காலம் ஒரு நாள் மாறும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 74,908 
 
 

கவனிக்க: இக்கதையில் வர்ணிக்கப்பட்டுள்ள விண்வெளி பயண தொழில் நுட்பங்கள் முற்றிலும் கதாசிரியரின் கற்பனையே…காப்பி ரைட் உள்ளது (Copy Right)…. நாசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது!

கி.பி. 2025

இந்தியப் பெருங்கடலின் நடுவில், சரியாக பூமத்திய ரேகை (Equator) பகுதியில் நடந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான வேலைப்பாடுகளை, மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த விக்னேஷ்வரை மெய்சிலிர்க்க வைத்தது.. சமீப காலத்தில் பிரபலமாகிப்போன இளம் விஞ்ஞானி சுதர்சனை நினைத்து மனமாற மெச்சினார்.

சுதர்சனுக்கு இப்பொழுது வயது இருபத்தி ஆறு தான் இருக்கும். எந்தவொரு சக்தியும் இல்லாமல்… அதாவது, எரிசக்தி, மின்சக்தி, அல்லது மின்னணு சக்திகளின் உதவியின்றி, எப்படி ஒரு பொருளை பூமியின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து மேல் நோக்கி உந்தச் செய்வது என்கிற பலவிதமான ஆய்வில் ஒரு சிறந்த, செலவு அதிகமிராத யுக்தி ஒன்றை பட்டப்படிப்பின் காலத்திலேயே அவன் கண்டு பிடித்து இருந்தான்.

காற்றடைத்த பந்து ஒன்றை தண்ணீருக்கு அடியில் கொண்டு சென்று விட்டால் அது எப்படி ஒரு உத்வேகத்துடன் மேலெழும்பி வருகிறது?! இப்போது இந்த பந்தை தண்ணீருக்கடியில் இருந்து துப்பாக்கிக் குண்டை போல சுட வைத்தால் அதன் மேல் எழும்பும் வேகம் இன்னும் அதிகரித்து வானில் பறக்கும் அல்லவா?….இவை அனைத்தையும் யோசித்து யோசித்து பார்த்தவன், அந்த திட்டத்தை ஒரு சிறு மாடல் வடிவமாக உருவாக்கி செயல்படுத்திக்காட்ட…. பல நாடுகள் அவனை தங்கள் வசம் இழுத்துக் கொள்ள துடித்தன!

சிங்கப்பூர் குடிமகனான சுதர்சன், கடைசியில் இந்தியாவுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொள்ள, சிங்கப்பூர் அரசாங்கமும் பலவிதமான உதவிகள் செய்ய முன்வந்தது.

இரு நாடுகளும் மேலும் பல வளர்ந்த நாடுகளின சிறு சிறு உதவிகளோடு அவன் திட்டத்தை விண்வெளிப் பயணத்திற்கு அமல்படுத்த துரிதமாக செயல்படத் தொடங்கின.

அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யும் மிக மேலான பொறுப்பு விக்னேஷ்வருக்கு… விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவின் நம்பர் ஒன் அவர்!

ஹெலிகாப்டர் ஒரு பெரிய கப்பலின் மேல் தளத்தில் இறங்கியது. உயர்பதவியில் இருந்த பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அவரை வரவேற்று, சற்று தொலைவில் கடலில் நடந்து கொண்டிருந்த ஆயத்த வேலைகளை பற்றி விரிவுரைத்தனர்.

கடலின் மேல் ஒரு துப்பாக்கி குண்டின் வடிவம் கொண்ட ஒரு ராட்சத பந்து மிதந்து கொண்டிருந்தது. அதனுள்ளே பலவிதமான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருப்பதைக் காண ஒரு விசைப்படகில் விக்னேஷ்வரை அழைத்துச் சென்றனர். அந்தப் பந்து ஒரு புதுவித, எடை குறைவான ஊசியினாலும் துளைக்க முடியாத மெல்லிய மைக்ரோலாட்டீஸ் (microlatice) பொருளினால் தயாரிக்கப்பட்டிருந்தது. காற்று கூட புகாத இடுக்கில்அனைவரும் தங்களை சிரமப்படுத்திக் கொண்டு பந்தின் உட்பகுதிக்குச் சென்றனர்.

உள்ளே…. ஜேம்ஸ்பாண்ட் சினிமாவில் காண்பதுபோல், வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பந்தின் நடுவே விண்வெளியில் படுவேகத்தில் பறக்கப் போகும் வட்ட வடிவம் கொண்ட அதிநவீன அமெரிக்க விமானம் ஒன்று நின்று…..தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த விண்வெளிவிமானத்தை பலவித புதுமையான முறையை கொண்டு, சொற்ப எடையை கொண்ட பொருட்களினால் தயாரித்திருந்தனர். பூமியின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்துக் கொண்டு ஒரு விமானம் விண்வெளிக்குச் செல்ல வேண்டுமானால் அந்த விமானத்தின் எடை கூடிய மட்டும் குறைவாக வைத்திருக்க வேண்டும். இது நாள் வரையிலும கையாளப்பட்ட பல நாட்டினரின் யுக்தியில் வீண் செலவுகள் தான் அதிகம் இருந்தன.

பந்துக்குள்ளே அந்த விமானத்தை எப்படி கொண்டு சென்றார்கள் என்பதை எண்ணிப்பார்க்க விக்னேஷ்வருக்கே மலைப்பாகத் தான் இருந்தது!!
‘தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டுமே மனிதனின் கவனம் எந்நேரமும் இருந்தால் ….சண்டை, பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எண்ணிப்பார்க்க காலம் எங்கே மிஞ்சியிருக்கும்?’ இப்படி பலவித எண்ணங்களை அசைபோட்டவாறே மேலும் நடப்பவற்றை பார்வையிட்டார் விக்னேஷ்வர்.

சுதர்சன் பல விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து கடைசியாக முடிவு செய்யப்பட்ட திட்டம் இதுதான்….

பூமத்திய ரேகையிலிருந்து வானில் பாயும் எந்த பொருளுக்கும் ஒரு கூடுதல் உந்துதல் சக்தி கிடைக்கும் என்பதால், அப்படி ஒரு கடல் பிரதேசத்தில், 35 அடி விட்டம் 1000 அடி நீளம் கிணறு போன்ற… துப்பாக்கிக் குழலைப் போல…. ஒரு பாதாள அமைப்பு!! அந்த துப்பாக்கிக் குழல் போல் உள்ள பகுதியில் துப்பாக்கிக் குழலுக்குள் ஒரு பந்து, துப்பாக்கி குண்டின் வடிவமைப்பை வைத்து….., துப்பாக்கி குண்டைப் போல் உள்ள அந்த பந்தை கடலடி பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து கடல்நீரின் மேலெழும்பும் உந்துதல் சக்தியை பயன்படுத்தி, பின் அது மேலெழும்பிக் கொண்டிருக்கையில்…. பந்தை, ட்ரிக்கர் அமைப்பில் அதன் அடியிலிருந்து சுடச் செய்து செய்து…. அந்த பந்தை விண்வெளிக்கு அனுப்பப்படும்!

ஒரு சாதாரண துப்பாக்கிக் குண்டு எப்படி பல்லாயிரம் மீட்டர் வரை பாய்ந்து இலக்கை தாக்குகிறதோ, அந்த விசைநுட்பம் அடிப்படையில் ராட்சத வடிவில் துப்பாக்கி குழலை உருவாக்கி பந்தை சுட வைத்தால், அது எத்தனை கிலோமீட்டர் தூரம் ராக்கெட் வேகத்தில் பாயும்?!

இப்படிப்பட்ட திட்டம் மூலம் தான் இந்தப் பந்தை அதிவிரைவில் விண்வெளியில் பாய்ச்சுவது என்பது மாபெரும் திட்டம்!… விண்வெளியில் நுழைந்ததும் பந்தை வெடிக்க செய்து அதனுள் இருக்கும் விண்வெளி விமானத்தை மேலும் பறந்து செல்ல சூரிய ஒளி & புதுவித அனுசக்தியை பயன்படுத்தி மேலும் விண்ணுக்குள் பாய்ச்சுவது விரிவான திட்டம்.

35 அடி விட்டம் 1000 அடி நீளம் கிணறு போன்ற அந்த அமைப்பை ஒரு கப்பலின் மேலிருந்து புதிய ரிப்லோக் + ரோபோடிக் (Rib-lok + Robotics) திட்டப்படி…., அதாவது ஒரு இயந்திரம், 35 அடி விட்ட வெளிப் பாதையில் ஓட, அதிலிருந்து ரிப்பன் போன்ற மைக்ரோலாட்டீஸ் (microlatice) பொருளைளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டையை வட்ட வடிவில் இணைத்து, இணைத்து கீழ் இறக்கிக் கொண்டே….. கடல் அடி மட்டம் வரை அமைத்து நிறுத்துவது….

இந்த ஆழ் கிணறு அமைப்பு கடல் அலைகளால் இழுத்துச் செல்லாமல் இருக்க நான்கு திசைகளில் கட்டி வைத்திருந்தனர்

ஆழ் கிணறைப் போல் இதை அமைக்க சுமார் ஒரு மாதம் பிடித்தது.

ஆரம்பத்தில் இந்த கிணற்றில் கடல்நீர் இருக்கும். ஆனால், விண்வெளி விமானத்தை வானத்தில் கிளப்பச் செய்யும் மூன்று தினங்களுக்கு முன் அந்த கடல்நீரை முற்றிலுமாக பெரிய பைப்பை வைத்து உறிஞ்சி எடுக்கப்பட்டு, கிணற்றின் அடிப் பாகம் மேலும் கடல்நீர் உள் வராமல் சீல் செய்து, அதனுள் துப்பாக்கி குண்டு வடிவில் உள்ள பந்தை இறக்கி தயார் நிலையில் தொங்க விட்டு, அதை சுடும் தருவாய்க்கு முன், அந்த சீல் செய்யப்பட்ட அமைப்பை சிறு வெடிகுண்டுகளினால் வெடிக்க செய்து….. கடல்நீரை, 1000 அடி மட்ட சுய கடல் அழுத்தத்தால் கிணற்றுக்குள் குபுகுபுவென புகச்செய்ய வேண்டியது….. இப்படி படு உத்வேகத்தில் கிணற்றுக்குள் மேல்நோக்கி பாயும் நீர், பந்தை மேல் நோக்கி அதி விரைவில் தூக்கி எறியும்….சரியாக கடல் மேல் மட்டம் வந்ததும்…. பந்தை துப்பாக்கியைப் போல் சுட்டுவிட்டு வானில் ராக்கெட்டை போல் பறக்கச் செய்ய வேண்டும்!!
குறிப்பிட்ட உயரம் வானத்தில் பறந்து சென்றதும்…. பந்தை வெடிக்கச் செய்து…. அதனுள் இருக்கும் விண்வெளி விமானத்தை இயக்கி…. மேலும் ஆகாய வெளியில் நுழைக்க வேண்டும்!!!

அந்த விண்வெளி விமானத்தை ஓட்டப் போகும் விமானி…. வேதா!

***

வேதா! ,,,,,ஆம், ஒரு பெண்!….அவளை ஏன் இந்த விண்வெளிப் பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்….

நான்கு ஆண்டுகளக்கு முன் – ‘விண்வெளியில் பூமியை சுற்றி மூன்று நாட்கள் உல்லாச சுற்றுலா!’ பயணம் ஒன்றில் வேதா கலந்து கொண்டாள்.

பல ஆங்கிலப் படங்களில் விண்வெளியில் மனிதர்கள் மிதந்து கொண்டும் பறந்து கொண்டும் திரிவதை பார்த்து ஏங்கியவளுக்கு அந்த விண்வெளிப் பயணம் படு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பயணத்தின் முதல் நாளன்று விமானத்திற்குள் பலவிதமான கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி கழித்தவள், களைப்புடன் உறங்கிப் போனாள்….

தூக்கத்தில் ஒரு கனவு….

கீழ் ஆகாயத்தில், ஒரு சாதாரண பயணிகள் விமானம் ஒன்று…… தள்ளாடியவாறு பறந்து கொண்டிருந்தது… பயணிகள் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்டு “குய்யோ!… முய்யோ!!” என்று அலற ஆரம்பித்தார்கள்… திடீரென்று அந்த விமானம் வெடித்து சிதறியது… பலநூறு மனிதர்களுடன்….. தீப்பிழம்பாக…. 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த பொழுது…. பீதியில் கூக்குரலிட்ட பல சிறுவர்களின் ஓலமும்….பல பெரியவர்களின் ஓலமும்… வேதாவுக்கு எல்லாமே மிகத் துல்லியமாக அந்த கோரச் சம்பவம் கண்ணுக்குத் தெரிய….

‘நானுமா இந்த விபத்தில் மாட்டிக்கொண்டு கடலில் விழுந்து கொண்டிருக்கிறேன்??!’ என்று உடல் குலுக்கி தூக்கிப் போட… கனவிலிருந்து விழித்துக் கொண்டாள்….. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது!… பயத்தில் மூச்சு வாங்கி இதயம் படு வேகமாக துடித்தது!!

‘கண்டது கனவுதானா?’… அவளால் நம்ப முடியவில்லை. அந்த விபத்தை நேரில் கண்டது போலவே தோன்றி அவள் மனதை உறத்த… உள்ளே விமான கேப்டனை சந்திக்கச் சென்றாள்.

தான் கண்ட கனவைப் பற்றி அவரிடம் கூற, அவர் அவளை மலைப்புடன் பார்த்தார்!

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?… என்னாச்சு?… என்ன நடந்தது?”

“நீங்கள் கண்டது நிஜம்!”

தூக்கிவாரிப் போட்டது வேதாவுக்கு! அசந்து போய் கேப்டனையே உற்று நோக்கினாள்.

“ஆமாம்…. சும்மா பொழுது போக்கிற்காக நான் என் தொலைநோக்கியில் பூமியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது…. என் கண்களுக்கும் அந்த விபத்து நிகழ்ந்தது தெரிந்தது… உடனே பூமியை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அது நிஜம்தான் என்பது ஊர்ஜிதமானது…. நான் தொலைநோக்கியில் பார்த்தது….. நீங்கள் தூரதிருஷ்டிப் பார்வையால் (Clairvoyance) கனவாக பார்த்திருக்கிறீர்கள்….என்ன ஆச்சரியம்!!…இதற்கு முன் இப்படி ஏதாவது அனுபவித்து இருக்கிறீர்களா?” கேப்டன் விவரித்தார்.

“தூரதிருஷ்டிப் பார்வையா?….எனக்கா??…என்னால் நம்பவே முடியவில்லை!. இது தான் முதல் முறை இப்படி நான் பார்த்தது!”
அதற்குப் பின் வேதாவுக்கு அந்த சுற்றுலாப் பயணத்தில் எதுவும் பிடிக்கவில்லை….. எந்நேரமும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவளுக்கு அந்த விமானம் கடலில் விழுந்த இடத்தில் மீட்புப் பணி, தேடுதல் பணி எல்லாம் தன் கண்முன் நடந்து கொண்டிருப்பது போலவே… அரை தாக்க நிலையில் உணர்ந்தாள்!!.

அடுத்த நாள்….

“அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி (Black Box) இன்னும் கிடைக்கவில்லையாம்…… விபத்தின் மூல காரணத்தை அறிந்து கொள்ள அந்தப் பெட்டி மிக அவசியம்… ஒரு வேடிக்கையான குழப்பம் பாருங்களேன்… முதலில் அந்த பெட்டியின் இருப்பிடம் ராடாரில் (Radar) தெரிந்ததும்…. உடனே அந்த ஆழ்கடல் பகுதிக்கு ஆட்களை அனுப்பினால்…. அந்தப் பெட்டி அங்கே இல்லையாம்!…ராடாரில் மறுபடியும் அது வேறு இடத்தில் காட்டியதும்… திரும்பி ஆட்களை அங்கே அனுப்பினால்…. மறுபடியும் அந்தப் பெட்டி மாயமாக போயிடுச்சாம்!!…

என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்கு பல உயர் அதிகாரிகள் குழம்பிப் போய் திண்டாடுகிறார்கள்!” கேப்டனின் பேச்சைக் கேட்டவள், திடீரென்று சாய்ந்தாள்….

ஒரு உறக்க நிலைக்கு தள்ளப்பட்ட வேதாவுக்கு மறுபடியும் ஒரு கனவு…. இல்லை நிஜம்தானா?……

அந்தக் கருப்பு பெட்டி எங்கே இருக்கிறது என்று வேதாவுக்கு கண்கூடாகத் தெரிந்தது…. ஆம்!… அது ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தது!….

அதனால் தான் திமிங்கலம் இடம் விட்டு இடம் மாறி நீந்திச் செல்ல…. ராடாரில் அந்தப் பெட்டியின் இருப்பிடம் மாறி மாறி தெரிகிறது…

திடீரென்று கண்களைத் திறந்தவள், கேப்டன் தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“இப்பொழுது என்ன பார்த்தீர்கள்?”

கேப்டனிடம் வேதா அந்த திமிங்கலத்தைப் பற்றி விவரித்தாள். உடனே கேப்டன் அதை பூமியில் உள்ளவர்களிடம் சொல்ல… சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்…. அந்த திமிங்கலத்தை பிடித்துவிட்ட செய்தியும் அதன் வயிற்றிலிருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது என்பதையும் காது குளிரக் கேட்டாள் வேதா.

***

அந்த சம்பவத்தில் பிரபலமாகிப் போனவள் தான் வேதா…. அதன்பின் பல விதமான நற்பணிக்கும் பொதுத் தொண்டிற்கும் தனக்கு வரப்பிரசாதமாக கிடைத்த அந்த தூரதிருஷ்டிப் பார்வையை பயன்படுத்தி மேன்மேலும் புகழ் பெற்றுக் கொண்டே வந்தாள்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு அவளை உபயோகப்படுத்தலாம் என்று பல பெரிய விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்க… அவளும் குதூகலத்துடன் ஒப்புதல் வழங்கினாள்.
அவளை விண்வெளிக்கு அனுப்பத் தேவையான பயிற்சிகளை எல்லாம் துரிதமாக கொடுத்து வந்தனர்.

ஒரு கிரகத்தில் ஆராய வேண்டியதை எல்லாம், அங்கு போய் இறங்காமலேயே… அதைச் சுற்றிப் பறந்தவாறு… அவளின் தூரதிருஷ்டி பார்வையால்.. முடிந்தமட்டும் ஆராய்வது என்பது தான் நோக்கம்.

இதன் மூலம் ஏகப்பட்ட செலவுகளை மிச்சப்படுத்துவது என்பது ஒருபுறமிருக்க… பலவிதமான இயந்திர இடர்பாடுகளையும் தவிர்க்க முடியும், நேரமும் மிச்சமாகும். குறுகிய காலத்திலேயே ஒரு கிரகத்தை மட்டுமல்லாமல் சூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களையும், அதன் ஒவ்வொன்றின் துணைக் கோள்களையும் (நிலாக்கள்) சேர்த்து சுமார் நான்கு மாதத்திற்குள் வேண்டிய ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு விடலாம் என்று கணிக்கப்பட்டது.

வேதாவுக்கு இதில் எந்த அளவிற்கு சாமர்த்தியம் உள்ளது என்பதை பல சோதனைகள் செய்து பார்த்து கணிக்கப்பட்டது….ஒரு பிரச்சினையும் இராது என்பதை திட்டவட்டமாக அறிந்தபின் அவளை அந்த ராட்சச பந்தின் மூலம் பயணத்தை தொடங்க முடிவு செய்து நாள் குறிக்கப்பட்டது.

***

சித்திரா பௌர்ணமி நாள் தான் அந்த நாள்!… அதுவும் பௌர்ணமி தினத்தன்று பட்டப் பகலில் முழு பிரகாச நிலா விண்ணில் தெரியும் பொழுது….இந்தப் பந்தை…. துப்பாக்கி குண்டாக பாய்ச்சுவது என்பது திட்டம்… இதனால் உந்துதல் சக்தி மேலும் அதிகமாகும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை… திட்டவட்டமாக நிரூபணமான ஒரு உண்மையும் கூட!
அதாவது பௌர்ணமி அன்று கடல் மட்டம் எழும்பி இறங்குவது அறிந்த உண்மை… இது எதனால் ஏற்படுகிறது என்பதை எல்லோரும் அறிந்ததே…. அது, பூமியை போல், நிலவின் ஈர்ப்பு சக்தி என்பது தெரியும்…. ஆகையால் இந்த சித்ரா பௌர்ணமி தினத்தை தேர்ந்தெடுத்தனர்.

வேதாவின் பயணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதம் இருந்தன…

34 அடி விட்டம் 55 அடி நீளம் அளவு கொண்ட, துப்பாக்கி குண்டு போன்ற அந்த பெரிய பந்தை ஆழ்கடலுக்கு இறக்க… அதோடு அந்த குண்டை சுடப்போகும் ட்ரிக்கர் (Trigger) அமைப்பையும் பந்தின் அடிப்பக்கம் சேர்த்து வைத்து இறக்கப்பட்டது.

வேதாவின் விண்வெளி விமானத்தை, தாயின் கருவறையில் மிதக்கும் சிசுவைபோல்…. ஒருவித திரவம் வைத்து தொங்கும் படியாக நிறுத்தியிருந்தது….படுவேகத்தில் வானத்தில் பிறக்கப்போகும் பொது….. அதிவிரைவான வேகத்தில் பெரிய பந்து மேல் நோக்கிச் செல்லும் பொழுது ‘உருளுதல்…புரளுதல்’ போன்ற அசௌகரியங்கள் விமானத்தையும் பயனியையும் பாதிக்காத வண்ணம் அது வடிவமைக்கப்பட்டிருந்தது……. வேதாவுக்கு எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படக் கூடாதென்று.
இது தவிர அவள் தன்னை ஒரு யோக நிலையில்….சமாதி நிலையில்….கிட்டத்தட்ட இறந்துபோனது போன்ற ஒரு நிலையில்…. தன்னை மூழ்கிக்கொள்ள வேண்டும்!!

ஒரு கும்பல், ஆழ் கிணற்றின்…. துப்பாக்கி குழல் அமைப்பின் அடியில் ‘டைம் பாம்’ வைத்து வந்தனர்…அதை பின்னர் வெடிக்கச் செய்ய சுற்றியுள்ள கடல் நீர் பயங்கர அழுத்தத்தில் கிணற்றில் புகுந்து மேலெழும்.

எல்லா ஆயத்த வேலைகளும் முடிந்து பௌர்ணமி நிலவும் கிழக்கில் உதிக்கத் தொடங்கியது… அது சுமார் 60 டிகிரி விண்ணில் இருக்கும் சமயம் திட்டத்தை செயல்படுத்துவது என்பது முடிவானது… வேதாவின் கண்முன் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் விக்னேஷ்வர் தோன்றினார்.
“உன்னிடம் உள்ள செக் லிஸ்ட் படி விமானத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கு… அதற்கு முன் உன் அக்கா ரீமா கணவனுடன் வந்துள்ளாள்…. சரியாக ஐந்து நிமிடம் பேச எடுத்துக் கொள்”

***

வேதாவுக்கு உள்ள ஒரே பந்தம் இந்த அக்காள் ரீமா தான்… மிக புத்திசாலியான பெண்… அதனால் சிங்கப்பூரில் ஒரு மாபெரும் ரசாயன தொழிற்சாலையில் உயர் பதவியில் இருந்தாள்….

பிறப்பிலிருந்து ஒரு கால் ஊனம் என்பது தான் அவளிடம் இருந்த ஒரு பெரிய குறை!.. அவள் முகத்தில் தெரிந்த பொலிவையும் கண்களில் தெரிந்த புத்திக் கூர்மையையும் கண்டவர்கள் அவள் கால் ஊனத்தை கண்டதும் ‘த்சூ’ கொட்டி முகம் சுளித்தனர்!…

இதனாலேயே அவளுக்கு பல ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் இருந்தது. கடைசியாக சென்ற வருடம் தான் ஒருவன், ரிதூ, அவளை மனமுவந்து திருமணம் செய்து கொண்டான்.
ரிதூ அழகிலும் படிப்பிலும், அந்தஸ்திலும், வாழ்க்கையில் மிக சாதாரண மனிதன் தான்.

“ஹாய் ரீமா!” வேதா கையசைத்து வரவேற்றாள் தொலைக் காட்சியில்.

“ஹாய் வேதா….நீ விண்வெளியில் எத்தனை நாள் சுத்தப் போறே?… என்னென்ன பார்க்கப் போறே?”

“நான் மொத்தம் 100 லிருந்து 120 நாட்கள் வரை சுத்தப் போகிறேன்… நம்ம சூரிய மண்டலத்தில் இருக்கிற எல்லா சின்ன பெரிய கிரகங்களையும் அதன் துணைக் கோள்களையும் வேவு பார்க்கப் போகிறேன்…

இந்தப் பயணத்தின் முடிவில் நாம இயற்கையையும்…அந்த ஆண்டவனையும் மேலும் தெளிவாக புரிந்து கொள்ளப் போகிறோம்…. இந்த எண்ணம் தான் எனக்கு குதூகலப்படுத்தறது…”

“நீ திரும்பி வருவியா வேதா?” அழுத்தமாக கேட்டாள் ரீமா… அவள் கண்களில் நீர் கசிவது தொலைக்காட்சியில் தெளிவாக தெரிந்தது.

“என் உடல் 100% நல்லா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… அது தவிர விண்வெளியில் நம்ம இருதயம் இன்னும் சிறப்பாக செயல்படும்னு சொல்றாங்க….அப்புறம் என்ன பயம்?!!…

சரி, சரி… நீ எப்போ அம்மாவாகப் போறே?” வேதா ரிதூவைப் பார்த்து கண்ணடித்துக் கேட்டாள்.

“கல்யாணமாகி இப்பத் தானே ஒரு வருஷம் ஆகிறது…. நீ இப்போ விண்வெளிக்கு கிளம்பியதும் நாங்க இந்தியா போகிறோம்…. இதுவரை ஹனிமூன் எங்கேயும் போகலன்னு உனக்குத் தான் தெரியுமே?… நம்ம வேலை அப்படி…. இப்பத்தான் கொஞ்சம் ஓய்வு கிடைச்சது… அதான் ஒரு பத்து நாள் இந்தியாவில் ஊட்டி கொடைக்கானல் காஷ்மீர் போகலாம்னு திட்டம் போட்டிருக்கிறோம்” ரிதூ புன்னகையுடன் விவரித்தான்.

“சீக்கிரம் ஒரு பிள்ளையை கொடுங்க அக்காவுக்கு…. ஏற்கனவே வயசு 40 நெருங்குது…. ஓகே கேட்ச் யூ லேட்டர்!….. ரீமா.. பை பை…ரிதூ பாய்” வேதாவின் கண்களிலும் நீர் கசிந்தது…. அதை சட்டை செய்யாமல் ஆக வேண்டிய வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

அவள் இப்பொழுது கடலுக்குள் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில்…. கிணற்றுக்குள்…. துப்பாக்கி குண்டு போன்ற பந்திற்குள்…..விண்வெளி விமானத்தோடு…. தொங்கிக் கொண்டிருந்தாள்.

அவளைச் சுற்றி பந்திற்கு வெளியே பலதரப்பட்டவர்கள் இன்னும் கடைசியாக கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை ஒவ்வொன்றாக சரி பார்த்து வந்தனர்.

பயணம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் தான் இருந்தது.

தன்னுடைய கண்டுபிடிப்பு பெரிய வடிவில் செயலாக்கப்படுவதை கப்பலின் மேல் தளத்தில் இருந்த பல தொலைக்காட்சி பெட்டிகள் மூலமும், பெரிய சுவர்த் திரையிலும் கண்டு கொண்டிருந்த சுதர்சனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று அவ்வப்பொழுது ஆண்டவனை பிரார்த்தித்துக் கொண்டான்.

‘ஸ்டார்ட்…கோ…ஷூட்’ சொல்வதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.

பகல் மணி இரண்டை கடந்திருந்தது. மேற்கே கடலின் மேல் சூரியன் கிட்டத்தட்ட 60 டிகிரியயிலும், கிழக்கே சித்ரா பௌர்ணமி நிலா அதேபோல் 60 டிகிரியிலும் ஜொலித்துக் கொண்டிருந்தன…. இதுதான் தக்க தருணம்.

மேல் தளத்திற்கு வந்த சுதர்சன் இயற்கையின் அழகை ரசித்தவாறு கையிலிருந்த அதிநவீன தொலைநோக்கி மூலம் பந்து பறக்கப் போகும் இனிய காட்சியை பார்க்க அந்த திசையில் பார்வையிட்டான். தான் உருவாக்கிய அந்த மாபெரும் பந்து விண்ணை நோக்கி துப்பாக்கி குண்டை போல் பறக்கப் போதும் அந்த கண்கொள்ளா காட்சியை காண அவன் மனம் துடித்தது.

***

“ரெடி… ஸ்டார்ட்…. கோ… ஷூட்” விக்னேஷ்வர் கண்களை மூடி கடவுளை நினைத்து தியானித்து கூறினார்… கடலில் ஆயிரம் அடிகளுக்கு கீழே….கிணற்றின் அடிப் பகுதியில்….. பொருத்தப்பட்டிருந்த வெடிகள் வெடிக்க… கிணற்றின் அடிக் கதவு, அந்த சீல், சிதைந்து போக…. சுற்றும் இருந்த கடல் நீரின் அழுத்தம் கிணற்றுக்குள் கடல் நீரை சீறிப்பாய்ச்சியது…. துப்பாக்கி குண்டாய் உள்ளிருந்த அந்த பந்து அமைப்பும்….. மேலெழும்பி அதி விரைவில் கிளம்ப …. சரியாக கடல் மேல் மட்டம் வந்ததும்… துப்பாக்கி குழல் பந்தை ட்ரிக்கர் சுட்டது…..இதனால் உண்டான விசையில் பந்தை வானுக்குள் தள்ளியது…. கணிப்பை விட கொஞ்சம் அதிகமான வேகத்தில் அந்தப் பந்து, துப்பாக்கியிலிருந்து உந்தப்பட்ட குண்டு போல் மேல் நோக்கி பாய்ந்து காற்று மண்டலத்தை தாண்டியது.

பொதுவாக இப்படி ஒரு அதீத விசையின் உந்துதலை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது என்பதை அறிந்திருந்த விஞ்ஞானிகள் வேதாவின் உடல் இதை ஏற்குமா என்பதை முன்கூட்டியே பரிசோதித்து பார்த்தனர். அப்பொழுது யோகாசனத்தில் தலைசிறந்த ஒருவர் வேதாவை யோகநிலையில்… சமாதி நிலையில்…..கிட்டத்தட்ட இறந்து போன நிலையில் கிடக்குமாறு செய்தால் அவள் உடல் இந்த விசையின் மூலம் ஏற்படும் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளும் என்று கூறியிருந்தார்…. அதையும் பரிசோதித்ததில் கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் இறந்து போன நிலையில் இருக்கும் பார்க்கும்படியாக தேர்ச்சி பெற்றாள் வேதா. ஆகையால் இந்த துப்பாக்கிச் சூடு அம்சம் ஆரம்பிப்பதற்கு மூன்று நிமிடம் முன்பு வேதா சமாதி நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு தனது பெட்டிக்குள் படுத்துக் கிடந்தாள்.

பௌர்ணமி நிலவை விரட்டுவது போல் பந்து சீறிப் பாய்ந்தது. வேண்டிய தூரம் சென்றதும் பந்தின் வெளிப்புறம் மென்மையாக வெடித்து சிதறியது.
தாயின் கருவறையிலிருந்து பிறந்த சிசுவைபோல் அந்த விண்வெளி விமானம் அதன்பின் சூரியசக்தி மற்றும் நுண்ணிய அ னுசக்தியோடு விண்வெளிக்குள் நுழைந்து புவியீர்ப்பு சக்தியை முற்றிலும் தவிர்த்து பூஜ்ஜிய நிலைக்கு வந்தது.

கொஞ்சமும் சத்தமின்றி… புகை இன்றி… எத்தனையோ வீண் செலவுகள் இன்றி…. வெற்றிகரமாய் கையாளப்பட்ட இந்த யுத்தியை ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக கருதி அந்த வெற்றியை கொண்டாடி கப்பலின் மேல் தளத்தில் சரித்திரம் படைக்கப்பட்டது… சுதர்சனை தோளில் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

“இத்துடன் என் பணி முடிவடைந்து விட்டது என்று நான் நினைக்க மாட்டேன்… அடுத்து…. அடுத்து வில்லில் இருந்து அம்பை பாய்ச்சுவது போல்….கவணிலிருந்து எறியப்படும் கல்லைப் போல்….. இன்னொரு புதிய திட்டத்தை மனதில் வைத்து இருக்கிறேன் அதையும் சாத்தியப்படுத்த வேண்டியவற்றை நான் செய்ய இருக்கிறேன்…” இதைக் கேட்டவர்கள் இன்னும் அவனை ஆரவாரித்தனர்.

பூமத்திய ரேகை பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சூரிய ஒளி சக்தியையும் அனுசக்தியையும் பயன்படுத்தி நிலாவை நோக்கி படு வேகத்தில் பறந்தது விமானம்….. நீலவண்ணப் பந்தாக மாறியது பூமி!

***

சமாதி நிலையில் இருந்து 28 நிமிடத்திற்குப் பின் மீண்டு வந்தாள் வேதா…. பூமியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்… ஏதோ தொலைதூரம் வீட்டை விட்டுப் போவது போல் தோன்றியது வேதாவுக்கு.

அவள் விழித்து விட்ட நிலையை கண்டறிந்த 4 அடி உயரம் கொண்ட ரோபோ ஒன்று, விமானத்தின் உள்ளே பூமியின் ஈர்ப்பு நிலைக்கு கொண்டு வந்து… அவளை நோக்கி நகர்ந்து வந்தது… அந்த ரோபோவைப் பற்றி ஏற்கெனவே அவள் அறிந்திருந்தாள்.

“எனக்கு மிகச் சூடாக ஒரு கப் காப்பி வேண்டுமே!” என்றாள் ரோபோவிடம்.

“பறந்து வந்த வேகத்தில் இந்த விமானம் மட்டும் அல்ல உங்கள் உடலும் சூடாகியுள்ளதை என்னால் உணர முடிகிறது…. இந்நிலையில் மிகச் சூடாக ஒரு கப் காப்பி வேண்டும் என்கிறாயே?!… குளிர்பானம் இதோ ரெடி…. இந்தா ஆப்பிள் ஜூஸ்…. உன் பெயர் ப்ளீஸ்?”

அதை முறைத்தவாறு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொண்டவள், “நான் வேதா… உன் பெயர்?” என வேதா ரோபோவை சோதித்தாள்.

“எனக்கு ஏற்கனவே ஒரு பெயர் உள்ளது உனக்குத் தெரியும்… மாற்றி அமைக்க நினைத்தால் இப்போது மாற்றிக் கொள்ளலாம்”

“சரி… முதல்ல… நீ ஆணா பெண்ணா சொல்லு” வேதா மேலும் சீண்டினாள்.

“அவ்வப்பொழுது நீ வைக்கும் பெயரைக் கொண்டு நான் என் பால்வினையை மாற்றிக்கொள்ள முடியும்”

“சரி… இப்போதைக்கு உன் பெயரை நீமா என்று வைக்கிறேன்”

“நீமா….. ஆணா பெண்ணா?…. எனக்கு புரியவில்லை!”

“பெண் தான்…சரி….. அடுத்து சாப்பிட என்ன இருக்கிறது?” நட்சத்திர வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த அந்த விமானத்தின் ஜன்னல் வழியாக தெரிந்த அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு மேலும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினாள் வேதா.

“சரியாக இன்னும் நான்கு வேளை மட்டுமே நீ எதையும் சாப்பிடலாம்…., அருந்தலாம்… உனக்கே தெரியும். அதன் பின் வாரத்திற்கு ஒரு முறை கணக்கில் நான் உனக்கு ஒரு ஊசி போடுவேன்… அது தான் உன்னுடைய 4 மாத கால விண்வெளி பயணத்தின் தீணி!… உன் உயிர் இப்போது என் கையில்!” என்று ரோபோ நமட்டுச் சிரிப்பு சிரித்தது.

விண் வெளி விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் பயணத்தின் முதல் இரண்டு நாட்களில் எல்லா வாய்வழி தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எல்லா செய்திகளும் ஒரு அதிநவீன கணினி வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டது.

பயணத்தின் மூன்றாவது நாள் தன் கணினியின் திரையில் உருவெடுத்துக் கொண்டிருந்த வரிகளைப் படித்த வேதாவின் இரத்தம் உறைந்தது!!

‘இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதற்காக மனம் வருந்துகிறோம்… முதற்கண் மன்னிக்கவும்….’

****

ரீமா பிறந்தது தமிழ்நாட்டில் தான் என்றாலும், 5 வயதிலிருந்து சிங்கப்பூரில் தான் அவள் வாழ்ந்து வந்தாள்.

இயற்கை வளம் மிக்க கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களைக் காண பல வருடங்களாக ஆசையால் துடித்தாள். ‘ஊனமான காலை வைத்துக் கொண்டு தனியாக எங்கே செல்வது?’ என்று இவ்வளவு காலமாய் எதையும் அனுபவிக்காமல் இருந்து வந்தாள்.

வேதாவை வழியனுப்பிவிட்டபின் கணவன் ரிதூவுடன் ஹெலிகாப்டரில் நேராக கொடைக்கானல் சென்று இறங்கினாள்…

உலகம் முழுவதிலும், அதிகமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பல உயர்நிலை தொழில் வல்லுனர்களுக்கும், முதலாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது… அதை வைத்திருப்பவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்!!….. குளோபல் சிட்டிசன் பாஸ்போர்ட் (Earth Citizen Passport) என்று அதற்கு பெயர்.

ஊட்டியில் மூன்றாவது நாளாக ரிதூவுடன் இன்பமாகப் பொழுதைக் கழித்த ரீமாவுக்கு, அன்று நடு இரவுப் பொழுதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி சிங்கப்பூரிலிருந்து…. கையடக்கத் தொலைபேசி வழியாக அந்த செய்தியைக் கேட்டவள் நிலைகுத்தி நின்றாள்.

அவளை “என்ன விஷயம்?” என்று ரிதூ கேட்க…. அவள் அப்படியே தரையில் விழுந்தாள்.

தொலைபேசியை எடுத்து “யார் இந்த நேரத்தில்?” என்று கத்தினான் ரிதூ.

“மன்னிக்கவும்…. இங்கே நம் தொழிற்சாலையில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது… நூற்றுக்கும் மேலே நிறைய பேர் செத்துட்டாங்க…. இதுக்குக் காரணம் ரீமாவின் ஒரு சிறிய பிழை… வேலை பார்க்கும் மற்றவர்களின் பிழையோடு சேர்ந்து விஸ்வரூபமாக எடுத்து வெடித்தது…” மறுமுனையில் பேசியது அந்த மாபெரும் தொழிற்சாலையின் உரிமையாளர் என்பது புரிந்தது. ரீமா ஏன் அதிர்ச்சியுற்று விழுந்தாள் என்பதும் புரிந்தது.

தனியான சொகுசு குடியிருப்பில் தங்கியிருந்த ரிதூவுக்கு இப்போது வியர்த்து வெடவெடத்தது…. அவசர சிகிச்சைக்காக ஒரு டாக்டரின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வரவழைத்தான்.

ரீமாவை பரிசோதித்த டாக்டர் “இதயம் நின்று போய்விட்டது!” என்று பரபரப்பாக இதயத்துடிப்பை மீட்பதற்காக சில நிமிடங்கள் பாடுபட்டார்…

“நீங்க போன்ல சொல்லியிருக்கணும்….வெறும் மயக்கம் போட்டு விழுந்துட்டதா சொன்னீங்க… இப்ப பாருங்க…. அந்தப் பெரிய அதிர்ச்சியான விஷயம் கேட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது… ஐ அம் வெரி சாரி!…ஷி இஸ் டெட்!” தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த பின்னர் கைகளை விரித்தவாறு எழுந்து கொண்டார் டாக்டர்.

‘இது என்ன கொடுமை?!… தனியாக நாடு விட்டு நாடு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனை?… இப்பொழுது என்ன செய்வது?’ ரிதூவுக்கு தட்டாமாலை சுழன்றது…. மனைவியை இழந்த சோகத்தை விட, இப்படி யாரையும் தெரியாத ஊரில், ‘என்ன செய்வது? எப்படி செய்வது?’ என்கிற குழப்பம் தான் அவன் மனதை அதிகம் தாக்கியது.

“நான் உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் ஏற்பாடுகளையும் கவனிக்க செல்கிறேன்… அதுவரை மனம் குழம்பாமல் தைரியமாக இருங்கள். ஒரு மணி நேரத்திற்குள் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளும் நாடிவரும்… நீங்கள் வெளிநாட்டினர் என்பதால் இதை காவல்துறைக்கும் சொல்ல வேண்டியிருக்கு… நடு ராத்திரி பொழுதாச்சேன்னு கவலைப்படாதீங்க… நான் இப்ப வந்துடுறேன்” அந்த டாக்டர் ரிதூவை தனிமையில் விட்டுவிட்டு வெளியே சென்றார்

வேண்டிய பல முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தான் ரிதூ. விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் வேதாவுக்கும் விஷயத்தை சொல்லி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டான்.
தனிமையில்… அசைவற்று….ஜடமாய் கிடந்த ரீமாவைப் பார்க்க… அந்தப் பெரிய சொகுசு குடியிருப்பில்… நடு இரவில்… ரிதூவுக்கு பயமாகத்தான் இருந்தது!!.

வெளிய வந்த டாக்டர், தன் கையடக்க தொலைபேசி மூலம் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். அடுத்து அந்த வட்டார காவல்துறை அதிகாரிக்கு ரீமாவின் மரணத்தைப் பற்றி தெரியப்படுத்தினார்.

“ரிதூ எப்படிப்பட்டவர்?.. மனைவி ரீமாவை ஏதாவது செய்திருக்க முடியுமா?” காவல் அதிகாரி தன் சந்தேகத்தைக் கேட்டார்.
“ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள்? அவர்கள் இருவரும் விண்வெளிக்குச் சென்றுள்ள வேதாவின் நெருங்கிய உறவினர்கள்… இப்படிப்பட்ட பெரிய இடத்து மனிதர்களை சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலையும் இல்லை”

“சரி…சரி… எதற்கும் நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்வது நல்லது…. முறைப்படி அவசியமும் கூட… மரண சான்றிதழும் கொடுக்க வேண்டுமல்லவா?”

“ஆமாம்… நான் இப்பொழுது ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன். ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.. நீங்கள் இங்கு வந்து ரிதூவை விசாரிக்கலாம்”

“சரி….. ரிதூ இருக்கும் விலாசம் சொல்லுங்கள்”

டாக்டர் அந்த விலாசத்தை கூறிவிட்டு தன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பிரேத பரிசோதனையை அருகிலிருந்த கோயம்புத்தூரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரும் சேர்ந்து செய்ய முடிவு செய்து…, தனக்குத் தேவையான பொருட்களை பெட்டிக்குள் அடுக்கலானார்.

சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பின் திடீரென்று அவர் தொலைபேசி அலறியது. குளிரில் வெடவெடத்து கொண்டிருந்தவர் “ஹலோ” என்று நடுக்கமாக கூறினார்.

“ஹலோ டாக்டர்… என்ன நீங்க… இங்க இருக்கறவங்க மாரடைப்பால் செத்துட்டாங்கன்னு சொல்லி அனுப்பினீங்க… இங்கே வந்து பார்த்தா… நம்ம கண் முன்னால இரண்டு சவம் கிடக்கு!” மறுமுனையில் காவலதிகாரி புதிர் போட்டார்.

“என்ன சொல்றீங்க?… யாரது இரண்டாவது?” டாக்டர் மேலும் நடுங்கினார்.

“அவ புருஷன்…. ரிதூ தானே பெயர்?

“ரிதூ செத்துக் கிடக்கிறானா?? …. என்ன சொல்றீங்க?”

“ஆமாம் டாக்டர்… இரண்டு பேரும் செத்துக் கிடக்கிறார்கள்… இப்ப நான் முதல்ல உங்களைத்தான் விசாரிக்க வேண்டி இருக்கு”

“விசாரிங்க… ஆனால்…. இது எப்படி?… எப்படி?… எனக்கு ஒன்னும் புரியலை!”

“எனக்கும் தலை சுத்துது…….. ரீமா சும்மா மாரடைப்பால் செத்தட்டதா நீங்க சொன்னீங்க… இங்க என்னடான்னா அவங்க மார்பிலிருந்து இரத்தம் வெள்ளமாய்…. பக்கத்துல ஒரு சின்ன கைத்துப்பாக்கி…. ரிதூ வீட்டு உள்ளே இருக்கிற படிக்கட்டு கீழே …. மண்டையில் பலத்த காயத்தோடு…. இரண்டு பேருக்கும் நாடி செக் செய்து பார்த்தேன்…. சுத்தமாக செத்துக்கிடக்கறாங்க!” பெரிய கொட்டாவி ஒன்றை ஆக்ரோஷமாக வெளியிட்டவாறு பேச்சை முடித்தார் காவல் அதிகாரி.

‘வாழ்க்கையில் என்ன குழப்பம் வந்தாலும் தலை சொரிய மாட்டேன்’ என்று தீவிரமாக இருந்து வந்த டாக்டர்…. இப்போது தலை சொரிந்தவாறு “நான் அங்கே வரேன்” என்றார்.

***

‘இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதற்காக மனம் வருந்துகிறோம்… முதற்கண் மன்னிக்கவும். உங்கள் சகோதரி ரீமா….. உங்களை வழி அனுப்பிய பின் இந்தியாவில் தமிழ்நாட்டுப் பகுதியில் இருக்கும் ஊட்டிக்கு கணவனுடன் உல்லாச பயணம் மேற்கொண்டாள். அங்கே சற்று நேரத்திற்கு முன் அவள் பணிபுரியும் சிங்கப்பூர் தொழிற்சாலையில் நடந்த ஒரு பெரிய விபத்தை பற்றி தொலைபேசி மூலம் கேட்டறிந்து, அப்படியே மாரடைப்பால் இறந்து போனாள்…

இது உங்களுக்கு எவ்வளவு வேதனையான விஷயம் என்பது புரிகிறது. எனினும் இந்த பரந்த மனித சமுதாயத்திற்கு உங்கள் சேவையை தங்குதடையின்றி செய்து முடிக்கும்படி இந்த பூமியிலுள்ள எல்லா மக்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தும் இன்னும் இறப்பு என்கிற ஒன்றை கையாள முடியாமல் இருக்கிறோம்… உங்கள் விண்வெளி ஆய்வில் இதற்கும் ஏதேனும் தீர்வு காண முடியுமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்…

உங்கள் சார்பாக உங்கள் சகோதரியை சவ அடக்கத்தை நாங்கள் சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்கிறோம்…’

செய்தியை படிக்க படிக்க வேதாவின் இரு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வடிந்தது… ‘அக்கா’ என்கிற வார்த்தை மௌனமாக வாய்க்குள் இருந்து வெடிக்க… கண்களை மூடிக்கொண்டு அடக்க முடியாமல் அழுதாள்.

அழுகை பற்றி ஏதும் அறிந்திராத ரோபோ நீமா குழப்பத்துடன் வேதாவை பார்த்தது!!

ரீமாவுடன் அனுபவித்த அந்த இனிமையான நாட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக மனக்கண் முன் தோன்ற… திடீரென்று அவளுக்கு ரீமாவை பார்க்க வேண்டும் போல் தோன்ற… அடுத்த வினாடி வேதாவின் பூதவுடல் (Astral Body) பூமியை நோக்கி ஒளியின் வேகத்தையும் மிஞ்சி பாய்ந்தது.

***

ரிதூவுக்கு உண்மையில் ரீமாவின் அசைவற்ற சவத்தை பார்க்க பயமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பயம் எல்லாம் சில நிமிடங்களிலேயே பறந்து போக… ‘இனி ரீமாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு நான் ஒருவன் தான் ராஜா… ஊனம் இல்லாத…. அழகு தேவதையாக பார்த்து…… வேறு ஒருத்தியை மணம் செய்து கொண்டு… உல்லாசமாக வாழலாம். இனி என் வாழ்க்கை முழுவதும் இன்பமயம் தான்!’

சொத்து சுகத்திற்காக மட்டுமே ரீமாவை திருமணம் செய்துகொண்ட ரிதூவுக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைத்தது போல் இருந்தது.

எண்ணக் கோட்டைகளை வளர்த்துக் கொண்டே ரீமாவின் முகத்தை பார்த்து… “நன்றி ரீமா… மிக்க நன்றி!” என்று புன்னகையுடன் விசில் அடித்தான்.

ரீமா கண்களை திறந்தாள்!…… ரிதூவைப் பார்த்து புன்னகைத்தாள்!!

‘இது என்ன கனவா?’ என்று குழம்பியவனுக்கு இரத்தம் உறைந்தது!!! …. பேயறைந்தது போல் முகம் வெளிறியது.

கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்த ரீமா, “பயப்படாதீங்க… நான் சாகவில்லை… செத்து பிழைத்து விட்டேன்! அந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு என் இருதயம் தற்காலிகமாக கொஞ்ச நேரம் நின்று விட்டது… அவ்வளவு தான்!.
எமலோகத்தில்….. சித்ரகுப்தனுக்கு ஒரே டென்ஷனான வேலை பாருங்க… உலகத்தில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக….பாவம் அந்த ஒரு ஆசாமி என்ன பண்ணுவார்?! தவறுதலாக என் உயிரைப் பிடுங்கிட்டார்!! அங்கே போனப்புறம், நான் சாக வேண்டிய நேரம் இன்னும் வரலையே என்று குழம்பிப்போய்… என்னை சாந்தப்படுத்த ஒரு சிறப்பான விருந்து கொடுத்து அனுப்பி விட்டார்!” என்றாள் படபடவென்று.

ஸ்தம்பித்து நின்ற ரிதூவின் மூளையில் என்னென்னவோ எண்ணங்கள் மின்னலாக தோன்றி மறைய…. திடீரென்று ரீமாவை கட்டிலில் தள்ளி படுக்கச் செய்து ஒரு தலையணையை எடுத்து அவள் முகத்தில் அப்பினான்.

“எமலோகத்தில் வேண்டுமானால் உன் சாவு நேரம் வரவில்லை என்று சொல்லலாம் …ஆனால் இங்கே… இந்த பூலோகத்தில் நீ செத்து விட்டாய்… அந்த டாக்டரே சாட்சி!… நீ செத்துப் போவதுதான் சரி” வெறிபிடித்தவன் போலானான் ரிதூ.

நொடிப்பொழுதில் ரிதூவைப் புரிந்து கொண்ட ரீமா அவனை முழு பலம் கொண்டு தள்ளிவிட்டு எழுந்தாள். “வேண்டாம் ரிதூ… இது மிகப்பெரிய மோசம்… உன்னை நான் நம்பினதற்கு இதுதானா நீ செய்வது? வெறும் பணத்திற்காகவா இவ்வளவு நாள் வேஷம் போட்டு என்னோடு வாழ்ந்தாய்?” அழுகையும் ஆத்திரமும் பீறிட்டு வர கத்தினாள் ரீமா.

அவள் பேச்சு எதையும் கேட்பதாக தெரியவில்லை… அவளைக் கொன்றே தீருவது என்று வெறி பிடித்தவனாக, மறுபடியும் அவளை கட்டிலில் தள்ளி படுக்க வைக்க போராடினான்….
திரும்பவும் அவனை உதறிய ரீமா எழுந்து தன் நொண்டிக் காலோடு ஓட… எங்கோ தடுக்கி தரையில் விழ…. அதனால் அவளைப் பிடிக்க முயன்ற ரிதூ மாடியிலிருந்து படிகளில் வேகமாக மண்டையை இடித்துக் கொண்டு விழுந்து… உருண்டு… கடைசிப் படியில் கீழே விழுந்ததும் மேலும் மண்டையில் அடிபட்டு…..அவன் உயிர் பிரிந்தது.

திகிலுடன் ஒவ்வொரு படியாக மெதுவாக இறங்கி வந்து அவனை சோதித்து பார்த்து கதறி அழ ஆரம்பித்தாள் ரீமா.

‘சற்று நேரத்திற்கு முன் வரை என்னுடன் இன்பமாக உறவாடிய கணவன்… ஒரு கயவனா? அங்கே என் தொழிற்சாலையில்… நூற்றுக்கும் மேற்பட்டோரின் சாவுக்கு நான் தான் காரணம்…. இங்கே என் கணவனின் சாவுக்கும் நான் தான் காரணம்….’ விருட்டென்று நிமிர்ந்தவள், தன் கைப்பையை தேடி எடுத்து அதில் இருந்த தன் பாதுகாப்பு துப்பாக்கியால் நெஞ்சில் ஒரு துளை போட்டு… அப்படியே சாய்ந்தாள்!

அந்த துப்பாக்கிக் குண்டு ரீமாவின் நெஞ்சை மட்டும் துளைக்கவில்லை… தூரதிருஷ்டி பார்வையால்… நடந்த அனைத்தையும் பார்த்த வேதாவின் பூதவுடலின் நெஞ்சையும் துளைத்து வலிக்கச் செய்தது.

***

சில மணி நேரம் கழித்து…..

விண்வெளியில் பறந்து கொண்டிருந்த வேதாவுக்கு இன்னொரு செய்தி…
‘ஒரு பெரிய குழப்பம் நிகழ்ந்துள்ளது… ரீமாவின் மரணத்தில் ஏதோ ஒரு பெரிய குழப்பம்…. மாரடைப்பால் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும், காவல்துறையும் ஆம்புலன்சும் குடியிருப்புக்கு விரைந்தது. அங்கே சென்றடைந்தவர்கள், ரீமாவை இரத்த வெள்ளத்திலும், கணவன் ரிதூவை பலத்த மண்டை காயத்துடனும் இறந்து கிடப்பதை கண்டிருக்கிறார்கள்…. ரீமாவின் கைத்துப்பாக்கி அருகில் உள்ளது…. என்ன நிகழ்ந்தது என்று காவல்துறையினரால் புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியவில்லை …அவர்கள் மேலும் இதைப்பற்றி துப்பறிவார்கள்’

வேதாவுக்கு தான் கண்ட உண்மையை பூமியில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது….

‘இதனால் யாருக்கு என்ன பயன்?… இயற்கையாகவே ஒரு மனிதன் செத்துப் பிழைப்பது என்பது மிக அபூர்வமான விஷயம்!… ஆனால் ரீமாவின் விஷயத்தில்?!….’

காலம் மாறினாலும்…. ரிதூவை போன்ற சில மனிதர்களின் கேவலமான எண்ணங்கள்… செயல்கள்… இவை எப்பொழுது தான் மாறப்போகிறது??
இராமாயணம்… மஹாபாரதம்… யேசுநாதர்…. காலம் தொட்டு இந்த நிலை மாறவில்லையே?…இன்னும் மோசமாகிக்கொண்டல்லவா போகிறது??

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *