(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
து.ரா. அவர்கள் 1935ம் வருஷம் தன்னுடைய 15 வயதில்
தான் எழுதிய முதல் சிறுகதை என்று சொன்னது.
1
கிருஷ்ணகிரி அரசன் வீரமார்த்தாண்டன் மைசூர் ராஜ வம்சத்தில் பிறந்த ஒரு சிற்றரசன்; அமோகமான ஐசுவரியத்துக்குத் தலைவன். புகழ் பெற்ற கோமதி வைரங்கள் இரண்டும் அவனிடத்தில் இருந்தன. வைரமொன்று ஓர் எலுமிச்சம்பழம் அவ்வளவு பெரியது. விலை மதிக்க முடியாத இவ் வைரங்கள் ஒரு காலத்தில் ஸோமநாத் கோயிலுக்குச் சொந்தமாயிருந்தன என்றும் அவை எப்படியோ வீரமார்த்தாண்டன் வசம் வந்தனவென்றும் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். கோமதி வைரங்கள் அவற்றை வைத்திருப்பவருக்குத் தீங்கு தரும் என்ற நம்பிக்கையும் வழக்கத்தில் இருந்தது. ஆனால் இதைப் ‘பாட்டிக் கதை’ என்று எண்ணி வீரமார்த்தாண்டன் பொருட்படுத்தவில்லை. கோமதி வைரங்கள் தன்னிடம் இருந்ததைக் குறித்து அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியும் பெருமையும் சொல்லி முடியாது.
கடுமையான கோடைக் காலம். அனல்காற்று வீசிக்கொண்டிருந்தது. வீரமார்த்தாண்டனுடைய அரண்மனையைச் சுற்றியிருந்த தோட்டத்தின் ஒரு கோடியில் ஓர் அழகிய பங்களா இருந்தது. அதற்குள் ஒரு மஞ்சத்தின் மேல் சாய்ந்துகொண்டு ஹேமாவதி உஷ்ணம் தாங்கமாட்டாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். ஹேமாவதி அரசனுடைய இளைய சகோதரி. எங்கராயனுடைய மனைவி. தமையனும் தங்கையும் வெகு அந்நியோந்நியமானவர்கள்.
“ஹேமா” என்று கூப்பிட்டுக்கொண்டே எங்கராயன் உள்ளே வந்தான். எங்கராயன் அவ்வளவு நல்லவனல்ல. பேராசையும் பொறாமையும் அவனிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஹேமாவுக்காக எங்கராயன் தன் உயிரையும் விடக்கூடியவன்; அவளிடம் அவ்வளவு அன்பு கொண்டிருந்தான். வீரமார்த்தாண்டன் ஹேமாவிடம் அதிகப் பிரியமாக இருக்கிறான் என்று அவன் சில சமயம் பொறாமைப்பட்டது கூட உண்டு.
எங்கராயனைக் கண்டதும் ஹேமாவதி எழுந்திருந்து அவனைக் கையைப் பிடித்திழுத்து மஞ்சத்தில் உட்கார வைத்தாள்.
“எங்கே போயிருந்தீர்கள்? வெயில் வீணாய்ப் போகிறது என்று எண்ணமோ?” என்றாள். எங்கராயன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை.
-ஹேமா, நீதான் சொல்லேன். நான் வேறு எங்கே போயிருக்கப் போகிறேன்; எல்லாம் உன் தமை யனைப் பார்க்கத்தான். அரண்மனையில் கொஞ்சம் வேலை இருந்தது. அத்துடன் ஒரு வைர வியாபாரி கோமதி வைரங்களைப் பார்க்க வந்திருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்” என்று கூறிச் சிரித்தான். ஹேமா தன் மருண்டவிழிகளைச் சுழற்றிக் கொண்டே, “அண்ணாவுக்கு வேறு என்ன வேலை? எப்போது பார்த்தாலும் கோமதி வைரங்கள் தாம்; விற்றுவிடு என்றால் கேட்கிறானா? கோமதி வைரங்கள் கெடுதி விளைக்கும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். அதென்னவோ, எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கிறது!” என்று கொஞ்சலாகக் கூறினாள்.
“அடி அசடே! நீ ஏன் இதற்கெல்லாம் பயப் படுகிறாய்? நாங்கள் இல்லையா, ஆண்பிள்ளைகள்? உனக்கு ஒரு கெடுதியும் வராமல் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?” என்று சொல்லிவிட்டு எங்கராயன், “அது இருக்கட்டும், ஹேமா; வீரமார்த்தாண்டன் அந்த வைரங்களை எங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்? ஒரு வேளை, உனக்குக்கூடத் தெரியாதோ?” என்றான்.
ஹேமா ஏதோ பெரிய வெற்றியடைந்துவிட்டவள்போல் தன் தலையை உயர்த்திக்கொண்டு, “ஓ, அதுவா! அண்ணாவுக்கும் எனக்கும் மட்டுந்தான் தெரியும். உங்களுக்குச் சொல்லுவேன் என்று நினைத்துக் கொண்டீர்களோ? நான் சொல்லுவேனோ!” என்றாள்.
“சொல்லாவிட்டால் போயேன்” என்று கோபமடைந்தவன்போல் எங்கராயன் தலையைத் திருப்பிக் கொண்டான். ஹேமாவதி அவன் மோவாய்க்கட்டையைப் பிடித்து அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.
“சொல்லட்டுமா, சொல்லிவிடட்டுமா, சொல்லியே விடட்டுமா?” என்று கேட்டுவிட்டு, “கோமதி வைரங்கள் அண்ணாவின் படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே இருக்கும் இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. ஐயையோ! ரகசியத்தைச் சொல்லிவிட்டேனே! யாரிடத்திலும் சொல்லப்படாது, தெரியுமா?” என்று எங்கராயன் வாயைப் பொத்தினாள்.
பத்து நாட்களுக்குப் பிறகு அரண்மனையில் பெரிய கலவரம் ஏற்பட்டது. கோமதி வைரங்கள் திருட்டுப் போய்விட்டன. வீரமார்த்தாண்டன் அடிக்கடி அவற்றைப் பெட்டியிலிருந்து எடுத்துப் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிப்பது வழக்கம். அப்படியே அன்றும் பெட்டியைத் திறந்து பார்த்தான். வைரங்களைக் காணவில்லை. திருட்டுப்போய் விட்டதென்று முதலில் அவனால் நம்ப முடியவில்லை.
அரண்மனையில் களவு நடந்த செய்தி ஊரெங்கும் காட்டுத் தீயைப்போல் பரவிற்று. ஹேமாவதியின் காதுகளுக்கு இச்செய்தி எட்டியதும் அவள் அப்படியே இடி விழுந்தவள் போல் உட்கார்ந்துவிட்டாள். “திருட்டுப் போய்விட்டதா? கோமதி வைரங்களா? அரண்மனைக்குள் எப்படித் திருடன் வந்தான்? வைரங்கள் இருந்த இடம் எப்படித் திருடனுக்குத் தெரிந்தது? எனக்கும் அண்ணாவுக்கும் மட்டுந்தானே – ” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் திடுக்கென்று நிறுத்தினாள். பத்து நாட்களுக்குமுன் தான் எங்கராயனிடம் சொன்னது நினைவிற்கு வந்தது. மார்பு படார் படார் என்று அடித்துக்கொண்டது; அவள் மனசில் பல சந்தேகங்கள் எழுந்தன.
அரண்மனையிலிருந்து எங்கராயன் வந்தவுடன் ஹேமா நேராக அவனிடம் சென்று, “கோமதி வைரங்கள் போய் விட்டது உண்மைதானா?” என்றாள்.
“உண்மைதான்” என்று அவன் தலையசைத்தான்.
“அன்று நான் உங்களிடம் சொன்னேனே, அதை யாரிடமாவது சொன்னீர்களா என்ன?”
“என்ன, ஹேமா, என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? எனக்குப் புத்தி இல்லையா?……” என்று ஆரம்பித்த எங்கராயனைப் பேசவிடாமல் தடுத்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஹேமா.
“அண்ணா இந்தத் துரதிருஷ்டத்தை எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறான்? பாவம்! என்னை எப்படி நேசித்தானோ, அப்படி அந்த வைரங்களை நேசித்தானே! எனக்கென்னவோ இது சாதாரணத் திருடன் செய்த வேலையாகத் தோன்றவில்லை. அரண்மனையைச் சேர்ந்தவர்களே யாரோ செய்திருக்கிறார்கள். எப்படியாவது இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள்.
எங்கராயன் ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டு, “ஹேமா, நீ பேசாமல் இரு; நாங்கள் ஆண்பிள்ளைகள் எதற்காக இருக்கிறோம்? என்ன செய்யவேண்டு மென்பது எங்களுக்குத் தெரியாதா?” என்று கூறினான். அவன் பேசிய விதம் ஹேமாவதிக்குப் பிடிக்கவில்லை.
2
நடு நிசி. அமாவாசை கழிந்த ஆறாம் நாள். இளம் பிறைச்சந்திரன் வெண்மையான மேகங்களின் நடுவில் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். இடையிடையே ‘க்ரீச்’ என்று கத்திக்கொண்டிருந்த ஆந்தையின் குரலொலியைத் தவிர இரவு சந்தடியற்று இருந்தது. எங்கராயன் படுக்கையை விட்டு எழுந்து அடிமேல் அடி வைத்துச் சப்தம் செய்யாமல் பங்களாவை விட்டு வெளியே வந்தான். கனவு கண்டு விழித்தவள் போல் விழித்துக்கொண்ட ஹேமாவதி, எங்கராயன் சத்தப் படாமல் கதவைச் சாத்திக்கொண்டு போவதைப் பார்த்தாள். அவள் மனசில் ஏதோ சந்தேகம் தோற்றியது. சந்தடி செய்யாமல் தானும் எழுந்து எங்கராயன் அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.
ஓங்கி வளர்ந்த மரங்களின் அடர்த்தியான இலைகள் சந்திர கிரணங்களை மறைத்துக்கொண்டிருந்ததால் தோட்டம் அந்தகாரத்தில் மூழ்க யிருந்தது. அந்தக் கும்மிருட்டில் தோட்டத்தின் ஒரு கோடியை நோக்கி எங்கராயன் வேகமாக நடக்க, அவனைப் பின் தொடர்ந்து ஹேமாவதி தட்டுத் தடுமாறிக்கொண்டு சென்றாள். பயத்தினாலும் குளிரினாலும் அவள் தேகம் வெடவெடவென்று உதறிற்று.
சிறிது நேரத்தில் இருவரும் மரங்களடர்ந்த நந்தவனத்தை விட்டு வெட்ட வெளியாக இருந்த இடத்துக்கு வந்தார்கள். எதிரில் இருட்டுடன் கலந்து பயங்கரமான பிசாசுபோல் நின்றிருந்த இடிந்த கட்டிடமொன்று தென்பட்டது. இந்த நள்ளிரவில் மனிதசஞ்சாரமற்ற பாழடைந்த காளி கோயிலுக்கு எங்கராயன் ஏன் வரவேண்டும்?
எங்கராயன் கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் வரவை எதிர்பார்த்திருந்த இரண்டு உருவங்கள் தாங்கள் இருந்த இடத்தை விட்டு எழுந்து முன் வந்தன. ஒன்றும் விளங்காதவளாய் ஹேமாவதி பிராகாரத்தின் முன்னிருந்த ஒரு பெரிய கல் தூண் மறைவில் நின்று கவனித்தாள்.
“என்ன, ஏமாங்கதா, வஸந்தா! ஏற்பாடுகள் எவ் வளவு மட்டில் இருக்கின்றன?” என்று எங்கராயன் கேட்கும் குரல் கேட்டது. கோயிலில் காத்துக்கொண்டிருந்தவர்கள் ஏமாங்கதன், வஸந்தன் என்ற சகோதரர்கள் என்று தெரிந்ததும் ஹேமாவதி, “இவ்விருவரும் அரண்மனை வேலைக்காரர்கள். இவ்வளவு கீழ்த்தர அந்தஸ்து உடையவர்களுடன் நம் கணவர் என்ன விஷயத்தைப்பற்றிப் பேசப் போகிறார்?” என்று ஆச்சரியத்துடன் பேச்சைக் கவனமாகக் கேட்டாள்.
“ஸ்வாமி, ஏற்பாடெல்லாம் முக்கால் வாசி ஆகி விட்டது. வைரங்களை எங்கே ஒளித்து வைப்பதென்றுதான் தெரியவில்லை.”
பேசினது ஏமாங்கதன் குரல். ஹேமாவதியின் உடம்பு நடுக்கமெடுத்தது; “ஐயோ, நாம் சந்தேகித்தது சரியாய் விட்டதே!” என்று வருத்தமும், பயமும், கோபமும் ஒருங்கே அடைந்தாள். எங்கராயன் பேசலானான்:
“அரண்மனைக்குள் இருப்பவர்களே இந்த வேலையைச் செய்திருக்க வேண்டுமென்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறபடியால் வைரங்களை அரண்மனைக்குள் ஒளித்து வைப்பதென்பது முடியாத காரியம். கொண்டுபோய் இப்போதே விற்று விடலாம் என்று பார்த்தால் முழு ஏற்பாடுகளும் முடியவில்லை என்கிறாய். அதுவரையில் வைரங்களை இந்தக் கோயிலிலேயே ஒளித்து வைப்பது தான் உசிதமென்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?”
சிறிது நேரம் ஒருவரும் பேசவில்லை. ஏமாங்கதனும் அவன் சகோதரனும் எங்கராயன் வார்த்தைகளை ஆராய்வதாகத் தெரிந்தது. கடைசியில் வஸந்தன், “ஸ்வாமி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது” என்றான்.
“என்ன யோசனை?”
“அதோ அங்கே காளியின் சிலை இருக்கிறதல்லவா? அதற்கு இரண்டு ஆழமான கண்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கண்ணிலும் ஒரு வைரக்கல்லை வைத்துக் கருமையான மெழுகை மேலே அப்பிவிட்டால் ஒரு விதமான அடையாளமும் தெரியாது. காளி விக்கிரகத்தை நெருங்க எவரும் துணியமாட்டார்கள். அப்படிக் கிட்டச் சென்று பார்த்தாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. சோதனை நடந்தாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை; என்ன நான் சொல்வது?”
“நல்ல யோசனை தான்” என்று ஏமாங்கதனும் எங்கராயனும் ஒப்புக்கொண்டார்கள்.
“வஸந்தா, வேலை செய்வதற்கு வேண்டிய சாமான்களெல்லாம் வைத்திருக்கிறாயா?” என்று எங்கராயன் கேட்க, வஸந்தன், “முன்னால் யோசனை செய்து எல்லாம் தயாராய்க் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.
“வேலை நடக்க வேண்டியது தானே?” என்று கேட்டுக்கொண்டே காளியின் சிலையை அணுகினான் எங்கராயன்.
நக்ஷத்திரம்போல் ஜ்வலித்துக்கொண்டிருந்த இரண்டு பெரிய வைரக் கற்கள் அவன் உள்ளங்கையில் தோன்றி மறுநிமிஷம் காளியின் குழி விழுந்த கண்களுக்குள் சென்று கல்லோடு கல்லாய் மறைந்தன.
“அது என்ன?”
“எது என்ன?”
“காலடிச் சத்தம் கேட்டதுபோல் இருந்ததே?”
“ஒன்றும் இல்லை. காற்று அடித்தது. அவ்வளவுதான்.”
மூவரும் கோயிலை விட்டு வெளியே வந்தார்கள். ஹேமாவதி அவர்களுக்கு முன் வெகு வேகமாக நடந்து பங்களாவை அடைந்து தூங்குவதுபோல் படுக்கையில் கிடந்தாள். அவள் மனம் பட்டபாட்டைச் சொல்ல முடியாது.
3
எங்கராயன் உண்மையில் கோழையாக இருந்தாலும் பேராசையும் பொறாமையும் அதிகமாக உடையவன். வைரங்களைத் திருடுவதற்காக அவன் சிருஷ்டித்த சதியாலோசனைக் கூட்டத்தில் அவனே தலைவன். ஆனால் உண்மையில் திருட்டை நடத்தியவர்கள் ஏமாங்கதனும் வஸந்தனுமே. எங்கராயன் அவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுப்பதாக வாக்களித்திருந்தான். ஆனால் காரியம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது என்று தோன்றிய பிறகு அவனுக்குச் சபலம் தட்ட ஆரம்பித்தது. இந்தப் பயல்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டுமே. “சே! இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவனுக்கு இவர்களை ஏமாற்றுவது தானா கஷ்டம்?” என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். எப்போது இரவு வரும் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு நடுநிசியில் பங்களாவை விட்டுப் புறப்பட்டான்.
எங்கராயன் செய்கைகளைக் கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த ஹேமாவதி முன் செய்தது போலவே இன்றும் அவனைத் தொடர்ந்து சென்றாள். காற்று ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது. தென்மேற்கு அடிவானத்திலிருந்து கறுத்த மேகங்கள் கிளம்பி மேலே வந்துகொண்டிருந்தன. இடையே ‘பளிச்’, ‘பளிச்’ சென்று மின்னல் தோன்றி மறைந்தது.
காளி கோயிலில் இன்று ஒருவரும் காணப்படவில்லை. அந்த நள்ளிரவின் நிச்சப்தத்தினிடையே, எங்கராயன் கதவைத் திறந்தபோது ஏற்பட்ட ‘கிரீச்’ என்ற சப்தம் மனத்திற்கு அச்சத்தைக் கொடுத்தது. எங்கராயன் உள்ளே நுழைந்தான். இருட்டில் தட்டுத் தடுமாறிக்கொண்டே காளியின் சிலையை அடைந்தான். அவன் கைகள் விக்கிரகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் தடவித் தடவிப் பார்த்து விட்டுக் கடைசியில் அதன் கண்களைக் கண்டுபிடித்து நின்றன. எங்கராயன் தன் உடைவாளை உருவி, காளியின் கண்களின்மேல் பூசியிருந்த மெழுகைக் கீற ஆரம்பித்தான்.
திடீரென்று அவன் பின்னால் சப்தம் கேட்டது. அவன் தோள்மேல் ஒரு கை விழுந்தது. எங்கராயன் திடுக்கிட்டுத் திரும்பினான். அவன் மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது. உரோமங்கள் குத்திட்டு நின்றன. தனக்கு எதிரில் மங்கலாகக் காணப்பட்ட உருவத்தைப் பீதியுடன் நோக்கினான். அந்தக் காடாந்தகாரத்தில் அந்த உருவம் யாருடைய தென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மறுகணம் அவன் கையிலிருந்த உடைவாள் மேலெழுந்து எதிரிலிருந்த உருவத்தின் மார்பில் பாய்ந்தது. ரத்தம் பீரிட்டடித்து அவன் முகத்தை நனைத்தது. குத்துண்ட ஹேமாவதி சப்தம் செய்யாமல் சாய்ந்து காளியைக் கட்டிக்கொண்டாள். கால்கள் உடைந்திருந்த கற்சிலை இடம் பெயர்ந்து கீழே சாய்ந்தது. அத்துடன் ஹேமாவதியின் உயிரற்ற உடலும் உருண்டு விழுந்தது. பாழடைந்த கோயிற் சுவர்களிலிருந்து ‘ஹாய்’ என்று எதிரொலி கிளம்பிற்று.
எங்கராயன் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவன் வைரத்தை மறந்தான். கோயிலை விட்டு வெளியே வந்து பங்களாவை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
பெருமூச்சு வாங்கத் தன் படுக்கையறையை அடைந்த பின்னரே நின்றான் எங்கராயன். ஹேமாவதி எங்கே விழித்துக்கொள்ளப் போகிறாளோ என்று பயந்து படுக்கையைப் பார்த்தான். படுக்கை காலியாக இருந்தது. திடுக்கிட்டான். “ஹேமா! ஹேமா!” என்று கூப்பிட்டான். பதில் இல்லை. விளக்கை ஏற்றிப் பங்களா முழுதும் அறை அறையாகப் புகுந்து தேடப் புறப்பட்டான். ஹேமா இருந்தால்தானே? ‘இந்நேரத்தில் எங்கே போயிருப்பாள்?’ என்று யோசித்துத் திடீரென்று திகிலடைந்தான். ‘ஒரு வேளை நான் காளி கோயிலில் பார்த்தது…சே, அது எப்படி இருக்க முடியும்?’ என்று சொல்லிக் கொண்டான். அவன் மனசில் எழுந்த சந்தேகத்தைப் போக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ‘ஹேமா…தா…னோ…?’ என்று அவன் மனம் துடித்தது. முகத்தில் படிந்திருந்த ரத்தம் காய்ந்து வறவறவென்று இழுக்க ஆரம்பித்தது. பைத்தியம் பிடித்தவன்போல் மறுபடியும் காளி கோயிலை நோக்கிக் கல்லென்றும் முள்ளென்றும் பாராமல் ஓடினான்.
4
பிறரை வஞ்சித்துத் திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்களுடைய பழக்கம் பொல்லாதது. கடைசியில் அவர்கள் தங்கள் கூட்டத்திற்குள்ளேயே ஒருவரை யொருவர் ஏமாற்றப் பார்ப்பார்கள். இதனாலேயே இவர்களுக்கு அழிவு ஏற்படும். எங்கராயன் தன் தோழர்களைத் துரோகம் செய்து, தானே முழு லாபத்தையும் அடைய எண்ணிய அதே இரவு ஏமாங்கதன், வஸந்தன் என்ற இருவருக்குங்கூட அதே மாதிரியான துரோக சிந்தை எழுந்ததில் ஆச்சரியமில்லை யல்லவா?
“அண்ணா, தன் சொந்த மைத்துனனை வஞ்சித்த இந்த எங்கராயன் நம்மை ஏமாற்றமாட்டானென்பது என்ன நிச்சயம்?” என்று வஸந்தன் தன் கருத்தை வெளியிட ஆரம்பித்தான்.
“ஒன்றும் பயப்படாதே. நம்மிடம் வாலை ஆட்ட மாட்டான்” என்று ஏமாங்கதன் சொன்ன பின்பும் வஸந்தன் திருப்தியடையவில்லை.
“நம்மை அவன் ஏமாற்றுவதற்குள் நாம் அவனை ஏமாற்றிவிடுவோம்” என்று கூறித் தன் தமையனையும் தன் இஷ்டத்திற்கு இணங்கச் செய்தான்.
எங்கராயன் ஹேமாவதியைக் குத்திக் கொன்று விட்டு ஓடின மறு நிமிஷமே ஏமாங்கதனும் வஸந்தனும் காளி கோயிலுக்குள் பிரவேசித்தார்கள். இருட்டில் தடவிக்கொண்டே இருவரும் மூலஸ்தானத்தை அடைந்தார்கள். வஸந்தன் வலது கையில் ஆணியொன்றைப் பிடித்துக்கொண்டு காளியின் சிலையைத் தடவிக் கண்டுபிடிக்க ஆரம்பித்தான். ஆனால் சிலை, இருக்கவேண்டிய இடத்தில் இல்லாமல் போகவே, துணுக்குற்றான். நாலுபுறமும் தடவு கையில், கீழே கிடந்த சிலை தட்டுப்பட, அதனுடைய கண்களைத் தேடினான்.
அன்றிரவு காளி கோயிலில் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினவர்களை அந்தக் காரியத்தை இடையூறின்றிச் செய்து முடிக்கும்படி விடக் காளிகா தேவிக்கு இஷ்டமில்லை போலும்! ஏனெனில் வஸந்தன் காளியின் கண்களைத் தேடத் துவக்கின அதே சமயத்தில் கோயில் வாசற் கதவின்மேல் திடீரென்று விளக்கு வெளிச்சம் விழுந்தது. யாரோ வரும் சத்தம் கேட்டது. கையில் விளக்குடன் ஓர் உருவம் கோயிலுக்குள் வந்தது. ஏமாங்கதன் திடுக்கிட்டு, “ஆ, மகாராஜா!” என்று கூவினான். வஸந்தன் கையில் பிடித்திருந்த ஆணி கீழே விழுந்தது. உள்ளே வந்தவன் அரசன் மார்த்தாண்டனே!
வீரமார்த்தாண்டன் ஒரு கணம் அசைவற்று நின்று, பின், “யாரது, ஏமாங்கதனும் வஸந்தனுமா? இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே காளியை அணுகினான்.
வஸந்தனும் ஏமாங்கதனும் பேசவில்லை. அரசன் காளி சிலையை அதன் பீடத்தில் காணாமல், கீழே விளக்கைத் தாழ்த்திப் பிடித்தான். மூவரும் ஒரே சமயத்தில் “ஆ!” என்ற கூச்சலுடன் பின் வாங்கினார்கள். கீழே கிடந்த காளி விக்கிரகத்தையும் அதனருகிலிருந்த ஹேமாவதியின் சவத்தையும் அவர்கள் ஏககாலத்தில் பார்த்தார்கள்.
வீரமார்த்தாண்டன் உடல் பதறத் தன் பக்கத்தில் நின்றிருந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் மூச்சு, சப்தத்துடன் வெளி வந்தது. “கொலைகாரர்களா!” என்று அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்ன வார்த்தை சரியாகவே காதில் விழவில்லை. பளிச்சென்று உறையிலிருந்து வெளிவந்த அவன் உடைவாள் வஸந்தனை உடல் வேறு தலை வேறாகச் செய்தது. மறுபடியும் வாளை ஓங்கின அரசன் ஏனோ அதைத் தாழ்த்தி விட்டுக் கீழே கிடந்த தன் சகோதரியின் உடலைப் பார்த்துக் கதறினான்; “ஐயோ, ஹேமா! ‘காளி கோயிலுக்குப் போய் விக்கிரகத்தைச் சோதித்தால் கோமதி வைரங்கள் அகப்படும்’ என்று இன்று மத்தியான்னந்தானே என்னிடம் சொன்னாய்! அதற்குள் இந்தக் கதிக்கு வந்துவிட்டாயே!” என்று பிரலாபித்துவிட்டுத் தன் கையிலிருந்த உடைவாளை ஏமாங்கதனிடம் நீட்டி, “பாதகா, என் ஹேமாவை மட்டும் ஏன் கொன்றாய்? என்னையும் கொன்றுவிடு” என்று கதறிக்கொண்டே தூணைக் கட்டிக் கொண்டான்.
தன் தம்பியைக் கொன்ற அரசன் மேல் ஏமாங்கதனுக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் உடனே இரக்கமாக மாறியது; “மகாராஜா, வருத்தப்பட வேண்டாம். நாங்கள் குற்றமற்றவர்கள். கருணைக்கு இருப்பிடமான ஹேமாவதி தேவியை நாங்களா இந்தக் கதிக்கு ஆளாக்குவோம்? ஆராயாமல் நீர் என் தம்பியைக் கொன்றுவிட்டீர். இங்கேயே இரும். நான் போய் எங்கராயரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு இரண்டடி நடந்தான். அந்தச் சமயத்தில் யாரோ “ஹேமா! ஹேமா!” என்று கத்திக்கொண்டு தடதட என்று ஓடிவரும் சப்தம் கேட்டது. மறுகணம் தன் முன் தோன்றிய காட்சியைக் கண்டு வீரமார்த்தாண்டன் மூர்ச்சையானான். பைத்தியம் பிடித்தவன் போல் தலைவிரி கோலமாய் ஓடிவந்த எங்கராயனுடைய ரத்தம் தோய்ந்த முகம் பார்க்கப் பயங்கரமாக இருந்தது.
காளி கோயிலில் நடந்த கொலைகளுக்கும் கோமதி வைரங்களுக்கும் இருந்த சம்பந்தத்தை உலகம் சந்தேகிக்கவில்லை. பைத்தியம் பிடித்த எங்கராயனை யார் என்ன கேட்டாலும் ஒரே பதில்தான் கிடைத்தது.
“காளியின் கண்கள்!” “காளியின் கண்கள்!”
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.
மிகவும் அருமையான கதை . அதனால் காலங்கள் கடந்தாலும் படித்து ரசக்கப் படுகிறது . நன்றி .