கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 20,624 
 
 

தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல் கொசுக்கடியிலும், மூத்திர நாற்றத்திலும் தூங்க வேண்டாம். நாக்கை சாகடிக்கும் உப்பு சப்பில்லாத ஜெயில் சாப்பாட்டை சாப்பிட வேண்டாம். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறான்.

கூட்டணிக் கட்சிமறுநாள் அவனுக்கு விடுதலை என்பதை இன்று சாயங்காலம்தான் வார்டன் வந்து சொல்லிவிட்டுப் போனார். விடுதலை என்ற அந்த ஒற்றைச் சொல் ராமனுக்குள் பலவிதமான எண்ணங்களை எழுப்பி விட்டு விட்டது…

“ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளி உலகத்தைப் பாக்கப் போகிறோம்’னு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம சொந்த பந்தங்கள் முகத்திலே எப்படிப் போய் முழிக்க போறோம்னு கவலை இன்னொரு பக்கம் இருந்தது. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு சமூகத்திலே மரியாதை கிடையாதுங்கிறது அவனுக்கு நல்லாவே தெரியும். இனி ஒரு நாய்கூட தன்னை மதிக்காது. அது கூட பரவாயில்லை தான் தூக்கி வளர்த்த தன் அக்கா மகள் அஞ்சலி. அந்த பிள்ளை முகத்துல எப்படிப் போய் முழிக்க முடியும்? அவ தாலியறுத்து வெள்ளைச் சேல கட்ட நாமதானே காரணம் ஆயிட்டோம். நாம ஜெயிலுக்கு வர்றப்ப அவ எட்டு மாச கர்ப்பிணியா இருந்தா. அவளுக்கு அவ புருஷனையே உரிச்சு வைச்ச மாதிரி ஆம்பிளைப்பிள்ளை பொறந்திருக்குன்னு இவன ஒரு தடவை பாக்க வந்த பக்கத்து வீட்டு ராமசாமி அண்ணாச்சி சொன்னாங்க. இப்ப அந்தப் பையன் வளந்து மீசை அரும்ப ஆரம்பிக்கிற வாலிபனா மாற ஆரம்பிச்சிருப்பான். இப்ப அவன் என்ன பண்ணுதான்னோ? படிக்கிறானோ? படிக்க வசதியில்லாம ஏதாவது பட்டறைக்கு வேலைக்குப் போறானோன்னு தெரியலை என உடம்பு தூங்க நினைத்தாலும் மனசு தூங்காமல் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

ராமனுக்கு தன் தம்பி லெட்சுமணனின் ஞாபகம் வந்தது. ராமனும் லெட்சுமணனும் இரட்டைப் பிள்ளைகள் கிடையாது. ஒரு வருஷம் முன்னே பின்னே பொறந்தவங்க. ஒரு வருஷம் முன்னே பின்னே பொறந்தாலும் இரண்டு பேரையும் பார்த்தா ரெட்டைப்பிள்ளைக மாதிரிதான் இருப்பாக. ஒற்றுமைன்னா அப்படி ஒரு ஒற்றுமை. இரண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூலுக்கு போவார்கள். தம்பிகூடத்தான் சேர்ந்து படிப்பேன்னு ஒரு வருசம் கழிச்சிதான் ராமனும் ஸ்கூல்ல சேந்தான். ஒரே மாதிரிதான் டிரஸ் உடுத்துவார்கள். ஊரே அவர்களது ஒற்றுமையைப் பாத்து ஆச்சரியப்பட்டது.

யாராவது ராமன்கூட சண்டைப் போட்டால் அவர்களுடன் லெட்சுமணனும் பேச மாட்டான். அதே மாதிரிதான் லெட்சுமணனிடம் பேசாத ஆட்களிடம் ராமனும் பேச மாட்டான். அதனால் ஊரில் உள்ளவர்கள்

“”யப்பா… இவங்கள்ல ஒருத்தங்கூட சண்டைப் போட்டால் போதும். அடுத்தவனும் நம்மக் கூடப் பேச மாட்டான். அவ்வளவு ஒற்றுமை” என்று கிண்டல் பண்ணுவார்கள்,

“”ஏலேய்… எங்களுக்கு ஒரு சந்தேகம். இன்னிக்கு இப்படி ஒத்துமையா இருக்கீங்களே. நாளைக்கு உங்க பெண்டாட்டி வந்து உங்களுக்கிடையே சண்டைய மூட்டிவிட்டால் என்ன பண்ணுவீங்கலே?” என்று கேட்டால்,

“”அப்படிப்பட்ட பொண்டாட்டியே வேண்டாம்னு அத்து விட்டுடுவோம்ல…” என்று பட்டென்று பதில் சொல்வார்கள். இவர்களைச் சீண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் சிலர்,

“”ஏலேய்… இதைவிட நல்ல யோசனை எங்களுக்கு தோணுது. பேசாம ரெண்டு பேரும் ஒரே பொண்ணைக் கட்டிக்கோங்க. அப்பதான் உங்க ரெண்டு பேருக்கும் இடையிலே சண்டையை மூட்ட மாட்டாங்க” என்று நக்கலாக சொல்ல, உடன் இவர்களும் சளைக்காமல்,

“”ஏன் பண்ணினா என்ன தப்பு? மகாபாரதத்திலே பாஞ்சாலியை ஐஞ்சு பேர் கல்யாணம் குடும்பம் நடத்தலையா? அதே மாதிரி நாங்களும் பண்ணிக்கிறோம்” என்று கிண்டல் பண்ணியவர்கள் வாயை அடைத்து விடுவார்கள்.

ஒரே வகுப்பில் படித்தாலும், ஒன்று போல் உடை உடுத்தினாலும் இருவரின் ரசனையும் வேறு வேறாக இருந்தது. ராமனுக்கு சினிமாவின் மேல் மோகம் வந்தது. லெட்சுமணனுக்கு இலக்கியத்தின் மீது காதல் வந்தது.

ராமனுக்கு சினிமாவில் உள்ள மோகம், சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விக்னேஷ்வரன் மீது திரும்பியது. விக்னேஷ்வரன் படம் என்றால் ராமனுக்கு சோறு தண்ணீர் வேண்டாம். முதலில் வெறும் ரசிகனாக இருந்த ராமன், அந்த ஊரின் ரசிகர் மன்றத் தலைவராகவும் மாறினான். விக்னேஷ்வர் படம் ரிலீசாகப் போகிறது என்றால், பத்து நாட்கள் முன்பே ராமன் பிஸியாக மாறிவிடுவான். முதல் ஷோவுக்கு யார் யாருக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பது, எங்கெல்லாம் கட் அவுட் வைப்பது, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுவது. விக்னேஷ்வரன் திரையில் தோன்றும் போது பூக்களை அவன் மீது போட ஏற்பாடு பண்ணுவது, கற்பூர ஆரத்தி காட்டுவது போன்ற வேலைகளைச் செய்வான். விக்னேஷ்வரனின் பிறந்த நாள் என்றால், அன்று ஸ்வீட் வாங்கி விநியோகம் பண்ணுவது, கோயிலில் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம் பண்ணுதல், அன்னதானம் பண்ணுவது என பல வேண்டுதல்களை நிறைவேற்றுவான். விக்னேஷ்வர் மீது உள்ள பிரியத்தின் முன் தனது தம்பிகூட அவனுக்கு இரண்டாம்பட்சமாக போய்விட்டான். விக்னேஷ்வர் அரசியல் கட்சி ஆரம்பித்த பொழுது, முதல் தொண்டனாகத் தன்னைப் பதிவு செய்துக் கொண்டான்.

ராமன் சினிமா மீது கொண்ட மோகத்தின் காரணமாக விக்னேஷ்வரன் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தான் என்றால், லெட்சுமணன் இலக்கியத்தின் மீது எற்பட்ட காதலின் காரணமாக தனது வாழ்க்கையின் திசையை மாற்றிக் கொண்டு இருந்தான். எல்லாருடைய எழுத்தையும் வாசித்தாலும், எழுத்தாளர் ஈஸ்வரமூர்த்தி மீது அவனுக்கு அளவிட முடியாத ஈர்ப்பு வந்து விட்டது. அவருடைய எழுத்தை வாசித்தான் என்று சொல்வதை விட அதைச் சுவாசித்தான் என்று சொல்வதே நியாயமாகும். தமிழ் வார்த்தைகளை அவர் கையாண்ட அளவிற்கு வேறு யாரும் கையாண்டிருக்க முடியாது என்பது அவன் கருத்து. மேகத்தை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் அது ஒவ்வொருவிதமாகக் காட்சியளிக்கும். ஆனால் எல்லாமே ரசிக்கக் கூடியதாக இருக்கும். அப்படித்தான் அவர் எழுத்தைப் படிக்கும் போது ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமாகத் தோன்றியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அவனைக் கவர்ந்தது. அவர் மீது உள்ள ஈடுபாடு அவர் கட்சியிலும் வந்தது. எனவே அவருடைய கட்சியில் லெட்சுமணன் சேர்ந்து விட்டான்.

இதுவரை இராமாயண ராமர் லெட்சுமணர் மாதிரி இருந்த அவர்கள், தற்போது மகாபாரத பாண்டவர், கெüரவர்கள் மாதிரி ஒருவரை ஒருவர் விரோதியாக நினைத்து விரோதம் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு காரணம், அவர்கள் சேர்ந்திருந்த கட்சித் தலைவர்கள் எதிர் எதிர் அணியில் இருந்ததுதான்.

இருவரும் தங்கள் சார்ந்திருக்கும் கட்சியே பெரிது தலைவரே பெரிது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவர்கள் இருவரும் சண்டைப்போடுவதைப் பார்த்த அவனது அப்பா ஒரு தடவை, “”ஏன்டா நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒற்றுமையா இருந்தீங்க.. இப்ப எதுக்காகடா எவனுக்காகவோ நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிகிடுதீங்க?” என்று சொன்ன பொழுது, அதில் மட்டும் ஒற்றுமையாக தங்கள் தலைவருக்காக அப்பாவிடம் சண்டைக்குப் போனார்கள்.

“”இதப்பாருப்பா நீ எங்களை பெத்தாலும், நாங்க உனக்கு உரிமையானவங்க கிடையாது. எங்க உடல் உயிர் எல்லாம் எங்க தலைவருக்குதான் சொந்தம். அவர் உயிரோடு இருன்னா இருப்போம். இப்பவே கட்சிக்காக உயிரை விடுன்னா சந்தோஷமா அடுத்த நிமிஷமே எங்க உயிரை விட்டுருவோம். ஏன்னா எங்களுக்கு எல்லாமே எங்க தலைவர்தான்” என்று சொல்ல,

“”ஏன்டா உங்களை பெத்து வளத்த எங்களுக்கில்லாத உரிமையாடா மத்தவங்களுக்கு?” என்று அவர் விடாப்பிடியா கேட்க,

“”இதப்பாருப்பா… பழத்தைக் கொடுக்கிற மரம், பழத்தை அதுவா சாப்பிடுது? பழம் மரத்துக்கா சொந்தம்? மத்தவங்களுக்குதான் சொந்தம். கடல் இருக்கிற மீனுல ஆரம்பிச்சி மாட்டுல கறக்கிற பால்வரைக்கும் மத்தவங்களுக்குதான் பயன்படுது. அதுமாதிரிதான் நாங்களும்… நாங்கல்லாம் எங்க தலைவருக்காவே பொறந்தவங்க. நாளைக்கு சரித்திரம் படைக்க போறவங்க.” என்று கோரஸôக சொல்லி அப்பாவின் வாயை அடைத்து விட்டார்கள்.

கட்டிடத்தின் சிறிய பிளவில் கடுகு போன்று விழும் சிறிய அரச மர விதை, பிறகு கொஞ்ச கொஞ்சமாய் வளர்ந்து பெரிய கல் கட்டிடம் கூட இடிந்து விழுகிற அளவிற்கு வளர்ந்து விடுமே, அதே போன்று இருவர் மனதிலும் சிறியதாக தோன்றிய விரிசல், நாளைடைவில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க விரும்பாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

இருவரும் அவரவர் கட்சித் தலைவர்களை அழைத்து பிரம்மாண்டமாக தங்கள் கல்யாணத்தைப் பண்ணினார்கள். ஊரையே அழைத்து விருந்து கொடுத்த அவர்களுக்கு, உடன் பிறந்தவனை அழைக்க மட்டும் மனசு வரவில்லை. ஒரே பெண்ணையே இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என்று சொன்னவர்கள், ஒருவர் கல்யாணத்திற்கு ஒருவர் போகவில்லை. இதைவிடக் கொடுமை தம்பி லெட்சுமணன் வீட்டில் இருந்தபோது அவர்களது தந்தை அம்மாசி இறந்துப் போக, தனது தலைவனை மதிக்காத வீட்டிற்கு தான் போவதா? என்று நினைத்த ராமன், தனது தந்தையின் முகத்தை இறுதியாக பார்க்கக் கூட போகவில்லை. ஊரில் இருந்தால் தந்தைக்கு கொள்ளி வைக்கவாவது தன்னை ஊர்க்கார்கள் அழைத்தால் என்ன பண்ணுவது? தனது தலைவனை மதிக்காத தனது தம்பி வீட்டிற்கு போக வேண்டியதிருக்குமே என நினைத்த ராமன் தந்தை இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், முதல் வேலையாகத் தனது பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பக்கத்து ஊருக்குப் போய்விட்டான். ராமன் போட வேண்டிய கொள்ளியை லெட்சுமணன்தான் போட்டான். லெட்சுமணனுக்கு தன் அண்ணன் எங்கேயிருக்கிறான் என்று அக்கம் பக்கத்தார் சொல்லத் தெரிந்து கொண்டாலும் அவனைப் போய் கூப்பிட மனது வரவில்லை. அந்த அளவிற்கு இரண்டு பேரின் மனதிலும் தலைவர்கள் குடியிருந்தார்கள்.

இவர்களது ஒற்றுமையைப் பார்த்து சந்தோஷப்பட்ட ஊர்க்காரர்களே தற்போது கவலைப்படவும் ஆரம்பித்தார்கள். ஊரில் நல்ல உள்ளங்கள் கவலைப்பட்டாலும், இருவருக்கும் இடையில் உள்ள சண்டையை ஊதிப் பெரிதாக்கி அதில் குளிர் காய நினைத்தவர்களும் இருக்கவே செய்தார்கள்.

எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றியதைப் போல இவர்களுக்கு இடையே உள்ள பகையை பற்றி எரிய வைக்கும் வகையில் தேர்தல் வந்தது. இரண்டு பேரும் தங்கள் கட்சி சார்பாக அனல் கக்க ஊரில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.

“இது எங்கு போய் முடியுமோ?’ என்று அவர்களின் அம்மா செண்பகம் ரொம்பவும் கவலைப்பட ஆரம்பித்தாள். “”தாயே மாரியம்மா.. இந்த வருஷம் ஆடிக்கு கூழ்காச்சி ஊத்துறேன். எங்க பிள்ளைக ரெண்டு பேரும் பழையபடி ஒற்றுமையாக இருக்கணும்மா” என்று ஒவ்வொரு நாளும் ஊரின் எல்லையில் இருக்கும் மாரியம்மாவை வேண்டிக் கொண்டாள்.

இருவருக்கும் இடையில் கொம்பு சீவி விடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது.

“”அண்ணே ராமண்ணே நேத்து ராத்திரி காரமா கோழிக்குழம்பு சாப்பிட்டதால் வயிறு சரியல்லைன்னு கம்மாங்கரை பக்கமா முள்ளுக்காட்டுல ஒதுங்கினப்ப, நான் இருக்கிறத கவனிக்காம, உங்க தம்பி லெட்சுமணன் அவங்க தலைவருகிட்டே போனிலே பேசிக்கிட்டு இருந்தாருன்னே. என்ன பேசினாரு தெரியமான்னே…” என்று கொம்பு சீவும் கூட்டத்தைச் சேர்ந்த முனியப்பன் மெதுவாக தனது வேலையை தொடங்கினான். இரண்டு ஆடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு அவை சண்டை போடும் போது ஏற்படும் காயத்தின் விளைவாக கொட்டும் இரத்தத்தைச் சுவைக்கக் காத்திருக்கும் நரி போல, முனியப்பன் காத்திருந்தான். “இந்த ஊருல இவுக அண்ணன் தம்பி ரெண்டு பேரும்தான் அவுக அவுக கட்சியிலே செல்வாக்கா இருக்காங்க. இவுகள ஒழிச்சு காட்டுனாதான் நாம முன்னேற முடியும்’ என்று நினைத்து, இருவருக்கும் இடையில் உள்ள பகையை இன்னும் பெரிதாக்க தன்னால் ஆன முயற்சியை செய்து கொண்டு இருந்தான். முனியப்பன் பாதி சொல்லி விட்டு ராமனின் முகத்தைப் பார்த்தான். முழுசும் சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காதே.

“”என்ன பேசினான்னு சொன்னாதானே தெரியும்? நானென்ன முனிவரா? இல்லை ரிஷியா? எல்லாத்தையம் ஞான திருஷ்டியில் தெரிஞ்சுக்க.. வெண்டக்காயை வெளக்கெண்ணையிலே வதக்கின மாதிரி வளவள கொழகொழன்னு பேசாமே சொல்ல வந்ததை நேரிடையாக சொல்”’என்று எரிந்து விழுந்தான்.

“”நாம இந்த எலெக்சன்ல கண்டிப்பா ஜெயிச்சிடுவோம். நாம ஜெயிக்க தடையா யாரு இருந்தாலும் அவங்கள நான் சும்மா விடமாட்டேன். அது எங்க அண்ணனா இருந்தாலும் சரி, எங்க ஆத்தாவா இருந்தாலும் சரி. அவங்க உயிர் போனாதான் நாம ஜெயிக்க முடியுன்னா அவங்க உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு தான் சொல்வதைக் கேட்டு அவனது முகத்தில் ஏதாவது மாறுதல் தென்படுகிறதா என்பதை கவனித்தவன், அவனது முகத்தில் கோபம் உலையில் கொதிக்கும் தண்ணீரைப் போல கொதிப்பதைக் கண்டு தனது பேச்சைத் தொடர்ந்தான்.

“”அண்ணே அவர் ஜெயிக்கிறதுக்காக உங்க உயிரை எடுக்கக்கூட தயங்க மாட்டேன்னு சொல்றாருண்ணே… எம் மனசு கேக்காமத்தான் உடனே உங்க கிட்ட சொல்ல ஓடியாந்தேன். எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கண்ணே. உங்களுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது என்ற எண்ணத்திலேதான் இத மெனக்கிட்டு வந்து உங்க கிட்டே சொல்றேண்ணேன்” என்று தான் வந்த வேலை முடிந்தது என்பது போல சொல்ல வந்ததை சொல்லிவிட்டு வந்தவன் மெதுவாக நகர்ந்தான். அவன் போனாலும், கொளுத்திவிட்டு போன தீ நன்கு கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

அதே முனியப்பன் லெட்சுமணனிடம் போய் வேறு விதமாக போட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்க, அவன் தனது அண்ணனைப் பார்த்து இன்று ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும் என்று கிளம்பி விட்டான். லெட்சுமணன் கிளம்புவதை முன்னாடியே ராமனிடம் தெரிவிக்க ஓடி வந்தான்.

“”அண்ணே உங்க தம்பி லெட்சுமணன் கோபமா வந்து கொண்டிருக்கிறார். நேத்து அவங்க தலைவருட்ட சொன்ன மாதிரி உங்களை கொன்னாலும், கொன்னுடுவார். சீக்கிரம் எங்கேயாவது போய் ஒளிந்துக்கோங்கண்ணா” என்று ராமனிடம் சொல்ல,

“”நான் குடிச்ச எச்சிப் பாலைக் குடிச்சி வளந்தவன் அவன். அவனைப் பாத்து நான் ஒளியணுமா…. வரட்டும் அவன். நானா… அவனான்னு பாத்துக்கலாம்” என்று உருமிக் கொண்டிருக்கும் போதே லெட்சுமணன் அங்கே வந்து விட்டான். அப்பொழுது லெட்சுமணனின் கழுத்தில் ஏதோ குறுகுறுவென்று ஊர… என்னவாக இருக்கும் என அவன் கழுத்தை தடவப் போக அதை பார்த்த ராமன் தன்னை வெட்டதான் தனது தம்பி அரிவாளை எடுக்கிறான் என தப்புக்கணக்குப் போட்டு, அவனுக்கு முன் நாம் முந்திக்கிடணும் என தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து தம்பியை நோக்கி வீச, இதை எதிர்ப்பார்க்காத லெட்சுமணன் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து வெட்டுகள் விழ, லெட்சுமணன் துடிதுடித்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டான்.

பிறகு போலீஸ் கேஸôகி கொலை ஆத்திரத்தில், திட்டமிடாமல் நடந்ததாலும், கொலைகாரனின் வயதினையும் கருத்தில் கொண்டும் அவனுக்குத் தூக்கு தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகளில் நன்னடத்தை காரணமாக ஐந்து வருடம் குறைந்து பதினைந்து வருடம் ஜெயில் வாசம் முடிந்து நாளை வெளியே வரப் போகிறான்.

இதையெல்லாம் தனது மனதில் ஓடிய திரையில் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது, பொழுது விடிய ஆரம்பித்தது. இதுவரை தனது முகத்தை தானே பார்க்க விரும்பாமல் இருந்த ராமன், தொட்டித் தண்ணீரில் தெரிந்த தனது முகத்தைப் பார்த்தான். காலம் அவனது இளமையை தின்று விட்டிருந்தது. தனது தலைவன் விக்னேஷ்வரன் தனது அழகைப் பேண வாரத்தில் இரண்டு நாள் எண்ணெய் தேய்து குளிப்பதாகவும், தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை உடல் முழுவதும் பூசிக்கொள்வதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்ததில் இருந்து ராமனும் அதைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தான். அதனால் ராமனின் முடியும், முகமும் பளபளவென இருக்கும். அப்படி இருந்த முகம் ஜெயில் வாழ்க்கையின் விளைவால் வறண்டு, பொலிவை இழந்து சொரசொரப்பாக மாறிவிட்டது. தலைமுடியோ சூப்பி போட்ட பனங்கொட்டை மாதிரி திரியாக திரியாக இருந்தது.

தனது மகனை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று அவனும் அவனது மனைவியும் கனவு கண்டுக் கொண்டு இருந்தார்கள். தனது அவசரப் புத்தியினால் இன்று எல்லாவற்றிலும் மண்ணை அள்ளிப் போட்டாச்சு. இப்ப அந்த ஊரில் தனது மகனுக்கு இருக்கும் பெயர் கொலைக்காரன் மகன் . தான் எந்த தலைவனுக்காக தனது சொந்த தம்பியை வெட்டி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு வந்தோமோ அந்த தலைவர் ஒரு தடவைக்கூட தன்னை எட்டிப் பார்க்கவில்லை என்ற உண்மை நெருப்பாக நெஞ்சை சுட்டது.

ஜெயிலில் இருந்து அவனை ரிலீஸ் பண்ணுவதற்கு முன் அங்கு அவன் வேலை பார்த்ததற்கான கூலித்தொகையையும் அவனிடம் கொடுத்து,

“”இனியாவது கட்சி, தலைவருன்னு இருக்காம குடும்பத்தை கவனிக்கிற வழியைப் பாரு” என்று அவனுக்கு உபதேசம் பண்ணின வார்டனிடம் “”சரி” என்பது போல தலையாட்டி விட்டு வெளியே வந்தான்.

முகத்தில் வந்து மோதிய காற்றை சுதந்திர உணர்வுடன் அனுபவித்தான். இதே காற்றுதான் உள்ளேயும் வீசுகிறது. ஆனால் அங்கு இல்லாத குளுமை இங்கு இருப்பதாக தோன்றியது. ஊர் நிறைய மாறியிருப்பதாக தோன்றியது. ஓட்டு வீடுகள் எல்லாம் டெரஸ் கட்டிடங்களாக மாறியிருந்தன. அதுவும் பளீரென்ற வர்ணத்தில் மின்னியது. குண்டும் குழியுமாக இருந்த ரோடுகள் எல்லாம் பளபளவென்று நால்வழிச்சாலையாக மாறியிருந்தது. முன்பு ரோட்டில் கார் அவ்வளவாகப் போகாது. ஆனால் இப்போது ஒரு நிமிஷத்தில் ஏகப்பட்ட கார் அவனைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது. தாவணி அணிந்த பெண்களைப் பார்க்கவே முடியவில்லை. எல்லாம் சுடிதார், ஜீன்ஸ்னு போட்டுக்கொண்டு போகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலேயும் கொம்பு மாதிரி நீட்டிக்கொண்டு இருந்த டி.வி.ஆண்டனா எல்லாம் காணாமல் போய்விட்டது. என்னதான் மாறினாலும், அங்கங்கே இருக்கும் டீக்கடைகளும், அங்கே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு நாட்டு நடப்பை பேசுகிற மக்களும் மாறவேயில்லை. தானும் ஒரு டீக்கடையில் போயி சூடாக ஒரு டீ சாப்பிட்டுவிட்டு நம் ஊருக்கு எந்தப் பக்கம் போய் பஸ் ஏறணும்கிற விவரத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்று டீக்கடையை நோக்கி நடந்தான்.

டீக்கடையை நெருங்கியதும் அவனது கண்ணில் பட்டது அன்றைய தினசரிகளுக்கான டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த போஸ்டர்தான். அதில் இந்தத் தேர்தலில் புதிய கூட்டணி. விக்னேஷ்வரனும், ஈஸ்வரமூர்த்தியும் கைகோர்க்கிறார்கள் என்பதை தலைப்பு செய்தியாகப் போட்டு, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி சிரித்துக் கொண்டிருந்த படத்தையும் போட்டிருந்தார்கள். படத்தில் அவர்கள் அணைத்தபடி சிரித்துக் கொண்டிருக்க, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இவர்களுக்காகத் தான் வெட்டிக் கொலை செய்த தன் தம்பியை நினைத்து முதன்முறையாக அழ ஆரம்பித்தான் ராமன்.

– எஸ்.செல்வசுந்தரி (நவம்பர் 2013)

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “கூட்டணிக் கட்சி

  1. சுய புத்தியில்லாமல், எவனையாவது `தலைவன்’ என்று பின்தொடரும் மக்கள்தாம் இப்போது அதிகம். இவர்கள் எப்படித் திருந்துவார்களோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *