கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 18, 2012
பார்வையிட்டோர்: 15,924 
 
 

அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி ஐந்தாறு தடவைகள் டெட்டால் போட்டு கழுவினாலும் மூத்திர நாற்றம் போவதில்லை. அடைஅடையாய் ஈக்கள் கூட்டம். தரையில்,சுவற்றில்,அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளில் எங்கும் நீக்கமற அழுக்குகள்….அழுக்குகள்.

“கீதாக்குட்டி!..ஆ காட்டு!..ஆ காட்றா.ஆ…ஆஆ…….!”——பெரியவர் ஒருத்தர் சோறு ஊட்ட, பெண் ஒருத்தி எவ்வித பாவங்களின்றி வாயை அகலத் திறந்து சோற்றை வாங்கிக் கொண்டிருந்தாள்.. ஒரு பார்வையிலேயே தெரிகிறது சித்தசுவாதீனமில்லாத பெண் இவள்.

இப்போதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. ஊட்டும் போது வாயைத் திறக்கத் தெரிகிறது. ஆறேழு மாதங்களுக்கு முன்புவரை திரவ உணவுதான். வலுக்கட்டாயமாக வாயைத் திறக்க வைத்து ஊற்ற வேண்டும். அப்பவும் பாதிக்குமேல் உள்ளே பாகாமல் சிதறிப் போகும். வாயோரத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும் ஜொள்ளை துடைத்து விட்டார்..என்னமோ முக்குகிற மாதிரி சத்தம் குடுக்கிறாளே.

“ஏய் கீதா! என்னடீ பண்ணப்போறே?. பழிகாரி என் உயிரை வாங்கரீயடீ.>”

அவள் ஓசைப் படாமல் தன் உடையை ஈரமாக்கிக் கொண்டிருந்தாள். குப்பென்று மூத்திர வாடை தூக்க, மூத்திரம் தரையில் ஓடியது. அது போவது தெரியாத புத்தி சுவாதீனம் அற்ற நிலை.

“கடவுளே! எம்மா நாளுக்குத்தான் எனக்கிந்த தண்டனை?. ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போறது தெரியாத இந்த மண்ணை வெச்சிக்கிட்டு சாவறேனே.இந்த ஜென்மத்தில தோட்டியா பொறப்பெடுத்தேனோ?. உனக்குக் கண் இல்லையா?. போதுமடா சாமி. போதும். என் பொறப்புக்கு விடுதலை குடுப்பா. என்னை கூப்பிட்டுக்கோப்பா.”

உள்ளே சுருக்கென்று குத்தியது.

“அய்யய்யோ! தப்பு…தப்பு…தப்பு சாமி. நான் போயிட்டா என் கொழந்தைய யார் பார்த்துக்கிறது?.ஐயோ! பொட்டப்புள்ளையாச்சே.பொம்மனாட்டியா இருந்தாலும் பச்சை மண்ணாய் இருக்காளே. பசின்னும் தெரியாது, அதுக்கு சோத்தை எடுத்து வாயில வைக்கணும்னும் தெரியாதே. பிஞ்சுங்களையே கற்பழிச்சிக் கொல்ற இந்த உலகம் என் கொழந்தைய சும்மா விட்ருமா?.. எஞ்செல்லம்! உன்னைத் தனியா விட்டுட்டு போவமாட்டேண்டீ என் கண்ணூ!. பகவானே! நான் உசுரோட இருக்கிறப்பவே இவளைக் கூப்பிட்டுக்கோய்யா.. அழமாட்டேன்யா. ஆமாம். சந்தோசமா வழியனுப்பி வைக்கிறேன். எனக்கு முன்னே இவ போயிரணும்.”

தேமேயென்று தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அவளைக் கட்டிக் கொண்ண்டு விசும்பினார். பிறகு அவளை எழுப்பி பாத்ரூமிற்கு கூட்டிட்டுப் போய், உடைகளைக் களைந்து,குளிப்பாட்டி,டவலால் துடைத்துவிட்டு, உடல் முழுக்க அக்குள், தொடைப்பகுதி இடுக்குகளில் எல்லாம் கேண்டிட் டஸ்ட் பவுடரைக் கொட்டி, அவளுக்கு உடலில் அங்கங்கே ஃபங்கஸ் படை தோல் வியாதி பரவ ஆரம்பித்திருந்தது. அவளுக்கு வேறு நைட்டியைப் போட்டு, ஒழுங்கு படுத்திவிட்டு குளிக்கச் சென்றார்.

• * *

”மஞ்சு! பத்து மணிக்கெல்லாம் கான்ஃபெரன்ஸ் ஹால்ல இருக்கணும்னு சொன்னியேம்மா.”
சொல்லிய அப்பாவைக் கொள்ளைச் சிரிப்புடன் பார்த்த அந்த அழகிய பூக்குவியலுக்கு வயது இருபத்தி நாலு.. இன்றைக்கு அவளுடைய கான்வகேஷன் டே. மஞ்சுளா என்கிற இந்தப் பெண்ணின் காரியக் கிரமங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் இவள் டாக்டர் மஞ்சுளா.எம்.பி.பி.எஸ்.

விழாவில் இவள் பெயரைக் கூப்பிட்டு கோல்டு மெடலிஸ்ட் என்று சொன்ன போது, கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. கவர்னர் இவளுக்கு தங்கப் பதக்கத்தை அணிவித்து கைக்குலுக்கிய போது, அப்பா துரைசாமி சரஞ்சரமாய் கண்ணீர் விட்டழுதார். எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது அவளுடைய தோழிகள் ஓடிவந்து கைக்குலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள். கான்வகேஷன் உடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பும் போது கூட அவளுடைய அப்பாவின் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கவில்லை.

“அப்பா! அடுத்து நான் நரம்பியல் மருத்துவம் படிக்கணும்பா..அதாம்பா என் ஆசை.. தினசரி ஆக்ஸிடெண்டில் மாட்டி எவ்வளவோ இளைஞர்கள் நேரத்தோடு சிகிச்சை பெறாததினால் செத்துப்போறாங்க, அல்லது நடைப்பிணமா வாழறாங்க. எவ்வளவோ பார்க்கிறேன். என் சீனியர் பொண்ணு ஒண்ணு ஆக்ஸிடெண்ட்ல மாட்டி ஆறு மாசமா குழந்தை மாதிரி எதுவுந்தெரியாம பெட்ல கிடக்கிறா. கோரம்பா. அது ஒரு சேலஞ்சிங்கான ஜாப். ஸோ டி.எம் நியூரோ அல்லது எம்.சிஎச். நியூரோ சர்ஜரிதான் என் சாய்ஸ்.”.—-மகள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

“ஆகட்டும்மா! நான் தடுக்கல. வாழ்க்கையில் செட்டில் ஆவறதைப் பத்தியும் பார்க்கணும்மா. வயசு போய்க்கிட்டே இருக்கில்ல?.”

“ஓகே! எனக்கு எந்த டிமாண்டுமில்ல பாருங்க. ஒரு விஷயம். வர்றவன் கிட்ட நான் எம்.ஸிஎச் நியூரோ சர்ஜரி படிக்கப் போறேன்னு முதல்லியே சொல்லிடணும்பா. ஏன்னா எம்.பி.பி.எஸ்.ஸுக்குமேல அஞ்சிவருஷம் படிக்கணும். அதுக்கு அவன் ஓகேன்னா, எனக்கும் ஓகேதான்.”

ஆரம்ப நாட்களில் மஞ்சு அப்படியொன்றும் சூட்டிகை இல்லை. பத்தாம் வகுப்பில் கூட மொத்தம் 320 மார்க்குகள்தான் எடுத்தாள்.. அப்படியிருந்தவள் ப்ளஸ்டூவில் உயிரியல்,இயற்பியல், வேதியல் பாடங்களில் இரண்டில் இருநூறுக்கு இருநூறு, ஒன்றில் நூற்று தொன்னூற்றியெட்டு எடுத்து சாதித்துக் காட்டினாளே. எப்படி?.எது அவளை மாற்றி வைத்தது?. இத்தனைக்கும் ஒரு நடுத்தர கிராமத்தில், சரியான சாலைகளோ, பஸ் போக்குவரத்து வசதிகளோ இல்லாத, குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்களைக் கொண்ட, அதிகம் டி.இ.ஓ. வின் ஆய்வுகளைக் காணாத, ஏனோதானோ பள்ளி அது.. அவளை மாற்றியதின் முக்கிய காரணி அவளுடைய அம்மாவின் திடீர் மறைவு. பாழாய்போன மாரடைப்பில் நிமிடத்தில் மாண்டுபோனாள். தந்தைக்கும் மகளுக்கும் தாங்கமுடியாத அதிர்ச்சி. மூன்று பேர் மட்டுமே கொண்ட ஆனந்தமானஅந்த சின்னக்கூடு ஒரு நொடியில் சிதைய, தாளமுடியாமல்,. அழுதழுது தீத்தார்கள். இறப்பின் இழப்புகளிலிருந்தும், சோகங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட்டு தெளிந்து வரும் காலகட்டத்தில் ஒரு நாள், அப்பனும் மகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி திரும்பியது.

“கண்ணே! உங்கம்மா உன்னைப் பத்தி மனசில் ஒரு பெரிய ஆசையை வளர்த்து வெச்சிருந்தாள் தெரியுமா?. ஒரு வெறி மாதிரி தினசரி கடவுள் கிட்ட அதே வேண்டுதல்தான். எத்தினை கோவில்களுக்கு நேர்ந்துக் கிட்டா தெரியுமா?. நீ டாக்டராகணும். அவ்வளவுதான்..”

“நிஜமாப்பா?. ஒருநாள்கூட அம்மா எங்கிட்ட சொன்னதில்லையே..’—-வியப்பாகப் பார்த்தாள். இது அவளுக்கு புதிய செய்தி.

”த்சு! அது ஊமை கண்ட கனவு மாதிரி.நடக்கமுடியாததை நினைத்தால் என்ன அர்த்தம்?. ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டு நாற்பது, ஐம்பது லட்சங்களுக்குப் போவுதாம். நம்மால முடியுமா?.. என்னுடைய இந்த வயசுக்கு என் பணம்னு சேர்ந்தாற்போல லட்ச ரூபாயை நான் வெச்சிருந்தது கிடையாது. சரி மெரிட்ல கிடைக்கும்னா, அது போகாத ஊருக்கு வழி. உயிரியல், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களில் 200க்கு195க்கு மேல வாங்கணும். அது உன்னால முடியாது. உன் அளவு எங்களுக்குத் தெரியும்..’

“அப்பா!.”

“அதான் கடவுள்கிட்ட போயிட்டாள். ஸ்டோர் ரூம்ல அலமாரியின் கீழ் தட்டுல ஒரு நோட்புக் இருக்கு எடுத்து வாயேன்..”

அவள் போய் எடுத்துக் கொண்டு வந்தாள். தடிமனான பைண்ட் நோட்புக்.பிரித்தாள். உள்ளே முழுக்க கடைசிப் பக்கம் வரையிலும் டாக்டர் மஞ்சுளா.எம்.பி.பி.எஸ், டாக்டர்.மஞ்சுளா.எம்.பி.பி.எஸ்……….புரியாமல் பார்த்தாள்.

“உங்கம்மா செஞ்ச வேலை. ஸ்ரீராமஜெயம் மாதிரி பதிணெட்டாயிரம் தடவை எழுதியிருக்கா.”—–சொல்லும்போதே அவருக்குக் குரல் உடைந்து தழுதழுத்தது. செருமிக் கொண்டார்.

“ எழுதியது பலிக்குமாம். நம்பிக்கை. அழுத்தமான நம்பிக்கை. ராப்பகலாய் ஒரு தவம் மாதிரி எழுதினாள். இன்னும் ரெண்டு பைண்ட் நோட்டு பரண்ல இருக்கு. கடவுள் கிட்ட அப்பீல். அவளுடைய தீவிரத்தைப் பார்த்து, நடக்காதுன்னு தெரிஞ்சும் எனக்குக் கூட ஒரு நப்பாசை வந்திடுச்சின்னா பார்த்துக்கோயேன்..”

“அ.ப்.பா!…அ..ப்..பா..!.”—-ஓடிவந்து அவர் தோளில் முகம் புதைத்தாள். அடக்க அடக்க அழுகை பீறிடுகிறது. அவர் மகளை தட்டிக் கொடுத்தார்.

“அழாதம்மா! கற்பனை வேற, யதார்த்தம் வேற.எனக்குப் புரியுது. உங்கம்மாவுக்கு அது கடைசிவரைக்கும் புரியவேயில்லை.
அழாதம்மா! நீ டீச்சர் டிரெய்னிங் சேர்ந்துடும்மா. சமூகத்தில அதுக்கு ஒரு தனி கவுரவம் இருக்கும்மா.”

அதற்கு மேல் மஞ்சு எதுவும் பேசவில்லை. போய் படுத்துக் கொண்டாள். இரவெல்லாம் அவள் சரியாக தூங்காமல். படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டுதானிருந்தார்.. மறுநாள் காலையில் இருவரும் உட்கார்ந்து டீ குடிக்கும்போது.

“அப்பா…!..அப்பா!…நடக்கும்பா.அம்மாவும், நீங்களும் ஆசைப்பட்டக் கனவு நிச்சயம் பலிக்கும்…அம்மாவை நெனைச்சா எனக்குப் பெருமையா இருக்குப்பா..’—குபுக்கென்று அழுதாள்.

“எவ்வளவு வைராக்கியம்?. பாக்கிறதுக்கு குருட்டு நம்பிக்கை மாதிரி தெரிஞ்சாலும், அதிலதான் எவ்வளவு வெறி?, அழுத்தம்.ராப்பகலாய் எழுதியதையே திரும்பத்திரும்ப பதிணெட்டாயிரம் தடவைகள். அமேஸிங். அந்த வெறியில் கால்பங்கு எனக்கிருந்தாலே போதும் ஜெயிச்சிடுவேன். நான் அம்மாப் பொண்ணுன்னு நிரூபிப்பேன்பா.”.
அதுதான், அந்த உந்துசக்திதான், அன்றைக்குப் போட்ட வித்து, கிளர்ந்த வெறி, எடுத்த ஓட்டம், இன்றைக்கு சாதித்துக் காட்டிவிட்டாள்.டாக்டர் மஞ்சுளா.எம்.பி.பி.எஸ்., கோல்டு மெடலிஸ்ட்.

“அதிகம் படிக்காத உங்கம்மா ஒரு மவுனப்புரட்சியையே நடத்திக் காட்டிட்டா பார்த்தியா?. அவ அப்பீலை கடவுள் ஏத்துக்கிட்டார்னுதானே அர்த்தம்?…”——மஞ்சு நெகிழ்ச்சியுடன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

• * *

அந்தப் பெரியவர் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வெளியே வந்தபோது, அவள் வாயில் நுரை தள்ள கீழே விழுந்துக் கிடந்தாள்.. கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்துக் கொண்டிருந்தன. வலிப்புக்காக தினசரி எப்டாய்ன். 100.மி.கி. மாத்திரை மூன்று வேளையும் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்.. இருந்தும் வலிப்பு நிற்கவில்லை. ஓடிப்போய் அவளை தூக்கமுடியாமல் தூக்கி, ஒருக்களித்து படுக்கப் போட்டு, மிகுந்த பிரயாசையுடன் உதட்டை நீக்கி, நாக்கை கடித்துக் கொள்ளாமலிருக்க ஒரு துண்டு கட்டையை வைத்தார். ஏற்கனவே நாக்கிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் வலிப்பு அடங்க ஆரம்பித்தது.. நாக்கைத் துடைத்து, கடிபட்ட இடத்தில் மருந்து போட்டு, எழுப்பி உட்கார வைத்தார். பின்பக்கம் துணியில் சற்று ஈரமாகியிருந்தது. விலக்கிப் பார்க்க, பேதிபோல் சிறிதளவு மலம் கழிந்திருந்தாள். தலதலையென்று அடித்துக் கொண்டு, அவளை பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று, மீண்டும் ஒருமுறை ஆடை களைந்து, கால் அலம்பி, துணியை அலசிவிட்டு, வேறு நைட்டியைப் போட்டுவிட்டு,….அட்டவணையில் போட்டுவைத்துவிட்ட நிகழ்ச்சிநிரல் போல, திரும்பத் திரும்ப இதே வேலையாய்…..இப்போது சுய இரக்கத்தில் அவருக்கு அழுகை வந்துவிட்டது. கடவுளைத் திட்ட ஆரம்பித்தார். துயரம் மேலிடும்போதெல்லாம் இப்படித்தான் சத்தம் போட்டு கடவுளைத் திட்டிக் கொண்டிருப்பார்.

“அப்பிடி என்னா பாவம் பண்ணிட்டேன்னு எனக்கு இந்த தண்டனைய்யா?. முருகா! பாவி! உனக்குக் கண்ணில்லையா?. என்னதான் நான் பெத்த மவளாயிருந்தாலும் ஒரு வயசுப் பொண்ணைக் குளிப்பாட்றது, கால் அலம்பி விட்றது, உடை மாத்தி விட்றதெல்லாம் எம்மாம் கொடுமையான விஷ்யம்டா முருகா!, பாவி!.”

* * *

டாக்டர்.மஞ்சு அதிர்ஷ்டக்காரிதான். எம்.பி.பி.எஸ். பட்டம் வாங்கிய கையோடு, விஜயா மருத்துவ மனையில், நல்ல சம்பளத்தில் போஸ்டிங் கிடைத்து விட்டது. ட்ரோமா அண்டு எமர்ஜென்சி கேர் அவசரப் பிரிவில் உதவி மருத்துவர்.. இவளுடன் படித்த பலர் இன்னும் பொஸிஷனுக்கு அலைந்துக் கொண்டிருக்கின்றனர். மஞ்சு கோல்டு மெடலிஸ்ட் என்பது காரணமாயிருக்கலாம். நாலெட்ஜ் ஈஸ் பவர்.
தனக்கு போஸ்டிங் கிடைத்ததைக் கொண்டாட தோழிகளுக்கு இன்றிரவு பார்ட்டி கொடுக்க ஒத்துக் கொண்டிருந்தாள். மாலை நாலு மணிக்கெல்லாம் தோழிகள் வந்துவிட்டார்கள். உடன் படித்த சில தோழர்களும் வந்திருந்தனர். ஒரே கூச்சல் கொண்டாட்டம். அப்பாவுக்கு மகளைப் பார்க்க பூரிப்பாக இருந்தது. இரவு ஏழு மணிக்கு ஓட்டல் ராதா பார்க்கில் டேபிள் ரிசர்வ் செய்திருந்தாள். ஆறு மணிக்குக் கிளம்பினார்கள்.

“அப்பா! சாப்பாடு எதுவும் செய்ய வேண்டாம். வரும்போது நான் கொண்டு வர்றேன்..”

துள்ளிக் கொண்டு ஓடினாள். ஸ்கூட்டியைக் கிளப்பும்போது, அவர் ஹெல்மெட்டைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார்.

“வாணாம்பா! வண்டியில வெச்சி லாக் பண்ணமுடியாது. லாக் உடைஞ்சிடுச்சி. பார்ட்டியில கையில வெச்சிக்கிட்டு சுத்த முடியாது. ஓட்டல் ராதா பார்க்தானே. பத்து நிமிஷ ஜர்னி. நான் பார்த்துக்கிறேன்பா.”

“பார்த்துக்க.ஹெல்மெட் இல்லைன்னு போலீஸ் மடக்கப் போவுது மறக்காம போன் பண்ணு..”

“ஓகேப்பா இப்பல்லாம் ரொம்ப பயப்பட்றீங்க. வயசாயிடுச்சி..”——சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள்.
இரவு ஒன்பதைத் தாண்டி விட்டது. இன்னும் மஞ்சு வரவில்லை. அவருக்கு லேசாய் கவலை எட்டிப் பார்த்தது. நான் ஒருத்தன்.

சிட்டியில ராத்திரி பதினொண்ணுன்றதே அகால நேரமில்லை. டிராஃபிக் ஜாம்ல எங்கியாவது மாட்டியிருக்கலாம். சின்னப் பொண்ணில்லை.. இருபத்திநாலு வயசாகிறது. அதிலும் டாக்டர். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத் தெரியும். ரொம்ப பயப்பட்றோமோ?. அதான் நம்மளை டவுட்ஃபுல் தாமஸ்னு கிண்டல் பண்றாளோ. போன் அடித்தது.மஞ்சுவின் கால்.

“அப்பா! டோண்ட் ஒர்ரி. பார்ட்டி முடியப்போவுது. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன்.சீக்கிரமே வந்திட்றேன்.”

அப்பாடா, இப்போது அவருக்கு தூக்கம் வருகிறமாதிரி இருந்தது.பசிமயக்கம் வேற. இனிமேல் கிளம்பி எப்ப வந்து சாப்பாடு கொடுப்பாளோ? அப்பா ஒரு சர்க்கரை நோயாளியாச்சேன்ற சிந்தனை இருக்கா அவளுக்கு?..குக்கரில் அரைக்கால்படி அரிசி கழுவி போட்டிருந்தால் யதேஷ்டம்.இருக்கவே இருக்கு தயிரு. ஃப்ரிட்ஜில் கோதுமை மாவு பிசைந்து தயாராக வைத்திருக்கு. உருட்டி தட்டி நெருப்பில வாட்டியிருந்தால் இந்நேரம் சுக்கா ரொட்டி ரெடி..அவதான் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டாளே. ஈஸிசேரில் சாய்ந்தவர் பசி மயக்கத்தில் அப்படியே தூங்கிப் போனார்.

திடீரென்று யாரோ உலுக்கியது போலிருந்தது.. கெட்ட கனவு. அலறி விழித்தார். மகள் இன்னும் வரவில்லை. லேசாக பயம் கவ்வியது.எழுந்து நேரம் பார்த்தார். 12-50. இப்போது அவருக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தன. இவ்வளவு லேட் பண்ணமாட்டாளே. என் மனசு தெரியும் அவளுக்கு. இல்லை என்னமோ ஆகிவிட்டது.

எதாயிருந்தாலும் போன் பண்ணி சொல்லியிருப்பாள். என் கண்ணே! அவரால் நிற்க முடியவில்லை. வாய் வறண்டு போக, காதோரங்களில் குப்பென்று உஷ்ணம் பரவ, தலை கனத்துக் கொண்டது.

“ஐயோ எஞ்செல்லம்! எங்கடா இருக்கே?.எனுக்கு உன்னை விட்டா யாருடீ இருக்காங்க?. இந்த கிழவனை அநாதையா விட்றாதடீ கண்ணூ!.”—- பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். நடுங்கும் கரத்தால் மஞ்சுவின் செல் நெம்பரைத் தட்டினார்.ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

“ ஐயோ! என்ன பண்ணுவேன்?. எங்கொழந்தைக்கு என்னவோ ஆயிடுச்சி. அவளை யாரோ என்னவோ பண்ணிட்… ஒரு வேளை யாரோ ஒரு டாக்டர் பையன் இவள் பின்னாலேயே சுத்தறான்னு நேத்து அவனை கடுமையாய் திட்டிட்டேன்னு சொன்னாளே அவன் ஏதாவது பண்ணியிருப்பானோ?…”— அவசரமாய் அவள் தோழி மிருணாளினிக்கு போன் செய்தார்.

‘மிருனா! அப்பா பேசறேம்மா. பார்ட்டி இன்னுமா முடியல?..”

” என்னப்பா? பார்ட்டி முடிஞ்சி 9-40.க்கே கெளம்பிட்டோமே.”

“ஐயய்யோ! எங்கொழந்தைக்கு என்னமோ ஆயிடுச்சிம்மா அவ இன்னும் வீட்டுக்கு வரலியே. ஐயோ கடவுளே! என்ன பண்ணுவேன்?.கண்ணே! எங்கடா இருக்கே.”

“அப்பா! ப்ளீஸ் கற்பனை பண்ணிக்காதீங்க. அவளுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.விஜயாவிலயிருந்து எமர்ஜென்சி கால் வந்து போயிருப்பாள்.. சீக்கிரம் வந்துடுவா பாருங்க. நீங்க டயாபடிக் பேஷண்ட்னு பார்த்துப் பார்த்து சாப்பாடு பேக் பண்ணி எடுத்துக்கிட்டாளே.வந்துடுவா இருங்க.”

” எதுவா இருந்தாலும் எனுக்கு போன் பண்ணியிருப்பாளே.நான் பயப்படுவேன்னு தெரியும்மா. ஐயோ…ஐயய்யோ!.”

“அப்பா!…அப்பா!…ப்ளீஸ் மனசை விட்றாதீங்க. இதோ கிளம்பி அங்க வர்றேன். அவ மனசுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. திடீர்னு வந்து நிப்பா பாருங்களேன்.”

அடுத்த அரை மணியில் அவள் சிநேகிதிகள் இரண்டு கார்களீல் ஓடி வந்தார்கள்.. அவருக்கு மாலைமாலையாய் வியர்வை கொட்ட நிதானமிழந்து தள்ளாடிக் கொண்டிருந்தார்…பார்த்த பார்வையிலேயே மிருணாளினிக்குப் புரிந்துபோயிற்று. சர்க்கரை அளவு குறைந்து போயிருக்கிறது. ராத்திரி சாப்பிட்டிருக்கமாட்டார். அதற்குள் அவர் தலை தொங்கிப் போயிற்று. அவசர அவசரமாக டாஷ்போர்ட்டை திறந்து குளுக்கோஸ் பாக்கெட்டை எடுத்து ஃப்ளாஸ்க் கப்பில் கொட்டி கலக்கி புகட்டினார்கள். ஒருத்தி அவர்.கன்னத்தைத் தட்டி சுய நினைவுக்கு கொண்டுவர முயன்றுக் கொண்டிருந்தாள். குளுகோஸ் திரவம் உள்ளே போகப்போக, சற்று நேரத்தில் தெம்பு வர, சுய நினைவு திரும்பியது.. சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரை கைத்தாங்கலாய் பிடித்துக் கொண்டு போய் காரில் ஏற்றினார்கள். ஓட்டல் ராதாபார்க் வரை போய் பார்த்துவிட்டு, அப்புறம் போலீஸ்கிட்ட போகலாம் என்று கிளம்பினார்கள். ஓட்டலை நெருங்கும் போது கிழவருடைய செல் ஒலித்தது.மஞ்சுவின் போன்கால்.

“அவதான்…அவதான்…கண்ணே! எம்மா!.”—-அவருக்கு குரல் உதறியது.

“டாக்டர் மஞ்சுளாவின் அப்பாவா அது?.”—ஒரு முரட்டுக் குரல்.

“ஆமாம்…ஆ..ஆமாம்.என் பொண்ணோட செல்ல பேசறீயே யாருய்யா நீ? எம்பொண்ணு எங்க?”

“பெரியவரே! நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். சீக்கிரமா ஜி.எச்.க்கு வாங்க.”

”ஐயய்யோ!”—-…அதற்கு மேல் அவரை கண்ட்ரோல் பண்ணுவது அவர்களுக்கு ரொம்பக் கடினமாகப் போய்விட்டது.கத்த ஆரம்பித்து விட்டார்.

அவர்கள் ஜி.எச்.க்குள் போனபோது, ஐ.சி.யூ வில் கண்ணாடி வழியாக மஞ்சுவைக் காட்டினார்கள். தலை துப்புரவாய் மழிக்கப்பட்டு பேண்டேஜ் சுற்றப் பட்டிருந்தது.. ரத்த நாளங்களில் திரவம் இறங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க். பக்கத்தில் இ.சி.ஜி. மானிட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. கிழவர் இப்போது அழும் கட்டத்தைத் தாண்டி ஒரு உன்மத்த நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.அப்போது நியூரோ சர்ஜரி டிபார்ட்மெண்ட்டின் மருத்துவர் ஐ.சி.யூ.விலிருந்து வெளிப்பட்டார்.

“இவர்தான் டாக்டர் மஞ்சுளாவின் அப்பாவா?.”

கிழவர் ஓவென்று கதறியபடி டாக்டரின் காலில் விழுந்தார்.

“புவர் கேர்ள். எம்.எம்.சி. யிலதான் எம்.பி.பி.எஸ். முடிச்சாங்களாமே?”

“எஸ் சார்! போன மாசந்தான் நாங்க எல்லோரும் கான்வகேஷனை முடிச்சோம் சார். மஞ்சுளா கோல்டு மெடலிஸ்ட் டாக்டர்..”—–சொல்லும்போதே மிருணாளினியும் மற்ற தோழிகளும் அழுதார்கள்.

“அவளுக்கு என்னாச்சி டாக்டர்?.”

“ஆக்ஸிடெண்ட். தலையில் பலமான அடி. .டிஃப்யூஸ் ஆக்ஸானல் இன்ஜுரி.. லாஸரேஷன், சிவியர் டேமேஜ்.. யாருன்னு தெரியாம பட்ரோல் போன ஜீப் கொண்டுவந்து போட்டது. உள்ளே நிறைய ரத்தக் கசிவு. வெய்ட் பண்ணமுடியாத கண்டீஷன்.. எந்த நிமிஷமும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலை. ஸோ உடனே தியேட்டருக்குக் கொண்டு போயிட்டோம்..ஒருமணி நேரமாக எங்க டீம் போராடி, அந்த பொண்ணுடைய உயிரை மட்டுந்தான் காப்பாத்த முடிந்தது. நோ யூஸ் தன் உணர்வுகள் சுத்தமாக அழிஞ்சி போச்சி. உயிரோடு இருப்பா, ஆனால் ஒரு ஜடமாக. ஒரு செடி மாதிரி, கொடிமாதிரி, ஒருமரம் மாதிரி.”

“ஐயோ..!ஐயோ..!.”—கிழவர் தலையில் மாறிமாறி அடித்துக் கொண்டழுதார்.

“ஆமாம் இப்ப அழு. உன் பொண்ணு வண்டியில கெளம்பினப்போ ஹெல்மெட் கொடுத்து அனுப்பியிருந்தா இப்படி ஆயிருக்குமா?.சே! எனக்கே தாங்கலம்மா. ஒரு கோல்டு மெடலிஸ்ட்டினுடைய வாழ்க்கை இப்படியா அநியாயமா போவணும்?.”

டாக்டர் சற்று இடைவெளி விட்டு பேசினார்.

“இந்தப் பொண்ணோட ஸ்கூட்டி வெளியே நிக்குது. போய்ப் பாருங்களேன். ஒரு டேமேஜ் இல்லை அந்தப் பொண்ணுக்கும் லேசான சிராய்ப்புகளைத் தவிர வேற அடி இல்லை ஈட்டியில குத்தின மாதிரி தலையில் ஒரேயொரு அடி. என்ன அர்த்தம்?.ஸ்கூட்டி ஸ்கிட் ஆனதில கீழே விழுந்திருக்கா. ரோட்டோரத்திலிருந்த கூரான கல் தலையில் குத்தி துளைச்சிருக்கு. அவ்வளவுதான்.”

அதற்குள் விஷயம் பரவி மருத்துவ கல்லூரி ஹாஸ்டலிலிருந்து மாணவர்களும்,மாணவிகளும், டாக்டர்களும் அரைத்தூக்கத்தில் எழுந்து வந்து கூட ஆரம்பித்தனர். மீண்டும் டாக்டர் பேச ஆரம்பித்தார்.

“முட்டாள் பெண்ணே! ஹெல்மெட் போட்டிருந்தா இது ஆக்ஸிடெண்ட்டே இல்லை. எழுந்து உதறிக் கொண்டு போகிற விஷயம்.. சே! இன்றைய யூத்கள் ஏந்தான் இப்படி அலட்சியமா உயிரை மாய்ச்சிக்கிறாங்களோ தெரியலியே.. எதுவும் நடக்காதுன்னு போறப்போ நேர்றதுதான் ஆக்ஸிடெண்ட். இது உயிர் போறதுக்கு முந்தி புரிஞ்சி என்ன பிரயோசனம்?.இப்ப. இவளுக்கு பசின்னும் தெரியாது, அதுக்கு சோற்றை எடுத்து வாயில வைக்கணும்னும் தெரியாது. ஊட்டினால் விழுங்கும். ஒரு. செடி மாதிரியான இந்த ஜடத்தை இந்த வயசான பெரியவர் எப்படி காப்பாத்துவார்?,எத்தனை நாளைக்கு? அதுக்கப்புறம் இதன் கதி?..”

“ஐயோ! என் கண்ணே! அம்மாடீ! நரம்பியல் டாக்டராகணும்னு ஆசைப் பட்டியேடா.. இந்த கதிக்கு ஆளாயிட்டியே?என் கண்ணே!. கீதாக்குட்டி!….கீதூ!.”—– கிழவர் ஹிஸ்டீரிக்கலாய் கத்திக் கொண்டேயிருந்தார்..டாக்டருக்குப் புரியவில்லை

“என்னது…கீதாக்குட்டியா?. இது டாக்டர். மஞ்சுளாதானே?.”

“கீதா அவளுடைய பெட் நேம் சார்!. வீட்டில கூப்பிட்றது..”

* * *

மூத்திர நாற்றமடிக்கும் அந்த அழுக்கு வீட்டில் இப்போது பெரியவர் மனம் பேதலித்த அந்தப் பெண்ணுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருக்கிறார்..

“கீதாக்குட்டி!….ஆ..காட்டு…ஆ…காட்றா…ஆ…ஆ…ஆ!”
அந்த கீதாச்செடி ஆகாட்டியது…

– மார்ச் 2008

Print Friendly, PDF & Email
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *