காலத்தில் தொலைந்தவர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 24,659 
 
 

இரண்டொரு நாட்களாக வெப்பத்தில் தகித்திருந்த நிலத்தை குளிர்விக்கும் படியாக இன்று காலையிலேயே மழை பிடித்துக் கொண்டது. இடியும், மின்னலும் இருநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும் மழை மட்டும் இறங்கவில்லை. புதுக்குடி நிலபட்டா பெயர் மாற்றம் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதற்காக காருகுறிச்சி செல்ல வேண்டியதாயிற்று. பரபர நொறுக்கு மண் சகதியாகின்ற வரையில் பெய்து கொண்டிருந்த மழை, தொண்டைக்கு இதமாக லேசான சூட்டில் தேநீர் குடிக்கின்ற தாகத்தை ஏற்படுத்த பஸ் நிறுத்தத்திலிருந்த ஒலைக்கூரை கடைக்குள் தஞ்சமடைந்தேன்.

கரி அடுப்பின் புகை அப்பியிருந்த பந்தல் கம்பில் சணல் கயிற்றால் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ ஏக்சூர் மெல்லிசையை இசைத்துக் கொண்டிருந்தது. தனியார் தொலைக்காட்சிகள் அல்லாத ஒர் காலத்தில், ஆல் இந்தியா ரேடியோக்களும், தூர்தர்ஷன்களும் மும்முரமாக இயங்கிய காலத்தில் இந்த ஏக்சூரை அடிக்கடி கேட்டு ரசித்திருக்கின்றேன். குறிப்பாக அதில் முதலில் ஒலிக்கின்ற பண்டிட் பீம்சென் ஜோஷியின் கம்பீரக்குரல் என்னை கிறங்க வைத்திருக்கிறது. ஏக்சூரை முதலில் கேட்டது திருநெல்வேலி வானொலி நிலைய ஒலிபரப்பில் தான். எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது மத்தியான சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்த நேரத்தில், ஒரு மணி ஆங்கிலச் செய்திக்கு முன்னதான ஏழு நிமிட இடைவெளியில் இந்த ஏக்சூரை ஒலிபரப்பினார்கள். பின்னாட்களில் தூர்தர்ஷன் வந்த பிறகு அடிக்கடி இந்த ஏக்சூரை பார்த்தும், கேட்டும் இருக்கின்றேன். ‘மிலே சுரு மேரா துமாரா..’ என வேற்றுக்கிரகவாசி குரலில், ஏக்சூரை பாட தொடங்குகின்ற பீம்சென் ஜோஷியின் குரலும், அவரது மேல் நோக்கிய சொருகிய பார்வையும், வலதுபுற உதட்டின் கோணலான சிறுசுளிப்பும் அப்படி ரசிக்க வைக்கும்.

எனக்கென்னமோ அவரையும் அவரது குரலையும் கேட்கும் போது சேர்மாதேவி இசக்கி தாத்தா தான் நினைவுக்கு வருவார். சற்றே ஏறிப்போன நெத்தி, வழித்துச் சீவப்பட்ட பின்பக்க தலைமுடி, முற்றிலும் மழிக்கப்பட்ட முகமென கிட்டத்தட்ட ஒரே ஒத்த உருவம் தான் இருவருக்கும். அதிகாலையில் பல் தேய்த்து காப்பி குடித்து விட்டு வெத்தலை போடும் வழக்கம் தாத்தாவினுடையது. வெத்தலை போடும் போது, காம்பை கிள்ளி எறிந்து விட்டு, பின்பக்கத்தில் சுண்ணாம்பு தடவும் போது, ஏதோ அதுவரையில் காத்திருந்ததைப் போன்று, அவருக்கு பிடித்தமான முத்துதாண்டவர் பாடலை சன்னமான குரலில் பாடத் தொடங்கிவிடுவார். கட்டைவிரல், நடுவிரல், மோதிரவிரல் துணையோடு காய்ந்த வாழைத் தடையில் பொதிந்திருக்கின்ற புகையிலையை, பத்தியமாய் கிண்டிய லேகியத்தை எடுப்பது போல் எடுக்காமல் இழுத்தெடுத்து வாயில் போட்டு குதப்பிக் கொண்டு சில நிமிட நேரங்களில் அவர் செருமும் போது, அது பீம்சென் ஜோஷியின் ஆலாபனையை ஒத்திருப்பதாக எனக்குத் தோன்றும்.

காலையிலேயே தொற்றிக் கொண்ட அந்த ஏக்சூர் பாடல் தொடர்ந்து என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்க, அவ்விசையானது இசக்கி தாத்தாவையும் பீம்சென் ஜோஷியையும் தேட வைத்து விட்டது. சேரன்மகாதேவி ஏட்டு மாமா வீட்டு முன் வாசல் நிலைப்படிக்கு மேலே தாத்தாவின் பெரிய போட்டோ மாட்டிப்பட்டிருக்கும். தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லாது அதுசார்ந்த மன அழற்சியில் அவரிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு உருவகக் கலைஞர்கள் பதினோரு பேரை அழைத்துக் கொண்டு போய் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வந்த தமிழ்ப் பண்பாட்டுக் கலைத்துறை இயக்குநரைப் பார்த்து அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் கொடுப்பதற்காக சென்ற போது தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்த தாத்தாவை ஹைகிரவுண்ட பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். இரு நாட்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்ற போது, ஏனோ சம்பந்தமில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டுமென தாத்தா சொல்ல, பஸ்ஸடாண்டின் தென்புறமிருந்த வாணி ஸ்டூடியோவிற்கு தாத்தாவையும் பாட்டியையும் கூட்டிச் சென்றிருக்கிறார் ஏட்டு மாமா. இருவரையும் ஜோடியாக இரண்டு வெவ்வேறான கோணங்களில் புகைப்படமெடுத்து விட்டு தாத்தாவை தனியாகவும் ஒரு படமெடுத்திருக்கிறார் போட்டோகிராபர். முகத்தின் இருபுறமும் முதிர்ச்சியான சதைகள் தொங்க, அதற்கேற்றாற் போன்று தனக்கே உரித்தான கோணல் உதட்டுச் சிரிப்பை தாத்தா உதிர்த்திருக்க, அது அச்சு அசலாக அப்படியே பதிவாகியிருந்த புகைப்படம் அது. தாத்தாவைப் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டே தான் பேசுவார்கள். அது சார்ந்து ஏதேனுமொன்றை கேட்டும் விடுவார்கள். அப்படி கேட்கத் தூண்டி விடுகின்ற ஒர் வசீகரம் அப்போட்டோவிலுண்டு.

அடிப்படையில் குறுநில விவசாயியான இசக்கி தாத்தாவிற்கு சேர்மாதேவி ஆத்துக்கரை அம்மநாதசாமி கோவில் அருகே நிலபுலன்கள் இருந்தன. கடந்த நான்கைந்து தலைமுறைகளாக உருவம் வார்க்கும் கலையில் ஈடுபட்டு வருகிற யோகீஸ்வரர் பரம்பரையில் வந்தவர் இசக்கி தாத்தா. வாழை மடல், மூங்கில் கம்பு, சணல் கயிறு, களிமண், மஞ்சள் பொடி, கிழங்கு மாவு ஆகியவைகளை மூலப்பொருட்களாக கொண்டு கடவுள்களின் உருவங்களை செய்தலே உருவம் வார்த்தல். யோகீஸ்வரர் என்பது உருவம் வார்த்தல் கலைஞர்களை குறிக்கும் அடைமொழி. ஒரு உருவத்தை வார்க்க குறைந்தது நாலு மணி நேரத்தை எடுத்துக் கொள்வார் தாத்தா. இசைத்துக் கொண்டே உருவத்தை வார்ப்பது தாத்தாவின் வழக்கம். சில சமயங்களில், அவர் இசைப்பதற்காகவே உருவத்தை வார்க்கிறாரோ என்று கூடத் தோன்றும்.

ஒர் ஆண்டின் கோடைப் பள்ளி விடுமுறைக்கு தாத்தாவின் வீட்டிற்கு தங்கம்மா சித்தியின் பிள்ளைகள் சீனியும், மாலையம்மாவும், இந்திராணியும், எங்களுடன் வந்திருந்த போதே உருவம் செய்கிற கலையைப் பற்றி தாத்தாவிடம் கேட்டாள் பூங்கொடி. அவளிடம் சைகை காட்டி விட்டு நடுவீட்டின் வலது மூலையில் குறுகலான வாசலை கொண்டிருந்த அறைவீட்டிற்கு சென்று திரும்பி வந்த தாத்தாவின் கைகளில் பேரீச்சம்பழம் இருந்தது.

‘பிள்ளைகளா… திண்ணையில வந்து உட்கார்ந்து இந்தப் பழங்களை சாப்பிட்டுகிட்டே நா சொல்லுற கதையை கேளுங்க… அந்த காலத்துல நாம இல்லேன்னே ஊரூல கோவில் கொடையே கெடையாது. கோவில் கொடைக்கு நாள் குறிக்கறவங்க மொத வேலயா நம்மாட்கள் கிட்ட வந்து நாள் குறிச்சுக்குவாங்க. அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம். பொட்டல் பாடப் பிள்ளையார் சாத்தாங்கோவில்ல ஆரம்பிச்சு தென்கரை சித்தூர் மகாராஜா கோவில் வரைக்கும், கொடைவிழாவுல நாம செஞ்சு தந்த உருவத்தை தான் எல்லாரும் வழிபட்டு கொண்டாடுவாங்க. உருவம் வார்க்கிறதுங்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட விசயமில்லை. கற்சிலை வடிக்கிற மாதிரி உருவம் வார்க்கிறதும் ஒரு தெய்வாம்சமான காரியம் தான். கரடிமாடசாமியோ, சுடலைமாடனோ, தளவாய் மாடசாமியோ, சிவன் அணைந்த பெருமாளோ, மாடத்தியோ, அழிப்பாச்சு சுடலையோ, இப்படி எந்த சாமியை உருவமா வார்க்கணுமுன்னு கொடை எடுக்கிறவங்க நினைக்காங்களோ, அந்த சாமிய மனசார நினைச்சுகிட்டு, கொடைக்கு 16 நாள் முன்னாடியே சுத்த பத்தமா இருக்க ஆரம்பிச்சுருவேன். அப்ப தான் நம்ம நினைச்ச சாமி உருவத்தை செய்ய முடியும்.

நம்ம வயித்துபாட்ட போக்குற உருவம் செய்யுற இந்த கலையை பற்றி புராணத்துல நெறைய கதைகள் உண்டு. எல்லாம் செவி வழிக்கதைங்க தான். கயிலாயத்துல பரமசிவனும், பார்வதியும் ஒருநாள் கருக்கல்ல மாடத்துல உக்காந்து பேசிகிட்டிருந்திருக்காங்க. அப்ப பரமசிவன்கிட்ட பார்வதி சொன்னா . சாமி, நம்ம புள்ளைங்க விநாயகனும், முருகனும் பெரிய புள்ளைங்க ஆகி அவங்கவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்களும் உங்க வேலையே பெரிசுன்னு போயிருதீங்க. எனக்கு இங்க தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்சி மகிழ எனக்குன்னு ஒரு சின்ன புள்ள இருந்துச்சுன்னா, நா பாட்டுக்கு நா உண்டு எம் புள்ள உண்டுன்னு பேசாம கொஞ்சிகிட்டும், குழாவிக்கிட்டும் இருப்பேன். அதுக்கு அருள் பாலிங்க சாமின்னு கேட்டா. அதுக்கு பரமசிவன் சொன்னாரு. கொஞ்சி மகிழ உனக்கு புள்ள தானே வேணும். இன்னிலேந்து நெதமும் விளக்கு ஏத்தி ஆறு நாளைக்கு மடிப்பிச்சை ஏந்தி வேண்டிகிட்டு வா. ஆறாவது நாள் நீ நினைச்சது நடக்கும்ன்னாரு.

தன் சாமி சொல்லே மந்திரமுன்னு நெனச்சு பரமசிவன் சொன்ன மாதிரியே நெதமும் பார்வதி வேண்டிகிட்டு வந்தா. ஆறாவது நாள் அன்னைக்கு விளக்குலேந்து ஒரு தீப்பொறி ஒண்ணு பறந்து வந்து பார்வதி மடில விழுந்து ஒரு ஆட்டுரல் குழவி கல்லா உருமாறிடுச்சு. அத தூக்கிகிட்டு நேரா பரமசிவன்கிட்ட போனா பார்வதி . என்ன சாமி, குழந்தை வேணுமுன்னு கேட்டா நீங்க குழவிகல்லை கொடுத்திருக்கீங்கன்னு கேட்டா . உடனே பரமசிவன் நம்மள மாதிரி இருந்த யோகீஸ்வரர் ஒருத்தரை கூப்பிட்டு வரச் சொன்னாரு. யோகீஸ்வரர் வந்த உடனே அவருகிட்ட பரமசிவன் இந்த குழவிகல்லை ஒரு குழந்தையா மாத்தி உயிர் கொடுக்க போறேன் . இதுக்கு எந்த அளவுல கை, காலு, கண்ணு, மூக்கு, வாய், காது வைக்கணும்ன்னு சொல்லுன்னார். யோகீஸ்வரரும் இன்னன்ன அளவு வச்சா அது அழகான்னா குழந்தையா இருக்கும்ன்னு சொன்னாரு . அந்த மாதிரியே செய்து அந்த குழந்தைக்கு பரமசிவன் உயிர் கொடுத்து பார்வதியிடம் கொஞ்சி மகிழ தந்தாரு. சின்னஞ் சிறுசா சிலையாட்டம் ஜொலிச்ச அந்த குழந்தையை பார்த்து பரமசிவன்னே பிரமிச்சு போயி, யோகீஸ்வரரை கூப்பிட்டு நீ சொன்ன மாதிரி செஞ்சதால தான் இந்த மாதிரி அழகான குழந்தை உருவாகியிருக்கு. இன்னையிலிருந்து நீ பூவுலகத்துக்கு போயி எங்கள மாதிரி கடவுள்கள் உருவத்தை செய்யணுமுன்னு உத்தரவு இட்டுட்டாரு.

நா சொன்ன இந்த கதை உண்மை கதையா இல்ல கட்டுக்கதையான்னு எனக்கு தெரியாது. ஆனா புராண காலத்துலேந்தே உருவம் செய்யுற இந்த கலை இருந்து வருதுங்கிறது மட்டும் தெரியுது. காலங்களை கடந்துல்லா கலை வாழுது..’ என தாத்தா சொல்லிக் கொண்டே போக, அவர் அந்தக் காலத்துக்கே பயணப்பட்டு விட்டது போலவும், அதிலிருந்து மீள விரும்பாமல் தொலைந்து போனவராகவும் எங்களுக்கு தெரியத் தொடங்கினார். இடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரீச்சம்பழக்கொட்டை பூங்கொடியின் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அவளது திணறலைப் பார்த்து தாத்தா கதை சொல்வதை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று அவள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தார்.

இப்போது பீம்சென் ஜோஷியும் குரலும், இசக்கி தாத்தாவின் குரலும் ஒத்த குரலாக இணைந்து என்னுள் ஒலிக்கத் தொடங்க, ஏட்டு மாமாவை அலைபேசியில் அழைத்து தாத்தாவை பற்றிக் கேட்டேன். தாத்தா வீட்டிலில்லையென்றும் தெருமுனை ஊட்டச்சத்து மையத் கல்திண்டில் உட்கார்ந்திருக்கலாமென்றும் சொன்னார். பிள்ளையார் கோவில் கீழத் தெருவுக்குள் இருசக்கர வாகனத்தில் நுழையும் போது தாத்தாவின் வீட்டை யாரோ இருவர் தெருவாசி ஒருவரிடம் விசாரித்துக் கொண்டிருப்பது காதில் கேட்டது. தெருவாசி என்னைப் பார்த்து ‘இவரு அவரோட பேரப்புள்ள தான்.. இவரு பின்னாடியே போனீங்கன்னா அவரு வீட்ட அடைஞ்சிரலாம்’ என்றார். அந்த இருவர் என்னை பின் தொடர்ந்து வந்து, வாகனத்தை என் வண்டிக்கருகில் நிறுத்தினார்கள். தாத்தாவைப் பார்க்க தெருமுனைக்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் கல்திண்டிலிருந்து எழுந்து வந்தார். அவரது வலது கை நிறைய பன்னீர் பூக்கள் இருந்தன. பெரும்பாலான நேரங்களில் அந்த ஊட்டச்சத்து மையத் கல்திண்டில் தான் தாத்தா அமர்ந்திருப்பார். அந்த திண்ணையை ஒட்டினாற் போன்று நான்கு பன்னீர்பூ மரங்கள் உயர்ந்திருக்கும். பன்னீர் பூக்கள் பூக்கின்ற காலத்தில் அங்கிருந்த எழுந்து வருகையில் தரையில் உதிர்ந்து கிடக்கின்ற சில பூக்களை எடுத்து வருவது தாத்தாவின் வழக்கம். அன்றும் அப்படித் தான் எடுத்து வந்தார்.

‘தாத்தா.. உங்களை தேடி யாரோ வந்திருக்காங்க ..’ என்று நான் சொல்ல, வலதுகையில் வைத்திருந்த பூக்களை இடது கைக்கு மாற்றி இருகைகளால் அவைகளை என் கைகளில் தந்து விட்டு, ‘யாருய்யா நீங்க..?’ என்று வந்தவர்களிடம் கேட்டார்.

‘ஆழ்வார்குறிச்சிலேந்து ஆத்துக்கரை சொடலைமாடன் கோவிலேந்து வாரோம். கொடை வச்சிருக்கோம். உருவம் செய்யுறதுக்காக இசக்கி யோகீஸ்வரரை பார்த்து அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கோம்..’ என அவர்கள் சொல்ல, ‘உள்ள வாங்க.. நான் தான் இசக்கி…’ என்றார் தாத்தா. நடைப்பாதைக்கு இருபுறமும் அகண்டு விரிந்திருக்கிற கூடத்தில் வலப்பக்க கூடத்தில் தாத்தா உட்கார, இடது கூடத்தில் அவர்கள் அமர்ந்தார்கள்.

‘சின்னபுள்ள.. செம்புல தண்ணி கொண்டு வாம்மா…’ என வீட்டின் உள்ளறையை பார்த்து குரல் கொடுத்து விட்டு, ‘ஆமாய்யா… ரெண்டு பேரும் எங்கேந்து வாரோம்ன்னு சொன்னீங்க…’ என்று தாத்தா கேட்டார்.

‘எங்களுக்கு ஆழ்வார்குறிச்சி. வர்ற ஆடி எட்டாம் நாளனைக்கு கொடை வச்சிருக்கோம். கோவிலுக்கு முன்னாடி சொடலையும், பின்பக்கத்துல பேராச்சியும், கரடிமாடசாமியும் இருக்கு. மொத்தம் மூணு உருவம் நீங்க செஞ்சு தரணும்யா.’ என வந்திருந்தவர்களில் சற்று முதிர்ந்தவராக இருந்தவர் சொல்லிக் கொண்டே மஞ்சப்பை உள்ளிருந்து சின்ன சில்வர் தட்டை எடுத்து இரண்டு வாழைப்பழங்களையும், வெற்றிலை பாக்கையும் வைத்து, கூடவே அட்வான்ஸ் பணத்தையும் வைத்து தாத்தாவிடம் தந்தார்.

‘அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு. நம்ம கையில் என்ன இருக்கு தம்பி. எல்லாம் சாமி காரியம். நல்லா படியா நடக்கும் ..’ என தாத்தா சொல்ல, நடுத்தர வயதுடைய அந்த இன்னொருவர் வாசற்நிலையிலிருந்த தாத்தாவின் புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பன்னீர் பூக்களின் வெளிர் நிறக் காம்புகளை விரல்களால் வருடியவாறே நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘ஐயா. அந்தப் போட்டோவுல படத்துல இருக்குறது நீங்களாய்யா..?’ என அவர் கேட்க, ‘ஆமா தம்பி, நான் தான் அது. நம்ம பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற ஸ்டூடியோவுல எடுத்தது..’ என்றார் தாத்தா.

‘எங்கவூரு பஞ்சாயத்து போர்டு டி.வி.யில ஒருத்தார் பாடுவாரு. அவரை மாதிரியே நீங்க இருக்கீங்க..’ என அவர் சொல்ல, என்னைப் பார்த்து பீம்சென் ஜோஷிக்குரிய அதே கோணல் சுளிப்போடு சிரிக்க ஆரம்பித்தார் இசக்கி தாத்தா.

– டிசம்பர் 14, 2014 கல்கி வார இதழில் வெளியான கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *