“ஊரே மொத்தமா இந்த எட்டு வருஷத்துல ரொம்ப மாறியிருக்கு முருகா… போற வழியே இப்படியிருந்தால், நம்ம ஊரு எப்படியிருக்கும்?” ஸ்ரீதர் கேட்டபடியே வர,
சாலையை நோக்கி காரை வேகமாக ஓட்டி வந்த முருகன் திரும்பிப் பார்க்காமல், ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியபடி பதில் சொன்னான்… “ஆமாம்யா”
“எங்கே பாரு… திரும்பின இடமெல்லாம் விளைச்சல் நிலங்களை பிளாட் போட்டிருக்காங்க… இப்படியே போனால், கூடிய சீக்கிரமே நம்ம நாட்டுல விவசாயம் அழிஞ்சு போயிடுமே…”
“”நீங்க சொல்றது உண்மைதான்ய்யா… ஊர்ல பருவ மழை பொய்த்துப் போச்சு… அப்படியே அறுவடை நேரத்துல மழை பெய்ஞ்சாலும், பயிர் எல்லாம் தண்ணியிலே மூழ்கிப் போயிடுது. நம்ம ஜனங்களும் எவ்வளவு நாள்தான் கடன் வாங்கி விவசாயம் செய்வாங்க…. இப்போதைக்கு விவசாயம்கிற தொழிலே நஷ்டம்தான்யா… அதான் ஊருக்குள்ளே எல்லாரும் விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரனுங்கிட்டே வித்துட்டு, வந்த பணத்துல வீடு கட்டி, பேங்க்ல போட்டுட்டு நிம்மதியாயிருக்கிறானுவ…”
“மண்ணோட அருமை இப்ப நமக்கு தெரியாது முருகா… அடுத்த தலைமுறை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போதுதான் தெரியும்.. வண்டியை நிறுத்து…”
வண்டியை நிறுத்தினான்.
“பின்னாடி எடு. முருகா நாம கீழ்பள்ளி ஊர் வழியா போயிடலாம். இப்படியே போனால் நம்ம ஊருக்கு சுற்றித்தான் போகணும்”
“”வேணாம்ய்யா”
“ஏன் முருகா?”
“அய்யா உங்களுக்கே நல்லாத் தெரியும்… நம்ம ஊர்க்காரங்களுக்கும், கீழ்பள்ளிகாரங்களுக்கும் எப்பவுமே ஆகாதுன்னு… ஏற்கெனவே நாமளும், அவனுவளும் எப்படா வஞ்சம் தீர்க்கலாம்ன்னு துடிச்சுட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாம, இப்ப கீழ்ப்பள்ளி ஊர் தலைவர் வேற இறந்து போய்ட்டாரு… பிரச்னை பெருசா ஆகும்… நாம் இப்படியே போயிடலாம்ய்யா….”
“எத்தனை வருஷமானாலும் நம்ம ஊர்ல இன்னும் இந்த ஜாதி சண்டை மட்டும் தீரலையா…? நீங்களெல்லாம் இன்னும் திருந்தலையா.. என்ன பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்….வண்டியை ஊருக்குள்ளாறே விடு”.
கடவுள் மீது பாரத்தை வைத்தவனாய், வண்டியை கீழ் பள்ளியை நோக்கி செலுத்தினான் முருகன்.
“ஆறு, குளம், குட்டையெல்லாம் மழை இல்லாமல் காஞ்சு போய் கெடக்கு… தூர் வாரினாத்தானே… ஏன் முருகா இந்த நூறு நாள் வேலைத் திட்டத்துல வேலை செய்யறவங்க எல்லாம் தூர் வாருகிற வேலையைக் கூட செய்ய மாட்டாங்களா?”
ஸ்ரீதர் தனக்குத்தானே ஆதங்கத்தைக் கொட்டியபடியே வந்தான்.
கீழ்பள்ளி ஊருக்குள் நுழைய நுழைய முருகனின் முகம் பயத்தில் மாறியபடியேயிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்கிற பீதி அவனது முகத்தில் தெரிந்தது.
ஊர்க்காரர்கள் வண்டியை பார்த்ததும், வழி மறித்து மடக்கவே, முருகனும் ஸ்ரீதரும் பிணையக் கைதிகளாக இறங்கினர்.
“யார்ன்னு தெரியுதா மாப்ளே?” ஊர்க்காரன் ஒருவன் கேட்க….
“வேற யாரு… பெரிய பள்ளி ஊர் தலைவரோட ஒரே பையன். வெளி நாட்லயிருந்த வர்றான் போலிருக்கு…”
“ஓஹோ… அது சரி, எங்க ஊருக்குள்ளே ஏன் தம்பீகளா வந்தீக? வேவு பார்க்கவா? அல்லது ஊர்த்தலைவர் மட்டும்தான் செத்தாரா அல்லது ஊரே செத்துப்போச்சான்னு பார்க்க வந்தீகளா? சொல்லுங்கடா…”
“நீங்கள் எல்லாம் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. நான்தான்” என ஸ்ரீதர் சொல்லி முடிக்கும் முன்னரே, “அய்யா! இவனுங்க எல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிட்டு.. இவனுங்களுக்கு போய் ஏன் மரியாதை கொடுக்கறீங்க… இவனுங்க கெடக்கறானுங்க… நீங்க ஏறுங்க வண்டியிலே…” என முருகன் கூறியதும்தான் தாமதம்.
ஒருவன் முருகனின் முகத்தையும் மற்றவன் ஸ்ரீதரின் மூக்கையும் பதம் பார்க்க, மற்றவர்களோ உருட்டை கட்டைகளால் கார் கண்ணாடிகளைப் பதம் பார்த்தார்கள். உடனே துரிதமாக செயல்பட்ட முருகன் அடிகளை வாங்கியவாறு காருக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்து முன்னேற, வேகமாக ஓடி வந்த ஸ்ரீதரும் வண்டிக்குள் ஓடி வந்து அமர்ந்தான்.
“நான் அப்பவே சொன்னேனே, கேட்டீங்களாய்யா? ஊர்லயிருந்து வெளிநாடு போய் வந்த நீங்க வேணும்ன்னா மாறியிருக்கலாம்… ஆனால் நாங்க மாறமாட்டோம்யா.. செத்தானுங்க பாருங்கய்யா…. எப்படியும் ஊர்த்தலைவரோட உடம்பை எடுத்துட்டு நம்மூரை தாண்டித்தானே சுடுகாட்டுக்கு போகணும்… அப்ப இருக்குய்யா இவனுங்களுக்கு”
இப்போதுதான் ஸ்ரீதருக்கு பிரச்னை சீரியஸ் ஆன விஷயம் தெரிந்தது. “”முருகா! முதல்ல பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போ. நம்ம இருவரது உடம்பிலும் ஒரே இரத்தம். கட்டு போட்டுடலாம். அதுபோல, அப்பாகிட்டேயும் நம்ம ஊர்க்காரனுங்ககிட்டேயும் நடந்த விஷயத்தை சொல்லாதே…”
முருகனுக்கு சட்டென முகம் மாறியது… முகத்தை கொடூரமாக வைத்தபடி, “”சரி” என்றான்.
“வாவ்! கீழ்பள்ளியில் இவ்வளவு பெரிய ஸ்கூலா?”
“ஆமாம். இது கீழ்பள்ளி தலைவரோட பள்ளிக்கூடம் அவரோடு திருமணமாகாத பெண்தான் நிர்வகிக்கிறாங்க…”
“வெரிகுட். நம்ம ஊர்ல இப்ப புதுசா ஏதாவது ஸ்கூல் திறந்திருக்கங்களா இல்லையா முருகா?”
“இருந்த ஒரே ஸ்கூலுக்கும் படிக்க பசங்க வரலைன்னு இழுத்து மூடியாச்சு… பசங்க எல்லாம் ஊர் சுத்திட்டும், வேலைக்குமா போய்ட்டு இருக்காங்க”
“நான்சென்ஸ். நம்ம ஊர்ல பசங்களுக்காக நான் பள்ளிக்கூடம் கட்டி, நல்ல கல்வி தர்றேன்… அதுக்குத்தானே இங்கே வந்திருக்கேன்”
இருவரும் பேசியபடியே மேல்பள்ளிக்குள் நுழைந்து ஸ்ரீதரின் வீட்டின் முன்னே வண்டி நிற்க, ஊரே ஸ்ரீதரின் வீடு முன்பு கூடியிருந்தது.
தலையிலும், மூக்கிலும் கட்டு போட்டபடி இறங்கிய இருவரையும் பார்த்து ஸ்ரீதரின் அப்பா பெருமாள் பதறிப்போனார்.
“என்னப்பா ஆச்சு?”
“ஒண்ணுமில்லைப்பா… வண்டி மரத்துல மோதினதால சின்ன விபத்து. வேறு ஒண்ணுமில்ல”
பெருமாள் இப்போது பெருமூச்சு விட்டபடியே, “”லக்ஷ்மி நம்ம பையனுக்கு வந்து ஆரத்தி எடும்மா…” எனக் கூறவும்,
ஸ்ரீதரின் தாய் மகனை கட்டியணைத்து, ஆரத்தி எடுத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.
பெருமாளும் உள்ளே செல்ல எத்தணிக்கவும், “”அய்யா ஒரு நிமிஷம்”
“என்ன முருகா… என்ன விஷயம்?”
“நம்ம வண்டி விபத்துல மாட்டல” என்று கூறிவிட்டு நடந்ததையெல்லாம் கூறினான் முருகன்.
பெருமாளுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. “”எடுங்கடா கத்தி, அருவாளை” எனக் கத்த “”வேணாம்ய்யா. இப்ப வேண்டாம். நாளைக்கு ஊர்த்தலைவரோட பிணத்தை இப்படித்தான் கொண்டு வருவாங்க… அப்ப பார்த்துக்கலாம், அவரோட பிணம் இங்கே வரும்போது, பல பிணம் மண்ணுல விழணும்…. அதே நேரத்துல சில பேர் கீழ் பள்ளிக்குள்ளே புகுந்து வீட்டை எல்லாம் கொளுத்திடலாம்ய்யா….”
முருகனின் ஐடியா பெருமாளுக்கும், ஊரிலுள்ள சாதி வெறி ஆண்களுக்கும் பிடித்துப் போனதால், அவனுடைய ஐடியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
வீட்டு மாடியிலிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதரோ இந்த ஊர்க்கலவரத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தான். அப்போது அவன் மனதில் ஒரு எண்ணம் மின்னல் வெட்டாய் தோன்றி மறைந்தது.
கீழ்பள்ளி…
நாகராஜ் சிந்தனையில் தன் தந்தையின் சடலத்தை வெறித்துப் பார்த்தபடியேயிருக்க…
“என்ன நாகராஜ்? ஆனது ஆச்சு… இனி நடக்கப் போவதைப் பார்க்கலாம்” என்றார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.
“அப்பா இறந்தநாள் இன்னைக்கு தேவையில்லாமல் எல்லோரும் சேர்ந்து பிரச்னை பண்ணிட்டீங்களே பெரியப்பா… சுடு காட்டுக்கு போகும்போது கண்டிப்பா மேல் பள்ளிக்காரங்க பிரச்னை பண்ணுவாங்களே… என்ன பண்றது?”
“”ஏய் நீ நம்ம சாதிக்காரனாலே? பிரச்னை பண்றதற்காகத்தான், புது பிரச்னையை ஆரம்பிச்சது… நாளையோட இந்தப் பிரச்சனை இரத்தத்துலத்தான்லே முடிவுக்கு வரும். இது ஊர்ப் பிரச்சனை. நாளைக்கு எதுவும் நடக்கும்…நீயும் எல்லாத்துக்கும் தயாராயிரு. ஏலே மாடசாமி. நம்ம ஊர்க்காரனுகல எல்லா ஆயுதத்தையும் எடுத்து வைக்கச் சொல்லு….”
“சரிங்கய்யா…”
இப்போது நாகராஜ் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.”” கடவுளே! பிரச்சனை ஏதுமில்லாமல் அப்பா சடலத்தை புதைக்கணும்…” எனக் கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்.
ஸ்ரீதர் மணியைப் பார்த்தான். பெரியவர் சடலத்தை எடுக்கும் நேரம்… இப்போது கீழ் பள்ளிக்கு ஊர்த் தலைவர் வீட்டுக்குப் போனால் சரியாகயிருக்கும் என்றபடியே தனது இரு சக்கர வாகனத்தை மிதித்தான். ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோடு வழியாக கீழ்பள்ளியை அடைந்தான். அவன் சென்ற நேரம் சடலம் எடுத்து ஊரிலுள்ள ஆண்கள் அனைவருமே சென்றிருந்தனர். அவன் ஊர்த்தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தான். ஸ்ரீதரைப் பார்த்ததும், அனைத்துப் பெண்களும் மிரண்டு போய் எழுந்து நிற்க, ஸ்ரீதர் ஊர்த்தலைவரின் மகள் சந்திராவின் முன்பு போய் நின்று பேச ஆரம்பித்தான்.
மேல் பள்ளியின் ஊர் எல்லையில்…
வாக்குவாதம் முற்றிக் கலவரமாகிக் கொண்டிருந்தது. அனைவரது கையிலுள்ள ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பிக்க…
ஊர்த் தலைவரின் சடலம் தூரத்தில் அனாதையாக இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாய் அந்த இரு சக்கர வாகனம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்தது. கலவரக்காரர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். அனைவரது கையிலிருந்த ஆயுதங்களும் நழுவிக் கீழே விழுந்தன. வண்டியிலிருந்து ஸ்ரீதர் இறங்கினான். அவனைத்தொடர்ந்து சந்திராவும் இறங்கினாள்.
“என்னடா இதெல்லாம்?” பெருமாள் கேட்கவும்,
“அப்பா இந்தக் கலவரத்துக்கு காரணமே நான்தான்….அதான் நானே ஒரு முடிவுக்கு வந்திடலாம்ன்னு இந்த முடிவை துணிச்சலா எடுத்தேன்… நானும், சந்திராவும் திருமணம் பண்றதா முடிவு பண்ணிட்டோம்… உங்களுக்கு சாதி, பணம், அந்தஸ்து முக்கியம்ன்னா முதல்ல எங்க ரெண்டு பேரையும் வெட்டுங்க”
“புரியாமல் பேசாதேடா. நீ இப்படி வா. நீ இவளைக் கட்டினா, நீயும் எங்களுடைய எதிரிதான். உன்னை கொன்னு கூறுபோட்டுடுவேன்” என பெருமாள் கர்ஜிக்கவும்,
“‘நான் இந்த ஊருக்கு வந்ததே நாம எல்லாம் ஒற்றுமையாயிருக்கணும்னுதான்…. நான் பள்ளிக் கூடம், ஆஸ்பத்திரி எல்லாம் கட்டி, வேலையில்லாதவங்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தர ஆசைப்படறேன்…. உங்களுடைய தலைமுறையோடு இந்த சாதி வெறி, பண வெறிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வெச்சிடுங்க… நம்ம இரு கிராமமும் மற்ற ஊர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கணும். நம்ம ஊர் ஒற்றுமைக்காக நாங்க இருவரும் எல்லோருடைய கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராயிருக்கோம்” என்றபடி சந்திராவும், ஸ்ரீதரும் ஊர்க்காரர்கள் முன்பு மண்டியிட…
“நீங்க எங்கவூர் மாப்பிள்ளை… நீங்க யார் கால்லயும் விழ வேண்டாம் மாப்ளே…” என்று முன்னே வந்தான் நாகராஜ்.
“உனக்காகவும், இந்த ஊர் மக்களுக்காகவும் இதுவரை நான் உருப்படியா செய்யலை… அதனால உன் முடிவை ஆதரிக்கறேன்ப்பா” என்று பெருமாளும் கூற,
ஊர்மக்கள் அனைவரும் தலை கவிழ்ந்தபடியே. ஊர்த் தலைவரது சடலத்தை தூக்க ஆரம்பித்தார்கள்.
ஸ்ரீதர்-சந்திராவின் முகத்திலோ இப்போது வெற்றிப் புன்னகை.
– நவம்பர் 2013
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை
தேவர்மகன் கதை போல் உள்ளதே???