காலம் செய்த கோலமடி…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 11,091 
 

“அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்.” கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள்.

‘எதுக்கு வந்திருக்கார்? இந்த மாச வாடகை கூட அக்கவுண்ட்ல போட்டாச்சே? என்ன விஷயமாக இருக்கும்?’ கேள்விக்குறியை முகத்தில் தேக்கியபடியே சுப்பு உள்ளே நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் அண்ணாமலை எழுந்து நின்று கை கூப்பினார். கை விரல்களில் மோதிரங்கள் டாலடித்தன. மயிலாப்பூரில் இரண்டு தலைமுறைகளாக பாத்திர வியாபாரம். சென்னையில் ஆங்காங்கே அந்த காலத்திலேயே வீடுகள், ப்ளாட்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

“வாங்கோ! வாங்கோ! எங்கே இவ்வளவு தூரம்?”

“நல்லா இருக்கீங்களா சுப்பு சார்? தெனைக்கும் ‘வாக்கிங்’ எல்லாம் போய் உடம்பை நல்லாவே வச்சுப்பீங்களே?” அண்ணாமலை சுப்புவின் கைகளைப் பற்றி நலம் விசாரித்தார்.

பரஸ்பர நல விசாரணைக்குப் பிறகு, “காப்பி குடிச்சீங்களா?” என்று அவரிடம் வினவியவாறே யமுனா பக்கம் திரும்பினார்.

“எல்லாம் ஆச்சு. அம்மா வந்தவுடனேயே கொடுத்திட்டாங்களே? உங்க வீட்டு காப்பிக்குக் கேட்க வேணுமா? ருசியும் வாசமும் இன்னும் நாக்கிலேயே இருக்கே. நா ஒரு முக்கியமான விஷயமா உங்களைப் பார்க்க வந்தேன்…”

அவரெதிரே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்த சுப்பு, ‘என்ன விஷயம்?’ என்பது போல அவரை ஏறிட்டார்.

“எங்கண்ணன் பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்காங்க. அவன் பெங்களூருல வேலையில இருந்தான். இப்போ இங்க மாத்தலாயிடுச்சாம். இங்க தான் ‘டைடல் பார்க்கிலேயாம்’. அவனுக்கு இந்த ஏரியாவுல வூடு வேணுமாம். அண்ணன் கேக்குறாரு.” என்று சற்றே இடைவெளி விட்டு நிறுத்தினார் அண்ணாமலை.

‘அதுக்கு நான் என்ன செய்யணும்?’ என்று ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார் சுப்பு.

“நம்ம வூடு ‘டைடல் பார்க்குக்கு’ ரொம்ப கிட்டவே இருக்குதுன்னு இங்க அவனை குடித்தனம் வைக்கணும்னு அண்ணன் பிரியப்படுறாரு.” அண்ணாமலை மெதுவாக விஷயத்துக்கு வந்தார்.

சுப்பு திடுக்கிட்டவராய் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“ரொம்ப வருஷமா கொடக்கூலிக்கு இருந்து நீங்களும் நம்ம மனுஷங்க போல ஆயிட்டீங்க. உடனே காலி செய்யணும்னு இல்லே. ரெண்டு மாசம் அவகாசம் எடுத்துக்குங்க. வூடு கெடச்சிதும் எனக்கு தகவல் சொல்லுங்க. ஏதாவது மராமத்து வேலை இருந்தா பார்த்து வெள்ளையடிச்சு அவங்களுக்கு வூட்டை வுடணும்”

அண்ணாமலை விடை பெற்றுக் கொண்டு போய் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார் சுப்பு. எழுபது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் சுப்புவுக்கு பத்து வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்யணும், வேற வீடு தேடணுங்கிற விஷயங்களெல்லாம் ஜீரணமாகவே கொஞ்ச நேரமாகும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் மலைத்துப்போய் அவரையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் யமுனா.

பெசன்ட் நகர் அலுவலக குடியிருப்பு கட்டப்பட்டவுடன் குடித்தனம் வந்தவர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் பத்து வருடங்களுக்கு முன்பு திருவான்மியூரில் இந்த வீட்டுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகைக்கு குடி வந்தார். பத்து வருடங்களில் அதுவே சிறுகச் சிறுக ஏறி மூவாயிரத்து ஐந்நூறு ஆகி விட்டது. குழந்தைகளில்லை. வரும் பென்ஷனில் வாடகைக்குக் குடுத்தது போக சிக்கனமாக குடித்தனம் நடந்து கொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் முப்பதாறு வருடங்கள் இந்த ஏரியாவிலேயே ஓடி விட்டது. அதனாலேயே அடையாறிலிருந்து வரிசையாக இந்திராநகர், சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் என்று திருவான்மியூர் வரை நண்பர்கள், தெரிந்தவர்கள் பட்டாளம் அதிகம். சுப்பு ஹோமியோபதி வைத்தியமும் கற்றுத் தேர்ந்திருந்தபடியால் ஒரு வைத்தியராகவே அவரைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் அதிகம். அடையாறிலிருந்து திருவான்மியூர் வரை எங்கு போனாலும் நடை தான். மென்மையான புன்னகை. சுறுசுறுப்பு. அடுத்தவருக்கு உதவி தேவைப்படும்போது ஓடோடி வருவது, இவையெல்லாம் சுப்பு என்று நினைத்தாலே நண்பர்களின் நினைவுக்கு முதலில் வரும் விஷயங்கள். பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் வீட்டிலிருக்கும் தன்னையத்த ஓய்வு பெற்ற நண்பர்களைத் தவறாமல் அடிக்கடி சந்தித்து அவர்களோடு சில மணி நேரங்கள் செலவிட்டு பழைய நாள் விஷயங்களை அளவளாவி விட்டு சுப்பு கிளம்பும்போது அவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி, “திரும்ப என்னிக்கு வருவீங்க?” என்பது தான். நண்பர்கள் வீடு தேடிப் போய் நலம் விசாரித்து தேவையான மருந்துகள் கொடுத்து விட்டு வருவார். அவர் விரும்பிச் செய்யும் சேவை இது. “சார்! நீங்க குடுத்த மருந்தில ஒடம்பு நல்லா ஆயிடுச்சு!” என்று நேரிலோ ஃபோனிலோ நன்றி தெரிவிப்பவர்களின் சந்தோஷத்தில் ஏற்படும் மன நிறைவு தான் அவருக்கு கிடைக்கும் ‘ஃபீஸ்!’.

“நீங்க மூவாயிரத்து ஐந்நூறு தானே குடுக்கிறீங்க? இப்போ அந்த வாடகைக்கு வீடு எங்கேயுமே இல்லை சார்!” பக்கத்து ஃப்ளாட் சொந்தக்காரர் கருணாகரன் தான் சொன்னார். “இந்த ஐ.டி. பசங்க வந்ததினால வாடகை எல்லா இடத்திலேயும் ஏறிடிச்சே சார்!”

“என்ன ஒரு அஞ்சாயிரத்துக்கு இதே மாதிரி ஒரு ஒத்தை பெட்ரூம் ஃப்ளாட் கெடைக்காதா?”

அப்பாவித்தனமாகக் கேட்கும் சுப்புவை அனுதாபத்தோடு பார்த்தார் கருணாகரன்.

“எங்கே சார்? எல்லாம் ஏழு எட்டுன்னு இல்லே கேக்க ஆரம்பிச்சிட்டாங்க?”

“மூணுக்கு அப்புறம் நாலு, அஞ்சு, ஆறு எல்லாம் இல்லியா? நேரா ஏழு எட்டுன்னா எப்படீ?”

அது அப்படித்தான் என்பது போல சென்னைவாசிகள் இதுவரை கண்டிராத அளவுக்கு வீட்டு வாடகை அதிகமாகிக் கொண்டே போனது. தகவல் தொழில் நுட்பத் துறையின் அசுரத்தனமாக வளர்ச்சி காரணமாக புற்றீசல் போல அந்தத் துறையில் வேலை கிடைத்தவர்கள் தினமும் பழைய மஹாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை அருகேயுள்ள பகுதிகளுக்கு குடி வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு பத்தாயிரம் வரை குடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சுப்பு புரிந்து கொண்டபோது வீட்டுக்காரர் குடுத்த இரண்டு மாத கெடு முடியும் தருவாய் ஆகி விட்டது.

“நாம பேசாம ஸ்ரீரங்கத்துக்குப் போயிடலாமா?” யமுனா மெதுவாகக் கேட்டாள். யமுனாவின் ஒரு சகோதரனும் சகோதரியும் அங்கே தான் இருக்கிறார்கள். சுப்பு வேலையிலிருந்து ஓய்வு பெற்றதுமே அவர்கள், “இனிமே தனியாக மெட்றாசில எதுக்கு இருக்கணும்? ஸ்ரீரங்கத்துக்கு வந்துடுங்களேன்?” என்று அழைப்பு விடுத்தார்கள். சுப்புவுக்கு பல வருடங்களாக இருந்து பழகி விட்ட இந்த ஏரியாவில் இருக்கும் ஈடுபாடு காரணமாக அவர் எங்கும் போக விரும்பவில்லை. யமுனாவுக்கு மட்டுமென்ன? பிரதோஷமென்றால் மருந்தீஸ்வரர். பௌர்ணமிக்கு பாம்பன் ஸ்வாமிகள் கோவில். சிநேகிதிகளுடன் கலந்து கொள்ளும் சுலோக வகுப்புகள். அவ்வப்போது சுப்புவுடன் காலாற நடந்து சென்று அமர்ந்து கொள்ளும் கடற்கரைப் பகுதி. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான வாழ்க்கை. இதையெல்லாம் விட்டு எங்கும் போக விருப்பமில்லை. எந்த மேல் வருமானமும் இல்லாத அரசாங்க ஓய்வூதியம் பெறும் ஒரு சாமான்யமான மனிதர் வாடகை குடுத்து இனிமேல் இங்கே குடித்தனம் செய்ய முடியாது என்று ஆகி விட்ட பின் யோசிக்க தானே வேண்டியிருக்கிறது?

இதே வாடகை தான் குடுக்க முடியும் என்ற போது அந்த வாடகைக்கு எந்த ஏரியாவில் வீடு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இந்தப்பக்கம் பல்லாவரம், பொழிச்சலூர் தாண்டி அல்லது அந்தப்பக்கம் வில்லிவாக்கம் தாண்டி, கொரட்டூர், கொளத்தூர் போன்ற இடங்களில் வாடகை அதிகமில்லை என்று சுப்புவின் உறவுக்காரப் பெண் மீரா தெரிவித்தாள். தெரியாத ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்போது தன் தூரத்து உறவுக்காரப் பெண் இருக்கும் கொரட்டூருக்கே போய் விடலாம் என்று முடிவு செய்து அதே மூவாயிரத்தைந்நூறு வாடகைக்கே மீரா வீட்டுக்கருகாமையிலேயே குடி போனார்கள்.

எதையோ பறி கொடுத்தது போல வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் சுப்புவைப் பார்க்கப் பார்க்க யமுனாவுக்கு அடி வயிறு கலங்கியது. டீவிக்கெதிரே தான் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் கவனம் அதில் இல்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. மேடு பள்ளமாக, குண்டும் குழியுமாக புழுதி பறக்கும் தெருக்களில் ‘வாக்கிங்’ போகக்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. அருகாமையில் நண்பர்கள் ஒருவரும் இல்லை. தொலைபேசியில் ஒருவருடன் எத்தனை நேரம் பேச முடியும்?

‘பகவானே! நாங்க ஏதாவது வேணும்னு ஒங்கிட்டே கேட்டிருக்கோமா? கடைசி காலத்தில தெரிஞ்ச மனுஷங்களோட மனசுக்குப் பிடிச்ச இடத்தில இருக்க விடாம இப்படிப் பண்ணிட்டயே?’ என்று யமுனாவுக்கு மனம் குமுறிக் கொண்டேயிருந்தது.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறை திருவான்மியூர் பக்கம் நண்பர்களை பார்க்கப் போனார். அவர் குடியிருந்த வீடு வெள்ளை அடிக்கப்பட்டு ‘பளிச்’சென்று தோற்றமளித்தது. பக்கத்து ஃப்ளாட் கருணாகரன் சுப்புவை மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்.

“என்ன? பக்கத்தில அண்ணாமலையோட சொந்தக்காரப் பையன் குடித்தனம் வந்துட்டானா?”

இவ்வளவு அப்பாவியாகக் கூட ஒருவர் இருப்பாரா என்பது போல சுப்புவை அனுதாபத்தோடு பார்த்தார் கருணாகரன்.

“சொந்தக்காரப் பையனாவது ஒண்ணாவது? அதெல்லாம் வெறும் கதை சார்! வாடகையெல்லாம் தாறுமாறாக ஏறிப் போச்சு. வெறும் மூவாயிரத்தைந்நூறு குடுத்துக் கிட்டிருந்த உங்க கிட்டே எப்படி இரண்டு மடங்கா கேக்கிறதுன்னு தான் அண்ணாமலை உங்களை காலி பண்ணச் சொல்லியிருக்கிறார். ஏழாயிரம் வாடகைக்கு யாரோ வெளி ஆள் தான் வந்திருக்காரு. அதோ அந்தப் பக்கம் பார்த்தீங்களா?” எதிர் ப்ளாட்டை நோக்கி கையைக் காட்டினார்.

அதுவும் புதுப் பொலிவோடு காட்சியளித்தது. பெட்ரூம் ஜன்னலில் குளிர்சாதனப்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. “இன்னித்தேதியில ஹால்ல சோஃபாவைப் போட்டு ஒரு சீலிங் ஃபேனை மாட்டி, பெட்ரூம்ல ஒரு ஏசியை மாட்டி வீட்டைக் குடுத்தா ஒரு ஒத்தை பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வாடகை குடுத்து வரத் தயாராக இருக்காங்க சார் ஐ.டி. யில வேலை செய்யறவங்க! ”

சுப்பு பிரமித்துப் போனார்.

‘மூவாயிரத்தைந்நூறு எங்கே, பத்தாயிரம் எங்கே?’

கொரட்டூர் வாழ்க்கைக்கும் ஒரு முடிவு வரும் போல இருந்தது.

அவருடைய உறவுக்காரப் பெண் மீராவின் கணவருக்கு புரோகிதம் தொழில். சுப்பு குடித்தனம் போய் சில மாதங்களுக்குள்ளாகவே ஒரே மகனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்து விட அவர்கள் குடும்பம் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்து விட்டது. அங்கே புரோகிதத்துக்கும் ரொம்ப ‘டிமாண்டாம்!’

அடிக்கடி வந்து போய் கொண்டிருந்த மீராவும் பக்கத்திலில்லாமல் யமுனாவுக்கு கொரட்டூர் பிடிக்காமல் போய் விட்டது. மனம் சோர்ந்து போனதில் சொல்லத்தெரியாமல் அடிக்கடி உடம்பு படுத்திக் கொண்டேயிருந்தது.

சுப்பு ஒருநாள் காலையிலேயே கொரட்டூரிலிருந்து கிளம்பி பகல் சாப்பாட்டு நேரத்துக்கு திருவான்மியூருக்கு நண்பர் வீட்டுக்கு வந்தார்.

“அவளுக்கும் அந்த ஏரியா பிடிக்கலே. இப்போ எப்படியாவது மத்த செலவுகளைக் குறைச்சிண்டு வாடகை ஏழாயிரமானாலும் குடுத்துண்டு இந்தப் பக்கமே திரும்ப வந்துடலாமான்னு யோசிச்சிண்டிருக்கேன். ‘ரிசெஷென்’, பொருளாதாரப் பின்னடைவுங்கிறதுனால தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு கொறஞ்சிடுச்சுன்னு சொல்றாங்களே? இப்போ ஒரு ஒத்தை பெட்ரூம் ஃப்ளாட் அதே ஏழாயிரத்துக்குக் கிடைக்கும் தானே?”

“வேலை வாய்ப்புத்துறையில் என்ன மாற்றங்கள் வந்தாலும் இந்தப் பக்கம் குடியிருக்க இடத்திற்கு இப்பவும் போட்டிதான். வாடகை ஏறிக் கொண்டே தான் இருக்கு. எதுக்கும் நா கொஞ்சம் விசாரிச்சிட்டு சொல்றேனே?”

நண்பர்கள் மூலம் விசாரித்ததில் சாதாரண ஒத்தை பெட்ரூம் ஃப்ளாட் வாடகையே பத்தாயிரத்துக்கு வந்து விட்டது என்று தெரிந்தது.

‘ஏழிலிருந்து எட்டுக்கும் ஒன்பதுக்கும் கூட வராமல் வாடகை திரும்ப பத்துக்குப் போய் விட்டதா?’ விரக்தியோடு சிரித்துக் கொண்டார்.

பாவம்! அவர் என்ன செய்தி கொண்டு வரப் போகிறார் என்று யமுனா ஆர்வமாகக் காத்திருப்பாள். நண்பர் வீட்டிலிருந்தே அவளுக்கு ஃபோன் செய்தார். “நாம ஸ்ரீரங்கம் போயிடலாமா? ஒங்கண்ணா கூப்பிட்டுண்டே இருந்தாரே?” என்றார் மெலிதான குரலில்.

கொரட்டூருக்குப் போகத் திரும்ப பேருந்தில் ஏறியபோது வழியில் தென்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை வளாகங்களெல்லாம் தங்களால், அரசாங்க ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாமானிய மூத்த குடிமகனின் வாழ்க்கை எப்படி தடம் புரண்டு விட்டது என்பதைப் பற்றிய நினைவோ அக்கறையோ சிறிதுமின்றி வண்ண வண்ண குழல் விளக்குகள் பிரகாசிக்க உற்சாகமாய் நிமிர்ந்து நின்றன.

– கலைமகள் கி.வா.ஜ. நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *