என் கொல்லைப்புறத்து காதலிகள்
எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.
அன்றைக்கும் வழமை போல ஒரு இருநூறு காய்கள் தேறும் என்று நினைக்கிறேன். சைக்கிளின் ஹான்டிலில் இரு புறமும் பைகளை கொளுவிக்கொண்டு சந்தைக்கு போகிறேன். திருநெல்வேலி சந்தை. சுற்று வட்டாரத்தில் அது தான் பெரிய மரக்கறி சந்தை. சைக்கிள் நிறுத்த இடம் இருக்காது. திருடர் பயம் வேறு. சைக்கிள் பார்க் இருக்கிறது தான். இரண்டு ரூபாய். ஏன் வீண் செலவு? சந்தைக்கு பக்கத்தில் தான் குட்டி வீடு. குட்டி குடும்பத்துக்கு எமக்கும் நீண்ட கால பழக்கம். அப்பாவும் அப்பாவும் நண்பர்கள். அம்மாவும் அம்மாவும் நண்பிகள். அக்காவும் அக்காவும் நண்பிகள். அப்புறம் நானும் குட்டியும் …. நானும் குட்டியும் … அது தான் இந்தக்கதை.
குட்டி வீட்டு கேற்றடியில் நுழைகிறேன். அவள் வீட்டில் சின்ன நாய் ஒன்று இருந்தது. எனக்கும் அதுக்கும் ஆகாது. வீட்டு வாசலிலேயே நின்று கத்துவேன்.
“அன்ரி, நாயை பிடியுங்கோ, குமரன் வந்து இருக்கிறன்”
“அட, குமரனா, நீ வீட்டுக்காரன் தானே, ஜிம்மி ஒண்டும் செய்யாது, நீ வா”
எனக்கு சந்தேகம். இந்த நாய் டேன்ஜர் ஆசாமி என்று எனக்கு தெரியும். அன்ரி என்னை வீட்டுகாரனாய் தான் நடத்துவார். ஆனால் ஜிம்மி என்னை எதிரியாகவே பார்க்கும்.
“இல்ல அன்ரி, பிடியுங்கோ, ஜிம்மிய நம்பேலாது”
இப்போது குட்டி வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறாள். கம்பீரமாக, அவள் உயரத்துக்கு அந்த நீட்டு முகம் இன்னும் உயரமாய் காட்டியது. ஜிம்மியை பிடித்து வாசலில் நின்ற மரத்தில் கட்டுகிறாள்.
“நீ வாடா, அது ஒண்டும் செய்யாது, கட்டியாச்சு”
எனக்கு கொஞ்சம் தைரியம் வர உள்ளே நுழைந்து சைக்கிளை நிறுத்தினேன்.
“இல்ல, சிவப்பு தொப்பி போட்டிருக்கிறன் தானே, அது வெருளும், அதான் கொஞ்சம் …”
சிரித்தாள். நம்பமாட்டாள் என்று தெரியும்.
“அப்பன், சந்தைல, எனக்கு ஒரு வல்லாரை பிடி வாங்கியா, காசு இருக்கே? திரும்பி வரேக்க தாறன்”
அன்ரி சொல்ல பொக்கட்டில் இருந்து துண்டை எடுத்தேன். பழைய மெய்கண்டான் கலண்டர் தாளின் பின்பக்கம். சாமான் லிஸ்ட், அக்காவின் முத்து முத்தான சரிந்த எழுத்தில் இருந்தது.
உ.கிழங்கு 500g
பீட்ரூட் 250g
முருங்கைக்காய் 2 (விலை பார்த்து வாங்கு)
சின்ன வெங்காயம் 1kg (நடராசா கடையில் வாங்கு)
ப.மிளகாய் 100g
துபாய் பூசணி 1
கீரை 1பிடி
தேங்காய் 5 (போன கிழமை, ஒரு தேங்காய், அழுகல், பைல சுத்தி இருக்கு, குடுத்து மாத்து)
சம்பா குத்தரிசி 2 KG (சிவா கடையில் இலாபம். கல்லு பாத்து வாங்கு)
இறுதியில் அன்ரிக்கு வல்லாரை அசிங்கமாய் கிறுக்கி எழுதிக்கொண்டு கிளம்பினேன்.
திருநெல்வேலி சந்தை. எட்னா கண்டோஸ்களை உரித்து அப்பிவிட்டது போல சகதியாய் கிடந்தது. வழமையான கூட்டம், நெரிசல், வெங்காய வியாபாரி, தள்ளுப்படும் தரகர்கள், ஆயப்பகுதிக்காரர் எல்லோரையும் தவிர்த்துக்கொண்டு நேரே சென்று தவக்களையிடம் காய்களை கொடுத்து, கிலோ இருநூறு ரூபாய் என்று பேரம் பேசி, மரக்கறி, தேங்காய் எல்லாம் வாங்கிக்கொண்டு சாமான் சக்கட்டுகளோடு மீண்டும் அன்ரி வீட்டுக்கு வருகிறேன். ஜிம்மி இப்போதும் கட்டப்பட்டு கிடந்தது. என்னை தூரத்தில் கண்டதுமே குரைத்தது.
“அன்ரி வல்லாரை இந்தாங்கோ”
“ஆ வந்திட்டியா, என்ர அச்சாப்பிள்ளை .. என்ன விலையடா”
“இருக்கட்டும் அன்ரி, கீரையோட சேத்து வாங்கினது, மறந்து போட்டுது”
அன்ரியிடம் காசு வாங்க எனக்கு வெட்கம்.
“குமரன், பொய் சொல்லாத, காசு வாங்கிறதில வெட்கம் ஒண்டும் இல்ல, நீ இண்டைக்கு வாங்கினா தான், நாளைக்கும் அம்மாவும் ஏதும் தேவை என்றால் சொல்லி விடுவா”
குட்டி தான் சொன்னாள். அவளுக்கு என்னை விட ஒரு வயது தான் அதிகம். சொல்லப்போனால் ஆறு மாதங்கள் தான் மூப்பு. ஆனால் அப்போதே நான் உயர்ந்து பார்க்கும் அளவுக்கு தெளிவுகள் கொண்டவள். நான் இன்னமுமே ராணி காமிக்ஸ் வாசித்துக்கொண்டிருக்கும் போது, பாலகுமாரனுக்கு தாவி இருந்தாள். ஒரு முறை பாலகுமாரனை அக்காவுக்கு தெரியாமல் வாசித்து பார்த்தேன். போர் அடித்தது. மாயாவி தன்னுடைய ஹீரோ குதிரையில் ஓய்யாசமாய் வந்து டுமீல் டுமீல் என்று சுடுவது எப்படி என்று பாலகுமாரனுக்கு தெரிந்திருக்கவில்லை. எப்படி தான் வாசிக்கிறார்களோ என்று நினைப்பதுண்டு. குட்டி விழுந்து விழுந்து வாசிப்பாள்.
ரண்டு ரூவா தான் குட்டி
அம்மா ரண்டு ரூவாயாம், கொண்டு வந்து குடுங்க…. தேத்தண்ணி குடிக்கிறியா?
இல்லை .. வேண்டாம்… டியூஷன் இருக்கு
சரி சரி .. பெரிய பஸ் அடிக்காத, சும்மா குடி
இல்லை, அம்மான டியூஷன் இருக்கு
சொல்லிக்கொண்டே, அன்ரியிடம் காசை வாங்கிக்கொண்டு, சைக்கிளை நோக்கி நடந்தேன். அது என்னவோ எங்கேயாவது போனால், யாருடனாவது இயல்பாக பேசுவது என்பது எனக்கு இயலாது. பெண்கள் என்றால் நேர் கொண்டு பார்த்து பேசுவதுக்கு வெட்கம் பிடுங்கி தின்னும். கண் தாழ்ந்து விடும். குட்டி வித்தியாசமானவள். கண் பார்த்து பேசுவாள். அவளோடு பேசும்போதேல்லாம் இராமனுக்கு முன்னாலே கால் விரல் நகத்தில் கோலம்போட்ட இராவணனை பற்றி கம்பர் எழுதியது ஞாபகம் வரும்.
அறம் கடந்தவர் செயல் இது’ என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்ய
சைக்கிளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்ற கையால் படலையை திறக்கும் போது தான் குட்டி கூப்பிட்டபடியே ஓடி வந்தாள். என்ன? என்று ஜாடை கேட்டேன்.
“நேற்று பெஞ்ச மழைல ஒரு தொகை விளாம்பழம் விழுந்து கிடக்கு, பொறுக்க போறியோ? பேந்தெண்டால் கிரி வந்து எல்லாத்தையும் அள்ளிடுவான்”
தயங்கினேன். விளாம்பழம். விடமுடியாது.
“ஒ, சரி கொஞ்சத்த எடுப்பம் அப்ப”
அசடு வழிய சொன்னேன். மீண்டும் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் பின்புறம் உள்ள விளாமரத்தடிக்கு நான் செல்ல, குட்டி ஒரு சின்ன கூடையுடன் ஓடி வந்தாள். அதற்குள் ஏற்கனவே சில பழங்கள் இருந்தன.
“இது நான் நேற்று பொறுக்கினான், நல்ல பதம், போன உடனே உடைச்சு சாப்பிடு”
அதையும் வாங்கிவைத்துவிட்டு, நான் குனிந்து ஒவ்வொரு விளாம்பழமாய் பொறுக்க தொடங்கினேன். புற்கள் முழுதும் பனி படர்ந்து, ஈரம சரசரப்பாய் இருந்தது. அட்டைகளும் ஒட்டிக்கொண்டது.
“அது சரி, உனக்கு டியூஷனுக்கு நேரம் ஆக இல்லையே? அம்மான எண்டு சத்தியம் செஞ்சாய்?”
கூட நின்று பொறுக்கிக்கொண்டிருந்த குட்டி என்னைப்பார்த்து சிரித்தபடியே கேட்டாள். வழிந்தேன்.
***
95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. வலி வடக்கு வலி மேற்கு மக்கள் எல்லோருமே கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இன்னமும் திரும்பியிருக்கவில்லை. நாவலி தேவாலயத்தில் அகதிகள் மீது நடந்த விமான தாக்குதலில் கொத்து கொத்தாக மக்கள் இறந்துபட்டு போயிருந்தார்கள். எங்கள் வீட்டில் நவாலியில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு குடும்பம் சேர்ந்து தங்கி இருந்தது. அவர்களோடு மாடுகள், ஆடுகள், வண்டில் என் ஏராளமான பொருட்கள். குட்டி வீட்டில் இருபது குடும்பங்களுக்கு மேலே. கிட்டத்தட்ட அறுபது எழுபது மக்கள் ஒரே வீட்டில். எல்லாமே அவர்கள் ஊர்க்காரர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஓவ்வொரு வகை இழப்புகள்.
இப்படியான சூழ்நிலையில் தான் என் பிறந்த நாள் வந்தது. யாழ்ப்பாணம் ஒரு விசித்திரமான ஊர். போரும் உயிரிழப்பும் சுற்றி வர இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் கோயில் விழாக்களும், பிறந்தநாள் விழாக்களும் அமர்க்களமாக நடைபெறும். என் பிறந்த நாளுக்கு கேக் ஒன்றும் வெட்டவில்லை. அம்மா வடை சுட்டார். அப்புறம் மில்க் டொபி செய்தார்கள். குட்டி முதல்நாளே வீட்டுக்கு வந்து மில்க் டொபி செய்ய உதவினாள். பிறந்தநாள் அன்று ஒரு லேடிஸ் சைக்கிளில் வந்திறங்கினாள். பஞ்சாபி போட்டிருந்தாள். பஞ்சாபி கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக அப்போது தான் யாழ்ப்பாணத்தில் தலை தூக்கி இருந்தது. வழமை போலவே கலகல என்று பேசினாள்.
இருவருக்கும் பிடித்த ஆங்கில இலக்கியம் பற்றியே பேசினோம். “The Sacred Land” அவளுக்கு பிடிக்கும். நிறைய பேசினாள். அவள் என் கண்ணை பார்த்து தான் பேசி இருக்க வேண்டும். கவனிக்கவில்லை. நான் தானே நிலம் விரல் கிளைத்திட நின்று பேசிக்கொண்டு இருந்தேன். குண்டு சத்தம் ஆங்காங்கே கேட்டு கொண்டிருந்தது. நான் அதை பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. அவளும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு அழகான கீ-டக் ஒன்று பரிசாக தந்தாள். வட்டமான தங்க நிற பிளாஸ்டிக் நடுவே நல்லூர் முருகன், அப்படியே சுற்றி விட்டால் டர்ர்ர் என்று சுற்றிவிட்டு மீண்டும் முருகன் வேலுடன் வந்து காட்சி தருவார். நல்ல வடிவாக இருந்தது. நெஞ்சில் வைத்து அப்பனே முருகா என்றேன்.
அடுத்தநாள் பாடசாலை முடிந்து வருகிறேன். அம்மா கேட் வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள். முகம் இருண்டு இருந்தது. என்ன? என்று அம்மாவை பார்த்தேன்.
“குட்டி இயக்கத்துக்கு போயிட்டுது”
கெலித்துப்போனேன்.
“என்ன சொல்லுறீங்கள்?”
“ஓமடா, குட்டி தான், இண்டைக்கு ஸ்கூலில பிரசாரமாம், போயிட்டுது”
“என்ன விசர்க்கதை கதைக்கிறீங்க, நேற்று தானே பிறந்தநாளுக்கு வந்தவள், அப்பிடி ஒண்டும தெரிய இல்லை, வடிவா தேடிப்பாத்தாச்சா? சிலவேளை கிட்டு பூங்காவுக்கு போயிருப்பாள் . நான் ஒருக்கா பார்த்தோண்டு வாறன்.”
சைக்கிளை அப்படியே திருப்பிக்கொண்டு அவளை தேடிப்போக தயாரானேன். கிட்டுபூங்காவில் சர்க்கேஸ் விளையாடுவது என்றால் அவளுக்கு பயங்கர விருப்பம். எக்கணம் நேரம் கிடைத்தால் ஓடிடுவாள். நானும் ஒருமுறை போயிருக்கிறேன்.அம்மா அமைதியா சைக்கிள் ஹாண்டிலில் கைவைத்து மறித்து சொன்னார்.
“இல்லடா, சைக்கிளை டீச்சரிட்ட குடுத்திட்டு, அவங்களோட போயிட்டுது”
அதிர்ச்சி, ஏற்றுகொள்ளவே முடியவில்லை. நேற்று இலக்கியம் பேசிவிட்டு இன்று போராட போய்விட்டியா குட்டி? என்னை விட அவளுக்கு ஒரு பரந்த பார்வை எப்போதுமே இருந்தது. வீட்டில் வேறு இடம்பெயர்ந்தவர்கள் நிறைந்து வழிய, அண்மைக்காலமாக, வலிகளுடன் வாழ்ந்து, வலிகளை கேட்டு அது தாங்காமல் வடம் பிடிக்க போய் விட்டாள். நான் தேர் முன் மற்றவர் உடைக்கும் தேங்காய் சில்லுகளையே இன்றைக்கும் பொறுக்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். குட்டி வீட்டுக்கு போவோமா விடுவோமா என்று யோசிக்கிறேன்.ம்ஹூம், அன்ரியை முகம் கொடுத்து பார்க்க முடியாது. அவள் அந்த வீட்டின் செல்லபிள்ளை, பிரின்சஸ். என் நண்பி வேறு. என்னை பார்த்தால் அன்ரி அழத்தொடங்கி விடுவார்.
அந்த சனிக்கிழமை, மரத்தில் காய்கள் அதிகம் இல்லை. நானும் சந்தைக்கு போகவில்லை. இரண்டு சனிகள் அவ்வாறு கடந்தன. விவஸ்தை கெட்ட எலுமிச்சை மீண்டும் காய்த்து கொட்ட, அந்த நாளும் வந்தது. சைக்கிளை பார்க்கில் விடலாம் தான், மனம் கேட்கவில்லை, அன்ரி வீட்டிக்கு போகிறேன்.
“வாடா குமரன்”
“….”
“என்ர பிள்ளை இப்பிடி போவாள் என்று கனவிலயும் நினைக்க இல்ல, உன்ர பிறந்தநாளுக்கு எவ்வளவு சந்தோஷமா வந்தவள் தெரியுமா?”
“…”
அன்ரி அழுது அரட்ட தொடங்கினார். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மெதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன். ஜிம்மி கட்டிப்போட்டு கிடந்தது. என்னைப்பார்த்து குரைக்கவில்லை. ஹூனஹூ என்று சிணுங்கியது. இனி தன்னை இவன் தான் பார்த்துக்கொள்வானோ? என்ற பயம் அந்த ஜிம்மிக்கு. நம்பிக்கை இல்லாமல் வாலை ஆட்டியது. நான் சைக்கிளை தள்ளிக்கொண்டே போய் படலையை திறந்தேன்.
“குமரன், நில்லு, உனக்கு விளாம்பழம் பொறுக்கி வச்சனான். கிரி வந்து எடுத்திடுவான். நீ கொண்டு போ”
குட்டி கத்திக்கொண்டே பின்னாலே ஓடி வருகிறாள். நான் திரும்பி பார்க்கவில்லை. வேகமாக சைக்கிள் ஏறி மிதிக்கிறேன். வேகமாக.. வேகமாக..திரும்பி பார்க்காதே .. ஓடு குமரன் … ஓடு
“குமரன், நில்லு, உனக்கு விளாம்பழம் பொறுக்கி வச்சனான். கிரி வந்து எடுத்திடுவான். நீ கொண்டு போ”
குட்டி கத்திக்கொண்டு பின்னாலே ஓடி வந்துகொண்டு இருந்தாள்.
***
இன்று குட்டி வருகிறாளாம். வீடு திரும்பிய போது அம்மா சொன்னாள். ஆண்டு 1996. இடம் வட்டக்கச்சி. நாங்கள் எல்லோரும் இடம் பெயர்ந்து குட்டியுடைய வீட்டில் தான் தங்கி இருந்தோம். அவர்களுக்கு வன்னியிலும் வீடு இருந்தது. இந்த தடவை அந்த இருபது குடும்பத்தில் நாமும் ஒரு குடும்பம். அவர்கள் மாறவில்லை. அந்த வாசல் எப்போதுமே அகதிகளுக்கு திறந்தே கிடந்தது. அங்கு தான் குட்டி வருகிறாள். வீட்டில் பனங்காய் பணியாரம் சுட்டுக்கொண்டு இருந்தார்கள். அவளுக்கு பிடிக்கும். ஒருவித பரபரப்பு தொற்றியிருந்தது. அது பரவசமா என்று தெரியாது. ஒரு பரபரப்பு. ஏன் வருகிறாள்? திடீரென்று? திரும்பி வீட்டுக்கு நிரந்தரமாக வந்து விடுவாளா? ஏதாவது பிரச்சனையா? எனக்கும் அது தொற்றிக்கொண்டது. இருந்ததிலேயே நன்றாக இருந்த சாரத்தை எடுத்து கட்டிக்கொண்டேன். மூன்று மணி ஆகிறது. பணியாரம் சுட்டு பொட்டலம் கட்டி விட்டோம். குட்டி பற்றிய குட்டி குட்டி பேச்சுகள் ஆரம்பமாகின. பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கும் குட்டிக்கும் இடையேயான நட்பை அவர்களுக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனால் அங்கே என் பிரசன்னம், நான் எப்போதோ அவளை சந்தித்து இருக்கிறேன் என்ற அளவில் மட்டும் பார்க்கப்பட்டது. பேசாமலேயே இருந்து விட்டேன்.
அவள் வந்து விட்டாள். ஜீன்ஸ். ஒரு முழுக்கை ஷர்ட் அணிந்து, வெளியே தொங்க விட்டிருந்தாள். சேர்ட்டுக்கு வெளிப்புறமாக அந்த இடுப்பு பட்டி. இரட்டை பின்னல் சுற்றி இறுக்கப்பிணைந்து கட்டியிருக்க, கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பவே கறுத்துப்போய் இருந்தாள். ஆயுதம் எடுத்துவரவில்லை.
நான் பக்கத்தில் செல்லவில்லை. சொந்தங்கள் சுற்றி நின்றனர். அவர்கள் பிள்ளை அவள். தவமிருந்து பெற்ற பிள்ளை. அந்த பாசம் பேச்சில் தெரிந்தது. அன்ரி இன்னும் அழுது கொண்டு இருந்தார். குட்டி, பணியாரம் ஒன்றை எடுத்து கடித்தாள். பணம் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். என்ன வேண்டும்? என்று கேட்டார்கள். கைக்கடிகாரம் என்றால் பிரயோசனப்படும் என்று சொல்ல, அண்ணன்காரன் கையில் இருந்ததை சட்டென கழட்டிகொடுத்தான். நான் தூரத்தில் இருந்தே இதை எல்லாம் பார்த்துகொண்டு இருந்தேன். அவளுக்கு என்னை ஞாபகம் இருக்காது என்றே நினைத்தேன். ஐந்து நிமிடம் ஆகி இருக்கும். என்னை அழைத்தார்கள். குட்டி குமரனை பார்க்கவேண்டுமாம். அவள் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டாள். மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆரம்பத்தில் ஓட்டம் பிடித்தவன், மறுகணம் நின்று நிதானமாக சென்றேன். வயது இப்போது பதினாறு இல்லையா.
“குமரன் எப்பிடி இருக்கிறாய்?”
அதே கம்பீரம் அவளில்
“இருக்கிறன், நீ?”
“பார்க்க தெரிய இல்லையா? ஹ ஹா… படிக்கிறியா?”
அதே சிரிப்பு. குட்டி மாறவில்லை.
“இந்த வருஷம் ஒஎல் எனக்கு”
“ஓம் ஞாபகம் இருக்கு, அடிக்கடி நினைவுக்கு வருவாய், எப்பிடி இந்த ஆங்கில இலக்கியம் இங்க படிக்கிறாய்?”
“புத்தகம் வைச்சிருக்கிறன், டிக்ஷனரி பார்த்து ஏதோ படிக்கிறன்”
“வடிவா படிக்கோணும் குமரன், டலண்ட வேஸ்ட் பண்ணீடாத ..எல்லாருக்கும் கிடைக்காது”
அங்கீகாரம், உங்கள் திறமையை ஒருவர் அங்கீகாரம் கொடுக்கும் போது சாதிக்கவேண்டும் என்ற ஒரு வெறி வரும். அதுவும் குட்டி சொல்லும் போது தனக்கும் சேர்த்து என்னை படிக்க சொல்கிறாளா? என்று தோன்றியது. இத்தனைக்கும் குட்டி ஒன்றும் சாதாரணமானவள் கிடையாது. பதினோராம் ஆண்டில் எடுக்க வேண்டிய பரீட்சையை பத்தாம் ஆண்டிலேயே எடுத்து சிறப்பு தேர்ச்சிகள் பெற்றவள்.
“நான் போகோணும் குமரன், உன்னை பிறகு சந்திக்கிறன், ஒண்ட மட்டும் மறந்திடாத. எப்பவுமே நல்லா படி”
சடக்கென்று கேட்டேன்.
“இனி எப்ப வருவ குட்டி?”
“….. வருவன், வன்னில தானே இருக்கிறம், அடிக்கடி வருவன்”
“நீ தந்த முருகன் பட கீ-டக் இப்பவும் வச்சு இருக்கிறன் குட்டி”
குட்டி என்னை மௌனமாக சில வினாடிகள் பார்த்தாள். அந்த கண்கள், நேர் கொண்ட கண்கள், வெளிச்சத்தின் கனம் தாங்கமாட்டாமல்,
இறங்கு கண்ணினன் நான், நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட மீண்டும் ஒரு முறை நின்றேன்.
***
அதற்குபிறகு குட்டியை நான் சந்திக்கவில்லை. அவள் குடும்பத்தினர் கூட உயிரோடு சந்திக்கவில்லை. எனக்கு நண்பி குட்டி. அவள் இழப்பு இன்னமும் வலிக்கிறது. அவள் வீட்டிலும் வலிக்கும். இந்த மாதம் அத்தனை தமிழர் வீடுகளிலும் வலிக்கும். அக்கம் பக்கம் யாரும் பார்க்காத நேரம் பார்த்து மெல்லிய வெளிச்சத்தில் விளக்கு ஏற்றப்படும். இந்த குட்டி என்ற நிஜ பாத்திரம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருந்திருக்கும். மகனாய், மகளாய், நண்பனாய், நண்பியாய், சகோதரன், சகோதரியாய், உறவுக்காரனாய், காதலன், காதலி .. எமக்காக போராடி இறக்க துணிந்த அக்கணமே உறவாகிப்போனவள் தானே. ஈழத்தில் இந்த இழப்பை பார்க்காமல் எவரும் இருக்கமுடியாது.
இவர்கள் எல்லாம் யார்? தாம் செய்வது சரியா பிழையா என்பதை எல்லாம் தாண்டி, அதை தமக்காக செய்யாமல் முகம் தெரிந்தோ தெரியாமலோ இருந்த எமக்காய் செய்தவர்கள். நாங்கள் நன்றாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் தலைமுறையை, வரும் தலைமுறைகளை நாம் நன்றாக வைத்திருப்போம் என்று நினைத்து, நம்மை நம்பி ஒப்படைத்து விட்டு, நமக்காக உயிர் விட்டவர்கள். பதினைந்து வயதில் போராட போன குட்டி, ஏறத்தாழ அறுபது வருட வாழ்க்கையை இங்கே இழக்கிறாள். அதில், அழகான குடும்பம், குழந்தைகள், குட்டி குட்டி சண்டைகள், சந்தோஷங்கள், படைப்புகள், பொதுவாழ்க்கை, இலக்கியம், மாசத்துக்கு இரண்டு சினிமா எல்லாமே இழக்கிறாள். யாருக்காக? என்ற ஒரு கேள்வி கேளுங்கள். தாங்க மாட்டீர்கள். ஏதாவது உங்களுக்கு செய்ய தோன்றும்.
என்ன செய்யப்போகிறோம்?
குட்டி கத்திக்கொண்டே பின்னாலே ஓடி வருகிறாள்.
“குமரன், நில்லு, உனக்கு விளாம்பழம் பொறுக்கி வச்சனான். கிரி வந்து எடுத்திடுவான். நீ எடுத்து கொண்டு போ”