தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,950 
 
 

நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும் வருகிறது; இதில் புது சந்நதி வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். பேங்கில் போடவும் கூடாது என்கிறார்.

கோயில்கமிட்டி உறுப்பினர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. “”போதும், போதும், இதுக்கு மேலே இந்தக் கோயிலுக்குச் செலவு செய்ய வேண்டாம்” என்றார்.

“”ஏன், ஏன்யா இப்படிச் சொல்றீங்க” என்றார் நாயுடு.

நரசிம்மாச்சாரியார் சற்றே தயங்கினவர்போல ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

கோவிந்தன் பிள்ளை, “”ஓய் நீர் வெறும் நரசிம்மாச்சாரின்னா எதுவும் சொல்லலாம், செய்யலாம். டிரஸ்டி நரசிம்மாச்சாரியார் ஆச்சே, அதனாலதான புரியலை” என்றார்.

சாரியார் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

அந்த ஐவரும் இந்தக் கோயிலின் கமிட்டி உறுப்பினர்கள். அரைவட்ட வடிவில் வரிசைப் படுத்தியிருந்த நாற்காலிகளில் அரைவட்ட ஆரத்தின் நடுவில், பார்க்க ஏதுவாய் அவர் உட்கார்ந்திருந்தார்.

“”சொல்றேன். அதுக்கு முன்னால சில விஷயங்களை வகைப்படுத்திடுவோம். மினிட்ஸ் நோட்ல மிச்ச விஷயங்களை முதலில் பதிவு செய்ஞ்சுட்டு, கடைசியா இந்த விஷயத்துக்கு வருவோம்” என்றார்.

“”சரி” என்றார் நாயுடு.

அவரவர் கொண்டுவந்த பைகளில் இருந்த வசூல், ரசீதுகள் மற்றும் கணக்குகளை எடுத்து வைத்துக்கொண்டு, மெüனமாய் எண்ணவும், எழுதவும், அடுக்கவும், சரிபார்க்கவும் ஆரம்பித்தார்கள். வரிவிலக்கு நெறிகளின் ஏ, பி, சி, டி, ஈ என்று எல்லா வரிசைப்படி பிரித்து வைத்தார்கள்.

சாரியாரின் மனம் நேற்றைய பெருமழையைப் பற்றின ஞாபகத்தில் நனைய ஆரம்பித்தது.

திடீரென்று கறுக்கும் வானத்தை உணர்ந்த நரசிம்மாச்சாரி நடையை அவசரமாய் எட்டிப்போட்டார். தடுக்கும் வேட்டியின் வலது கீழ் நுனியை வலது கையால் லாகவமாய்ப் பிடித்துக்கொண்டார். ஊசியாய் ஆரம்பித்த மெல்லிய தூறல், தடதடவென்று மழையாய்க் கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் உறைத்தது, குடை எடுத்து வராதது மடத்தனம் என்று.

பஞ்சாங்கத்தில் கர்ப்போட்டம் ஆரம்பம் என்று போட்டிருந்ததும், மழை பெய்யும் என்று மனைவி சொன்னதும் நினைவில் வந்தது. வேகமாய் நடந்தார். இருந்தும் தலை நனைந்துவிட்டது. சட்டை கசகசப்பாகிவிட்டது. எனவே சட்டையோடு ஒட்டி அணைத்திருந்த கைப்பையிலும் ஈரம் தெரிந்தது.

அடடா, உள்ளே இருக்கும் பணமும், ரசீது புத்தகம், பத்திரிகைகள் எல்லாமே, சொதசொதத்துவிட்டால், பட்டபாடெல்லாம் வீண் என்று ஆயாசமானது.

பெரிய தகரகேட் லேசாய் இடுக்குடன் திறந்து கிடந்ததில், மரத்தை ஒட்டின அந்த வாயிலில் உள்ளே நுழைந்தார். ஒற்றை வேப்பமரம் பெரிசாய்ப் படர்ந்திருந்தது. பக்கத்தில் ஆஸ்பெட்டாஸ் ஷீட் ரூம் வாசல். அதன் முன் இருந்த படியின் மேல் ஏறி, சுவரை ஒட்டி நின்று கொண்டார்.

மரத்தின் கீழ் மொத்தமும் தண்ணீர் கொட்டி, மண் தரை சொதசொதத்தது. அங்கங்கே தேங்கியிருந்த நீர்தேக்கங்களில் வான் மேகங்கள் திட்டுத்திட்டாய்க் காட்சியளித்தன.

முதுகுப் பக்கமாய் கைப்பையை மடக்கிவிட்டு நின்றுகொண்டார். முன் பக்கம் மழை நீர் தெறித்துக் கொண்டிருந்தது. சுவரில் அங்கங்கே காறை பெயர்ந்த அந்தப் பழைய சின்னக் கட்டடம் ஒரு பள்ளிக்கூடம் என்று புரிந்தது. மூடிக்கிடக்கும் பள்ளிக்கூடம் என்று தெரியாமல், மழைக்கு அவசரத்தில் ஒதுங்கின பிறகுதான் புரிகிறது தான் மொத்தமாய் சாரலில் தொப்பலாய் நனையப் போகிறோம் என்று.

வெளியே செல்லவும் முடியாது என்று திகைத்த ஒரு கணம், வாசலில், சொட்டச் சொட்ட நனைந்தபடி, சைக்கிளில் ஒரு உருவம் சளசளவென்று உள்ளே நுழைந்தது; அருகே வந்து, ஒரு கால் தரையில் ஊன்றி சைக்கிளை நிறுத்தியது.

துணுக்குற்று அடிவயிற்றில் ஜில்லிட்ட இவரை ஒட்டி நின்று, வந்த ஆள் அறைக்கதவை சட்டென்று திறந்தார்.

இவரைப் பார்த்து, “”உள்ளே வந்து உக்காருங்க” என்றபடி, தன் ஈரச் சட்டையைக் கழற்றி, சுவர் ஆணியில் மாட்டினார். “”செம மழை” என்றபடி, தலையைச் சிலுப்பியபடி, தண்ணீர்த்துளிகளை உதறிக்கொண்டார். மேற்கூரையில் அங்கங்கே ஓட்டைகளிலிருந்து தண்ணீர்த் துளிகள் சொட்டி, கொட்டிக் கொண்டிருந்தன.

பையில் கணத்திருந்த பணத்தைப் பற்றின கனத்த மனதின் பயத்தோடு “எப்படா இந்த மழை நிக்கும்- ஆபத்தில்லாம கிளம்பலாம்’ என்று கலவர மனதை வெளிக்காட்டாமல் நாற்காலி ஓரமாய் உட்கார்ந்திருந்தார்.

கோயில் பணம் பத்திரமா கொண்டு போய்ச் சேர்க்கணும். அடிச்சுப் போட்டா யாருனு கேக்காத இடம், யாருமில்லாத பள்ளிக்கூடத்துக்குள்ள கொட்டற மழைல, யாரோ ஒருத்தனோட கெடக்கோமே என்று ஒருவித பயம் உள்ளூர திக்திக்கென்று சூடாய் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.

அதற்குள் அந்த ஆள், ஈர அறையின் மேஜை மேலிருந்த காகிதங்களையும், ஃபைல்களையும், ஒரு கோணிப்பைக்குள் திணித்து, ஈரம்படாத ஓர் அலமாரி மேல் பத்திரப்படுத்திவிட்டார்.

“”மழை வந்தாலே இதுதான் சார் இங்க பெரிய பிரச்னை” என்றார் இவரைப் பார்த்து.

“இந்த ஆள், இப்படி யாருமில்லாத நேரத்துல கொட்டற மழையில…என்ன நோக்கமாயிருக்கும்? இந்த இதெல்லாம் நனையாம எடுத்து வைக்கிறதுக்காக வந்திருப்பானோ? ஒரு வேளை ஃபாலோ பண்ணியிருப்பானோ? முருகா!’ என்று கந்தசஷ்டி வரிகள் பதறிப் பதறி ஒருமுறை உள்ளோடின.

மெüனமாகவே இருந்த பெரியவரிடமிருந்து பதில் வராததைக் கவனத்தில் கொள்ளாதவராய் அந்த ஆள், உள் அறைக்கு விரைந்தார்.

உள்ளேயிருந்து, “”சார், சார், கொஞ்சம் வாங்க சார்” என்று குரல் கேட்டது.

இவருக்குக் கிளம்பிவிடலாமா என்றிருந்தது. தனிமையில், அதுவும் உள்ளே, உள் அறைக்குப் போகலாமா, வேண்டாமா என்று வயிற்றில் அமிலம் சுரக்க ஒருவிதச் சலனம்.

அதுவும் இந்தக் கோயில் கலெக்ஷன் பையை இங்கேயே வைத்துவிட்டுப் போகலாமா? கூடாதா? என்று இன்னொரு குழப்பம். இந்தப் பையை இப்படிப் பத்திரப்படுத்திக் கொண்டே இருந்தால், இதில் முக்கியமான பணம், நிறைய பணம் என்று கவனத்தை ஈர்ப்பதாய் ஆகிவிடும் என்றும் தோன்றியது.

பையை வைத்துவிட்டு உள்ளே சென்றார். அந்த ஆள் ஸ்டூல் மேல் நின்றபடி, ஒரு கையில் ஒரு புத்தக அடுக்குடன், மறு கையில் கவரைப் பிடித்தபடி, பாலன்ஸ் செய்துகொள்ளத் தடுமாறியபடி நின்று கொண்டிருந்தார்.

“”நல்லவேளை சார் வந்தீங்க” என்றபடி புத்தக அடுக்கை மேலேயிருந்து சற்றே தோள்குனிந்து லாகவமாய் நீட்டினார். தொப்பென்று இரண்டு புத்தகங்கள் கீழே தரைத் தண்ணீரில் விழுந்தன. “”அடடா” என்றபடி, கீழே இறங்கி, மீதிப் புத்தகங்களை பத்திரமாய் வாங்கி, தண்ணீர் பிசுபிசுப்பான மேஜை மேல் ஓரமாய் வைத்தார்.

“”இந்தாங்க, இன்னும் இருக்கு” என்றபடி அடுக்க கட்டுகள் ஆறேழு இறங்கின.

எல்லாவற்றையும் சரசரவென்று கோணிப் பைகளில் கசங்காமல் திணித்து, முன் அறை அலமாரியின் மேலே அடுக்கி ஏற்றினார்.

சற்றே மூச்சு இறைத்தபடி,””ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றார். “”நீங்க இல்லைன்னா கஷ்டப்பட்டிருப்பேன்” என்று லேசான வறட்சி நடுக்கமாய் சொன்னார்.

மழை சற்றே மெலிந்திருந்தது. மழையின் அதிரடிச் சப்தமும் குறைந்திருந்தது, “சரி, தப்பித்துவிடுவோம்’ என்று சாரியாருக்குத் தோன்றியது. “இங்கேயே இப்டி இருக்கணும்னு என்ன கட்டாயம்’ என்று உள்ளூர ஓடியது.

இருவரும் சற்று ஆசுவாசமானார்கள்.

கீழே தண்ணீரில் நனைந்துவிட்ட புத்தகங்களை, “”அடடா, டேமேஜ் ஆயிடுச்சு” என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி, தனிமைப்படுத்தி, “”ஊறிப்போச்சு” என்று முணுமுணுத்து, “”ஒண்ணும் செய்ய முடியாது, ஏற்கெனவே நஞ்சுபோன பழசு” என்று நகர்த்தி வைத்தார்.

வேறு ஒரு அலமாரி மீது, ஒரு கோணிப்பையைப் போட்டு அவற்றை அடுக்கினார். “”இதுமாதிரி இனி எப்போ வாங்க முடியுமோ” என்று முணுமுணுத்தபடி நாற்காலிகளை இழுத்துப்போட்டார்.

தள்ளித்தள்ளி நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். கூரையிலிருந்து சொட்டும் தண்ணீர்த்துளிகள் மேலே படாமல் காத்துக்கொள்வதில் நெருங்கி உட்கார முடியாது.

மழையின் மெல்லிய சப்தத்தை ஊடுருவி, நரசிம்மாச்சாரி தொண்டையின் தடைக்கல்லை விழுங்கி நீக்கிவிட்டு, “”ஏன், வேற யாரும் உதவிக்கு வரலையா” என்றார்.

“”இன்னிக்கு லீவு சார். அதோட மழையும் எதிர்பார்க்காம வந்தது”

“”அப்ப நீங்க மட்டும்”

“”ஆங், என் வீடு பக்கத்து தெருலதான், அதோட எனக்கு இந்த நூலகப் புத்தகங்கள் மேல ஒரு வெறி, ஒரு ஈடுபாடு. அதான் இப்படி ஓடியாருவேன், எப்பவுமே இப்படித்தான்”

“”எ…என்ன…புஸ்தகம் நனையக் கூடாதுன்னா இப்படி சொட்டச் சொட்ட ஓடி வந்தே”

“”ஆமா சார், இதுதானே சார் நமக்கு சரஸ்வதி கோயில், அப்படியும் ரெண்டு புத்தகம் வீணாயிடுச்சு சார், இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டே இருக்கு” என்று குரல் கம்மித் தொண்டையடைத்தது.

“”ப்ச்…” என்றார் சாரி.

“”ஒரு நூலக அறை செட் பண்ணலாமில்லையா, இப்படி அல்லாடாம”

“”என்ன சார் பண்றது…ரூமா..இந்த அலமாரியே என் மோதரத்தை அடகுவச்சு போன மாசம் வாங்கிப் போட்டேன் இந்தப் புத்தகங்களுக்காக. இப்ப அதுல தலைமையாசிரியர் அவசரத்துக்கு ரெக்காட்ஸ் வச்சுருக்காரு. அடுத்த மாசம் பணத்த சாங்ஷன் சரி பண்ணித் தருவாரு. இதுக்கு மேல இந்த ஸ்கூல்ல முடியலை, ஏதோ ஓடிட்ருக்கு” என்றார்.

“”நீங்க”

“”நான் ஒண்ணாம் கிளாஸ் வாத்தியார் புதுசு. அங்கங்கே கலெக்ட் பண்ணினேன். ஏதோ என்னோட தனிப்பட்ட விருப்பம். ஒரு நல்ல நூலகம் அமைச்சு. நல்ல நல்ல புத்தகங்களை வச்சு, இந்தப் பிள்ளைகளுக்கும் வாத்யார்களுக்கும் உபயோகமாக இருக்கும். உத்வேகமா இருக்கும். ஹூம்…பாப்போம்…” என்று சொல்லிக்கொண்டே, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவென்று தேய்த்து உடலை சூடுபடுத்திக்கொண்டார்.

சாரியார் ஏதும் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“”அதனால லீவு நாள்னு எல்லாம் பார்கறதில்லை. காலைலயே மேகம் லேசா கறுப்பாச்சு. நான்தான் கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன். காரணம் அந்த கோயில் வேலை”

“கோயில் வேலை’ என்றதும் நரசிம்மாச்சாரிக்கு ஜில்லென்றது. அட,நம்மள மாதிரியே என்று கண்கள் விரிய, இருவரும் சற்று நெருக்கமானது போல உணர்ந்தார்.

உடனே தமது கோயில் டிரஸ்டி பணிகளைச் சுருக்கமாய் பெருமைபடச் சொன்னார்.

அவர்,””சார், நாங்க பண வசூல், புது சந்ததி, கும்பாபிஷேகம், பிரதிஷ்டை, டைல்ஸ், கிரானைட் இது எல்லாம் செய்யறதில்லை. பழைய உள்ளூர் கோயில்களைப் பராமரிச்சு, சுத்தம் பண்ணி, விடாம பூஜையும், விளக்கெரியவும் ஏற்பாடு செய்யறோம், ஒரு பத்து பேரு, கூட்டா தன்னிச்சையா செய்யறோம்”

“”அப்படியா”

“”உள்ளூர் சாமி, பழம்பெரும் சாமி, கந்தல்துணி கட்டியிருக்கறச்சே, வெளியூர்ல கொண்டுபோய் பணத்த கொட்டுறதுக்கும், புதுசு புதுசா “ஆல் பர்ப்பஸ்’ கோயில்களைக் குடியிருப்பு மாதிரி கட்டறதுக்கும் எங்களுக்கு

மனசு வரலை, உள்ளூர்ல அல்லது பக்கத்துல இருக்கற புராதனக் கோயில சீர் செய்யறதுதான் எங்க ஞாயித்துக்கிழமை வேலை” என்றபடி கழற்றி வைத்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டார். அதோடு கூடவே ஒரு துணிப்பையை எடுத்துக்கொண்டார்.

“”என்ன இது? வேட்டியா? மாத்து வேட்டியா?” என்றார் சாரியார்.

“”இல்லீங்க சார். சாமிக்குப் புதுவேட்டி, தீபாவளி அதுஇதுன்னு வீட்டுல புதுத்துணிமணி எடுத்தா, சாமிக்கும் ஒண்ணு சேர்த்து எடுப்பேன், என் வழக்கம். என் நண்பன் ஒருத்தன் இருக்கான். யாராவது நாதியத்தவங்களுக்குத் துணி எடுப்பான். காலைல சைக்கிள்ல மாட்டினது, மறந்துபோயி, நனைஞ்சு போச்சு” என்றார்.

நரசிம்மாச்சாரிக்கு மழை முடிந்து மின்னலடிப்பது போலிருந்தது.

கமிட்டி, ஆயிரம், லட்சம், ரசீது, ஆடிட், வரிவிலக்கு, நோட்டிஸ், கல்வெட்டு, அது இது என்று அமர்க்களப்படுத்தி புது டைல்ஸ், புது இடம், ப்ளான், அபாட்மென்ட், கமிட்டி கூட்டமாய் கூடி, மெனக்கெடும் விஷயங்களை அதையும் தாண்டி, எவ்வளவு அனாயாசமாக இந்த மனுஷன், ரொம்ப எளிமையான மனுஷன்…

நரசிம்மாச்சாரிக்கு யாரோ எழுப்பிவிட்டதைப் போலிருந்தது.

வீடுகளுக்கு நடுவில் வீடாக சந்நிதிகள், குல தெய்வ, புராதனக் கோயில்களின் கந்தல்கள், ஃபேஷனா, அத்தியாவசியமா…என்று ஏதேதோ மனதில் ஓடின.

மழை நின்றுவிட்டது. வானம் தெளிவாகிவிட்டது.

இனி புராதன நித்ய பூஜை அதைவிட முக்கியம். இந்தக் கந்தல் பள்ளிக்கூடத்தில் ஜம்மென்று அலமாரிகள் வைத்து, நூலகம், இதுதான் முதல் அவசியம். அங்கே நிறைய நல்ல புத்தகங்கள்…சர்ப்ளஸ் கலெக்ஷன். அந்த பெரிய்ய கோயில் நித்ய பூஜைக்கு…

சாரியாரின் முதல் குரல் கமிட்டியில்…

புத்தகம் தோறும் புது ஆலயமாய் சரஸ்வதி பிரதிஷ்டை நிறைவேறியது.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *