிடி பிடித்தான். ஒரு சொம்புத் தண்ணீரையும் ரசித்துக் குடித்தான்.
மணி ஒன்பது.
படுக்கை விரிப்புக்கு தினத்தந்திப் பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பியவனைத் தடுத்தது மாயாண்டியின் குரல் –
“டேய் களுத, கொஞ்ச நாளைக்கு ஆலமரத்தடியெல்லாம் வேணாண்டா. ஏதச்சும் பயந்து கியந்து போகப் போறே. பேசாம கடையிலேயே படு”
“எனக்கொண்ணும் பயமெல்லாம் இல்லீங்க மொதலாளி” என்று சொல்லிவிட்டு ஆல மரத்தடி மேடைக்கு விரைந்தான் தன்ஸý என்கிற தனசேகர் என்கிற சாந்தி அக்காவின் தம்பி.
– ஆகஸ்ட் 2014
தினமணி-நெய்வே− புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/- பெறும் கதை.