அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே சமயம் ஓரளவு எதிர்பார்த்ததாகவும் இருந்தது. கொழும்பில் வசந்தியின் கணவர் மரணித்த செய்தியை அவரைப் பராமரித்து வந்த லக்சுமி கூறியபோது வசந்தி துணுக்குற்றிருந்தாள். லண்டனில் தானும் கொழும்பில் தன் கணவன் வசந்தனுமாக காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதுபோல் வாழ்க்கை கழிந்துபோய்விட்டதை அவள் துயரோடு நினைவு கூர்ந்தாள்.
இந்த ஞாபகம் கசப்பான மூட்டைதானா? இனிய ஞாபகங்கள் மனதில் இனித்துவிட்டு சர்க்கரைபோலவே கரைந்து விடுகின்றன. கசப்பானவை கற்கள்போலத் தங்கி விடுகின்றதே! வசந்தியின் இளமைக்காலங்கள் வசீகரமாவைதான். அவளது கனிவான முகபாவத்தால், மிளிரும் புன்சிரிப்பால், இனிய ஊற்றுப்போன்ற உரையாடலால் அவள் கல்லூரிக் காலங்களில் தனித்துச் சுடர்விட்டாள். அவளது கல்லூரியின் மகோக்கனி மரங்களின் குளிர் நிழலின் கீழ் அமர்ந்து தோழிகள் புடைசூழ மகிழ்ந்தும் சிரித்தும் கதைபேசித் திரிந்த நாட்கள் ஒரு கனவுபோல் மறைந்தோடிவிட்டது.
கல்லூரிக் காலங்களில் இளைஞர்களின் பிரிய கன்னியாக அவள் திகழ்ந்தாள் என்பது வசந்திக்கும் தெரிந்ததுதான். கல்லூரியில் இடம்பெற்ற கலைவிழா ஒன்றிலேயே வசந்தன் என்ற இளைஞனின் முதல் சந்திப்பும், அந்த முதல் சந்திப்பிலேயே வசந்தி அவனிடம் மனதைப் பறி கொடுத்ததும் தூரத்துச் சிறு புள்ளியாக இப்போது தெரிகிறது. இருவர் கைகளும் இணைந்தும் இறுகியும் வருடியும் பேசிய பேச்சுக்களும், மனம் துள்ளித்திரிந்த காலங்களும்; சேர்ந்து புகார் மூட்டம்போல கவிந்து கரைந்து விட்டது.
வசந்தி அவளது குடும்பத்தில் தலைப்பிள்ளை. வசந்தன் அவனது குடும்பத்தில் கடைசிப்பையன். பேற்றோர்களின் ஆரம்ப எதிர்ப்பு பின்னர் இணங்கி வந்த சமரசம் என்று அவர்களின் மண வாழ்வும் இனிமையாகவே ஆரம்பம் கண்டது.
காலநதியில் அவர்களுக்குக் கிடைத்த இருமலர்கள். நாட்டில் மூண்ட இனக்கலவரம் அவர்களை தேம்ஸ்நதிக்கரையில் கொண்டுவந்து சேர்த்தது. புதிய இடம், புதிய வாழ்வு, புதிய சவால்கள் எதனையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வசந்தியின் இயல்பிலேயே குடிகொண்டிருந்தது. இருவருமே லண்டனில் உரிய தொழில்களைத் தேடிக்கொண்டனர். ஆனாலும் உறவுகளில் மெல்லிய விரிசல்; கீறல்கள். அன்பாய், ஆசையாய் கைபிடித்த கணவன்தான். இப்போது பார்க்கப்பிடிக்காத துருவங்களாக விலகிக்கொண்டிருப்பதை இருவருமே உணர்ந்தார்கள்.
வசந்தன் நேரம்பிந்தி களைத்துப்போய் வீடுவருவதும், வீடு வந்ததும் மதுவோடு ஐக்கியமாகிவிடுவதும் வழமையாகிவிட்டது. நண்பர்கள் யார் ? எங்கு சென்று வருகின்றார்? எங்கிருந்து வருகின்றார்? என்ற கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. அந்நியப்பட்ட இரண்டு ஜீவன்கள் ஒரு கூண்டுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதுபோல் அந்த வாழ்வு அமைந்து போனது. காலங்கள் நமக்காகக் காத்திருப்பதில்லை.
தனது இரு பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியிலும் அவர்களைப் பேணிப்பார்ப்பதுவுமே வசந்தியின் நெஞ்செல்லாம் வியாபித்திருந்த ஒரே லட்சியமாக ஆகிப்போனது.
இரு பிள்ளைகளுமே மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சி அளவற்றதுதான். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கையில் மெல்லிய புன்சிரிப்போடு அந்த நினைவுகளை வசந்தி இயல்பாகக் கடந்து விடுகின்றார். அவர்களின் கல்வி முடிந்து பட்டமளிப்பு விழாவிற்கு வசந்தனும், வசந்தியும் ஒன்றாக இணைந்து சென்றது என்பது உண்மைதான். வசந்தன் பிள்ளைகளின் உயர்கல்வியின் சாதனையில் மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும். ஆனால் அவர் அடையும் பெருமிதமோ, மகிழ்ச்சிகள் எதுவுமே வசந்திக்குப் பொருளற்றுப் போய்விட்டது.
மூத்தமகள் தனது மருத்துவ சஞ்சிகையில் எழுதியிருந்த கட்டுரையை அவள் ஆசையாக வசந்திக்கு அனுப்பியபோது ஒரே மூச்சில் அவள் அந்தக் கட்டுரையை வாசித்து முடித்திருந்தாள். அவள் இவ்வளவு அழகிய நடையில் எழுதும் ஆற்றல் கொண்டவளா? என்று வசந்தி வியந்ததுமுண்டு. விடுமுறைக்கு பல்கலைக் கழகத்திலிருந்து வீடு வந்த மகள் தந்தையிடம் தனது கட்டுரையைப் பற்றி ஆவலாடு கேட்டபோது சோபாவில் உட்கார்ந்திருந்த வசந்தன் தான் இன்னும் அதனை வாசிக்கவில்லை என்று கூறியதும் மகளின் முகம் ஏமாற்றத்தோடு சுருங்கியதையும் வசந்தி கவனிக்கவே செய்தாள். அந்தக் குடும்பப் பாரம் அனைத்தையும் அவளே தாங்கி நின்றிருக்கிறாள். கால ஓட்டத்தில் காதல் உணர்வின் வாடைகூட அவர்களின் பின்னைய வாழ்வில் வீசியது கிடையாது.
யௌவனப் பருவத்தில் பசுமையாகச் சிலிர்த்த ஸ்பரிசங்களை, நெஞ்செல்லாம் பொழிந்து பெருக்கெடுத்த காதல் உணர்வுகளை பின்னாளில் யோசித்தபோது அவையெல்லாம் கடந்து சென்றுவிட்ட, மீள வாழ்ந்து பார்க்க முடியாத சொப்பனங்களாகவே முடிந்து போய்விட்டன.
லண்டனில் வசந்தி பிரபல்யமிக்க கணித ஆசிரியையாகத் திகழ்ந்திருந்தாள். உயர் வகுப்பு மாணவர்களுக்கான ரியூசன் வகுப்புகளில் அவளுடைய வாழ்வு கரைந்தது. வாழ்வு இயந்திரமயமாகியது. தொடர்ந்த உழைப்பு, கண்டிப்போடு கூடிய ரியூசன் வகுப்புகள், குதிரைப்பந்தயம்போல மாணவர்களின் பிடரியைப்பிடித்து சோதனையில் உந்தித் தள்ள வைக்கும் அசுர வெறி, அந்த யாந்தீரிக சாதனைகளில் மனம் கொள்ளும் திருப்தி, சுளை சுளையாயாக வந்து சேரும் பணம்.
அந்த வாழ்வின் மீது அவருக்கு எந்தக் கருத்தும் இருந்ததில்லை. அவள் சந்தோஷமாக இருக்கின்றாளா என்று அவருக்குத் தெரியவில்லை. பல தமிழ் பாடசாலைகளில் அவள் பிரதம அதிதியாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறாள் என்பதெல்லாம் உண்மைதான். பொன்னாடைகளும், பூச்செண்டுகளும், புகழுரைகளும் அவள் நெஞ்சில் எந்தப்பக்கத்திலும் ஒட்டிக்கொண்டதில்லை. ஓடும் பொன்னும் ஒப்பென நோக்கும் பக்குவமா? அப்படியெல்லாம் அவளுக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை.
தொடர்ந்த குடிபோதையில் வசந்தனின் உடல் நலம் சீர்குலைந்து கொண்டிருந்தது. மறதிக் குணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. சிறுநீரகம் பிரச்சனை தர ஆரம்பித்து விட்டதை வசந்தன் உணரும்போது காலம் கடந்து விட்டிருந்தது. தான் ஓய்வு பெற்றுக் கொண்டு கொழும்பு சென்றுவிடுவதில் வசந்தன் தீவிரமாக இருந்தார். லண்டன் சுவாத்தியம் தனக்கு ஒத்து வரவில்லை என்று வசந்தன் கூறியபோது அந்தச் சமாதானங்கள் எல்லாமே வசந்திக்குப் பொருள் அற்றவையாகத் திகழ்ந்தது.
வசந்தன் கொழும்பு சென்ற பின்னர் அவரைப் பராமரிப்பதற்காக லக்சுமி என்ற பெண்மணியை வசந்தி ஒழுங்கு செய்து கொடுத்திருந்தாள். இடையிடையில் கொழும்பு சென்று வருவது வசந்தியின் வாழ்க்கையில் புதியதொரு மாற்றம்தான். காலங்கள் கடந்தாலும் வயதுகள் முதிர்ந்தாலும் கணவன் மனைவியினிடையில் மாறாத அன்பு குடிகொண்டிருப்பது என்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்துவிடுகிறது. காதல்த்; தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களைப்பற்றிய, யுவதிகளைப்பற்றிய பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போது வண்ணக் காலம் காட்டும் ஒளிச்சிதறலில் மாய்ந்துபோகும் விட்டில் பூச்சிகளாக வசந்திக்குத் தென்படுவதுண்டு. சிந்தனையில் வசந்தி எவ்வளவுதூரம் மூழ்கிப்போயிருந்தாளோ தெரியவில்லை.
மாலினியின் தொலைபேசி அழைப்புச் கேட்டுச் சிலிர்ப்புற்றாள்.
மாலினி வசந்தியின் பால்ய காலச் சிநேகிதி. லண்டனில் தொடர்ந்தும் அந்த நட்புறவைப் பேணி வருபவள். ஆயினும், குடும்ப உறவு என்ற பிரதேசத்திற்குள் அவள் அத்துமீறிக் கால் வைத்தது கிடையாது.
வசந்தியும் தன் எண்ணங்களை ஏக்கங்களை, அதிருப்திகளை அவளோடு மட்டுமல்ல வேறு யாருடனும்கூடப் பகிர்ந்து கொண்டது இல்லை. எப்போதும் ஒரு மந்தகாசப் புன்சிரிப்போடு திகழும் வசந்தியை யாரும் கேள்வி கேட்டதும் இல்லை.
‘கொழும்பிலிருந்து அதிகாலையில் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்’ என்று மாலினி தொலைபேசியில் வந்தாள். வசந்தனின் மரணம் அவ்வளவு துரிதமாகத் தெரிந்ததில் வியப்புற எதுவுமில்லை.
விடிந்துகொண்டிருக்கிறது.
கொழும்புக்கு எப்போது செல்லப்போகிறீர்கள்? என்ற மாலினியின் கேள்விக்கு பதில் சொல்ல வசந்திக்கு அவகாசம் வேண்டியிருந்தது.
அவள் நடாத்தும் லண்டன் தழுவிய கணிதப் பரீட்;சை இன்றும் நாளையும் இரண்டு தினங்கள் நடக்க இருக்கின்றன. மிகப்பெரும் ஏற்பாடு அது. பல்வேறு ஆசிரியைகள், பல ஆயிரம் மாணவர்கள், பல பெற்றோர்கள் என்று இறுதியாக்கப்பட்டுவிட்ட பரீட்சைத் தினங்கள். வசந்திதான் இந்தப் பரீட்கையின் மிக முக்கிய ஒருங்கிணைப்பாளர். இந்தக் கணிதபாடப் பெறுபேறுகள் மிகச் சிறந்த அங்கீகாரத்தை மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது. பரீட்சை மண்டப ஒழுங்குகள், அவளது சிந்தனைகளில் வியாபித்துக் கிடந்தது.
வசந்தி தன் கணவனின் இறந்த உடலை குளிர்கோர்த்த அறைக்குள் வைத்துப் பாதுகாக்குமாறு பிள்ளைகளுடன் சேர்ந்து செயற்பட்ட விதம் மாலினிக்கு ஆழ்ந்த விரிசலை ஏற்படுத்தியபோதும், லண்டனில் இருந்துகொண்டு தத்தமது வசதிகுறித்துத்தானே செயற்படவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டாள். இனியென்ன இறந்த உடல்மீது ஊருக்காக கரிசனை போல் நடித்தும் என்ன? வாழ்வின்மீது ஒருவனுக்கு இருக்கும் ஆசை, வாழ்வை ருசிக்கும்பிரியம், பிள்ளைகளின் பாசம் அனைத்துமே இன்றைய வாழ்வில்; ஒரு பிறழ்வாகத் தென்படுவதை மாலினி தன்; நினைவில் கடத்திக்கொண்டிருந்தாள். இன்றைய வாழ்வில் மனித செயல்கள் எல்லாமே நஞ்சாகி மாலினி நெஞ்சை நெரித்துக்கொண்டிருந்தது.
வசந்தனின் குடும்பத்தினர் அவர் தயவிலேயே கொழும்பில் உள்ளனர்.
பரீட்சை நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு அல்லது அதனை வேறொருவர் இடத்தில் ஒப்படைத்துவிட்டு செல்லுவது என்பதை வசந்தியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்தப் பரீட்சை நிகழ்வின் அச்சாணி அவள். மணித்துளிகள் கரைந்துகொண்டிருக்கின்றன. பரீட்சை மண்டபம் அவளுக்காக காத்திருக்கும். வசந்தி தன் கண் புருவங்களுக்கு மை தீட்டிக்கொண்டிருக்கிறாள்.
– 7.8.2016 (லண்டன் புதினம் பத்திரிகையின் 20 ஆவது நிறைவு (2016) சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)