கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 841 
 
 

(2017ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இறந்து நாற்பது நாட்கள் கடந்த பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்துள்ளான் ஞானபண்டிதன். 

அதிசயமாக இன்ஸ்பெக்டர் அன்று அதிகாலை வேளையே காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். ஞானபண்டிதன் கொடுத்த புகார் மனுவைப் பாடித்தவர், திருமலை படத்தில் வடிவேலு சொல்வதைப் போல அப்படியே ஷாக் ஆகிவிட்டார். மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு “ஏட்டையா இந்த பெட்டிஷன பாருங்க” என்று ரைட்டர் ரிஷிகேஷிடம் கொடுத்தார். 

ரிஷிகேஷ் படித்துவிட்டு “இது என்ன காலையிலையே கழுத்தறுப்பு கேஸா வந்து மாட்டியிருக்கு” என்றார். 

பேயிடம் அரை வாங்கியது போல ஆய்வாளர் அவரது இருக்கையில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்திருந்தார். பேய் என்பதால் புகார் கொடுத்தரை அவரால் அரைய முடியவில்லை. 

“போலீஸ்ன்னா வர வர உங்களுக்கு எளக்கரமா போச்சா. நாங்க என்ன கேனப் பயலுங்கன்னு நெனச்சிட்டியா. ? (இதுகூட ஏதோ சினிமாவில் வந்த வசனம்தான்) சம்பவம் நடந்து முப்பத்தி ஐஞ்சி வருஷத்துக்குப் பின்னாடி அதுவும் செத்து போதுனத்துக்கப்பறம் கம்ளைய்ண்ட் கொடுக்குறே” என்றார் ரிஷிகேஷ். 

“ஏட்டைய்யா இவன் கிட்ட இப்ப என்ன பேச்சு. பெட்டிஷன வாங்கிகிட்டமுல்ல. வெரட்டி விடுங்க” என்றார். 

“எப்.ஐ.ஆர் போட்டு காப்பிய கொடுத்தாதான் போவேன். முடியாதுன்னா சொல்லுங்க. எஸ்.பி. ஐயாவ போய் பாக்குறேன். சி.எம் செல்லுக்கு தந்தி அடிக்கிறேன். சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி வரை போய் உண்டு இல்லன்னு பண்ணிடுவேன். ஆமாம்” என மிரட்டால் விட்டார் ஞானம். 

நித்தியானந்தனை பார்த்து “டொன்டி செவன் தேர்ட்டி சிக்ஸ் டீக்கடையில ஐஞ்சி காப்பி கொண்டாரச் சொல்லுங்க” என்றார் ஆய்வாளர். 

புகார்தாரர் ஞானத்தை எதிரே கிடந்த பெஞ்சில் அமரச் சொல்லிவிட்டு, “ஏம்பா காப்பியெல்லாம் சாப்புடுற பழக்கம் உண்டா?” 

“காபிய கொடுத்து கூல் பண்ணிடலாமுன்னு நெனக்கிறிங்களா? அதான் நடக்காது?” 

“அப்ப தண்ணி கிண்ணி அடிப்பீறா?’ 

“போதைய ஏத்தி எதையாவது உங்க சௌகரியத்துக்கு எழுதி வாங்கிடலாமுன்னு பாக்குறீங்களா? போலீஸ பத்தி கேள்வி பட்டுருக்கேன் இப்பதான் அதெல்லாம் உண்மைதான்னு தெரியுது” 

“இன்னமும் தெரிஞ்சிக ஞானபண்டிதா. இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போவல அரை கிலோ கஞ்சாவ கையில கொடுத்து கேஸ போட்டு உள்ள தள்ளிடுவேன். பீசாச எப்படி உள்ள போடுறது . மீடியா எல்லாம் சிரிப்பாங்கன்னு பாக்குறேன். 

“எங்க உள்ள போடுங்க பாப்போம்” என லோட லொட என அங்குமிங்கும் ஆடும் ஓட்டை மரப் பெஞ்சில் அமர்ந்திருந்தவர் எழுந்து ஆய்வாளர் அருகில் வந்து விலங்கு மாட்டுவதற்கு ஏதுவாக கைகளை காட்டினார். 

நிலைய வாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த சென்ட்ரி ” ஐயா அவன வெளிய தள்ளி விடுங்க என்கவுண்டர்ல போட்டுடுறேன்” என்றார் 

“போலி என்கவுண்டர்ன்னு சொல்லு போலீஸ்” என்றார் சென்ட்ரியை பார்த்தவாறு ஞானபண்டிதன். 

“அட நீ வேற சும்மா இருப்பா. எரியுற தீயில எண்ணய ஊத்துற மாதிரி அவர கௌப்பிவிடாத. பிசாச கொண்ணா அதோட பொணம் எலியாயிடுமாம். அந்த வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். நான் டீல் பண்ணிகிடுறேன் விடு” என்று சென்ட்ரிக்கு அறிவுரை வழங்கினார் ஆய்வாளர். 

“ஏம்பா ஞானபண்டிதா பொதுவா பெண்கள்தான் ஆண்கள் மேல பாலியல் வன்கொடுமை சட்டத்தில கேஸ் கொடுப்பாங்க. நீ புதுசா ஒரு பொம்புள மேல கொடுக்குறியே என்னப்பா?” 

“ஏன் பெண்கள் மட்டும் ஆண்களை வன்புணர்ச்சி செய்ய மாட்டாங்களா என்ன. .! நாங்க மட்டும் செக்ஷுவல் ஹாரஸ்மெண்ட சகிச்சிகிட்டு இருந்திடணுமா? இல்ல எல்லா ஆண்களும் பொம்புளங்களுக்கு அலையுறவங்கன்னு நெனச்சிங்களா?” 

“எது கேட்டாலும் வக்கனையா சொல்லுறியே இத்தன வருஷமா தூங்கிகிட்டு இருந்தியா? இப்பதான் ஞானோதயம் வந்துச்சா? எங்க கழுத்த அறுக்க. . .” 

“எவ்வளவு நாளுகுள்ள கம்ப்ளையின்ட் கொடுக்கணும்னு எதாவது சட்டம் இருக்கா? ஒரு குற்றம் நடந்துதுன்னா அதற்கான தீர்வு கெடைக்கிற வரைக்கும் குற்றச்செயல் அப்படியே இருக்கும். மோனிக்கா லெவிண்கிய சீண்டல் பண்ணுத்துக்காக எத்தன வருஷம் கழிச்சி பில் கிளிண்டன் மன்னிப்பு கேட்டாரு. நமீபியா பழங்குடியினத்த படுகொலை செஞ்துக்கு நூறு வருஷம் கழிச்சி ஜெர்மனி இப்ப மன்னிப்பு கேட்டுருக்கு. தெரிஞ்சி கிடுங்க” 

“அப்பா ஞானபண்டிதா போதும்டா. இப்ப உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு?” 

“அந்த மாலினிய புடிச்சு தண்டனை கொடுக்கணும். அவ உயிரோடு இருந்தாலும் இல்லாட்டினாலும் ஆக்ஷன் எடுக்கணும் சொல்லிபுட்டன்” 

“அவ இருக்காளோ இல்லையோ ? சரி எப்புடின்னாலும் ஆக்ஷன் எடுக்குறேன். எடத்த காலி பண்ணு” 

“ஆக்ஷன் எடுக்காம அசால்டா இருந்திங்கன்னா ஹை கோர்ட்டுக்குப் போய் கேபியஸ் கார்பஸ் மனு போட்டுடுவேன். ஆமா சொல்லிட்டேன்.” 

“அப்படின்னா என்ன மனுப்பா ஞானபண்டிதா?” 

“ஆட்கொணர்வு மனு. எங்களுக்கும் சட்டம் தெரியும். தெரிஞ்சிகிடுங்க.” 

“அடா ஆக்கங்கெட்ட கூவ. அக்யூஸ்ட் மேல பெட்டிஷனர் கொடுக்க முடியாது. சொந்தக்காரங்கதான் கொடுக்கமுடியும். தெரிஞ்சிக்க” 

“திரும்ப எப்ப வர?” 

“அந்த பயம் இருக்கட்டும். வெட்டியாதானே இருக்கே. மூணு மாதம் கழிச்சி வா. அவள புடிச்சி ரிமாண்ட் பண்ணிட்டா ஒரு வாரத்துக்கு கோர்ட்க்கு வந்து நீ சாட்சி சொல்லணும். சரியா?” மேற்கொண்டு வாதம் செய்ய ஞானம் விரும்பவில்லை. 

“தம்பி நித்தியா இந்த கேஸ நீங்க எடுத்துகிடுங்க. தரோவா இன்விடேஷன் பண்ணுங்க பாப்போம்” என்றார் ஆய்வாளர். 

ஞானத்தைப் பார்த்து “நீ போகலாம் ஞானபண்டிதா. ஒரு டவுட். இந்த புகார் கொடுக்கணும்ன ஐடியா எப்ப உனக்கு வந்துச்சி?” என கேட்டார். 

“ஆப்டர் மை டெத்” என்றவன் திடீரென மாயமானான். 

“நல்ல வேள எப்.ஐ.ஆர். காப்பி கேட்டவன் மறந்துட்டு போறான்” என்றார் ரிஷிகேஷ். 

ஆய்வாளருக்கு சிரிப்பு வந்தது “நல்ல பொழுது போக்க இருக்குல்ல!” என்றார். 

இந்த காவல் நிலையம் எத்தனையோ புகார்களை பார்த்திருக்கிறது. இந்த புகார் எல்லாவற்றை விட புதிரானது. வேடிக்கையானது. 

“நித்யா..” 

“என்னங்கையா..?” 

“ஓய்வு கெடக்கும்போது ஆப் ரெக்காடா இவன் சொன்ன மாலினின்னு ஒருத்தி இருக்காளா? இவன அவ என்னதான் பண்ணினான்னு இன்விஸ்டிகேட் பண்ணிதான் பாருங்களேன்” என கேட்டுக்கொண்டார் ஆய்வாளர். 

“சரிங்கய்யா” என்றான் நித்தியானந்தன். 

அப்போது அது பேரூராட்சியாக இருந்தது. நகராட்சியானது. கட்சி அரசியலில், மாறிமாறி அரசமைக்கும்போது ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வீம்புக்கு எடுத்த முடிவில் இப்போது அது மாநகராட்சி. பெரிதாக வளர்ச்சி ஒன்றுமில்லை. வீட்டு வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வேஸ்ட் லேண்ட் வரி என்று கண்ட கண்ட வரிகளை மக்கள் தலையில் சுமத்தியதுதான் மிச்சம். 

அப்போது வீடு கட்ட வேண்டு மென்றால் பேரூராட்சி தலைவர் அனுமதி பெற்றால் போதும். அவர் பங்காளியாக அல்லது மாமன் மச்சானாக இருப்பார். எதிர் கட்சியை சார்ந்தவர் என்றால் மாப்பிள்ளையின் நண்பனாக இருப்பார். நண்பரின் தம்பியாக இருப்பார். இல்லையென்றால் ஏதோ ஒரு தூரத்து உறவுக்காரராக இருப்பார். கூடுதல் செலவாக ஒரு காசு இன்றி அப்ரூவல் வாங்கி விடலாம். தற்போது வீடுகட்ட ப்ளன் அப்ரூவல் வாங்க மாநகராட்சி பணியாளர்கள் எல்லோருக்கும் பங்கு பிரித்துக் கொள்ளும் வகையில் லஞ்சம் கொடுக்க வேண்டும். நமது நிலத்தில் நாம் வீடு கட்டுவதற்கு, அவர்கள் அப்பன் வீட்டு சொத்தை தானமாக கொடுப்பது போல் ஆயிரத்து ரெண்டு சட்டம் பேசுவார்கள். காசை தூக்கி எறிந்தால் அவர்களுக்கு சட்டமாவது நடைமுறையாவது. எல்லாம் காற்றில் பறக்கும். இத்தனைக்கும் மாதமாதம் கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். 

அந்த பேரூராட்சியில் அப்போது ஒரே ஒரு மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் இருந்தது. மெட்ரிக்குலேஷன் பள்ளியை ஸ்கூல் என்பார்கள். மற்ற ஸ்கூலை பள்ளி என்பார்கள். அது மேக்காலே கொண்டு வந்த ஆங்கில வழி இங்கிலாந்து நாட்டு கல்வி முறை. 

சுதந்திரம் பெற்று இடைநிலை மேல்நிலை கல்வி திட்டங்கள் வந்த பிறகு கூட பொது தகுதி பெற்றவர்களிடம் வேலைக்கு விண்ணப்பம் கோரும் விளம்பரங்களில் கல்வித் தகுதி என்ற இடத்தில் மெட்ரிக் ஆர் ஈக்கலவண்ட் என்றுதான் இருக்கும். அதாவது அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு . ஈக்கலவண்ட் என்றால் பிற பள்ளிகளில் அப்போது பதினோராம் வகுப்பு. இப்போது அது பத்தாம் வகுப்பு. மெட்ரிக்கில் படிப்பவர்கள்தான் அகில இந்திய அளவில் நடக்கும் மேல் படிப்புக்கான கடினமான நுழைவுத் தேர்வில் அதிகமாக தேர்ச்சி பெறுவார்கள். அவ்வளவு தரம் வாய்ந்த கல்வி முறை அது. 

அந்த மெட்ரிக் சிஸ்டத்தை ஒழித்து விட்டார்கள். காரணத்தை விளக்கினால் அரசியலாகி விடும். விரிவாக்க வேண்டாம். சமமாக்குகிறேன் என்று நாற்காலியின் ஒரு காலை உடைத்து முக்காலியோடு முக்காலியாக்கி விட்டார்கள். 

அந்த பள்ளிகளில் கல்வி பயின்றால் ஒரு கெத்து. அதில்தான் ஞானபண்டிதன் பத்தாம் வகுப்பு பயின்று வந்தான். அவன் தம்பி அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். 

ஞானம் படிப்பில் எப்போதும் வகுப்பில் முதல் மூன்று தரவரிசைக்குள் வருவான். 

பெரும்பாலான தேர்வுகளில் முதல் மாணவனாக திகழ்வான். கணக்கில் எப்போதும் நூற்றுக்கு நூறுதான். ஆங்கில அறிவை நல்ல திறமை கொண்டு வளர்த்து வந்தான். மற்ற மாணவர்களின் தேர்வுத் தாட்களை இவனையும் இவன் நண்பன் செல்வத்தையும் விட்டு திருத்தச் சொல்வார்கள் என்றால் இவனின் திறமையை தெரிந்து கொள்ளலாம். 

ஒரு மாலை வேளை காலாண்டு கணக்கு தேர்வுத் தாட்களை மதிப்பிடு செய்ய இவனையும் செல்வத்தையும் கணித பிரிவு அலுவலக அறைக்கு வரும்படி டீச்சர் கூப்பிடுவதாக பியூன் வகுப்பில் வந்து சொல்லிவிட்டு போனான். செல்வம் அன்று பள்ளிக்கு வராததால் ஞானம் மட்டும் அலுவலக அறைக்குப் போனான். அங்கே மாலினி டீச்சர் மட்டும் அமர்ந்திருந்தாள். 

மேஜைக்கு எதிர்புறம் இரு மாணவர்களும் அமர வசதியாக இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 

“என்ன ஞானம்! செல்வம் வரலயா?” என்றாள் மாலினி டீச்சர். 

“இல்ல டீச்சர் அவன் இன்னக்கி லீவு” 

“அப்போ நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து திருத்துறிங்களா?” 

“ஏன் டீச்சர் இன்னக்கே நானே திருத்திடுறேனே” 

“நேரம் ஆகும்பா” என்றவள். 

சற்று யோசித்து “அப்ப சரி உட்காரு. ரெண்டு பேரும் சேந்து திருத்தி முடிச்சிடுவோம்” என எதிரே கிடந்த நாற்காலியில் அமரும்படி சுட்டிக் காட்டினாள். 

பள்ளி வேலை நேரம் முடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் சென்ற நிலையில் இவர்கள் மட்டும் விடைத்தாள் மதிப்பிடும் பணியை மேற்கொண்டவாறு இருந்தனர். 

ஞானத்தின் காலில் மாலினியின் கால் பட்டது. தவறி பட்டு விட்டதாக உணர்ந்து, பயத்தில் வெடுக்கென்று இழுத்துக் கொண்டான். 

ஓரிரு நிமிடங்களில் மீண்டும் கால் பட “சாரி மிஸ் . . . கால் பட்டுட்டுச்சி” என எழுந்து நின்றான். 

“என்னோட கால்தான் உன் கால்ல பட்டுச்சி. நான்தான் சாரி சொல்லணும். நீ உட்காரு” என்றாள் மாலினி. 

அவன் எதார்த்தமான நிகழ்வு என எடுத்துக் கொண்டான். தன் பணியை தொடர்ந்து செய்து வந்தான். 

ஆனால் மாலினி தன்னை வித்தியாசமாக பார்ப்பதை எதேச்சையாக அவள் மீது பார்வை பட்டபோது தெரிந்து கொண்டான். அந்த மருண்ட பார்வையில் ஏதோ ஒரு சந்தேகம், அதன் மீதான சங்கோசம் அவன் மனதில் குடி கொண்டது. வேலையில் தடங்கல் ஏற்பட்டது. மீண்டும் தனது வலது காலால் அவன் காலை உரசினாள். 

“மிஸ் நாளைக்கு வேலிவேட் பண்ணிகிடலாமா? நான் போகட்டுமா?” என எழுந்தான். அவன் முகத்தில் ஒரு பயம் கலந்த இறுக்கம் பரவியது. 

“ஏண்டா ஞானம்? ஓய்?” 

“ஒண்ணுமில்ல மிஸ். செல்வமும் வந்துடட்டுமே நாளைக்கு சீக்கிரம் திருத்திடலாமேன்னு நெனச்சேன்” 

“நானும் திருத்துறேன் இல்ல. மூடிச்சிடலாம் உட்கார்” என்றாள். 

எழுந்து சென்று மூடியிருந்த கதவினை தாழ்பாள் இட்டாள். 

சந்தேகம் வலுக்க, ஞானம் எழுந்தான். கதவோரத்திலிருந்து அவன் அருகில் வந்து அவன் பின் புறமாக கட்டிப் பிடித்தாள். நாற்காலி இடரிவிட அவன் விழுந்து விடாதபடி அணைத்து பக்கவாட்டில் வெளியே கொணர்ந்தாள். 

பதினைந்து வயதென்றாலும் வயதை மீறிய உடல் வாகு. சிவந்த அழகு குடிகொண்ட வாட்ட சாட்டமான வளர் இளம் பருவ காளை அவன். திமிறினான். முடியவில்லை. 

குட்டிச் சிங்கத்தை ஓர் ஓநாய் கிழித்து குதறியது. 

மறுநாள் காலை வழக்கம்போல் எழும்பாமல் படுக்கையில் சோர்ந்து கிடந்தான். இரவு துக்கமற்று கழிந்ததால் அவனால் நிதானமாக எழ முடியவில்லை. எழுப்பிவிட்ட தாயாரிடம் உடல் நிலை சரியில்லையென தெரிவித்தான். 

கட்டாயப்படுத்தி எழுப்பி வெந்நீரில் குளிக்கச் சொல்லி காலை உணவு கொடுக்க அதை சரிவர உண்ணாமல் எழுந்தான். முகக் கலை உதிர்ந்து போயிருந்தது. பதறிப்போன தாயார் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தாள் 

‘டெம்பரேச்சர் தொண்ணுற்று ஒன்பது டிகிரிதான் இருக்கு. லேசான ஃபீவர். பயப்பட தேவையில்லை. மற்றபடி ஒண்ணுமில்லை’ என மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். 

தொடர்ந்த மூன்று நாட்கள் அவன் பள்ளிக்கு வரவில்லை. 

காமம் குறித்த பேச்சுகள் ஞானத்திற்கு அசிங்கமாகப்படும். வகுப்பில் இவன் டெஸ்கில் அமர்ந்திருக்கும் மற்ற இருவர் இது குறித்து அறைகுறையாய் ஏதாவது பேசும்போது முகம் சுழிப்பான். எழுந்து ஓடிவிடலாமா என எண்ணுவான். ஆனால் எங்கே ஓடுவது. அவர்கள் மீது கோபம் கோபமாய் வரும். அடக்கிக் கொள்வான். போகப்போக இங்கிதம் கருதி இவன் இருக்கும் போது அது பற்றி அதிகம் பேசுவதை குறைத்துக் கொண்டனர். ‘இந்த வயசுல இத ஏன் பேசணும் முதல்ல படிப்புல கான்சன்ரேட் பண்ணுங்கடா’ என ஒரு நாள் அவர்களை அரட்டி வைத்த பின்னர் அவர்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். 

பாலின ஈர்ப்பு என்பது மனித மனங்களின் உள் கட்டமைப்பு. தானே அது இயற்கையாக வரக்கூடியது. அரிதாகத்தான் செயற்கைத் தனம் சிலரை வந்தடைகிறது. அது சிலருக்கு குறைவாகவோ சிலருக்கு காட்டாற்று வெள்ளம் போலவோ போங்கி எழும். சமூக சட்ட திட்டங்கள் ஒழுக்க நெறி நியாய உணர்வுகள் போன்ற கடிவாளங்களும் கண்ணாடிகளும் குதிரையை ஒரு கட்டுப்பாடுக்குள் நேராகச் செல்ல வைக்கிறது. 

பாலினத்தை சமூகம் முதலில் ஆண் பெண் என இரண்டாகப் பார்த்தது. பின்னர் திருநங்கை திருநம்பி என மூன்றாம் வகையை கொணர்ந்தது. ஆனால் உளவியல் வல்லுநர்களும் பாலியல் ஆராய்ச்சியாளர்களும் இவர்களை அல்லாது இருபத்து ஆறு வகை பிரிவினர்கள் இருப்பதாக வகைப் படுத்துகிறார்கள். இவர்களை பால்புதுமையர் என்கிறார்கள். அதில் ஞானபண்டிதன் அசெவல் வகையைச் சார்ந்தவன். மொத்த மக்கள் தொகையில் ஒரு சதம் இவர்கள் இருப்பதாக கின்ஸே அறிக்கை கூறுகிறது. இவர்கள் எல்லா வகையிலும் முழுமையானவர்கள். ஆனால் எவ்வகைப் பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள். இந்த நிலை பாலியல் நாட்டம் தவிர்த்து அவர்களின் மற்ற எந்த செயலுக்கும் இடையூறானதாக இருக்காது. 

மேலும் மற்றொரு மனம் சார்ந்த இடர்பாட்டுக்கு ஆளாகிவிட்டான் ஞானம். அவனுக்கு பத்து வயதாகியபோது பெற்றோரின் ஆலிங்கனத்தை காண நேர்ந்தது. அது ஒரு எதிர்பாராத நிகழ்வு. அந்த காட்சி அடி மனதில் அருவருப்பாக ஆழப் பதிந்தது. பார்க்க விரும்பாத அந்த நிகழ்வு மனித வாழ்வுக்கு தேவையற்றதாக கருதுமளவுக்கு அவன் உள்ளத்தில் முடிவுகள் உருப்பெறத் தொடங்கின. பாலியல் தொடர்பான உணர்வற்று வெற்றிடமாய் இருந்தவனுக்கு அது தேவையற்றது என்ற எண்ணமும் பாவச்செயல் என்ற கருத்தும் வேரூன்ற செய்தது. அப்படியான மன அமைப்பே மாலினி மேற்கொண்ட வன்கலவியின் தாக்கம் அவள் மீது எரிச்சல் கொள்ள வைத்தது. சாக்கடையில் விழுத்ததைப்போல எண்ணினான். தூய நீரில் எத்தனை முறை முக்கி எழுத்தாலும் அவன் மீது ஏதோ அருவருப்பு ஒட்டி இருப்பது போல உணர்ந்தான். மனதில் ஓர் அந்நிய நாற்றம் வீசுவது போல நுகர்ந்தான். இவை தன்னையே வெறுக்க வைத்தது. அவனது எதார்த்த நிலை வேரறுந்து போனது. 

இந்த வயதில் யாருக்கேனும் இவ்வாறான நிகழ்வு ஏற்படின் அதை அனுபமாக எடுத்துக் கொள்வோர் உண்டு. கெட்ட கனவாக மறப்போர் உண்டு. மேலும் அதிகமாகி பாலியல் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள துடிப்போர் உண்டு. ஆனால் ஞானம் தனிப்பிறவி போல வெளிவர முடியாத மாய வலைக்குள் சிக்கி கடைசியாய் தானே அழிந்து போனான் என்றே சொல்லலாம். அவனது அறிவின் தேடல்கள், சுறுசுறுப்பு, முக மலர்ச்சி எல்லாம் குறைந்து போயின. 

அந்த பாதகியை கொலை செய்தால் என்ன? எப்படி கொலை செய்வது? கொலைதான் செய்ய வேண்டுமா? எல்லோர் முன்னிலையிலும் செருப்பை கழட்டி அடித்து உண்மையை வெளிப்படுத்தி அவள் மானத்தை வாங்கி விட்டால் என்ன? இப்படியெல்லாம் பழிவாங்கும் எண்ணம் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் அவனிடத்தில் எள்ளளவும் துணிவு இல்லை. வேறு என்ன செய்யலாமென யோசித்து யோசித்து மனம் சூம்பிப்போய் ஆழக்குழி தோண்டி அதில் எல்லாவற்றையும் போட்டுப் புதைத்தான். மனம் சமாதியானது. நடந்த அந்த சம்பவத்தின் மீது வெறுப்பை வெட்டி வெட்டி கொட்டி மேடானதுதான் மிச்சம். அவன் பிரதிபலிப்பு அரையாண்டு தேர்வில் அவன் வழக்கமாய் பெறும் மதிப்பெண்களின் பிரகாச அளவு மங்கிப்போனது. 

இப்போதெல்லாம் விடைத்தாள் திருத்தும் பணிக்கு மாலினி டீச்சர் மாணவர்களை பயன்படுத்துவது இல்லை. ஞானத்தின் வகுப்புக்கு வரும்போது முன்போல கலகலப்புடன் அவள் வருவதில்லை. ‘ஞானம் சொல்லு. . . சொல்வம் சொல்லு . .’ என இரு மாணவர்களையும் வகுப்பில் முன்னிலைப் படுத்துவதில்லை. 

ஞானமும் அவளை ஏறெடுத்து பார்ப்பதில்லை. எதெற்கெடுத்தாலும் முந்திக்கொண்டும் துள்ளிக்கொண்டும் மிஸ் மிஸ் என முன்னெடுத்து பதில் சொல்வதும் கேள்வி கேட்பதுமான செயல்கள் அடியோடு நின்று போயின. ஞானத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் மூன்று நாட்கள் பள்ளிக்கு வராததன் பிறகே அவன் இந்த நிலைக்கு ஆளானதால் அவனுக்கு ஏதோ நோய் இருக்கலாம் என சக மாணவர்கள் நினைத்தனர். நெருங்கிய நண்பர்கள் இவனிடம் காரணம் கேட்டும் பதில் இல்லை. உடல்நிலை சரியில்லை. அடிக்கடி ஃபீவர் வருகிறதென பொய் சொன்னான். 

இவனது நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் அஞ்சினர். காரணத்தை அவனிடம் அறிந்துகொள்ள இயலாது குழம்பினர். தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்ற அச்சம் அவர்களையும் தொற்றிக்கொண்டது. 

அவனால் மனதை ஒரு முகப்படுத்த இயலாது தடுமாறினான். அதை ஒரு கெட்ட கனவாக மறக்க முடியவில்லை. அறிவின் செறிவு மழுகி, பயந்தது போலவே தேர்வு கடினமாகிப்போனது. தொண்ணூறு ஐந்து சதவிகிதம் எடுப்பான் என ஆரம்பத்தில் நம்பினார்கள். ஆனால்  அறுபது சத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றான். 

ஒர் ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 

பள்ளியில் சேர்ந்த ஒரு மாதம் கழித்து ஒரு நாள் ஞானபண்டிதன் வீடு திரும்ப வில்லை. பீரோவில் வைத்திருந்த தாயாரின் அந்த மாத சம்பளமும் காணாமல் போயிருந்தது. 

மாலினி மீது இருந்த கோபத்தைவிட பெற்றோர் மீதான பாசம் ஞானபண்டிதனை இறுத்தியது. அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கனவுகளை தீயிட்டுக் கொளுத்திவிட்டதாகவும் கருதி மனம் கருகிப் போனது. இப்படியே போனால் அவர்கள் தன் மீது கொண்டுள்ள ஈடுபாடு குறைந்து ஒரு கட்டத்தில் தன்னை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற ஐயம் சிந்தையில் புல்லுருவி போல இறுகப் பிடித்து வளரத் தொடங்கியது. தாய் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். தந்தை தன் பங்கிற்கு பாசத்தை வார்த்தைகளால் காட்டாது செயல்களால் அதை நிரப்புவார். அவனுக்கு ஒரு தும்மலே இருமலோ வந்தால்கூட தந்தை துடித்துப் போவது அவரது செயல்பாடுகளில் அறிய முடியும். 

கைமாறாக என்ன செய்தேன் என மனம் வெதும்பிப்போனான். படிப்பை கோட்டை விட்டு கிட்டத்தட்ட முழு முட்டாளாகிப் போனதாக உள்ளுக்குள் அழுதான். அது குற்ற உணர்வாக மாறி சோர்வடையச் செய்தது. மூளையை மேலும் மழுங்கடிக்கச் செய்தது. 

தாய் ஓய்ந்து ஓய்ந்து அழுதாள். தந்தை நிதானம் தவறி நடந்து கொண்டிருந்தார். சட்டையை மாற்றி மாற்றிப் போடுவார். வழக்கத்திற்கு மாறாக இடக்கையில் கடிகாரத்தை கட்டுவார். சோபாவில் அமர்ந்தும் மாற்றி கட்டியதை உணர்ந்து கழட்டி மாற்றுவார். கைகடிகாரத்தை பார்ப்பார் எத்தனை மணி என அறிய முடியாதவாறு மனம் செத்து போயிருக்கும். மீண்டும் மீண்டும் பார்த்து நேரத்தை உணர்வார். சுவர் கடிகாரத்தை அண்ணாந்து பார்த்து அதை உறுதி செய்வார். கார் சாவி எப்போதும் போல் ஸ்டான்டில்தான் மாட்டி இருக்கும். ஆனால் அவர் மனது கண்களை மறைத்து சாவி தென்படாது ஹால் முழுக்க தேடுவார். படுக்கை அறைக்குப் போய் மடித்து வைத்திருந்த போர்வையின் கீழ் கையை விட்டு துழாவுவார். ‘என்ன தேடுறிங்க’ என்றால் ‘ஒண்ணுமில்லை’ என்று கழட்டி போட்ட சட்டை பெண்ட் பாக்கெட் எல்லாம் தேடி கடைசியாய் ஹாலுக்கு வந்து இருந்த இடத்திலேயே சாவி இருப்பதை கண்டுபிடித்து ‘சே. இங்கேதான் இருக்கா’ என சலுப்புடன் எடுத்து சாவியால் தலையில் குத்திக் கொண்டு அப்பாடா என அலுப்புடன் சோபாவில் தன்னை போட்டுக் கொள்வார். அது அவருக்கு வலிக்கிறதோ இல்லையோ ஞானத்திற்கு உயிர் போய் வருவதாக நோகுவான். 

திருத்திக்கொள்ள முடியாதா? முடியும். ஆனால் மெட்ரிக்கில் கோட்டை விட்ட மதிப்பெண்ணை எப்படி எடுக்க முடியும். மீண்டு போக முடியுமா என்ன? பழைய நிலைக்குப் போனாலும் முதல் மாணவனாக முன்னேற முடியுமா என்ன! முடியும். தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். நடந்ததை கெட்ட கனவாக நினைத்து விழித்துக்கொள்ள வேண்டும். முகத்தை கழுவிக்கொண்டு புது மனிதனாய் பிறக்க முடிவெடுப்பான். 

ஆனால் அந்த உறுதியெல்லாம் அடுத்த கனமே மாயமாகும். மறைந்து போகும் சுவடற்று போகும். கசப்பான அனுபவம் மனதில் புற்று நோயாய் வளரத் தொடங்கும். கொஞ்ச நஞ்சம் மிஞ்சிய சிந்தைகளையும் சிதையத் தொடங்கும். விரக்கியின் விளிம்பிற்குப் போனான். 

ஒருநாள் மாலை தயார் கொண்டுவந்து வைத்திருந்த அந்த மாத சம்பளத்தை திருடிக்கொண்டு ஸ்கூல் பேக்கில் இருந்த புத்தகங்களை வெளியே எடுத்து எறிந்துவிட்டு மாற்று உடை ஒன்று அதனுள் திணித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மெட்ராஸ் வந்தடைந்து கங்கா காவேரி விரைவு ரயிலில் காசி நோக்கி பயணித்தான். 


ஞானபண்டிதனுக்கு காசியைப் பற்றி என்ன தெரியும். 

அவனுடைய கொள்ளுத் தாத்தா எப்போது பார்த்தலும் ‘காசிக்குப் போய் கருமம் தொலைக்கப் போறேன். காசிக்குப்போய் கருமம் தொலைக்கப் போறேன்’ என புலம்பிக் கொண்டிருந்தவர், ஒரு நாள் காணாமல் போய்விட்டாராம். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாதாம். காசிக்குப் போய் கங்கையில் மூழ்கி செத்துப் போயிருக்கலாம் என எப்போதோ பாட்டி சொல்லி கேட்டிருக்கிறான். 

கங்கை ஆறு காசியில் ஓடும்போது அந்த இடத்தில் பாவங்களைக் கழுவும் புண்ணிய நதியாகி விடுவதாக பின்னர் புத்தகங்களில் வாசித்திருக்கிறான். புண்ணியத்தலம் என்றால் வடக்கே காசியும் தெற்கே ராமேஸ்வரமும் முதன்மையானது என அவன் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறான். அதனால்தான் காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் விட்டிருக்கிறார்களோ என தனக்கு தானே கேட்டுக் சொல்லிக் கொள்வான். 

இவனிடம் கழுவிக்கொள்ள என்ன பாவம் இருக்கிறது. ஒரு நாய் இவனை கடித்து விட்டதென்றால் நாய்தானே பாவம் செய்தது. ஏறிய விஷம் தீங்கு செய்யாதிருக்க நான்கு ஊசி போட்டால் போதுமே. இவன் நாயைக் கடிக்க வில்லையே. 

ஆனால் இவன் எண்ணமே வேறு மாதிரியானது. சாக்கடை மேலே பட்டுவிட்டது. அதை தானே கொட்டிக் கொண்டால் என்ன? பிறர் வாரி இறைத்திருந்தால் என்ன? நாற்றம் அடிக்கத்தானே செய்யும். கழுவித்தானே ஆக வேண்டும் என கருதினான். 

கங்கையில் குளித்தால் பாவம் போகும். ஆன்மா சுத்தமாகும். ஒரேடியாக மூழ்கி விட்டால் ஆன்மா நிறைந்து போகும் . அது பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகிவிடும். மாய வாழ்வு அறுந்துபோகும். ஏழேழு ஜென்மங்கள் எல்லாம் இல்லாமல் போகும். அவன் எத்தனையாவது ஜென்மத்தில் இருக்கிறான்? யாருக்குத் தெரியும்! எல்லாம் நம்பிக்கை. வாழ்க்கையே ஒரு நம்பிக்கைதானே. அது மாயை என்றாலும் மூச்சுவிடுதல் நிஜமானதுதானே. அதனால்தான் மாயை என்ற ஒன்றை வாழ்க்கை என்கிறோம். வாழ்வதை நிஜம் என்கிறோம். வாழ்க்கை என்பது நம்பிக்கையும் நிஜமும் என்றால் கங்கை ஓடிக் கொண்டிருப்பது நிஜம்தான். அதில் பாவங்களை கழுவிடலாம் என்பது நம்பிக்கை. 

ஆனால் ஈன ஜென்மம் இனி வேண்டியது இல்லைதான். இனி என்றால் இப்போதிலிருந்தா? மரணத்திலிருந்தா? குளித்து எழுவதா? மூழ்கிப்போவதா? ஞானம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஞானத்திற்கு இதில் இன்னும் அவ்வளவு ஞானமில்லை. சின்ன பையன்தானே. ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

“தம்பி எந்த எடத்துக்குப் போகுது?” எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் கேட்டார். 

யோசித்தான். 

“பனாரஸ் யுனிவர்சிட்டிக்குப் போறேன்” ஒரு பொய்யைச் சொன்னான். 

“படிக்கப் போறிங்களா?” பாவம் அந்த பெரியவர் ஞானத்தை நம்பினார். அதில் தவறில்லை. 

“இல்லை. அட்மிஷனுக்காக இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப் போறேன்” அடுத்த பொய். 

இன்னும் எத்தனை பொய் சொல்ல வேண்டுமோ. கோர்வையாகச் சொல்லி பொய்களை உண்மையாக்க முடியுமா. உண்மைக்கு ஒரு சாட்சி போதும். பொய்யை உண்மை என நம்ப வைக்க பல சாதுர்யமான பொய்களல்லவா தேவைப்படும். 

“அப்பா என்ன பண்ணுறார்?” 

“மிலிட்டரியில இருக்கார்” 

“நாட்டை பாதுகாக்குறார். நமக்கொல்லாம் எல்லைச்சாமிகள். அம்மா ஹவுஸ் வைஃப்பா?” 

“ம்” 

“ஏன் அந்த கொழந்தைய போட்டு நச்சரிக்கிறீங்க. எதாவது தொணதொணன்னு பேசிட்டே வரலன்னா சரிப்படாதா?” என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது வீட்டுக்கார அம்மா. 

“சும்மா வாய மூடிகிட்டு வரச்சொல்லுறியா? அந்த கொழந்தைக்கே எரிச்சல் வரலை. உனக்கேண்டி கோவம் வருது!” என்று மனைவி மீது எறினார். 

“பரவால்லம்மா. பேசட்டும். நான் தப்பா நெனக்கலையே” அந்த அம்மாவைப் பார்த்து அவரின் உரையாடல் தனக்கு இடையூரில்லை என்பதை உறுதி படுத்தினான். 

“பாத்தியாடி புள்ளாண்டம் என்ன சமத்து. இதே போல தொலைவு பயணத்தில், பல பேரோட பேசினாதான் புது புது நாலெட்ஜ் வந்து சேறும். 

“இந்த வயதுல உங்களுக்கு என்ன நாலட்ஜூ வேண்டிக்கெடக்கு” 

“எனக்கு இல்லடி. தம்பிக்கு. வளர்ற வயசு. வாழ்ற கொழந்த. அதெல்லாம் உனக்குத் தெரியாது” என மனைவியின் வாயை அடைத்தார். 

“அப்டியே ஊருக்கு திரும்பும் போது காசிக்கு போய் விஸ்வநாதர தரிசிச்சிட்டு கங்கையில ஒரு முழுக்கு போட்டுட்டு போங்கோ” என்றார் ஞானத்திடம். 

“சரி ஐயா” என்றான் பவ்யமாக. அதில் ஒளிந்திருக்கும் திருட்டுத் தனம் அவனுக்குத்தானே தெரியும். 

“ஆமா கங்கையில ஏன் குளிக்கணும் பெரியவரே?” என்றான். ஐயா என்பதா பெரியவர் என்பதா? அவர் எதையும் வித்யாசமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். 

“கங்கையில தலை குளிச்சா முந்துன பிறவி இந்த பிறவி கர்மா எல்லாம் பொய்டும். ஆன்மா சுத்தமாயிடும். அதான். கங்கை இருக்காளே; அவ எல்லாத்தையும் ஏத்துகிடுவா” 

“கங்கையிலையே ஐக்கியம் ஆயிட்டா என்ன? பிறவி முடிஞ்சிடுமில்ல.” 

‘அது கடைசி காலத்துல முடிஞ்சா கங்கைக் கரையில கட்டையை எரிச்சிடலாம். நாமலா என் விழுந்து சாவணும்” 

“அதுல விழுந்து செத்தா தற்கொலை இல்லைதானே?” 

“அவ்வளவு எனக்கு தெரியாதுய்யா. நான் மகானோ யோகியோ இல்ல. ஏன் சாகணுன்னு மட்டும் யோசிக்கச் சொல்லுது” 

“பெரியவரே கங்கையில வந்துதான் பாவத்தை கழுவணுமா? அறச்செயல் செய்யலாம் யாருக்கும் தீங்கு செய்யாம இருக்கலாம்” 

“இருக்கலாம். அதும் ஆன்மீகம்தான். கர்மம் கழியும்தான். ஆனா, முற்பிறவின்னு இருந்தது. அதில் செஞ்ச பாவம் எல்லாம் கழியணும்ன்னா கங்கையில முழுவணுங்குறது ஒரு நம்பிக்கை. எதுவும் தெரியாததால். நப்பிக்கைய நம்பத்தானே வேணும்” 

“ஐயா இப்பிறவியே கர்மாதானே?” 

“ஆமாம் பிறவியே பாவச் செயல்தான் என்கிறது சாஸ்த்திரங்கள்” 

“எல்லாரும் காசிக்கு வர முடியாதே!” 

“ஆன்மீகத்தில ஆராய்ச்சி எல்லாம் பண்ணப்படாது. சில நம்பிக்கை மேல விஞ்ஞானத்த ஏத்தக்கூடாது. முடிஞ்சவங்க வாறாங்க. நம்புறவங்க வாறாங்க” 

“சரி…சரி.” 

“ஆமா தம்பிக்கு இவ்வளவு நாலெட்ஜ் இருக்கு. அம்மா வளர்ப்பு அப்படி” என்று புகழ்ந்தார். 

பின்னர், “ஷேமம். ஷேமம்.” என்றார். ஆசிர்வதிப்பது போல. 

பேசிக்கொண்டே வந்தார். இருப்பிடம் கேட்டார். பொய்யைச் சொன்னான். 

தன்னை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது. எந்த தடத்தையும் விட்டுவிட்டு போகக்கூடாது. எந்த வகையிலும் தனது பயணத்தை பெற்றோர் தெரிந்து கொள்ளக் கூடாதென்ற சமார்த்தியத்தோடு தூரோடும் வேறோடும் தன்னை பறித்துக் கொண்டல்லவா புறப்பட்டான். 

‘எங்கே போய்விட்டான்? என்ன ஆனான்?’ என்ற கேள்விகளோடு அவனை பற்றி அவர்கள் முடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே. எனவே பெரியவரிடம் பொய் பொய்யாகச் சொன்னதில் உள்ளுர வருத்தம் ஏதும் இல்லை. 

நிர்ப்பந்தம் சூழ்நிலையை அனுசரணையாக்கிக் கொள்கிறது. 

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

நித்யா புதுமையை துய்ப்பதில் ஆர்வம் கொண்டவன். சுவாரஸ்யங்களை உணர்தல் அவரின் பொழுதுபோக்கு. இயந்திரத் தனமான காவல் பணிக்கு நடுவே இவ்வாறான ஈடுபாடு அவனது மனதில் உற்சாகமும் உந்து சக்தியும் ஏற்படுத்தும். மன இறுக்கத்தை போக்கும் அருமருந்து. அது ஒரு கலை. காவலருக்கு இருக்கக் கூடாதா என்ன? அதனால்தான் ஞானபண்டிதனின் புகாரை நித்யா என்கிற முதல் நிலைக் காவலர் நித்யானந்தன் என்பவரிடம் ஒப்படைத்தார் ஆய்வாளர். 

அவரிடம் இருப்பது ஞானபண்டிதனின் மனு மட்டுமே. அதில் குறிப்பிட்டுள்ள பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியை சென்றடைந்தான். மாலினி என்ற ஒர் ஆசிரியை அங்கு பணி புரிந்ததாக தெரியவில்லை என்றார்கள். எல்லாம் புதுமுக ஆசிரியர்கள். பத்து வருடத்திற்கு மேற்பட்ட ஆவணங்கள் எதுவும் அங்கு இல்லை என்றார்கள். போகிக் கொளுத்தியிருப்பார்களோ ! பொய் சொல்லி இருப்பார்களோ! 

மாணவர்கள் பள்ளியை விட்டுச் செல்லும்போது வழங்கும் மாற்றுச் சான்றின் நகல் அடங்கிய ஆவணங்கள் மட்டும் புத்தக வடிவில் வைத்திருந்தனர். அது நிலையான ஆவணம் என்பதால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுவும் இல்லையென பொய் சொல்ல முடியாது. ஆவணங்களை ஆராய்ந்ததில் ஞானபண்டிதன் பள்ளியில் பயின்றதும் புகார் மனுவில் தெரிவித்துள்ள வருடத்தில் பள்ளியை விட்டு வெளியேறிதையும் உறுதி செய்து கொண்டான். மாலினி குறித்த எந்த ஆதாரமும் அதில் இல்லை. பள்ளி முதல்வரின் கையொப்பம் மட்டுமே காண முடிந்தது. 

அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து துவங்கப்பட்ட மற்றொரு மெட்ரிக் பள்ளிக்குச் சென்று விசாரித்தார். முதல்வர் விடுப்பில் இருந்தார். ஞானபண்டிதன் பயின்ற பள்ளிக்குப் போனபோது நித்யா சீருடையுடன் சென்றதால் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு அது அச்சத்தையும் தேவையற்ற கற்பனையான சந்தேகங்களையும் கொடுத்ததை மனதில் கொண்டு இந்த பள்ளிக்கு சிவில் உடையில் போனான். 

“வாங்க சார். யார் வேணும்?” என்றார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்மணி. 

“ஒண்ணுமில்ல. நான் ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக வந்திருக்கேன். அது உங்க ஸ்கூலப் பத்தினது இல்ல. அதனால யாரும் பயப்படாதிங்க. நான் காவல் துறையிலிருந்து வந்திருக்கேன்” என்றான் நித்யா. 

“மேடம் இன்னக்கி லீவுல இருக்காங்க. அவங்க வந்ததும் நாளைக்கு வந்திங்கன்னா தெரிஞ்சிக்கிடலாமே” 

“அதான் ஸ்கூல பத்தினது இல்லேன்னுட்டனே. ஏன் பயப்படுறிங்க. எந்த ரெக்காடும் வேண்டாம். யார் கிட்டேயும் எதும் எழுதி வாங்கமாட்டேன். சும்மா விபரம் கேக்கத்தான் வந்தேன்” 

“அப்போ சொல்லுங்க சார். என்ன வேணும்?” 

“இந்த ஸ்கூல் ஆரம்பிச்சதிலிருந்து மாலினின்னு யாராவது லேடி டீச்சர் வேலை பாத்திருக்காங்களான்னு விபரம் வேணும்” 

அந்த பெண்மணி பீரோவைத் திறந்து ஒரு பதிவேட்டினை எடுத்து வந்து மேஜையில் வைத்து நின்று கொண்டே முழுவதும் புரட்டி பார்த்த பின் “அப்படி யாரும் இங்கே ஒர்க் பண்ணலா சார்” என்றாள். 

“ஷ்யூர்?” 

“ஓ எஸ். ஷ்யூர். எல்லா ஸ்டாப் விபரமும் ஆரம்பத்திலேருந்து இதுல இருக்கு சார்” என்றாள். 

நித்யாவின் முகம் சோர்ந்து போனது. 

இடப்புறத்தில் ஏதோ அலுவலக ஆவணங்களை புரட்டி கொண்டிருந்த மற்றொரு பெண்மணி நித்யாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தது போல “சார் மாலினிங்குற டீச்சர் பெஸ்ட் மெட்ரிக் ஸ்கூல்லல்ல வேலை பாத்தாங்க” என்றாள். 

அடித்து பிடித்து எழுந்தது போல “எஸ் . . அவங்களேதான். அவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா?” 

“நான் அவங்க படிக்கிறப்போ எனக்கு மேத்ஸ் டீச்சரா இருந்தாங்க. அப்புறம் கவர்மெண்ட் காலேஜ்ல வேலை கெடச்சதும் அங்கிருந்து ரிசைன் பண்ணிட்டு பொய்ட்டாங்க” 

“எந்த காலேஜ்ன்னு தெரியுமா மேடம்?” 

“இங்க இருக்குறது கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்தான். அனேகமா அவங்க இப்ப ரிட்டையர்ட் ஆயிருப்பாங்க” 

“அவங்களப் பத்தி ஏதாவது தெரியுமா? வீடு அட்ரஸ் ஏதாவது?” 

“அதெல்லாம் தெரியாது சார். அவங்களோட ரிசைன் பண்ணிட்டு காலேஜ் வேலைக்குப் போனவங்கதான் லிவ் ஆர்ஃபன் ஹோம் நடத்திகிட்டு இருக்க அம்புஜம் டீச்சர். மாலினி டீச்சரோட ஃபிரண்ட் தான் அவங்க. அங்க போய் கேட்டிங்கன்னா தெரியும்” 

“தேங்க்ஸ் மேடம். வெரி கைன்ட் ஆப் யூ”. 


அம்புஜம் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தகவல் திரட்ட விஜயம் செய்தான் நித்யா. அவன் இல்லத்திற்குள் நுழையவும் வானம் பன்னீர் தெளிப்பது போல தூரலைத் தொடங்கவும் சரியாக இருந்தது. அதிக மழை இல்லை. மண்வாசம் மறையாதவாறு தானே நிறுத்திக் கொண்டது மழை. 

தன் நெருங்கிய கல்லூரித் தோழி மாலினியைப் பற்றி கதை கதையாகச் சொன்னாள் அம்புஜம். 

பாதி நாட்கள் கல்லூரிக்கு வரும்போது முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டுதான் மாலினி வருவாளாம். கேட்டால் கணவரோடு சண்டை என தெரிவித்து அழுவாளாம். அம்புஜத்திடம் மட்டுமே அவள் நெருக்கமாக பழகி இருக்கிறாள். பெரும்பாலான நாட்களில் மதிய உணவை உண்ணாமல் மாலை விடு திரும்பும்போது அப்படியே உணவை திரும்ப எடுத்துக்கொண்டு செல்வாளாம். 

‘இன்னக்கி அவர புடுச்சி திட்டு திட்டுன்னு திட்டிபுட்டேன். சாப்டாம ஆபீஸ் பொய்ட்டார்’ என்று சொல்லி தானும் மதியம் உணவு உண்ண மாட்டாளாம். 

அவர் உன்ன திட்டலயான்னு கேட்டால்; இல்ல, ஊமை மாதிரி மௌனமா இருந்துட்டு சொல்லிக்காம கொல்லிகாம டக்குன்னு கெளம்பி சாப்டாம பொய்ட்டார் என்பாளாம். 

மற்றொரு நாள், இன்னக்கி எனக்கு நல்ல பூசை. ஒரு மனுஷன் பொண்டாட்டிய இப்படியா மாடு மாரி அடிக்கிறது என்றாளாம். 

ஏன் நீ என்ன தப்பு பண்ணினே என்று கேட்க, சாப்பிடும்போது இன்னும் சாப்பிடுங்கன்னு சாதத்தை தட்டில் போட்டபோது எவ்வளவுடி சாப்பிட முடியும் ஒனக்கு எதுவுமே தெரியாது. மண்டு மண்டு என திட்டினாராம் 

உங்க வயத்துக்கு தின்னுறத்துக்கு நான் ஏன் திட்டு வாங்கணும் சாப்டா சாப்டுங்க சாப்டாட்டியும் போங்க என்றாளாம். 

‘இனிம நீ சாப்பாடு போடாதா. நானே சாப்பாட்ட போட்டுக்கிடுறேன். ஒனக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டெங்குது. நீ கொட்டுற சாப்பாட்டை பாத்தாலே ஐயனார் கொயில் பள்ளயம் மாதிரி இருக்கு, சாப்புடுற மூடே போய்டுது’ என்றாராம். 

‘உங்களுக்கெல்லாம் புருசனுக்கு சாப்பாடு போடாத கஞ்ச பொண்டாட்டியா வாச்சிருக்கணும். ஏதோ நான் கெடச்சிகிட்டேன். போனா போவுதுன்னு வாயிக்கு ருசியா சமைச்சி போட்டா ரொம்பதான் எகுறுரிங்க’ என கடிந்து கொண்டாளாம். 

‘என்னமோ ஓசியில சமைச்சி போடுற மாதிரி கத்துறே.’ 

‘கத்துறதுக்கு நான் என்ன கழுதையா?’ 

‘அட கழுத சமைச்சா மட்டும் பத்தாது. கொஞ்சம் கொஞ்சமா சாதத்த வச்சி பரிமாறணும்.’ 

‘அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்படித்தான் போடுவேன். வேணும்னா சாப்புடுங்க. இல்லன்னா உங்களுக்கு புடிச்ச மாதிரி புடிச்ச ஒரு நல்ல பெண்ண பாத்து ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிடுங்க’ என்றாளாம். 

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எச்சில் கையால் கன்னத்தில் பளீர் பளீரென இரண்டு அறை விட்டுவிட்டு சாப்பிடாமல் எழுத்து போய் எடுத்து வைத்திருந்த மதியத்திற்கான சாப்பாட்டையும் எடுத்துக் கொள்ளாமல் அலுவலகம் சென்றுவிட்டாராம். 

“உனக்கு இன்னும் உலகம் புரியலடி மாலு. ஆம்புளங்க மனைவி எடத்துல அன்பையும் பாசத்தையும் மட்டும் எதிர்பார்கிறதில்ல. அறிவோட இருக்கணும்ன்னும் எக்பெக்ட் பண்ணுறாங்க” 

“இல்லடி அம்பு நம்ம வச்சிருக்க பாசத்த ஊதாசினப் படுத்துறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு கனவு கண்டுருக்கோம். அதை நிறைவேற்ற நமக்கு கெடச்சது கணவர்தானே. பிரியமா இருக்குறது ஒரு குத்தமா?” 

“எந்த ஆம்புளங்களும் நம்ம பாசத்த கேவலமா நெனக்க மாட்டாங்க. அது மட்டுமே ஒரு மனைவிக்கு போதும்னும் இருந்துட மாட்டாங்க” 

“எனக்கு டக்கு டக்குன்னு எதையும் யோசிச்சி முடிவெடுக்கத் தெரியாதுதான். ஷாப்பிங் போன கூட ஒரு புடவைய செலக்ட் பண்ண இவ்வளவு நாழியா என எரிஞ்சி விழுறார் மனுஷன்” 

“பாத்தியா உனக்கு அவர் மேல உள்ள கோபத்துல மனுஷன்ங்குறே. எப்பயும் அவரு உன்ன மனுஷின்னு அவர் ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிருக்க மாட்டார். நீ அவர மனுஷன்னு சொன்னதால அவர் மேல நீ வச்சருக்குற அன்பு கொறஞ்சிடுமா என்ன!” 

“மனுஷன்னு சொல்றது குத்தமா அம்பு” 

“நீ என்னக்கியும் இப்படி சொன்னதில்லையே. தீடீர்ன்னு இன்னக்கி மட்டும் அப்படிச் சொன்னா அது தடிச்ச வார்த்தையாத்தான் எடுத்துகிடச் சொல்லுது” 

“சாரிடி. இனி இப்படி சொல்ல மாட்டேன்” என அம்புஜத்தின் கையைப் பிடித்து வருத்தப்பட்டாள். கண்ணீர் கசியத் தொடங்கியது 

“அசடு அசடு. ஒரு பேச்சிக்குச் சொன்னேன். அவங்க உலகமே தனி. அதுவும் சரின்னுதான் எனக்குப் படுது. நாமதான் அப்படியே இருக்கோம். அது நமக்குள்ள இருக்குற சில கேரெக்டர விட முடியாத ஒரு வகையான பெமினிசம். அவங்க ஒரு ட்ரெஸ் எடுக்கணுமுன்னா பைவ் மினிட் போதும். எடுத்த பிறகு வீட்டுக்கு வந்ததும் அது நல்லா இல்லா. அத எடுத்துருக்கலாம். இத எடுத்துருக்கலாம் வேற கடைக்கு போயிருக்கலாம்ன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க. சூஸ் பண்ணிட்டா மனசு பிறகு அதை பத்தி எதையும் யோசிக்காது. அதே கதி. அதே சரின்னு இருந்துடுவாங்க. ஆனா நீ ஒரு புடவை எடுக்க எவ்வளவு டயம் எடுத்துக்குவே? சொல்லேன்” 

“எனக்கு ஹாஃப் டூ ஒன் ஹவர் வேணும்பா 

“நீ செலக்ட் செய்றேன்னு சாரிய எடுத்த எடுத்து செக்ஷன் செக்ஷனா போறத பாத்து பொறுமை இழந்து முகம் சுழிப்பாரே தவிர எத்தனை புடவை எடுத்தாலும் ஏன் இத்தன புடவை எடுத்தேன்னு திட்ட மாட்டார். அதுதான் உன் மேல உள்ள அன்பு. ஆனா வெட்டியா டயம் வேஸ்ட் பண்ணுறது ஆண்களுக்கு புடிக்கிறதில்ல” 

“இப்ப என்னதான் அம்பு சொல்றே. இனிமே சாப்பாட்ட அவரை போட்டுக்கட்டும்ன்னு விட்டுடச் சொல்லுறியா?” 

“அது உன் இஷ்டம். சாரி.. அது உங்க ரெண்டு பேரோட மனநிலையப் போறுத்த முடிவுடி” 

“விடமாட்டேன்டி. அவரு என்ன திட்டினாலும் அடிச்சாலும் நான்தான் பரிமாறுவேன். அப்புறம் பொண்டாட்டின்னு நான் எதுக்கு இருக்கேன்” 

“உன்ன யாருடி விட்டுக் கொடுக்கச் சொன்னா. அன்போடு இருக்குற மாதிரி கொஞ்சம் அறிவோடும் இருங்குறேன். நீயும் ஆண்மையை மதிங்குறேன் தெட்ஸ் ஆல்” 

“சரிடி” 

“அப்ப வா என்னோட லஞ்ச ஷேர் பண்ணிக்கிடுவோம்” 

“அசுக்கு புசுக்கு. அதுதான் நடக்காது. அவரு அங்க சாப்டாம கெடப்பாரு. என்ன மட்டும் சாப்புடச் சொல்லுறியா!” 

“போடி இவௗ” இருவருக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியே. 


பிரிதொரு திங்கள் கிழமை கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின்போது முதல்நாள் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் நடந்ததை மாலினி சொன்னபோது வியந்து போனாள் அம்புஜம். 

பொதுவெளியை நிர்வாணமாக்கிக் கொண்டிருந்தது அதிகாலைச் சூரியன். போர்வைக்குள் கணவன் புகுந்து கிடக்க, தலை குளித்து படுக்கையறைக்கு வந்து கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்யத் தொடங்கினாள் மாலினி. பெண்மையின் வாசம் போர்வைக்குள் புகுந்து கிடந்த கணவனின் நாசிகள் வழியாக இதயத்தில் புகுந்து மெல்லிய காமப் போதையை ஏற்றியது. 

போர்வையை விலக்கி வீசி எறிந்து விட்டு மாலினியின் பின்புறமாகச் சென்று அவளைக் கட்டிப் பிடித்தான். உடலில் இன்னும் ஈரம் காயவில்லை. கேசங்களில் சில நீர் துளிகள் மெல்ல கீழிறங்கி நுனியில் சொட்டுச் சொட்டென விழுந்து கொண்டிருந்தன. 

மாலினி அதை எதிர்பாக்கவில்லை. கோபம் கொண்டவள்போல் “ஏங்க குளிச்சிட்டேன். விடுங்க விடுங்க” என கைகளை பிடித்து பிரித்திட முயல்வதுபோல் முயன்றாள். 

“குளிச்சா என்ன குளிக்காம ஆக்கணும் அதுக்குதான் இது” என்று இடையை வளைத்து கோர்த்து பிடித்து கட்டிலுக்கு இழுத்துச் சென்றான். 

“விடுங்க விடுங்க” என்றவாறு அவளும் வர மறுப்பது போல பாசாங்குடன் இழுப்புக்கு இணங்கிப்போனாள். 

அணைத்தவாறே மடியில் கிடத்திக் கொண்டான். 

“குளிக்காம ஆக்குறேன்னிங்களே. ஏங்க! குளிக்கலன்ன பாடி அழுக்காயிடாதா?” 

“அது இந்த குளிக்காம ஆக்குறதில்ல. அந்த குளியல். ஒண்ணும் தெரியாத பாப்பா” என்று கன்னத்தில் வலிக்காமல் திருகினான் 

“அதுக்கு இப்ப என்ன அவசரமாம்” 

“குவா குவா சத்தம் வேணும் எனக்கு” 

“ஏன் என்ன மறந்துடுறதுக்கா” 

இன்னும் இறுக்கினான். பரிசம் அதிகமானது. 

உணர்வுகள் கொப்பளிக்கத் தொடங்கின. தங்களை மறக்கத் தொடங்கிய அக்கணம்தான் பாழாய் போன ஒரு சந்தேகம் மாலினிக்கு வந்தது. 

“ஏங்க . . என்னத் தவிர வேறு யாரையாவது லவ் பண்ணிருக்கிங்களா?” அவள் புன்னகையோடுதான் தாவாயை பிடித்து தடவிக்கொண்டு கேட்டு வைத்தாள். பூ உதிர்வது போல வார்த்தைகள் மிதப்பதாக பட்டது அவளுக்கு. 

ஆனால் அவனுக்கு அவளது பூக்கள் நெருப்பு துண்டுகளாகின. 

அவள் கைகளை விலக்கினான். மடியில் கிடந்தவளை தலைக்கு அடியில் கைகளை கொடுத்து தூக்கி எழுப்பி பக்கத்தில் உட்கார வைத்தான். தான் கேட்கக் கூடாததை கேட்டுவிட்டோம் என்பதை மட்டும் உணர்ந்தாள் மாலினி. 

“நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா?” அவனது கேள்வியில் வெப்ப வீச்சு அடித்தது. 

“இப்பயும் பண்ணுறியா?” என்ற துணை கேள்விதான் மாலினியை வேக வைத்தது. உடல் நீரெல்லாம் வற்றிப் போயின. 

ஆவேசம் கொண்டவளாக எழுந்து அவன் சிண்டை பிடித்து குலுக்கினாள் 

“என்ன சொன்னே. லவ் பண்ணுனியான்னா கேட்டே?” பற்கள் கடிபட்டன. 

ஆனால் அவனின் சாந்தம் இன்னும்கூட விலகவில்லை. 

“நீ கேட்டதத்தானே நானும் கேட்டேன்” 

அதை அவனது நியாயப்படுத்தலாக கருதினாள். 

“ஒரு பொண்ண பாத்து கேக்குற கேள்வியா இது?” 

“ஏன் மாலு? பொண்ணுன்னா காதலிக்க மாட்டாங்களா? இல்ல ஆணப் பாத்து மட்டும் கேக்களாமா?” 

“அப்ப சரி. அது என்ன இப்பயும் பண்ணுறியான்னு கேள்வி?” தலையைப் பிடித்து உலுக்கியதை நிறுத்தினாள். பொத்தென சற்று தள்ளி கட்டிலில் தன்னை போட்டுக் கொண்டாள். 

“சும்மா கேட்டேன். ப்ளிஸ். கோச்சிகாதே. மன்னிச்சிடு மாலு” என்று நகர்ந்து கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினான். 

“சும்மா நடிக்காதிங்க” என்று கைகளை உதரிவிட்டு அறையை காலி செய்து வெளியேறினாள்.. 

உடன் எழுந்து போய் கெஞ்சினால் மிஞ்சுவாள். ஆறப்போட்டால் கொஞ்சமேனும் அடங்கிப்போவாள் என்ற முடிவுக்கு வந்தான். மீள படுக்கையில் உடலை சாய்த்துக் கொண்டான். தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தான். 

எட்டு மணிக்கு எழுந்து குளித்து அவளுக்கு பிடித்த ப்ரவுன் கலர் லுங்கிக்குள் புகுத்திக்கொண்டு ஹாலுக்கு வந்து சமாதானம் பேசினான். 

உடலை உலுக்கினான். குலுக்கினான். மனம் அசைவதாக இல்லை. 

எதிரே மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு தாயே” என்று பாவ மன்னிப்பு கேட்டான். 

அவள் முகத்தில் கோரம் தெரிந்தது. கண்கள் கோவைப் பழம் போல சிவந்திருந்தன. கன்னங்கள் இறுகிப் போயிருந்தன. மூக்கு புடைத்து விட்டது. கண்களில் கண்ணீர் வரவில்லை. வருத்தமில்லை. கோபம். கோபம் அழுகையாகாது. 

கூடுதலாய் கைகள் முளைத்து ஆயுதம் தரிக்கும் முன், பற்கள் கோரைப் பற்களாக வெளியே வரும் முன், ரத்த வெறி ஏறும் முன் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று முடிவெடுத்து, படுக்கை அறைப் பக்கம் பதுங்கிப் பதுங்கி நடக்கலானான். பூனையைப் போல. 

சற்று நேரத்தில் படுக்கையறை வந்து ஒரு பேப்பரை நீட்டினாள். பேசாமலும் எதையும் எதிர் பார்க்காமலும் அறையை விட்டு ஹாலுக்கு நகர்ந்தாள். 

நைட்டிக்கு மாறியிருந்தாள். நெடுதுயர்ந்த யூகாலிப்டஸ் மரம்போல. 

என்ன எழுதியிருப்பாள்? கோபத்தில் ‘அம்மா வீட்டிற்கு போறேன்” என்றா?’ சேச்சே… இருக்காது. ஆணாதிக்க திமிரில் பேசினேன் என்றா? பெண்ணாதிக்கமே இங்கே அதிகமாக இருக்கிறது. இங்கு மட்டுமில்லை. எங்கும்தான் என நினைத்தான். அது அவன் அறிந்தவரை. ஓரளவு உண்மையும்கூட. படித்துதான் பார்ப்போமே என அலட்சியமாக மடிப்பை விரித்தான். அது ஆணாதிக்கம் மில்லை. ஆண்மை. 

“நான்தான் தவறாக பஸ்ட் கேட்டுவிட்டேன். மன்னிக்கவும். பிராயசித்தமாக இன்று விரதம். பட்டினி. மௌனம். 

“உங்களுக்கான உணவு கிச்சனில் மூடி வைத்துள்ளேன். எடுத்துக்  கொள்ளலாம். – மாலூ” என எழுதியிருந்தாள். 

பெரிதாய் அதிரவில்லை. இது போன்றது சாதாரணம். அது சரி. அது என்ன எடுத்துக்கொள்ளலாம். 

என் பட்டினி மீது அவ்வளவு அலட்சியமா? வார்த்தைகளை பயன்படுத்தியதில் விடுபாடா அல்லது உண்மையில் அலட்சியமா? அக்கறையின்மையா? குழம்பிக் கொண்டிருந்தான். 

எதுவானாலும் இம்மாதிரி நேர்வில் அவள் சண்டிக் குதிரை. தானும் நொண்டி குதிரையாக மாற வேண்டியதுதான். கதவை உட்புறம் தாளிட்டுக்கொண்டு படுத்தான். 

குட்டி போட்ட பூனைகளாய் இருவரின் ஆதங்கமும் அங்குமிங்கும் அலைந்தன. குரங்கு குட்டிகளாய் மனங்கள் கிளைவிட்டு கிளை தாவி தொங்கின. 

பூமி சுற்றுவதை நிறுத்தி இருக்குமோ. ஆனால் கடிகாரத்தில் முற்கள் சுற்றுகின்றனவே. 

சோபாவில், நாற்காலியில், வெறுந்தரையில் என்று மாறிமாறி உட்கார்ந்து, படுத்து, புரண்டு, எழுந்து, நின்று, நடந்து ஜன்னல் கம்பிகளை பிடித்து, வெளியே செத்துப்போன உலகை பார்த்துப் பார்த்து யுகமாகிக் கொண்டிருந்தது அவளின் பகல் பொழுது. 

கணவன் என்னானான். அவளுக்கு எப்படித் தெரியும். பூட்டிய அறைக்குள் நடப்பதை ஏன் கற்பனை செய்து பார்க்க வேண்டும். 

விழித்திருக்கலாம். தூங்கலாம். கனவு கானலாம். கனவா நினைவா என்று தெரியாத காட்சிக்குள் நடிக்கலாம். பசி வயிற்றை கிள்ளலாம். மயக்கத்தில் கிடக்கலாம். திட்டித் தீர்க்கலாம். இரக்கம்கூட வரலாம்தான். 

பசி என்பது பொதுவானது என்றாலும், கோபம் வேறுவேறானது. அது குணம் மற்றும் புரிதலுக்கு உட்பட்டது 

அது வீடா காடா? 

அமைதி. காட்டு அமைதி. காடு என்றால் மரங்களும் பறவைகளும் புற்களும் புள்ளினங்களும் இல்லாத காடு. 

காற்றும் கானமும் இல்லாத காடு. ஓசையின்று உறங்கிப்போனது 

அவர்களின் பகலெனும் காடு. 

ஏழு மணி வாக்கில் உணர்வு விழித்துக் கொண்டது. படுக்கை அறையை பூட்டிவிட்டால் எங்கு தூங்குவாள். 

அங்கும் தூங்கலாம். ஹாலில்.. சமையலறையில். படுக்கை அறையில்தான் படுக்க வேண்டுமா? 

ஆனால் நியதி என்ற ஒன்று இருக்கத்தானே செய்கிறது. அவள் இஷ்டம். கதவை திறந்து வைத்து விடுவோம் என முடிவு செய்தான். 

ஹாலின் விளக்குகளை அணைத்தாள். எட்டு மணிவாக்கில் படுக்கையறை கதவை சத்தம் வராது கொஞ்சமாக திறந்து திருட்டு பூனைபோல உள்ளே ஒற்றைக் கண்கொண்டு பார்த்தாள். படுக்கையை ஆக்ரமிப்பதுபோல நடுவில் படுத்து கிடந்ததை கண்டாள். தூங்குகிறாரா? தூங்குவதுபோல் நடிக்கிறாரா? நடுகட்டிலில் கிடப்பது வேண்டுமென்றா? எதார்த்தமானதா? குழம்பினாள். 

வாழ்க்கை என்பதே குழப்பம்தானே. அதுவா இதுவா என குழம்பி; அதுவும் இல்லை இதுவுமில்லை; பின் எதுவுமில்லை என்பதுதானே. நம்புவதற்கு தக்கவாறு நர்த்தனம் ஆடுவது. 

ஒன்பது மணிவாக்கில் ஓர் ஓரத்தில் படுத்துக் கிடந்தான். எதார்த்தம்தான் என மனம் நர்த்தனம் ஆடியது. 

மேனியை மெல்ல நகர்த்தி படுக்கையின் மறுபக்கம் சாய்த்துக் கொண்டாள். படாதவாறு இடைவெளியுடன். 

அசைவற்று கிடந்தான். நடிப்புதான் என்பதை உணர்ந்தாள். நல்லதுதான். மௌன விரதம் களையக் கூடாதில்லையா! 

பிணமாய் கிடந்தார்கள் அசைவற்று பேச்சற்று. மூச்சு மட்டும் விட்டவாறு. அதுவும் அடுத்தவரை தீண்டாதவாறு. 

விடியும்போது இரவு வெட்கம் விட்டிருந்தது. இருவரின் மூச்சுக் காற்றும் மோதிக் கொண்டிருந்தன. ஊடலிலிருந்து கூடலுக்குள் எப்போது நுழைந்தார்கள்? 

பம் பம் பம். . . ஆரம்பம். அச்சாரம் போட்டது யார்? 

யாராக இருந்தால் யாருக்கு என்ன? அஃது அவர்களின் அந்தரங்கம். 

“ச்சீ போடி வெக்கம்கெட்டவளே” இது அம்பு என்ற அம்புத்தின் கதைகேட்ட சுவாரஸ்யம். 

மாலினி தன் வீட்டிற்கு அம்புஜம் வருவதை எப்படியாவது தவிர்க்கும் படியான சூழலை ஏற்படுத்துவதும் பொய் சொல்வதுமாக காலத்தை கடத்தினாளாம். 

கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியில் எப்போதும் கடுகடு என்றுதான் இருப்பாளாம். அவளிடம் இருந்த ஒரே உயர்வான அம்சம் என்னவென்றால் அது வகுப்பெடுப்பதுதான். இளங்கலை, முதுகலை என இரண்டு கணக்கு வகுப்புகளுக்கும் அவளே உதவி பேராசிரியை. கணக்கில் புலி. 

எந்த சிக்கலான கணக்கையும் எளிய முறையில் மாணவர்களுக்கு புரிய வைப்பதில் கெட்டிக்காரி. எனவேதான் அவளது சிடுமூஞ்சி தனத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

உணவு இடைவேளை நேரத்தில் கூட வகுப்பிற்கு சென்று அமர்ந்திருப்பாளாம். பெரும்பாலும் மதிய உணவு எடுப்பதே இல்லை என்பதால் அது கூடுதல் சாத்தியமாக இருந்ததாம். அவ்வேளையில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது, மந்த புத்தி கொண்டவர்களை முன்னுக்கு கொண்டுவர முயற்சி எடுப்பதென செயல்பட்டுள்ளாள். 

மாலினி வசித்து வரும் தெருவைத் தாண்டி நான்காம் தெருவில் புதுமனை குடிபுகு விழாவிற்கு ஒருநாள் கணவரோடு வந்தபோது அம்புஜம் சொல்லிக் கொள்ளாமல் மாலினி வீட்டிற்கு சென்றுள்ளாள். வீட்டில் கண்ட காட்சிகள் அம்புஜத்தை திடுக்கிட வைத்துள்ளது. 

 அம்புஜத்தின் சர்ப்ரைஸ் விசிட் மாலினிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் வந்தாய் என கோபம் கொள்ளவும் முடியவில்லை. பட்டும் படாமல் வரவேற்றாள். பார்க்க முடியாதவாறு திறந்து கிடந்த படுக்கையறையை இழுத்து பூட்டினாள். நீண்ட நேரம் இருக்க இயலாத சூழலில் சில நிமிடங்களில் அம்புஜம் கணவரோடு அங்கிருந்து கிளம்பி விட்டாள். 

மறுநாள் கல்லூரியில் பேராசிரியர்கள் ஓய்வறையில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அம்புஜத்தின் கைகளை பிடித்துக் கொண்டு மாலினி அழுதாள். அவளது அழுகையை நிறுத்த அம்புஜத்தால் இயலவில்லை. அவளே ஒரு கட்டத்தில் ஓய்ந்தாள். 

தான் இதுவரை அம்புஜத்தை ஏமாற்றி வந்தமைக்கு வருந்தி மன்னிப்பு கேட்டாள். ஒருநாள் தன் வீட்டிற்கு வரும்படி கேட்டுக் கொண்டாள். 

அவளது அழைப்பை ஏற்று அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையே மாலினி வீட்டிற்குச் சென்றாள் அம்புஜம். 

மாலினி வீடு அரை கிரவுண்டில் கட்டப்பட்ட அறுநூறு சதுரடி கொண்ட சிறிய வீடு. உள்ளே நுழைந்ததும் நீள வாக்கில் பத்துக்கு முப்பது கொண்ட ஒரு பக்கம் வரவேற்பறை. மறுபக்கம் குளியலறையுடன் கூடிய ஒரு படுக்கையறை. பின்னால் சமையலறை. 

ஹாலில் நாலடி உயரத்திற்கு நீள வாக்கிலான ஒரு ஷோகேஸ். அதன் மேலே மூன்றடிக்கு இரண்டடி அளவில் பெரிய ஒரு போட்டோ. அதனுள் ஞானபண்டிதன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். படுக்கையறையில் இரண்டடிக்கு மூன்றடி அளவில் ஞானபண்டிதனும் மாலினியும் சேர்ந்தார்போல உள்ள புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்ததும் “என்னடி இதெல்லாம். இவன் நம்ம ஸ்கூல்ல படிச்ச ஞானபண்டின்தானே?” என்றாள் அம்புஜம். 

“ஆமான்டி. அவனேதான்” 

‘அவனையா நீ கல்யாணம் பண்ணிருக்கே?” அது குறுகுறுப்பும் பரபரப்பும் நிறைந்த ஐயப்பாட்டுடனான கேள்வியாக இருந்தது. 

“இல்லடி. சொன்னா நம்ப மாட்டே. செருப்பால அடிக்கத்தோணும். அடிச்சா வாங்கிக்கிடுறது புண்ணியம்டி எனக்கு” 

“என்னச்சி . . . சொல்லுடி” 

“பெஸ்ட் ஸ்கூல விட்டு வேறு ஸ்கூல்ல சேந்ததுமே அவன் காணாமப் பொய்ட்டான். இதுவரைக்கும் அவன் எங்க இருக்கான்னு யாருக்குமே தெரியாது. ஊரைவிட்டு ஓடிப் பொய்ட்டான்” 

“அதுக்கு…?” 

“யார் கிட்டையும் இதுவரை சொல்லாத உங்கிட்ட இப்ப சொல்லுறேன். அவன் ஓடுனத்துக்கு நான்தான் காரணம்” 

“ஏண்டி என்னாச்சி” 

“ஒரு நாள் அவனை கெடுத்துட்டேன். அவன் மனசு செத்துப்போச்சி. அன்னக்கி முதலாதான் அவனோட நடவடிக்கை மாறுச்சி” 

“அதான் படிப்புல கோட்டை விட்டு வீணாப் போனானா. அடி பாவி. அது உனக்கு கேவலமா தெரியலயா? ஒழுக்கம் கெட்டு பொய்ட்டுயே. கொலை பாதகச் செயல்டி அது.” முதுகில் அடித்தால் தோளைப் பிடித்து குலுக்கு குலுக்கென குலுக்கி எடுத்தாள். 

மாலினி வாய்விட்டு அழுதாள். தான் செய்த தவறுக்கு வருந்தினாள். தானும் அப்போதே செத்துவிட்டதாக கூறினாள். 

ஒரு போலி வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்தாள். தான் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்று தானே ஒத்துக்கொண்டாள். 

“கல்லூரியை விட்டு வீட்டுக்கு வந்தால் நான் ஒரு பைத்தியம்” என்றாள். 

தனது குடும்பத்தில் நடந்ததாக தன்னிடம் கல்லூரியில் கதை கதையாகச் சொன்னதெல்லாம் பொய்யென தெரிவித்தாள். 

இது ஒரு வகையான சைக்கோத் தனம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சைக்கோத்தனம் இருக்கும். அதை சுட்டிக் காட்டினால் யாரும் நம்ப மாட்டார்கள். அது ஒரு மனநிலை. அது பெரும்பாலும் ஆபத்தற்றதாக இருக்கும். 

சமூக கட்டுப்பாடு ஒழுக்கம் பண்பாட்டு கலாச்சாரம் தொன்மத்திற்கு கட்டுப்பட்டுப்போய் தனக்குத்தான் அந்த சைக்கோத்தனம் ஓர் ஒழுங்கிற்கு தன்னை வரையறுத்துக் கொள்ளும். மீறி விபரீதமாக்காது. அடங்கிப் போகும். எல்லாம் பயம். பயம். பயத்தின் அடக்கம். 

மாலினியின் சைக்கோத்தனம் அவளது மனசாட்சியிலிருந்து உதித்தது. அது பல ஆண்டுளாக உலராத உதிராத திடம் கொண்டதாக இருக்கிறது. அது அவளுக்கு சாசுவதமானதாக மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பல ஆண்டுகள் கடந்தும் அது ஸ்திரமானதாக அல்லவா இருக்கிறது. ஆனால், அது யாருக்கும் தீங்கு செய்யாதது. 

கெட்டபின் ஞானம் பெற்றது என்று சொல்லலாமா? இல்லை தண்டனையே அவளுக்கு ஞானம். மனப்பிறழ்வே ஒழுங்கின் வரையறை. 

அவளை பொறுத்தவரை ஞானபண்டிதனோடு வாழ்கிறாள். அவளது இல்லறத்திலும் துன்பமும் வருகிறது, இன்பமும் வருகிறது. 

பெரிய தவறிலிருந்து தானே திருத்திக்கொள்ள அது வழிவகை செய்துள்ளது. 

அவனோடு வாழ்வது போன்ற ஒரு பொய்யான மெய்நிகர் நிலைபாடு கொண்டவள் என்பதை அம்புஜம் தெரிந்துகொண்டாள். அந்த புகைப்படத்தில் அவன் இருக்கிறான் என்ற உணர்வில், உந்தலில் வந்த விரிச்சுவல் லைப் அது. 

அவனுடன் கொண்ட வன்புணர்வின் தேகபந்தம்தான் மாலினிக்கு கடைசியானதாம். குற்ற உணர்வில் காமமும் அப்போதே செத்துப் போனதாம். 

பள்ளியில் பிரிவு உச்சார விழாவில் எடுத்திருந்த புகைப்படத்தில் ஞானத்தின் முகத்தை மட்டும் தனியே பிரித்து எடுத்த புகைப்படமே ஹாலில் மாட்டி இருந்தது. அவள் போட்டோவையும் மார்பிங் செய்து இருவரையும் இணைத்தாற் போல் உருவாக்கியதே படுக்கையறையில் மாட்டியுள்ள போட்டோ என்பதை அம்புஜத்திடம் தெரிவித்தாள். 

திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் பிரிந்துபோன அவளது கணவர் எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என்றுகூட தெரியாதாம். அவரும் சேர்ந்து வாழ முயற்சி எடுக்கவோ விவகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ இல்லையாம். பணியிட மாற்றலில் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுவிட்டாராம். ஞானபண்டிதனோடு இணைந்த வாழ்வில் அவரின் நினைவுகளும் சுத்தமாக கரைந்து போயுள்ளது. 

மாலினியின் வாழ்க்கை வியப்பானது இல்லையா? 

மனப்பிறழ்வில் அவள் வாழும் வாழ்க்கை மெய்நிகர் நிறைந்தது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஞானத்தின் மீதுள்ள கோபத்தில் கையில் கிடைத்த எதையோ விட்டெறிந்ததில் ஷோகேஸின் ஒரு கண்ணாடி உடைந்திருக்கிறது. இன்னும் அதை மாற்றவில்லை. விட்டெறிந்ததில் நசுங்கிப்போன சில பாத்திரங்கள் சமையல் கூடத்தில் இருக்கின்றன. படுக்கை அறையின் ஒருபக்கச் சுவறில் புரிந்துகொள்ள இயலாத சில கோட்டோவியங்கள். இவளே பென்ஸிலால் கிழித்து வைத்தவை. 

அவன் அறைந்ததாக பல நாட்கள் வீங்கிய கன்னத்தை அம்புஜத்திடம் காண்பித்திருக்கிறாள். அவன்தான் அவள். யார் அறைந்தால் என்ன? அறைந்து கொண்டால் என்ன? கன்னம் வீங்கும்தானே! 

இப்படியாக வாழ்ந்து வாரும் அவளுடைய வாழ்க்கையில் இதுவரை விபரீதம் ஏதுமில்லை. 

ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். 

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

எல்லாம் அவனை கடந்து பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. மனிதர்களை, விலங்கினங்களை, மரங்களை, பாலங்களை, குளம் குட்டைகளை, ஆறு ஏரிகளை, ஆரஞ்சு தோட்டங்களை, எதிர் திசையில் பாயும் ரயில்களை, ஒரே திசையில் நகரும் பயணிகள் ரயிலை, நீர் நிலைகளின் கரைகளில் கட்டப் பட்டுள்ள எரி மேடைகளை, அதில் எரிந்து கொண்டிருக்கும் பிணங்களை, இரவு எரிந்து அடங்கிப்போன சாம்பல் மேடுகளை; ஏன் எல்லாவற்றையும் காலம் உட்பட. 

அவனுக்குத் தேவை, இன்பமும் துன்பமும் விருப்பமும் ஆசையும் அற்ற ஒன்று. அதை வாழ்க்கை என்றாலும் சரி வேறு பெயர் கொண்டு அழைத்தாலும் சரி. ஆனால் அது எப்படி பட்டதாக இருக்கும்? கடினமானதா? 

வெறுமையை அடைதல்கூட சவால் நிறைந்ததாக இருக்குமா? மரணம் வரும்போது இரு கை கொண்டு ஏந்தி வரவேற்க ஏதாவது தடையாக இருக்குமா என்று யோசித்தான். இதிலெல்லாம் ஞானத்திற்கு அவ்வளவு புரிதல் இல்லைதான். 

ஒருவாராக ரயில் ஓடி ஓய்ந்து போனது. தன்னை கேள்விகளால் துளைத்தெடுத்த பெரியவர் தனது மனைவியுடன் முன்பக்க வாயில் வழியாக கீழிறங்க சென்றபோது அவருக்குத் தெரியாமல் இறங்க வேண்டும் என்பதற்காக வேகமாக சென்று பின்பக்கம் வழியாக கீழே இறங்கி மக்களோடு மக்களாக. மறைந்து போனான். கடைசி பொய்சாட்சி அது. 

திக்கேதும் தெரியவில்லை. நடக்கத் தொடங்கினான். கங்கைக் கரையோரம் வந்தடைந்தான். படித்துறை வழியாக கீழே இறங்கி கங்கை நதிக்குள் முதன் முதலாக காலை வைத்தான். எல்லோரும் கைகளை இணைத்து குவித்து குழியாக்கி நீரை கைகளால் அள்ளி முகத்திற்கு உயர்த்தி பார்வை பட்டதும் முன்னே கைகளை நீட்டி முன்பக்கம் சாய்த்து மீள கங்கையில் கொட்டினார்கள். இவன் வலக்கையால் நீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டான். பின் அவர்களைப் போலவே இரு கைககளால் நீரை அள்ளி உற்றுப் பார்த்தான் . அதில் எதுவும் தெரியவில்லை. எதற்காக இப்படி செய்கிறார்கள் என யாரையாவது கேட்க வேண்டும் என பட்டது. ஏன் கேட்க வேண்டும்? ஏதாவது சாஸ்திர சம்பர்தாயம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆராய்ச்சி தேவையற்றது. புரியும்போது புரியட்டும். தனக்கு வேறு பொருள் படலாம். ‘சிவ சிவ’ சொல்லிக் கொண்டான். 

ஓடும் நீருக்கும் கரைக்குமான மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினான். வழியில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தை கண்டவன் படியேறிப்போய் வாங்கி உண்டான். அது அவனுக்கு முற்றிலும் புதிது. சப்பாத்தியை இதுவரை அவன் சாப்பிட்டதே இல்லை. அவன் வீட்டில் காலை உணவு பெரும்பாலும் இட்லி தேசைதான். சப்பாத்தி அவன் பகுதியில் அறிமுகமாகாத காலம் அது. பசியாறிப் போனான். தெம்போடு நடையை கட்டினான். கொஞ்ச தூரம் சென்றதும் முற்றிலும் வித்தியாசமான அந்த பகுதியை அவன் சந்தித்தான். அது மணிகர்னிகா காட். 

காட் என்றால் காடு. சுடுகாடு. ஏராளமான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. லேசாக பயம் ஒட்டிக்கொண்டதை உணர்ந்தான். எல்லாம் பார்க்கத்தான் வேண்டும். பார்த்து அதை கடக்கலாம்தானே. மனதில் ஒரு தெம்பை ஏற்படுத்திக் கொண்டான் . தான் உண்மையில் தேறிவிட்டதாகக் கருதினான். 


இதுவும் புதிது. அவன் வசித்த கிராமத்தில் எப்போதாவது யாராவது மரணம் அடைவார்கள். தப்பித் தவறிகூட அந்த பக்கம் அவன் போக மாட்டான். மரணம் என்றால் பயம். அது பற்றி அறியாதவர்களுக்கும் சிறுவர்களுக்கும் அதுதானே மரண பயம் என்பது. தெரிந்தவர்களுக்கு தன் மரணம் பயம். 

அவன் முதன் முதலில் அவனது பாட்டியைத்தான் பிணமாகப் பார்த்தான். அப்போது அவனுக்கு வயது பனிரெண்டு. விடியற்காலம் நான்கு மணிக்கு இறந்து விட்டார். அவனது தாயார் தூக்கத்திலிருந்து அவனை எழுப்பி விபரத்தை சொன்னதும் திண்ணையில் நாற்காலியில் சார்த்தி வைத்திருந்த பாட்டியை பார்க்கப் பயந்து வடக்கு புறமாக முகத்தை திருப்பிக் கொண்டு முற்றத்திற்கு சென்றவன் விடியும் வரை அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். விடிந்து கொஞ்சம் பயம் தெளிய பாட்டியின் உடலை பார்த்தான். மாலையில் பாட்டியை தகனம் செய்ய தூக்கிச் சென்று சுடுகாட்டிற்கு போனபோதுதான் முதன் முதலாக அவனும் சுடுகாட்டுக்குப் போனான். பாட்டியின் தலையை துணியால் கட்டி வைத்திருந்து அவனை அச்சம் கொள்ள வைத்தது. 

பிறகு கொஞ்ச காலம் பாட்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த திண்ணையில் இரவில் யாரும் இல்லாத நேரம் தனியே போகப் பயப்படுவான். போகத்தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒரு நடுக்கத்தோடு பயம் பற்றிக்கொள்ள திண்ணைக்கு போவான். பயமே நாளடைவில் தைரியத்தை கொடுத்து பின்னர் சகஜ நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் தான்மட்டும் தனியே வீட்டில் இருக்கும் போது திண்ணை பக்கம் போனால் உள்ளுக்குள் ஏதோ ஓர் அச்சுறுதல் இருக்கத்தான் செய்தது. 

ஆனால் தற்போது மரணம் வந்தால்கூட சந்திக்க தயாரான நிலைக்குத் தள்ளப்பட்டபின் பயம் மறைந்து குளிர்விடத் தொடங்கியது. 

பத்துப் பதினைந்து பிணங்கள் இருக்கலாம் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்தன. குறுக்கும் நெடுக்கும் ஆடுகளும் மாடுகளும் நடமாடிக் கொண்டிருந்தன. பிணத்திற்குப் போட்டு காட்டுக்கு வந்ததும் எடுத்து கீழே எறியப்பட்ட மாலைகளை அவை உண்ட வண்ணம் இருந்தன. மாலைகள் அவற்றிற்கு போதிய அளவிலான உணவாக கிடைக்காததால் தூக்கி எறிந்து கொண்டிருக்கும் போதே நான் முந்தி நீ முந்தி என ஓடி தனக்கான உணவை தக்கவைத்துக் கொண்டிருந்தன. 

எரியும் பிணங்களுக்கான சொந்தக்காரர்கள் பிணம் எரியும்வரை காத்திருந்தனர். அடங்கிப்போய் சாம்பலானதும் எரித்த ஊழியரே சாம்பலை அள்ளி கங்கை நீரில் கரைத்துவிடுகிறார். நீர்த்தாருக்கு அதற்கு மேலாக எந்த காரியமும் அங்கே செய்வதில்லை. கங்கை கரையில் எரிபட்டால் புண்ணியம். கரைத்தால் மோட்சம். வேறு காரியம் எதற்கு. 

ஆருர் பிறக்க முக்தி 

அருணாசலத்தை நினைக்க முக்தி 

காசியில் இறக்க முக்தி. 

பக்கத்து வீட்டு தாத்தா அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறான். காசியில் இறப்பேனா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். சிவன் சித்தம். 

இவனும் குறுக்கே புகுந்து நடக்க விரும்பினான். அவனுக்கு இருந்த பயமெல்லாம் எங்கே போனது! 

இவன் புகுந்து கடந்து போவதை யாரும் கேள்வி கேட்கவோ வித்தியாசமாக உற்றுப் பார்க்கவோ இல்லை. ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரியும் நாய்களைப்போல அவனது நடமாட்டமும் அங்கே இயல்பானது. 

காட்டை கடந்து போனான். 

 வாழ்க்கை கேலியாக பட்டது அவனுக்கு. ஆட்டமெல்லாம் நதிக்கரையில் அடங்கிப்போவது ஆரம்ப நிலையிலையே ஆன்மாவுக்குத் தெரியாதா? அது ஆன்மா இல்லையா? வெறும் உயிரா? அது பாவ மூட்டையை சுமந்து கொண்டிருக்கிறதா? கடைசியாய் எல்லாம் சாம்பலாகிப் போகிறது. சுத்தமாகி விடுகிறான். இதுதான் உண்மையான வீடு. பின்னே அவன் முன்னே வசித்தது? காடு. ஆசை பூ மலர பாவ காய் காக்கும் காடு. 

கண்ணகி மதுரையை எரித்தது போல காட்டையே எரித்து விட்டால் என்ன? புது யுகம் தொடங்கட்டுமே. அதில் பாவங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கட்டுமே. அருள். எல்லாம் இறைவன் அருள். ருத்ரனை பிரார்த்திக் கொண்டான். மீண்டும் சிவ சிவ சொல்லி; 

“ஓம் தத்புருஷாய வித்மஹே 

மஹாதேவாய தீமஹி 

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்” எனச் சொல்லியவாறு நடந்து கொண்டிருந்தான். 

பசியைப் பற்றிய சிந்தை வரவில்லை. வயிறும் விண்ணப்பிக்கவில்லை. 

வீடு அவனை விடுவதாய் இல்லை. வீடா? காடா? காடுதான் வீடு. 

அடுத்து ஹரிச்சந்திரா காட் அவனை வரவேற்றது. இரு இடங்களுக்கும் இடையே பரதேசிகளாய் வழிப்போக்கர்களாய் துறவிகளாய் ஆங்காங்கே உடலை கீழே போட்டு வைத்திருந்த வெட்ட வெளியில் ஞானமும் படுத்தான். அசதியில் உறங்கிப் போனான். விடியும் நேரம் எழுந்து ஆற்று நீரில் இறங்கி முகம் கழுவி நீரை அள்ளி முகத்தில் முன்பு காட்டி பார்வைப்பட்ட நீரை கங்கையில் மீள ஐக்கியப் படுத்தினான். காலைப் பயண நடுவில் பல இடங்களில் பலவாறான அன்ன தானங்களை காணமுடிந்தது. பொங்கல் பரிமாறும் ஓர் இடம் அகப்பட்டது. அங்கு தானம் பெற்ற அன்னம் அவனது காலை பசியை அடைத்தது. தெம்போடு காட்டுக்குள் நுழைந்தான். அப்போது மதிய நேரம். மணிகர்னிகாவைவிட அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் ஹரிச்சந்திராவில் சாம்பலாகிக் கொண்டிருந்தார்கள். 

அங்கு போலவே விலங்கின நடமாட்டம் இருந்தன. நதியோர ஓடும் நீருக்கு அருகே தென்கிழக்கில் பிணத்தை எரித்துக்கொண்டிருந்த ஒருவர் அருகில் இருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்தார். சாம்பலை பூசி இருந்தார். காவி வேஷ்டி கட்டி அதன் மேல் வெள்ளை தூண்டு ஒன்றை அரையில் சுற்றி செருகி இருந்தார். கொடூரமும் சாந்தமும் கலந்த பாவனைக்குள் முகம் புதைந்திருந்தது. பார்த்த உடன் அவருடன் பேசவேண்டும். ஏதேனும் பெறவேண்டும் என ஞானத்தின் மனசுக்குப் பட்டது. 

கைகுப்பி வணங்கினான். கையில் வைத்திருந்த கம்பை இவன் தலையில் வைத்து ஆசிர்விதித்தார். பிணம் சுடும் அக்கம்பு கருத்துப் போயிருந்தது. அருகில் அமரச் சொல்லி கையால் கட்டையை தட்டிக் காட்டி செய்கை செய்தார். ஷிவாய நமஹ உச்சரித்தார். 

அப்பாடா. . ஒரு பெருமுச்சு விட்டான் ஞானம். 

“மே ஐ நே யுவர் நேம்?” 

“அருச்சுன் மராண்டி?” 

“யு மீன் மஹாபாரத் அர்ஜுன்.” 

“எஸ். சேம் நேம். பட் ஐ ஹரிச்சந்திரா” 

அடுத்த வினாடியே “யூ மதராஸி?” என்ற கேள்வி ஞானத்துக்கு வியப்பூட்டியது. 

“யெஸ்.” 

“ஹரிச்சந்திரன். புராணத்தில் வார ஹரிச்சந்திரன் நான்.” 

“யு நோ தமில்” 

“தெரியும்.” 

“எப்படி?” 

 

“இந்தியாவுல பேசுற பாதி மொழி தெரியும். தமிழும் நல்லாத் தெரியும்.” 

“எல்லா மொழியும் தெரியுமா? என்ன படிச்சிருக்கிங்க?” 

“அதிகம் ஒண்ணும் படிக்கல. தேர்ட் ஃபாம். உங்களுக்கு எட்டாம் வகுப்புன்னு நெனக்கிறேன். அது எங்க குடும்பத்துக்கு அதிகம். ஆனா எல்லா லாங்குவேஜும் கத்துகிட்டேன். எல்லாரும் இங்க வாராங்கல்ல. அதான். பேச மட்டும் தெரியும்.” 

“உங்க தாய் மொழி என்ன?” 

“சந்தாளி.” 

“அப்படியொரு மொழியா? கேள்வி பட்டதில்ல” 

“பரவாயில்ல. மதராஸ்ல எந்த எடம். நீ மட்டும் வந்தியா? ஏன் வந்தே.” 

“நீங்க அரிச்சந்திரனா?” 

“ஆம். ஏன் கேக்குறே?” 

“அரிச்சந்திரன்னா உண்மைய பேசணுமே. பேசுவிங்க. அதான்.” 

“நான் உண்மையத்தானே பேசுறேன்.” 

“என்னச் சொன்னேன்.” குழப்பத்தில் சம்பந்தமற்ற வார்த்தை பிரயோகம் இது. 

“நீயும் ஹரிச்சந்திரன்தான்.” 

“எப்படி?” 

“இங்க வந்துட்டியே.” 

“வர்ற எல்லோரும் அரிச்சந்திரனா?” 

“ஹரிச்சந்திரனா மாறத்தானே இங்க வாராங்க.” 

“மாறதவங்களும் இருக்கலாமில்ல.” 

“இருக்கலாம். ஆனா உன்ன பாத்தா அப்படி தோணுச்சி. புராணத்தில் மட்டும் ஹரிச்சந்திரன் இருக்கான்னு நெனக்காதே. அவன் உண்மையா பெணம் சுட்டது இங்கதான். அதன்பிறகு இங்க பொணம் சுடுற எல்லோரும் ஹரிச்சந்திரன்தான்.” 

“எல்லாருமா?” 

“மறுபடியும் சொல்றேன் சில போலி ஹரிச்சந்திராக்கள் இருக்கலாம். நான் நாப்பது வருஷமா ஹரிச்சந்திரன். வாய்மையே இங்கே வெல்லும். சத்தியமேவ ஜெயதே” 

வியப்பாய் இருந்தது. ‘பிணம் எரிப்பவரிடம் இவ்வளவு ஞானமா! பெயரில் மட்டுமே நான் ஞானமா?’ கொஞ்சம் குறுங்கியது போல இருந்தது. ‘வயது இருக்கிறது. வாழ்வு இருந்தால் கற்றுக் கொள்ளலாம்.’ 

ஞானத்திற்கு ஏழாம் வகுப்பில் அரிச்சந்திரன் குறித்து படித்தது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் மயானகாண்டம். காசி மன்னர் தன் மகனை கொன்றதாக அரிச்சந்திரனின் மனைவியை குற்றவாளியாக்கி மரண தண்டனை பிறப்பித்ததும் தண்டனையை நிறைவேற்ற தன் மனைவியை மயானத்தில் மாறுவேடத்தில் இருக்கும் அரிச்சந்திரன் வெட்டுவானே. தன் மகனையே எரிப்பானே. அதே மயானம்தான் இது. வியப்புற்றான். அப்படி என்றால் அது உண்மையா? கதையில்லையா? 

வேலைப் பழித்த விழியாளை 

சினத்தரசன் வெட்டென்றுரைத்த பொழுது 

சாலச் சவங்கள் சுடு கோளிற் 

கடிந்து நனி தள்ளிக் 

கொணர்ந்த புலையன்…

மனப்பாடப் பகுதி பாடலை ஒருமுறை மனதிற்குள் சொல்லிக் கொண்டான். 

அந்த புலயன் ஒரு மன்னன். 

“என்ன யோசனை ?” என்று ஞானத்தின் வியப்பையும் அதை ஒளிந்த மௌனத்தையும் கெடுத்தான் ஹரிச்சந்திரன். ஊட்ட வேண்டியதை புகட்ட வேண்டாமா. எனவே அவ்வாறான வார்த்தையை இங்கே பயன்படுத்தலாம். 

“ஒண்ணுமில்ல. .” வார்த்தையை இழுத்தான். 

“வியப்பா இருக்கா?” 

“ஆமாம்” 

“எது?” 

“எல்லாமே” 

“அதான் காசி. இங்க நாய் கடிக்காது” 

“எங்கேயும் நாய் அனாவசியமா கடிக்காதே!” 

“ஆனா. இங்க அதை மிதிச்சா கூட கடிக்காது. எழுந்து ஓடிடும். நீ வேணுமின்னா அந்தா படுத்து கிடக்கே அந்த நாயப் போயி மிதிச்சு பாரு. கடிக்காது. குரைக்காது. எழுந்து ஓடிடும்” 

“நான் ஏன் வேணுமின்னே மிதிக்கணும்? பாவம் இல்லையா. ஆனா அரிச்சந்திரன் சொன்னா உண்மையாதானே இருக்கும்.” 

“தெரிஞ்சிக்கோ. இங்க பூக்குற மல்லி பூமணக்குறது இல்ல. பல்லிகள் குறி சொல்லுறதில்ல, கருடன் இங்கே வந்து பறக்குறதில்லை. சுத்தி திரியும் மாடுகள் யாரையும் முட்டுறது இல்ல. காகங்கள் கரையுறதில்ல.” 

“எப்படி? உண்மையாவா?” 

“நீதானே ஹரிச்சந்திரன்னு சொன்னே. உண்மையாங்குறே.” 

“சாரி. . . சாரி. . . மன்னிச்சிடுங்கே.” 

“நீ ஒரு கொழந்த. மன்னிக்க முடியாதுப்பா. தேவையில்லப்பா.” 

“சாரி” 

“இப்ப இங்க காத்து எங்கே இருந்து அடிக்குது?” 

இந்த கேள்விக்கு ஞானத்தால் பதில் சொல்ல முடிவில்லை. எனெனில் திசைகள் தெரியவில்லை. எதிர் திசையை கையால் காண்பித்தான். 

“வடமேற்கே இருந்து அடிக்குது. பாடி எரிந்து வரும் புகை நம்ம மேலதானே அடிக்குது. சுடு நாத்தம் வருதா?” 

“இல்லையே!” விழித்துக் கொண்டவனைப்போல வியப்புற்றான். 

பின் சந்தேத்தை எழுப்பினான். “எப்படி?” 

“அதான் காசி. இங்க எரியிற பிணத்திலிருந்து வாடை வர்றதில்லை. இங்க பொணத்த தூக்கிகிட்டு வந்தாலும், கூட வந்தாலும், பொணத்த எரிச்சாலும் தீட்டு இல்ல. குளிக்க வேண்டியதில்ல.” 

“எதுக்கு வந்தேன்னு கேட்டனே” 

“சாவ” சொல்லத்தான் வேண்டுமா என யோசிக்காது சொல்லிவிட்டான். 

அதுதான் சித்தமாக இருக்குமோ? இருக்கலாம். இருக்கலாம் இல்லை. இருக்கிறது 

“அது உன்னோட உயிர் இல்லையே. அதுவா சாகும். சாகணும். நீ சாகடிக்க வேணாம். காசிய முழுசா ஒரு வாரத்துக்கு சுத்தி பாரு. நீ சாகணுங்குறத்த விட்டுடுவே. கங்கையில் முழுகி எழுந்தா மட்டும் புண்ணியம்ன்னு நெனக்காதே. இங்கே உயிரோட இருக்குறதும் புண்ணியம்தான். அது கங்கைய புனிதப்படுத்தும். கஸ்டப்படுற மக்களுக்கு உதவி செய். கெடச்ச எடத்துல கெடச்சத சாப்பிடு. தூக்கம் வர்ற எடத்துல படுத்து தூங்கு” 

“நானா சாகப் போதில்லையே. நதிக்குள்ள குதிச்சா அது சாகடிச்சிடாதா? முக்தி கிடைக்காதா?” 

“கிடைக்கும்தான். ஆனா ஏன் சாகணும். ஆமா என்ன படிச்சிருக்கேன்னு கேட்டேனே” 

“ப்ளஸ் டூ” 

“ஒண்ணு செய்ரியா?” 

“ம். … என்ன செய்ய?” 

“நான் ஒரு எடத்தச் சொல்றேன். அங்க போய் தொண்டு செய். கடந்த காலத்த மறந்துடு. இந்த ஆற்றைப் போல ஜீவத்துவமா வாழ்க்கை ஓடிக்கிட்டே இருக்கும்” 

மேலும் தொடர்ந்தான் “சஞ்சலத்த உன்னால நிறுத்த முடியாதுதான். சாயங்காலம் பொழுது சாயும்போது சதா அஸ்தமேதாவுக்குப் போ கங்கா ஆர்த்திய பாரு. சஞ்சலம் தன்னால அடங்கி நின்னுடும். அந்த ஆனந்த ஜோதியில உன்ன ஐக்கியப் படுத்திக்க. உன் துன்பத்துக்கு காரணமானவங்கள அது மறக்கடிக்கும் ஷிவ மயம் உன்னோடு கலந்திடும்” 

“ம்” 

“சிவ சித்தம். ஞான மயம். ஞானத்தின் உரு நீ. பாத்தா தெரியுது . உன் பார்வை சொல்லுது” 

“பேரே ஞானம்தான்” 

“அப்படியா?” 

“ஞானபண்டிதன். கேக்கவே இல்லையே!” 

கேட்டுக்கொண்டான். 

சந்திரமதியை வெட்டியபோது வாள் பூமாலையானதே. அவன்தான் இவனோ? சவம் சுடும் கோல்தான் வாளா? 

பதிலேதும் தேடாமல் பிடித்து விட்டான். 

ஆம். 

ஞான வெட்டியான் 

மறுநாள் காலை அருச்சுன் மராண்டி தெரிவித்திருந்த நந்தா மடத்திற்கு போனான் ஞானம். இவனை காவலாளி விசாரித்த பின் பக்கத்தில் கிடந்த பெஞ்சில் அமர்ந்திருக்கும்படி அறிவுறுத்தி உதவி காரியதரிசியை கேட்டு வருவதாக காரியாலயத்திற்கு போனார். 

திரும்பி வந்தவர் உங்களை காத்திருக்கும்படி சொன்னார். தம்பி ! அவர் அவ்வளவு ஈசியா யாரையும் கூப்பிட மாட்டார். கால தாமதம் ஆகும் காத்திருக்கிங்களா?” என்றார். 

“ம். காத்திருக்கேன்” என கூறிவிட்டு காத்திருந்தான். 

நேரம் நகர்ந்து கொட்டிருந்தது. நகரட்டுமே. நிறுத்தி வைக்க முடியுமா என்ன? அப்படியே நிறுத்தி வைத்து என்ன செய்யப் போகிறான். 

முதல்நாள் மாலை தரிசித்த கங்கா ஆரத்தி ஞானத்தின் மனதில் பிழம்பாய் நிலை குத்தியிருந்தது. நன்மை தீமை, பாவம் புண்ணியம், உண்மை பொய் எல்லாவற்றையும் ஒன்றெனக் கொள்கிற ஜோதி அது. எல்லாவற்றையும் சமமாய் சாம்பலாக்கி தன்னோடு நீர்கடிக்கச் செய்யும் அக்னி அது. தீப ஒளி நீரில் பட்டு நனையும்போது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. எத்தனை சக்தி அதற்கு. ஆனால் இறுமாப்பு அற்றது. 

இதற்கு முன் இங்கே பணிபுரிந்தவர் பற்றி மராண்டி சொன்னது ஞாபத்திற்கு வந்தது. 

பன்னிரெண்டாம் திருமுறையில் மெய்ப்போருள் நாயனார் புராணத்தில் வருமே அந்த பாடலை சொல்லிப் பார்த்தான் ஞானம். 

மெய்யெலாம் நீறு பூசி 
வேணிகள் முடித்துக் கட்டிக் 
கையினிற் படைக ரந்த 
புத்தகக் கவளி யேந்தி 
மைபொதி விளக்கே யென்ன 
மனத்தினுட் கறுப்பு வைத்துப் 
பொய்தவ வேடங் கொண்டு 
புகுந்தனன் முத்த நாதன் 

முத்த நாதனைப்போல வேஷம் போட்டிருக்கிறான் அவன். எம்பெருமான் பூமியில் பொய் மெய்ப்படுமா என்ன? அதிகாலை குளிருக்கு பயந்து குளித்தது போல உடலெல்லாம் விபூதி பட்டை அடித்துக்கொண்டு சிவ பூஜைக்குறிய ஏற்பாட்டை செய்திருக்கிறான். மடத்திற்கு இந்த உண்மை தெரியவர விரட்டியடிக்கப் பட்டுள்ளான். 

எங்கே சுற்றித் திரிகின்றானோ. சுற்றித் திரிவதில் தப்பு இல்லை. அது தண்டனை. அரிச்சந்திரன் வாழ்ந்த பூமியில் பொய் பேசலாமா? கங்கையில் குளித்தாலும் மூழ்கி மூச்சைவிட்டு ஜீவனை பிரித்தாலும் அவனுக்கு சாப விமோசனம் கிடைக்காது. 

தான் செய்த தவறை நியாயப்படுத்த ஒருவேளை கங்கையை பழிக்கலாம். இதன் மீதான நம்பிக்கையெல்லாம் பொய் என்ற ஒரு கருத்தியலை உருவாக்கலாம். அதை சரியென நியாயப்படுத்த ஒரு கூட்டத்தை ஊருவாக்கலாம். 

எப்படியேனும் தீ மூட்டுவதும் அதில் குளிர் காய்வதும்கூட சாசுவதமாக போய்விடுகிறது. ஆனால் கீதையில் சொன்னதுபோல. சூதால் கவ்வப்பட்ட தர்மம் ஒருநாள் வெல்லும். 

ஆனால் ஞானம்கூட இன்னும் கங்கையில் மூழ்கி எழவில்லை. அவனிடம் பாவமில்லை. 

மாலை நாலு மணிக்கு உதவி காரியதரிசி அழைப்பதாகச் சொன்னார். ஆயிரம் கேள்விகளுக்கான பதில்களோடு அவர் இருந்த அறைக்குள் புகுந்தான். ஒரே பக்தி வாசம் வீசியது. ஞானப் பழம்போல இருந்தார். கை குப்பினான். மேலும் விழுந்து வணங்கவேண்டும் போலப் பட்டது. அதனை எதிர்பார்ப்பு என நினைத்துக் கொள்ளக் கூடாது என இருந்துவிட்டான். 

பக்தியை உருவாக்கும் செயற்கைத் தனம் எதுவும் அறையில் இல்லை. அவரே ஞானத்தின் உரு. வேறெதற்கு. விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் சம்மனமிட்டிருந்தார். எதிரே ஞானத்தை அமர வைத்து மடத்தில் தங்கி பணி செய்யும்படி தெரிவித்து மற்ற விபரங்களை வாயிற்காவலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுப்படி ஓரிரு வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தார். 

விசாரிப்பு இல்லை. கேள்வி இல்லை. யார்? பெயர் என்ன? எங்கிருந்து வந்தேன்? எதுவுமே கேட்கவில்லை. தயார் நிலையில் மனதில் சேமித்து வைத்திருந்த பதில்கள் கேள்வியற்றுப் போயின. மௌனத்திற்கு முன்வ சத்தமிகு வார்த்தைகள் நிசப்பமாவது போல. 

மராண்டி சொல்லியிருப்பாரோ! அவரிடம்கூட தன் இருப்பிடம் குறித்து சொல்லவில்லையே. கேள்விகளால் துளைத்தெடுக்க இது என்ன இன்டர்வியூவா? இங்கே எல்லாம் சிவன் சித்தம். 

சற்று நேரத்தில் காரியதரிசி அறைக்குபோய் திரும்பிய வாயிற் காப்பாளர் ஞானத்தை அவன் தங்கப்போகும் அறைக்கு அழைத்துப்போனார். 

அது இருநூற்று ஐம்பது சதுர அடிகொண்ட அறை. அறையில் ஏதுமில்லை. சமையல் கூடத்தில் சொல்லி படுக்க ஒரு பாய் வாங்கித் தந்தார் வாயிற்காவலர். 

தலைமை காரியதரிசியை யாரும் பார்க்கவே முடியாதாம் எப்போதேனும் வருவாராம். நிர்வாகம் யாருடைய மேலான்மையுமின்றி அதுபாட்டுக்கு இயல்பாய் இயங்குமாம் பதவிகள் எல்லாம் பேரளவுக்குதானாம். 

உதவி காரியதரிசி பற்றி சொன்னார். அவரை இவர்கள் குருஜி என்றே அழைப்பார்களாம். 

அகோரியாக வாழ்ந்தவராம். இடையில் உடலின் வேஷத்தை எப்போதேனும் களைத்துவிட்டு இங்கே குருஜியாக இருக்கிறாராம். மீண்டும் அகோரியாக போகலாம். எப்போதென அவருக்கே தெரியாதாம் என்று விளக்கினார். 

பிரமித்து போயிருந்த ஞானத்தை பார்த்து “அகோரி என்றதும் ஒரு கோர உருவமும் நினைவு வருகிறதா?” என்றார். 

“அப்படி இல்ல..” என்று உச்சரிப்பை இழுத்தான் ஞானம். 

புரிந்து கொண்ட காப்பாளர் அகோரிகள் பற்றி விபரித்தார். 

“அகோரிகள் நீங்கள் நினைப்பது போல இல்லை. பெரும்பாலும் கோவணம் கட்டியிருப்பார்கள். ஜடாமுடி கொண்டவர்கள். சிவ ருபங்கள். அவர்களே வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தவர்கள். மாயவாதிகள். 

அவர்கள் வசிப்பிடம் காடு. எப்படி உயிர் வாழ்கிறார்கள் என்ன உணவு உண்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்களால் யாருக்கும் அச்சமில்லை. நாட்டுக்குள் அவர்கள் வருவது இல்லை. பன்னிரெண்டு ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் குப்பமேளாவின்போது அலகாபாத்துக்கு கூட்டமாக வந்து கங்கையில் நீராடிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று விடுவார்கள். அவர்களைப் பற்றிய நாம் அறிந்த பெரும்பாலான தகவல்கள் கற்பனையானது. கற்பிதமானது” 

“அவர் என்னைப் பற்றி எதுவும் கேட்கலையே. போனதும் உக்காரச் சொன்னார். மடத்துல தங்கி பணிபுரிங்க. மற்றத உங்ககிட்ட கேட்டுக்கிடுங்கன்னார்.” 

“அவர் அவரில்லை. குருஜி என்று சொல்லலாம்” 

“மன்னிக்கவும். குருஜி” 

“குருஜிக்கு எல்லாம் தெரியும். உங்கள் காக்க வச்சதுதான் பரிசோதனை. உங்க பொறுமை நீங்க சரியானவர்ன்னு புரிஞ்சிருப்பார். மேலும் அவர் ஞானி இல்லையா!” 

இங்கே எல்லோரும் எப்படி இப்படி பேசுகிறார்கள். உயர்வாக நடந்து கொள்கிறார்கள். எல்லோரும் ஞான ஒளி படைத்தவர்கள். இந்த காசியில் வாழ்தல் புண்ணியம் என உணர்ந்தான். தானும் என்றேனும் ஞான ஒளிபெறவேண்டும். பெறுவேனா? கட்டாயம். சிவன் சித்தம். சிவனாக வேண்டும். 

அன்றாடம் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மடத்தின் தியான கூடத்தை பெறுக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் குளித்துவிட்டு மேடையில் வீற்றிருக்கும் சிவ லிங்கத்தின் மீது முதல்நாள் அர்ச்சித்த பூக்களை அகற்றிவிட்டு லிங்கத்தை துடைத்து காலை பூஜைக்கு தயாராக வைத்திருக்க வேண்டும். நந்தவனத்திற்குச் சென்று மலர் கொய்து வந்து லிங்கத்திற்கு அருகில் உள்ள கூடையில் தயார் நிலையில் வைக்க வேண்டும். தியானக்கூடம் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை யாத்திரிகர்களின் வழிபாட்டிற்காக திறந்திருக்கும் சுத்தம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதே ஞானத்தின் அன்றாட வேலை. 

மடத்துக்குச் சொந்தமான அருகில் இருக்கும் மடப்பள்ளியில் உணவு அருந்திக் கொள்ளவேண்டும். 

தினந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் அன்னதான கூடத்தில் பசியாறி வந்தார்கள். தமிழ் மக்களின் வசதிக்காக ஐப்பது ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி சைவ பிள்ளைமார்கள் பலர் கூடி தோற்றுவித்ததே இந்த மடம். அவர்களது குடும்பங்களில் இருந்து வசதி படைத்தவர்கள் தொடர்ந்து நன்கொடை செய்து வருவதாலும் காசிக்கு வரும் வசதி படைத்தவர்கள் தாராளமாக நன்கொடை அளிப்பதாலும் சிறப்பாக இந்த மடம் செயல்பட்டு வருகிறது. 

அன்னதான கூடத்தை ஒட்டினார் பொல உள்ள அறைகளில் யாத்திரிகர்கள் தங்கிக் கொள்ளலாம். வாடகை என்று எதுவும் வாங்குவதில்லை. விரும்பினால் தாங்கள் விருப்பப்பட்ட தொகையை செலுத்தலாம். தாராள மனசு. தயாள குணம். வேறென்ன! உலகம் அதனால்தானே இயங்கிக் கொண்டுள்ளது 

நந்தவத்தில் பூஜைக்கு தேவையான அளவில்தான் பூ எடுக்க வேண்டும். கூடுதலாய் எடுத்தால் இறைவனுக்கே என்றாலும் அவை பறித்தலாகிவிடும் என்பார் குருஜி. 

பக்தர்கள், யாத்திரிகர்கள் கொண்டுவரும் புஷ்பங்களை அவர்களே லிங்கத்திற்கு இட்டு பிரார்த்தனை செய்துகொள்ளலாம். 

சிலர் தொட்டு வணங்குவார்கள். சிலர் லிங்கம் உள்ள மேடைக்கு போகாமல் ஹாலில் கிழே அமர்ந்து தியானிப்பார்கள். பலர் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிப்பார்கள். பலர் கையேத்தி வேண்டுதலை தெரிவிப்பார்கள். இப்படியாக தங்கள் விருப்பப்படி, தெரிந்த அளவில், அறிந்த முறையில் வேண்டுதல் படி பிரார்த்திப்பது இங்கே சுதந்திரமானது. எப்படி வழிபட்டாலும் ஏகன் ஏற்றுக் கொள்கிறான். 

வரும் சாதாரணங்களின் சூன்யங்களை துடைத்துவிட்டு ஞானமடைய இந்த மடம் உதவி செய்கிறது. 

ஞானத்தோடு சூன்யமாகிவிட்டான் ஞானபண்டிதன். 

நாளடைவில் ஞானத்தையும் காலையில் பூஜை செய்திட குருஜி அனுமதித்தார். 

சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். வேத மந்திரங்களை கற்றுக்கொண்டு அதற்கான உச்சரிப்புடனும் ஆச்சாரத்துடனும் பூசை செய்ய தெரிந்து கொண்டான். எந்நேரமும் இறைவன் தன் பக்கக்தில் இருப்பது போல புலப்பட்டது. நாளடைவில் இருப்பதை உணர்ந்தான். 

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குபின் ஞானத்தின் கால்கள் மீள அரிச்சந்திரா காட் நோக்கிப் பயணித்தன. 

எல்லாம் விதி. ஹரிச்சந்திரனுடன் விளையாடிய விதி. 

காட் அப்படியே இருந்தது. யார் கண்டது. அரிச்சந்திர மன்னர் காலத்திருந்தபடியை இப்போதும் இருக்கலாம். 

மனிதர்கள் இறக்கிறார்கள். மனிதர்கள் எரிக்கிறார்கள். எல்லாம் உயிரைச் சுமக்கும் பிணங்கள்தானே. பிணம் பிணமாகிறது. பிணம் பிணங்களை எரிக்கிறது. கட்டை கட்டையில் வேகிறது. உண்மையில் பசும் மரத்தில் கட்டை ஒளிந்திருக்கிறது என்றும் சொல்லலாம். ஆதி முதல் அந்தம் வரை ஒன்றே. ஏனெனில் அவையும் இடைப்பட எல்லாமும் மாயை. 

அன்று போலவே தென்கிழக்கு மூலையிலும் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. அருகில் சிமெண்ட் கட்டைக்கு பதிலாக ஒரு கருங்கல் கிடந்தது. இதுவும் ஆசனமாகப் பயன்படுத்தப் படுகிறது. சிமெண்டும் கல்லும் ஒன்றுதான். அதுமட்டுமல்ல எல்லா வஸ்துகளும் ஒன்றாகிப்போனது ஞானத்திற்கு. ஒரு பிணம் கங்கை கரையில் எரிக்கப்படுகிறது. ஒரு பிணம் காவேரிக் கரையில் எரிக்கப்படுகிறது. ஒரு பிணம் இராமநாதபுரம் பொட்டல் வேலிக் கருவைக் காட்டில் எரிக்கப்படுகிறது. எல்லாம் பிணம். எல்லாம் மாயையாய் பிறந்து மாயையாய் வாழ்ந்து மாயையாய் பிணமாகி மாயையோடு மாயையாகும் ஒற்றை மாயை. 

மனிதர், விலங்கு, சகல பிராணிகள், இத்யாதிகள், பஞ்ச பூதங்கள், வார்த்தைகள், மொழிகள் எல்லாம் ஒன்றுதான் எனப்பட்டது ஞானத்திற்கு. 

காட்டில் இப்போது சிறுவர்கள் கூட பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபடுவது தெரிய வந்தது. பிணங்களை போர்த்தி வந்த துணிகளை எடுத்து எறிவதை சுற்றித் திரியும் சிறுவர்கள் அபகரித்துக்கொண்டு ஓடுவதை காணமுடிந்தது. அதை தாங்கள் குடும்பத்தார் உடுத்த பயன்படுத்திக் கொள்வார்கள் எனப்பட்டது. 

தனது பாட்டி இறந்தபோது அவர் உடுத்திய உடைகளை எல்லாம் கொண்டுபோய் காட்டில் வீசிவிட்டார்கள். அதையெல்லாம் யாரும் அங்கே எடுத்துக் கொண்டுபோய் பயன்படுத்துவது இல்லை. மனிதன் பிணமானால் அது குறித்த எல்லாவற்றையும் தனியே ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் காசியில் அப்படி இல்லை. வறுமைகூட ஒரு காரணமாக இருக்கலாம். நல்ல உடை கிடைத்தால் ஆனந்தமாக ஆடிக்கொண்டு ஓடுகிறார்கள். இழுத்துக்கொண்டு ஓடும்போது கையில் சுருட்டியது போக துணியின் எஞ்சிய பகுதி காற்றில் பறக்கிறது. அது கொடியைப் போல பறப்பதை பார்க்க அழகாக தெரிகிறது. அதில் சிறுவனின் ஆனந்தம் பட்டொளி வீசுவது புரிகிறது 

இப்போது தகனம் செய்பவன் அந்த அரிச்சந்திரன் இல்லை. வேறு ஹரிச்சந்திரன். 

ஞானத்திற்கு அரிச்சந்திரர்கள் தற்போது ஹரிச்சந்திரர்களாகி விட்டார்கள். அரிச்சந்திரனும் ஹரிச்சந்திரனும் ஒன்றல்லவா. பேயரிலும் உச்சரிப்பிலும் என்ன இருக்கிறது. காலத்தாலும் தேசத்தாலும் அவை மாறுபடலாம் மனிதர் ஒன்றுதானே. வார்த்தைகள் அனுமானத்திற்கானதுதானே. 

அப்படியென்றில் அவனும் இவனும் ஒன்றுதான். இவனிடம் பேசுவது உண்மைதான். இவன் பேசுவதும் உண்மைதான். 

தற்போது ஞானம் ஹிந்தியில் தேர்ந்த புலமைபெற்றுவிட்டான். தைரியமாக கருங்கல்லில் அமர்ந்தான். ஹரிச்சந்திரன் என்ன நினைப்பான் ஏன்று யோசிக்க வில்லை. அப்படி ஏதாவது நினைத்தால் அவன் ஹரிச்சந்திரனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்ததால் அவனிடம் அனுமதி வாங்கவில்லை. 

பிணத்தை சுடும் கொலால் எரியும் பிணத்தை அடி அடியென அடித்துக் கொண்டிருந்தான் ஹரிச்சந்திரன். 

“ஏன் அப்படி போட்டு அடிக்கிறிங்க?” ஹிந்தியில் கேட்டான். 

இந்த இளம் ஹரிச்சந்திரனுக்கு தமிழ் தெரியாது. 

“பாவத்தை கழுவு விடுகிறேன்” என்றான். 

“இறந்த பின் அடித்து என்ன கழுவுப்படப் போகிறது.?” 

“அப்படித்தானே பிணத்தை இந்த கரையில் எரிக்கிறார்கள். இங்கே உயிரும் பிணமும் ஒன்றுதான். ஆன்மாதான் வேறு” 

“இந்த உயிரை அடிக்க நீங்கள் யார்?” 

“பாதிக்கப்பட்ட நான்தானே அடிக்க வேண்டும்” 

“நீங்களா? அப்படி ஆனாலும், அதற்கென சட்டம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் இருக்கிறான்” 

“நான்தான் இறைவன். நான்தான் இவனால் பாதிக்கப்பட்ட விக்டிமிஸ்ட்” 

சற்று தாமதித்து யோசித்துவிட்டு “இன்னும் சொல்லப் போனால் நான்தான் நேற்று அவனைக் கொன்றேன். இயற்கைக்கான சாவு என எல்லோரும் நம்பிவிட்டார்கள்.” 

நம்புவதா? நம்பத்தான் வேண்டும். வியப்புடன் ஆமோதித்தான் “அப்படியா?” 

“பாவம் இவன் துரதிஸ்டக்காரன்” என்றான். 

“ஏன்” 

“இல்லையென்றால் இவன் பிணமும் கூட எரிபட என்னிடம் கிடைத்திருக்குமா?” 

“அரசனும் ஆண்டவனும் தண்டிப்பதே முறை. சட்டம் உங்கள் கையில் இல்லையே” 

“அரசன், ஆண்டவன், பாதிக்கப்பட்டவன் யார் வேண்டுமானாலும் தண்டனை கொடுக்கலாம் என்பதே நியதி. பாதிக்கப்பட்டவனுக்கு சாட்சிகள் தேவையில்லை. ஆண்டவன் தண்டனை கொடுப்பது தெரியாமல் போகலாம். இது போன்ற சந்தர்ப்பம் யாருக்கும் பெரிதாய் கிடைக்காது. நானும் ஆண்டவன் என்பதால் எனக்கு கிடைத்திருக்கலாம். அல்லது கிடைத்ததால் என்னை ஆண்டவன் என நீங்கள் சொல்லலாம்.” 

“அரசன் எனவும் சொல்லலாம்தானே!” 

“சொல்லலாமே. ஆனால் பாதிக்கப்பட்டவன்.” 

ஞானத்திற்கு இதுவும் சரியாகப் பட்டது. யோசிக்கத் தொடங்கினேன். பழிக்குப்பழி பாவம் இல்லை. சரியான தண்டனை. தவறிலிருந்து தப்பிக்க சட்டங்களில் ஆயிரம் ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன.  கண்ணுக்கு கண், கைக்கு கை, தலைக்கு தலை நியாயமானது 

இவன் ஒரு நவி ஹரிசந்திரா. தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். 

நீண்ட நேரம் அவன் எரித்துக் கொண்டிருந்த பிணம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். 

அவன் மடத்திற்கு திரும்பும் நேரம் பார்த்து செய்தி படமெடுக்கும் ஒருவர் இவன் பக்கம் தனது நவீன கேமராவை திருப்பி சொர்க்கம் நரகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கும்போதே. “நோ கமெண்ட்ஸ்” என்று கூறி 

தன்னை படமெடுக்காதவாறு முத்தைத் திரும்பிக் கொண்டான். 

மாலையில் கங்கை ஆர்த்தியை பார்த்து கைகூப்பினான். 

அன்று இரவு விடியும்வரை ஞானம் தூங்கவில்லை. 

இந்த காடுதான் மராண்டி மூலம் முதலில் ஞானத்தை கொடுத்தது. தற்போதும் பிரிதொரு ஞானத்தைக் கொடுத்துள்ளான் நீலா பட்நாயக். 

ஒருவேளை மராண்டி நெருப்பாகி நீராகி கங்கை நீரில் கரைந்திருப்பார். 

பட்நாயக் ஞானத்தை நெருப்பாகச் சொன்னதாக புலப்பட்டது. 


ஒரு வாரத்திற்கு பின் ஞானம் குருஜியை அவரது அறையில் சந்தித்து தான் பாதிக்கப்பட்ட விபரத்தை தெரிவித்து தான் எடுத்துள்ள முடிவை நிறைவேற்ற அனுமதி கேட்டான். மறுத்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். தன் தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக்கினான். 

இவன் சேர்ந்த பிறகு இவர் மூன்றாவது குருஜி. முதல் குருஜி என்னானார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை மீண்டும் அகோரியாகி இருக்கலாம். இரண்டாவது குருஜி ஒரு நாள் லிங்கத்திற்கு மலர் தூவிக் கொண்டிருந்தபோது மல்லாந்து விழுந்து கையில் பற்றியிருந்த எஞ்சிய மலர்களை தனக்குத்தானே தூவிக்கொண்டார். 

மூன்றாவதாக இப்போது இருப்பவரும் கிட்டத்தட்ட முதலாமவரைப் போல அகோரிதான். 

பட்நாயக்கின் வேதாந்தபடி ஞானத்தை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக மாலினியை ஞானமே தண்டிக்கலாம் என்பதே. ஆனால் அவள் உயிரோடு இருக்க வேண்டும். 

குருஜி அதை ஏற்றுக்கொள்ள வில்லை. கடைசியாய் “உன் விருப்பம்” என்றார். 

ஆனால் விரும்பினால் மீண்டும் மடத்தில் பணி செய்யலாம். தண்டனை கொடுத்த கையோடு காசிக்கு திரும்பி கங்கையில் நீராடிவிட்டு மடத்திற்கு வரவேண்டும் என கட்டளையிட்டார். 

“ஏன் நீராட வேண்டும். நான் பாவம் செய்யப் போவதில்லையே. தண்டனையே நிறைவேற்றப் போகிறேன். குருஷேத்திர போரில் நியாயம்தானே பிரதானம்” என்றான். 

“குளித்தால்தான் என்ன?” 

“குருஜி! போகும்போதே கங்கையில் குளித்துவிட்டுப் போகிறேனே. நான் இதுவரை கங்கையில் குளித்தது இல்லை” 

“குளித்துவிட்டு போ. குளித்துவிட்டு வா. இது குருவின் கட்டளை” என்றார். 

எல்லோரையும் போலவே மாலினி கைபேசியை தோண்டிக் கொண்டிருப்பாள். ஆனால் கண்ணில் நீர் வரும் வரை தோண்டுவதில்லை. மேலும் ஆன்மீக தொடர்பான பதிவுகளை வாசிப்பது அதைப் பறிய தகவல்களின் உண்மை அறிய முயற்சிப்பது கூடுதல் தகவல்களை அறிதல் அத்துடன் அதில் மனதை ஒட்ட வைப்பதற்காகவே கைபேசியை தோண்டிக் கொண்டிருப்பாள். 

காசியைப் பற்றிய ஓர் ஆவனப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது மின்னலென வந்துபோன ஞானத்தின் முகம் சட்டென அவளுக்கு அடையாளப்படுத்திச் சென்றது. 

‘என்னோட ஞானம். . . என்னோட ஞானம்’ என கத்திக்கொண்டு எகிறிக் குதித்தாள். மீண்டும் மீண்டும் இயக்கி பார்த்தாள். அவன் ஞானபண்டிதன் என்பதை உறுதி செய்தாள். 

ஒரு வார காலமாக யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். காசிக்குச் சென்று அலைந்து திரிந்து கண்டுபிடித்து அவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு அவனை மீட்டு இங்கே கொண்டு வரவேண்டும். எஞ்சி காலத்தை ஆதர்ஷமான தம்பதிகளாக வாழவேண்டும் என்று முடிவு செய்தாள். அவனைவிட இவள் வயதில் அதிகமானவள். இருந்தால் என்ன இல்லறம் என்பது வெறும் காமத்தோடும் மட்டும் முடிவதா என்று தானே ஒரு முடிவுக்கு வந்தாள். இல்லையென்றால் நல்ல நண்பர்களாகவோ வேறு எந்த மாதிரி உறவு என்றாலும் அதன்படி வாழ்வது, அது ஞானபண்டிதனின் விருப்பத்திற்கு விடுவது என்ற முடித்துக் கொண்டாள். 

அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தானும் காசியில் எங்காவது தங்கிவிடுவது. தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றால் ஒருநாள் கங்கையில் மூழ்கி விமோசனம் பெறுவது என முடிவு செய்தாள். 

அம்புத்திடம் கூட சொல்லிக் கொள்ளாமல் ஒருநாள் வீட்டை பூட்டிவிட்டு காசியை நோக்கி பயணித்தாள். 


சொந்த ஊருக்கு வந்த ஞானபண்டிதன் தன் பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்களா தம்பி எப்படி உள்ளான் உறவினர்களின் நிலை என்ன என்றெல்லாம் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாதவனாய் மாலினியை தேடி அலைந்தான். ஊர் முற்றிலுமாக அடையாளம் தெரியாதவாறு மாறி இருந்தது. தான் வசித்த வீட்டுப் பக்கம் போகாமல் மற்ற இடங்கள் எல்லாவற்றையும் சல்லடைபோட்டு சலித்து எடுத்தான். தான் பயின்ற பள்ளியில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தான். மாலினி கிடைக்கவில்லை. தோல்வியே கிடைத்தது. 

மீள காசிக்கே திரும்பிட திட்டமிட்டு ராமேஸ்வரம் பனாரஸ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் சென்னையில் இருந்து பயணம் செய்ய டிக்கெட் எடுத்து வண்டியில் ஏற செல்வதற்குள் வண்டி இயங்கத் தொடங்கிவிட்டது. வேகமாக ஓடி கடைசி பெட்டியின் கைபிடியை பற்றினான். தவறி கை நழுவ கிழே விழுந்து உருண்டு சக்கரத்துக்குள் மாட்டிக்கொள்ள அது அவன் தலை மற்றும் ஒரு காலை நசுக்கி நகர்ந்தது. சிவப்பு கொடி அசைய வண்டி நின்றதும் பரபரப்பு நிலவியது. பிளாட்பாரத்தில் நின்றவர்களுக்கும் கடைசி பெட்டிகளில் இருந்தவர்களுக்கும் பச்சாதாபமும் தொற்றிக்கொண்டது. மற்ற பயணிகளுக்கு விபரம் எதுவும் தெரியாது குழம்பி இருந்தனர். 

“யாரோ ஏறுர அவசரத்துல தண்டவளத்துல விழுந்து அடிபட்டு செத்துட்டாங்கலாம். அதான் வண்டி நிக்குது” என இரண்டாவது பெட்டியில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான பாட்டியிடம் தான் கேட்டுத் தெரிந்து கொண்ட விபரத்தைத் தெரிவித்தாள் மாலினி. 

சற்று நேரத்தில் வண்டி வாரணாசி நோக்கி கிளம்பியது. 


மாலினி பற்றிய எவ்வளவே விஷயங்களை சேகரித்த காவலர் நித்யாவால் கடைசிவரை அவளை சந்திக்க முடியவில்லை. தெரிவித்த வீடு தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. 

“சரிதான் விடுங்க நித்யா. மாலினி இறந்த பிறகு ஒருநாள் ஆவி இங்க வந்து ஞானபண்டிதனை தேடிப் புடிச்சி ஒப்படைங்கன்னு ஹெச்.சி.பி மனு கொடுக்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர். 

காவல் நிலையத்தில் இருந்தவர்கள் கொல்லென சிரித்தனர். ஒரு கொலை வழக்கின் விசாரணைக்காக அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு விசாரனை கைதிகள் உட்பட. 

முற்றும்.

– பிரதிலிபி இணைய தளத்தில் ஏப்ரல் 2022 ஆம் மாதத்தில் அறிவிக்கப்பட்ட திகில், காதல், தன்னம்விக்கை போன்ற தலைப்புகளின் அறிவித்த போட்டியின் கீழ் தொடராக எழுதப்பட்டு “குறிப்பிடத் தக்க சிறந்த படைப்பு” வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்.

– அறைக்குள் அகப்பட்ட வானம், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் (aishushanmugam09@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.

தமிழ்நாடு சிறைத்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் வேதாரணியம் தாலுக்கா கடிநெல்வயல் என்ற கிராமம்.  தற்போதைய வாழிடம் திருச்சி.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. முகநூல் பக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் பதிவிட்டுள்ளார். பல சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதைகள் தேர்வுபெற்றுள்ளன. நாற்பதாண்டுகளுக்கு மேலாக நல்ல வாசிப்பு அனுபவம் கொண்ட வாசகர். இவரது படைப்புகள்:  (1)   பாதியும் மீதியும்(சிறுகதைத் தொகுப்பு)விலை ரூ. 120/- வெளியீடு :படைப்பு பதிப்பகம்,# 8 மதுரை வீரன் நகர்,கூத்தப்பாக்கம்,  கடலூர் - 607 002தமிழ்நாடு94893…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *