குறுநில மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 10,505 
 
 

வராந்தா முழுவதும் விரக்தியான முகங்கள். “மக்கள் குறை தீர்க்கும் நாள்” வெள்ளை நிறப் பின்னணியில் நீலவர்ண எழுத்துக்களோடு பேனர் காற்றில் நெளிந்தது. எல்லோருமே கலெக்டரிடம் கொடுப்பதற்காகக் கையில் மனு வைத்திருந்தார்கள்.

‘……உயர்திரு கலெக்டர் சமூகம் அவர்களுக்கு, எனது கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டுப் பல நாட்களாகத் துன்புறுத்தி வருகிறார்கள்….’

‘…..அய்யா, நான் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண். உடல்நலமில்லாத எனது தாயாரையும், ஊனமுற்ற தங்கையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். அரசாங்கத்திடமிருந்து ஒரு தையல் இயந்திரம் பெற்றுத் தந்தால்…’

‘…..அய்யா, நான் வசிக்கும் அம்பேத்கர் நகர்ப் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் எனது குடிசை முழுவதுமாய் எரிந்து நாசமாகி விட்டது. வீடிழந்து குடும்பத்துடன் தெருவில் நிற்கும் எனக்கு கலெக்டர் அய்யா அவர்கள் ஆவன செய்யுமாறு…’

அந்தக் கும்பலில் சற்றே தேஜஸாய்த் தெரிந்தார் சண்முகசுந்தரம். வயது அறுபத் தைந்து. அதிகாலை யோகாப்பியாசம், பத்து வருடங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அவரை ஐம்பத்தைந்து வயதுக்காரர்போலக் காட்டியது. சூரியனில் முக்கி சாயம்போட்டது மாதிர் பளீர் என்று கதர் சட்டையும், வேட்டி யும் அணிந்திருந்தார்.

“சண்முகசுந்தரம்… சண்முகசுந்தரம்…”

பியூன் சப்தமிட்டதும் அவசரமாய் எழுந்தார். கதவை நெருங்குவதற்குள் இன்னொரு முறை இரைந்தான்.

“வேகமா உள்ளேபோய்யா. கலெக்டர் முந்நூறு பேரைப் பார்த்து முடிக்கணும்…”

சண்முகத்துக்குள் சுருக்கென்று கோபம் ஜனித்தது. அதைக் காட்ட அவகாசமில்லாமல் கலெக்டரின் அறைக்குள் நுழைந்தார்.

கைகூப்பியவரை ஏற இறங்கப் பார்த்த இளம்வயது கலெக்டர், “ம், சொல்லுங்க,” என்றார்.

“எம் பேர் சண்முகசுந்தரம். சுதந்தரப்போராட்டத்தில் தீவிரமா ஈடுபட்டவன். தண்டி யாத்திரை, க்விட் இண்டியா மூவ்மென்ட் எல்லாத்திலும் முன்னுக்கு நின்னு வேலை செஞ் சிருக்கேன். காந்திஜியோட அதிதீவிரமான ஃபாலோயர். எனக்குள்ள இளரத்தம் ஓடினப்ப வெள்ளைக்காரனைப் பார்த்துக் கொதிச்சுக் கொதிச்சுபோராட்டாத்தில் குதிச்சேன். என்னைப்போல லட்சம் பேர். அதுக்குப் பலனா சுதந்தரம் கிடைச்சது. ஆனா, இன்னமும் ரத்தம் கொதிக்கறது மட்டும் நிக்கலை. பாம்பு வாயிலிருந்து மீட்டு முதலை வாயில் கொடுத்த கதைதான் நடந்திருக்கு.”

கலெக்டர் அவரை அசுவாரஸ்யமாய்ப் பார்த்தார். “என்ன பிரச்னை? தியாகிகள் பென்ஷன் சரியா கிடைக்கிறதில்லையா?”

“தியாகிகள் பென்ஷன் வேண்டாம்னு எழுதிக் கொடுத் துட்டேன். சின்னதா கதர்க்கடை வெச்சிருக்கேன். என்னோட செலவுகளைத் தாக்குப் பிடிக்கற அளவுக்கு வருமானம் இருக்கு. முடியாதவங்களுக்குப்போய்ச் சேரட்டுமேன்னு எழுதிக் கொடுத் திட்டேன்.”

“உங்களோட குறை என்ன? அதைச் சொல்லுங்க.”

“தனிப்பட்ட முறையில் எனக்குள்ள குறைகளைத் தீர்த்து வையுங்கன்னு கேட்டு நான் வரலை கலெக்டர் ஸார். ஒரு பொதுப் பிரச்னையை உங்க முன்னால எடுத்து வைக்க வந்திருக்கேன்.”

“பீடிகை எதுவும்போட வேண்டாம். நேரடியா விஷயத் துக்கு வாங்க. வெளியே உங்களைப்போல இன்னும் எத்தனையோ பேர் காத்திருக்காங்க.”

ஒரு வறண்ட புன்னகையோடு சொன்னார் சண்முகசுந்தரம். “நான் அந்த ஏழை ஜனங்ககிட்டே பேசிப் பார்த்தேன். தனிப்பட்ட முறையில் எல்லார்க்கும் வேற வேற பிரச்னைகள்போல தோணி னாலும் அடிப்படையில் அத்தனை பேருக்கும் ஒரே பிரச்னைதான் கலெக்டர் ஸார். தினமும் குடிச்சிட்டு வந்த புருஷன் கொடுமைப் படுத்தறான்… குடிபோதையில சிம்னி விளக்கைத் தட்டிவிட்டு ஒரு குடிசைப்பகுதி முழுவதுமே எரிஞ்சு நாசமாயிடுச்சு… குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியவன் குடிச்சுக் குடிச்சு குடல் வெந்து அல் பாயுசில் கண்ணை மூடிட்டான். அவனோட பதினாறு வயசுப் பொண்ணு குடும்ப பாரத்தைத் தோளில் சுமந்துக்கிட்டு கவர்மென்ட் தையல் மெஷின் தருமான்னு எதிர்பார்த்து நிக்குது… சுதந்தரம் கிடைச்சதும் அரசியல்வாதிகள் செஞ்ச சாதனை, காந்திஜியோட கொள்கைகளை முடிஞ்சளவுக்கு காத்தில் பறக்க விட்டதுதான். யோசிச்சுப் பாருங்க. தெருவுக்குத் தெரு திறந்து விட்டிருக்கற மதுக் கடைகள் மட்டும் இல்லைன்னா உங்க அறைக்கு வெளியே நிக்கற கும்பலில் பாதிப் பேர் இங்கிருக்க மாட்டாங்க.”

கலெக்டர், சண்முகசுந்தரத்தை அலட்சியமாய்ப் பார்த்தபடி வாக்கியங்களை அடுக்கினார். “பெரியவரே, நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இப்போ ஜனத் தொகை மிதமிஞ்சிப்போச்சு. அரசாங் கத்தில் செலவு கட்டுக்கடங்காமப்போயிட்டிருக்கு. கவர்மென்ட் டுக்குப் பெரிய வருமானமே மதுக்கடைகள் மூலமாத்தான் வருது. இதையெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. மதுக்கடைகள் மூடற துங்கறது இன்னிக்கு தேதியில் சாத்தியமில்லாத விஷயம். உங்களுக்குச் சொந்தப் பிரச்னை ஏதாவது இருந்தாச் சொல்லுங்க. முடிஞ்சாத் தீர்த்து வெக்கறேன். இதுக்காகவெல்லாம் வேலை மெனக்கெட்டு வராதீங்க. உங்க நேரமும் வேஸ்ட், என் நேரமும் வேஸ்ட். கதர்க்கடைல வியாபாரத்தைக் கவனிச்சிங்கன்னா நாலு காசு கைக்கு வரும்.”

சண்முகசுந்தரம் ஆழமான பார்வையில் அவரை வாங்கிக் கொண்டு சொன்னார்.

“பிரச்னையை நான் இன்னும் சொல்லவே இல்லை. நீங்களா அனுமானிச்சிட்டுப் பேசினா எப்படி? தொழில்துறை மூலமா வருமானத்தைப் பெருக்கத் தெரியாத உதவாக்கரை அரசாங்கங்கள் சாராயக் கடைகளை ஒரு நாளும் மூடப்போறதில்லைன்னு எனக்குத் தெரியாதா? தவிர உங்களோட அதிகார வரம்பு என்னன்னும் எனக்குத் தெரியும். உங்க வரம்புக்கு உட்பட்ட ஒரு கோரிக்கையோட வந்திருக்கேன்.”

“என்ன கோரிக்கை?”

“மார்க்கெட் ரோட்டில்போன வாரம் டி.எஸ்.பி. தலைமையில் கோலாகலமா திறந்து வெச்சாங்களே ‘பவுன் ஒயின்ஸ்’ங்கற மதுக்கடை! அந்தக் கடையை உடனடியா மூடறதுக்கு நீங்க உத்தரவுபோடணும்.”

“ஏன்?”

“காந்தி சிலைக்கு நேர் எதிரே அந்தக் கடையைத் திறந்திருக்காங்க. காந்திஜி முன்னிலையில்தான் அமோகமா வியாபாரம். அத்தனை குடிகாரன்களும் மூக்கு முட்டக் குடிச்சிட்டு, அந்த தேசப் பிதாவின் காலடியில்தான் விழுந்து புரள்றாங்க. மகாத்மாவுக்கு இதைவிடப் பெரிய அவமானம் ஏதாவது இருக்க முடியுமா கலெக்டர் ஸார்?”

கலெக்டர் திகைப்பில் உறைந்துபோய் உட்கார்ந்திருக்க, சண்முகசுந்தரம் தொடர்ந்தார்.

“சிலை வெக்கறதோடவும், வருஷம் ஒரு முறை மாலைபோடறதோடவும் கடமை முடிஞ்சதா? அதைப் பாதுகாக்கிற பொறுப்பு நமக்கில்லையா? ஒரு தேசத் தலைவருக்கு சிலை வெச்சு மரியாதை செய்யலைன்னாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவமரியாதை செய்யாம இருக்கக் கூடாதா?”

இன்டர்காமில் பி.ஏ,வைக் கூப்பிட்டார் கலெக்டர்.

கலெக்டர் கேட்டார். “மார்க்கெட் ரோட்டில் உள்ள பவுன்ஸ் ஒயின்ஸ் யாரோடது?”

“அருள்மொழியோடது ஸார்.”

சில விநாடிகளை யோசனைக்குக் கொடுத்த கலெக்டர் சண்முகசுந்தரத்தை ஏறிட்டார். “மனுவைத் தந்துவிட்டுப்போங்க. நான் இந்தப் பிரச்னையைக் கவனிக்கறேன். மிச்ச விவரங்களை பி.ஏ. உங்ககிட்டே பேசுவார்.” பி.ஏ.விடம் திரும்பிச் சொன்னார்.

“பெரியவர்கிட்ட நீங்க விளக்கமா பேசிடுங்க.”

பி.ஏ. தலையாட்டி விட்டு சண்முகசுந்தரத்தை கூட்டிக் கொண்டு சென்றார். தன்னுடைய இருக்கைக்கு எதிரே அவரை அமர வைத்தவர், பால்பாயிண்ட் பேனாவினால் காதைக் குடைந்து கொண்டே சொன்னார்.

“பெரியவரே உங்க கோபம் என்னவோ நியாயமானதுதான். ஆனா இந்தப் பிரச்னையை இத்தோட மறந்துடுங்க,”

திடுக்கிட்டு நிமிர்ந்தார் சண்முகம்.

“கவனிக்கறேன்னு கலெக்டர் சொல்றார் நீங்க இப்படிச் சொல்றீங்களே?”

“உங்க கோரிக்கையைப் பரிசீலிச்சாலே அவரைத் தண்ணி யில்லாக் காட்டுக்குத் தூக்கி அடிச்சிடுவாங்க. கலெக்டர் அவரோட பதவியைக் காப்பாத்திக்க வேண்டாமா? விஷயம் புரியாம ரொம்ப அப்பாவியா வந்து இப்படி ஒரு கோரிக்கையை வெச்சிருக்கீங்க. உங்க மேல கலெக்டருக்கு இரக்கம் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் உங்ககிட்ட பேசச் சொன்னார்.”

“புரியும்படியா ஏதாவது சொல்லுங்க. வேண்டாத இடத்தில் இருக்கும் ஒரு மதுக்கடையை மூடறதுக்குக் கூட கலெக்டருக்கு அதி காரம் இல்லையா?”

“நிலைமை தெரியாம பேசாதீங்க. அருள்மொழி ஆளுங் கட்சியில் பெரிய புள்ளி. ஸ்டேட் பூராவும் பத்துப் பதினைஞ்சு ஒயின் ஷாப் அவர் கையில் இருக்கு. கட்சிக்கு நிதியை அள்ளி அள்ளி வீசக்கூடிய ஆள். கட்சியை நம்பி அவர் இல்லை. அவரை நம்பி கட்சி இருக்கு. அப்பேர்ப்பட்ட ஆளோட கடையை அப்புறப்படுத்தணும்னு கனவு காணாதீங்க.”

சண்முகசுந்தரம் கோபமானார்.

“ஆளுங்கட்சிக்காரன்னா கொம்பா முளைச்சிருக்கு? என்ன வேணா அராஜகம் செய்யலாமா? முறைப்படி கலெக்டர்கிட்டே மனு தந்திருக்கேன். நீங்க நடவடிக்கை எடுக்கலைன்னா கோர்ட் டுக்குப்போவேன்.”

பி.ஏ. சிரித்தார். “கோர்ட்டுங்கறது ஜட்ஜ்தானே பெரியவரே! நாலு ஜட்ஜ் நல்லவங்களா இருந்தா இரண்டு பேராவது விலைபோறவங்களா இருக்காங்க. ஆளுங்கட்சிக்கு எதிரா தீர்ப்பு சொல்லக் கூடிய தைரியம் பலபேருக்கு இல்லை. அருள்மொழி ஆளுங்கட் சியில சாதாரண ஆள் இல்லை. வீண் வம்பை விலைக்கு வாங்கா தீங்க. கலெக்டர் ஸார் நல்லவர்தான். எத்தனையோ ஏழை ஜனங் களுக்கு அவரால முடிஞ்ச உதவிகளைச் செய்யறார். நீங்க கேக்கற கோரிக்கையை நிறைவேத்தணும்ன்னு மனசார அவர் விரும்பலாம். ஆனா ப்ராக்டிக்கலா அது முடியாது. ஒருவேளை மூணு மாசம் பொறுமையா காத்திருந்தா உங்க எண்ணம் நிறைவேற வாய்ப் பிருக்கு.”

“மூணு மாசம் காத்திருக்கணுமா? எதுக்கு?”

“இடம், பொருள், காலம் அறிந்து ஒரு காரியத்தைச் செய் யணும்ன்னு உங்களுக்குத் தெரியாதா? இந்த ஆட்சிக் காலம் இன்னும் ஒரு மாசத்தில முடிஞ்சிடும். தொடர்ந்து எலெக்ஷன்ல ஒருக்கால் வேற கட்சி ஜெயிச்சதுன்னா அருள்மொழி மாதிரி ஆட்கள் பல்லைப் பிடுங்கின பாம்பாயிடுவாங்க. அப்போ இதே கோரிக்கையை கலெக்டர்கிட்டே வெச்சிங்கன்னா அவரால நிறை வேத்த முடியும்.”

சண்முகசுந்தரம் பாதி நம்பிக்கையும், பாதி அவநம்பிக்கை யுமாக எழுந்தார்.

எண்ணி எழுபத்தைந்து நாட்களுக்குள் எத்தனை சம்ப வங்கள்! சண்முகசுந்தரம் சில இளைஞர்களைத் திரட்டி கையெழுத்து வேட்டை நடத்த முயற்சி செய்தார். விஷயம் கேள்விப்பட்டு அருள் மொழியின் ஆட்கள் கதர்க் கடையின் கண்ணாடியை உடைத்து சண்முகசுந்தரத்தை மிரட்டி விட்டுப்போனார்கள். லோக்கல் இன்ஸ் பெக்டர் அருள்மொழிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.போடக் கூடப் பயந்தார். இதற்குள் அரசியல் தலைகீழாய்த் தடம் புரண்டது. ஆளுங்கட்சி தொண்ணூறு சதவித டெபாசிட் இழந்திருக்க – எதிர் கட்சி வந்து – அமைச்சரவை பதிவிப் பிரமாணம் கூட நடத்தி முடித்து விட்டது.

மார்க்கெட் ரோடு காந்தி சிலை, குடிமகன்களிடம் படும் பாட்டைப் பார்த்து தினந்தோறும் ரத்தக் கண்ணீர் வடிக்கிற சண்முகசுந்தரத்துக்குள் மெல்லிசாய் நம்பிக்கைக் கீற்று உற்பத்தியானது.

பத்திருபது இளைஞர்களிடம் திரட்டிய கையெழுத்துக் களோடு இன்றைக்கு மீண்டும் கலெக்டர் ஆபீசுக்கு வந்திருந்தார்.

ஃபைலுடன் குறுக்கேபோன பி.ஏ. அவரை அடையாளம் தெரிந்து நின்றார்.

“என்ன பெரியவரே, மறுபடியும் வந்திருக்கீங்க?”

“ஆட்சி மாறிடுச்சு, காந்தி சிலைக்கு எதிரே உள்ள மதுக் கடையை அகற்ற இப்பவாவது முயற்சி எடுக்கலாமேன்று மறுபடி மனுவோடு வந்திருக்கேன்.”

பி.ஏ.வின் முகம் சட்டென மாறியது.

“மன்னிக்கணும் பெரியவரே, கலெக்டரால இப்பவும் எதுவும் செய்ய முடியாது.”

சண்முகசுந்தரம் பதறினார்.

“ஏன்?”

“அன்னிக்கு நீங்க வந்துட்டுப்போன பிறகு அருள் மொழியைப் பத்தி மேலும் விசாரிச்சுப் பார்த்தேன். உங்களுக்குத் தப்பான நம்பிக்கையைத் தந்துட்டேன்னு அப்போதான் புரிஞ்சது.”

“தயவுசெஞ்சு விளக்கமாச் சொல்லுங்க.”

“அருள்மொழி பங்கு வகிக்கிற கட்சி ஆட்சிக் கட்டிலை விட்டுக் கீழே இறங்கிடுச்சு. ஆனா, இப்போ ஆட்சியிலிருக்கற கட்சியில் அவரோட தம்பி பெரிய ஆள். அவருக்கு மொத்தம் நாலு தம்பிமார்கள் இருக்காங்க. நாலு பேரும் நாலு கட்சியில் முக்கிய புள்ளிகளா இருக்காங்க. எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஊரோட கண்ட்ரோல் சுவிட்ச் அந்தக் குடும்பத்தின் கையில்தான் இருக்கும். அந்த மதுக்கடையை அசைக்கிறது சாமானியமான காரியம் இல்லை. பேசாம திரும்பிப்போயிடுங்க.”

சண்முகசுந்தரத்துக்கு உடம்பு ரத்தம் பூராவும் சில விநாடி களுக்குத் தகித்தது. படபடத்தார்.

“நான் திரும்பிப்போகமாட்டேன். கண்டிப்பா கலெக்டரைப் பார்க்கப்போறேன்.”

பிடிவாதத்தோடு காத்திருந்து – கலெக்டரின் அறைக்குள் சென்றார். கலெக்டர் சொற்ப விநாடிகள் அவரை உற்றுப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்தார்.

“ஆட்சி மாறினதும் மதுக்கடையை மூடறதுக்காக இன்னொரு முறை மோதிப் பார்க்கலாம்ன்னு வந்தீங்களா?”

சண்முகசுந்தரம் மறுத்தலாய்த் தலையை ஆட்டினார்.

“அந்த எண்ணத்தோடதான் வந்தேன். ஆனா உங்க பி.ஏ.கிட்டே பேசினப்புறம் என் எண்ணத்தை மாத்திக்கிட்டேன். இப்போதைக்கு உங்களால நிறைவேத்த முடிஞ்ச வேற ஒரு சின்னக் கோரிக்கையை மட்டும் உங்ககிட்டே வெக்கறேன். இந்தக் கோரிக் கையை நிறைவேத்த எந்த அரசியல்வாதியும் முட்டுக்கட்டைபோட மாட்டான்னு நான் நம்பறேன்.”

கலெக்டர் ஆர்வத்துடன் சண்முகசுந்தரத்தைப் பார்த்தார்.

“என்ன கோரிக்கை பெரியவரே?”

சண்முகசுந்தரத்திடமிருந்து கல்லை வெட்டினாற்போல அழுத்தமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

“காந்தி சிலையை வேற இடத்தில் கொண்டுபோய் வெக்கணும்.”

– அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1998 – தேர்வு பெற்ற கதை – Kalki (11-08-1998)

(நன்றி: http://www.sathyarajkumar.com/)

Print Friendly, PDF & Email

0 thoughts on “குறுநில மன்னர்கள்

  1. கதை முழுக்க பார்ப்பனிய சாதி பாசம் மட்டுமே இருக்கிறது வேறு எந்த கருத்தையும் இது பகிரவில்லை என்பது தன் தெளிவாக தெரிகிறது.ஒன்று மட்டும் புரிகிறது கதைகள் மனிதனின் உள் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *