கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 18,437 
 
 

எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,

“சமாதானத்திட்ட எப்பிடிப் போறது?”

கடைக்காரரும் வெளியே வந்து கைகளால் சுட்டிப் பாதையை விவரிப்பார்.

“இப்பிடியே இந்த நரிக்குண்டு ரோட்டால ஒரு கட்டை நடந்தீங்கள் எண்டால் கிழக்கால வயக்காச்சி அம்மன் கோயில் வரும். அதிண்ட தேர் முட்டிப்பக்கம் ஒரு சின்னக் கொட்டில் இருக்கு. அங்கனதான் சமாதானம் கிடக்கும்”

இதனையே மதியத்துக்கு மேலே, இரண்டு மணிப் பேருந்தில் வந்து இறங்கியவர் விசாரித்திருந்தால் பதில் சற்று வேறாக இருந்திருக்கும்.

“இந்தா, இந்த நரிக்குண்டு ரோட்டால அரைக்கட்டை உள்ளுக்க இறங்குங்கோ. வலதுபக்கம் ஒரு மலைவேம்பு நிக்கும். அதுக்குப்பக்கமா, பச்சைக்கலர் கேற்றுப் போட்ட வீட்டிலதான் இந்த நேரம் சமாதானம் இருக்கும். பரிமளக்காண்ட வீடு எண்டு கேட்டா ஆரும் காட்டுவினம்”

நரிக்குண்டுக்கு சமாதானத்தைத் தேடிச் செல்பவர்கள் அந்தப் புறநகர் கிராமத்தின் சுதந்திரத்துக்குப்பின்னரான வரலாற்றை முகராமல் கடக்கமுடியாது.

நரிக்குண்டு; ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், வயல்வெளிகள் சூழ, நடுவே குளம், அருகிலேயே சிறு கொட்டிலில் வயக்காச்சி அம்மன் என்று அப்பிரதேசம் மிக அழகாக இருந்ததாம். ஓரிரு நரிகள்கூட அப்போது குளத்தில் நீர் அருந்த வந்து சென்றதாகக் கிராமத்துப் பழசுகள் பேசிக்கொள்வதுமுண்டு. ஆனால் நகராட்சி இடாப்பிலே நரிக்குளம் என்றிருந்தது, காலப்போக்கில் மாநகரக்கழிவுகள் சேரச்சேர நரிக்கூளம் ஆகி, பின்னர் கழிவுகள் குவிந்துபோனதில் நரிக்குண்டு ஆகிவிட்டது. குளத்தோடு அண்டியிருந்த வயல் நிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாகிவிட்டிருந்தன. நரிகள் எல்லாம் கட்டாக்காலி நாய்களாகவும் பூனைகளாகவும் மாறி குப்பைகளைக் கிளறுவது மட்டுமல்லாமல் குண்டிலேயே நிரந்தரமாகக் குடியும் புகுந்துவிட்டன. கிராமத்தவர்களும் ஆண், பெண் வேறுபாடின்றி அதிகாலையிலே குண்டுப்பக்கம் கடன் கழிக்க வருவர். மழை சற்றுப் பலமாகத் தூறினாலே போதும். நரிக்குண்டின் கழிவுகள் முழுதும் வெள்ளத்தோடு குடியிருப்புக்குள் பாய்ந்துவிடும். குடிகள் எல்லோரும் வயக்காச்சி அம்மனிடம் ஓடி வந்துவிடுவர். அவளும் அடைக்கலம் தேடி வந்தவர்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிக்கொடுத்துவிடுவாள். யுத்தம் ஆரம்பித்ததும் ஷெல்லடி, பொம்மரடி, இராணுவ நடவடிக்கைகளிலிருந்தும் குடிகளை அம்மன் காப்பாற்றிக் கொடுத்தாள். நரிக்குண்டு வயக்காச்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். முப்பத்தைந்து வருட யுத்த காலத்தில் ஒரு துப்பாக்கிச்சன்னந்தானும் அம்மனை நெருங்கியதில்லை.

நரிக்குண்டு வீதி தாண்டி வயக்காச்சி அம்மன் கோயிலை வந்தடைபவர்களின் நாசியை ஒருவித பிரெஞ்சுவாசம் துளைத்தெடுக்கும். அந்த வாசத்தில் நரிக்குண்டுக்கும் பிரான்சுக்குமான மூன்று தசாப்த உறவின் வரலாறு ஊறிக்கிடக்கும்.

நரிக்குண்டு நாடுகடந்த ஒரு பன்னாட்டு ஈழத்துக் கிராமமாக மாறி நீண்டகாலமாகிவிட்டது. அதுவும் குறிப்பாக பிரான்சு நாட்டில் ஒரு குட்டி நரிக்குண்டுக் கிராமமே உருவெடுத்துவிட்டது. நரிக்குண்டினுடைய முதலாவது புலம்பெயர்வானது இந்திய அமைதிப்படை காலத்தில் இடம்பெற்றது. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, கோயிலடியில் வலைப்பந்து விளையாடிவந்த குணலிங்கம் ஏஜென்சியூடாகப் பிரான்சுக்குச் சென்றதன்மூலம் அதனைத் தொடக்கிவைத்தான். அதைத்தொடர்ந்து மகேசு, அக்குச்சி, ராசன், குணலிங்கத்தின் மனைவி என்று பலர் வெள்ளையானையின் வாலைப் பிடித்துத் தொங்கி பிரான்சுக்குப் பறந்துவிட்டார்கள். யானையின் வால் நீண்டு, இன்றைக்கு ட்ரான்சியில் நரிக்குண்டின் மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது. “நரிக்குன்று கிராம அபிவிருத்திச் சபை” லாச்சப்பலில் வருடாவருடம் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கமைக்கிறது. தமிழ்நாட்டு சுப்பர் சிங்கர்கள், சீரியல் நடிகர்கள், நகைச்சுவைக் கலைஞர்கள் எனப்பலரும் வருகைதந்து “இந்தமண் எங்களின் சொந்தமண்” என்று லாச்சப்பல் மேடையில் சேர்ந்து பாடுவார்கள். பாசுமதிச் சோறு, செம்மறியாட்டு இறைச்சிக் கறி, கோழிப்பொரியல், தரமான பிரான்சு மது வகைகள் என்று அந்தக் கச்சேரி கலகலக்கும். ஆண்கள் கோர்ட், சூட் போட்டுக்கொள்வார். பெண்கள் ஒளி ஓடும் கண்ணாடிச் சேலைகள் அணிந்து ஹங் பண்ணிக்கொள்வர். கிராம அபிவிருத்திக்கென நிறையப்பணம் சேர்க்கப்படும். விளைவு, சாதாரணக் குலச்சாமியாக வீற்றிருந்த நரிக்குன்று வயக்காச்சி அம்மன் இன்று கொடிமரம் கொண்ட கோபுரக்கோயிலுக்கும், தங்கமணித் தேருக்கும். தேர் தரித்துநிற்கும் வானுயர் முட்டிக்கும் சொந்தக்காரியாகிவிட்டாள். பிரான்சின் கோடை விடுமுறைக்காலத்தில், நரிக்குண்டுக் குப்பைகூளத்தில் குவியும் ஷாம்பேய்ன் போத்தல்களும், லிபரோ டயப்பர்களும் இன்னபிற பிரெஞ்சுக் கழிவுகளும், அக்கிராமம் பூராக அந்த பிரஞ்சு வாசத்தை வியாபித்துக்கொண்டிருந்தன.

அந்த வாசத்தை அனுபவித்தவாறோ, அல்லது மூக்கைப் பொத்தியவாறோ ஒருவாறு தேர்முட்டியடியில் சமாதானத்தினைத் தேடி வந்தடைபவர்கள் அதனைக் நேரில் எதிர்கொண்டதும் அதிர்ச்சியே அடைவார்கள்.

பெயருக்கமைய இல்லாமல் பார்க்கும்போது சமாதானம் அகோரமாய்த் தோற்றமளிக்கும். பெரியம்மை நோய் போட்ட மூன்றாம் நாளினைப்போல அதன் உடல் பூராகப் பொக்குளங்கள் பொழிந்துபோய்க் கிடக்கும். முகமும் அப்படியே. அந்த முகத்தில் நெற்றி, கன்னங்களென எல்லாவிடமும் மிகப்பெரிதாக வீபூதி சந்தனம் பூசி, கழுத்தில் உத்தராட்ச மாலை அணிந்து, வெற்றுமேலுடன் திரியும் சமாதானத்தைக் கண்டு மிரளாத மனிதர் இருக்கமாட்டார்கள். அதனை ஏலவே அறிந்திருந்தவர்கள், இத்தனையாண்டுகளாக நரிக்குண்டிலும் வயக்காச்சி அம்மனிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவையும் சமாதானத்தைக் கடுகளவேனும் பாதிக்கவேயில்லை என்பதை நொடியில் கண்டறிவார்கள்.

சமாதானத்தை எப்படி அணுகுவது பற்றி எல்லோர் மத்தியிலும் ஒரு குழப்பமான பார்வையே நிலவிவந்தது. அதன் நிஜப்பெயர்கூட ஒருவருக்கும் சரியாகத் தெரியாது. அதனுடைய அடையாள அட்டையை அவ்வப்போது செக் பண்ணும் ஒரு சில எழுத, வாசிக்கத்தெரிந்த இராணுவத்தினர்கூட, அடையாள அட்டையைக் கையில் வாங்கிவைத்தபடி, பெயரைச் சொல்லுமாறு சாமாதானத்திடமே கேட்பார்கள். அதுவும் “சமாதானம்” என்றே சொல்லும். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு போ என்று அனுப்பிவிடுவார்கள். சமாதானம் என்பது அதனுடைய இயற்பெயராக இருக்கலாம். இல்லை எனின் யார் அதற்கு அப்பெயரைச் சூட்டியிருக்கக்கூடும் என்ற குழப்பம் வந்துவிடும். அப்படி சமாதானத்தின் இயற்பெயர் என்ன? யார் அதற்கு சமாதானம் என்று பெயர் சூட்டினார்கள்? என்றெல்லாம் அறியவேண்டிய கட்டாயத்தேவை எதுவும் எவருக்கும் எக்காலத்திலும் வந்ததுமில்லை. எது எப்படியோ சமாதானம் என்ற பெயர் நரிக்குண்டு மட்டுமில்லாமல் அயல் கிராமங்களிலும் பிரபலமானது. தூர இடங்களைச் சேர்ந்தாரிடம் “நரிகுண்டுச் சமாதானம்” என்று விசாரித்தால் சொல்லிவிடுவார்கள். அயலட்டங்களில் வெறுஞ் சமாதானமே போதுமானது.

சமாதானம் உறைகின்ற அதனுடைய வயக்காச்சி அம்மன் தேர்முட்டியடிக் கிடுகுக்கொட்டில் மிகவுஞ் சிறியது. அந்தக் கொட்டிலின் கூரையானது வேய்ப்பினைக் கண்டு இருபது மாரிக்காலங்கள் கடந்திருக்கலாம். கொட்டிலுக்கு அடைப்பு என்றும் எதுவுங் கிடையாது. அறைகளும் இல்லை. மழை பெய்தால் கோயிலடியில் திரியும் கட்டாக்காலி நாய்களும் ஆடு மாடுகளுங்கூட அக்கொட்டினுள்ளேயே அடைக்கலந்தேடும். சமாதானத்துக்குச் சொத்து என்று சொல்லிக்கொள்ள ஒரு கோணிப்பை இருந்தது. அதுகூட எப்போதும் திறந்தே கிடக்கும். உள்ளே பூராய்ந்தால் சில காவி உடுப்புகள், கசாயப் போத்தல்கள், மருந்துச் சரைப் பக்கற்றுகள், சாத்திரப் புத்தகங்கள், சவர பிளேடுகள்; தவிர ஒரு சுடுதண்ணிக் கேத்தில்.

சமாதானத்தினுடைய வாழ்வு ஒரு செம்மறி ஆட்டினுடைய குழப்பமில்லாத மேய்ச்சல் வாழ்வுபோல நிர்மலமானது. அதனுடைய முழுநாள் அட்டவணை என்றைக்குமே நிரந்தரமானது.

தினமும் அதிகாலை நான்கு மணிக்கே சமாதானம் எழுந்துவிடும். நரிக்குண்டுக் குப்பைமேடு அருகில் தனது காலைக்கடனை முடித்துவிட்டு, கோயில் கிணற்றில் வந்து நாலரை மணிக்கெல்லாம் அது குளித்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்னர், “சமாதானம் மாமிசம் சாப்பிடுகிறது, மலம் கழித்துவிட்டுக் கழுவாமற் துடைக்காமல் கோயில் கிணற்றில் வந்து குளிக்கிறது, அது அங்கே குளிப்பதைத் தடைசெய்யவேண்டும், துடக்கு”, என்று புதிதாக நியமிக்கப்பட்ட வயக்காச்சி அம்மன் தர்மகர்த்தா சபையினர் சமாதானத்துக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி எழுத்தில் கொடுத்தார்கள். சமாதானம் அந்தப் பத்திரத்தைக் கிழித்தெறிந்துவிட்டு வழமைபோலவே அடுத்தநாள் காலையிலும் கிணற்றடியில் குளிக்கப்போனது. அந்தச்சமயம் கிணற்றடி வாழைமரங்களுக்குள் ஒளித்திருந்த வயக்காச்சி தர்மகர்த்தாசபைத் தலைவர் சமாதானத்துக்கு இருட்டடி கொடுத்ததாக ஒரு செய்தி உடனடியாகவே ஊரெங்கும் பரவியது. சமாதானம் எதையுமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. காலை எட்டு மணியளவில் எப்படியோ செய்தி கேள்விப்பட்டுத் தமிழீழ காவல்துறை சம்பவத்தளத்துக்கு வந்துவிட்டது. விசாரணையின்போது சமாதானம் வாயே திறக்கவில்லை. தர்மகர்த்தா தான் சமாதானம்மீது கையே வைக்கவில்லை என்று அம்மாளாச்சி ஆணையாகச் சத்தியம் பண்ணிப்பார்த்தார். காவல்துறை அவருடைய வாதத்தைக் கணக்கிலேயே எடுக்கவில்லை. வயக்காச்சி அம்மனின் நண்பகல் பூசைக்கு முன்னராக, பக்தர்கள் புடைசூழ, சமாதானத்தைக் கிணற்றடியில் இருத்தி, தர்மகர்த்தாவை தண்ணி அள்ளி அதனைத் தோயவார்க்கச் சொன்னார்கள். சமாதானம் அப்போதும் ஏதும் பேசவில்லை. நன்றாகத் தேய்த்துக் குளித்துவிட்டு வாயைக் கொப்புளித்துக்கொண்டவாறே தன் கொட்டிலுக்கு அது சென்றுவிட்டது. அச்சம்பவம் நிகழ்ந்து மூன்றாவது வாரம் தர்மகர்த்தாவின் ஒரே மகள் புலிகள் இயக்கத்தில் போய் இணைந்துகொண்டாள். மகள் இயக்கத்துக்குப்போன கவலையில் தர்மகர்த்தாவின் மனைவியும் மூன்றே மாதங்களில் நோய்கண்டு இறந்துபோய்விட்டார். நரிக்குன்றடி வட்டாரத்தில், சமாதானம் தர்மகர்த்தா வீட்டுக்குச் சூனியம் வைத்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் குங்குமம், சந்தனம் பூசிய எலுமிச்சங்காய்ப் பாதிகள் கிடந்ததாகவும், அவற்றின் மறுபாதிகள் சமாதானத்தின் கொட்டிலில் கிடந்ததாகவும் செய்தி பரவியது. எவரும் இதுபற்றிச் சமாதானத்திடம் விசாரித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. தர்மகர்த்தா குடும்பத்தின் எஞ்சிய அங்கத்தவர்கள் கொழும்புப்பக்கம் பின்னர் நிரந்தரமாக நகர்ந்துவிட்டனர். சமாதானம் தொடர்ந்து கோயில் கிணற்றில் குளித்து வந்தது.

கிணற்றடியில் குளித்தபின்னர், அக்கம் பக்கங்களில் உள்ள வீடுகளின் மதில்கரையோரங்களில் எட்டிப்பார்க்கும் நித்தியகல்யாணிப்பூக்களை ஆய்ந்துகொண்டுவந்து, மாலை கட்டி, சமாதானம் தன்னுடைய கொட்டிலுக்குள் தொங்கும் அம்மன் படத்துக்குச் சூட்டிவிடும். சமாதானம் ஒருபோதும் வயக்காச்சி அம்மன் கோயிலுக்கு உள்ளே சென்று வழிபட்டதில்லை. மாலைகட்டிக் கொடுத்ததுமில்லை. யாரும் சமாதானம் கோயிலினுள்ளே வருவதைத் தடுத்ததாகத் தெரியவில்லை. ஏனோ அது செல்வதில்லை. காலை ஆறுமணி பூசை மணியின்போது கோபுரத்தைப்பார்த்து பெருங்கும்பிடு மாத்திரம் அது போடும். அப்புறம் சதாசிவம் கடைக்குச் சென்று அன்றைய தினப்பத்திரிகைகளை வாங்கிக்கொண்டுவந்து சத்தமாக அறுத்து உறுத்து வாசிக்க ஆரம்பித்துவிடும். தமிழில். ஆங்கிலத்தில்.

சமாதானம் எத்தனையாம் வகுப்புவரை படித்தது? சமாதானத்துக்கு எப்படி எழுத வாசிக்கத்தெரியும்? அதனுடைய அம்மா அப்பா எங்கே போனார்கள்? அதற்குக் குடும்பம், குட்டி என எதுவும் உள்ளதா? என்ற சங்கதிகள் பற்றி எவருக்குமே சரியாகத் தெரியாது. சமாதானம் ஒரு தனிக்கட்டையாகவே அத்தனை காலமும் சுற்றித்திரிந்தது. அது சித்தர் சாதியினைச் சேர்ந்ததா என்றால் அப்படியும் சொல்லமுடியாது. பொதுவாகச் சித்தர்களுக்குப் பின்னாலே ஒரு நாயோ பூனையோ எக்காலமும் சுற்றித்திரிவதுண்டு. சமாதானம் அப்படி எதுவாவது பின்னாலே தொடர்ந்து வந்தால் கல்லால் அடித்துக் கலைத்துவிடும். சமாதானம் யார் என்பதைக் காலவோட்டத்தில் எல்லோருமே மறந்துபோய்விட்டிருந்தார்கள். சமாதானத்தின் பூர்வீகத்தைச் சொல்லக்கூடியவர்கள் என்று எவரும் இப்போது நரிக்குன்றடியில் இல்லை. ஒன்று இறந்துபோய்விட்டிருந்தார்கள். அல்லது இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

ஆனாலும் வதந்திகள் பல உலாவித்திரிந்தன. சமாதானம் வவுனியா வங்கி ஒன்றிலே காசாளராக வேலை பார்த்ததாகச் சிலர் சொல்வர். அதனுடைய மனைவி திருமணமாகி ஆறாவது மாதமே வயிற்றில் குழந்தையோடு சமாதானத்தின் நெருங்கிய நண்பனோடு ஓடிவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சமாதானம் அத்தியடி ஆயுர்வேதக் கல்லூரியில் படித்ததாகவும் அது ஒரு தேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் என்றும் ஆள்கள் பறைவதுண்டு. சமாதானத்தை நயினாதீவு புத்தகோயிலடியில் வைத்து ஒரு பிக்கு கன்னத்தில் அறைந்த நாளில் அதற்கு அறளை பெயர்ந்துவிட்டதாகவும் சிலர் சொல்லித்திரிவர். எண்பத்துமூன்று ஜூலை கலவரத்தின்போது கொழும்பிலிருந்து சமாதானம் நரிக்குண்டுக்கு ஓடிவந்ததாகவும், அது எண்பத்துமூன்றில்லை, எழுபத்தேழு என்றும் கதைகள் பலவுண்டு. சமாதானம் யாழ்ப்பாணம் சோனகர்தெருவில் வாழ்ந்த மௌலவி என்றும், புலிகள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியபோது, சொந்த ஊரைப்பிரிய மனமில்லாமல் அது நரிக்குண்டில் வந்து தஞ்சம் புகுந்துவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு. ஒருமுறை புலிகளின் உளவுத்துறையினர், சமாதானம் பரிமளம் வீட்டில் இருந்த சமயம் அதனுடைய கொட்டிலுக்குள் சென்று அதன் கோணிப்பையைத் தேடிப்பார்த்தார்கள். உருப்படியாக ஒரு பழைய பழுதான பனசொனிக் ரேடியோ மாத்திரம் அவர்களுக்குக் கிடைத்தது. யாழ் நகரம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், ஒருநாள் ஈபிடிபி இயக்கக்காரரும் சமாதானத்தைத் தேடிவந்து அதே கோணிப்பையைத் துழாவி, மீண்டும் அதே பழைய ரேடியோவைக் கண்டுபிடித்தனர். யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதரகம் உருவாக்கப்பட்ட காலத்தில் சமாதானம் “றோ” அமைப்பினுடைய உளவாளி என சிலர் சொல்லிக்கொண்டனர். யோகர் சுவாமிகள், செல்லப்பாச் சுவாமிகள் பரம்பரையின் இறுதிச் சித்தராகச் சமாதானத்தைக் கருதுபவர்களும் உண்டு. சமாதானத்தைக் கம்யூனிஸ்ட் என்றனர் சிலர். கவிஞர், இலக்கியவாதி என்றனர். இன்னும் பல கதைகள் பேசினர். இவற்றில் எவை எவற்றில் எவ்வளவு உண்மைகள் கலந்திருந்தன என்று எவருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. சமாதானத்துக்கேகூட தான் யார் என்கின்ற பிரக்ஞை காலப்போக்கில் திரிபடைந்துபோய்விட்டிருந்தது. அது தன்னைப்பற்றிய பற்றிய விடுப்புகளை ஒன்றுவிடாமல் பரிமளம் வாயினால் கேட்டறிந்து, அக்கதைகளின் சுவாரசியத்தில் வீழ்ந்துபட்டு, ஈற்றில் அவையே உண்மையான சமாதானம் என்று திடமாக நம்பி, அவற்றுக்கேற்ப தன்னை மாற்றியமைக்கவும் தலைப்பட்டுவிட்டது. குறிப்பாக, சமாதானத்துக்கும் பரிமளத்துக்குமிடையேயிருந்த உறவு பற்றிய வதந்தியை அது உண்மைக்கு மிக நெருக்கமாக விருப்போடு கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருந்தது.

சமாதானம் தனது அட்டவணையின்படி காலைப் பத்திரிகைகளை வாசித்து முடித்ததும், அவற்றைக் கையிலெடுத்துக்கொண்டு பரிமளத்தின் வீட்டுக்குச் சென்றுவிடும். அங்கே பரிமளம் கொடுக்கும் தேநீரை வாங்கிக்குடித்துவிட்டு ஏழரைமணிவாக்கில் அவளின் மகள் வைதேகியைப் பாடசாலைக்கு கூட்டிச்செல்வது சமாதானத்தினுடைய அடுத்த வேலை. வைதேகி சிறுமியாக இருக்கையில் கையைப்பிடித்து மங்கையர்க்கரசி மகாவித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்றதுமுதல் அவள் வளர்ந்து, ஆசிரியையாகி, லேடீஸ் சைக்கிளில் சென்றகாலம் வரைக்கும் சமாதானம் அவளுக்குத் துணையாக அலைந்துகொண்டேயிருந்தது. ஈற்றில் அவள் திருமணமாகிப் பிரான்சுக்குப் பயணிக்கும்போதும் சமாதானம் பண்ணையடிப்பேருந்து நிலையம்வரை சென்று அவளை வழியனுப்பிவைத்தது.

சமாதானத்துக்கும் பரிமளம் குடும்பத்துக்குமான உறவு, சமாதானத்துக்கும் நரிக்குண்டுக்குமான உறவைப்போலவே விசித்திரமானது. சமாதானம் நரிக்குண்டுக்கு வந்தபோது பரிமளம்தான் முதன்முதலில் வாசல் படலை திறந்து அதற்கு ஒரு வாய் சோறு போட்டவள். அப்போது வைதேகிக்கு இரண்டு வயது நிரம்பியிருந்தது. சமாதானத்தை இரண்டுவயது வைதேகி தன்னுடைய மழலைக்குரலால் “சமா” என்று அழைத்தாள். பின்னர் அது நிரந்தரமாகச் “சமா மாமா”வாகத் தங்கிவிட்டது.

வைதேகியை பாடசாலைக்குக் கொண்டுபோய்விட்டுவிட்டு, திரும்பி வரும்வழியில் காய்கறிகள் சிலவற்றை வாங்கிக்கொண்டு சமாதானம் மீண்டும் பரிமளம் வீட்டுக்குத் திரும்பிவிடும். பரிமளம் அப்போது வீட்டு முன் விறாந்தையில் சமாதானம் வாங்கிவைத்திருந்த பத்திரிகைகளை வாசித்துக்கொண்டிருப்பாள். சாமாதானம் ஒன்றுமே பேசாமல் வீட்டுக்குப்பின்னே கவிழ்த்துவைத்திருக்கும் கோப்பையைக் கழுவிக்கொண்டுவந்து நீட்டினால் அதனுள் பழைய சோற்றுக்குழையலோ அல்லது பாணுஞ்சம்பலுமோ விழும். பத்தரை மணியளவில் பரிமளத்திடம் காசை வாங்கிக்கொண்டு சமாதானம் கல்வியங்காட்டுச் சந்தைக்குச் சென்று மீன், நண்டு, இறால் என எதையாவது வாங்கிவரும். தேவைப்படும்போது சதாசிவம் கடையில் பலசரக்குச் சாமான்களும் வாங்குவதுண்டு. கொத்து விறகு முடிந்துவிட்டால் மரக்காலைக்குச் சென்று கட்டிக்கொண்டும் வரும்.

காலை பதினொன்றரை மணியளவில் நரிக்குண்டு வீதியால் பரிமளம் வீட்டைத்தாண்டிப்போகின்றவர்கள், அங்கே சமாதானமும் பரிமளமும் வாசலில் உட்கார்ந்து “சமா” போட்டுக்கொண்டிருப்பதைக் கவனிக்கமுடியும். பரிமளம் வளவளவென்று பேசிக்கொண்டிருக்க சமாதானம் அதைக் கேட்டுக்கொண்டே முருங்கை இலை ஓடித்துக்கொடுக்கும். பரிமளம் தன் கதையையெல்லாம் சமாதானத்தோடு வஞ்சனையில்லாமல் பகிர்ந்துகொள்வாள்.

பரிமளம் மானிப்பாயைச் சேர்ந்தவள். படித்த கௌரவமான குடும்பம். பாடசாலையில் படித்தகாலத்தில் அங்கு புதிதாகப் பணிக்கு வந்திருந்த ஆங்கில ஆசிரியனோடு காதல். அவன் ஏலவே திருமணமானவன் என்ற தகவல் அவளுக்குத் தெரியாது. பரிமளம் தன் வீட்டை எதிர்த்து பதினெட்டு வயதிலேயே ஓடிப்போய் அவனைத் திருமணம் முடித்தாள். ஆறாவது மாதமே வைதேகி பிறந்துவிட்டாள். கணவனுக்குப் பாடசாலையில் உத்தியோகம் பறிபோய்விட்டது. அந்தச்சமயம் நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியருக்கு பணிவெற்றிடம் இருந்ததால் அவளின் கணவன் வைதேகி பிறந்து மூன்றாம் மாதமே லாகொசுக்குப் பறந்துவிட்டான். போனவன் அடுத்த வருடமே அவனுடைய முதல் மனைவியையும் குழந்தையையும் அங்கேயே அழைத்துக்கொண்டுவிட்டதாகக் கேள்வி. ஆரம்பத்தில் பரிமளத்துக்கு இருமாதங்களுக்கு ஒருமுறை பண உண்டியல் வந்துகொண்டிருந்தது. பின்னர் வைதேகியின் பிறந்தநாளுக்கு மாத்திரம் வந்துகொண்டிருந்தது. ஒரு இடப்பெயர்வோடு அதுவும் தடைப்பட்டுப்போனது.

இந்த மூலக்கதையின் பல்லாயிரம் கிளைக்கதைகளை பல்வேறு பரிமாணங்களோடு பரிமளம் சொல்ல, சமாதானமும் அவளின் வீட்டு முன் விறாந்தைத் தூணும் எந்தச் சலனமுமில்லாமல் ஒவ்வொரு நாளும் காலையில் அவற்றைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கும். அவள் சொல்லும் கதைகளும் சம்பவங்களும் சமயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பொருந்தாமல்கூடப் போவதுண்டு. ஒரே சம்பவத்தின் முடிவுகள் இருவேறு நாள்களில் மாறுவதுண்டு. ஆனாலும் சமாதானமோ, விறாந்தைத்தூணோ பரிமளத்தின் பேச்சில் குறுக்கிட்டதில்லை. அவளும் தன் முரண்களையிட்டு அலட்டிக்கொண்டதுமில்லை. தவிர, ஒருநாள்கூட “உன் கதை என்ன? சொல்லன்” என்று பரிமளம் மறந்தும் சமாதானத்திடம் கேட்டதில்லை. சமாதானமும் தானாகத் தன் பங்குக்குக் கதைகளைச் சொல்லத் தலைப்பட்டதுமில்லை. அந்த விறாந்தைத் தூணிலாவது, சமாதானத்தின் தலை சாய்த்திருந்ததில் எந்நேரமும் எண்ணெய் பிசுபிசுத்துப்போய்க்கிடக்கும். சமாதானத்தின் முகம் எப்போதும்போல கோரமாய் அம்மை கண்ட முகமாய்ப் பொழிந்து;

பன்னிரண்டு மணியளவில் பரிமளம் சமைக்கவென குசினிக்குள் நுழைந்ததும் சமாதானம் தானும் புறப்பட்டு நரிக்குண்டுக்கூளத்தருகே சென்று அங்குள்ள புல் பற்றைகளையெல்லாம் அளைய ஆரம்பிக்கும். சமாதானத்துக்குக் கொஞ்சம் சித்த வைத்தியம் தெரியும். நரிக்குண்டு முன்னொருகாலத்தில் குளமாக இருந்தமையால் ஆங்காங்கே சகதிகளும் பற்றைகளும் இன்னமும் மீதமிருந்தன. குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை, ஆடுதின்னாப்பாளை, கரிசலாங்கண்ணி, நன்னாரி, நரிப்பயறு, குறிஞ்சா, ஆலம்பட்டை, ஆவாரை, அறுகம்புல், அழுகண்ணி, கீழா நெல்லி, கரிசாலை, தழுதாரை, நொச்சி, ஈழத்து அலரி, முசுமுசுக்கை, கல்தாமரை என்று எந்தப் பற்றைக்குள் எந்த மூலிகை கிடைக்கும் என்று சமாதானத்துக்கு நன்றாகவே தெரியும். தவிர மாட்டுச்சாணம், ஆட்டு மூத்திரம், நத்தை என்று அது சித்த வைத்தியத்துக்குச் சேகரிக்கும் வஸ்துக்கள் விசித்திரமானவை. எல்லாவற்றையும் கொட்டிலுக்கு இட்டுவந்து, பதப்படுத்தவேண்டியதைப் பதப்படுத்தி, சரை பண்ணவேண்டியதைச் சரை பண்ணி, காயப்போடுவதைக் காயப்போட்டு, காய்ச்சவேண்டியதைக் காய்ச்சி, மீண்டுமொருமுறை கிணற்றடியில் குளியல் போட்டுவிட்டு, இரண்டு மணியளவில் சமாதானம் வைதேகியைக் கூட்டிவர பாடசாலைக்குச் செல்லும். அவளுக்கு ஒரு ஐஸ் பழமோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கிக்கொடுத்து, அவள் புத்தகப்பையையும் சுமந்தபடி, பொடிநடையாக வீட்டுக்கு அழைத்துவரும். வழி நெடுக்கிலும் வைதேகி அன்றைய தினம் பாடசாலையில் நிகழ்ந்தவை யாவற்றையும் இம்மி பிசகாமல் ஒப்புவிக்க, சமாதானம் சுவாரசியம் குன்றாமல் கேட்டுக்கொண்டுவரும். அவள் வளர்ந்து சைக்கிள் ஓட ஆரம்பித்தபின்னருங்கூட இந்தப்பழக்கம் தொடர்ந்தது. அவள் மெதுவாகச் சைக்கிள் மிதித்தபடியே பேசிக்கொண்டுவர சமாதானம் அருகிலேயே அவள் கதைகளைக் கேட்டபடி கூட நடந்துபோகும். வைதேகி ஆசிரியையாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபின்னருங்கூட நிற்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் அவளுங்கூட “நீ என்ன செய்தாய்? உன் கதை என்ன?” என்று சமாதானத்திடம் தவறியும் கேட்டதில்லை. அதுவுந் தானாகச் சொன்னதில்லை.

பரிமளம் வீட்டை அடைந்ததும், மதிய உணவை முடித்துக்கொண்டு சமாதானம் தன் கொட்டிலுக்குத் திரும்பி ஒரு குட்டித்தூக்கம் போடும். மாலை நான்கு மணியளவில் அதனிடம் பொதுமக்கள் தேடிவர ஆரம்பிப்பார்கள். எலும்பு முறிவு, மூட்டு விலகல், படைத் தேமல், சிலந்தி தேள் கடி, வாதம், பித்தம், பேதி, வண்டுகடி, வயிற்றுப் பூச்சி, நெறி, பால்கட்டு, நரை மயிர், ஈறு, மலச்சிக்கல், மூலம், முகப்பொலிவு, கல்லடைப்பு, அரையாப்பு, காதுக்குத்து, ஆனைக்கால், முடியுதிர்வு, பாலுண்ணி, நகச்சுத்தி, தலைப்பொடுகு, செருப்புக்கடி, படர்தாமரை, வீரியக்குறைவு என்று சமாதானத்திடம் தீர்வுதேடி வருபவர்களின் நோய்கள் பலவிதம். வட்டுக்கோட்டை, சுழிபுரம் தொட்டுப் பரந்தன், பூநகரிப்பகுதிகள்வரை நரிக்குண்டுச் சமாதானத்தின் நாட்டு வைத்தியம் புகழ் பெற்றிருந்தது. சமாதானம் எல்லா நோய்நொடிகளுக்கும் ஏதோவொரு நிவாரணம் வைத்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு மருந்துச்சரையேனும் கொடுக்கும். காணிக்கையாக பத்துமுதல் ஐம்பது ரூபாய்வரை பெற்றுக்கொள்ளும். மருந்து தீர்ந்தும் நோய் மாறாதவர்கள் மீண்டும் சமாதானத்தைத் தேடிவந்து மீதித்தவணைக்கு மருந்து பெற்றுக்கொள்வார்கள். அது முப்பதாண்டுகளாகச் சமாதானம் உருவாக்கிவைத்திருந்த நம்பிக்கையாகும்.

தவிர சமாதானத்துக்குச் சோதிட சாத்திரமும் பார்க்கத் தெரியும். திருமணப் பொருத்தங்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, குழந்தைபேறு, உத்தியோகம், காணாமல்போனோர் திரும்புதல், பரீட்ச்சைத் சித்தி, தொழில் பலன், சுப தினங்கள், திவசங்களுக்கு நாள் குறித்தல், சாத்திரம் எழுதுதல், குழந்தைகளுக்கு அதிட்ட இலக்கம் கணித்துப் பெயர் வைத்தல் எனப் பலவித உப வேலைகளையும் சமாதானம் பார்த்துவந்தது. சூனியம் வைப்பதற்குக்கூடச் சமாதானத்தை இரகசியமாகத் தேடிவருபவர்கள் உண்டு. ஆறரை, ஏழுமணியளவில் விளக்கு வைக்கும் வேளை வரும்வரைக்கும் சமாதானத்திடம் கூட்டம் நிறைந்திருக்கும். வந்தவர்கள் வயக்காச்சி அம்மனையும் சற்றுக் கவனித்துப்போவதால் சமாதானத்தின் இருப்பு அம்மனின் இருப்பையும் ஒருகாலத்தில் காப்பாற்றி வைத்திருந்ததென்றால் அது மிகையாகாது.

இருள் சூழ்ந்ததும் மீண்டும் ஒரு குளிப்புப் போட்டுவிட்டு சமாதானம் பரிமளம் வீட்டுக்குத் திரும்பிவிடும். எட்டு மணியளவில் அத்தியடிப் பொன்னுக்கோன் கொண்டுவந்து கொடுக்கும் இராக்கள்ளினை அது அங்கேயே வைத்து அருந்தும். சமாதானத்துடன் சேர்ந்து பரிமளமும் கள்ளுக்குடிக்கிறாள் என்று பொன்னுக்கோன் உலகம்பூராகக் கதை பரப்பிக்கொண்டிருந்தான். இது தெரிந்தும் சமாதானம் பொன்னுக்கோனிடம் தொடர்ச்சியாக இராக்கள்ளு வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தது. பரிமளமும் அதற்கு ஒருபோதும் மறுப்புச் சொன்னதில்லை. ஒன்பது மணிக்குப் பரிமளத்திடம் இரவுச்சாப்பாடாக புட்டு, அல்லது மீதிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சமாதானம் பத்துமணிக்கு தன் கொட்டிலுக்குச் சென்று தூங்கிவிடும்.

சமாதானத்தின் இந்த நேர்த்தியான அட்டவணை, ஓரிரு கட்டாய இடப்பெயர்வுகள் தவிர்த்து முப்பது வருடங்களுக்கும் மேலாக அனுதினமும் குழப்பமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அட்டவணையின் முதல் கீறல் வைதேகிக்குத் திருமணம் நிச்சயமானபோது நிகழ்ந்தது.

அது போர் முடிந்து மூன்றாவது வருடம். புற்றீசல்கள்போல வெளிநாட்டுவாசிகள் ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாகச் சித்திரை மாதத்தில் நடைபெறும் வயக்காச்சித் திருவிழாவும் மேலைத்தேய விடுமுறைக்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜூன் மாதத்துக்கு மாற்றப்பட்டதால் அந்தாண்டு கொடியேற்றத் திருவிழா வரலாறு காணாத கூட்டத்துடன் விமரிசையாக இடம்பெற்றது. திருவிழாவுக்கென வந்த சமயத்தில் பிரான்சைச் சேர்ந்த நாடுகடந்த நரிக்குண்டுவாசி ஒருவன், வந்த இடத்தில் வைதேகியைக் கண்டதும் காதல்கொண்டுவிட்டான். வைதேகிக்கும் பிரான்சைப் பிடித்துக்கொண்டுவிட்டது. பரிமளத்திற்கு விசயம் எட்டியது. இரண்டு நாள் யோசித்துவிட்டு அவளும் பிரான்சுக்குச் சம்மதம் சொல்லிவிட்டாள்.

இத்தனை நடந்தும், எவருக்குமே சமாதானத்திடம் இதுபற்றிச் சொல்லவேண்டுமென்று தோன்றவில்லை. மூன்று தசாப்தங்களாகக் கூடவிருந்து தன்னை வளர்த்த சமாதானத்திடம் மரியாதைக்கேனும் ஒரு வார்த்தை வைதேகி சொல்லவில்லை. பரிமளம்கூட மாப்பிள்ளையின் சாதகக் குறிப்பைக் எங்கோ ஒரு கொக்குவில் சாத்திரியிடம் கொடுத்தே பொருத்தம் பார்த்தாள். மாப்பிள்ளை வீட்டார் வைதேகியின் குறிப்போடு சமாதானத்திடம் பொருத்தம்பார்க்கச் சென்றபோதே சமாதானத்திற்கு விஷயம் தெரியவந்தது. ஆனால் சமாதானம் இதுபற்றி எதுவும் பரிமளத்திடமோ, வைதேகியிடமோ பேசவில்லை. சொல்லப்போனால் அதற்கு எந்த ஆதங்கமும் ஏற்படவுமில்லை. ஒருநாள் அதிகாலை வழமைபோல பரிமளம் வீட்டுக்குச் சென்ற சமாதானத்தை, இனிமேல் அங்கு வரவேண்டாம் என்று சொல்லி அவள் திருப்பி அனுப்பிவிட்டாள். அப்போதும்கூட சமாதானம் எதுவும் பேசாமல் தன் கொட்டிலுக்குத் திரும்பிவிட்டது.

பரிமளம் வீட்டில் சமாதானம் மேற்கொண்டுவந்த பல அன்றாட வேலைகளை பிரான்ஸ் மாப்பிள்ளை தனதாக்கிக்கொண்டான். வைதேகியை பாடசாலைக்குக் கூட்டிச்செல்ல அதிகாலையே அவன் அங்கு வந்துவிடுவான். அவனே வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பரிமளத்துக்கு வாங்கியும் கொடுக்கலானான். மாலை பாடசாலை முடிந்து தாமதமாகவே வைதேகியும் அவனும் வீடு திரும்புவார்கள். சமயத்தில் இருவரும் வயக்காய்ச்சி அம்மனிடம் வந்து அருச்சனை செய்வார்கள். அப்போதும் அவர்கள் சமாதானத்தின் கொட்டில்பக்கம் எட்டிப்பார்ப்பதேயில்லை. இரவு வீடு திரும்பியதும் முற்றத்தில் இருந்தபடி இருவரும் கதையளந்துகொண்டிருப்பார்கள். மாப்பிள்ளையுடைய தணிக்கை செய்யப்பட்ட பிரான்சு வாழ்க்கையை வைதேகி வியந்து கேட்டுக்கொண்டிருப்பாள். பொன்னுக்கோனின் இராக்கள்ளு இப்போது பிரான்சு மாப்பிள்ளைக்கு விநியோகமானது. பிரான்சு கள்ளுக்குடிக்க, வைதேகி அவனுடன் சேர்ந்து பிரான்சு வைன் குடிக்கிறாள் என்று ஊரெங்கும் கதை பரவத்தொடங்கியிருந்தது.

எதிர்பாராத இந்த மாற்றங்களால் சமாதானத்தின் அட்டவணை பெருஞ்சிக்கலுக்குள்ளாகியது. காலை ஏழரை மணிக்குப் பிறகு என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் சமாதானம் தடுமாற ஆரம்பித்தது. அதனால் அது அதிக நேரம் தூங்கி காலையில் தாமதமாகவே எழ ஆரம்பித்தது. சிலவேளைகளில் அது எழும்ப நண்பகல் தாண்டிவிடும். பகல் முழுதும் அது பழைய பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் வாசித்தபடி எதுவுமே செய்யத்தோன்றாமல் கொட்டிலிலேயே விட்டத்தியாகக் கிடந்தது. மூன்று மணியளவில் பரிமளம் சமாதானத்துக்குச் சாப்பாடு கொடுத்தனுப்புவாள். அதனைச் சாப்பிட்டுவிட்டு சமாதானம் மீண்டும் படுத்துத் தூங்கிவிடும். வைத்தியத்துக்கு வருபவர்களையும் சோதிடம் கேட்க வருபவர்களையும் தூஷண வார்த்தைகளால் சமாதானம் விரட்டியது. சமயத்தில் அது வைதேகியையும் பிரான்சுக்காரனையும் இரகசியமாகப் பின்தொடரும். பரிமளம் வீட்டில் இல்லாத சமயம் அங்கு சென்று கேற்றில் தட்டி அவள் பெயர் சொல்லிக் கூப்பிடும். வைதேகியின் திருமணத் தினத்தன்று சமாதானம் கொட்டிலை விட்டு வெளியே வரவேயில்லை. திருமணத் தம்பதியின் மகிழுந்து வயக்காய்ச்சி அம்மன் வாசலுக்கு வந்தபோதும் சமாதானம் எட்டிப்பார்க்கவில்லை. வைதேகியும் பிரான்சும் முதலிரவை யாழ் நகரத்து விடுதி ஒன்றிலே களித்தார்கள். அன்றிரவு சமாதானம் அவர்கள் இருந்த விடுதிக்கு வெறுமனே சென்று திரும்பியது. வழியில் பரிமளம் வீட்டுக்கும் சென்று எட்டிப்பார்த்தது. நள்ளிரவிலும் பரிமளத்தின் வீடு முழுதும் வெளிச்சம் நிரம்பியிருந்தது. சமாதானம் அதிகாலை மூன்று மணியளவில் தன் கொட்டிலுக்குத் திரும்பிவிட்டது.

திருமணமாகி எட்டாம் நாள் வைதேகியின் மாப்பிள்ளை பிரான்ஸ் திரும்பிவிட்டான். அவன் புறப்பட்ட கையோடு சமாதானத்தின் அட்டவணையும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. காலை ஏழரை மணிக்கெல்லாம் பத்திரிகையும் கையுமாய் அது பரிமளம் வீட்டுக்குச் சென்றது. சாப்பிட்டது. வைதேகியைப் பாடசாலை அழைத்துச் சென்றது. பரிமளத்தின் கதைகளை தூணோடு சேர்ந்து கேட்டது. தன்னுடைய பரியாரியார் வேலையைக்கூட மீண்டும் கவனிக்க ஆரம்பித்தது. பரிமளத்துக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தது. திருமண விடயங்கள், மாப்பிள்ளை வீட்டாரின் துலாவாரங்கள், பிரான்சுக் கதைகள் என்று அவள் பேசிக்கொண்டே போனாள். பிரான்சு கொடுத்த புதுப்போனில் எப்படி எல்லாம் கேம்ஸ் விளையாடலாம் என்று விளங்கப்படுத்தினாள். போனிலேயே திருமணப் படங்கள் காட்டினாள். சமாதானம் நிஜமான ஆர்வத்துடன் இவற்றையெல்லாம் கவனித்தது. வைதேகி எந்நேரமும் அவளுடைய மொபைல் போனோடேயே இருந்தாள். சமாதானத்தை அவள் சட்டை செய்வதே இல்லை. இருவருமே பிரான்ஸ் மாப்பிள்ளை ஊரில் இருந்த சமயத்தில் சமாதானம் என்ன செய்தது என்று வெறும் பேச்சுக்குத்தானும் கேட்கவில்லை. சமாதானத்துக்கும் தன்னிச்சையாக எதுவும் சொல்லத்தோன்றியதில்லை.

ஆறு மாதங்களில் விசா கிடைத்து வைதேகி பிரான்சுக்குச் சென்றாலும், சமாதானத்தின் அட்டவணையை அது பெரிதாகப் பாதிக்கவில்லை. அதற்கு இப்பொழுது அதிகநேரம் பரிமளத்தோடு பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. பரியார வேலைகளையும் அது பரிமளம் வீட்டிலிருந்தே கவனிக்க ஆரம்பித்தது. காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தால் சமாதானம் தன் கொட்டிலுக்கு மீண்டும் திரும்ப இரவு பத்துமணி தாண்டிவிடும். நாள் முழுதும் பரிமளமும் சமாதானமும் பேசிக்கொண்டேயிருப்பார்கள். பரிமளம் பேசுவாள். சமாதானம் கேட்கும். ஏதாவது மனக்குமுறல் என்றால் அவள் சமாதானத்தைத் திட்டித் தீர்க்கவும் தயங்கியதில்லை. வைதேகி அழைப்பு எடுக்கும் சமயத்தில் மாத்திரம் பரிமளம் மொபைல்போனோடு வீட்டுக்குள்ளே சென்றுவிடுவாள். ஒருநாள் கூட மறந்தும் பிரான்சிலிருந்து வைதேகி சமாதானத்தோடு பேசவேண்டும் என்று கேட்டாளில்லை. பரிமளமும் சொல்லவில்லை. சமாதானமும் ஆர்வப்பட்டதில்லை.

பிரான்சு போய் மூன்றே மாதங்களில் வைதேகிக்குக் குழந்தை உண்டாகியதும் சமாதானத்தின் அட்டவணை நிரந்தர ஆட்டம்காண ஆரம்பித்தது. பரிமளம் எந்நேரமும் வைபரில் மகளோடு பேசிக்கொண்டேயிருந்தாள். பத்தியக்கறி எப்படி வைப்பது என்று வீடியோ போட்டுச் செய்முறை காட்டினாள். பேரப்பிள்ளைக்குச் சட்டை தைத்து பார்சலில் அனுப்பினாள். சமாதானம் வழமைபோல அவள் வீட்டுக்கு வந்துபோனாலும் அதனோடு பொழுதுபோக்க பரிமளத்துக்கு நேரம் இருக்கவில்லை. சமாதானத்தின் தேவை அவளுக்குக் குறைய ஆரம்பித்திருந்தது.

நான்கு மாதங்களில் வைதேகிக்குப் பிள்ளைப்பேறு பார்க்கவென பரிமளம் பிரான்சுக்குப் புறப்படவும், சமாதானத்தின் வாழ்வு முற்றாகச் சீர் குலைந்தது. அவள் போனபின்னர் அதன் அட்டவணை காலை ஏழு மணிக்குப் பின்னர் மீண்டுமொருமுறை வெறிச்சோடியது. சமாதானம் முழுநாளும் கொட்டிலிலேயே சும்மா இருந்தது. தினப் பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் வாசித்தது. தனக்குத்தானே பலகதைகள் பேசியது. தரையில் கிடந்து அட்டணக்கால் போட்டபடி கொட்டில் கூரை நீக்கலூடே வானத்தை வெறித்துக் கிடந்தது. அவ்வப்போது பரிமளம் இருந்த வீட்டுக்குச் சென்று திரும்பியது. சில மாதங்களின் பின்னர் அந்த வீடு புதிதாகப் பூச்சுக்கண்டு, தங்குவிடுதியாக மாற்றம்பெற்று, காவலாளியும் வந்தபின்னர், சமாதானம் அங்கு செல்வதும் தடைப்பட்டுப்போனது. வைதேகிக்குக் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களில் நாடு திரும்பிய பரிமளம், மகள் அறிவுறுத்தலின்பேரில், நரிக்குண்டுக்குச் செல்லாமல் கொழும்பிலேயே ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து நிரந்தரமாகத் தங்கிவிட்டாள். சமாதானம் இருந்த கொட்டில் இருந்த இடத்திலே, சுவீடன் நாட்டு நரிக்குண்டு அபிவிருத்திச் சபையின் உபயத்தில் அன்னதான மடம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவு வயக்காச்சி அம்மன் தர்மகர்த்தா சபையில் நிறைவேறியது.

ஒருநாள் சமாதானம் நரிக்குண்டிலிருந்து முற்றாகக் காணாமல் போய்விட்டது. போகும்போது அது யாருக்குமே சொல்லிக்கொள்ளவில்லை. அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியாக நரிக்குண்டில் அதற்கு யாரும் இருக்கவுமில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாக நரிக்குண்டின் ஒரு அங்கமாக மாறிப்போன சமாதானம் திடீரென்று காணாமற்போனதை எவரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. விரைவிலேயே சமாதானத்தின் கொட்டில் பிடுங்கப்பட்டு அவ்விடத்தில் அன்னதான மடத்துக்கான அடிக்கல் அரசியல்வாதி ஒருவரைக்கொண்டு நாட்டப்பட்டது. அடுத்த ஆண்டே மடமும் திறக்கப்பட்டுவிட்டது. ஆலடிச்சந்திப் பேருந்துத் தரிப்பிடத்திலிருந்த சைக்கிள் கடை மறைந்து அங்கே சிம்கார்ட் கடை தோன்றியிருந்தது.

எப்போதாவது ஒருநாள் எவரேனும் அந்தப் பேருந்துத்தரிப்பிடத்தில் இறங்கி, அந்த சிம்கார்ட் கடைக்கு வந்து விசாரிப்பார்கள்.

“சமாதானத்திட்ட எப்பிடிப் போறது?”

அந்தக் கடைக்கார இளைஞன் அலுப்பாகப் பதில் சொல்வான்.

“சமாதானமா? அப்பிடி ஒண்டும் இங்கனக்க இல்ல”

– காலச்சுவடு – ஜீன் 2018

Print Friendly, PDF & Email

1 thought on “சமாதானத்தின் கதை

  1. இதை ,இன்னும் சில பாத்திரங்களைச் சேர்த்து நேரிலே நடப்பது போல நிகழ்காலத்தில் ஒவ்வொரு தினமும் நடப்பது போல எழுதினாலும் கூட ரஸ்ய நாவலைப் போல சரித்திரத்தைச் சொல்கிற நாவலாக அமைந்து விடும் .எழுத்தாளர் நாவலாக எழுத முயற்சிப்பாரா? வெளிநாட்டுக்காரர் வாயுக்களை அடை,அடை என அடைத்து விட்டிருப்பது போல …அமைந்து விட்டது .நதியாக ஓடினால் ஒப்பற்ற நாவலாக ஆகிறதுக்கான கரு இருக்கிறது .இதை எழுதுறதுக்கு முயற்சித்தவரால் ,அடுத்த முயற்சியை எடுக்க முடியாதா ,என்ன ? இல்லா விட்டாலும் அடுத்து எழுதுற போது ….மெதுவாக ஓட எழுதும் . சிறுகதைக்கு என்று ஒரு வடிவமில்லை .நாவல் போன்ற நடையிலும் எழுதலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *