(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலைநகரின் அந்த பிரதான வீதிக்கு தூக்கம் என்பதே கிடையாது! இரவு பகல் என்ற பேதமற்ற வாகனப் போக்குவரத்து…. பிரதான வீதியில் இருந்து கடற்கரைப் பக்கமாகப் பிரிந்து செல்லும் பல ஒழுங்கைகள், தெருக்களிலிருந்தும் இடையிடையே சில வாகனங்கள் பிரதான வீதியுடன் சங்கமித்துக் கொண்டிருந்தன.
எங்கிருந்தோ அந்த பிரதான வீதியில் வந்து ஏறிய பெரியவர் ஒருவர் சாலையின் இரு பக்கமும் தனது பார்வையைச் செலுத்தி னார். அதிகாலைப் பொழுதாய் இருந்தாலும் சாலையோர மின் விளக்குகள் உமிழும் பிரகாசம் அவ்விடத்தைப் பட்டப் பகலாக்கிக் கொண்டிருந்தன.
ஒரு கணத்தில் மின்வெட்டாகப் பறந்து வந்த வெள்ளை நிற வான் ஒன்று பெரியவரை மோதிவிடப் போவது போன்று அவர் அருகாக வந்து சட்டென நின்றது.
அந்தப் பெரியவருக்கு அது ஒரு அதிர்ச்சிச் சம்பவம் ஆகிப் போய்விட்டது. முதியவரான அவரை நான்கு இளைஞர்கள் வழிமறித்து அந்த வானில் அலாக்காக தூக்கி எறிந்த பின் தாமும் வேகமாக அதில் தொற்றிக் கொண்டனர்.
வாகனம் வேகமாக இரைந்தபடி புறப்பட்டது. அந்த இளைஞர் களில் ஒருவன் வாகனம் செல்லவேண்டிய திசை பற்றி சாரதிக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான். மற்றொருவன் நாலாபுறமும் தனது பார்வையைச் சிதற விட்டிருந்தான்.
அந்த விநியோக வானின் மத்தியில் முகம் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த முதியவரை தனது இரு கால்களாலும் மிதித்தபடி இருந்தவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை . அடுத்தவன் அவரது பதற்றத்தை தணிக்குமுகமாக அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியபடி இருந்தான்.
முதியவரோ தான் வணங்கும் தெய்வம் யாவற்றையும் இறைஞ்சியபடி இருந்தார். அவரது கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தபடி இருந்தது.
வாகனம் ஏற்றங்களில் ஏறி விழும்போது அவரது தாடை அடிச் சட்டத்தில் அடியுண்டதனால் ஏற்பட்ட உரசல் காயத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் வேதனை ஒரு புறமும் உள்ளக் குமுறல் மறுபுறமுமாக அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்…..
‘ஏன் இப்படி எனக்கு நேர வேண்டும்….. நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்… எனது நீண்ட வாழ்க்கை அனுபவத்தில் பிறருக்கு நன்மை புரிந்ததைத் தவிர நான் யாதொரு கெடுதலும் செய்தறியேனே… பலரும் என்னை மதித்து நடக்க சிறுவர்களான அவர்கள் என்னை இப்படி வதைப்பது என்ன முறையோ?’
என்றெல்லாம் அவரது உள்ளம் எண்ணிக் கனமாகியது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேர ஓட்டத்தின் பின்னர் வாகனம் தனியான இடம் ஒன்றில் அமைந்திருந்த வீடொன்றின் முன்வந்து தரித்தது.
இளைஞர்கள் வான் கதவினை அகலத் திறந்து பெரியவரை சாவகாசமாக இறங்க அனுமதித்தனர். முன்னர் அவர்களிடம் இருந்த பதற்றம் இப்போது அற்றுப் போயிருந்தது.
பெரியவர் வாகனத்தில் இருந்து இறங்கியதுமே அந்த இளைஞர்களை கைகூப்பி வணங்கினார். பின்னர்…
“நான் உங்கள் எவருக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை . உங்களை யார் என்றும் எனக்குத் தெரியாது. என்னைத் தயவு செய்து விட்டு விடுங்கள்” என்று வேண்டினார்.
இளைஞர்கள் எவரும் வாய் திறக்கவில்லை . வயோதிபர் மீண்டும் இறைஞ்சினார்.
“என்னிடம் எந்த சம்பாத்தியமும் இல்லை. எனது உழைப்பே எனது ஜீவியத்தைக் கொண்டு நடத்தப் போதுமானதல்ல, சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னால் உங்களுக்கு ஆகப்போவது எதுவுமே இல்லை. என்னைத் துன்புறுத்தாமல் செல்ல விடுங்கள்.”
அவர் அப்படிக் கூறியபோதுதான் ஒரு இளைஞன் வாய் திறந்தான்…
“ஐயா எங்கள் எவருக்குமே உங்களை யார் என்று தெரியாது. நீங்கள் எங்களில் ஒருவருக்காயினும் துரோகம் செய்தவரும் அல்ல. நீங்கள் எங்களுக்கு வேண்டப்பட்டவரும் அல்ல. தவிர நாங்கள் கூலிக்காகப் பணி புரிபவர்களும் அல்ல…… ஆனால், ஒரு நோக்கத்திற் காகச் செயலாற்றும் குழு ஒன்றின் அங்கத்தவர்கள் நாங்கள்.”
அப்படி அவன் விளக்கமளித்துக்கொண்டு இருக்கும் போதே வீட்டின் முன்புறக் கதவைத் திறந்தபடி சிறுவன ஒரு வந்தான்.
“இந்த முதியவரை நன்கு கவனி. அண்ணன் மாலையில் வருவார்……” என்று கூறிவிட்டு அந்த இளைஞர்கள் அனைவரும் வாகனத்தில் ஏறிச் சென்று விட்டனர்.
முதியவருக்கோ ஒரு காலடிகூட எடுத்து வைக்க இயலாத நிலை. சிறுவன் அவருக்கு தோள் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றான். காயங்களைக் கழுவி மருந்திட்டான். தேநீர் தயாரித்துக் கொடுத்தான்……
சிறிது இளைப்பாறிய முதியவர் தன்னை உபசரித்து தேற்றிய சிறுவனைப் பார்த்து….
“நீங்களெல்லாம் யார்….?” என்று ஒட்டுமொத்தமாக ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்…..
சிறுவன் உரத்துச் சிரித்தான்.
“ஐயா….. உங்கள் நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அதே சமயம் எனது நிலையைத் தெரிந்துகொண்டால் நீங்கள் அதை விடப் பன்மடங்கு என்மேல் கழிவிரக்கம் அடைவீர்கள்….. உங்களைக் கடத்தி வந்தவர்களுக்கே நாம் செய்யும் காரியங்களுக்கு 4 காரணம் புரிவதில்லை . நான் வெறுமனே ஒரு பணியாள்……! நான் யாருக்கு பணி புரிகிறேன் என்பதுகூட எனக்குத் தெரியாது. பல வருடங் களுக்கு முன்னர் ஒரு தேநீர் கடையில் பணி புரிந்து கொண்டிருந்த என்னை ‘பொலிஸார்’ கைது செய்தனர். அதன் பின்னர் எனக்கு மீட்சியே இல்லாமல் போய்விட்டது. பலர் கைகளுக்கு நான் மாறி விட்டேன். நான் பணி புரிவது இராணுவத்திற்காகவும் இருக்கலாம். அல்லது பாதாளக் கோஷடி யினருக்காகக்கூட இருக்கலாம். ஆனால் நான் நல்லதொரு சேவை செய்கின்றேன்…. பலருக்கு சமைத்துப் போடுகின்றேன்….”
அப்படிக் கூறிவிட்டு மீண்டும் உரத்துச் சிரித்தான். இப்போது அவனது சிரிப்பில் ஒரு விரக்தி தெரிந்தது….
பின்னர் பெரியவரின் கருத்துக்களை அறிய காவல் இராதவன் போலவும் அவசர பணிகளை மறந்திருந்துவிட்டு நினைவு கூர்ந்தவன்
அவசரப்படுவது போலவும் வேகமாக எழுந்து சென்றான்.
சிறிது நேரத்தில் முதியவருக்கான காலை ஆகாரத்தை தயார் செய்து எடுத்து வந்தான். அவனது சிறு வயதுக்கு அவர் ஒரு தந்தைக்குச் சமமாக இருந்தார். எனவே ஆறுதல் வார்த்தைகள் பல கூறி அன்புடன் அவரை உபசரித்தான் …
தூரத்தில் அவ்வீட்டின் வளவினை ஒரு பெண் பணியாள் பெருக்கிக் கொண்டு இருந்தாள்…
முதியவர் தான் அமர்ந்திருந்த வாங்கிலில் சரிந்தவர் பின்னர் சோர்ந்து மயங்கி விட்டார்.
பெரியவர் தூங்குவதாக எண்ணி சமையற்கார சிறுவன் மதிய போசனம் தயார் செய்யும் வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டான்.
பெண் பணியாள் தனது காலை ஆகாரத்திற்காக சமையற் கட்டுக்கு வந்திருந்தாள்…
“ஏன் சிவம்…. யார் இந்த ஐயா….?”
“அதுதான் பார்வதி எனக்கும் தெரியேல்லை …. பெரிய கவலையாய்க் கிடக்கு…..” சிவம் அப்படிக் கூறவும்…
“ஒண்டு மட்டும் உண்மை சிவம்….. எங்கடை இந்த நாய்கள் கெதியாய் அழிஞ்சு போவான்கள். அதைமட்டும் நீ நம்பு… போன மாதம் ஒரு சிறுமியைக் கடத்திக் கொணர்ந்து சிறை வச்சிருந்தவை யெல்லே….. அது பணம் கறக்கிறதுக்காகத் தானாம். ‘பொலிஸார்’ விரிச்ச வலையிலை சிறுமி காப்பாற்றப்பட்டதோடை இவை யளிலையும் மூண்டு பேர் அகப்பட்டுப் போச்சினமாம்…”
பார்வதி விளக்கினாள்.
“இந்தப் பெரிய விசயம் உனக்கென்னண்டு தெரிய வந்தது பார்வதி?”
சிவம் ஆச்சரியத்துடன் வினவினான்.
பார்வதி நாணத்துடன் சிரித்தாள்…. .
“உனக்கு சொல்லக்கூடாதெண்டு ஒரு கதை என்னட்டை இருக்குதா சிவம்… உந்த வானிலை திரியுறதுகளிலை வெற்றிலைக் குதப்பி ஒருவன் இருக்கிறான் பார்….”
அவள் இப்படிக் கூறியிருக்கவும்…. “ஓம்… ஓ…… இப்ப புதுக்க வந்த அந்தக் குண்டன்” சிவம்.
“அவர்தான்..! அவருக்கு இஞ்சத்தை நடைமுறை தெரியாது. நாங்களும் இவேன்ரை திருகுதாளங்கள் எல்லாத்திலையும் பங்கு தாரர்கள் எண்டு நினைக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னோடை யும் கொஞ்சம் ‘சில்மிஷம்’ புரியவும் ஆசை கிடக்குது… அதாலை அவர் கக்கின உண்மைகள் பல எனக்கு தெரிய வந்திருக்குது…” பார்வதி!
“நீ கெட்டிக்காரிதான்…… இந்த ஐயா பாவம். ஏழை போலையும் கிடக்கு. சந்தர்ப்பம் கிடைச்சால் என்ன விசயம் எண்டு அலசிப் பார்….” சிவம். பார்வதி மதிய உணவுடன் கடமை முடிந்து வெளியேறி விட்டாள்….
சிவம் பெரியவரைக் குளிக்க வைத்து மதிய போசனம் வழங்கினான். மன உழைச்சல் காரணமாகவும் தாடையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவரால் உணவருந்த முடியவில்லை .
சிவம். ஆறுதல் கூறினான்.
“ஐயா… உங்களை இந்தப் பாவிகள் ஏன் கொண்டு வந்து வைச்சிருக்கிறார்கள் எண்டது எனக்குப் புரியவில்லை. அதை தெரிஞ்சு கொள்ளுதலும் கஷடம். ஆனால், உங்களை இண்டைக்கு இரவு அந்தப் பூட்டிக் கிடக்கிற அறையில் வைச்சு விசாரிப்பாங்கள். நீங்கள் தப்ப வேணுமெண்டால் அவங்களுக்கும் அவங்கடை நிபந்தனைகளுக்கும் பணிஞ்சு போறதுதான் ஒரே வழி. உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கோ ஐயா….”
சிவத்தினுடைய கண்களில் இருந்து நீர் வடிவதைக் கண்டதும் பெரியவருடைய பிடிவாதம் கரைந்து விட்டது. அவனைத் திருப்தி செய்யும் பொருட்டு சிறிதளவு ஆகாரத்தை உட்கொண்டார். பின்னர் வாய் அலம்பியபடி கூறினார்….
“நீ கவலைப்படாதை தம்பி…… மடியிலை கனம் இருந்தால் தானே வழியிலை பயமிருக்கிறதுக்கு… ஏதோ தெரியாமல் ஆருக்கோ பதிலாக என்னைக் கொண்டு வந்திட்டாங்கள் போலை…. விட்டு விடுவார்கள்….”
சிறிதளவு நம்பிக்கைக் கீற்று அவர் மனதில் இருந்தது.
அன்று மாலை. உயர் ரக வெள்ளை நிறக் கார் ஒன்று அந்த வீட்டின் முன்பாக கம்பீரமாக வந்து நின்றது. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு நடுத்தர வாலிபன் வாகனத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்பு மண்டபத்தில் போடப்பட்டிருந்த ‘சோபா’வில் வசதியாக அமர்ந்தான்.
அவனுடன் சிவம் பவ்வியமாக நடந்து கொண்டான். குளிர் பானம் வழங்கினான். பின்னர் வெளியே காத்து நின்ற மெய்க் காவலர்களுக்கும் சாரதிக்குமாக மூன்று கண்ணாடிக் குவளைகளில் பானத்தை நிரப்பி எடுத்துச் சென்றான். அவன் திரும்பி வரவும்….
“சிவம்… அந்த ஐயாவை வரச் சொல்லு…” என்று கட்டளை யிட்டான் அந்த நடுத்தர வயதினன்.
சிவா தாங்கிப் பிடித்து வர…. தள்ளாடியபடி வந்த முதியவரை அந்த விசாரணை அதிகாரி எரித்து விடுவதுபோலப் பார்த்தான்…… பின்னர் கூறினான்.
“ஐயா… உங்களை இண்டைக்கு இரவு விசாரிப்பம். விசாரணை இண்டைக்கும் முடிவடையலாம். சில நாட்கள் செல்லவும்கூடும். எல்லாம் நீங்கள் எங்களோடை ஒத்துழைக்கிறதிலைதான் இருக்கு…. இப்ப நீங்கள் போய் அந்த அறையிலை படுத்து களைப் பாறுங்கோ …”
பெரியவருக்கு மனம் குமுறியது.
‘என்னை இதுவரைக்கும் என்ரை தம்பி தேடத் தொடங்கி யிருப்பான். ‘பொலிஸிலை’ முறைப்பாடு கொடுத்திருப்பான். அவனாலை கோபத்தைத் தாங்க முடியாது. ஆனால், நேருக்கு நேராய் என்னைப்போலை ஆரோடையும் கதைக்க மாட்டான். எண்ணி எண்ணி அழுந்துவான். இப்ப நடக்கிற ஆட்கடத்தல்களையும் மற்ற மற்ற அநியாயங்களையும் தட்டிக் கேக்கிற அவன் என்னைக் கடத்தினதெண்டு கேள்விப்பட்டால் சும்மா இருக்க மாட்டான்…..’
என்றெல்லாம் அவரது மனம் எண்ணிக் கலங்கியது.
விசாரணைக்கென அவரை அந்த அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றபோது இரவு பத்து மணி ஆகிவிட்டது.
தொலைக்காட்சி மற்றும் கணணி சார்ந்த அலுவலக உபகரணங் கள் அனைத்தும் அங்கு நிரம்பி வழிந்தன.
சிவம் அந்த முதியவரை விசாரணை அதிகாரியின் முன் கொணர்ந்து அமரச் செய்தான். பின் வெளியேறிவிட்டான்.
விசாரணை நடைபெறும் சமயம் அங்கு அநாவசியமாக யாரும் இருக்க முடியாது. எனினும் சிவத்திற்கு அந்த பெரியவர்மேல் ஏற்கனவே ஓர் அனுதாபம் உண்டாகியிருந்ததால் வெளியே ஓர் ஓரத்தில் நின்று கண்ணாடிச் சட்டம் ஒன்றின் ஊடாக நடப்பனவற்றை அவதானித்தான்.
விசாரணை அதிகாரி பெரியவரை அச்சுறுத்தும் பாணியில் உருட்டி மிரட்டி கேள்விக் கணைகளைத் தொடுப்பதும் பெரியவர் பயத்துடன் கை கட்டி அழுதழுது பதில் சொல்லவதும் அந்த
அதிகாரியை இறைஞ்சுவதும் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. தொலைக் காட்சியில் அவருக்கு சில காட்சிகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு கட்டத்தில் முதியவர் பொறுமையின் எல்லைக்கு போயிருக்க வேண்டும். மிகவும் ஆக்ரோஷமாகத் தனது நிலைப் பாட்டைத் தெளிவு படுத்த முயன்றார்…
விசாரணை அதிகாரி அதனைப் புரிந்து கொள்வதற்கு சாமான்ய குணவியல்பு கொண்டவன் அல்ல, அவனது கோபம் எல்லை மீறியது. பெரியவரை அந்த அறையிலேயே அடித்துப் போட்டுவிட்டு வெளியேறி விட்டான்.
அப்போது நடுச் சாமமாக இருக்கலாம்…
அதிகாரியின் ஆடம்பரக் கார் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. அதன் பின்னரே சிவம் அந்த அறைக்குள் கால் பதித்தான்.
பெரியவர் மூர்ச்சையற்றிருந்தார். அவரை உணர்வு நிலைக்குக் கொண்டு வர அவன் மிகவும் சிரமப்பட்டான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் கெட்டது. பெரியவருடனேயே காலத்தைக் கழித்தான்.
மறுநாள் பார்வதி வழமையாக பணிக்கு வரும் நேரத்திற்கு சற்று முன்பதாகவே வந்துவிட்டாள். நேரே சமையல் கட்டுக்கு சென்று சிவத்தைச் சந்தித்தாள்…
“சிவம்… இந்த ஐயாவைக் காணேலை எண்டு இராத்திரி தொலைக்காட்சி செய்தியிலை அறிவிச்சவங்கள். படம் போட்டு காட்டினபடியால் எனக்கு புரிஞ்சு கொள்ளக் கூடியதாய் இருந்தது. இவருடைய தம்பி ஒருத்தர் கதறிக் கதறி அழுதவர்….. ‘ஆரெண்டா லும் தன்ரை அண்ணனைக் கடத்தினவை நிபந்தனை இல்லாமை அவரை விடுவிக்க வேணும்’ எண்டு கெஞ்சிக் கேட்டவர். சாயல்லை இந்தப் பெரியவர் மாதிரித்தான் தம்பியாரும் இருக்கிறார். கதை பேச்சைப் பார்க்கேக்கை மிகவும் பக்குவப்பட்ட நல்ல பின்னணியைக் கொண்ட ஆட்கள் எண்டு புரியுது….”
சிவம் ஆறுதலாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பின்னர் கூறினான்….
“பார்வதி…. நல்ல ஆட்களுக்கு இண்டையான் சமூகத்திலை எங்கை இடமிருக்கு… ஏன் கடத்துறாங்கள்…? ஏன் சுடு எண்டு ஏதாவது முறைதலை இருக்குதா….? நேற்று இரவு பெரியவரின்ரை விசாரணை முடியேல்லை. போதாக்குறைக்கு நல்ல அடி…. விசாரணை போற போக்கைப் பார்த்தால் நன்மையிலை முடியிற வாய்ப்பு இல்லையெண்டுதான் தெரியுது….!
பின் இருவருமாக சேர்ந்து பெரியவருக்கு ஒத்தடம் கொடுத்தார்கள். நாடியில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்திட்டார்கள். தேநீர் பருக வைத்தார்கள்…
பார்வதி பரிவுடன் கூறினாள்…
“ஐயா… அவங்களோடை போட்டி போட்டு முடியிற காரியம் ஒண்டுமாய் இருக்காது. உங்கடை உயிரைக் காப்பாத்துற வழியைப் பாருங்கோ. நீங்கள் உயிர் தப்பிப் போனால் தான் உங்களைச் சார்ந்தவைக்கு ஆறுதலாய் இருக்கும்.”
அப்படி அவர்கள் கதைத்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டு வளவுக்குள் வாகனம் ஒன்று வரும் இரைச்சல் சத்தம் கேட்டது. பார்வதி மெதுவே நழுவிச் சென்றாள்.
சிவம் வீட்டு கதவினைத் திறந்தான்.
நேற்றைய தினம் பெரியவரைக் கடத்தி வந்து விட்டுச் சென்ற அதே இளைஞர்கள்! அவர்களில் சாதாரணமாக சில வார்த்தைகள் தானும் பேசுகின்ற அந்த இளைஞன் இப்போது பெரியவரை அண்மித்து அட்டகாசமாகச் சத்தமிட்டான்.
“நாங்கள் நல்லவங்கள் தான் ஐயா… நீங்கள்தான் எங்களைக் கொண்டுவித்து கெட்ட காரியங்கள் செய்விக்கிறீர்கள். இண்டைக்கு உங்களுக்கு திரும்பவும் விசாரணை இருக்கு. உங்கட பதில்கள் எங்களுக்கு சாதகமாக இருக்க வேணும்… இல்லாட்டி உங்கள போட்டுத் தள்ளுற வேலையைத்தான் அநியாயத்துக்கு நாங்கள் பாரம் எடுக்க வேண்டி வரும்…” பெரியவர் நடுநடுங்கிப் போனார்…
‘இந்த உலகத்திலை என்னதான் நடக்குதெண்டு புரியேல்லை. நாளாந்தம் களவு, கொள்ளை, ஆட்கடத்தல், ஒரு குமர்ப் பிள்ளை மரியாதையாய் பாதையிலை திரிய முடியுதே…. சந்திக்குச் சந்தி ‘சென்றிகளும் அவையளின்ரை பரிகாசமும் பெண் பிள்ளைகளாலை தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்குதா… போதாதுக்கு கண்ணை மூடின ‘ஷெல்’ வீச்சு… நாளாந்தம் நூற்றுக் கணக்கிலை சாகிற பொது சனத்துக்கு ஆர் கணக்கு வைக்கினை? அதோடை நிண்டால் போதாதே…. செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டாலை விலைவாசி உயர்வும், பட்டினிச் சாவுகளும், வேலை வாய்ப்பின்மை…. கட்சிகளை வளர்க்கிறதுக்காக இனத் துவேசத்தைத் தூண்டி விடுவது… சமா தானத்துக்கான கதவுகளை இறுக மூடி வைத்துக் கொள்வது. எதிர்கால சமுதாயம் தலை தூக்க முடியாதபடி கல்விக்கு குந்தகம் விளைவித்தல்..’
பெரியவர் மனதில் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றின…
‘வானில்’ வந்த இளைஞர்கள் தமது காலை உணவை எடுத்து விட்டு வெளியேறி விட்டார்கள்.
பெரியவருக்கு அன்றைய பகற்பொழுது நரகத்தில் கழிவது போன்றிருந்தது.
‘எப்படியெண்டாலென்ன இண்டைக்கு விசாரணை அதிகாரிக்கு சமாதானம் சொல்லி வெளியேறுகிற அலுவலைப் பார்க்க வேணும்…… தம்பி என்னைத் தேடி எல்லா இடமும் ஓடித் திரிவான். அவனுக்கு நல்ல செல்வாக்கு இருக்கு. அதனால் இப்படியான விடயங்களிலை அவனாலும் எந்த மட்டுக்கு காரியமாற்ற ஏலும்? என்று சிந்தித்தபடி பெரியவர் மதியத்தின் பின் தூங்கி விட்டார்.
மாலையிலே நேற்றைய தினம் வந்தவனுக்குப் பதில் வேறொரு விசாரணை அதிகாரி வந்திருந்தான். பெரிதாக அட்டகாசம் செய்யக் கூடியவனாக தெரியவில்லை. பெரியவரை அழைத்து வர ஆள் அனுப்பாமல் தானே அவரை அண்மித்து…..
“ஐயா….. உங்களுக்கு ‘பிரஷர்’, ‘டயபிற்றிஸ்’ எண்டு எதாவது வருத்தம் இருந்தால் சொல்லுங்கோ….. தேவையான ‘பில்ஸ்’ வகைகளை எடுப்பித்துத் தருவன்” என்று கூறினான்.
பெரியவர்….. “எனக்கு எந்த வருத்தமும் இல்லைத் தம்பி…” என்று பதிலளித்தார்.
மாலையில் முதியவருடன் சேர்ந்த தேநீர் அருந்தினான். அந்த சுமுகமான சமயத்தைப் பயன்படுத்தி பெரியவர் அவனிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுக்க முயற்சித்தார். அவன் விரல்களால் அம்முயற்சியை மறுத்து தடை செய்தான்.
விசாரணை தொடங்கும் சமயம் பெரியவர் தானே அறைக்கு நடந்து சென்றார். சிவம் வேறு வேலையொன்றில் கரிசனையாக இருந்ததால் அறைப் பக்கம் செல்லாதிருந்தான்.
விசாரணை நீண்ட நேரம் நடைபெற்றது. ஒரு சமயம் திடீரென விசாரணை அதிகாரி உச்சஸ்தாயியில் கத்துவது கேட்டு சிவம் வெளியே ஓடி வந்தான். அதிகாரி அறையிலிருந்து வெளியேறி கோபத்துடன் மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி கையடக்கத் தொலைபேசியில் சில கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திலேயே இளைஞர்கள் ‘வானில்’ வந்து குதித்தார்கள்….
அதிகாரி அவர்களை நோக்கிக் கட்டளையிட்டான்…. “இந்த பெரியவரை உரிய இடத்திலை உரிய முறையிலை இறக்கி விடுங்கோ…”
அவனது ‘கார்’ உடனேயே புறப்பட்டுச் சென்று விட்டது. அதிகாரியின் கட்டளை என்ன என்பது சிவத்திற்கு நன்கு விளங்கும்.
அன்றைய தினம் அரைமனதுடன் இளைஞர்களுக்கான இரவு உணவினை அவன் தயார் செய்து வழங்கினான்.
பெரியவருடன் அவனும் இரவு உணவு எடுக்கவில்லை.
நடுச் சாமம் அளவில் பெரியவரை ஏற்றிக் கொண்டு வான்’ புறப்பட்டது. பெரியவர் சிவத்தை பரிதாபமாகப் பார்த்த பார்வை அவனை வாட்டியது.
மறுநாளே அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் மக்களால் அடையாளம் காணப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக பிரசாரப் படுத்தப்பட்டது.
கடந்த இரு நாட்களாகவே பெரியவரைத் தேடி தம்பி பல இடங்களுக்கும் அலைந்து கொண்டிருந்தான். அந்த வகையில் வைத்தியசாலைகளையும் விட்டு வைக்கவில்லை.
அன்றும் அந்த பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அவன் வந்தபோது பிரேத அறை திறந்தே இருந்தது. பல பொது மக்கள் பிரேதங்களைப் பார்வையிட்டபடியே கதறிக் கொண்டிருந்தனர்.
வழமைபோலவே தானும் ஒரு நம்பிக்கையற்ற மனத்துடன் பிரேதங்களைப் பார்வையிட்டுச் சென்றவன், ஓர் இடத்தில் ஸ்தம்பித்து நின்றான்!
“ஐயோ என்ரை அண்ணனைக் கொண்டு போட்டாங்கள்” என்று அவன் போட்ட மரண ஓலத்தில் அங்கு நின்ற ஒவ்வொரு பொது மகனும் தத்தம் உறவினரைப் பிரேதமாகக் கண்டுவிட்டது போலத் திகிலடைந்தார்கள்.
‘அற்ரெண்டன்’ ஒருவன் அவன் அருகாக ஓடிச்சென்றான். “ஐயா…. அழாதையுங்கோ ….” என்று கூறி முதலில் தேற்றினான்.
பின்னர்… “உங்களை எனக்கு நல்லாய் தெரியும் ஐயா…. உங்கடை பேரை ஒருக்கால் சொல்லுங்கோ” என வினாவினான்.
“என்ர பேர் இலக்கியன்!” என்று அழுதபடியே அவன் கூறினான்.
‘அற்ரெண்டன்’ ஒரு கணம் யோசித்தான்.
“உங்கடை பேரைக் கேட்கேக்கை சுதந்திர போராட்ட காலத்தில் மக்களுக்காக இலக்கியப் பணி புரிந்த பாரதியார் போன்ற இலக்கிய வாதிகளின்ரை ஞாபகம்தான் எனக்கு வருகுது…” என்று கூறியவன் திடீரென…
“அப்ப செத்துப்போய்க் கிடக்கிறது….?” என்று வினவினான்.
இலக்கியன் கண்களைப் பிசைந்தபடியும் விம்மலை ஒருவாறு அடக்கியபடியும் கூறினான்……
“அவர் ஊடகன்!”
– வீரகேசரி வாரமலர், 21.01.2007 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.